வேத சமூகம் மேய்ச்சல் சமூகமாக இருந்தது. ஹரப்பன் நாகரிகத்தின் விவசாயப் பொருளாதாரம் காணாமல் போன போது ரிக் வேத காலத்தில் அதன் இடத்தை கால்நடைப் பொருளாதாரம் பிடித்துக் கொண்டது. ஹரப்பன்களால் மேம்பட்ட கால்நடைகள், விவசாய பொருளாதாரம் இல்லாமல் அத்தகைய பரந்த நகரங்களைக் கட்டியிருக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள பொது அறிவு மட்டுமே போதும். வேத காலத்தில் நகர்ப்புற நாகரிகம் இருந்திருக்கவில்லை. மேய்ச்சல் பொருளாதாரமாக இருந்த அது சமூகத்தை தரப்படுத்தப்பட்ட வர்ணங்களாகப் பிரித்திருந்தது.
சூத்திரர்கள் முக்கியமான கால்நடை வளர்ப்பவர்களாக இருக்க, மேற்பார்வையாளர்களாக வைசியர்கள் இருந்தனர் என்று தோன்றுகின்றது. அந்த நேரத்தில் வைசியர்களிடையே ஒருவித களப்பணிக் கலாச்சாரம் இருந்திருக்கலாம் என்றாலும் விவசாய உற்பத்திப் பணிகளில் அவர்கள் பங்கேற்றிருக்கவில்லை. பிராமணர்களும், சத்திரியர்களும் உற்பத்தி, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு வேலைகளில் இருந்து முற்றிலும் விலகியே இருந்தனர்.
இருப்பினும் ஹிந்து மதத்தில் த்விஜா (இரண்டு முறை பிறந்த) சாதிகள் என்றழைக்கப்படும் இந்த மூன்று சாதிகளும் பல பொதுவான உரிமைகளைப் பகிர்ந்து கொள்வதாகவே இருக்கின்றன. ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டாலும் சூத்திரர்களுக்கு ஹிந்து சமுதாயத்தில் அடிப்படை உரிமைகள் இருப்பதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அவர்களுக்கு ஆன்மீக குடியுரிமையோ அல்லது அதன் தத்துவ உரையாடலில் ஓரிடமோ இருக்கவில்லை.
வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களில் சூத்திரர்களின் நிலையைச் சொல்வதற்கான எந்த ஆய்வுகளும் இல்லை. இருந்த போதிலும் இந்த கட்டுரையில் எங்களுடைய கவனம் அவர்களுடைய சமகால நிலைமையின் மீது இருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் ஹிந்துத்துவ சித்தாந்தம் இதுவரை அவர்களுக்கு என்ன செய்துள்ளது, எதிர்காலத்தில் அவர்களுக்கு என்ன செய்யும் என்பது குறித்ததாக இருக்கிறது.
ரிக் வேத காலம், இடைக்கால காலங்களுடன் ஒப்பிடும்போது இன்று சூத்திரர்களின் சமூக வகைப்பாட்டில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விவசாயத்துறையை ஆக்கிரமித்ததன் அடிப்படையில் பல்வேறு சமூக வகையினராக அவர்கள் பிரிக்கப்பட்டிருந்தனர். நிலத்தை உழுவதிலிருந்து கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல வேலைகளை அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். நெசவாளர், தச்சர், கொல்லர், குயவர், கள்ளிறக்குவோர், மீனவர், பழங்களைச் சேகரிப்பவர், செங்கல் தயாரிப்பாளர், முடிதிருத்தும் தொழிலாளர், சலவை செய்வர்கள் என்று பல கைவினைச் சமூகங்களாக அவர்கள் வகைப்படுத்தப்பட்டனர். சூத்திரர்களுக்கு கீழே, கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும் தலித்துகள் என்ற சமூக வகை உருவாக்கப்பட்டது. அனைத்து சாதி சமூகங்களாலும் அவர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டனர். தோல் வேலை, கிராமத்தை சுத்தம் செய்தல் போன்ற உழைப்பை அவர்கள் மேற்கொண்டு வந்தனர்.
சத்திரியர்கள், பிராமணர்கள், சில முஸ்லீம்களுடன் கிராம அளவிலான நில உரிமையாளர்களாகவும், நிலப்பிரபுத்துவ உரிமையாளர்களாகவும் காலப்போக்கில் சூத்திரர்களில் ஒரு பகுதியினர் உருவெடுத்தனர். கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் நடைபெறுகின்ற வணிகத்துடன் பனியாக்கள் செயல்பட்டு வந்தனர். 1931ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மிகப் பெரிய மக்கள் தொகுதியை எளிதில் உருவாக்கிக் கொண்ட சூத்திரர்கள், 1947 வாக்கில் மக்கள்தொகையில் சுமார் 52 சதவீதமாக ஆகியிருந்தனர். அதே நேரத்தில் தலித்துகள் 18 சதவீதம் என்ற அளவிலே இருந்தனர். வைசியர்கள், சத்திரியர்கள், பிராமணர்கள் மொத்த மக்கள்தொகையில் ஏழு சதவீதம் அளவிலே இருந்திருக்கலாம். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஆதிவாசிகளாக மீதமுள்ளவர்கள் இருந்தனர். இன்றளவும் பிரதான விவசாய பொருளாதாரம் தலித்துகளின் ஆதரவுடன் சூத்திரர்களாலேயே நடத்தப்பட்டு வருகிறது.
இன்றைக்கு சில மாநிலங்களில் கம்மா, ரெட்டி, மராட்டியர், ஜாட், யாதவர், குர்மி, லிங்காயத் போன்ற உயர்மட்ட சூத்திர சமூகங்கள் தங்களுக்கென்று பிராந்திய அரசியல் கட்சிகளைக் கொண்டுள்ளன. தெலுங்கு தேசம் கட்சி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, மதச்சார்பற்ற ஜனதா தளம், சமாஜ்வாதி, திராவிட முன்னேற்ற கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், ராஷ்ட்ரிய ஜனதா தள், தேசியவாத காங்கிரஸ் என்று பல கட்சிகள் அவற்றுள் அடங்கும். காலப்போக்கில் இந்த பிராந்திய கட்சிகள் தேசிய கட்சிகளின் குறிப்பாக காங்கிரஸின் பிடியைப் பலவீனப்படுத்தின.
1990களில் மெதுவாக மாற்று தேசிய கட்சியாக பாஜகவின் எழுச்சிக்கு அது வழிவகுத்துக் கொடுத்தது. ஜவஹர்லால் நேருவின் காலத்தில் சூத்திரர்கள் காங்கிரஸிற்குப் பக்கபலமாக இருந்தனர். 1970கள் வரையிலும் முதலாளித்துவர்களின் அதிகாரக் குவிப்பு பலவீனமாகவே இருந்ததால், நிலப்பிரபுத்துவ சூத்திரர்கள் கிராமங்களில் தாங்களே உண்மையான அதிகார மையங்கள் என்பதாக உணர்ந்தனர். 1990 வரையிலும் முக்கியமாக விவசாயத்தைச் சார்ந்தே பொருளாதாரம் இருந்து வந்தது. கிராமங்கள் தொடங்கி மாவட்டம் வரையிலும் சூத்திர நில உரிமையாளர்களே பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். பிராமணர்கள், முஸ்லீம் நில உரிமையாளர்களுக்கு வெகு சில பகுதிகளில் மட்டுமே கட்டுப்பாடு இருந்து வந்தது.
1990கள் வரையில் குத்தகைதாரர்கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பல மாநிலங்களில் உயர் சாதி சூத்திரர்களாக இருந்து வந்த நில உரிமையாளர்களுக்கு இடையிலேயே முக்கியமான வர்க்க முரண்பாடு இருந்து வந்தது. இருப்பினும் மெதுவான ஆனால் நிச்சயமான மாற்றம் 1970களின் முற்பகுதியில் இருந்து தொடங்கியது. மெதுவாக தனியார் மற்றும் அரசு இந்திய தொழில்துறை சார்ந்த பொருளாதாரம் விவசாயப் பொருளாதாரத்தை முந்தியது. 1971 தேர்தலில் இந்திரா காந்தி நேரடியாக கிராம வாக்காளர்களை அணுகியதன் மூலம் கிராமப்புறங்களில் சூத்திர நில உரிமையாளர்களுக்கு இருந்து வந்த ஆதிக்கத்தைக் குறைத்தார். தலித்துகளிடையே அவர் தனக்கான பெரும் ஆதரவைக் கண்டார்.
நில உரிமையாளர்கள் பீகாரில் உள்ள பெல்ச்சி, ஆந்திராவின் கரம்சேடு போன்ற இடங்களில் நடந்ததைப் போல இந்தியா முழுவதும் உள்ள தலித் பகுதிகளைத் தாக்கி எரிப்பதன் மூலம் தங்கள் அதிகாரத்தைக் காட்டினர். நிலப்பிரபுத்துவ சூத்திர நில உரிமையாளர் நீலம் சஞ்சீவரெட்டியின் தலைமையில் நில உரிமையாளர்கள் இந்திரா காந்தியைப் பலவீனப்படுத்த முயன்றார். சூத்திர நிலப்பிரபுத்துவ சிண்டிகேட் இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு சஞ்சீவரெட்டியைப் போட்டியிட வைத்தது. ஆனால் வளர்ந்து வந்த தொழில்துறை வர்க்கத்தின் ஆதரவுடன் பிராமண சுயேட்சை வேட்பாளராக – இறுதியில் அந்த தேர்தலில் வெற்றி பெற்ற – வி.வி.கிரிக்கு ஆதரவளித்து இந்திரா காந்தி அந்த முயற்சிகளைத் தோற்கடித்தார்.
இந்த செயல்பாட்டில் சூத்திரர் அல்லாத உயர் சாதியினர் (பிராமணர்கள், பனியா தொழிலதிபர்களில் ஒரு பிரிவினர்), தலித்துகள், ஆதிவாசிகள், முஸ்லீம்கள், பிற சிறுபான்மையினரின் கூட்டணியை இந்திரா காந்தி அமைத்தார். இதற்கும் கூடுதலாக ஒரு வலுவான பெண் தலைவராக அவர் கருதப்பட்டதால், மிகப் பரந்த அளவிலான பெண்கள் ஆதரவு அவருக்கு இருந்தது. கிராமங்களில் துர்கா அல்லது காளிதேவியுடன் பெரும்பாலும் அவர் ஒப்பிடப்பட்டார். காங்கிரஸ் சூத்திர நில உரிமையாளர்களை ஓரம்கட்டத் தொடங்கியது.
சூத்திரர்களில் பெரும் பகுதியினர் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட ஜனதா கட்சிக்கு மாறினர். 1977இல் பெற்ற வெற்றி பின்னர் சூத்திர யாதவ் தலைவரான பிபி மண்டல் தலைமையில் மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டதைக் கண்டது. ஜனதா கட்சியுடன் ஒன்றிணைந்து, அதனை மிகப்பெரிய கட்சியாக மாற்றிய ஜனசங்கம் சூத்திரர்களுடனான தொடர்பை அப்போது விரிவுபடுத்திக் கொண்டது.
அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) என்ற வகைப்பாடு இருக்கவில்லை. ஓபிசி இளம் தலைவர்களான சரத் யாதவ், முலாயம் சிங், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் அழுத்தத்தினால் ஜனதா கட்சியுடனான உறவை ஜனசங்கம் முறித்துக் கொண்ட பிறகு தன்னுடைய பெயரை பாரதிய ஜனதா என்று மாற்றிக் கொண்டது. தன்னை சூத்திரர்கள் சார்புள்ள கட்சி என்று காட்டிக் கொள்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் அது பயன்படுத்திக் கொண்டது. அந்த நேரத்தில் சூத்திரர்களுக்குள் இருந்த முஸ்லீம்-விரோத, தலித்-விரோத நிலப்பிரபுத்துவ கூட்டமைவு சூத்திரர்களிடம் ஹிந்து கருத்தியல் பிணைப்பை வலுப்படுத்துவதற்கு பாஜகவிற்கு உதவியது.
பிராமண-பனியாக்களின் ஆதிக்கத்தில் இருந்த அந்தக் கட்சி கிராம மட்டத்தில் சூத்திரர்/ஓபிசி மக்களை மெதுவாக ஹிந்துமயமாக்கி காங்கிரஸை விட முற்போக்கான தோரணையை எடுத்தது. ஓபிசி இடஒதுக்கீட்டை வி.பி.சிங் அரசாங்கம் அமல்படுத்திய பிறகு காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் அந்தக் கொள்கையை எதிர்ப்பது, ஆதரவளிப்பது என்ற நிலைகளுக்கு இடையிலே மிகவும் நுட்பமான தந்திரத்தை மேற்கொண்டன. ஆனாலும் பாஜக புத்திசாலித்தனமாக சூத்திரர்கள்/ஓபிசிகளை ஹிந்துமயப்படுத்துவதற்காக பாபர் மசூதி-ராமர் கோவில் பிரச்சனையைப் பயன்படுத்திக் கொண்டது.
நிலப்பிரபுத்துவ சார்பு சூத்திரர்களின் பிராந்திய கட்சிகளின் தோற்றம் காங்கிரஸைப் பலவீனப்படுத்தியது மட்டுமல்லாமல் 1999 வரையிலும் பாஜகவின் எழுச்சியையும் தடுத்து நிறுத்தியே வைத்தது. 1980இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும், தனது தேர்தல் கூட்டணியில் காங்கிரஸ் சூத்திரர்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. சூத்திரர் அல்லாத உயர்சாதியினர், சிறுபான்மையினர், தலித்துகள், ஆதிவாசிகளின் கலவையாகவே அது தொடர்ந்தது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இருவருமே மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளைச் செயல்படுத்த மறுத்து விட்டனர்.
வி.பி.சிங் ஆட்சியில் சூத்திரர்கள் தங்களுக்கான அதிகாரத்தைப் பெற்று மண்டல் ஆணைய அறிக்கையை நடைமுறைப்படுத்திக் கொண்டனர். இதற்கிடையில் வடக்கிலும் சூத்திர நில உரிமையாளர்கள் பல பிராந்தியக் கட்சிகளை உருவாக்கினர். ஆர்.எஸ்.எஸ்-பாஜக அந்தக் கட்டத்தில் ராமஜன்மபூமி பிரச்சனையைச் சுற்றி கல்வியறிவில்லாத கீழ்மட்ட சூத்திர இளைஞர்களை அணிதிரட்டியது. அவர்களுடைய தீவிர பிரச்சாரத்திற்குத் தேவையான உத்வேகத்தை பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வு அளித்தது. ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமும், சூத்திரர்கள்/ஓபிசிக்களின் மணிக்கட்டில் காவிக் கயிறு கட்டுவதன் மூலம் அவர்களுக்கு ஹிந்து அடையாளத்தைக் கொடுப்பதும் அவர்களுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தன.
காங்கிரஸ்-முஸ்லீம் உறவை சூத்திரர்கள்/ஓபிசிகளின் நலன்களுக்கு எதிரான இலக்காக அவர்கள் சித்தரித்தனர். 1999 வாக்கில், விஷயங்கள் அவர்களுக்குச் சாதகமாக மாறிவிட்டன. 2014ஆம் ஆண்டு அந்தப் போக்கு மேலும் துடிப்பு மிக்கதாக இருப்பதற்குச் சாட்சியாக பாஜக ஆட்சியதிகாரத்திற்கு உயர்ந்தது.
காஞ்சா அய்லய்யா ஷெப்பர்ட், கார்த்திக் ராஜா கருப்பசாமி ஆகியோரால் தொகுக்கப்பட்டு பெங்குயின் புக்ஸ் இந்தியா நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ‘சூத்திரர்கள்: புதிய பாதைக்கான பார்வை’ என்ற தொகுப்பில்,காஞ்சா அய்லய்யா ஷெப்பர்ட் எழுதியுள்ள ‘சூத்திரர்களும் ஜனநாயக இந்தியாவும்’ என்ற கட்டுரையின் ஒரு பகுதி அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.
நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ் 2021 பிப்ரவரி 22
தமிழில்: தா.சந்திரகுரு