ஒருவர் மற்றவரிடமிருந்து எதைக் கற்றுக்கொள்ளக் கூடாது? -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)

 

ஆகஸ்ட் 7 அன்று, இந்தியா, பிரேசில், இஸ்ரேல், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளின் அயல்துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டம், அனைத்துத் தரநிர்ணயங்களின்படியும், மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இந்திய அயல்துறை அமைச்சர், ஜெய்சங்கர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் கலந்தாலோசனை, கொரோனோ வைரஸ் தொற்றுக்கு எதிரான சவால் குறித்து தொடர்ந்தது,” என்றும்  “ஒருவர் மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்வது எப்போதுமே நன்று,” என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், கூட்டத்தில் கலந்து  கொண்டவர்களின் சேர்மானம் மற்றும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகள் எண்ணற்ற வினாக்களை எழுப்பியிருக்கின்றன.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிப்பது தொடர்பாகத் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் இக்கூட்டத்தின் நிகழ்ச்சிநிரல் என்பது உண்மைதானா என்பதை இந்த நாடுகளின் வரிசையைப் பார்த்தாலே விவரிக்கமுடியாதவிதத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. இந்த நாடுகளில் தென் கொரியா மட்டும்தான் கொரோனா வைரஸ் தொற்றை சமாளித்ததில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. மற்ற நாடுகள் அனைத்தும் இந்த விஷயத்தில் எந்த விதத்திலும் இதுதொடர்பாக சிறப்பான முறையில் எதையும் செய்திடவில்லை. உண்மையில், அமெரிக்காவும், பிரேசிலும் கொரோனா வைரஸ் தொற்றை சமாளித்ததில் மிக மோசமானமுறையில் நடந்துகொண்ட நாடுகள் என எடுத்துக் காட்டக்கூடிய நாடுகளாகும்.

ஜெய்சங்கருடன் சேர்ந்து அயல்துறை அமைச்சர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது இந்திய அரசாங்கம் அல்ல. இதில் யார் யார் கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானித்தது, அமெரிக்க அயல்துறை அமைச்சர் மைக் போம்பியோ. இதில் பங்கேற்ற நாடுகளில் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் அமெரிக்காவின் நான்கு நாடுகள் கூட்டணியில் உள்ள நாடுகளாகும். இஸ்ரேலும் தென்கொரியாவும் அமெரிக்காவின் நட்பு நாடுகளாகும். பிரேசிலின் ஜனாதிபதி தென் அமெரிக்காவில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு மிகவும் நெருங்கிய கூட்டாளியும், சித்தாந்தரீதியில் மிகவும் நெருங்கிய நண்பனுமாவார்.

இக்கூட்டத்திற்கு முதல்நாள் ஜெய்சங்கரும், போம்பியோவும் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலைக் கவனித்தால் இந்தக் கூட்டத்தின் சேர்மானமும் குறிக்கோளும் மிகவும் தெளிவான ஒன்று என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். அமெரிக்க அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் கூற்றின்படி, கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கான முயற்சிகள், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நிலைமைகள், நான்கு நாடுகள் கூட்டணி உட்பட சர்வதேச பிரச்சனைகளில் பன்னாட்டு மற்றும் இருநாட்டு ஒத்துழைப்புகளை விவாதிப்பது என்பதேயாகும்.

எனவே, இவ்வாறாக இந்தக் கூட்டம், அமெரிக்காவால் தன்னுடைய நெருங்கிய நட்புநாடுகள் மற்றும் கூட்டாளி நாடுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். இந்தோ-பசிபிக் போர்த்தந்திரம் மற்றும் நான்கு நாடுகள் கூட்டணி மூலமாக சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வது எப்படி என்பது குறித்து அதிக அளவில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. கோவிட்-19 சவால்கள் மீதான விவாதம் என்பது வெறும் சால்ஜாப்பு. ஏனெனில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை சமாளிப்பது தொடர்பாக இந்தியா, அமெரிக்காவிடமிருந்தும் பிரேசிலிடமிருந்தும் என்ன கற்றுக்கொள்ள முடியும்? இந்த இரு நாடுகளுமே ஒட்டு மொத்த கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதத்தைப் பெற்றிருக்கின்றன. உலகில் இறந்தவர்களில் 36 சதவீதத்தினர் இவ்விரு நாடுகளையும் சேர்ந்தவர்களாவார்கள் என்ற எதார்த்த நிலை இருக்கும்போது, இந்தியா இவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்?  அமெரிக்காவில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை ஜனாதிபதி டிரம்ப் கையாண்டவிதம் மிகவும் விநோதமானதும், அவமானகரமானதுமாகும். கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக, கிருமிநாசினியைக் குடிக்கப் பரிந்துரைத்ததன்மூலம் அமெரிக்கா பொது சுகாதாரத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக இருந்ததை அது மறுக்கிறது. அமெரிக்காவில் இதனால் ஏற்பட்டுள்ள பேரழிவு, உலகம் முழுவதும் திகிலுடனும், பரிதாபத்துடனும் பார்க்கப்படுகிறது.

பில் கேட்ஸ் சமீபத்தில் அமெரிக்கா, கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சோதனைகளை மேம்படுத்தாததற்காக மிகவும் புலம்பலுடன், “நீங்கள் உலகில் எந்த நாடும் செய்யாதவிதத்தில் தேவையற்றதெற்கெல்லாம் பல பில்லியன் டாலர்கள் செலவு செய்து கொண்டிருக்கிறீர்கள். … எந்தவொரு நாடும் இவ்வளவு பைத்தியக்காரத்தனமாக சோதனைகளைச் செய்யாது,”  என்று கூறியிருக்கிறார்.

போல்சனாரோ, பிரேசிலில் அவரது அமெரிக்காவின் குருவையும் மிஞ்சிவிட்டார். கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று என்பது “சற்றே சளி பிடிப்பதைத்” தவிர வேறல்ல என்று ஒதுக்கித்தள்ளிவிட்டு, டிரம்ப் கூறியதைப்போன்று இந்த நோயைக் குணப்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுவின் (hydroxychloroquine (HCQ)) என்பதே சர்வரோக நிவாரணி என்று கூறினார். இந்த  ஹைட்ராக்சிகுளோரோகுவின் ஒரு மலேரியா எதிர்ப்பு மருந்து மட்டுமேயாகும். இது கோவிட்-19 தொற்றைக் குணப்படுத்தாது என்பது மட்டுமல்ல, பரிசோதனை அடிப்படையில் இதனை கோவிட்-19 தொற்றாளர்களுக்கு அளித்தபோது இது தீய விளைவுகளை ஏற்படுத்திய ஒன்றுமாகும்.

எனினும், அமெரிக்காவும் பிரேசிலும் மேற்படி ஹைட்ராக்சிகுளோரோகுவின் மருந்தைத் தங்கள் நாடுகளுக்கு அனுப்பிவைக்குமாறு இந்தியாவை அணுகின. ஏப்ரலில், டிரம்ப் இம்மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா ஏற்படுத்தியிருக்கிற தடையைத் தளர்த்திக்கொள்ள வேண்டும் என்று கோரியதுடன், தங்கள் நாட்டுக்கு அதனை அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கோரினார். அவ்வாறு செய்யத்தவறினால், பழிவாங்கல்நடவடிக்கை இருக்கும் என்பதுபோலவும் தன் நெருங்கிய நட்பு நாடான இந்தியாவை எச்சரித்தார். பிரதமர் மோடியும், உடனடியாக அதற்கு அடிபணிந்து, மேற்படி மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திட அனுமதித்தார். இதனைத் தொடர்ந்து போல்சனாரோவும் தங்கள் நாட்டுக்கும் இம்மருந்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று மோடியைக் கேட்டுக்கொண்டார். போல்சனாரோ தன் கடிதத்தில் ராமாயணத்தைக் குறிப்பிட்டிருந்தார். மோடியும் அதற்கு இணங்கினார். பிரேசிலுக்கு இந்த மருந்தைத் தயாரிப்பதற்காக  530 கிலோ கிராம் மூலப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் வர்த்தகரீதியாக 50 லட்சம் மாத்திரைகளும் அனுப்பி வைக்கப்பட்டன.

அமெரிக்காவும், பிரேசிலும் ஹைட்ராக்சிகுளோரோகுவின் மருந்தை, நோய்த்தடுப்பு மருந்தாக உட்கொள்ள வேண்டும் என்று உந்தித்தள்ளின. உண்மையில் இது, கோவிட்-19 தொற்றுக்கு முரணானது என்று சாட்சியங்கள் தெரிவித்தபோதிலும் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. டிரம்ப் தானே இம்மருந்தை 14 நாட்களுக்கு உட்கொண்டதாகப் பீற்றிக்கொண்டார். போல்சனாரோவும் தொலைக்காட்சியில் ஒரு மாத்திரையைச் சப்பிக்கொண்டிருப்பதுபோன்று காட்டியிருந்தார். அதன்பிறகும் கொரோனா வைரஸ் தொற்றால் அவர் பாதிக்கப்பட்டபோதுகூட, இந்த மருந்தைத் தூக்கிப்பிடிப்பதை அவர் தொடர்ந்தார். மோடியும் இதனை ஒரு நோய்த்தடுப்பு மருந்தாக உட்கொண்டாரா என்பது நமக்குத் தெரியாது.

அமெரிக்காவிலும், பிரேசிலிலும் இத்தகைய போலி மருத்துவம் எத்தனை ஆயிரம் உயிர்களைப் பாதித்திருக்கிறது என்பது குறித்து இன்னமும் மதிப்பிடப்படவில்லை. ஆயினும் அறிவியலுக்கு எதிரான பகுத்தறிவற்ற சிந்தனையாளர்களான இம்மூன்று எதேச்சாதிகாரத் தலைவர்களாலும் உலகில் இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளான பெரிய நாடுகளின் வரிசைகளில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் முறையே முன்னுக்கு வந்திருக்கின்றன.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச அளவில் தலைமை தாங்குவதற்கு அமெரிக்காவை, மோடி அரசாங்கம் பார்ப்பது என்பது அதன் அடிமை நிலையைப் பிரதிபலிப்பதாகவும் உண்மையில் அதிர்சசியளிப்பதாகவும் இருக்கிறது.

கோவிட்-19 குறித்து இதர நாடுகளின் அனுபவங்களிலிருந்து படிப்பினையைப் பெற வேண்டும் என்பதில் உண்மையிலேயே மோடி அரசாங்கத்திற்கு அக்கறை இருக்குமானால் அது, ஐரோப்பாவில் இந்நோயைக் கையாண்டதில் சிறந்தமுறையில் செயல்பட்டுள்ள ஜெர்மனி அரசாங்கத்துடன் கூட்டத்தை நடத்தி இருக்க முடியும். அது, ஆசியா கண்டத்தில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ள வியட்நாமுடன் விவாதித்திருக்க முடியும். கல்வான் மோதல் நடைபெறுவதற்கு முன்பு, அது கொரோனா வைரஸ் தொற்றை மிக விரிவானஅளவில் அனுபவத்துடனும் அறிவுடனும் வெற்றிகரமாக சமாளித்த சீனாவுடன் பேசியிருக்க முடியும். ஆனாலும், லடாக்கில் நிலைப்பாடு மேற்கொள்வதற்கு முன்பே, ஜெய்சங்கர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகம் ஒன்றுதிரள்வதை சிதைத்திட அனைத்தையும் செய்துகொண்டிருக்கும் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும், போம்பியோவுடன் பேரம் பேசத்துவங்கிவிட்டார். அமெரிக்கா, உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வெளியேறியிருப்பது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

மோடி அரசாங்கம், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை எப்படி சமாளிப்பது என்பது குறித்துக் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னமும் ஏராளமாக இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகிறவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டிருப்பதால் இப்போது உலகில் மிக  உச்சத்தில் உள்ள நாடாக இந்தியா மாறியிருக்கிறது. அதேபோன்றே நாள்தோறும் இறப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உண்மைநிலை இவ்வாறிருக்கையில் இதனைப் பூசி மெழுகி சுயதிருப்தி மனப்பான்மையுடன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு ஆளானவர்கள் விகிதம் குறைந்துவிட்டது என்றும், இதிலிருந்து மீண்டவர்கள் விகிதம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்றும் கூறிக்கொண்டிருப்பது, எந்தவிதத்திலும், இந்நோய்த்தொற்று தொடர்ந்து பரவுவதையோ மற்றும் அது ஏற்படுத்தும் பாதிப்புகளையோ குறைத்திடாது.

(ஆகஸ்ட் 12, 2020)