இந்தியாவில் கோவிட் பேரழிவிற்கு எது வழிவகுத்தது – உண்மையை உடைக்கும் அறிவியலாளர் சௌம்யா சுவாமிநாதன் | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு

இந்தியாவில் கோவிட் பேரழிவிற்கு எது வழிவகுத்தது – உண்மையை உடைக்கும் அறிவியலாளர் சௌம்யா சுவாமிநாதன் | தமிழில் முனைவர் தா.சந்திரகுருஇந்தியாவில் முதன்முதலாக சென்ற ஆண்டு அக்டோபரில் கண்டறியப்பட்ட பி.1.617 என்ற கோவிட்-19இன் திரிபு வடிவமே அங்கே ஏற்பட்டிருக்கும் பேரழிவிற்கான முக்கிய காரணியாக இருந்தது என்று உலக சுகாதார அமைப்பில் தலைமை அறிவியலாளராக உள்ள சௌம்யா சுவாமிநாதன் கூறுகிறார். தனது தாய்நாடான இந்தியாவில் பரவி வருகின்ற கோவிட்-19 திரிபு மிகவும் தொற்றக் கூடியது, தடுப்பூசி தருகின்ற பாதுகாப்பையும் அது தடுக்கக்கூடும் என்பதால் நாட்டில் அதிவேகமான நோய்த் தொற்றுப் பரவலுக்கு அது வழிவகுத்து தரும் என்று மே 09 அன்று சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்தார்.

ஏ.எஃப்.பி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் ‘மிக வேகமாகப் பரவுகின்ற வைரஸ் திரிபாக அது இருப்பதையே இன்று இந்தியாவில் நாம் காண்கின்ற தொற்றுநோயியல் அம்சங்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன’ என்று சௌம்யா சுவாமிநாதன் எச்சரித்திருக்கிறார்.  மே 09 சனிக்கிழமையன்று இந்தியா முதன்முறையாக இருபத்தி நான்கு மணி நேரத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட்-19 இறப்புகளையும், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிதாக தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களையும் பதிவு செய்திருந்தது. தன்னுடைய சுகாதார அமைப்பை முழுமையாக மூழ்கடித்த இந்த தொற்று பரவலைக் கட்டுப்படுத்த புதுதில்லி கடுமையாகப் போராடியது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மரணம், நோயாளிகளின் எண்ணிக்கை முற்றிலும் குறைத்து மதிப்பிடப்பட்டிருப்பதாக வல்லுநர்கள் பலரும் சந்தேகிக்கின்றனர்.

‘தாக்கத்தை ஏற்படுத்துபவையாக பல முடுக்கிகள் உள்ளன’ என்று கூறும் 62 வயதான சௌம்யா ‘மிக வேகமாகப் பரவும் வைரஸ் அவற்றில் ஒன்றாக இருக்கிறது’ என்று வலியுறுத்திக் கூறினார்.

சற்றே மாறுபட்ட பிறழ்வுகள் மற்றும் குணாதிசயங்களுடனான பல துணை மரபுவழிகளை உள்ளடக்கி ‘முக்கியத்துவம் வாய்ந்த திரிபு’ என்று உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் பி.1.617 திரிபை பட்டியலிட்டுள்ளது.  ஆனால் இதுவரையிலும் அந்த திரிபை ‘கவனத்தில் கொள்ளத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த திரிபு’ என்ற – அதிக பரவும் தன்மை கொண்டதாக, ஆபத்தானதாக, தடுப்பூசி பாதுகாப்புகளைக் கடந்து செல்லக் கூடியதாக இருப்பதால் வைரஸின் அசல் பாதிப்பை விட மிகவும் ஆபத்தானது என்பதைக் குறிக்கின்ற முத்திரை – மிகச் சிறிய பட்டியலுக்குள் சேர்க்காது நிறுத்தி வைத்து விட்டது.இதற்கிடையில் ‘கவனத்தில் கொள்ளத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த திரிபு’ என்று பி.1.617ஐக் கருதுவதாக அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல நாடுகளைச் சார்ந்த தேசிய சுகாதார அதிகாரிகள்  கூறியுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் விரைவில் இதைப் பின்பற்றும் என்று தான் எதிர்பார்ப்பதாக கூறுகின்ற சௌம்யா சுவாமிநாதன் ‘பரவலை அதிகரிக்கும் சில பிறழ்வுகளைக் கொண்டுள்ளதாலும், தடுப்பூசி அல்லது இயற்கையாக ஏற்படுகின்ற தொற்றுநோயால் உருவாகும் ஆன்டிபாடிகளுக்கு எதிரான திறன் கொண்டது என்பதால் பி1.617 திரிபு  கவனத்தில் கொள்ளத்தக்க திரிபாக இருக்கக்கூடும்’ என்கிறார்.

ஆனால் இந்த திரிபை மட்டுமே இந்தியாவில் காணப்பட்ட நோயாளிகள், இறப்புகளின் அதிகரிப்பிற்காக குறை கூற முடியாது என்பதை வலியுறுத்திய அவர் மிகப்பெரிய அளவிலான சமூக கலப்பு, பெரிய கூட்டங்கள் போன்றவற்றாலேயே  நாடு தனது பாதுகாப்பைக் குறைத்துக் கொண்டு விட்டதாகத் தோன்றுகிறது என்று சௌம்யா குறை கூறினார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற அரசியல்வாதிகளால் நடத்தப்பட்ட மிகப்பெரிய தேர்தல் பேரணிகள் தொற்றுநோய்களின் மகத்தான உயர்வுக்கு காரணமாக இருந்ததாக இப்போது குற்றம் சாட்டப்படுகிறது. இந்தியாவில் பலரும் இந்த வைரஸ் நெருக்கடி முடிந்துவிட்டதாக உணர்ந்த போதிலும், முகக்கவசம் அணிவது போன்ற பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிட்டதால் வைரஸ் அமைதியாகப் பரவியது.

செங்குத்து உயர்வு

‘இந்தியா போன்றதொரு மிகப்பெரிய நாட்டில் குறைந்த அளவிலேயே பரவல் இருக்கும். இதுதான் பல மாதங்களாக நடந்து வந்திருந்தது. உள்ளுறை நோயாக இருந்த அது படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருந்தது. செங்குத்தாக உயரும் இடத்தை அடையும் வரை அதன் ஆரம்ப அறிகுறிகள் கண்டுகொள்ளப்படாது தவற விடப்பட்டன’ என்று சௌம்யா சுவாமிநாதன் கூறினார். மேலும் அவர் ‘அந்த நேரத்தில் அது பல்லாயிரக்கணக்கான மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி அதை அடக்கி வைப்பது மிகவும் கடினம் என்று சொல்கின்ற விகிதத்தில் பெருக்கமடைந்தது. அதை அந்தக் கட்டத்தில் நிறுத்தி வைப்பது மிகவும் கடினம்’ என்கிறார். இந்தியா இப்போது தொற்று நோய்ப்பரவலைக்  கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி அளவை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த வெறுமனே தடுப்பூசிகள் மட்டும் போதாது என்று சௌம்யா சுவாமிநாதன் எச்சரிக்கிறார். உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் நாடாக இருக்கின்ற இந்தியாவில் 130 கோடிக்கும் அதிகமாக இருக்கின்ற மக்கள் தொகையில் இரண்டு சதவிகிதத்தினருக்கு மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை எழுபது முதல் எண்பது சதவிகிதம் என்ற நிலைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம் என்று கூறிய அவர்  ‘எதிர்வரும் காலத்தில்  தொற்று பரவலைக் குறைக்க இதுவரையிலும் முயன்று பார்த்து சோதிக்கப்பட்டிருக்கும் பொது சுகாதாரம் உள்ளிட்ட சமூக நடவடிக்கைகளையே நாம் சார்ந்து இருக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார்.

இந்தியாவில் நோய்த்தொற்று அதிகரிப்பு நம்மை அச்சுறுத்துவதாக இருக்கிறது, கொடூரமான எண்ணிக்கையில் நோய்வாய்ப்பட்டு இறந்துபோகும் மக்கள் மட்டுமல்லாமல், தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிவிரைவாக அதிகரிப்பதால் மிகவும் ஆபத்தான திரிபுகள் புதிதாகத் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ‘வைரஸ் எவ்வளவு அதிகமாக தன்னை நகலெடுத்துக் கொள்கிறது, பரவுகிறது, தொற்றுகிறது  என்பதைப் பொறுத்தே வைரஸ் பிறழ்வுகள் உருவாகி தங்களைத் தகவமைத்துக் கொள்வதற்கான அதிக வாய்ப்புகளும் உருவாகின்றன’ என்று கூறுகின்ற சௌம்யா ‘ஏராளமான திரிபுகளைத் தன்னிடம் குவித்துக் கொள்ளும் பிறழ்வுகள் இறுதியில் நம்மிடம் தற்போது இருந்து வருகின்ற தடுப்பூசிகளுக்கு எதிரான திறனுடன் இருக்கும். அது ஒட்டுமொத்த உலகிற்கும் பிரச்சனையாகவே இருக்கப் போகிறது’ என்று எச்சரிக்கவும் செய்கிறார்.

கட்டுரையாளர்: உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியலாளர் சௌம்யா சுவாமிநாதன்
தமிழில்: தமிழில் முனைவர் தா.சந்திரகுரு

நன்றி: லைவ் மின்ட் இணையதளம் 2021 மே 09
https://www.livemint.com/news/india/b1617-variant-among-accelerators-of-india-s-covid-19-second-wave-who-top-scientist-11620555450406.htmlLeave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *