Subscribe

Thamizhbooks ad

எது சிறார் இலக்கியம்? – வே.சங்கர்

 

வாசிக்க இலகுவான மொழி நடை.  குழந்தைகளின் கற்பனைக்குத் தீனி போடும் கதை. மிக இயல்பான பேச்சு நடை.  இவைகள்தான் சிறார் இலக்கியத்தின் அடிப்படை.

பொதுவாக 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் வாசிக்க அல்லது அவர்களுக்கு வாசித்துக்காட்ட எழுதப்படும் எதுவாயினும் அது சிறார் இலக்கியவகையில் அடங்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

சிறார்களின் கற்பனைத்திறனை வளர்த்தெடுத்தல் அல்லது அவர்களின் பன்முகத் திறமையை அடையாளம் காணுதல் மற்றும் மொழிவளத்தை வெளிக்கொணர்தல் போன்றவை முக்கிய பங்காக இன்றளவும் இருந்து வருகிறது.  ஆனால் இன்றைய இளம்தலைமுறையினர் சிறார் இலக்கியத்தின்பால் கொண்ட பற்று கொஞ்சம் கொஞ்சமாய் இல்லாமல் போவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

காலங்காலமாய் சொல்லப்பட்டுவரும் பஞ்சதந்திரக் கதைகள், அறிவுரைக் கதைகள், நீதிக்கதைகள், குழந்தைப் பாடல்கள் தாண்டி சிறார் இலக்கியத்திற்குச் சாய்மானம் வேறெதுவுமில்லையா? என்ற கேள்வி நீடித்துக்கொண்டே இருக்கிறது.  இன்னும் பழைய மரபுவழிச் சிந்தனையிலிருந்து மீளவில்லையோ! என்றெண்ணத் தோன்றுகிறது. இன்றைய இருபத்தொன்றாம் நூற்றாண்டுக் குழந்தைகளுக்கு இது போதுமானதாய் இல்லை.

குழந்தைகள் உலகில் வாய்பேசாத மிருகங்கள் மனிதக் குரலில் பேசவேண்டும். அல்லது அந்த மிருகங்களோடு இவர்கள் பேசுவார்கள். கண்ணுக்குத் தெரியாத உணவைக் காற்றில் பிசைந்து உடன் இருப்பவர்களுக்குப் பகிர்ந்து சுவை சேர்ப்பார்கள். கைக்குக் கிடைத்த பொருட்களைக் கொண்டு  இயந்திரங்களாய்க் கற்பனைசெய்து வேற்று கிரகத்திற்கு சென்று திரும்புவார்கள். இதுமட்டுமா,  இடையிடையே சாதுரியமான பேச்சு, நகைச்சுவை, மனதுக்கு மிக நெருக்கமான அப்பாவிக் கதாப்பாத்திரங்கள் என ஏராளமான வடிவங்களை ஒன்றாய்க் குழைத்து புதுவடிவம் செய்துகொடுப்பதில் வல்லவர்கள் குழந்தைகள்.

பரமார்த்த குருவும் சீடர்களும், பீர்பால் கதைகள், தெனாலி இராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் போன்றவற்றைத் தாண்டி பெரும்பாலான பதிப்பகங்கள் புதிதாக  குழந்தை இலக்கிய நூல்களை திரும்பிக்கூட பார்ப்பதில்லை அல்லது பதிப்பிக்க முன்வருவதில்லை என்பது வருத்தமளிக்கிறது.

Children's Literature

ஒரு காலத்தில் தமிழ் சிறார் இலக்கிய உலகில் அம்புலி மாமா, பாலமித்ரா, ரத்னபாலா, கோகுலம், தமிழ் சித்திரக்கதைகள், ராணி காமிக்ஸ், வார இதழ்கள், மாத இதழ்கள் எல்லாம் கைகோர்த்துக்கொண்டு சிறார்களின் வாசிப்புக்குத் தீனிபோட்டுவந்தன.

சமகால எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஸ்ணன், ச.மாடசாமி, ஆயிசா.இரா. நடராசன், விழியன், மருதன், ஜி.சரண், சோம.வள்ளியப்பா, போன்றவர்கள் குழந்தைகளின் நலன்கருதி எழுதிவருவதும் யூமா வாசகி போன்றோர் பிறமொழிக் கதைகளை மொழி பெயர்த்து வருவதும் சற்று ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும், அவர்களின் புத்தகங்களிலும் ஓவியங்கள் குறைவாகவும், எழுத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் குழந்தைகளைப் பெருமளவில் ஈர்க்கவில்லை அல்லது அவர்களின் கைகளில் எளிதாய் சென்றடைய சரியான வழிவகைகள் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் ஓங்கி ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

குழந்தைகளின் கைகளில் சிறார் இலக்கிய நூல்களை கொண்டு சேர்ப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமில்லை என்பது பரவலான கருத்து. முதலில் பெற்றோர்களுக்கு அதுபற்றிய தெளிவை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. அதைவிட குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும் இதுபோன்ற சிறார் இலக்கிய நூல்கள் இருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

சிறார் இலக்கியம் என்றால் அதற்கு என்ன இலக்கணம்? அதற்கு என்ன வரையறை? அதில் என்னவெல்லாம் இருக்கவேண்டும்? இப்படி நேரடிக்கேள்விகள் ஏராளம். தமிழ் இலக்கியக் கதைகளில் ஏதேனும் ஒரு நீதியோ அல்லது அறிவுரையோ இருக்கவேண்டும் என்ற புரிதல் இன்றளவும் நம் மனதைவிட்டு அகலவே இல்லை. பிறமொழிகளில் சிறார் இலக்கியம் அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சியை எடுத்துவரும் நிலையில் தமிழ் சிறார் இலக்கியத்தின் நிலை பரிதாபமான நிலையில் முடங்கிவிட்டதென்றே சொல்லவேண்டும்.

சமீப காலமாகக் குழந்தைகளுக்காக எழுதப்படும் கதைகள் இன்றைய குழந்தைகளின் புழக்கத்தில் உள்ள பேச்சு மற்றும் வட்டார வழக்கில் இல்லாமல் இலக்கண சுத்தமாக மரபுத்தமிழிலிலேயே வெளிவருகிறது. இதுபோன்ற கதைகள் இக்கால குழந்தைகளை பெரிதளவு ஈர்க்காததற்கு ஒரு பெரும் காரணமாகக்கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் அவர்களின் விரிசிந்தனைக்கு போதுமான அளவு வளம் சேர்க்கத் தவறிவிடுகிறது என்றுகூடச் சொல்லலாம். குழந்தைகளின் மனநிலைக்கு உகந்த, மற்றும் கற்பனைக்கு மிகநெருக்கமான கதாப்பாத்திரங்களைக் கொண்டு தற்காலக் கதைகள் வெளிவருவதில்லை என்பது கண்கூடான உண்மை. அதை மறுப்பதற்கில்லை.

Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம் ...

தினத்தந்தியில் வெளிவந்த கன்னித்தீவு, தேவனின் துப்பறியும் சாம்பு போன்ற கதைகள் இன்றளவும் நம்மனதைவிட்டு அகலாமல் இருக்கிறது. ஆனால் இன்றைய பெரும்பாலான குழந்தைகளுக்கு இதுபோன்ற கதைகள் இருந்ததே தெரியவில்லை.

வளர்ந்த நாடுகளில் வயதுக்கேற்ற சிறார் நூல்கள் பலபரிமாணங்களில் வெளிவருகிறது. எடுத்துக்காட்டாக 2 வயதுக் குழந்தைக்கான (Bedtime Tales) நூல்கள், 2 வயதிலிருந்து 5 வயதுக்கேற்ற நூல்கள், 6வயதிலிருந்து 8 வயதுகேற்ற நூல்கள் 9 வயதிலிருந்து 12 வயதுக்கேற்ற நூல்கள் என தரம் பிரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. ஆனால் தமிழில் இதுபோன்ற வயதுக்கேற்ற நூல்கள் எங்கும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. அனைத்து வயதினருக்கும் ஒரே மாதிரியான நூல்தான். அதையும் வளர்ந்த பெரியவர்கள்தான் வாசிக்கிறார்கள் என்பது நகைமுரண்.

சிறார்கதைகளில் இரண்டுவகை: ஒன்று, குழந்தைகள் தாங்களே வாசிக்கமுடிந்த நூல்கள், இரண்டு பெற்றோர்களோ அல்லது பெரியவர்களோ வாசித்துச் சொல்லவேண்டிய நூல்கள். ஆனால் இவ்விரண்டுவிதமான கதைப் புத்தகங்கள் தற்போது குறைவாகவே வெளிவருகிறது.

ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. குழந்தைகள் சூழ் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குழந்தைகள் இல்லாத உலகை நம்மால் கற்பனைகூட செய்துபார்க்க முடியாது.  நம் வீட்டில், அல்லது நாம் செல்லும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில், சாலைகளில், பள்ளி வகுப்பறைகளில். என குழந்தைகள் எல்லா இடங்களிலும் விரவி இருக்கிறார்கள்.

அவர்களின் உலகம் நம்மிலிருந்து முற்றிலும் வேறாக இருக்கிறது. அதை வளர்ந்த மனிதர்களான நாம் ஏனோ காணத் தவறிவிடுகிறோம் அல்லது கண்டும் காணாததுபோல் கடந்துவிடுகிறோம். பரபரப்பான இப்போட்டி உலகின் நெளிவு சுழிவுகளை குழந்தைகள் ஒரே நாளில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பேராசையின் உச்சமே தவிர வேறென்ன?. குழந்தைகள் ஒருவரை ஒருவர் விஞ்சிக்கொண்டு வளரவேண்டும் என்பதில் பெற்றோர்கள் பெரும் முயற்சி எடுத்துவருகிறார்கள். பெரியவர்களைப்போல சிந்திக்க வேண்டும் அல்லது செயல்பட வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள்.

ஆனால் பெரியவர்கள் அவரவர்கள் அனுபவ ரீதியாகவும் அறிவுரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் குழந்தைகளைப்போல சிந்திப்பதே இல்லை என்பதுதான் உண்மை. பொருளாதாரத்தில் ஓரளவு வளர்ச்சி பெற்ற பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகளின் உலகம் கார்ப்பரேட் ஊடகங்களின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. கண்களுக்குத் தெரியாத அவ்விலங்கை தகர்த்தெறிந்துவிட்டு வெளிவரத் தயாராக இல்லை. அதே வேளையில், அடித்தட்டு மக்களிடையே வளரும் குழந்தைகளோ இப்படியொரு உலகம் உண்டெண்பதையே நம்ப மறுக்கிறது. இதுதான் தற்போதைய நகைமுரண்.

World Book and Copyright Day

கதையும் பாட்டும் கேட்டு வளராத குழந்தைகளே இல்லை என்று நாம் பழம்பெருமை பீற்றிக்கொண்டு திரிந்தாலும் இன்றைய தலைமுறையின் வாழ்வியல் சூழல் பரிதாபகரமானதாகவே இருக்கிறது. பள்ளிக்கூடங்களில் ”நிலா நிலா ஓடிவா….., கை வீசம்மா கை வீசு, பாடல்களும் ஒளவையாரின் ஆத்திசூடியும், கொன்றைவேந்தனும், பாரதியாரின் ஓடிவிளையாடு பாப்பாவும் மனப்பாடம் செய்து தேர்வில் மதிப்பெண் பெறுவதற்கு என்ற மனோபாவம் பெருகிவிட்டது.

வீடுகளில் கதைகள் சொல்லிக் கொண்டிருந்த பாட்டிகள் தொலைக்காட்சித் தொடர்களைவிட்டு கண்களை விலக்கவே முடியாத நிலைக்கு மாறிவிட்டார்கள். இந்நிலையில் படுக்கைநேரப் பாட்டுக்கும் கதைக்கும் குழந்தைகள் எங்கே போவது?.

குழந்தைகள் சுவாசிக்கும் உலகம் நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவர்களின் உலகத்திற்கு மட்டும் கண்ணுக்குத் தெரியாத மாயாஜால இறகுகள் முளைத்துக் கொண்டே இருக்கிறது. அவர்கள் நீந்திப்பறக்கும் எல்லையும் நீண்டுகொண்டே இருக்கிறது. கிழிந்த பாயில் படுத்துக்கொண்டு பறக்கும் கம்பளத்தில் பயணிக்கிறார்கள். அவர்களுக்குப் பிடித்தமான விசயங்கள், அவர்கள் பிறருடன் நட்புகொள்ளும் முறை, ஒன்றிலிருந்து மற்றொன்றை உடனுக்குடன் பற்றிக்கொள்ளும் முறை என வியப்பான விசயங்கள் என ஏராளமாய் அதில் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது .

குழந்தைகளின் உலகை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், பரவலான ஆண்ட்ராய் ஃபோன்களின் வளர்ச்சியும் குழந்தைகளின் வாசிப்பைக் கூறுபோட்டுவிட்டன என்று பெருமூச்சுவிட்டுக் கொண்டாலும் ஒரு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக புத்தகங்கள் வாங்குவதை இன்னும் நிறுத்திவிடவில்லை.

பிறநாடுகளில் சிறார் இலக்கியத்தின் நிலை இப்படியா இருக்கிறது? என்று கேட்டால் பதில் வருவதில்லை. பள்ளி நூலகங்களில் சிறார் இலக்கியத்திற்கு பெரும்பாலும் இடமில்லை, அப்படியே இருந்தாலும் தலைவர்கள் பற்றிய நூல்கள், இலகுவாக வாசிக்க இயலாத மொழிபெயர்ப்பு இலக்கிய நூல்களே காணக்கிடைக்கின்றன. அதுவும் ஏதேதோ காரணங்களால் குழந்தைகளின் கைகளில் சரிவரப் போய்ச்சேருவதில்லை.

தற்போது புதுப்பொலிவுடன் வெளிவந்து கொண்டிருக்கும் முத்து காமிக்ஸ்கூட, கோகுலம், இன்னபிற சிறார் இலக்கிய நூல்கள் பெருமளவு குழந்தைகளிடம் சென்றடையவில்லை. ஒன்று அதிகப்படியான விலை மற்றொன்று அதில் உள்ள படங்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படங்கள் உண்டென்றாலும், எழுத்துக்கள் ஏராளமாய் இருக்கிறது.

Recommended reads: ages 5–7 | Books | The Guardian

சிறார் இலக்கிய வட்டத்தில் பெரும் குற்றச்சாட்டு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதில்லை. புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்த ஆட்கள் இல்லை என்பதாகும்.

ஆனால் குழந்தைகளுக்கு நேரடியாகவும் யூ-ட்யூப்பிலும் பிரத்தியேகமாகக் கதை சொல்வதற்கென்றே  தற்சமயம் பல கதைசொல்லிகள் முன்வந்திருப்பது பாராட்ட வேண்டிய ஒன்று. அவர்களும் ஒரு குறுகிய வட்டத்தில் குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடிகிறதே தவிர பெரும்மளவில் முடிவதில்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு.

பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைகோர்த்துக் குழந்தைகளின் மனநிலையை ஆராய்ந்து தரமான புத்தகங்களை குறைந்த விலையில் கொண்டுவந்து குழந்தைகள் கைகளில் கொண்டு சேர்ப்பதை ஒரு இயக்கமாக செய்தால் ஒழிய சிறார் இலக்கியத்தை மீட்டெடுப்பது என்பது மிகப்பெரிய சவாலாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்பது என் கருத்து.

Latest

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில் சால்வெடார் டாலி , ஹீரோனிமஸ் பாஷ் மற்றும் மார்க் சகல் என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர்....

1 COMMENT

  1. மேம்போக்கான பார்வையில் கட்டுரை செல்கிறது . குழந்தைகளுக்கான இலக்கியம் படைப்பவர்கள் என்று கூறப்பட்டுள்ள பலரும் குழந்தைகள் உடன் இயங்குபவர்கள் இல்லை என்பதே பெரும் வருத்தமான நிலை இப்போதாகும் மொழிபெயர்ப்பு குழந்தைகள் இலக்கியங்களிலும் மொழி பெயர்ப்பாளர் சிறப்பாகச் செயல்படவில்லை. கதைசொல்லிகள் தானே சொல்லித் திரியும் கதைகளைத் தொகுக்கும் முனைப்பை பாரதி புத்தகாலயம் செய்ய முன்வரலாம் மொழிபெயர்ப்புகள் பொருத்த மட்டில் அக்ககதைகளைக் குழந்தைகள் இடத்துச் சொல்லி வடிவமாக்கலாம். குழந்தைகள் தம் மொழியை கதைகள் பேசாமல் இருப்பது பெரும் வேதனை பெரியவர்கள் பெற்றோர்கள் குழந்தைகள் இடம் இருந்து எதிர்பார்ப்பவை போலவே பெரியவர்கள் தம் போக்கில் மிருகங்களைப் பேசச் செய்யும் வித்தியாசமான எந்திரங்கள் பேய் பூதம் எனும் வறட்டு மாயாஜாலம் செய்கிறது . இன்னும் அறநெறி கூறும் கதைகள் வழக்கொழியக் காணோம் . பாரதி புத்தகாலயத்தின் டால்டாய் தம் குழந்தைகள் கதைகள் தொகுப்பான எறும்பும் புறாவும் எந்தக் கனுத்தையும் கூறாத சில வரிகள் தொடங்கி ஒரு சில பக்கம் செல்லும் வகையிலானவையாக அதுவும் நாடோடிக் கதைகளைத் தொகுத்திருப்பார் அந்நூல் போன்ற முன்னெடுப்புகள் வேண்டும் .ஏற்கனவே மொழிபெயர்ப்பாகி குழந்தைகள் உலகைப் புரிந்து கொள்ள உதவும் குட்டிஇளவரசனை மீண்டும் மொழி பெயர்ப்பது தவிர்த்து மொழி பெயர்ப்பாளரை வேறு நூல்களை ஆக்கச் செய்யலாம். குழந்தைகள் இலக்கியங்களை வாங்குவோரினும் அதிகமான எழுத்தாளர்கள் கண்படுகிறார்கள் அவர்கள் எழுத்து மீது கவனம் கொண்டு பாரதி புத்தகாலயம் பதிப்புகளை வெளியிடலாம் . குழந்தைகள் கைகளுக்குள் அடங்குவது போல் சில பக்கங்களைக் கொண்ட கதைகளாக இருக்கலாம் . இங்கோ பெரிய பெரிய நாவல்கள் அதிலும் ஒரு மேசையில் பயன்படுத்தும் எழுத்துப் பலகை அளவிற்கு நூல்கள் பதிப்பிக்கப்படுவது குழந்தைகள் தமை அருகே வரச் செய்யும் என்பது குழந்தைகள் விருப்பமாக இருக்காது வித்தியாசமானவைகளைப் பார்க்க விரும்புபவர்களான குழந்தைகள் எளிதில் இவற்றை விட்டு விலகவும் செய்வார்கள் தானே. தாங்களே எதையும் கதையாகச் சொல்லும் குழந்தைகள் தமக்கு குழந்தைகள் தமக்கு எழுதுகிறேன் என்பவர்கள் செய்வது வேடிக்கையாகவே அமைந்து விடுகிறது. தமிழ் மொழியிலான குழந்தைகள் இலக்கியங்களைப் படிப்பதில்லை பெற்றோர்கள் வாங்கித் தருவதில்லை ஆங்கில வழியில் பயில்கிறார்கள் என்பன போன்றவை படைப்புகளைத் தரவியலாத எழுத்தாளர்கள் என்போரின் மனக்குமுறலாக இருக்கலாமே ஒழிய குழந்தைகள் குரல் அல்ல ஆங்கிலத்தில் வெளியாகும் ஆகப்பெரிய குழந்தைகள் நூல்களை ஓரிரு நாட்களில் படித்து முடித்து விவாதிக்கும் குழந்தைகள் தமிழ் இலக்கியங்களைக் கண்டு கொள்ளாததற்கு அவர்களும் பெற்றோர்களும் மட்டுமே காரணம் அல்ல . குழந்தைகளுக்கு என்று எழுதுவோரும் பொறுப்பேற்க வேண்டும் தானே . கூடவே பனிரெண்டு வயது வரையிலான குழந்தைகள் தமக்கான இலக்கியம் பற்றியே கட்டுரையாளர் தம் கருத்துக்களைத் தரும்போது, விடலைப்பருத்தினர் முன் பதின்பருவத்தினரான பதினெட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் தமிழில் வாசிக்க ஏதும் இல்லாமல் இருப்பதை தமிழ் குழந்தைகளுக்கு எழுதுவோர் கவனத்திற் கொள்ளலாம் மேற்கண்டவர்களது உளவியல் சிக்கல் குறித்தான கதைகள் பிற மொழிகளில் குறிப்பாகத் தமிழகக் குழந்தைகள் படிக்க ஆங்கிலத்திலேயே கிடைக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது . இது போன்ற சுய ஆய்வுக் கட்டுரைகள் தமை குழந்தைகள் எழுத்தில் இயங்கி வரும் தோழர் சங்கர் அவர்கள் செய்திருப்பது போல சுயபோற்றுதல் இல்லாமல் மற்றவர்களான குழந்தைகள் எழுத்தாளர்களும் செய்யலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here