சூரியன் என்ன கடலை மிட்டாயா (What is the sun like the Chikki) - ஏற்காடு இளங்கோ(Yercaud Elango) - தொலைநோக்கி - https://bookday.in/

சூரியன் என்ன கடலை மிட்டாயா?

             சூரியன் என்ன கடலை மிட்டாயா?


                                                                                                              – ஏற்காடு இளங்கோ


   பூமியிலிருந்து சூரியன் சுமார் 149 மில்லியன் கிலோமீட்டர் (14.9 கோடி கி.மீ.) தொலைவில் உள்ளது. சூரியனின் விட்டம் 14 மில்லியன் கிலோமீட்டர் ஆகும். சூரியன் பூமியை விட 109 மடங்கு பெரியது. இதன் நிறை பூமியை விட 3 இலட்சத்து 30 ஆயிரம் மடங்கு அதிகம். சூரியனுள் 13 இலட்சம் பூமிகளைப் போட்டு அடைத்து விடலாம். அந்த அளவிற்குச் சூரியன் மிகப் பெரியது.

 

Which gas is present in the sun? - Quora

     சூரியன் ஒரு நட்சத்திரம். இதன் வயது சுமார் 460 கோடி ஆண்டுகள் ஆகும். இது கிட்டத்தட்ட கோள வடிவம் கொண்டது. இது பிளாஸ்மா நிலையில் உள்ள சூடான வாயுக்களால் ஆனது. இதில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களே அதிகளவில் காணப்படுகிறது. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 5,800 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். இதன் மையப் பகுதியின் வெப்பநிலை சுமார் 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் ஆகும்.


கலிலியோ


     சூரியனை முதன் முதலாக தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்தவர் கலிலியோ ஆவார். இவர் 1610 ஆம் ஆண்டில் தொலைநோக்கி மூலம் சூரியனைப் பார்த்தார். அப்போது சூரியப் புள்ளிகளைக் (Sunspots) கவனித்தார். சூரியன் அதன் அச்சில் சீரான வேகத்தில் சுழல்கிறது என்று அவர் கண்டறிந்தார். அதன் பிறகே சூரியனைப் பற்றிய நவீன ஆராய்ச்சி தொடங்கியது.

கலீலியோ கலிலி - தமிழ் விக்கிப்பீடியா
கலிலியோ(Galileo Galilei)


      ஆரம்பத்தில் தொலைநோக்கிகள் எடுத்துச் செல்லக் கூடியவையாகவே இருந்தன. சூரிய கிரகணங்கள்  நடக்கும் போது அந்த நிகழ்வைக் காணவும், ஆய்வுகள் செய்யவும் தொலைநோக்கிகளை பல நாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். அதன் பின்னர் 1904 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வில்சன் மலையில் உலகின் முதல் நிரந்தர சூரிய தொலைநோக்கி நிறுவப்பட்டது.


     அமெரிக்க சூரிய வானியல் அறிஞர் ஜார்ஜ் எல்லேரி ஹேல் (George Ellery Hale) என்பவர் சூரியனைக் கண்காணிப்பதற்காக ஒரு கிடைமட்ட தொலைநோக்கியை உருவாக்கினார். இந்தத் தொலைநோக்கியை வில்சன் மலையில் நிறுவ சிக்காகோவைச் சேர்ந்த ஹெலன் ஈ.ஸ்னோ என்பவர் நிதியுதவி செய்தார். இவரின் தந்தை ஜார்ஜ் டபிள்யூ. ஸ்னோவின் (George W. Snow) நினைவாக ஸ்னோ கிடைமட்ட தொலைநோக்கி (Snow Horizontal Telescope) எனப் பெயரிடப்பட்டது.
இதன் பிறகே பல்வேறு நாடுகளில் சூரிய தொலைநோக்கி நிலையங்கள் உருவாக்கின.


     செயற்கைக்கோள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு சூரியனை ஆராய்வதற்காக அமெரிக்கா முதன் முதலில் செயற்கைக்கோளை ஏவியது. நாசா 1965 முதல் 1968 வரை பயணியர் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய செயற்கைகோளை அனுப்பியது. அவை சூரியனைச் சுற்றி வந்து சூரியக்காற்று, காந்தப்புலம் மற்றும் காஸ்மிக் கதிர்கள் ஆகியவற்றை அளவீடு செய்தன.


உலகின் பெரிய தொலைநோக்கி


     உலகின் மிகப்பெரிய சூரிய தொலைநோக்கி என்பது டேனியல் கென் இனோய் சூரிய தொலைநோக்கி (Daniel Ken Inouye Solar Telescope) ஆகும். இது DKIST எனவும் அழைக்கப்படுகிறது. சூரியனை மட்டுமே ஆய்வு செய்வதற்காக இந்தத் தொலைநோக்கியை அமெரிக்க தேசிய அறக்கட்டளை (National Science Foundation – NSF) அமைத்துள்ளது.

Daniel K. Inouye Solar Telescope - Wikipedia
சூரிய தொலைநோக்கி


   இந்தத் தொலைநோக்கி நிலையம் ஹவாய் தீவில் உள்ள ஹலேகலே (Haleakala) என்னும் எரிமலைத் தளத்தின் மீது நிறுவப்பட்டுள்ளது.
ஹலேகலே என்பது கடலால் சூழப்பட்ட உயரமான கேடய எரிமலையாகும். இது சூரிய வானியல் ஆய்வுக்கு மிக பொருத்தமான இடமாகும்.


டேனியல் இனோய்


   டேனியல் கேன் இனோய் என்பவர் ஒரு அமெரிக்க வழக்கறிஞர், ராணுவ வீரர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டவர். இவர் ஜனநாயக கட்சியின் உறுப்பினராக இருந்தார். 1963 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 17 வரை (இறக்கும் வரை) ஹவாயில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க செனட்டராக பதவி வகித்தார்.

Daniel Inouye | WWII Veteran, Medal of Honor Recipient, US Senator |  Britannica
டேனியல் கேன் இனோய் (Daniel Inouye)


      இவர் 1959 ஆம் ஆண்டு தொடங்கி ஹவாய் மாநிலத்திற்கான முதல் அமெரிக்க பிரதிநிதி மற்றும் கௌரவ பதக்கம் பெற்றவர் ஆவார். இவர் அமெரிக்க செனட்டின் சார்புத் தலைவராகவும் பணியாற்றினார். அமெரிக்க வரலாற்றில் மிக உயர்ந்த பதவியில் இருந்த ஆசிய – அமெரிக்க அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இவரைக் கௌரவிக்கும் வகையில் ஹவாயில் நிறுவிய சூரிய தொலைநோக்கி நிலையத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது.


தொலைநோக்கியின் சிறப்பு


    இந்தச் சூரிய தொலைநோக்கி எரிமலையின் உச்சியில் நிறுவப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் உள்ளது. தற்போது இதுவே உலகின் மிகப்பெரிய சூரிய தொலைநோக்கி ஆகும். மேலும் இதுவே உலகின் மிக சக்தி வாய்ந்த சூரிய தொலைநோக்கி என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஆராய்ச்சி மையமாக செயல்படுகிறது.


      இது 72 அடி உயரமும் 87 அடி விட்டமும் கொண்டது. சூரியனை விரிவாக காண இதில் 4 மீட்டர் (13 அடி) விட்டம் கொண்ட கண்ணாடி இடம் பெற்றுள்ளது. இது மற்ற சூரிய தொலைநோக்கியை விட ஏழு மடங்கு அதிக சூரிய ஒளியைச் சேகரிக்கிறது. இது சூரியனின் தெளிவான மற்றும் மிக உயர்ந்த தெளிவுத்திறன் படங்களை உருவாக்குகிறது. இதில் 5 கேமராக்கள் உள்ளன.

      இந்தத் தொலைநோக்கி நிலையம் கட்டுவதற்கு 2010 ஆம் ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணி 2013 ஆம் ஆண்டில் தொடங்கி 2017 இல் முடிவடைந்தது. முதன்மை கண்ணாடி ஆகஸ்ட் 2017 இல் வழங்கப்பட்டது. ஹலேகலே எரிமலையின் தளம் பகல் நேர வானிலையைத் தெளிவாக காண  ஏற்றதாக உள்ளது.


       இந்தத் தொலைநோக்கி 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சூரியனைப் படம் எடுக்க தொடங்கியது. சூரியனின் மேற்பரப்பை மிகத் துல்லியமாக புகைப்படம் எடுத்தது. இது விண்வெளியில் நடந்த ஒரு அபூர்வ சாதனையாகும். எடுத்த புகைப்படங்கள் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டது. இது சூரிய அறிவியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது.


படங்கள்


     சூரியனின் மேற்பரப்பின்  புகைப்படத்தை அமெரிக்காவின் நாசா அமைப்பு 2020 ஆம் ஆண்டு ஜனவரி 29 முதன் முதலாக வெளியிட்டது. மேலும் இதன் வீடியோவும் வெளியிடப்பட்டது. இதற்கு முன்பு வரை எந்த தொலைநோக்கியும் சூரியனை மிக நெருக்கமாக புகைப்படம் எடுத்தது கிடையாது. டேனியல் இனோய் சூரிய தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் மனிதனின் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


      இந்தப் புகைப்படம் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இது தகதக என மின்னுகிறது. இது பார்ப்பதற்கு ஒரு கடலை மிட்டாய் போல் இருக்கிறது. இந்தப் படம் சூரியனின் மேற்பரப்பில் கொதிக்கும் பிளாஸ்மாவில் உள்ள வடிவங்களைக் காட்டுகிறது. கொதி நிலையில் உள்ள பாத்திரத்தில் வறுபடும் பாப்கார்ன் போல சூரியனின் மேற்பரப்பு நமது பார்வைக்குப் புலப்படுகிறது. இதை ரோலிங் பிளாஸ்மா என்கின்றனர்.

See the most detailed picture of the Sun's surface ever taken |  Astronomy.com
சூரியனின் மேற்பரப்பு படம்


     சூரியனுக்குள் இருந்து வெப்பம் மேற்பரப்பில் வெளிப்படுகிறது. அதே சமயத்தில் குளிர்ந்த பொருள் அதன் அடியில் மூழ்குகிறது. சூரியனின் பொருள் உயரும் போது பிரகாசமான மையங்கள் தெரிகின்றன. அதைச் சுற்றியுள்ள இருண்ட பாதைகள் பிளாஸ்மா குளிர்ந்து மூழ்குவதைக் காட்டுகிறது. இப்படி நகரும் துகள்களை வெப்பச் சலனத் துகள்கள் (Convection Granules) என அழைக்கப்படுகின்றன.


      ஒவ்வொரு துகள்களும் அளவில் மிகப் பெரியவை. இது செல் போன்ற கட்டமைப்பு (Cell like structure) கொண்டது. இது ஒவ்வொன்றும் சுமார் 1600 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டிருக்கிறது. அதாவது தென்னிந்தியாவின் அளவு அல்லது அமெரிக்க மாநிலமான டெக்சாஸின் அளவு இருக்கும் எனக் கூறுகின்றனர். 

சூரியனை மிக நெருக்கமாக காட்டும் டேனியல் கே. இன்யூயே தொலைநோக்கியின் படங்கள்  - BBC News தமிழ்
சூரிய புள்ளியின் படம்

     இந்தப் புகைப்படம் 789 நானோ மீட்டரில் எடுக்கப்பட்டதாகும். இப்படம் சுமார் 30 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. கூகுள் மேப்பில் நாம் பூமியை ஜூம் (Zoom) செய்து பார்ப்பது போல் சூரியனின் மேற்பரப்பை 30 கிலோ மீட்டர் வரை ஜூம் செய்து பார்க்கலாம். இது சூரிய அறிவியலில் ஒரு மிகப்பெரிய சாதனை ஆகும்.


      இந்தத் தொலைநோக்கி மூலம் 38,000 கிலோ மீட்டர் அகலத்திற்கு சூரியனைப் புகைப்படம் எடுக்க முடியும். இதுவரை 5 புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் சூரியப் புள்ளியும் இடம் பெற்றுள்ளது. மேலும் சூரிய மேற்பரப்பில் இதுவரை காணப்படாத சிறிய அம்சங்களையும் காட்டுகிறது.


பயன்


      சூரியனில் இருந்து காந்தப் புயல்கள் ஏற்படுகின்றன. அதிலிருந்து சூரிய கிளரொளி (Solar Flare) வெளிப்படுகிறது. இது பூமியைத் தாக்கும். இதனால் உயிரினங்கள் பாதிக்கப்படும். விமான போக்குவரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். செயற்கைக்கோள்கள் செயலிழக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் நமது மின்சார இணைப்புகள் மற்றும் ஜிபிஎஸ் போன்ற தொழில்நுட்பங்கள் முற்றிலும் முடங்கிவிடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


    இனி சூரிய காந்தப் புயல்களை வரைபடமாக்க முடியும். 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரிய விண்வெளி சூப்பர் புயலும் ஏற்படுகிறது. இதை முன்கூட்டியே கண்டறியவும், விண்வெளி வானிலையை அறிந்துக் கொள்ளவும் நமக்கு இந்தத் தொலைநோக்கி வழி காட்டுகிறது.


    ‌ விஞ்ஞானிகள் சூரியனின் மேற்பரப்பை தினமும் ஆழ்ந்து கவனித்து வருகின்றனர். இதுவரை வெறும் 48 மணிகளுக்கு முன்னதாக மட்டுமே சூரிய புயல்கள் பற்றிய எச்சரிக்கையைத் தர முடிந்தது. தற்போது கிடைக்கும் புகைப்படத்தை வைத்து சூரிய புயல்கள் பற்றிய எச்சரிக்கையை 48 நிமிடத்திற்கு முன்னதாகவே வழங்க முடியும்.


  கட்டுரையாளர் :                                                                

வானவில் மலைகள் - ஏற்காடு இளங்கோ - Book Day

– ஏற்காடு இளங்கோ

அறிவியல் எழுத்தாளர்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *