What are we going to teach the children? Education Article By Manimegalai. குழந்தைகளுக்கு அப்படி என்ன தான் கற்றுத் தரப் போகிறோம்..? - மணிமேகலை



ஒரு குழந்தை வகுப்பறையில் நுழையும் போதே அவனுக்கு நன்றாகப் பேசத் தெரியும்.. சிந்திக்கக் தெரியும்.. யாரிடம் எங்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது முதற்கொண்டு அவனுக்குத் தெரியும்.

குழந்தைகளின் சிந்தனைகளுக்கு வரி வடிவம் கொடுக்கும் வேலையை மட்டுமே பள்ளிகள் செய்கின்றன. குழந்தைகளின் அறிவுத் தேடலில் அவர்களின் சிந்தனைகளை சரியான வழியில் நேர்முகப்படுத்தும் கைகாட்டி மரமாக கல்விச் சாலைகள் செயல்பட வேண்டுமே தவிர அவர்களின் பாதையைத் தேர்வு செய்வதில் குழப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடாது.

அறிவை வளர்ப்பதற்காகவும், தெரிந்து கொள்வதற்காகவும் படித்த காலம் போய் இன்று பொருளாதாரத் தேடல் ஒன்றிற்கான கல்வி முறையாக நம்முடைய கல்வி முறை மாறியுள்ளது வேதனைக்குரியதே.

பெற்றோர்களும் என்ன நினைக்கிறார்கள்? தங்களுடைய குழந்தை நன்றாகப் படித்து வேலைக்குச் சென்று கைநிறைய சம்பாதித்து வீடு, கார் எல்லாம் வாங்கி வசதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார்களா?

குழந்தைகளிடம் உள்ள தனித்திறன்களைக் கண்டறிந்து, அதில் அவனை பிரகாசிக்கச் செய்தால் மட்டுமே அவனுடைய வாழ்வு ஒளிமயமாக இருக்கும். ஆனால் இன்று கல்விச் சாலைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? குழந்தைகளின் மனனம் செய்யும் கலையை வளர்த்துக் கொண்டிருக்கின்றன. நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள மறந்து விட்டோம். “புரிதல் ஒன்றே புன்னகை பூக்கச் செய்யும். மனனம் மனக் கவலை மட்டுமே தரும்!”

குழந்தைகள் வகுப்பறைக்கு வெளியில் கற்றுக்கொள்வதே அதிகம். நம்மைப் போல் அல்லாமல் குழந்தைகளின் உலகம் மிகப் பெரியது. ஆனால் பெற்றோராகிய நாம் அவனுக்கு அறிமுகப்படுத்தும் உலகம் வகுப்பறை மட்டுமே. வகுப்பறையில் வாழ்க்கையை முடக்க அவர்கள் கிணற்றுத் தவளைகள் அல்ல. உலகம் முழுவதும் வலம் வரும் பறவைகள்.

பெற்றோர்களின் எண்ணம் குழந்தைகள் வகுப்பறையில் மட்டும் தான் கற்கிறார்கள் என்பது. ஆனால் அவர்களுக்கு என்னவெல்லாம் தெரியும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவர்களுக்கு வாழ்க்கைப் பாடம் நன்றாகத் தெரியும்.

என் வகுப்பில் படிக்கும் ஒரு குழந்தையை நான் சந்தையில் பார்த்தேன். எனக்கு வியப்பு கலந்த மகிழ்ச்சி.. என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. எந்தக் குழந்தைக்கு தமிழ் எழுத்துகள் கூட தெரியவில்லை என்று என் உயர் அதிகாரியின் முன் நான் தலை குனிந்து நின்றேனோ அதே குழந்தை மிகப் பெரிய தொகைக்குக் கூட சரியான சில்லரை கொடுக்கிறது. இது நான் வகுப்பறையில் கற்றுக் கொடுக்காத பாடம் அந்தக் குழந்தை இதை எங்கே எவ்வாறு கற்றதென்று எனக்குப் புரியவில்லை.

What are we going to teach the children? Education Article By Manimegalai. குழந்தைகளுக்கு அப்படி என்ன தான் கற்றுத் தரப் போகிறோம்..? - மணிமேகலை

குழந்தைகளுக்கு மழை எப்போது பொழியும் என்பது கூடத் தெரியும். என்னை வியப்படையச் செய்த ஒரு நிகழ்வு – வெளியில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் ஓடி வந்து என்னிடம் ” மழை வரப் போகுது டீச்சர் சீக்கிரம் வீட்டுக்குப் போங்க” என்றான். நீ சொன்னா மழை வந்திடுமா ? போய் விளையாடுடா ” என்றேன். அவன் கூறிய சற்று நேரத்தில் மழை கொட்டத்தொடங்கி சுமார் 1:30 மணி நேரம் விடாமல் பெய்தது. ” உனக்கு எப்படி தம்பி மழை வரப்போவது தெரியும்” என்றேன். மேகம் இவ்வாறு கூடினால் கண்டிப்பாக மழை வரும்” என்றான்.

குழந்தைகளுக்கு எந்த மரம் எப்போது பூத்து காய்த்து கனி தரும், அந்தக் கனியை யார் சாப்பிடனும் யார் சாப்பிடக்கூடாது என்பது வரை தெரியும்.
கொடிக்காய்ப் பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னைப் பார்த்து ஒரு குழந்தை சொன்னது “குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் கொடிக்காப்பழம் சாப்பிடக்கூடாது டீச்சர் புள்ளைக்கு வயிற்றுக்கு ஆகாது. நீங்க சாப்பிடாதிங்க” என்றது. அது வார்த்தையை மீறி என்னால் அந்தப் பழத்தைச் சாப்பிட முடியவில்லை. நமக்குத் தெரியாதது கூட குழந்தைகளுக்குத் தெரியும்.

எதிர்க்கேள்வி கேட்கத் தெரியும். புதிர் போடத்தெரியும் . நானும் என் குழந்தைகளும் ஒரு முறை ராஜபாளையத்தில் இருந்து மதுரை வரும் போது திருமங்கலம் அடுத்த மாட்டுத்தாவணி புறவழிச்சாலையில் அப்போது தான் மழை பெய்து ஓய்ந்து மண் வாசனை வீசியது. நான் “மழை இப்பொழுது தான் பெய்து ஓய்ந்திருக்கிறது” என்றேன். அதற்கு என் மகள் மழையைப் பெய்யச் சொல்லுங்கம்மா என்றாள். நான் வியப்போடு ” என்ன பாப்பா சொல்ற மழையைப் பெய்யச் சொல்லவா? என்றேன். ஆமா நீங்க தானே சொன்னிங்க ” தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” என்று. அதான் பெய்யச் சொல்லுங்கம்மா என்று இயல்பாகக் கூறினாள். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. இதெல்லாம் நடக்கிற காரியமா? நான் மழையைப் பெய்யச் சொல்லி அது பெய்யாமல் போய்விட்டால்? நான் அமைதியானேன். அவள் மறுபடியும் பெய்யச் சொல்லுங்கம்மா என்றாள். அவளைச் சமாளிப்பதற்காக நான் சொன்னேன் ” மழை இப்பொழுது தான் பெய்து ஓய்ந்திருக்கிறது பாப்பா, நாம வீட்டுக்குப் போய்விட்டு பெய்யச் சொல்லலாம்” என்று.!

குழந்தைகளின் புத்திசாலித்தனமான பேச்சும் நகைச்சுவை உணர்வும் நம்மையே நம்மை மறக்கச் செய்யும். நமக்கு அறிவுரை கூறும் அர்ப்புதம் நிறைந்தவர்கள் அவர்கள்.

“போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்” என்ற உலக நீதிக்கு என்றோ விளக்கம் சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு என் மகள் நானும் என் கணவரும் என் தம்பியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது” மாமா இல்லாத போது அவரைப் பற்றி ஏன் பேசுறீங்க. நீங்களே செய்யக்கூடாதென்று கூறிவிட்டு அதை நீங்களே செய்றீங்க” என்று கூறினாள். இவ்வாறு குழந்தைகள் நம்மிடம் கூறும் போது அதை ஏற்று ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்கள் செல்கின்ற பாதையில் சரியாகச் செல்ல முடியும். குழந்தைகள் உண்மை கூறும் நேரத்தில் அவர்களை மிரட்டி விரட்டினால் அவர்களுக்கு குழப்பநிலை ஏற்பட்டு நிலை தடுமாறக் கூடும்.

நான்கு சுவர்களுக்குள் மழலைப் பருவத்தைப் புதைத்து விடாதீர்கள், தீப்பெட்டிக்குள் அடைத்து வைத்திருக்கும் குச்சிகள் போல் குழந்தைகளை முன்பருவ கல்விச் சாலையில் அடைத்து கருகச் செய்யாதீர்கள். சக குழந்தைகளுடன் விளையாடச் சொல்லுங்கள். அப்போது தான் அவர்களுடைய சிந்தனைத்திறன் வளரும். உங்கள் குழந்தைகளின் மழலை மொழியில் மகிழ்ந்திருங்கள். மீண்டும் கிடைக்காது ‌இந்த இனிய அனுபவம்.” குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்”. இந்த மழலைச் சொல்லினைக் கேட்க எத்தனையோ பேர் மருத்துவமனைகளிலும் கோவில்களிலும் தவமிருக்கின்றனர்.

முன்பருவக் கல்வி ஏன்? பருவம் வந்தவுடன் கற்றுக் கொள்ளலாமே. தாத்தா பாட்டி மற்ற குடும்ப உறவுகள் தான் முன் பருவக் கல்வியின் ஆசான்கள். அவர்களைவிட யாரால் சிறந்த முறையில் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத் தர முடியும். பாசத்திற்கு பாட்டி தாத்தா, அன்பிற்கு அத்தை, மாமா, அரவணைக்க அண்ணன், தம்பி, அக்கா, தங்கை. ஒரு மூன்று வயது குழந்தைக்கு இவர்கள் கற்றுத்தருவதை விடவா பள்ளிகள் கற்றுத் தந்துவிடும்.

மழலை பேசி மகிழ்ந்திருக்கும் குழந்தைகளை அடைந்து வைத்து அப்படி என்னதான் கற்றுத்தரப் போகிறோம்.!?

மணிமேகலை, ராஜபாளையம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “குழந்தைகளுக்கு அப்படி என்ன தான் கற்றுத் தரப் போகிறோம்..? – மணிமேகலை”
  1. நல்ல கருத்துள்ள கட்டுரை வாழ்த்துகள் மணிமேகலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *