சர்வதேச தரநிலைகளின்படி சீன மாணவர்கள் ஏன் இவ்வளவு சிறந்து விளங்குகிறார்கள் | What Makes Chinese Students So Successful | சீனக் கல்வி

சர்வதேச தரநிலைகளின்படி சீன மாணவர்கள் ஏன் இவ்வளவு சிறந்து விளங்குகிறார்கள்?

– பீட்டர் யோங்கி கு (வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகம்),
  ஸ்டீபன் டாப்சன் (மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம்)

– தமிழில் த. பெருமாள்ராஜ்.

மேற்கத்திய உலகில் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது: சீன மாணவர்கள் (Chinese Students) எந்த சிந்தனையுமின்றி, இயந்திரத்தனமாக மனப்பாடம் செய்யும் கற்றல் முறையிலேயே பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இத்தகைய கல்வி முறை, புதுமை அல்லது படைப்பாற்றல் இல்லாத, கீழ்ப்படிதலுள்ள தொழிலாளர்களை மட்டுமே உருவாக்கும்.

ஆனால், இக்கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று நாங்கள் வாதிடுகிறோம். உண்மையில், சீனக் கல்வி முறை மிகவும் திறமையான மற்றும் படைப்பாற்றல் மிக்க மாணவர்களையும், தொழிலாளர்களையும் உருவாக்குகிறது. இதிலிருந்து உலகம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வைரலான வீடியோவில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், தனது உற்பத்தி நடவடிக்கைகள் சீனாவை நோக்கி ஈர்க்கப்பட்டதற்குக் காரணம், அங்கு திறமையான தொழிலாளர்கள் அபரிமிதமாகக் கிடைப்பதே காரணம் என்று குறிப்பிட்டார்.

“அமெரிக்காவில், கருவிப் பொறியாளர்களின் (Tooling Engineers) கூட்டத்திற்கு ஓர் அறையை நிரப்பும் அளவுக்கானவர்களைக்கூட நம்மால் சேர்க்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், சீனாவில் பல கால்பந்து மைதானங்களை நிரப்பும் அளவிற்குப் பொறியாளர்கள் கிடைப்பார்கள்” என்று அவர் கூறினார்.

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் இதற்கு உடனடியாக X தளத்தில் “உண்மைதான்” என்று பதிலளித்தார்.

தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா, மின்வாகன உற்பத்தி நிறுவனமான BYD இன் ஷென்சென் தலைமையகத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் பார்வையிட்டபோது, அந்நிறுவனம் அடுத்த பத்தாண்டுகளில் தனது ஒரு லட்சம் பொறியாளர்கள் என்ற தற்போதைய பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளது என்பதை அறிந்து வியப்படைந்தார்.

சீன பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் அதிகமான பட்டதாரிகளை உருவாக்குகின்றன என்பதை அவர் அறிந்திருந்தால், அவர் அவ்வளவு வியப்படைந்திருக்கமாட்டார். இதுவே சீனாவின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

சீன மாணவர்கள் (Chinese Students) எப்படி சிறந்து விளங்குகிறார்கள்? புதிரான முரண்

மேற்கத்திய அல்லது கன்பூசியக் கலாச்சாரப் பின்னணி இல்லாத மாணவர்களுடன் ஒப்பிடும்போது, சீன மாணவர்கள் (Chinese Students) குறிப்பிடத்தக்க அளவில் சிறந்து விளங்குகிறார்கள்.

2009 ஆம் ஆண்டு முதல் ஷாங்காய் PISA கல்வி மதிப்பீட்டுத் தேர்வில் பங்கேற்கத் தொடங்கியதிலிருந்து, சீனாவில் உள்ள 15 வயது மாணவர்கள் வாசித்தல், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய மூன்று பிரிவுகளிலும் நான்கில் மூன்று முறை முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

இயந்திரத்தனமான மனப்பாடம் செய்யும் கற்றல் முறையைக் கொண்ட சீனக் கல்வி முறை, மேற்கத்திய நாடுகளின் கல்வி முறைகளை விட எவ்வாறு சிறப்பாகச் செயல்பட முடியும்? பல ஆஸ்திரேலிய அறிஞர்கள் 1990 களில் இருந்து இந்த சீன மாணவர்களின் இந்த முரண்பாடு பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

சீன மற்றும் பிற ஆசிய மாணவர்கள் குறித்த பொதுவான கருத்துக்கள் தவறானவை என்பதை அவர்களின் ஆராய்ச்சி நிரூபிக்கிறது. உதாரணமாக, மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதும் அர்த்தமுள்ள கற்றலும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.

ஒரு சீனப் பழமொழி கூறுவது போல்: “நூறு முறை படித்தால், அதன் பொருள் தானாகவே விளங்கும்.”

மேற்கத்தியக் கல்வி என்ன கற்றுக்கொள்ள முடியும்?

சீனக் கலாச்சாரம் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறது. ஹான் வம்சத்தில் (கி.மு. 202 – கி.பி. 220) கன்பூசியனிசம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோட்பாடாக மாறியதிலிருந்து, கல்வி சீன சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்துள்ளது.

சுய் வம்சத்தின் (கி.பி. 581-618) ஆட்சியின்போது, அரசுப் பணிகளுக்கான கெஜு தேர்வு முறை நிறுவனமயமாக்கப்பட்ட பிறகு, கல்விக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இன்று, காவோகாவ் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நவீன கெஜு தேர்வுக்குச் சமமானதாகும். ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப் படிப்பை முடிக்கும் மில்லியன் கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள். ஒவ்வொரு ஜூலை மாதமும் மூன்று நாட்களுக்கு, சீன சமூகம் முழுவதும் காவோகாவ் தேர்வின் மீது கவனம் செலுத்துகிறது.

கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கலாச்சார உந்துதல், சீனக் கல்வி முறையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ஒரு முக்கிய உந்துசக்தியாக இருக்கிறது. மேற்கத்திய சமூகங்களால் இதை எளிதில் கற்றுக்கொள்ளவோ ​​பின்பற்றவோ முடியாது.

இருப்பினும், சீனக் கல்வி வெற்றிக்கு மையமாக இருக்கும் இரண்டு கல்விக்  கொள்கைகள் உள்ளன. இந்தக் கல்விக்  கொள்கைகளை விளக்க இரண்டு சீனப் பழமொழிகளைப் பயன்படுத்துகிறோம்.

முதல் கல்விக்  கொள்கை, “ஒழுங்கான மற்றும் படிப்படியான முன்னேற்றம் (orderly and gradual progress).”

சீன மொழியில் இது 循序渐进 என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கல்விக்  கொள்கை, பொறுமையுடன், படிப்படியாக, வரிசைப்படுத்தப்பட்ட முறையில் கற்பதை வலியுறுத்துகிறது. மன உறுதியும், பொறுமையாக பலனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தன்மையும் இதற்கு அவசியம்.

இரண்டாவது கல்விக்  கொள்கை, “எளிமையான வெளிப்பாட்டிற்கு முன், திரளான கற்றல்  (thick accumulation before thin production).”

சீன மொழியில் இது 厚积薄发 என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கல்விக்  கொள்கை இரண்டு முக்கிய கருத்துக்களை முன்வைக்கிறது:

  1. அடிப்படை அறிவு மற்றும் திறன்களை விரிவாகத் திரட்டுவதன் மூலம் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குதல்.

  2. இந்த உறுதியான அடித்தளத்திற்குப் பிறகுதான், அறிவை உள்வாங்கி, ஒருங்கிணைத்து, படைப்பாற்றலை வெளிப்படுத்த முடியும்.

அறிவு, திறன் மற்றும் படைப்பாற்றல்

ஒழுங்கான மற்றும் படிப்படியான முன்னேற்றத்திற்குச் சிறந்த உதாரணம், சீனக் கையெழுத்துப் பயிற்சி. எளிமையிலிருந்து கடினத்திற்கும்,  மாதிரியைப் போல எழுதுவதிலிருந்து,  சுதந்திரமாக எழுதுவதற்கும், நுட்பத்திலிருந்து கலைத்திறனுக்கும்  மாணவர்கள் படிப்படியாக  முன்னேறுகிறார்கள்.

2013 ஆம் ஆண்டு முதல், சீனாவின் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும்  கையெழுத்துப் பயிற்சி  கட்டாயப் பாடமாக  உள்ளது.

சீன எழுத்தாற்றல் திறனானது பொறுமை, விடாமுயற்சி, நிதானம், கவனச் செறிவு மற்றும்  ஒருங்கமைவின் அழகைப்  பாராட்டும் திறன் ஆகியவற்றைக்  கற்றுக்கொடுக்கிறது.  நல்லிணக்கம்  மற்றும்  அழகியல்  உணர்வு  போன்ற  சீன  மதிப்புகளையும் இது  வளர்க்கிறது.

தேசிய அளவிலான காவோகாவ் தேர்வுக்கும்,  உயர்கல்விக்கும்  மாணவர்கள்  கடுமையாகப்  படிப்பது  “திரளான கற்றலுக்கு (thick accumulation) ”  ஓர்  உதாரணம்.  இதன்  மூலம்  அவர்கள்  ஒரு  நவீன  சமுதாயத்தில்  தேவைப்படும்  அடிப்படை  அறிவு  மற்றும்  திறன்களை  வளர்த்துக்கொள்கிறார்கள்.

“எளிமையான வெளிப்பாடு (thin production) ”  என்பது,  திரளான கற்றல்  மற்றும்  திறனைப்  பயன்படுத்தி,  பணியிடத்தில்  அல்லது  வேறு  இடங்களில்  புதிய  தீர்வுகளைக்  கண்டுபிடித்து  செயல்படுத்தும்  திறனைக்  குறிக்கிறது.

கற்றல்  முறைகள்

படிப்படியான  முன்னேற்றத்திற்கும்,  அடிப்படை  அறிவு  மற்றும்  திரளான கற்றலுக்கு  முக்கியத்துவம்  அளிப்பது,  சலிப்பான  மற்றும்  ஊக்கமளிக்காத  ஒரு  செயல்முறையாகத்  தோன்றலாம்.  சீனக்  கல்வி  முறை  பற்றிய  பொதுவான  தவறான  கருத்துக்கள்  இதிலிருந்தே  தோன்றியிருக்கலாம்.

ஆனால்,  உண்மை  என்னவென்றால்,  போதுமான  அளவு  அடிப்படை  அறிவு  மற்றும்  திறன்கள்  இல்லாமல்,  புதிய  கருத்துக்களை  உள்வாங்கி,  ஒருங்கிணைத்து,  படைப்பாற்றலை  வெளிப்படுத்த  முடியாது.

நிச்சயமாக,  சீனக்  கல்வி  முறையில்  பல  சிக்கல்கள்  உள்ளன.  கடுமையான  போட்டி,  தேர்வுகளுக்கு  அதிக  முக்கியத்துவம்  அளிப்பது  போன்றவை  சில  உதாரணங்கள்.  ஆனால்,  இக்கட்டுரையின்  நோக்கம்,  ஒரு  நவீன  அறிவுப்  பொருளாதாரத்தில்  சீனாவின்  அறிவியல்  மற்றும்  தொழில்நுட்ப  முன்னேற்றங்களுக்கு  இரண்டு  அடிப்படைக்  கல்விக்  கொள்கைகள் எவ்வாறு  உதவுகின்றன  என்பதைக்  காட்டுவது  மட்டுமே.

இந்த கொள்கைகள்  மற்ற  நாடுகளிலும்  பயன்படுத்தப்பட்டு,  கொள்கை  வகுப்பாளர்கள்,  அறிஞர்கள்  மற்றும்  மாணவர்களுக்குப்  பயனளிக்கும்  என்று  நாங்கள்  நம்புகிறோம்.

கட்டுரையாளர்கள்:

பீட்டர் யோங்கி கு ( உதவிப் பேராசிரியர், மொழியியல் மற்றும் பயன்பாட்டு மொழி ஆய்வுகள் பள்ளி, டெ ஹெரெங்கா வாகா — வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகம்)

ஸ்டீபன் டாப்சன் (பேராசிரியர் மற்றும் கல்வி மற்றும் கலைகளுக்கான டீன், மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)

The Conversation இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்: த. பெருமாள்ராஜ்

மூலக் கட்டுரை இணைப்பு: https://theconversation.com/what-makes-chinese-students-so-successful-by-international-standards-238325


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. mohan

    அருமை.. இன்னும் எழுதுங்கள்! உயருங்கள்! வாழ்த்துகள்!!

  2. செல்வகுமார். மீ

    கல்வி கொள்கை குறித்த வித்தியாசமான ஒரு பார்வை கோணத்தை எனக்கு இக்கட்டுரை வழங்கியுள்ளது.
    நன்றி.👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *