We need to connect more women in physics - it will benefit the whole of humanity The Conservation Article Translation in Tamil By K. Ramesh



கல்வியியலிலும் சரி, தொழிலிலும் சரி, உலகம் முழுவதிலும் தீவீரமான பாலின அசமத்துவம் நிலவுகின்றது.

இதற்கான உதாரணங்களை எளிதில் காண முடியும். பர்கினா பாசோவின் மிகப்பெரும் பல்கலைக்கழகமான ஔகாடௌகௌவில் (Ouagadougou) 99 சதவிகித இயற்பியல் மாணவர்கள் ஆண்கள். ஜெர்மெனியில் இயற்பியல் முனைவர் பட்டதாரிகளில் 24% மட்டுமே பெண்கள் – 2017இல் 21% இலிருந்து இப்போது 24% ஆக அதிகரித்துள்ளது. 2017க்கும் 2020க்கும் இடையில் எல்சால்வடாரில் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் அறிவியலில் ஒரு பெண் கூடப் பட்டம் பெறவில்லை.
ஆஸ்திரேலியா சற்று அதிகமான தேர்ச்சியைக் கொண்டுள்ளது. இதே அமைப்பில் தொடர்ந்தால், தொழில் ரீதியான வானியல் நிபுணர்களில் மூன்றில் ஒரு பங்கினராகப் பெண்கள் தேர்ச்சி பெற இன்னும் 60 ஆண்டுகள் ஆகும் என்று ஆஸ்திரேலிய தேசியப் பெண்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர் லிசா கீவ்லி (Lisa Kewley) கணித்துள்ளார்.

இந்தக் கணிப்புகள் தொடர்கின்றன. கடந்த வாரம் வெளியிடப்பட்ட பிரிட்டன் ராயல் வானியல் கழகம் எடுத்த ஒரு கணக்கீட்டின்படி, இத்துறையில் இருக்கும் பெண்களும், மூன்றாம் பாலினத்தவரும் ஆண்களை விட 50% அதிகமாகத் துன்புறுத்தலுக்கும், அவமதிப்புக்கும் ஆளாகின்றனர். சொந்தப் பாலின ஈர்ப்புக் கொண்ட 50% வானியலாளர்கள் (lesbian, gay etc.) கடந்த 12 மாதங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த இருளில் எப்போதாவது ஒளிக்கீற்று தென்படும். உதாரணமாக, இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் அல்லது கணிதவியலில் பட்டம் பெற்றோரில் 43% பெண்களாவர். ஆனால் இந்த எண்ணிக்கை இயற்பியலிலோ அல்லது உயர்கல்வியிலோ மிகவும் குறைவு. தெளிவாகவே, இந்தப் பாலின அசமத்துவம் உடனடியாக சரி செய்யப்பட வேண்டியுள்ளது. இது வெறும் கொள்கை அளவிலான விஷயம் மட்டுமல்ல: உலகம் முழுவதிலும், நமது பல மிகச்சிறந்த, பிரகாசிக்கக் கூடிய மனங்கள் அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் விலக்கப்பட்டுள்ளன.

இந்த மாதம் நடைபெற்ற சர்வதேச தூய, பயன்பாட்டு அறிவியல் கழகத்தின் ஏழாவது மாநாடு, இந்தப் பிரிவில் பெண்களின் பங்களிப்பு மற்றும் எதிர்காலம் குறித்துக் கவனத்தை செலுத்தியது. இணையதளம் மூலமாக நடைபெற்ற இந்த மாநாடு, மெல்போர்னிலிருந்து இணைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

தமது நாடுகளில் இயற்பியல் முன்னேற்றத்துக்காகத் தமது வலிமை, தலைமை, அர்ப்பணிப்பு ஆகியவற்றை அளித்த பல பெண்களை நாங்கள் சந்தித்தோம். சிலசமயம் அவர்கள் கடுமையான சூழலில் இவற்றைச் செய்தனர். மாநாட்டின் அடுத்தடுத்த கட்டங்களில் செயல்பாட்டுக்கான சில தனிப்பட்ட இலக்குகள் வெளிவந்தன.



தடைகளை உடைத்தல்

முன்னுரிமை அளிக்க வேண்டிய ஒரு பகுதி, மிகவும் உயர்ந்த நிலைகளை அடைவதற்கு முன்னாலேயே பெண்கள் இயற்பியலை விட்டு வெளியேறும் தடையை உடைப்பதாகும். நீண்ட கால வேலைவாய்ப்பைப் பெறுவதில் நிச்சயமின்மை, அதனுடன் கூட, மூத்த நிலைகளை எப்போதாவது அடைவோமா என்ற சந்தேகங்கள் உட்பட இதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஆனால் இதன் விளைவு பெண்களால் விகிதாச்சாரமற்ற முறையில் உணரப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆஸ்திரேலிய வானியலில் முனைவருக்குப் பிந்தைய ஆராய்ச்சி, துணைப்பேராசிரியர் நிலைகளுக்கு இடையில் 17% ஆண்கள் வெளியேறுகையில், 62% பெண்கள் வெளியேறுவதை கீவ்லியின் ஆய்வு காட்டுகிறது.

இதே போன்ற விவரங்கள் பிரிட்டனிலும் காணப்பட்டன. வானவியல் உரையாசிரியர்களில் 29% பெண்கள் இருக்கையில் வானியல் பேராசிரியர்களாக வெறும் 12% பெண்கள் மட்டுமே இருப்பதை ராயல் வானியல் கழகம் தெரிவிக்கிறது.

தொழிலில் இணையும் பெண்கள்

தொழில்முனைவராக ஆக்கவும், வணிகத் தலைவர்களாக ஆக்கவும் அவர்களை உருவாக்குவது என்பது பெண் இயற்பியலாளர்களுக்குச் சுதந்திரம், நல்வாழ்க்கை ஆகியவற்றைக் கொடுக்கும் ஒரு முக்கியமான உத்தி.

”தொழில்முனைவோர் என்பது பல வளரும் நாடுகளில் பொதுவானதல்ல, குறிப்பாக சமூக, பொருளாதார நிலைமைகள் தொழிலுடன் கூடிய கண்டுபிடிப்புகளையும் இணைப்புகளையும் தடை செய்யும் நிலைமைகள் இருக்கக் கூடிய நாடுகளில் பொதுவானதல்ல” என பிலிப்பைன்சின் மாபுவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் ராய்டா கம்மாக் (Rayda Gammag) மாநாட்டில் குறிப்பிட்டார்.

இதில் பங்கேற்ற இன்னொரு மூத்த இயற்பியலாளரான தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மாண்ட்சே மோச் டயல் (Mmantsae Moche Diale), தமது ஆய்வுச் சிந்தனைகளை எப்படி வர்த்தகமாக மாற்றுவது என்பது பலருக்கும் தெரியாது என்று கருத்துத் தெரிவித்தார்.
”உங்களது ஆய்வை எப்படி நீங்கள் விற்பனை செய்யும் பொருளாக மாற்றுவது என்பது குறித்து நீங்கள் வழிகாட்டல் பெறுவது முக்கியமானது” என்றார் அவர்.



வளரும் நாடுகளில் பெண் இயற்பியலாளர்களுக்கு உதவுவது

சில நாடுகளில் சமூக, கலாச்சார, பொருளாதார, மத விதிகள் ஆகியவை பெண் இயற்பியலாளர்களுக்கு சிறிதளவே ஆதரவு அளிக்கும். இது மிகவும் ஆழமாக, கல்வியின் தொடக்க நிலையிலேயே பாகுபாட்டைக் கொண்டிருக்கும். பல்கலைக்கழகம் வரை படித்த பெண்கள் தமக்கு ஆய்வு நிதியோ அல்லது தலைமை நிலைகளோ கிடைக்கத் தடைகள் இருப்பதைக் காண்பர்.

இங்கு ஆற்ற வேண்டிய முக்கியமான பங்கு சர்வதேச இயற்பியலாளர் சங்கத்துக்கு (IUPAP) உள்ளது. வளரும் நாடுகளிலுள்ள பெண் இயற்பியலாளர்களை அவர்களது உலகளாவிய சக இயற்பியலாளர்களுடன் இணைத்தல், பாகுபாடுகள் மற்றும் அத்துமீறலை எதிர்க்க விதிகளை உருவாக்குதல், நமது பிரதேச

அமைப்புகள் மூலமாக அவர்களை கண்டடைதல் ஆகியவற்றை அது செய்ய வேண்டும்.
”இது போன்ற ஒரு வலைப்பின்னலில் இணைவதால் இதே போன்ற நிலையிலுள்ள மற்ற பெண்கள் பெறும் எந்த இலாபமும் பெற முடியாதபடி மிகச் சில பெண்களை மட்டுமே கொண்ட நாடுகள் உண்டு” என தென்னாப்பிரிக்காவின் விட்வாட்டர்ஸ்ட்ராண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஐகில் கிளெட் ஹில் (Igle Gledhill )மாநாட்டில் கூறினார்.

வழியைக் காட்டுதல்

ஆழமாக விதைக்கப்பட்டிருக்கும் சவால்கள் இருப்பினும், முன்னேற்றத்துக்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன. அதில் இந்தியாவும், ஈரானும் தனித்து நிற்கின்றன.

ஈரானில் பெண்கள் இயற்பியலில் முனைவோர் பட்டம் பெற்றதிலும், உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர்களில் 55% இருப்பதாகவும், ஈரானின் இயற்பியல் கழகத்தின் ஆசம் இராஜி சாத் (Azam Iraji zad) கூறினார். அதேபோல் இந்தியாவில் ஸ்டெம் கல்வியில் பெண்களின் விகிதம் பிரிட்டனையும், பிரான்சையும் விட அதிகம் என்பதும் வெளிப்பட்டது.

எனினும் கூட, உலகம் முழுவதிலும் இயற்பியலில் பாலின அசமத்துவத்தை நீக்கும் செயல்பாடு பெரும்பாலும் எதிர்ப்பை மட்டுமல்ல சில சமயம் வன்முறையைக் கூடக் கொண்டு வரும் என்பதற்கான அப்பட்டமான ஆதாரங்களை மாநாடு கூறக் கேட்டது.



எங்களில் ஒருவரான ப்ரஜ்வல் சாஸ்திரி யாரும் விட்டு விடப்படாமலிருப்பதை உறுதிப்படுத்த நடைமுறைக்குகந்த, வலுவான பரிந்துரைகளை அளித்த ஒரு பட்டறையை நடத்தினார். இனம், வர்க்கம், சாதி, மாற்றுத் திறனாளி போன்ற பல சிக்கலான சாதகமற்ற, முன்னுரிமையற்ற வகைமுறைகளை உருவாக்கும் பாலினத்தைத் தாண்டிய பல அடையாளங்கள் இயற்பியலாளர்களுக்கு உண்டு.

இறுதியாக, பாலின அசமத்துவத்திலிருந்து இயற்பியல் நிறுவனம் கற்றுக் கொள்ள வேண்டும், அதைத் தாண்டிச் சென்று அதன் மிகவும் பலவீனமான உறுப்பினர்களின் நலன்களின் மீது தன் இலக்கைச் செலுத்த வேண்டும். அந்த வழியில், அது அனைவரையும் உள்ளடக்கும் ஒரு நல்ல தொழிலாக மாறும்.
இது வகுப்பறையிலிருந்து ஆய்வகம் வரை, மாநாடுகள், தொழில் வலைப்பின்னல், பொது அறிவியல் தொலைதொடர்பு வரை நீண்டு அனைத்து இடங்களுக்கும் விரிவாகச் செல்ல வேண்டும். சிறுவர்களும், சி|றுமிகளும் இயற்பியலைக் கற்கும் அனைத்து விளிம்புநிலைக் குழுக்களிலிருந்து அதிகமான முன்மாதிரிகளைக் காணுவதற்குத் தகுதி பெற்றவர்கள்.

இந்த மாநாடு பல தொடர் பரிந்துரைகளை உருவாக்கியுள்ளது. அவற்றை நாங்கள் இயற்பியல் சமூகத்துடன் பகிர்ந்து கொள்வோம். அதைத் தொடரும் விவாதத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

இந்த அளவுக்குப் பல அறிவுக் கூர்மை மிக்க மனங்களை விலக்குவது, பேச விடாமல் செய்வது, ஊக்கத்தைக் கெடுப்பதானது மிகவும் பெரிய விலையைக் கேட்பதாகும். அந்த விலையைப் பெண்கள் மட்டுமல்ல, மனித இனமே கொடுக்க வேண்டியிருக்கும்.

கட்டுரையாளர்கள்:

கேத்தி போலி
ஆஸ்திரேலியாவின் பிரதம விஞ்ஞானி
பேராசிரியர். பிரஜ்வல் சாஸ்திரி
சாரா மாடிசன் கூடுதல் துணை வேந்தர், வானியற்பியல் பேராசிரியர், ஸ்வின்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்.

நன்றி
இந்தக் கட்டுரை முதலில் ‘த கான்சர்வேஷன்’இல் வெளியானது.
அதைத் தொடர்ந்து த வயர் வெளியிட்டது.

Cathy Foley is Australia’s chief scientist, Office of the Chief Scientist.
Prajval Shastri is a professor.
Sarah Maddison is pro vice-chancellor (academic innovation and change),
professor of astrophysics,
Swinburne University of Technology.

This article was originally published by The Conversation

தமிழில்:கி.ரமேஷ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *