தொடர் 3: நூறாண்டு தொழிற் சங்க உரிமை
மூலதனம் என்ன செய்யும்? கூலி உழைப்பு என்ன செய்யும்?
எஸ். கண்ணன்
தொழிலாளர்களைச் சுரண்டாமல் மூலதனம் பெருகுவதில்லை.
கூலியுழைப்புக்கு முன் தேவை மூலதனம்
மூலதனத்திற்கு முன் தேவை கூலியுழைப்பு
ஒன்று மன்றொன்றுக்கு முன்நிபந்தனையாக உள்ளது.
ஒன்று மற்றதன் இருப்பிற்கு காரணமாகிறது.
மூலதனத்தின் வருகை, மலிவு விலை கூலியையும், சரக்குகளுக்கான சந்தையைக் கொண்டதாகவும், உள்ள இடங்களை நோக்கி பாய்ச்சல் வேகத்தில் இருக்கும் என காரல் மார்க்ஸ் கூறுகிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட போது, தொழில் முதலீட்டாளர்களை சந்தித்தது முக்கியமாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் கூலியுழைப்பு கொட்டி கிடக்கிறது. மேலும் அது மலிவு விலையிலும் கிடைக்கிறது, என்பதை மூலதனம் நன்கு அறியும். எனவே முதலமைச்சர் போன்றோரின் அழைப்பிலும், அரசுகள் நடத்தும் முதலீட்டாளர் மாநாடுகளிலும் மூலதனம் குதூகலிக்கிறது.
தமிழ்நாடு சிறந்த களம்:
மூலதனத்தின் நலன்களும், கூலி உழைப்பின் நலன்களும் ஒன்றுக்கு ஒன்று நேர் எதிரானது என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது. மார்க்சிய தத்துவத்தின் இயக்கவியல் விதிகளில் ஒன்று, எதிர் எதிர் கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும் என்பதைத் தெளிவாக புரிய வைப்பது, மூலதனம் மற்றும் கூலி உழைப்பு ஆகும். கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் செய்து கொள்ளப்படும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுடன், தமிழ்நாடு அரசு செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆயிரக்கணக்கான நிறுவனங்களை, இந்த இரண்டு பத்து ஆண்டுகளில், கொண்டு வந்து சேர்த்துள்ளது.
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை தருவது என்ற உயரிய நோக்கம் இருப்பதாக, மூலதனம் குறித்து முடிவு செய்து விட முடியாது. மார்க்ஸ் கூறியது போல், தமிழ்நாட்டில் சாதாரணமான கூலி உழைப்பு மட்டும் இல்லை. உற்பத்தி திறன் அதிகம் கொண்ட மூலதனத்தை பெருக்குவதற்கு தேவையான உழைப்பு சக்தி அதிகம் கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள திறன் கொண்ட இளம் உழைப்பு படை, வேலைவாய்ப்பிற்காக தொழிற்சாலைகளை, முதலீடுகளை அல்லது மூலதனத்தை சார்ந்து இருக்க வேண்டி உள்ளது. அரசு அத்தகைய முதலீடுகளைச் செய்ய முன்வருவதில்லை. நவீன தாராளமய கொள்கைகளை அமல் படுத்தி வரும், அரசுகளாக உள்ள நிலையில், தனியார் முதலீடுகள் அதிகரிக்கிறது.
மூலதனத்திற்காக மாநிலங்களுக்கு இடையிலான போட்டி:
மூலதனத்தை ஈர்ப்பதற்காக வளர்ந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவது, மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலத்தை ஆளும் கட்சிகளுக்கு இடையிலும் போட்டியை உருவாக்குவது நடைபெறுகிறது. போட்டியிடும் மாநிலங்கள், நிலம், நீர், மின்சாரம், சாலை, இதர உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதிக்கு வேண்டிய துறைமுகம், விமான சேவை ஆகிய அனைத்தையும் செய்து தருவதிலும், சலுகை விலையில் வழங்குவதிலும் போட்டியிடுவதைக் காண முடிகிறது. இந்த போட்டி அறிவிப்புகளை, மாநில அரசுகள் மிக அதிக அளவில் வெளியிட்டு தான், பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்கின்றன. நம் நாட்டில், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், குஜராத் மற்றும் மகராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களுக்கு இடையில், இந்த போட்டியை வெளிப்படையாகவே காண முடிகிறது.
காரல் மார்க்ஸ் 1850 களிலேயே, இது பற்றி குறிப்பிடுகிறார். உற்பத்தித் துறை வளர்ச்சியில், இயற்கை சக்திகளின் பயன்பாடுகள், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், அதே அளவு உழைப்பையும், மூலதனத்தையும் கொண்டு முன்னைவிட, மிக அதிக அளவில் பொருள்களை உற்பத்தி செய்வதை சாத்தியமாக்குகின்றன, எனக் குறிப்பிட்டு உள்ளார். குறைவான முதலீட்டு செலவு, திறன் கொண்ட உழைப்பாளர்களுக்கு குறைவான கூலி, ஆகியவற்றின் மூலம் குறைவான உற்பத்தி செலவு ஆகியவை மூலதன விரிவாக்கம் மேலும் மேலும் அதிகரிக்க பயன்படுகிறது.
நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் அமலாக்கத்தின் பின்னணியில், மாநில அரசுகள், மேற்படி பன்னாட்டு நிறுவனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, சர்வதேச நிதி முனையம், உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் கடன் பெறுகின்றன. இதன் காரணமான நிபந்தனைகளில், அரசுகள் நலத்திட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது முக்கியமானதாக உள்ளது. நலத்திட்ட நடவடிக்கைகள் கைவிடப் படுவதாலும், அமைப்புசாராத் தொழிலாளர்கள் மிகப் பெரிய அளவில் பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். மொத்தத்தில், பன்னாட்டு நிறுவனங்களின் வருகைக்காக, செய்து தரப்படும் வசதி வாய்ப்புகள் தொழிலாளர்களையே கூடுதலாகப் பாதிக்கிறது.
அதுமட்டுமல்ல தொழிலாளர்களின் வகைப்பாடுகளும், உற்பத்தித் துறையில் உழைப்பு பிரிவினைகளும் அதிகரிக்கிறது. தொழிலாளர்களின் கூலியை குறைத்திடுவதற்கு, காண்ட்ராக்ட், பயிற்சி மற்றும் தினக் கூலி போன்ற பெயர்களில் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப் படுகின்றனர். உழைப்பு பிரிவினைகளில், கார் தொழிற்சாலைக் எனக் கொண்டால், அதன் ஒவ்வொரு உதிரி பாகத்தையும், வேறு ஒருவர் செய்து கொடுப்பது என்பது அமலாகிறது. இதன் காரணமாக உதிரிபாக உற்பத்தியாளர், யார் குறைந்த விலையில் அந்த பாகத்தை அளிக்கிறார் என பேரம் பேசி, உற்பத்தி செலவை குறைக்கும் ஏற்பாடு அதிகரிக்கிறது. இது எங்கு முடிகிறது என்றால், தொழிலாளரின் உழைப்பு சக்திக்கான விலையை தீர்மானிப்பதிலும், மேலும் மேலும் குறைவான உற்பத்தி செலவிற்கான நபர்களை கண்டறிவதிலும் முடிகிறது. அயல்பணி ஒப்படைப்பு என்ற முறையில் மேலும், மேலும் உற்பத்தி தளம் சிதறடிக்கப்படுவது இடம் பெறுகிறது.
உள்ளூர் அரசியல் வாதிகள் அல்லது அதிகாரம் படைத்தவர்கள் முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரை, இது போன்ற அயல்பணியை ஏற்று நடத்தக் கூடியவர்களாக உள்ளனர். இதில் பணி புரியும் ஊழியர்கள், பெரும்பாலும் உள்ளூர் பெண்கள் துவங்கி, வெளிமாநில தொழிலாளர்கள் வரையிலுமானவர்களாக உள்ளனர். எனவே பெரிய முரண்பாடுகள் இல்லாமல், வேலைநேரம் கடைப்பிடிப்பது போன்றவற்றில் சட்ட உரிமைகள் மீறப்படுவது வரை உழைப்பு சுரண்டலை அரங்கேற்ற ஏதுவாக சூழல் கட்டமைக்கப் படுகிறது.
மூலதனத்திற்காக வளைந்து கொடுக்கும் ஏற்பாடுகள்:
மூலதனம் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் மூலம், அரசு கட்டுப்பாடுகளை சிதைத்துள்ளது. தொழிலாளர் சட்டங்களையும் சிதைத்திட தீவிர முயற்சி மேற்கொள்கிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தில், எண்ணற்ற பணக்காரார்கள், மேல் நடுத்தட்டு பிரிவினர், மிக அதிகம் கல்வி பெற்றோர் தங்களை இணைத்துக் கொள்வதைப் பெருமையாக கருதினர். ஆனால் இப்போது குறிப்பாக கடந்த 40 ஆண்டு கால, உயர்கல்வி கல்வி நிபுனத்துவம், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு, வேண்டிய நிபுனர்களை உருவாக்கும் விதத்தில் கட்டமைக்கப்பட்டது. கல்வித் தளத்தில் உருவாக்கப் பட்ட இந்த கருத்துருவாக்கம், குறிப்பிடத்தக்க பகுதி மக்களிடம், தாராளமய கொள்கைகளை ஏற்கும் மனநிலையை உருவாக்குகிறது.
குறிப்பாக சட்டம், ஆடிட்டிங், மனித வளம், சமூக பணி. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை ஆகியவற்றில், முன்வைக்கப்பட்ட சிறப்பு பாட பிரிவுகள் அதில் ஆராய்ச்சி சார்ந்த அனைத்தும், நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளுக்கு உரிய வகையில், பயிற்றுவிக்கும் வகையில் கட்டமைக்கப் பட்டது. மேற்குறிப்பிட்ட கட்டமைப்பு காரணமாக, பன்னாட்டு நிறுவனங்களின் வருகையை வெறும் ஆலைகளின் வருகை என்றும், இந்திய அரசியலிலும், பொருளாதாரத்திலும் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், புரிந்து கொள்ள பயிற்றுவிக்கப் பட்டுள்ளனர்.
மார்க்ஸ் கூறியதைப் போல், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைக்கான, கல்வி, சட்டம், அரசியல் அனைத்தும் வலுவாக முன்னிறுத்தப் படுகிறது. இவை அனைத்தும் பொருளாதாரம் என்ற அடிக்கட்டுமானத்தை பாதுகாக்கப் பயன்படுகிறது.
மூலதனம் மட்டுமல்ல புலம் பெயர் தொழிலாளர்களும் வருகின்றனர்:
சுரண்டலை நியாயப் படுத்துவதற்காக, முதல் போட்டவர், வெறும் கையுடன் எப்படி போவார்? என்று வாதிட்டு வந்த குறிப்பிடத் தக்க பிரிவினர், தற்போது மூலதனம் வேலைவாய்ப்பிற்காக வருகிறது என வாதிடுகின்றனர். உண்மையில் யாருக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது?. தொழிலாளருக்கு உரிய சட்ட உரிமைகள் வழங்கப்படுகின்றனவா? பன்னாட்டு ஆலைகள் உள்ள கிராமங்களின் பெரும் பணக்காரர்கள், மனித கூலிகளுக்கான ஒப்பந்ததாரர்களாக வளர்ந்துள்ளனர். அவர்கள் அழைத்து வரும் மனித கூலிகளுக்காக தொழிலாளர்களை, வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வருகின்றனர். உள்ளூர் ஒப்பந்த காரர், உள்ளூர் தொழிலாளியை வேலைக்கு அமர்த்துவதில்லை. உள்ளூர் ஒப்பந்த காரரை பயன்படுத்தும் பெரும் ஆலை நிர்வாகம், உள்ளூரில் இருந்து நிரந்தர தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதில்லை.
பன்னாட்டு மூலதனமும், உள்ளூர் பெரும் பணக்காரரும், நிராகரிக்கும் நபர்களாக உள்ளூர் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அரசும், நவீன தாராளமய கொள்கை பற்றாளர்களும் முன் வைக்கும் வேலை வாய்ப்பு, ஆலை அமைய உள்ள ஊரை சார்ந்தோருக்கு இல்லையே, என்பதை விளக்குவதில்லை. நெய்வேலி, கல்ப்பாக்கம், சேலம் ஸ்டீல், திருச்சி பெல் மற்றும் ராணிப்பேட்டை பெல் உள்ளிட்ட பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில், 1960களில் வேலைக்கு ஆள் எடுத்த போது, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் போன்றவை எல்லா மாவட்டங்களிலும் இல்லை. ஆனால் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான உயர் கல்வி நிறுவனங்களும், தொழில் நுட்ப நிறுவனங்களும், இருந்த போதிலும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க நிறுவனமும், உள்ளூர் பணக்காரர்களும், மறுப்பதன் ரகசியம், தொழிற்சங்கம் அமைப்பர், உள்ளூர் மற்றும் ஆலை நிர்வாகத்திற்கு இடையிலான முரண்பாடு கூடாது போன்ற கருத்தாக்கங்கள் ஆகும்.
வெளி மாநிலத்தவர், அடிமட்ட உற்பத்தி பணிகளில் மிகக் கடுமையாக வேலை வாங்கப்படுகின்றனர். ஸ்கில்டு என அழைக்கப்படும், திறன் கொண்ட தொழிலாளர்கள், பிற மாவட்டங்களில் இருந்தும் அழைத்து வரப்படுகின்றனர். இதில் செல்போன் உற்பத்தி தொழில்களில், பெண்களை மட்டும் பயன்படுத்துவது, அதுவும் வெளி மாவட்ட பெண்களைப் பயன்படுத்துவது என்பது பெருமளவில் நடைபெறுகிறது.
தொழிற்சங்கமே எதிரி:
மேற்படி செயல்கள் எல்லாமே, மூலதனத்தை கேள்வி கேட்கும் சூழல் உடனடியாக வந்து விடக் கூடாது, என்பதாகும். கேள்வி கேட்கும் குரல் உயராமல் இருக்க, தொழிற்சங்கம், அமைந்து விடக் கூடாது என்பதில் கவனம் செலுத்துவதை காண முடியும். மீறி தொழிற்சங்கம் உருவாகும் நிலையில், பேச்சுவார்த்தை நடத்து என்பதை விடவும், தொழிற்சங்கத்தை அங்கீகரித்திடு என்பதே மிக முக்கிய கோரிக்கையாக உள்ளது.
சில நிறுவனங்களில் தொழிலாளர்கள், திடீரென வேலைநிறுத்தும் செய்து, சி.ஐ.டி.யு தொழிற்சங்க ஊழியர்களிடம் போனில் பேசி, நாங்கள் வெளியில் அமர்ந்திருக்கிறோம், எங்களுக்கு சங்கம் வேண்டும், நீங்கள் வர வேண்டும் என அழைத்த நிலைமைகள் உண்டு. அங்கே சென்ற போது கல்லூரி மாணவர்களைப் போல், முழக்கமிட்டு கொண்டு இருந்தனர். வேண்டும் வேண்டும் தொழிற்சங்கம் வேண்டும் என தொழிற்சங்கம் யாரும் தருவதில்லை என்பதைக் கூட தெரிந்திராத ஒரு பகுதி இளம் தொழிலாளர்கள் உள்ளனர். ஒன்று கூடிய பின் அவர்களுக்கும் கூட்டாக உருவாக்கிக் கொள்ளும் அறிவும், பிற நிறுவனங்களில் உள்ள தொழிற்சங்கங்கள் மூலம், பெறக் கூடிய அனுபவங்களும், கூட்டு உற்பத்தியைப் போல், கூட்டு அறிவாக வளர்ச்சி பெறுவதையும் காண முடிகிறது. இதன் காரணமாகத் தான் தொழிற்சங்கத்தை ஒடுக்க முயற்சிக்கின்றனர். நிர்வாகங்கள் தொழிற்சங்க ஒடுக்கு முறையில் வெற்றி பெற இயலாத நிலையில், ஆளும் வர்க்கத்தின், கருவிகளாக உள்ள தொழிலாளர் துறை அதிகாரிகளை பயன்படுத்துவது மட்டுமல்ல. காவல் துறை உள்ளிட்டு பல்வேறு அதிகாரங்களையும், பண செல்வாக்கையும் பயன்படுத்தி, தொழிற்சங்கத்தை அடக்கிடவும், ஒடுக்கிடவும் முயற்சிக்கின்றனர்.
தொடரும்….
நூறாண்டு தொழிற் சங்க உரிமை
கட்டுரையாளர் :
எஸ். கண்ணன்
மாநில துணைப்பொதுச் செயலாளர், சி.ஐ.டி.யு
முந்தைய தொடரை வாசிக்க: அமெரிக்க ஆட்டோ தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும், இந்தியாவில் சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும்!!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

