மரணத்தின் விளிம்பில், மேற்கு மலைத் தொடர் தவளைகள்!
– முனைவர். பா. ராம் மனோகர்
இயற்கைச் சூழலில் உள்ள சில உயிரினங்கள், நம்மால் நெடுங்காலமாக, அக்கறை கொள்ளாமல் இருந்து வரும் நிலை இருக்கிறது. அதில் ஒன்று தவளை என்ற நீர் நில வாழ்வினம் (AMPHIBIAN)ஆகும். அதனை, பார்க்கும்போது கூட, சிலர் அருவருப்பு அடைவது, அதன் பண்புகளை பழமொழியாக “தவளை தன் வாயால் கெடும் “என்றும் மனித இனத்துடன் ஒப்பீடு செய்வது உண்டு. எனினும் தவளை விலங்கு,சுற்றுசூழல் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீர்நிலைகள் குறைய ஆரம்பித்து, கான்க்ரீட் கட்டிடங்கள், இயற்கை பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்த காலம் துவங்கி, இன்று வரை, தவளையினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக,காணாமல் போய்க்கொண்டு இருப்பதும் உண்மை என்பதை நாம் அறிந்து கொள்கிறோமா!!!?
மகாராஷ்ட்ரா மாநிலத்தில், மேற்கு மலை தொடர், வடக்கு பகுதியில், இயற்கை பீட பூமி, விவசாய நிலங்கள், மாங்காய், மிந்திரி தோட்டங்கள் ஆகிய மூன்று இடங்களில் தவளை விலங்கின இனத்தொகை, நீள் வாக்கு முறை (BELT TRANSECT METHOD) 50 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட போது, அவற்றின் இனத்தொகை நெல் விவசாய நிலப் பகுதியில் மிகக் குறைவாக உள்ளது. தோட்டங்களில் ஓரளவு எண்ணிக்கை காணப்படுகின்றன.குறிப்பாக, வளை தோண்டும் தவளை (BURROWING FROG- Mynervia cepfi ), கோவா தவளை, (Goan fejervarya-M. gomantaki) ஆகிய விலங்குகள் மிகவும் அரிதாக ஆகிவிட்டன. M. syhadrensis என்ற இனம் விவசாய பகுதியில் முற்றிலும் காணவில்லை.
மேற்கண்ட, தவளை இனங்கள், வாழிட அழிவு(பாறைகளில் உள்ள சிறு நீர் தேக்கம் -நுண் வாழிடங்கள்) மிக முக்கிய காரணமாக உள்ளது. ஏனென்றால் இந்த பாறை நீர், தவளை இன முட்டை, தலைப்பிரட்டை போன்றவற்றை வறட்சி காலத்தில் பாதுகாக்கும் பகுதியாக உள்ளன. பொதுவாக மேற்கு மலைத்தொடரில் உள்ள 256 தவளை சிற்றினங்கள் எண்ணிக்கையில், 226 மறைந்து விடும் “பயமுறுத்தல் “ நிலை அடைந்து விட்டது. மேலும் பருவ கால மாற்றம், நோய்கள் (chytridomycosis) , சூழல் மாசு ஆகியவையும் காரணமாக இருக்கிறது. மேற்கு மலைத்தொடர், பல்வேறு உயிரினங்கள், அரிய வெவ்வேறு தாவரங்களை உள்ளடக்கிய அருங்காட்சியகம் அல்லது தொட்டில் என்று அழைக்கப்படுகிறது.

குறிப்பாக தவளை இனங்கள் புதிதாக நிறைய கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. மேற்கு மலைத்தொடரின் தெற்கு பகுதியில் Purple frog, என்ற ஊதா தவளை (Nasika batrachas sahydransis ) மூணாறு புதர் தவளை, மலபார் காளான் தவளை, கிரியட் புதர் தவளை போன்ற இனங்கள் முக்கியம் என நீர்நில உயிரின ஆராய்ச்சியாளர் சந்தீப் தாஸ் தெரிவிக்கிறார். (Galaxy frog ) அரிய காலக்ஸி தவளை பெரியார் புலிகள் காடு என்ற சரணாலயத்தில் காணப்படும் நிலையினை ஆய்வாளர் ராஜ்குமார் விவரிக்கையில் இத்தகைய சிறு விலங்கினங்களின் பாதுகாப்பு முக்கியத்துவம், யானை, நீலகிரி வரையாடு, ஆகிய பெரிய வனவிலங்குகளுக்கு தரப்படும் முக்கியத்துவத்தினை விட குறைவாக உள்ளது என்கிறார்.நாட்டிய தவளை(Dancing frog) என்ற இனம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கே உரிய ஒன்றாகும்.
Micrixalus பேரினத்தினை சேர்ந்த இந்த வகையில் 24 சிற்றினங்கள் உள்ளன. அவற்றில் 15, “அழிநிலை” ஆபத்து, 2 சிற்றினங்கள்” மிக தீவிர அழிநிலை” ஆபத்தான சூழலில் இருப்பதாக தெரிய வருகிறது. உலக அளவிலும், இந்த குறிப்பிட்ட இனம் “ ஆபத்தான அழியும் “நிலையில் ஐந்தாம் இடத்தில் இருப்பதாக ஆய்வாளர் K. V. குருராஜா கூறுகிறார். நாட்டிய தவளை ஆண் விலங்கு இனப்பெருக்க காலத்தில் தன் இணையின் அண்மையில் சென்று தோல் கொண்ட தனது நீண்ட பின் கால் ஒன்றினை (WEBBED HIND FOOT ) உயர்த்தி அசைக்கும் தனிப்பட்ட காதல் நடத்தையினை மேற்கொள்ளும் என்ற தகவல் வியப்பை அளிக்கிறது.
இதனை ஆங்கிலத்தில் “FOOT FLAGGING “என்று குறியீடு சொல்லி அழைக்கின்றனர். இரவு தவளை (NIGHT FROGS) என்ற மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் வசிக்கும் அரிய (Nyctribatrachidae) இனம், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களில் காணப்படுகின்றன. இவையும் அழிந்து போகும் அபாய நிலையில் உள்ளன. உலக அளவில் 41% சதவீதம் தவளை இனங்கள் அழியும் ஆபத்தில் இருப்பதாக தெரிகிறது. நம் இந்திய நாட்டிலும் 426 இனங்கள், மறையும்” தீவிர பயமுறுத்தல் “நிலையில் இருக்கின்றன. குறிப்பாக, ஊதா மூக்கு தவளை இனத்தின் அழிவு, மேற்கு தொடர்ச்சி மலை, நடுக்கனி, குல மார், பழங்குடி மக்கள் அவற்றை உணவாக பயன்படுத்தி வருகின்ற காரணம் ஆகும். தவளை இனங்கள் சுற்றுச் சூழல் சங்கிலியில், மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் பொது மக்கள், படித்தவர்கள், போன்றவர்களும், கூட அவற்றை பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலை வருந்துதற்குரியது.

வனவிலங்குகளின் முக்கியத்துவம், பெரிய பாலூட்டி, அரிய வண்ணப் பறவை இனங்கள் ஆகியவற்றுக்கு அதிகமாக எல்லோராலும் சிந்திக்கப்படும் நிலையில், விவசாயத்திற்கு தீங்கு தரும் பூச்சி, கொசுக்கள் போன்றவற்றை அழிக்கும் தவளைகள் பற்றி நாம் சற்று சிந்திக்கலாமே!?. இயற்கை சுற்றுச் சூழல் சங்கிலி, வலை என்பது நாம் நேரில் காண இயலாது. ஒரு குறிப்பிட்ட விலங்கின் இனத்தொகை, குறையும் போது நம் மனித இனம் அறியாமலே, சுற்றுச் சூழல் சீர் கேடுகள் இயற்கையில் ஏற்படும். எனினும் மனித முன்னேற்றம், அறிவியல் தொழில் நுட்பம் காரணமாக இயற்கை பாதித்து விடுகிறது என்பது உண்மை. மேற்கு தொடர்ச்சி மலை தொடர், என்ற இயற்கையின் அரிய கொடையான கருவூலத்தின் , பல்வேறு விலங்குகள், தாவரங்களின் அழகினை ரசிப்பது நம் மனிதர்களின் ஆர்வமாக இருப்பினும், அதன் அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், பல்வேறு மனித காரணிகளால் மட்டுமே அரிய தவளை இனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. நில பயன்பாட்டு முறை மாற்றம், ஏலக்காய், காபி, தேயிலை பயிர் தோட்டங்களின் பரப்பளவு அதிகரித்து கொண்டு போகுதல், யூகலிப்டஸ், சாய மரங்கள், முள் மரங்கள் அதிகரிப்பு போன்றவையும், சிறு தொழில் நிலையங்கள், ஹோட்டல், தங்குமிடங்கள், வீடுகள் அதிகரிப்பு, ஆகியவை காரணமாக மலைப்பகுதியின் இயற்கை தொடர்ந்து ஆக்கிரமிப்பு ஆபத்துக்களுக்கு உள்ளாகி வருகிறது. பொதுவாக, தவளை என்ற ஒரு இனம் காப்பாற்றப்படும் போது, அவற்றின் சூழல் வளமாகும். சிறு உயிரினங்கள் பாதுகாப்பு பற்றியும் இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசு அலுவலர்கள், கொள்கை முடிவு எடுக்கும் அரசியல் வல்லுநர்கள் ஆகியோர் ஆக்க பூர்வமாக சிந்தித்து, செயல்பட உரிய விழிப்புணர்வு திட்டங்களை உருவாக்க வேண்டும். கல்வி நிலையங்கள் இளையோரிடம் நீர் நில வாழ்வினம் என்ற தவளை இனங்கள் பற்றிய அறிவார்ந்த விழிப்புணர்வு மேற்கொள்ள முயற்சி செய்வது நன்று. உயிரினங்கள்,இயல்பாக பருவ கால மாற்றம், இயற்கை பேரிடர் காரணமாக அழிவை சந்திப்பது தவிர்க்க இயலாது. ஆனால் மனித குலம் தாம் வளர்ச்சி அடைவதற்கு இயற்கையினை அழிக்கும் போக்கினை நிச்சயம் மாற்றி கொள்ள தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும்!!!.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


சிறப்பு வாழ்த்துகள்