அறிவியல்பூர்வமாக அணுகினால் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு நிச்சயம். அறிவியல்பூர்வமாக அணுகுவதற்கு அடிப்படையாகத் தேவைப்படுவது அறிவியல் மனப்பான்மை. அறிவியல் மனப்பான்மை என்பது என்ன? நாள்தோறும் புதிதுபுதிதாய் வந்துகொண்டே இருக்கிற அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளையும் செயல்முறைகளையும் பயன்படுத்துவதுதான் அறிவியல் மனப்பான்மையா?
பழைய ஆட்டுரலில் அரைப்பது போல வராது என்று சொல்லிக்கொண்டு இருக்காமல் வீட்டில் வெட்கிரைண்டர் வாங்கிவைப்பது அறிவியல் பயன்பாடுதான். ஆனால் அதுவே அறிவியல் மனப்பான்மை என்று சொல்லிவிட முடியாது.
அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பொருட்களை இவ்வாறு பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். வீட்டில் தொலைபேசி வைத்திருப்பது ஒரு கௌரவச் சின்னமாகவும் இருந்த காலம் கடந்துபோய் அதிகக் காலமாகிவிடவில்லை. மேசையில் வைத்து மென்துணியால் போர்த்தியிருப்பார்கள். பக்கத்தில் ஒரு பூச்சாடியை நிறுத்தி அழகுபடுத்தியிருப்பார்கள். யாராவது ஒரு அவசரத் தேவைக்குத் தொலைபேசியைப் பயன்படுத்திக்கொள்ளலாமா என்று கேட்டு வருகிறபோது ஒப்புதல் அளித்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைவார்கள்.
இன்று மேசைத் தொலைபேசிகளைப் பெரும்பாலும் அலுவலகங்களில்தான் காண முடிகிறது. கைப்பேசிகள் எங்கும் பரவியிருக்கின்றன. பேசுவதற்கு மட்டுமே பயன்பட்ட தொடக்ககால கனமான செல்போன் முதல், இணையத்தள வசதிகளுடன் பாக்கெட் கம்ப்யூட்டராக எடை குறைவான மொபைல் வரை எத்தனை மாற்றங்கள்! இன்னும் சில ஆண்டுகளில், “இன்னுமா ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கிறாய்” என்று கேட்கத்தானே போகிறோம்!
இப்படி வாழ்க்கையின் எல்லாத் தளங்களிலும் அறிவியல் தொழில்நுட்பப் பயன்பாடு பரவி வளர்ந்திருப்பது உண்மை. ஆனாலும், அறிவியல் மனப்பான்மை பரவி வளர்ந்திடவில்லை என்பதும் உண்மை.
“அறிவியல் மனப்பான்மை” (சயின்டிஃபிக் டெம்பர்) என்ற சொல்லாக்கத்தை உருவாக்கியவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்று கூறப்படுகிறது. அவருக்கு முன் வேறு யாராவது இந்தச் சொல்லை அறிமுகப்படுத்தினார்களா என்பது தெரியவரவில்லை. ஆயினும், அறிவியல் மனப்பான்மை குறித்து அவர் தனது ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ நூலில் கூறியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது:
இன்றியமையாத தேவை
“அறிவியல்பூர்வ அணுகுமுறை, சாகசமுனைப்புள்ள ஆனால் விமர்சன மனநிலை, உண்மைக்கும் புதிய அறிவுக்குமான தேடல், சோதித்தறியாமல் செய்துபார்க்காமல் எதையும் ஏற்க மறுத்தல், புதிய ஆதாரத்தின் அடிப்படையில் முந்தைய முடிவுகளை மாற்றிக்கொள்ளும் இயல்திறன், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட கோட்பாடுகளுக்குள் அல்லாமல் உற்றுநோக்கியறிந்த உண்மையைச் சார்ந்திருத்தல், மனதின் உறுதியான ஒழுங்குமுறை ஆகிய இவையனைத்தும் அறிவியல் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குமே கூட, அதன் பல சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கும் இன்றியமையாதவையாகும்.”
அறிவியல் மனப்பான்மை என்றால் என்ன? அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? கேள்வி கேட்டல், உண்மை நிலைகளை உற்று நோக்குதல், சோதித்துப் பார்த்தல், அனுமானங்களுக்கு வருதல், பகுத்தாராய்தல், மற்றவர்களுக்குத் தெரிவித்தல் – இவையெல்லாம் இணைந்ததே அறிவியல் மனப்பான்மை என்றொரு விளக்கம் உண்டு.
“அறிவியலின் இறுதி விளைவுகளை விட, வழிமுறைகளே முக்கியமானவை. நம்பிக்கைகள் அல்லது மூடமைகளைச் சார்ந்திராமல் ஆதாரம், வாதநியாயம் என்ற அடிப்படைகளில் முடிவுகளுக்கு வருவதே அறிவியல் மனப்பான்மை,” என்கிறார் இந்திய தேசிய அறிவியல் கல்வி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராகவேந்திர கடாக்கர்.
தலைவலிக்கு மருந்து இருப்பது அறிவியல் கண்டுபிடிப்பு. சிறிது நேரம் காற்றோட்டமான இடத்தில் இருந்தாலே தலைவலி மறைந்துவிடும் என்பது அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட அறிவியல் வழிமுறை. தலைவலியின் தன்மையைப் பொறுத்து மருந்து எடுத்துக்கொள்ள அறிவுறுத்துவதும் அறிவியல் வழிமுறைதான்.
இறைமறுப்பே அறிவியலா?
பொதுவாக, அறிவியல் மனப்பான்மை என்றால் கடவுள் இல்லையென வாதிடுவதுதான் என்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இப்படியொரு எண்ணம் ஏற்படுவதற்கு பகுத்தறிவுப் பரப்பலில் ஈடுபட்டவர்களும் ஒரு காரணம்தான். வாழ்க்கையில் சகல நிலைகளிலும் அறிவியல் மனப்பான்மை தேவையென எடுத்துச் சொல்வதற்கு மாறாக, எடுத்த எடுப்பிலேயே கடவுள் மறுப்பை மட்டும் முன்னிலைப்படுத்தி, நம்பிக்கைகளையும் கதைகளையும் பரிகசிப்பது மட்டுமே பகுத்தறிவுப் பணி என்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மதநூல்களில் சொல்லப்படும் கதைகளில் போதிக்கப்படுகிற, ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துகிற சிந்தனைகள் நியாயம்தானா என்று சிந்திக்கக் கேட்டுக்கொள்வது வேறு. அந்தக் கதைகளைக் கேலி செய்வது வேறு. சரியான அறிவியல் பார்வை உள்ளவர்கள் கடவுளைத் திட்ட வேண்டிய தேவையே இல்லை, இல்லாத ஒன்றை எதற்காகத் திட்ட வேண்டும் என்ற புரிதலுடனேயே பேசுவார்கள்.
கடவுள் நம்பிக்கையை அறிவற்ற செயலாகக் கூறிக்கொண்டிருப்பதும் அறிவியல் சிந்தனை பரவுவதற்கு உதவாது. உலகம் முழுவதும் உள்ள அறிவியலாளர்களில் 70 சதவீதம் பேர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் என்று ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நேரடியாக அவரவர் மதம் சொல்கிற கடவுளை நம்புகிறவர்களும் இருக்கிறார்கள். எந்த மதமும் சாராதவர்களாக, ஆனால் அனைத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதாக நம்புகிறவர்களும் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கை அவர்களுடைய ஆராய்ச்சிகளில் குறிக்கிடவில்லை. தங்களுடைய சாதனைக்காகக் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வார்கள் என்றாலும் சாதிக்கத் தவறுவதில்லை. அவர்களை அறிவற்றவர்கள் என்று சொல்வதில் நியாயம் இருக்கிறதா?
ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்கான எழுச்சிகரமான இயக்கம் புறப்படுவதாக வைத்துக்கொள்வோம். பெரும்பகுதி மக்கள் பங்கேற்கிறபோதுதான் அது வெற்றிகரமாக இலக்கை அடையும். அதிலே பங்கேற்கிற ஒருவர் தனது நம்பிக்கை சார்ந்து “இந்தப் போராட்டம் வெற்றிபெற வேண்டும் கடவுளே” என்று வேண்டிக் கும்பிட்டுக்கொண்டோ, தொழுகை நடத்தியோ, ஜெபம் செய்தோ வரக்கூடும். போராடப் புறப்பட்டவர்கள் அவரைத் தடுத்துவிட மாட்டார்கள்.
நேற்றைய வாழ்க்கை பற்றிய குழப்பம், இன்றைய நிலைமை பற்றிய அச்சம், நாணய மாற்றம் பற்றிய அவநம்பிக்கை தொடர்கிற வரையில் இறை நம்பிக்கையும் தொடரும். இதைப் புரிந்து கொள்வது கூட ஒரு அறிவியல் தெளிவுதான். புரட்சிகர மாற்றங்கள் நிகழ்த்தப்படுகிறபோது அதன் நற்பயன்கள் சமுதாயத்தில் வேரூன்றுகிறபோது படிப்படியாகக் கடவுள் நம்பிக்கையும் உதிர்ந்துபோகும்.
தலைவிதியும் குலசாமியும்
கடவுள் கோட்பாட்டைப் போன்றதுதான் விதியும், ஜாதக சோதிடங்களும். பெரும்பகுதி மக்கள் ஏன் இவற்றை நம்புகிறார்கள் என்பதை அறிவியல்பூர்வ மனம் புரிந்துகொள்ளும். பேராசிரியர் ராஜீவ் பார்கவா (வளரும் சமுதாயங்கள் ஆய்வு மையம், புதுதில்லி) எழுதிய “தலைவிதி வாதத்தின் மரணம்” என்ற கட்டுரையில், இது இது இப்படித்தான் நடக்குமெனத் தலையில் எழுதப்பட்டதை மாற்ற முடியாது என்ற புகட்டலுக்கு எதிரான மாற்று முயற்சிதான் கிராமங்களின் குலசாமி வழிபாடுகளும், ஜாதக சோதிடங்களும் என்று கூறியிருப்பது ஒரு புதிய பார்வையைக் கொடுக்கிறது.
அப்படியானால் பகுத்தறிவுப் பரப்புரை இயக்கங்கள் தேவையில்லையா? நிச்சயமாகத் தேவை. ஆனால் அந்தப் பரப்புரையை எப்படி நடத்துவது என்ற பக்குவம் மிக முக்கியமாகத் தேவை. “இப்படி ஒரு கோணத்தில் யோசித்து பார்க்கலாமே” என்று அன்போடு உரையாடும் வகையில் நடத்துவதா, அல்லது “உன்னுடைய பகுத்தறிவை நீயே வைத்துக்கொள்” என்று ஒதுங்கும் வகையில் நடத்துவதா? அவர்களும் பங்கேற்காமல், ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணமாக உள்ள நிலைமைகளை எப்படி மாற்றுவது?
குழந்தைப் பருவத்தில்…
உங்களை வரவேற்கிற மனநிலை படிப்படியாகத்தான் உருவாகிறது என்றாலும் அது குழந்தைப் பருவத்திலிருந்தே சத்துணவு போல் ஊட்டிவளர்க்கப்பட வேண்டும். அதற்கு முதல் தேவை எது குறித்தும் கேள்வி கேட்கிற சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதுதான். குடும்பம், பள்ளி, சமூகம் என எங்கும் அந்தச் சுதந்திரம் உறுதிப்பட வேண்டும். குழந்தைகள் மீது உயிரையே வைத்திருக்கிற, அவர்களின் நல்வாழ்வுக்காக எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருக்கிற பெற்றோர்களும் மற்ற பெரியவர்களும் குழந்தைகளின் இந்த உரிமையை மதிக்கத் தயாராக வேண்டும்.
தரை பெருக்குவது, பாத்திரம் கழுவுவது, ஆடைகளைத் துவைப்பது, காய்கறி வெட்டுவது உள்ளிட்ட பணிகளை ஒரு விளையாட்டுப் போட்டியாகவே செய்கிற ஆர்வத்தைக் குழந்தைப் பருவத்திலேயே தூண்டுவது ஒரு முக்கியத் தேவை. அப்படித் தூண்டப்படுகிற குழந்தைகள் இது பெண்களுக்கான வேலை, இது ஆண்களுக்கான வேலை என்ற பாகுபாடில்லாமல் வளர்வார்கள். இந்த ஆரோக்கியமான வளர்ச்சிக்கான தூண்டல் அறிவியல் மனப்பான்மைதான்.
“அம்மா, தங்கச்சிப் பாப்பாவுக்கு உச்சாவே இல்லை” என்று வியப்போடு கேட்ட மகனுக்கு, அந்த வயதில் எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல்லி பாலின உறுப்புகள் உள்ளிட்ட உடல் அறிவைப் பதியமிட்டது குறித்து உளவியலாளர் ஒருவர் எழுதிய கட்டுரை நினைவுக்கு வருகிறது. இயற்கையான ஈர்ப்புணர்வைப் புதைத்துப் பாலியல் வக்கிரப் பார்வையோடு தலைமுறைகள் தலையெடுப்பதைத் தடுக்கிற இந்த வளர்ப்புமுறை அறிவியல் மனப்பான்மையே.
அறிவியல் மனப்பான்மை இருந்தால் மனித வரலாறு புரியும். அதில் இனப் பிரிவுகள் எவ்வாறு ஏற்பட்டன என்பதும் புரியும். சாதி, மதப் பாகுபாட்டு மூடமைகள் பற்றிய தெளிவு ஏற்படும். அந்தப் பாகுபாடுகளின் அடிவாரமான உழைப்புச் சுரண்டல் அமைப்பு பற்றிய ஞானம் பிறக்கும். அதை மாற்றுவதற்கு நம்மாலானதைச் செய்வோம் என்ற மனித நேயம் சுரக்கும். அறிவியல் மனப்பான்மை இருந்தால் மொழித் திணிப்பு முதல் கல்வி உரிமை பறிப்பு வரையிலான அநீதிகளுக்கு எதிராகத் திரளச் செய்யும். இயற்கை வளம் சுயலாபத்திற்காக உறிஞ்சப்படுவதற்கும் புதிய நோய்க்கிருமிகள் தொற்றுவதற்கும் உள்ள தொடர்பை அறிந்ந்துகொண்டு அதைத்தடுக்க உயரும் கைகளோடு நம் கைகளும் இணையச் செய்யும்.
வீட்டில், தெருவில், வேலை செய்யும் இடத்தில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. எல்லோரும் என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிற போது, அங்கே வருகிற ஒருவர் சட்டென அதைத் தீர்த்து வைப்பார். அட இந்த யோசனை நமக்கு வராமல் போய்விட்டதே என்று வியக்க வைக்கிற அவரிடம் இருப்பது ஒருவகையான அறிவியல் மனப்பான்மைதான். இப்படியெல்லாம் ஆராய்ந்துகொண்டிருக்காமல், ஏற்கனவே சொல்லி வைக்கப்பட்டிருக்கிற வழிகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிற பலர் இருக்கிறார்கள்தான். அவர்களால் புதுமைகளை உருவாக்கவும் முடியாது அனுபவிக்கவும் முடியாது.
தேங்கிவிடாத அறிவு
அறிவியல் கண்ணோட்டம் பற்றிய விவாதங்களின் போது சிலர், “அறிவியல்தான் மாறிக்கொண்டே இருக்கிறத. அதை எப்படி நம்புவது,” இன்று கேட்பதுண்டு. தேங்கி நின்றுவிடாமல் மாறிக்கொண்டே இருப்பதுதான் அறிவியலின் வளர்ச்சி. வரும்போதே கேள்விகளைப் பிறக்கச் செய்வதுதான் அறிவியலின் வெற்றி. முடிவே இல்லாமல் புதிது புதிதாய்க் கேள்விகளும் தேடல்களும் தொடரும் என்பதால் அறிவியல் பயணம் ஒருபோதும் முடங்குவதில்லை.
அறிவியல் மனப்பான்மையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுதான் இந்திய அரசமைப்பு சாசனத்தை உருவாக்கிய முன்னோடிகள், குடிமக்களின் கடமைகள் பற்றிய சட்ட உரையில், “அறிவியல் மனப்பான்மை, மனிதம், கேள்வி மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்த்தல்” (சட்ட உரை 51 ஏ(எச்) என்று வழிகாட்டியிருக்கிறார்கள். அறிவியல் மனப்பான்மை, மனிதம், கேள்வி, சீர்திருத்தம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை என்று உணர்ந்தே இந்தச் சட்ட உரை சேர்க்கப்பட்டது என்றால் மிகையில்லை.
சொந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைக் கண்டு மிரளாமல், ஏன் எப்படி என்று சிந்தித்துத் தீர்வு காண இட்டுச் செல்வது அறிவியல் மனப்பான்மை. சமூக வாழ்க்கையில் ஏழை பணக்காரர், ஒடுக்கப்பட்டோர் உயர்த்திக்கொண்டோர், பெண்ணடிமை ஆணாதிக்கம், கறுப்பர் வெள்ளையர் … இன்னபிற பாகுபாடுகள் ஒட்டுமொத்த மனித முன்னேற்றத்திற்குப் பெரும் தடைக்கற்கள் என்றுணர்ந்து, அவற்றைப் புரட்டிப்போடப் புறப்பட்ட மானுட இயக்கங்களோடு இணைவது உன்னதமான அறிவியல் மனப்பான்மை.
—
என் வலைப்பூ: அசாக்
http://asakmanju.blogspot.com
அறிவியல் மனப்பான்மை போராட சொல்லும் என்பதில் ஏற்பு.ஆனால் போராட்டத்தையே அறிவியல் பூர்வமாக முன்னெடுக்க வேண்டும்(இடது சிந்தனையுள்ள ஒரு தோழர் கூறியது) என்பது எந்த வகையில் சரியாக இருக்கும்?
அறிவியல் பூர்வமாக போராட்டத்தை முன்னெடுக்க முடியுமா?
அப்படியாக நடந்த ஏதேனும் ஒரு போராட்டத்தை சொல்ல முடியுமா?
சரியான பிரச்சினையை எடுத்துக்கொண்டு, சரியான காலக் கட்டத்தில், சரியான திட்டமிடலோடு, சரியான ஆதரவைத் திரட்டிப் போராடுவது என்பதே அறிவியல்பூர்வமான போராட்ட வழிமுறை.
தோழர் சொன்னது சரிதானன். வெற்றி பெற்ற போராட்டங்கள் அனைத்துமே அறிவியல்பூர்வமான வழிமுறையில் மேற்கொள்ளப்பட்டவைதான்.