நாட்டையும், அரசமைப்புச் சட்டத்தையும், பாஜக அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்போம்: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த் உரை (தமிழில்: ச.வீரமணி)

நாட்டையும், அரசமைப்புச் சட்டத்தையும், பாஜக அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்போம்: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த் உரை (தமிழில்: ச.வீரமணி)

நாட்டில் எத்தனையோ வழக்கறிஞர்களின் சங்கங்கள் இருக்கின்றன. அவை ஆண்டு முழுவதும் பல மாநாடுகளும் நடத்திக் கொண்டிருக்கின்றன. பேசு பொருள் என்பது அநேகமாக அவர்களின் தொழில்முறை மற்றும் சட்டம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தாகவே இருக்கும். ஆயினும் இந்த சங்கம், அது தோன்றிய காலத்திலிருந்தே கொஞ்சம் வித்தியாசமானதாகவே செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் மக்களின் பிரச்சனைகளை விவாதிப்பதற்காகவும், அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும் இங்கே கூடுகிறார்கள். இந்த மாநாட்டின் பேசு பொருளே இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

நாட்டின் வரலாற்றில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் இந்த மாநாட்டை நீங்கள் நடத்திக்கொண்டிருப்பதற்காக முதற்கண் உங்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் இப்போது நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அரசாங்கத்திடமிருந்து, நாட்டையும், நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாத்தி ஓங்கி குரல் கொடுக்க வேண்டிய நிலையில் இருந்து வருகிறோம்.  இப்போதுள்ளதுபோன்ற நிலைமை, சுதந்திரத்திற்குப் பின் எப்போதுமே ஏற்பட்டதில்லை. நாட்டு மக்கள் இப்போது சட்டத்தின் ஆட்சியை சந்திப்பதற்குப் பதிலாக, சட்டவிரோதமான ஓர் அக்கிரம ஆட்சியை (not the rule of law but the rule of lawlessness) சந்திக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இப்போது மத்தியில் உள்ள ஆட்சியானது நம்முடைய நம்முடைய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக மட்டுமல்ல, வாய்ப்புக் கொடுத்தால், அதனை ஆணிவேருடன் பிடுங்கி எறிவதற்கும் அதன் மூலம் நாட்டிற்குத் தீங்கு விளைவித்திடவும் தயாராக இருக்கிறது. நம்முடைய அரசமைப்புச்சட்டமானது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் ஓர் அறிக்கையை நமக்கு அளித்திருக்கிறது. அப்போது இருந்த அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், பல்வேறு சமூக நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து சமூகக் குழுக்களும் அதனை ஒருமனதாக ஏற்றுக் கொண்டார்கள். நம் அரசமைப்புச்சட்டம் என்பது வெறுமனே நாட்டின் அடிப்படையான சட்ட அமைப்பு மட்டுமல்ல. மாறாக, நாட்டில் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்காக,இதற்கு முன் நாம் வழிவழி மரபாகப் பெற்றிட்ட சமுதாயத்திலிருந்து மிகவும் வித்தியாசமான ஒன்றாக மட்டுமல்ல, அதற்கு எதிரதான ஒன்றாகவும் உருவாக்குவதற்காக, “இந்திய மக்களாகிய நாம்…” நமக்கு நாமே பிரகடனம் செய்து கொண்ட ஒன்றாகும்.  நேர்மையற்ற சமூகத்திற்குப் பதிலாக, சமத்துவமற்ற சமூகத்திற்குப் பதிலாக, சுரண்டும் சமூகத்திற்குப் பதிலாக, நிலப்பிரபுத்துவ சமூகத்திற்குப் பதிலாக, ஒடுக்குமுறை சமூகத்திற்குப் பதிலாக, பிளவுவாத சமூகத்திற்குப் பதிலாக, இவை அனைத்தையும் ஒழித்துக்கட்டி, நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் ஒரு தேசத்தை உருவாக்குவதற்காக நமக்கு நாமே சங்கல்பம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை, அடிப்படை உரிமைகள் மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகள் அனைத்தும் நமக்கு புதியதொரு சமூகத்திற்கான லட்சியத் திட்டங்களை வகுத்துத் தந்திருக்கின்றன.

மனுஸ்மிருதிக்கு வக்காலத்து வாங்கும் அரசாங்கம்

Narendra Modi: The making of a majoritarian leader | India | Al ...

தற்போதைய ஆளும் வர்க்கத்திற்கு, நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை கொஞ்சம்கூட விரும்பாதுதான். ஏனெனில் அரசமைப்புச்சட்டம் முன்மொழிகிற புதியதொரு சமுதாயம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறது.  ஜனநாயகத்தை, சமத்துவத்தை, சுதந்திரத்தை, சகோதரத்துவத்தை வெறுத்திடும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின்கீழ் இயங்கிடும் ஆளும் கட்சிக்கு, ஒரே கட்சி, ஒரே தலைவர், ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழியை விரும்பும் ஆளும் கட்சிக்கு இது விருப்பத்திற்குரிய ஒன்று கிடையாதுதான். இது, உயர் சாதியின் இந்து ராஷ்ட்ரத்தை உருவாக்க விரும்புகிறது. இது, மனுஸ்மிருதியையும், நால் வர்ண சாதிய அமைப்பையும் விரும்புகிறது. இது, இதர மதங்களையும், கலாச்சாரங்களையும் வெறுக்கிறது. இதன் முன்னணி ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் உயர்சாதியினர்தான். பெயரளவிற்கு வேறு சில சாதியினரையும் பகடைக்காய் போன்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் ஊழியர்களை மிகவும் பொருத்தமானமுறையில் விளித்திட வேண்டும் என்றால் அவர்கள் “மனுவாதிகள்” (“Manuwadis”). அதாவது, மனுஸ்மிருதிக்கு வக்காலத்து வாங்குபவர்கள். (protagonists of Manusmiriti).

மத குருமார்களும், நிதிப் பங்குதாரர்களும், சமூகத்தை ஆதிக்கம் செலுத்துவதற்காக, எப்போதும் ஒருவர்க்கொருவர் கைகோர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

சமுதாயத்தில் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உள்ள துன்பங்கள் அனைத்தும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவையே என்று அவதியுறும் மக்களிடம் தொடர்ந்து போதனை செய்துகொண்டே இருக்கிறார்கள். எனவே இதனை மாற்ற முடியாது என்றும், மாற்றக் கூடாது என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் அவதியுறும் மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பிவிடாதிருப்பதற்காக, பணம் படைத்தவர்கள், மத குருமார்களுக்கு தாராளமாக நன்கொடைகளை அள்ளித்தருகிறார்கள். இன்றையதினம் இத்தகைய மனு(அ)தர்மம் மற்றும் பணபலத்தின் இழிவான கூட்டணி (sinister alliance of Manu and Money)யின் அப்பட்டமான கோர வடிவத்தைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

புதியதொரு சமுதாயம் ஏன் உருவாக்கப்படவில்லை?

கடந்த எழுபது ஆண்டுகளில், அரசமைப்புச்சட்டத்தில் அமைத்துத்தரப்பட்டுள்ள புதியதொரு சமுதாயத்தை உருவாக்கிட என் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. இதற்கு யார் பொறுப்பு? மற்றும் இவ்வாறு முயற்சிகள் மேற்கொள்ளப்படாததற்கு என்ன காரணங்கள்?

நாம் பாரம்பர்யமாகப் பெற்றிருக்கக்கூடிய சமூக அமைப்பானது நால் வர்ண சாமி அமைப்பு முறை மற்றும் தீண்டாமைக் கொடுமைகளை மட்டும் பெற்றிருக்கவில்லை, அத்துடன் நம் நாட்டில் பிரிட்டிஷார் ஆட்சி நீடித்தவரை நம் நாட்டில் பிராமணர்களில் ஆண்களைத் தவிர வேறெவரும் கற்பதற்கோ மற்றும் அறிவு பெறுவதற்கோ தடை விதிக்கப்பட்டிருந்தன. விளைவு, ஒட்டுமொத்த நிர்வாகமும் அந்த சாதியின் கைகளில் இருந்தது. மொகலாயர்கள் மற்றும் பிரிட்டிஷார் ஆட்சிக் காலங்களிலும்கூட இதுதான் நிலைமை. ஏன், இன்றையதினமும் கூட அவர்கள் ஆதிக்கத்தின்கீழ்தான் நிர்வாகம் இருந்து வருகிறது. சாதிய அமைப்பு முறையும், கற்பதற்கு இருந்துவந்த தடையும் சமூகத்தில் ஆட்சி செய்யும் அதிகாரம் எப்போதும் தங்கள் வசமே  இருக்க வேண்டும் என்பதை நிலைநிறுத்திக்கொள்வதற்காக உயர் சாதியினரால் ஏற்படுத்தப்பட்ட சதித் திட்டமாகும். எனவேதான் வேறு சாதிகளிலிருந்து எவராவது முன்னேறி வந்தால், அவர்கள் ஆத்திரம் அடைகிறார்கள். இப்போதும் கூட அவர்களை வருவதைத் தடுப்பதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

Demolition of democratic, secular Constitution, old project of ...

ஏனெனில் அவர்கள் வந்துவிட்டார்களானால் எங்கே நம் அதிகாரங்கள் நம் கைகளைவிட்டுப் போய் விடுமோ என்று பயப்படுகிறார்கள். எனவேதான் அவர்கள் நாட்டிலுள்ள கேந்திரமான அனைத்து நிறுவனங்களையும் தங்கள் ஆதிக்கத்தின்கீழ் வைத்துக் கொண்டிருக் கிறார்கள். அது அரசின் அதிகாரபீடமாக இருந்தாலும் சரி, அல்லது நீதித்துறையாக இருந்தாலும் சரி, அல்லது கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அல்லது ஊடகங்களாக இருந்தாலும் சரி, அல்லது கலாச்சார மற்றும் இலக்கிய அமைப்புகளாக இருந்தாலும் சரி அனைத்தும் அவர்களின் ஆதிக்கத்தின் கீழேயே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவினரின் மேம்பாட்டையும், நலன்களையும், முன்னேற்றத்தையும் அரசமைப்புச் சட்டம் தான் விரும்புகிற புதியதொரு சமூகத்தில் உறுதி அளித்திருந்த போதிலும்கூட, அவற்றின் அமலாக்கம் என்பது முழுவதும், அரசமைப்புச்சட்டத்தின் குறிக்கோள்களுக்கு எதிராக இருக்கக்கூடிய உயர்சாதியினரின் கைகளில் இருப்பதாலும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் முன்னேற்றத்திற்காகக் கொண்டுவரப்படக்கூடிய அரசின் நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்குத் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இன்றைய தினம் அவர்கள் ஆட்சியில் இருப்பதன் காரணமாக, நிர்வாக எந்திரம் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், தாங்கள் விரும்பும் கொள்கைகளை அனைத்து முனைகளிலும் அமல்படுத்திடவும் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

2014க்குப் பின், கடந்த ஆறு ஆண்டுகளில், நீதித்துறை உட்பட அனைத்து நிறுவனங்களிலும் ஆர்எஸ்எஸ் ஆட்களை நுழைப்பதற்கு தீவிரமான முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்நிறுவனங்கள் அனைத்தும், ஆர்எஸ்எஸ்-இன் நிலைப்பாட்டின்கீழ் செயல்பட வேண்டும் என்றும் நிர்ப்பந்தங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. சாதிய அமைப்பு முறையை வலுப்படுத்துவதற்கும், சமூகத்தை ஆயிரக்கணக்கான சாதிய அமைப்புமுறைகளுடனேயே ஒருவர்க்கொருவர் மோதிக்கொண்டிருக்கக்கூடிய விதத்தில் பிளவுபடுத்தி வைத்திருக்கவும்  தற்போதைய ஆர்எஸ்எஸ்/பாஜக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளின் விளைவுகளையும் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இட ஒதுக்கீடுகளுக்கான ஷரத்துக்களைக் கூட, சமூகத்தில் பல்வேறு பிரிவினரிடையே பேதங்களைக் கூர்மைப்படுத்தும் விதத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

சமூகத்தில் மதவெறித் தீயை விசிறிவிட, குறிப்பாக முஸ்லீம்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு எதிராக விசிறிவிட, வேண்டுமென்றே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசமைப்புச் சட்டத்தின் குறிக்கோள்களிலிருந்சூது மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, “தாய்வீட்டுக்குத் திரும்புவோம்” (“Ghar Wapsi”), “ஜிஹாத் காதல்” (“Love Jihad”), “மாட்டுக்கறி தின்கிறார்கள்” (“Beef-eating”), “குண்டர் கும்பல் கொலைகள்” (“Mob Lynching”), “ராமர் கோவில்” (“Ram Mandir”) போன்ற மக்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளைக் கிளப்பியும், இப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு போன்ற பிரச்சனைகளையும் வேண்டுமென்றே விசிறிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆளும் வர்க்கத்தின் சதித் திட்டம் என்பது, மக்களை என்றென்றும் ஒருவர்க்கொருவர்  எப்போதும் பிளவுபடுத்தியே வைத்திருக்க வேண்டும் என்பதும், தங்கள் பொதுப் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக, குறிப்பாக பொருளாதாரப் பிரச்சனைகளுக்காகவும் மற்றும் அரசமைப்புச்சட்டத்தின் லட்சியங்களை அமல்படுத்தப்படுவதற்கும் அவர்கள் ஒன்றிணைந்து ஒரே மேடைக்கு வந்துவிடக் கூடாது என்பதுமேயாகும்.

இந்து ராஷ்ட்ரம் என்றால் பிராமணர்களின் ராஜ்ஜியம்

தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் ...

அதனால்தான், இன்றையதினம் மனுஸ்மிருதியைப் போற்றுகின்ற வேலையையும், அரசமைப்புச் சட்டத்தை எரிக்கின்ற வேலையையும், “இந்து ராஷ்ட்ரம் அமைத்திடுவோம்” (இந்து ராஷ்ட்ரம் என்றால் பிராமணர்களின் ராஜ்ஜியம் என்பதைத் தவிர வேறொன்றுமல்ல) என்று ஓங்கிக் குரல் கொடுப்பதையும், இவர்களின் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் அனைவரையும் தேசப்பற்று இல்லாதவர்கள் மற்றும் துரோகிகள் என்று முத்திரை குத்துவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

 நம் அரசமைப்புச் சட்டத்தின் லட்சியங்களை அமல்படுத்துவதில் முக்கிய தடையாக இருக்கக்கூடிய மற்றுமொரு முக்கிய அம்சம் என்னவெனில், இப்போதிருந்து வரும் பொருளாதார அமைப்பு முறையாகும். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், முதலாளித்துவ அமைப்பு முறையாகும். இந்த அமைப்பின் சமூகக் கேடான அம்சங்கள் வருமாறு: இது லாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றே தவிர, மக்கள் நலன் சார்ந்தது அல்ல. எனவே, இது மக்களின் நலனுக்காக வேலை செய்யாது. மாறாக,இது கொள்ளை லாபம் ஈட்டுபவர்கள் மேலும் மேலும் கொள்ளையடிப்பதற்கு வழிவகுத்துக் கொடுக்கும். லாபம் ஈட்டுவது குறையுமானால், இது வேலை செய்வதையும் நிறுத்திக் கொள்ளும். இதன் ஒருபகுதியாக தொழிலாளர்களைக் குறைத்திடும், அவர்களுக்குப் பதிலாக எந்திரங்களைப் புகுத்திடும். இவற்றின் மூலம் செல்வம் ஒருசிலர் கைகளில் குவிவதற்கு இட்டுச் செல்லும். வேலையில்லாதோர் மற்றும் பிச்சைக்கார்கள் பட்டாளத்தை உருவாக்கிடும். இது தன்னிடம் உள்ள அபரிமிதமான செல்வாதாரத்தின் காரணமாக, தன் கொள்ளை லாப வெறியைத் தீர்த்துக்கொள்வதற்கு ஏற்ற விதத்தில் அரசியல், சமூகம், கல்வி மற்றும் கலாச்சார வாழ்க்கை அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும்.

வேலையின்மையும், அதீதமான முறையில் சமத்துவமின்மையும் சமூகத்தை கிரிமினல்மயமாக்கிடும். லஞ்ச லாவண்யங்கள், மோசடிகள் மற்றும் ஊழல்கள் ஆகியவை இந்த அமைப்பின்கீழ் வேகமாகப் பரவக்கூடிய தொற்று நோய்களாகும். கறுப்புப் பணம் பெருகுவதும் அதனை சமூக விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதும் இதனுடன் இயற்கையாய் அமைந்துள்ள இழிகுணங்களாகும். தேர்தல்கள் கறுப்புப் பணத்தின் பிரதான ஊற்றுக்கண்ணாகும். இதில் மிகவும் மோசமான அம்சம் என்னவெனில், இது அனைத்தையும் அழித்து ஒழித்துவிடுகிறது, சுற்றுச்சூழலை வகைதொகையின்றி மாசுபடுத்துகிறது, மனித சமூகத்தின் மாண்புகளுக்குக் கிஞ்சிற்றும் மதிப்பளித்திடாமல், மிருகங்களை விடக் கேவலமானவர்களாக மனிதர்களை மாற்றுகிறது. முதலாளித்துவத்தின் இத்தகைய கேடுகெட்ட நடவடிக்கைகள் பூமிப்பந்தில் ஏற்கனவே வெப்பத்தின் அளவை அதிகப்படுத்தி, அதனை மிகவும் நாசகரமான நிலைக்குக் கொண்டுசென்றுவிட்டது.

 பூமிப்பந்தில் அனைவரும் வாழக்கூடிய ஒரு சமத்துவ சமுதாயத்தை, ஒரு கண்ணியமான வாழ்க்கையை அமைப்பதற்கான வழிவகைகளைக் காண யோசிக்காமல், முதலாளித்துவத்தின் கேடுகெட்ட நடவடிக்கைகளின் காரணமாக பூமிப்பந்து அழிந்தால், வேறு கிரகங்களில் சென்று வாழமுடியுமாக என்று கனவுகாணக்கூடிய நிலைக்கு பலரைத் தள்ளியிருக்கிறது.

கோடீசுவரர்களும், கிரிமினல்களும் நிறைந்துள்ள நாடாளுமன்றம்/சட்டமன்றம்

Nearly 50 per cent MPs in new Lok Sabha have criminal records ...

தற்போதைய பொருளாதார அமைப்பு, நம் ஜனநாயக அமைப்பில் எந்த அளவிற்குக் கேடு விளைவித்திருக்கிறது என்பதைச் சற்றே ஆராய்ந்திடுவோம். நம் நாடாளுமன்றத்தில் 2014-2019ஆம் ஆண்டில்  உறுப்பினர்களின் பொருளாதார அந்தஸ்தைச் சற்றே பார்ப்போம். மக்களவையில் மொத்தம் உள்ள 543 உறுப்பினர்களில், 442 பேர் கோடீஸ்வரர்கள், 229 பேர் கிரிமினல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றங்களால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பவர்கள், மோடியின் அமைச்சரவையில் உள்ள 78 பேர்களில், 72 பேர் கோடீஸ்வரர்கள், 24 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மாநிலங்களவை என்பது கிட்டத்தட்ட பணம்படைத்தவர்கள் ‘கிளப்’பாகவே மாறியிருக்கிறது.

மாநில சட்டமன்றங்களிலும் சராசரியாக 36 சதவீதத்தினர் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்களாவார்கள்.

2019-2024 நாடாளுமன்றத்திலும் மக்களவையில் 43 சதவீதத்தினர் கிரிமினல் குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குகளை எதிர்கொள்பவர்கள்தான். ஆளும் பாஜக-வின் மொத்தம் உள்ள 301 உறுப்பினர்களில் 116 பேர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இத்தகைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்காக சேவகம் செய்வார்கள் என்று கற்பனை செய்வது கடினமா, என்ன? இவ்வாறாக நம் ஜனநாயகம் பணப்பைகளைப் பேணிப்பாதுகாத்திடும் ஓர் இடமாகவும், கிரிமினல்களின் கூடாரமாகவும் சுருங்கிவிட்டதைக் காண்கிறோம். உச்சநீதிமன்றம் சமீபத்தில் இதனைக் குறித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்றங்கள் நிலைமையை முன்னேற்றிட முடியாது. மாறாக உங்களைப் போன்று சமூகப் பொறியாளர்களால் வழிநடத்தப்படும் மக்களால் மட்டுமே இதனை மாற்றியமைத்திட முடியும். இதனைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் மனம் வைத்தால், உங்களால் இதனை நிச்சயமாகச் செய்ய முடியும்.

36% of MPs, MLAs facing trial in 3,045 criminal cases' | India ...

உங்களைப் போன்ற சமூகப் புரட்சி வழக்கறிஞர்களுக்கான பணி வரையறுக்கப்பட்டுவிட்டது. அரசமைப்புச் சட்டத்தால் அதளிக்கப்பட்டுள்ள புதியதொரு சமுதாயத்தை உருவாக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு புதியதொரு சமுதாயத்தை சட்டரீதியாகவும், வன்முறையற்ற நடவடிக்கைகளின் மூலமாகவும் உருவாக்க வேண்டியிருக்கிறது. சமுதாயம் மாறும் முறை (transition), மென்மையாகவும், மிகமிகக் குறைவான சேதாரங்களுடனும் இருக்க வேண்டும்.

எனவே, இந்த மாநாடு கீழ்க்கண்டவாறு ஒரு குறைந்தபட்ச நிகழ்ச்சிநிரலை, உடனடியாக அமல்படுத்தக்கூடியவிதத்தில், முன்வைத்து, நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றப் பாதையில் தலைமைதாங்கி வழிநடத்திச் சென்றிட வேண்டும்.

  1. அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மட்டுமல்ல, அதனை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் உணர்வுபூர்வமாகவும், உண்மையாகவும் மேற்கொண்டிட வேண்டும். அதன் மூலம் நீதி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும். சமூக ரீதியாக, அரசியல்ரீதியாக, பொருளாதார ரீதியாக மற்றும் கலாச்சார ரீதியாக இருந்துவரும் ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துக்கட்டி, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம் மற்றும் குடியரசுக் கொள்கையை வலுப்படுத்திட வேண்டும். மதவெறி, சகிப்பின்மை, மேலாதிக்க மனோபாவம், பிளவுவாதம் முதலானவற்றிற்கான விதைகளைக் களைந்திட வேண்டும்.
  2.  தற்போது இருந்துவரும் ஊக, லாப நோக்கு கொண்ட, சமூக விரோத மற்றும் மனிதகுல விரோத பொருளாதார அமைப்பை மாற்றிட வேண்டும். அதற்குப் பதிலாக ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் வேலைவாய்ப்பு, வாழ்வதற்கான வருமானம், வீட்டு வசதி, இலவசக் கல்வி, இலவச சுகாதார வசதி உட்பட அனைத்து அடிப்படைப் பொருளாதார தேவைகளையும்  அளிக்கக்கூடிய பகுத்தறிவுடனான, மக்கள் நலன் சார்ந்த மற்றும் திட்டமிட்ட பொருளாதார அமைப்புமுறையை உருவாக்கிட வேண்டும். அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் ஒழித்துக்கட்டி, அனைவருக்கும் நாகரிகமான வாழ்க்கையை ஏற்படுத்திட வேண்டும்.
  3. சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, மேம்படுத்திட வேண்டும். காற்று, தண்ணீர், மண் முதலானவை மாசு படுவதைத் தடுத்திட வேண்டும். மனிதகுலத்திற்கும், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கும் சுகாதார வாழ்க்கையை உத்தரவாதமான முறையில் உருவாக்கிட வேண்டும்.
  4. நாட்டில் சகிப்பின்மை மூலமாகவும், ஓரினத்திற்கு எதிராக மற்றோர் இனத்தை வெறுக்கச் செய்யும் நடவடிக்கைகள் மூலமாகவும் நாட்டைப் பிளவுபடுத்த முயலும் மதவெறியர்கள், சாதி வெறியர்கள் மற்றும் பல்வேறுவிதமான இனவெறியர்களின் சூழ்ச்சிகளை முறியடித்திட வேண்டும். நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் மேம்படுத்திட வேண்டும்.
  5.  மதவெறியர்களையும் மற்றும் அனைத்துப் பிளவுவாத சக்திகளையும் பகிஷ்கரித்திடுவோம். அவர்கள்தான் உண்மையான தேச விரோத சக்திகள் மற்றும் நாட்டுப்பற்றற்ற பிறவிகள். அவர்கள்தான் நம் சமூகத்தின் தீண்டத்தகாதவர்கள்.
  6. மேற்கண்ட குறிக்கோள்களை எய்திட புதிய தன்னலமற்ற தலைமையை உருவாக்கிடுவோம்.

அன்பார்ந்த வழக்கறிஞர் பெருமக்களே, நான் இதுவரை நம் நாட்டின் துன்பம், வறுமை, பிற்படுத்தப்பட்ட நிலை ஆகியவற்றுக்கான அடிப்படைக் காரணங்களையும், இவற்றைப் போக்கி, ஒவ்வொருவரும் கண்ணியமிக்க வாழ்க்கை வாழ்வதற்காக நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் ஒருசிலவற்றையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன். பல நூறாண்டு காலமாக பெரும்பான்மை மக்களைக் கட்டாயமான முறையில் வறிய நிலைக்குத் தள்ளியிருக்கக்கூடிய காரணங்களைக் கண்டறிந்து, அவற்றைப் போக்கிட, நம்மில் சிலர் முன்வர வேண்டும். இதுகாறும் கல்வி மறுக்கப்பட்ட, அறிவு மறுக்கப்பட்ட சமுதாயத்தில் கல்வியையும் அறிவையும் பரப்புவதன் மூலம் நாம் எதிர்பார்த்திடும் புதியதொரு சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும். இதுவரை இதற்கான அடையாளம் எங்கும் தென்படவில்லை. இன்னமும் எத்தனை காலத்திற்கு நாம் காத்துக் கொண்டிருக்கப் போகிறோம்?

நான் மேலேகூறிய விஷயங்கள் குறித்து தயவுசெய்து சிந்தனை செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

Save country & constitution from the current govt: PB Sawant …

(இந்த உரையை அளித்தவர், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் மற்றும் புதுதில்லி, பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா, தலைவராக இருந்தவர்.  விஜயவாடாவில் 2020 பிப்ரவரியில் நடைபெற்ற இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் 10ஆவது தேசிய மாநாட்டில் ஆற்றிய உரையாகும். எனினும், இவரது உரை இன்றைக்கும் பொருந்தக்கூடியதேயாகும்.)

நன்றி: Sabrangindia

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *