இன்று லெனின் (Vladimir Lenin) இருந்தால் என்ன செய்வார்? - ஆர். அருண்குமார், மத்திய செயலக உறுப்பினர் - CPIM (தமிழில்: ச. வீரமணி)

இன்று லெனின் இருந்தால் என்ன செய்வார்? – ஆர். அருண்குமார் (தமிழில்: ச. வீரமணி)

இன்று தோழர். லெனின் (Vladimir Lenin) இருந்தால் என்ன செய்வார்?

– ஆர். அருண்குமார்
மத்திய செயலக உறுப்பினர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

(தமிழில்: ச. வீரமணி)

‘இப்படி இருந்திருக்குமானால்’ (ifs), மற்றும் ‘ஆனால்’ (but) போன்ற வார்த்தைகளுக்கு, வரலாற்றில் இடம் இல்லை என்று நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும்கூட, இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அவர் இருந்திருந்தால் எப்படி கையாண்டிருப்பார் என்று பல சமயங்களில் நம்மை நாம் கேட்டுக்கொள்வோம். இவ்வாறு சில கற்பனையான கேள்விகளைத் தொகுத்து இவற்றுக்கு இன்று மார்க்ஸ் இருந்திருந்தால் என்ன செய்வார்? (‘What would Marx Do?) என்று ஒரு புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது. இன்று நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மாபெரும் அரசியல் சிந்தனையாளர்கள் இருந்தால் எப்படித் தீர்வுகாண்பார்கள் (‘How the Greatest Political Theorists would solve your everyday problems’) என்று தலைப்பிட்டுள்ள ஒரு புத்தகத்தின் ஒரு பகுதியாக மேற்படி புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனையொட்டி, இப்போது நாம் லெனின் நினைவு நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிற நேரத்தில், “இப்போதைய உலகத்தில் பல நாடுகள் வலதுசாரி அரசியல் பக்கம் சாய்ந்திருப்பதைப் பார்த்தார் என்றால் லெனின் என்ன செய்வார்?” என்று நாம் கேட்கக் கூடும்.

உலகின் பல நாடுகளில் பல்வேறு வடிவங்களிலும் உள்ள வலதுசாரி சக்திகள் தேர்தல்களில் வெற்றிகளும் பெற்றிருக்கின்றன அல்லது தோல்விகளும் அடைந்திருக்கின்றன என்ற போதிலும் ஓர் உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இன்றையதினம் உலகில் பல நாடுகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு அரசியல் செல்வாக்குடன் இருப்பதைப் பார்க்க முடியும். வலதுசாரி சக்திகளின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால், 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில் டிரம்ப் தோற்கடிக்கப் பட்டிருந்திருக்கலாம். இதேபோன்றே பிரேசிலில் போல்சனாரோ, ஜெர்மனியில் அதிதீவிர வலதுசாரி கட்சியான ஆல்டர்நேட் ஃபார் டச்லேண்ட் பார்ட்டி (Alternate for Deutschland Party (AfD), பிரான்சில் மேரி லீ பென் (Marie Le Pen) அல்லது நம் நாட்டில் பாஜக போன்றவைகளும் வெற்றி பெற்றிருக்கின்றன. இதைத்தான் வலதுசாரி அரசியல் பக்கம் சாய்மானம் என்று அழைக்கிறோம்.

இத்தகைய இன்றைய சூழ்நிலைமைக்கு மார்க்சின் சீடர்களில் முதன்மையானவரும், மகத்தான போர்த்தந்திரவாதியும் (strategist), நடைமுறை உத்தி விற்பன்னருமான (tactician) லெனின் எப்படி எதிர்வினையாற்றி இருப்பார்?

இதற்கெல்லாம் சாத்தியம் இல்லை என்கிற அபத்தமான கேள்வியை ஒதுக்கி வைத்துவிட்டு, லெனினின் படைப்புகள் மற்றும் அவரது வாழ்நாளில் பல்வேறு சூழ்நிலைகளுக்கு அவர் எதிர்வினையாற்றிய விதம் ஆகியவற்றிலிருந்து ஒரு பதிலைச் சிந்தித்துப் பார்ப்பதில் எந்தத் தீங்கும் இல்லை.

முதலாவதாக, லெனின் (Vladimir Lenin) அரசியல் நிலைமையில் திடீரென்று திரும்புவது குறித்து எந்த சமயத்திலும் நம்பிக்கையிழந்ததோ, ஊக்கமிழந்ததோ கிடையாது. லெனினின் வாழ்க்கையில் எண்ணற்ற நிகழ்வுகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறமுடியும். ரஷ்யன் சோசலிஸ்ட் டெமாக்ரடிக் லேபர் பார்ட்டி (RSDLP-Russian Socialist Democratic Labour Party) என்னும் கட்சியை நிறுவுவதில் அவர் ஒரு கருவியாக இருந்தபோதும், எண்ணற்ற பின்னடைவுகளை எதிர்கொண்டார். கட்சி அநேகமாக ஒரு சட்டவிரோதமான கட்சியாகவே செயல்பட்டது. அதன் தலைவர்களில் பலர் தலைமறைவாக அல்லது நாட்டிற்கு வெளியே செயல்பட்டார்கள். ஜனநாயக உரிமைகளுக்கான சாயலையே பார்க்க முடியாது. இவை அனைத்தும் அந்தக் காலகட்டத்தின் நிலைமைகள் ஆகும். இன்று நாம் பார்த்துக்கொண்டிருப்பதைவிட இவை நிச்சயமாக வித்தியாசமானவை அல்ல.

கம்யூனிஸ்ட் இலக்கியங்கள் விற்பதற்கோ, விநியோகம் செய்யப்படவதற்கோ அனுமதிக்கப் படாதபோது, லெனினும் அவருடைய தோழர்களும் வாளாவிருந்திடவில்லை. மாறாக முறையான வாசகர் வட்டங்களை நடத்தி அவற்றைச் சுற்றுக்கு விடுவதை உத்தரவாதப்படுத்தினார்கள். பத்திரிகைகள் வெளியிட அனுமதிக்கப்படாத சமயத்தில், அவற்றை ரகசியமாக அச்சடித்ததுமட்டுமல்லாமல், எவ்விதச் சுணக்கமுமின்றி தவறாமல் விநியோகமும் செய்தார்கள். வெளிநாடுகளில் பத்திரிகைகளை அச்சடித்து, ரஷ்யாவுக்குள் கடத்தி வந்து விநியோகம் செய்தார்கள். இவ்வாறு மக்கள் மத்தியில் சரியான மார்க்சிய சித்தாந்தத்தை உத்தரவாதப்படுத்தினார்கள். வியாக்கியானம் செய்ய வேண்டுமென்பதற்காகவே வியாக்கியானம் செய்யவில்லை. எதார்த்த நிலைமைகளுக்கேற்ப மக்கள் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவற்றைச் செய்தார்கள். இதனால்தான் தோழர் லெனின், கட்சிப் பத்திரிகையை ஒரு கூட்டு கிளர்ச்சியாளன் என்றும், ஒரு கூட்டு பிரச்சாரகன் என்றும், ஒரு கூட்டு அமைப்பாளன் என்றும் கூறினார். அது கேள்விகளை எழுப்பும், நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும், அனைத்துக் கட்டங்களிலும் அவற்றை முன்னெடுத்துச் செல்ல வழிகாட்டும்.

தோழர் லெனின் அடிக்கடி கூறுவதுபோல, பொறுமை என்பது ஒரு கம்யூனிஸ்டுக்கு நல்லொழுக்கம் மட்டுமல்ல, அவசியமான ஒன்றுமாகும். ஒரு பாதகமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, ஒருவர் நம்பிக்கையிழந்து, விரக்தியடையத் தேவையில்லை. மக்கள் மத்தியில் பொறுமையுடன் வேலை செய்வது எப்படி என்பதையும், அவர்களிடம் பிரச்சனைகளைக் கூறி அவர்களை எப்படி கிளர்ச்சியாளர்களாக உருவாக்குவது என்பதையும், அவர்களிடம் முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து, கூட்டாகச் செயல்வடுத்துவது எப்படி என்பதையும், தோழர் லெனினிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நிலைமைகள், புற நிலைமைகள், தாமாகவே மாறாது, அவை மாற்றப்பட வேண்டியது அவசியம் என்பதை தோழர் லெனின் (Vladimir Lenin) நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

ஒரு பின்னடைவு ஏற்பட்டுவிட்டால் உடனே விரக்தியடைந்தவனாக மாறிடக்கூடாது என்று தோழர் லெனின் வாழ்க்கை நமக்குப் போதித்திருக்கிறது. ஜூலை மாதத்தில் ‘சோசலிஸ்ட் புரட்சியை நோக்கி முன்னேறுக’ என்று போல்ஷ்விக்குகளுக்கு அறைகூவல் விடுத்த லெனினின் ‘ஏப்ரல் கொள்கை’ (April Thesis) வெளியான இரண்டு மாதங்களுக்குப்பின்னர், ரஷ்யாவில் ஓர் எதிர்ப்புரட்சி நிலைமை உருவானது. தோழர் லெனினே கூட தன் வாழ்நாளில் சோசலிஸ்ட் புரட்சியைப் பார்ப்பதற்கான சாத்தியக்கூறு இருக்குமா என்று சந்தேகம் கொண்டார். ஆனாலும், நிலைமையை மாற்றியமைத்திடுவதற்காக வேலை செய்வதற்கு அந்த சந்தேகம் அவரைத் தடுத்திடவில்லை. அவர் மிகவும் கடினமாக உழைத்தார். மீண்டும் அவரை நாடு கடத்தும் நிலை ஏற்பட்டபோதும் அவர் கடினமாக உழைத்தார். சோசலிச லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புக்காக விழிப்புடன் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவந்தார். இவ்வாறு அவர் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொண்டுவந்ததன் காரணமாக, அத்தகையதொரு வாய்ப்பு வந்தபோது, தோழர் லெனினும் போல்ஷ்விக் கட்சியும் அதனை உறுதியாகப் பற்றிக் கொண்டன. அடுத்த மூன்று மாதங்களில், அக்டோபரில், அவர் சக்திகள் அனைத்தையும் திரட்டி, மனிதகுல வரலாற்றில் முதல் சோசலிஸ்ட் புரட்சியின் வெற்றியை உத்தரவாதப் படுத்தினார்.

நாம் மற்றும் நம் வேலை

இது நமக்கு ஒரு முக்கியமான படிப்பினையைப் போதிக்கிறது. மக்கள் மீதான நம்பிக்கையை எப்போதும் கைவிடக்கூடாது. நாம் விடாமுயற்சியுடன் செயல்பட்டால், நிச்சயமாக எதிர்காலம் நமதேயாகும். இங்கே “நாம்” மற்றும் “நம் வேலை” என்கிற இரு விஷயங்கள் முக்கியமானவைகளாகும். “நம் வேலை” என்று நாம் சொல்லும்போது, மக்கள் மத்தியில் புரட்சிகர உணர்வை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் கிளர்ச்சி, பிரச்சாரம் மற்றும் போராட்டம் ஆகியவற்றை ஒன்றிணைத்தலாகும். “நாம்” என்பது நம் கட்சியைக் குறிக்கிறது. அதாவது சமூகத்தை புரட்சிகரமான முறையில் மாற்றவேண்டும் என்கிற பொது நோக்கத்துடன் மக்களை ஒருங்கிணைக்கின்ற நம் கட்சியைக் குறிக்கிறது.

ஆகையால், லெனினைப் பொருத்தவரை, கட்சியும் அதன் ஸ்தாபனங்களும் மிகவும் முக்கியமாகும். ஆர்எஸ்டிஎல்பி எனப்படும் ரஷ்யன் சோசலிஸ்ட் டெமாக்ரடிக் லேபர் பார்ட்டியின் புரட்சிகர குணாம்சத்தைத் தக்க வைத்துக்கொள்ள அவர் கடுமையாகப் போராடினார். அவர் போல்ஷ்விக்குகளை தனி வார்ப்பாக உருவாக்கினார். அந்த சமயத்தில் உதித்த அனைத்து அரசியல் நிலைமைகளின் ஏற்ற இறக்கங்களையும் எதிர்கொள்ள அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். பல புரட்சிகரமான சூழ்நிலைகள் இருக்கும், ஆனால் அத்தகைய சூழ்நிலையைப் பயன்படுத்தி ஒரு புரட்சி வெற்றியடைவதை உறுதி செய்வது கட்சியை சார்ந்தது.

“பொதுவாக, புரட்சிகர சூழ்நிலையின் அறிகுறிகள் என்ன?” என்று தோழர் லெனினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: “பின்வரும் மூன்று முக்கிய அறிகுறிகளை நாம் சுட்டிக்காட்டினால் நிச்சயமாக நாம் தவறாக நினைக்க மாட்டோம்”: (1) ஆளும் வர்க்கங்கங்களுக்கு எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஆட்சி செய்வது சாத்தியம் இல்லை என்ற நிலை வரும்போது, (2) ‘மேல்தட்டு வர்க்கங்களுக்கு’ மத்தியில் ஏதேனும் ஒரு வடிவத்தில் நெருக்கடி வரும்போது, ஆளும் வர்க்கத்தின் கொள்கையில் நெருக்கடி வரும்போது, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் அதிருப்தியும் சீற்றமும் வெடித்து பிளவுக்கு இட்டுச்செல்லக்கூடிய அளவிற்கு ஆளும் வர்க்கத்தின் கொள்கையில் நெருக்கடி வரும்போது. ஒரு புரட்சி நடைபெறுவதற்கு, ‘அடித்தட்டு வர்க்கங்கள்’(‘the lower classes) பழைய விதத்தில் தொடர்ந்து வாழ்வது போதுமானதில்லை என்று கருதி அவ்வாறு வாழ விரும்பாத போதும், அதேபோன்று ‘மேல்தட்டு வர்க்கங்களும்’ பழைய பாணியிலேயே வாழ முடியவில்லை எனக் கருதும்போது; (2) ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் துன்ப துயரங்கள் வழக்கத்தை மீறி அதிகரித்திருக்கும்போது; (3) மேற்படி காரணங்களின் விளைவாக, சமாதான நேரத்தில் புகார் இல்லாமல் தங்களைக் கொள்ளையடிக்க அனுமதிக்கும் வெகுஜனங்கள் மத்தியில் கணிசமான அளவிற்கு செயல்பாடுகள் அதிகரித்திருக்கும்போது.

ஒவ்வொரு புரட்சிகரமான சூழ்நிலையும் புரட்சிக்கு வழிவகுக்காது என்று லெனின் (Vladimir Lenin) கூறுகிறார். “ஒவ்வொரு புரட்சிகரமான சூழ்நிலையும் ஒரு புரட்சியை உண்டாக்குவதில்லை. புறநிலை மாற்றங்கள் அகநிலை மாற்றத்துடன் இணையும்போதுதான், அதாவது, புரட்சிகர வர்க்கம் பழைய அரசாங்கத்தைத் தூக்கி எறிய புரட்சிகரமான வெகுஜன நடவடிக்கையை வலுவாக எடுக்கும் திறமை பெறும்போதுதான் புரட்சி எழும்.”

லெனின் அளித்த புரட்சிகரமான சூழ்நிலைக்கு மேற்கூறிய வரையறையின்படி, ஒரு புரட்சிகரமான சூழ்நிலை உருவாக, ‘நாம்’ செய்ய வேண்டிய ‘வேலை’ ஏராளம். ஒரு புரட்சிகரமான சூழ்நிலை உருவாகும் வரை நாம் காத்திருக்க முடியாது, அல்லது ஒரு புரட்சிகர சூழ்நிலையை உருவாக்க முடியாது. இது ஓர் இயங்கியல் செயல்முறையாகும். ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்குபவர்கள் ஆகிய இருவரின் செயல்களும் ஒரு புரட்சிகர சூழ்நிலையின் பரிணாமத்திற்கு இட்டுச் செல்லும். அத்தகையதொரு நிலை வரும்போது, கட்சியின் பாத்திரம், புரட்சி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற நிலையில், மேலும் முக்கியத்துவம் உடையதாக மாறுகிறது. அதன்காரணமாகத்தான் தோழர் லெனினுக்கு கட்சியும் அதன் ஸ்தாபனக் கட்டமைப்பும் மிகவும் முக்கியமானதாக மாறுகிறது.

தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்று தோழர் லெனின் கூறுகிறார்? (1) அதன் சித்தாந்தம் மற்றும் ஸ்தாபன ஒற்றுமை வலுவாக இருக்க வேண்டும். (2) அனைத்துவிதமான சந்தர்ப்பவாதங்களுக்கும் இடம் கொடுக்கக்கூடாது. (3) கோட்பாட்டிற்கு ஆக்கபூர்வமான அணுகுமுறை வேண்டும். (4) கட்சி ஒழுக்கம் கண்டிப்பாக இருந்திட வேண்டும். (5) வெகுஜன மக்களுடன் நெருங்கிய உறவுகளைப் பேண வேண்டும். (6) தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரம் மற்றும் நடைமுறை உத்திகள், கூட்டு செயல்பாடுகள் மூலமாக சரியானதொரு அரசியல் நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். இன்றையதினம் நமக்கு சவாலாக இருக்கும் சூழ்நிலையை சமாளிக்க, தோழர் லெனின் (Vladimir Lenin) அத்தகைய கட்சியை கட்டியெழுப்ப தன் முயற்சிகளை ஒருமுகப்படுத்தி இருப்பார்.

உலகில் பல நாடுகளில் மிகவும் மோசமான நிலைமைகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. உக்ரேனில் உக்ரேன் கம்யூனிஸ் கட்சியின் அலுவலகங்கள், அதன் மத்தியக்குழு அலுவலகம் உட்பட, தாக்கப்பட்டன. 1990க்கு முன் சோசலிச நாடுகளாக இருந்த போலந்து, பல்கேரியா, ருமேனியா போன்று கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தடை செய்யப்பட்டன. கம்யூனிஸ்ட் அடையாளங்களைக் காட்டுவதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் அங்கெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிகள் ரகசியமாகவும், உறுதியாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

துருக்கியில், எர்டோகான், நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை மாற்றிக்கொண்டிருக்கிறார், இஸ்லாமியமயமாக்குவதை நோக்கி அதனை உந்தித் தள்ளிக்கொண்டிருக்கிறார். ஜனநாயக உரிமைகள் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. நாடாளுமன்ற அமைப்பு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமைப்பாக மாறி இருக்கிறது. அங்கேயும்கூட, கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது, உறுதியாக குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் வளர்ந்துகொண்டுமிருக்கிறது.

கிரீஸிலும், போர்ச்சுக்கல்லிலும் 1970 வரையிலும் ராணுவ பாசிஸ்ட் சர்வாதிகாரிகள் ஆட்சி புரிந்தபோதிலும், அங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு வலுவான சக்தியாக இன்றுவரை செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. நம் அண்டை நாடான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசிலும்கூட, ராணுவத்தாலும், ராணுவத்தின் ஆதரவுடன் உயிர்பிழைத்திருக்கும் அரசாங்கத்தாலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதும், அவற்றையெல்லாம் எதிர்கொண்டு சமாளித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவை அனைத்தும் சாத்தியம். ஏனெனில், லெனின் இறந்தபோது அவருடைய கல்லறையில் ஆற்றிய உரையின்போது தோழர் ஸ்டாலின் கூறியதுபோன்று, “கம்யூனிஸ்ட்டுகளாகிய நாம் தனித் தன்மை கொண்டவர்கள். தனி வார்ப்பால் ஆனவர்கள். நாம் தோழர் லெனினின் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், மாபெரும் தொழிலாளர் வர்க்க போர்த்தந்திரவாதியின் ராணுவத்தின் அங்கமாவோம். தோழர் லெனின் என்னும் தலைவரால் நிறுவப்பட்ட கட்சியில் உறுப்பினராக இருப்பது என்பதைவிட உயர்ந்த அந்தஸ்து வேறு எதுவும் இல்லை. இத்தகைய கட்சியில் எல்லோரும் உறுப்பினராக சேர்ந்துவிட முடியாது. தொழிலாளர் வர்க்கத்தின் பிள்ளைகளுடைய கட்சியாகும் இது. தேவை மற்றும் போராட்டத்தை நடத்துபவர்களின் பிள்ளைகளுடைய கட்சியாகும் இது. நம்பமுடியாத தனி உரிமை மற்றும் வீர முயற்சியின் பிள்ளைகளுடைய கட்சி இது. இவர்கள்தான் இந்தக் கட்சியில் உறுப்பினர்களாக இருக்க முடியும். அதனால்தான், லெனினிஸ்டுகள் கட்சி என்றும், கம்யூனிஸ்ட்டுகள் கட்சி என்றும், தொழிலாளர் வர்க்கத்தின் கட்சி என்றும் இது அழைக்கப்படுகிறது.”

“கட்சி உறுப்பினர் என்ற மகத்தான பட்டத்தின் தூய்மையை உயர்த்திப்பிடிக்கவும், தூய்மையைக் காக்கவும் தோழர் லெனின் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். தோழர் லெனின் (Vladimir Lenin) அவர்களே, நாங்கள் உங்கள் விருப்பத்தை உளப்பூர்வமாக நிறைவேற்றுவோம்.!”

தோழர் ஸ்டாலின் தன் உத்வேகமான உரையை மேலும் தொடர்கிறார்: “தோழர் லெனின் இன்று நம்மைவிட்டுப் பிரிந்து சென்றுள்ளார். தோழர் லெனின் அவர்களே, நம் கட்சியின் ஒற்றுமையை கண்ணின் மணிபோல் காக்க வேண்டும் என்று நீங்கள் கட்டளையிட்டிருக்கிறீர்கள். இந்தக் கட்டளையை நாங்கள் உளப்பூர்வமாக நிறைவேற்றுவோம் என்று சபதம் செய்கிறோம்..!”

“தோழர் லெனின், நம்மைவிட்டுப் பிரிந்துள்ள தோழர் லெனின், நாம் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கூட்டணியை முழு வலிமையுடன் வலுப்படுத்தவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தியுள்ளார். தோழர் லெனின் அவர்களே, உங்கள் கட்டளையை நாங்கள் உளப்பூர்வமாகவும் மரியாதையுடனும் நிறைவேற்றுவோம்.”

தோழர் லெனின் (Vladimir Lenin) நினைவு நூற்றாண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில் நாமும் இந்த சபதத்தை எடுத்துக்கொள்வது அவசியமாகும்.

பெர்டோல்ட் பிரெக்ட், குயான்-புலாக்கின் கம்பள நெசவாளர்கள் லெனினை எவ்வாறு கௌரவித்தார்கள் என்பதைப் பற்றி ஒரு கவிதை எழுதினார். “தோழர் லெனினை கவுரவித்தது மூலம் அவர், தங்களுக்குத் தாங்களே உதவி செய்துகொண்டார்கள். அதன்மூலம் தோழர் லெனினை அவர்கள் மிகச் சரியாகப் புரிந்துகொண்டார்கள்.” அவர்கள், லெனினுக்கு சிலை வைப்பதற்குப் பதிலாக, தங்களுக்கு ஜுரத்தை ஏற்படுத்தக்கூடிய கொசுக்களை ஒழித்துக்கட்டுவதற்காக வேலை செய்தார்கள்.

ப்ரெக்ட் பேசும் மரியாதை இது. இதைநாமும் பின்பற்ற வேண்டும். தோழர் லெனினின் சிலைகள்/புகைப்படங்களுக்கு முன் மரியாதை செலுத்துவது மட்டுமல்லாமல், நாம் மக்களுக்காகவும் உழைக்க வேண்டும்.

தோழர் லெனினை கவுரவப்படுத்தி ப்ரெக்ட் எழுதிய கவிதையின் சாரம் வருமாறு:

‘பலவீனமானவன் பேராடுவதில்லை,

ஓரளவு பலமானவன்

ஒருவேளை

ஒரு மணிநேரம் போராடலாம்,

சற்றே அதிகம் பலம் பொருந்தியவன்

சில ஆண்டுகள் போராடலாம்,

ஆனால்

எல்லோரையும் விட வலுவானவன்

வாழ்நாள் முழுக்க போராடுவது

தவிர்க்க முடியாதது.

 

சுரண்டல் அதிகரிக்கும்போது

பலர் சோர்வடைவர்,

ஆனால் அவன் தைரியம் வளரும்.

 

அதிகாரத்தை கைப்பற்றவோ

ஒரு சில பைசா கூலிக்காகவோ அல்லது

தேயிலை வடி நீருக்காவோ

அவன் போராடுவான்,

அவனது போராட்டத்தை

அவனே திரட்டுவான்

உன் ஆதி என்ன,

உன் மூலம் என்ன என

கேள்வி கேட்பான்

செல்வத்தை நோக்கி.

உங்கள் உழைப்பு யாருக்கானது

என

உழைப்பாளர்களின்

எண்ணங்களை

கிளறுவான் .

எப்பொழுதெல்லாம்

பேச்சு அடக்கப்படுகிறதோ,

அப்பொழுதெல்லாம்

அவன் பேசுவான்

எப்பொழுதெல்லாம்

ஒடுக்குமுறை நிகழ்கிறதோ

எப்பொழுதெல்லாம் விதியைப்பற்றி

பேச்சு எழுகிறதோ

அவற்றை அவற்றின்

சரியான பதத்தினால்

அவன் சாடுவான்.

அவன்தான் லெனின்.

அவனைப் போலவே

நாமும் இருப்போம்.

நமது கட்சியும் இருக்கட்டும்.

..



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *