அம்பேத்கரை அறிமுகப்படுத்தும் போது, ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து தலித்துகள் வெளியேறுவார்கள்: பன்வர் மேக்வன்ஷி, முன்னாள் கரசேவகர் – அபிமன்யு சந்திரா (தமிழில்: தா. சந்திரகுரு)

தலித் சமூகத்தைச் சேர்ந்த பன்வர் மேக்வன்ஷி, 1980களில் இளைஞனாக ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் சேர்ந்தார். ஹிந்து ராஷ்டிரா குறித்து அமைப்பிடம் இருந்த பார்வைக்கு தீவிரமாக அவர் ஆதரவளித்து வந்தார். இறுதியில் சக ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களிடமிருந்து சாதி பாகுபாட்டை எதிர்கொண்ட அவர், அந்த அமைப்பை விமர்சனரீதியாகப் பார்க்கத் தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்த தனது அனுபவங்களை ஹிந்தியில் எழுதப்பட்ட, நான் கரசேவகனாக இருந்தேன் (மெயின் ஏக் கர்சேவாக் தா – ஐ வாஸ் எ கரசேவக்) என்ற புத்தகத்தில் மேக்வன்ஷி வெளியிட்டார். இந்த ஆண்டு அந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘என்னால் ஹிந்துவாக இருக்க முடியாது: ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்த தலித்தின் கதை’ (ஐ குட் நாட் பி ஹிந்து: தி ஸ்டோரி ஆஃப் த தலித்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

இந்திய அரசியல் கருத்தியல்ரீதியாக வலதுபுறம் தன்னை உறுதியாக நிறுத்திக் கொண்டிருப்பதால், வலதுசாரி அமைப்புகளில் முன்னர் உறுப்பினர்களாக இருந்த சிலர் இடதுபுறமாக நகர்ந்துள்ளனர் – அல்லது குறைந்தபட்சம் வலப்பக்கத்திலிருந்து விலகி நிற்கிறார்கள். இன்னும் சிலர், குறிப்பாக வலதுசாரி சூழலில் இருந்து வந்தவர்கள், அதை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்பதோடு, அரசியல் வலதுசாரிகளின் மீது கடுமையான விமர்சனங்கள் கொண்டவர்களாகவும் மாறி விட்டனர். அத்தகையவர்களை இந்த நீரோட்டத்திற்கு எதிராக எது செல்ல வைக்கிறது? அவர்களுடைய முடிவுகளை எந்த மாதிரியான நிகழ்வுகள், சூழ்நிலைகள் மற்றும் பரிசீலனைகள் வடிவமைக்கின்றன? இந்த மாற்றங்கள் குறித்து தி கேரவன் வெளியிட்டு வருகின்ற கன்வெர்ஸ் லென்ஸ் என்ற தலைப்பில் தொடர்ச்சியான நேர்காணல்களை நடத்துவதன் மூலமாக, சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற அபிமன்யு சந்திரா ஆராய முற்படுகிறார். தந்தை காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ்சால் அவர் எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்பதையும், தலித் உறுப்பினர் ஒருவரை சங்கத்தை விட்டு வெளியேறத் தூண்டிய விஷயம் பற்றியும் மேக்வன்ஷியிடம் சந்திரா பேசினார்.

திருத்தி சுருக்கப்பட்ட நேர்காணல் 

அபிமன்யு சந்திரா: ராஜஸ்தானில் இருந்த உங்களுடைய குழந்தைப் பருவத்தைப் பற்றிச் சொல்ல முடியுமா? உங்கள் தந்தை நீண்ட காலமாக காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தார் என்று உங்கள் புத்தகத்தில் எழுதியிருக்கிறீர்கள். அந்தக் கட்சியை ஆதரிப்பதற்கு உங்கள் தந்தையிடம் இருந்த காரணங்கள் என்ன?

பன்வர் மேக்வன்ஷி: எனது குடும்பம் ஒரு கபீர் – பாந்தி குடும்பம் [15ஆம் நூற்றாண்டு கவிஞரைப் பின்பற்றுபவர்கள்]. அனைவருக்கும் இடம் அளிக்கின்ற சூழலைக் கொண்ட சூஃபிஸத்தின் பின்னணி இருந்தது. நமது அரசு நிலப்பிரபுத்துவ அரசாக இருந்து வந்தது. தலித்துகள் கொத்தடிமைகளாக இருக்கின்ற வகையில், நிலப்பிரபுத்துவம் மிகவும் வலுவாக இருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தலித்துகள் அடக்கப்பட்ட சமூகமாக இருந்து வருகின்றனர். இதையெல்லாம் என் தாத்தா பார்த்திருக்கிறார்.

எனது தந்தையைப் பொறுத்தவரை – ராஜஸ்தானில், அரசியல் மட்டத்தில், எங்களைப் போன்ற தலித்துகள் மீது அரசியல்ரீதியாக யாராவது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றால், அது காங்கிரஸ்தான். [சுதந்திர] இயக்கம் தோன்றிய போது, ​​ஹரிஜன்கள் மீதான காந்தியின் முயற்சிகள் தொடங்கின – அதில் சில விமர்சனத்திற்கும் உள்ளாகின – காங்கிரஸின் குரல் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக எழுந்த குரலாக இருந்தது. [ஹரிஜன்கள் என்பது பட்டியல் சாதியினரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்ற கேவலமான சொல்லாக, 2017ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது] அங்கிருந்துதான் எங்களுக்கான உரிமைகள் கிடைத்தன. என் தந்தையைப் பொறுத்தவரை, இன்றைக்கும் கூட, காங்கிரஸில் நிகழ்ந்திருக்கும் அனைத்து மாற்றங்களுக்குப் பிறகும், அது இன்னும் ‘காந்திஜியின் காங்கிரஸ்’ தான்.

C:\Users\Chandraguru\Pictures\Gandhi and Nehru.png

அந்தக் கால காங்கிரஸ், அதனுடைய சமூக சீர்திருத்தப் பணிகளால், எங்கள் மக்கள் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பாஜக கொடியை தலித் குடியிருப்பிற்குள் நான் முதன்முதலாகப் பார்த்தது 1995க்குப் பிறகுதான். தேர்தல் என்றாலே, அதன் பொருள் [காங்கிரஸ்] கை சின்னம் என்பதாகவே இருந்தது. இந்திரா காந்தி இறந்தபோது, ​​எங்கள் சொந்த கிராமத்தில் ஒருவர் இறந்து விட்டதைப் போலவே, எங்கள் கிராமம் முழுவதும் துக்கத்தில் ஆழ்ந்திருந்தது.

C:\Users\Chandraguru\Pictures\Indira Congress.jpg

அபிமன்யு சந்திரா: உங்கள் குழந்தை பருவத்தில் நீங்கள் எந்த ஊடகத்துடன் தொடர்பு கொண்டிருந்தீர்கள்? உங்களைச் சுற்றிலும் இருந்த செய்தித்தாள்கள், புத்தகங்கள், தொலைக்காட்சி ஆகியவற்றின் உள்ளடக்கம் என்னவாக இருந்தது?

பன்வர் மேக்வன்ஷி: என்னுடைய வீட்டில் இரண்டு புத்தகங்கள் இருந்தன. ஒன்று தந்திர மந்திர புத்தகம் – என் தந்தை ஒரு தாந்த்ரீகரும்கூட. தூரத்து உறவினர் மாறிய பிறகு, புதிய ஏற்பாடு வந்தது. செய்தித்தாள்கள் எதுவும் வரவில்லை. வானொலி இருந்தது. அதில் என் தந்தை பிபிசி போன்ற நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொண்டிருப்பார்.

கிராமத்தில் ஒரேயொரு இடத்தில் தொலைக்காட்சி இருந்தது – தாகூரின் வீட்டில் [உயர் சாதிக்காரர்], அவர் காங்கிரஸ்காரரும் கூட. 1988ஆம் ஆண்டு, தொலைக்காட்சியில் ராமாயணம் ஓடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், நாங்கள் அங்கே சென்று அதைப் பார்ப்போம். அவர் தனது வீட்டை அனைவருக்கும் திறந்து வைப்பார். அவரும் அவரது மனைவியும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். எங்களைப் போன்ற தலித் குழந்தைகளையும் வீட்டிற்கு உள்ளே வருவதற்கு  அவர் அனுமதிப்பார்.

அதற்கு முன்பு நான் ஒருபோதும் ராமாயணத்தைப் படித்ததில்லை, பார்த்ததில்லை. நாங்கள் பாரம்பரியமாக கபீரைப் பின்பற்றி வந்தோம்; உண்மையான ராம பக்தி எங்கள் பின்னணியில் இருக்கவில்லை.

ராமானந்த் சாகரின் ராமாயணம் ராமஜன்மபூமி இயக்கத்திற்கு மக்களைத் தயார்படுத்தியது. முதன்முறையாக, அனைவருக்கும், குறிப்பாக தலித்துகள், விவசாயிகள், ஆதிவாசிகளிடம் ராமர் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த தொடர் அவர்களிடையே பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சி அவர்களிடையே ராமரை நிலைநிறுத்தியது. அவர்களை ராமரை ஏற்றுக் கொள்ளுமாறு செய்தது. ராமரின் பெயரால் மக்களை அணிதிரட்டுவது சாகரின் வேலையாக இருந்தது.

C:\Users\Chandraguru\Pictures\ramayana-1200-1.jpg

அபிமன்யு சந்திரா: கோவிட்-19 பொதுமுடக்கத்திற்கு மத்தியில் அந்தத் தொடர் மீண்டும் தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. மக்களை எதற்காகத் தயார்படுத்துவதற்காக – அப்படி ஏதாவது இருந்தால் – அந்த ஒளிபரப்பு மேற்கொள்ளப்பட்டது?

பன்வர் மேக்வன்ஷி: அது 1995க்குப் பிந்தைய தலைமுறைக்கு ராமரை அறிமுகப்படுத்தும் முயற்சியாகும். மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருந்தார்கள். அன்றைக்கு நாங்கள் அதைப் பார்த்த அதே பைத்தியக்காரத்தனத்தோடு, இன்று இளைஞர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருந்ததால், அவர்களுக்கு வேறு தேர்வுகள் எதுவும் இல்லாமல் போனது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அந்தத் தொடர் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது, ஆகஸ்ட் 5 அன்று நடைபெற்ற [அயோத்தியில் ராமர் கோயிலுக்கு] அஸ்திவாரக் கல் அமைப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கான வழியாக இருந்தது. இந்தியா ராமராஜ்யமாக மாற்றப்படுகிறது; சிறந்த ராமராஜ்யத்திற்கு [ராமரின் ஆட்சிக்கு] மக்கள் குறிப்பாக புதிய தலைமுறையினர் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; அதனால் மக்கள் வெறியூட்டப்படுவார்கள் என்பதற்காகவே அது மீண்டும் ஒளிபரப்பப்பட்டது.

அபிமன்யு சந்திரா: உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அரசியல்ரீதியாக, உங்கள் தந்தை ஒருமுனையில் இருந்து உங்களைப் பாதித்தார். மற்றொரு பக்கத்தில், உங்கள் பள்ளியின் புவியியல் ஆசிரியர் – ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்புடையவர் – உங்கள் குழந்தைப் பருவத்தில் உங்கள் மீது முற்றிலும் முரண்பட்ட செல்வாக்கைக் கொண்டவராக இருந்தார். இந்தக் கண்ணோட்டங்களை எவ்வாறு சமன் செய்தீர்கள்? ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்திற்கு எவ்வாறு நீங்கள் ஈர்க்கப்பட்டீர்கள்?

பன்வர் மேக்வன்ஷி: நான் ஆர்.எஸ்.எஸ்ஸை சென்றடையும் வரையிலே, எனது தந்தையின் செல்வாக்கு என் மீது இருந்தது. ஆர்எஸ்எஸ் தொடர்பு எங்களுடைய விளையாட்டுகளுடன் தொடங்கியது. சித்தாந்தம் எதுவும் அதற்கான காரணமாக இருக்கவில்லை; நாங்கள் விளையாடுவதற்காக மட்டுமே அங்கே சென்றோம். ஆனால் அதற்குப் பின்னர், சித்தாந்தம் உள்ளே வரத் தொடங்கியது. காந்தி மற்றும் அசோகர் [பௌத்தத்தை ஏற்றுக்கொண்ட மௌரிய வம்சத்தின் பேரரசர்] ஆகியோரின் அகிம்சை கோழைத்தனம் என்று எங்களிடம் சொல்லப்பட்டது.  ஏழாம் வகுப்பில், ஆர்.எஸ்.எஸ்ஸின் ஹிந்தி ஊதுகுழலாக இருந்து வந்த பஞ்சஜன்யாவைப் [வார இதழ்] படிக்க ஆரம்பித்தேன். ஆர்.எஸ்.எஸ் புத்தகங்களைப் படித்தேன்.

சமநிலைப்படுத்திக் கொள்ளும் சூழ்நிலையில் நான் இருக்கவில்லை. பிரிவினை, காஷ்மீர், முஸ்லீம்களைத் திருப்திப்படுத்துவது போன்ற பிரச்சனைகளில், என் தந்தை இந்த தேசத்தின் துரோகிகளுடன் இருக்கிறார் என்று நான் நினைக்க ஆரம்பித்தேன். எனது தந்தை மற்றும் தாத்தாவின் மனங்களை காங்கிரஸ் கெடுத்து விட்டதாகவே நான் உணர்ந்தேன். அவர்களால் சிந்திக்க முடியவில்லை. ஹிந்துக்களைப் பற்றி, இந்த நாட்டைப் பற்றி அவர்களால் சிந்திக்க முடியவில்லை என்றே நான் அப்போது உணர்ந்தேன்.

எங்கள் வீட்டு வாசலில் எங்கள் தந்தை ஒட்டி வைத்திருந்த காங்கிரஸ் ஸ்டிக்கருக்கு மேலே இரண்டு ஸ்டிக்கர்களை நானும் என் தம்பியும் ஒட்டினோம். காங்கிரஸின் கை ஸ்டிக்கரின் மேல், ‘நாம் ஹிந்துக்கள் என்று பெருமையுடன் சொல்லுவோம்’ (கர்வ் சே கஹோ கி ஹாம் ஹிந்து ஹைன்) என்று நாங்கள் ஒட்டி வைத்தோம். காங்கிரஸ் தலைவர்கள் யாராவது வீட்டிற்கு வரும்போதெல்லாம், என் தந்தை, ‘கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்’, ‘கொஞ்சம் தேநீர் கொண்டு வாருங்கள்’ என்று எங்களிடம் சொல்வார். அப்போதெல்லாம் இவர்களுக்கு ஏன் நாம் தேநீர் கொண்டு வர வேண்டும் என்றே நாங்கள் நினைத்தோம். அந்த அளவிற்கு நான் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தேன்.

அபிமன்யு சந்திரா: தனது அரசியலை உங்களுடைய தந்தை நேரடியாகத் தொடர்பு கொள்வது போல் தெரிகிறது. ஆனால் அதேசமயம் ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தம் மிகவும் பன்முகமாக, மறைமுகமான வழியில் தொடர்பு கொள்வதாக இருக்கிறது. உங்களால் இந்த வித்தியாசத்தை விளக்க முடியுமா?

பன்வர் மேக்வன்ஷி: எனது தந்தையின் சிந்தனை, அவரது தந்தையின் சிந்தனை, அவர்கள் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள் என்று அவருடைய வாழ்க்கையின் மூலம் பெற்றுக் கொண்டதாக இருக்கிறது. சித்தாந்தத்தைக் கற்பிக்கக் கூடிய குழு, உறுப்பினர்களைக் கொண்ட அல்லது கல்வியை வழக்கமாக வழங்குகின்ற குழு அவருக்கு இருந்திருக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை, தனது மக்களின் வாழ்க்கையை காங்கிரஸ் மாற்றியது என்பதாலேயே, அந்தக் கட்சியுடன் அவர் இணைந்திருந்தார்.

C:\Users\Chandraguru\Pictures\RSS Children in Saakha.jpg

ஆர்.எஸ்.எஸ்ஸில், பயிற்சிகள், விளையாட்டுகள், ஷாகா [ஆர்.எஸ்.எஸ்ஸின் மிகச்சிறிய நிறுவனப் பிரிவு] என்று ஒவ்வொரு நாளும் ஏதோ நடந்து கொண்டிருக்கிறது. முதலில் சில உடற்பயிற்சிகளையும், பின்னர் சில விளையாட்டுகளையும் சொல்லிக் கொடுத்த பிறகு, இது யாருடைய நாடு என்பது மற்றும் பிற விஷயங்கள் குறித்து எங்களுக்குச் சொல்லித் தருவார்கள். நாம் தூய ஆரியர்கள் என்று எங்களிடம் கூறப்பட்டது. நாம்தான்  சிறந்தவர்கள், நாம் விஸ்வ குருக்கள் [உலக ஆசிரியர்கள்] என்று எங்களிடம் கூறினார்கள். அதற்குப் பின்னர், நாம் சிறந்தவர்கள் என்றால், மற்றவர்கள் அவ்வாறு இல்லை என்று கூறப்பட்டது. ‘பாரத மாதாவைப் பிரித்ததற்கு யார் காரணம்?’, ‘நவகாளிக்குச் சென்று காந்தி முஸ்லீம்களுக்கு ஆதரவாக நின்றார்’, ‘நேரு காஷ்மீரைச் சேர்ந்தவர், அவர் காஷ்மீருடன் தொடர்பு கொண்டிருந்தார்’ என்பது போன்ற கதைகள் மூலம் ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய செய்தியை எங்களுக்குக் கற்பித்தது. உண்மையில் எதையும் சரிபார்க்கின்ற திறன் எங்களிடம் இருக்கவில்லை. அவர்களால் சொல்லப்படும் அதே விஷயம் பஞ்சஜன்யா மற்றும் பிற ஆர்.எஸ்.எஸ் புத்தகங்களிலும் வெளியிடப்படுகிறது. அவர்கள் அளித்த பயிற்சியிலும் அது வந்தது. செய்தித்தாளைப் படித்தபோது, ​​ஷா பானோவின் வழக்கு இருந்தது. ராமானந்த சாகரின் ராமாயணம் இருந்தது. இவையனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக, தங்களை நிரூபித்துக் கொள்பவையாக இருந்தன.

உண்மையில் ஷாகாவில் உள்ள ஆசிரியர் உங்களை அதிகம் பாதிக்கிறார். உங்கள் பெயருடன் அந்த ஆசிரியர் ‘ஜி’யை இணைக்கத் தொடங்கும் போது, அது உங்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அன்றாடம் ஒரு மணி நேரத்திற்கு இது செய்யப்பட்டது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்ற சித்தாந்தங்கள் அறிமுகப்படுத்தப்படும். எங்களுடைய பஞ்சாயத்தில் ஒரு முஸ்லீம் கூட இல்லை. ஆனாலும், என்னுடைய மனதில், முஸ்லீம்கள் மிக மோசமானவர்கள் என்று நிறுவப்பட்டிருந்தது.

C:\Users\Chandraguru\Pictures\RSS Training to Children.jpg

மிகவும் திட்டமிட்ட, முறையான செயல்முறைகளைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் இளம் வயதினரை அணுகுகிறது. ‘சுத்தமான சிலேட்டில் நாங்கள் எழுதுகிறோம்’ என்று அவர்கள் கூறுகிறார்கள். பள்ளி நேரத்திற்குப் பிறகு, எனது [அரசு மேல்நிலைப் பள்ளியில்] புவியியல் ஆசிரியர் முழுமையாக ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவார். என்னுடைய ஏழு அல்லது எட்டு ஆசிரியர்களில், ஐந்து பேர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தனர். இன்றும், பள்ளி ஆசிரியர்கள் மீது ஆர்.எஸ்.எஸ்ஸின் பெரும் செல்வாக்கு இருந்து வருகிறது. இது அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஹிந்தி மொழிப் பிராந்தியங்களில், தொடக்க ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மற்றும் ஏன் விரிவுரையாளர்கள் கூட – அவர்களில், பெரும்பான்மையானவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய முழுக் கவனமும் குழந்தைகள் மீதுதான் இருக்கின்றது.

அபிமன்யு சந்திரா: அதிர்ச்சி தருமாறு நடந்த இரண்டு சம்பவங்கள், உங்களை ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து வெளியேறுவதற்குத் தூண்டின என்று உங்கள் புத்தகத்திலிருந்து நான் புரிந்து கொண்டிருக்கிறேன். முதலில், ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான பிரச்சாரக் ஆக வேண்டும் என்ற விருப்பத்தை நீங்கள் வெளிப்படுத்திய போது, உங்கள் சாதி காரணமாக அது சாத்தியமற்றது என்று உங்களிடம் கூறப்பட்டது. மேலும் அவர்கள் ‘எங்களுக்கு ஒரு பிரச்சாரக் தான் வேண்டும், ஒரு விச்சாரக் அல்ல – அதாவது சிந்தனையாளர் அல்ல’ என்று உங்களிடம் கூறியிருந்தனர். மற்றொரு சந்தர்ப்பத்தில், உங்கள் வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிட மறுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அதை தெருவில் வீசினர். ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேற உங்களைத் தூண்டிய பிற சம்பவங்கள் எதுவும் இருந்தனவா?

பன்வர் மேக்வன்ஷி: படிக்கும் ஆர்வம் கொண்ட நான் நிறைய விவாதித்து வந்தேன். ஷாகா மற்றும் [ஆர்.எஸ்.எஸ்] நிகழ்ச்சிகளில் நான் அடிக்கடி கேள்விகளைக் கேட்பேன். அவர்கள் எரிச்சல் அடைவார்கள். கேள்விகளைக் கேட்பது அங்கே பாராட்டப்படுவதில்லை. சொல்லப்படுவதை நீங்கள் அப்படியே நம்ப வேண்டும். விஷயங்களை அறிந்து கொள்வதற்கான உங்கள் விருப்பத்திற்கு அங்கே இடம் இருக்கவில்லை. ‘உங்கள் தலையால் நீங்கள் வலிமையானவராக இருக்கிறீர்கள், ஆனால் கீழே பலவீனமாக இருக்கிறீர்கள்” – அதாவது உங்கள் மூளைக்கு அதிகம் பயிற்சி கொடுக்காதீர்கள்; உடலை வலிமையாக்கிக் கொள்ளுங்கள் என்று என்னிடம் ஒருமுறை கூறினார்கள்.

C:\Users\Chandraguru\Pictures\Bhanwar 01.jpg

அதிகமாகச் சிந்திப்பது நல்லதல்ல என்று அவர்கள் கூறுவார்கள். விமர்சன சிந்தனைக்கு அங்கே இடமில்லை. மாறாக அதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தொடர்ச்சியான முயற்சி மட்டுமே உள்ளது. பயபக்தியுடன் வணங்கி, பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டு, பிரச்சாரக் சொல்வதை நீங்கள் அப்படியே உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அவர் உண்மையைச் சொன்னாலும், இல்லாவிட்டாலும், உங்களால் கேள்வி கேட்க முடியாது. எனவே அங்கே என்னைப் பற்றி, கலகக்காரன் என்ற உருவமே இருந்தது.

உணவு குறித்து நடந்த சம்பவம் திருப்புமுனையாக அமைந்தது. அதை ஒரு சிறிய விஷயம் என்று அவர்கள் சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில், அது மிகப்பெரிய விஷயமாக இருந்தது. 1991 மே முதல் 1993 ஏப்ரல் அல்லது மே வரையிலும் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவே இல்லை.

மனதளவில் நான் பாதிக்கப்பட்டுள்ளதாகவே அவர்கள் அனைவரும் நினைத்தார்கள். ஒரு விஷயத்தில் நான் சிக்கிக்கொண்டேன். உண்மையில் நான் சிக்கிக் கொண்டேன். ‘ஹிந்து ராஷ்ட்ரத்திற்காக இறந்து போக நான் தயாராக இருந்தேன். ஆனாலும் அவர்கள் என் வீட்டில் சாப்பிட விரும்பவில்லை. அது எப்படிப்பட்ட ஹிந்து ராஷ்டிராவாக இருக்கப் போகிறது?’ என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அது என்னுடைய சமூகத்திற்கு எதிரான பாகுபாடு குறித்த மிகப் பெரிய பிரச்சினை என்பதையும், மிகப்பெரிய சமூக மாற்றம் தேவை என்பதையும் படிப்படியாக நான் உணர ஆரம்பித்தேன்.

அபிமன்யு சந்திரா: எலி விஷத்தைச் சாப்பிட்டு உங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயன்றதாக உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களுடைய வாழ்க்கையின் அந்த காலகட்டத்தை விவரிக்க முடியுமா?

பன்வர் மேக்வன்ஷி: 1991 மே – ஜூன் காலகட்டத்தில் நான் சொல்வதை அவர்கள் கேட்காத போது, இந்த எலி விஷம் தொடர்பான சம்பவமும் நடந்தது. ஒருபுறம் ஹிந்து ராஷ்டிரத்திற்கான அர்ப்பணிப்பு இருந்தது. மறுபுறம், நான் ஹீரோக்களாகக் கருதிய நபர்கள் இருந்தார்கள்… அது என்னுடைய மனதில் நான் உருவாக்கி வைத்திருந்த லட்சிய, மாதிரியானது சிதைந்து போகும் காலமாக இருந்தது. எல்லாமே குழப்பமாகி விட்டது.

அவர்கள் நான் தினமும் என்னுடைய நேரத்தைக் கழித்தவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் நான் நண்பனாகவே இருந்தேன். அவர்களின் அலுவலகத்திற்குச் சென்று அவர்களுடன் நான் வாதம் செய்வேன். குற்றவாளிகள் மீது சில நடவடிக்கைகள் இருக்கும், ஒருவேளை அவர்கள் நீக்கப்படுவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் ஒருபோதும் நீக்கப்படவில்லை. அவர்களில் சிலர் இன்றும் முக்கியமான பதவிகளில் உள்ளனர்.

அபிமன்யு சந்திரா: ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்த உங்கள் நண்பர்களும், சகாக்களும் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? உங்களிடம் மன்னிப்பு கேட்டார்களா?

பன்வர் மேக்வன்ஷி: ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்த பெரும்பாலானவர்களின் எதிர்வினை சரியாக இருக்கவில்லை. சிலர் தனிப்பட்ட முறையில், நடந்தது சரியில்லை என்று என்னிடம் கூறினார்கள் என்றாலும், ஆர்.எஸ்.எஸ்ஸில் உள்ள ஒருவரிடம் அதை வெளிப்படையாகச் சொல்கின்ற தைரியம் அவர்களிடம் இருக்கவில்லை.

C:\Users\Chandraguru\Pictures\rss-1280x720.jpg

அங்கு சில நண்பர்கள் இருந்தனர். உணவை அவர்கள் தூக்கி எறிந்ததை முதலில் என்னிடம் சொன்ன ஒரு நண்பர், புருஷோத்தம் என்பவர் என்னுடன் இருக்கிறார். அவர் ஒரு முக்கியமான நபர்.

சில தலித் ஸ்வயம்சேவக்குகளை சந்திக்கும் போதெல்லாம், சாதி பாகுபாடு குறித்த தங்களுடைய அனுபவங்களை அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொள்வார்கள். ஆனாலும் அரசியலில், சங்கத்தில் முன்னேறுவதற்கான முயற்சியில் இருந்த அவர்கள், யாரிடமும் சொல்லி விடாதீர்கள் என்பதையும் சேர்த்தே சொல்வார்கள்.

அபிமன்யு சந்திரா: உங்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டதாக உணர்ந்த நீங்கள் வெளிப்படையாகப் பேசினீர்கள். ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளில் உள்ள பலரும் ஆர்.எஸ்.எஸ்ஸிலேயே தொடர்ந்து வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் ஏன் அங்கிருந்து வெளியேறவில்லை என்று நினைக்கிறீர்கள்?

பன்வர் மேக்வன்ஷி: கேள்விகளை எழுப்பியதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருந்தது என்று சில நேரங்களில் நான் உணர்கிறேன். இந்தக் கேள்விகளை எழுப்பாதவர்கள் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்களுக்கான வாழ்க்கையை அதுபோன்று உருவாக்கிக் கொண்டுள்ளனர். எனது காலத்தைச் சார்ந்த சுயம்சேவக்குகள், அமைப்பிற்கான அணிகளில் உயர்ந்த நிலையை எட்டியுள்ளனர். மற்றவர்கள் அரசியலில் எம்.எல்.ஏக்களாக உள்ளனர்.

தங்களிடம் பாகுபாடு காட்டப்படுகிறது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். சாதியவாதம் நிலவுவதை அவர்கள் நிச்சயம் உணர்ந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ‘நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?’ என்று ஒரு சிலரிடம் நான் கேட்டேன். அவர்கள், ‘இதுபோன்ற விஷயங்கள் சமுதாயத்தில், பள்ளிகளிலும் நடக்கின்றன. அப்போதும் நாங்கள் அமைதியாகவே இருந்திருக்கிறோம். எனவே, இப்போது ஆர்.எஸ்.எஸ்ஸிலும் நாங்கள் அமைதியாக இருக்கிறோம்’ என்றனர். இதுபோன்ற விஷயம் மிகப்பரவலாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இவ்வாறான மௌனக் கலாச்சாரம் எங்கும் இயங்கி வருகிறது. ஏற்கனவே [ஆர்.எஸ்.எஸ்ஸில்] கேள்விகளைக் கேட்பதற்கு நாங்கள் தடைசெய்யப்பட்டிருந்தோம். ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்ப்பதால் என்ன பயன் இருக்கப் போகிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ‘மேலிருந்து கீழாக அனைத்து நிலைகளிலும் அமைப்பு அதிகாரம் வாய்ந்ததாக இருக்கிறது. நம்மால் எப்படி போராட முடியும்?’ என்று அவர்கள் கேட்கிறார்கள். தங்கள் வாழ்க்கை இந்த வழியிலேயே தொடரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் நன்றாக மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடக்கிறது, தங்கள் சமூகத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றியெல்லாம் அவர்கள் சிந்திக்க மாட்டார்கள். கண்டனம், எதிர்ப்பு, சண்டை என்று உள்ளே இருந்து எதுவும் வரவில்லை. அத்தகைய வார்த்தைகளை அவர்கள் பயங்கரவாதிகளின் மொழி என்று நினைக்கிறார்கள்.

அதில் யாராவது தொழிலதிபர் என்றால், அவர்களுக்கென்று சில பலவீனங்கள் இருக்கும். நிர்வாகத்தில் இருப்பவர்கள் என்றால், அவர்களுக்கும் சில தடைகள் இருக்கும். எனவே, அங்குள்ளவர்களால் போராட முடியாது. போராட்டத்திற்கான தேவை இருப்பதாகவே நான் உணர்கிறேன்.

அவர்களில் சிலர், தங்களுக்கு பெரிய அளவில் மரியாதை கிடைப்பதாக நினைக்கிறார்கள். கிராமத்துப் பொதுமேடையில் ஒருபோதும் உட்கார அனுமதிக்கப்படாத அவர்களுக்கு, மாவட்டம் அல்லது தாலுகா அளவிலான மேடையில் தாங்கள் உட்கார வைக்கப்பட்டு, ஏராளமான மக்கள் தங்களுக்கு முன்பாக அமர்ந்திருப்பதைக் காணும் போது, தங்களுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய குறிக்கோளைச் சாதித்ததாகவே அவர்கள் உணர்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கேற்ற நிலைமை உள்ளது. ஆனாலும் அனைவருமே கஷ்டப்படுகிறார்கள்;  விவாதிக்கிறார்கள்.

எனது புத்தகம் வெளிவந்த பிறகு, ஏராளமானோர் தங்கள் கதைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டு, ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேறுவது, அதை எதிர்த்துப் போராடுவது என்று பேசி வருகிறார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்ஸில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்ற ஒருவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஒரு மணி நேரம் அவர் பேசினார். உத்தரகாண்டில் தலித்துகளுக்கு எதிராக 2018 ஏப்ரல் 2 அன்று பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிரான எதிர்ப்பில், ஆர்.எஸ்.எஸ் ஆற்றிய பங்கிற்குப் பிறகு, அமைப்பிற்கு எதிராக அவர் இப்போது மிகவும் தீவிரமாகி விட்டார். இதுபோன்று பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

அபிமன்யு சந்திரா: சமீபத்திய ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேறிய தலித்துகளின் எண்ணிக்கை என்னவாக இருக்கும் என்று நீங்கள் மதிப்பிடுவீர்கள்?

பன்வர் மேக்வன்ஷி: ஆயிரக்கணக்கானோர் ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேறியிருக்க வேண்டும். வெளியேறிய பலரை நான் சந்தித்தேன். ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் தலைவராக இருந்த ஒருவரின் தலைமுடியை உண்மையில் பிடுங்கி எடுத்த நபரை நான் சந்தித்தேன். ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நேரடியாக மோதிய பலர் இருக்கின்றனர். வெளியேறிய பிறகு, அவர்கள் பெரும்பாலும் அமைதியாக இருக்க நினைக்கிறார்கள். தங்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் ஒரு சிலருடன் அவர்கள் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் அவர்களால் அந்தக் கசப்பான அனுபவங்களை வெளியே கொண்டு வந்து கருவியாகப் பயன்படுத்த முடியவில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் கதைகள் உண்டு. அவற்றில் சில கதைகள் என்னுடையதை விட பயமுறுத்துவதாக இருக்கும்.

கேரளாவைச் சேர்ந்த சுதீஷ் மின்னி [சுமார் 15 ஆண்டுகளாக] ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்தவர். ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேறிய அவர், மலையாள புத்தகத்தை எழுதினார். அது ஆங்கிலத்திலும் வெளியாகி உள்ளது [செல்லார்ஸ் ஆஃப் தி இன்ஃபெர்னோ: கன்ஃபெஷன்ஸ் ஆஃப் எ ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்]. இப்போது, ​​அவர் கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட்) இருக்கிறார். அவர் மிகவும் தீவிரமாகப் பேசி வருகிறார். ஆனால் தென்னிந்தியா மற்றவர்களுக்கான இந்தியா என்று கருதப்படாததால், அவர்கள் [ஆர்.எஸ்.எஸ்] ஒரு கட்டத்திற்கு அப்பால் அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

C:\Users\Chandraguru\Pictures\Cellars.jpg

அபிமன்யு சந்திரா: ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேறி பேசக்கூடிய தலித்துகள் யார்? அவ்வாறு பேசுவதற்கு பாலினம், வர்க்கம், துணை சாதிகள் அல்லது இதுபோன்ற பிற காரணிகளுடன் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

பன்வர் மேக்வன்ஷி: நடுத்தர வர்க்கம், பணக்காரர்கள், வேலைகளில் உள்ளவர்கள்; நகர்ப்புறத்தினர், படித்தவர்கள், தலித்துகளிடையே உயரடுக்கினர் என்று ஆர்.எஸ்.எஸ்ஸில் உள்ள பெரும்பாலான தலித்துகள், முழுமையாக ஆர்.எஸ்.எஸ் உடன் இருக்கிறார்கள். அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். அது [சமூகவியலாளர்] எம்.என்.சீனிவாஸ் குறிப்பிட்ட சமஸ்கிருதமயமாக்கலுடன் தொடர்புடையது. [சமஸ்கிருதமயமாக்கல் என்பது உயர்ந்த சாதியைப் பார்த்து போலியாகப் பின்பற்றுவதன் மூலம், மேல்நோக்கி நகர்வதற்கான விருப்பத்தை குறிக்கிறது. சமூகம் மற்றும் கலாச்சார ரீதியாக சிறுபான்மையினராக இருந்தபோதிலும் பிராமணர்கள் உச்சத்தில் இருப்பவர்களாகக் கருதப்படுகிறார்கள்]

C:\Users\Chandraguru\Pictures\MN Srinivas.jpg

சித்தாந்த ரீதியாக, குழந்தை பருவத்திலிருந்தே, இடதுசாரிக் குழுக்கள் அல்லது அதுபோன்ற பிற குழுக்களுடன் தொடர்புடையவர்களிடமிருந்தே எதிர்ப்பு வருகிறது. மேலும், அம்பேத்கரைப் படித்தவர்கள், மற்றவர்கள் [சாதி எதிர்ப்புத் தலைவர்கள்] இடமிருந்தும் வருகிறது. மெதுவாக ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேறிய பின்னர் அவர்கள் கடுமையாகக் குரல் கொடுப்பார்கள். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிராக கருத்தியல் ரீதியாக வலுவாக இருப்பார்கள்.

ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேறி பேசுகின்றவர்கள் பெரும்பாலும் அதிக எண்ணிக்கையில் உள்ள தலித் துணை சாதியினர். உத்தரபிரதேசத்தில், ஜாதவ்கள். ராஜஸ்தானில், மேக்வால்கள். தெற்கே அருந்ததியர்கள். அத்தகைய சமூகங்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கு முன்பாக, தவறான செய்தி அந்த சமூகத்திடம் சென்று விடக் கூடாது என்று கவலைப்படுகின்ற ஆர்எஸ்எஸ் அவர்களைக் கண்டு பயப்படும்.

எண்ணிக்கையில் பெரியதாக இருக்கின்ற சமூகத்தில், தங்களுடைய சமூகத்தின் உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து, தங்களுடன் நிற்பார்கள் என்ற தைரியம் இருக்கிறது. ஆனால் அந்தச் சமூகங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை 500 அல்லது 1,000 மட்டுமே இருக்கும் போது, அவர்கள் அனைவரும் சிதறிக் கிடக்கும் போது, ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேறுபவர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள்.

அபிமன்யு சந்திரா: தலித் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரை சாதிக்கு எதிரான தலைவர்களின் குரல்கள் எவ்வாறு சென்றடைகின்றன? அவ்வாறு அடையும் போது, எந்த அளவிற்கானதாக அது இருக்கிறது? நீங்கள் விவரித்த சூழலில் இருக்கின்ற அந்த நபர் அத்தகைய குரல்களை எவ்வாறு காது கொடுத்து கேட்பார்?

C:\Users\Chandraguru\Pictures\RS Ambedkar.jpg

பன்வர் மேக்வன்ஷி: ஆர்.எஸ்.எஸ்ஸில், அம்பேத்கர் உதட்டளவில் மட்டுமே இருக்கிறார், செயலில் இருப்பதில்லை. உண்மையில் இல்லவே இல்லை. அவர்களுடைய தொண்டர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து, சமூக ஊடகங்களில் அம்பேத்கரை இழிவு செய்யும் போது அது தெளிவாகிறது. யதார்த்தம் வேறுபட்டது என்பதை தலித் ஸ்வயம்சேவக் அப்போது உணர்கிறார். தலித்துகள் மீது நடத்தப்படுகின்ற வன்முறைகள் குறித்து ஆர்.எஸ்.எஸ் ஒரு கூட்டத்தைக்கூட நடத்தியதில்லை.

பின்னர், அவர்களுடைய மனம் திறந்து கொள்கிறது. உண்மையான அம்பேத்கரை அவர்கள் தேடுகிறார்கள். தங்களுடைய சுயமதிப்பு குறித்து கேள்வி எழுப்புகின்ற அவர்கள், அங்கே [ஆர்.எஸ்.எஸ்ஸில்] ஒன்றுமில்லை என்பதைக் காண்கிறார்கள். கலவரம் போன்ற நோக்கங்களுக்காகவும், மற்றவர்களைப் பயமுறுத்துவதற்காகவும் மட்டுமே தாங்கள் பயன்படுத்தப்படுவதை அவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். இந்த பாசாங்குத்தனத்தைப் புரிந்து கொள்ள முடியும் போது, ​​ அவர்களால் அங்கிருந்து வெளியேற முடிகிறது.

அபிமன்யு சந்திரா: உங்கள் சகோதரர் பத்ரிலாலும் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்தார். நீங்கள் வெளியேறிய போது அவரும் வெளியேறினாரா?

பன்வர் மேக்வன்ஷி: அவர் ஒருபோதும் ஷாகாவுக்குச் சென்றதில்லை, சித்தாந்தத்தின் சிக்கல்களில் அவர் அதிக அக்கறை காட்டியதில்லை. டிராக்டர் இருந்தால் அதை ஓட்டி, எங்களுடைய தந்தைக்கு உதவுவது போன்ற விஷயங்களிலேயே அவர் ஆர்வத்துடன் இருந்தார்.

எங்கள் பகுதியில் உள்ள விவசாய மேற்பார்வையாளர் ஒருவர் கரசேவையில் [பாபர் மசூதி இடத்தில் கோவில் கட்டும் இயக்கம்] ஈடுபட எங்களைத் தூண்டியதால், ஆர்.எஸ்.எஸ்ஸில் அவர் ஈடுபட்டார். என் சகோதரனுக்கும் அவரைப் பிடிக்கும். நான் ஷாகாவில் இருந்ததால், எப்படியும் அயோத்திக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர் [அந்த மேற்பார்வையாளர்] என் சகோதரரையும் தயார் செய்தார். யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், நாங்கள் இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி அயோத்திக்குப் புறப்பட்டோம். நாங்கள் திரும்பி வந்த பிறகு, ஆர்.எஸ்.எஸ்ஸில் அவர் அதிகம் ஈடுபடவில்லை. அந்த உணவு சம்பவத்தைப் பற்றி அவரிடம் நான் சொன்னபோது, ​​அதைப் பெரிய விஷயம் என்பதாக அவர் உண்மையில் உணரவில்லை. நான் தற்கொலைக்கு முயன்றபோதே எந்த அளவிற்கு நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். அவர்கள் மீது கோபமடைந்த அவர், அந்த விவசாய மேற்பார்வையாளரை கிட்டத்தட்ட அடித்தே விட்டார்.

டிராக்டர் தொடர்பான சில வேலைகளுக்காக அவர் மும்பைக்குச் சென்ற பிறகு, ராஜஸ்தானில் உள்ள எங்கள் கிராமத்துடனான அவரது தொடர்பு குறைந்தது. என்னுடைய பயணத்துடன் அவர் தொடர்பற்று போனார். எப்போதுமே அவர் கருத்தியல் விஷயங்களில் ஈடுபட்டவராக இருக்கவில்லை.

பின்னர், ஒப்பந்தக்காரராக, வணிக காரணங்களுக்காக, பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருடன் நல்ல உறவை அவர் ஏற்படுத்திக் கொண்டார். அதற்கும் சித்தாந்தத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது முற்றிலும் வணிகரீதியிலேயே இருந்தது. பாஜகவில் அவர் உறுப்பினர் ஆனார். நான் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவை முற்றிலும் எதிர்த்து வந்தேன். அவருடைய வீட்டிற்கு வெளியே பாஜக கொடி வந்தது. 10 – 15 ஆண்டுகளாக இது நடந்து வந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், அவருடைய குழந்தைகள் வளர்ந்து, நான் எழுதியவற்றைப் படிக்கத் தொடங்கியதும், அவர்களிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு எதிராக அவர்கள் மாறினர். என் சகோதரரிடம் அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தினர். அந்தக் கொடி அகற்றப்பட்டது. ‘நீங்கள் ஆதரிக்கின்ற  சித்தாந்தம் நமக்கு எதிரானதாக இருக்கிறது’ என்று அந்தக் குழந்தைகள் அவருடன் விவாதிக்கத் தொடங்கினர். அவர்கள் அம்பேத்கரை வாசிக்கத் தொடங்கினர்.

இப்போது தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் மாவட்டத் தலைவராக அவர் இருக்கிறார். எங்களுக்கிடையிலான உறவு எப்போதும் மிகவும் நன்றாகவே இருந்து வருகிறது. இப்போது எனது செயல்பாடுகளுக்கும், சிந்தனைக்கும் அவர் வெளிப்படையாக ஆதரவளித்து வருகிறார். இப்போது அம்பேத்கரியவாதியாக, மதச்சார்பற்றவராக இருக்கும் அவர் ஆர்.எஸ்.எஸ் – பாஜக சித்தாந்தத்தை எதிர்த்து வருகிறார்.

C:\Users\Chandraguru\Pictures\BJP RSS.jpg

அபிமன்யு சந்திரா: உங்களுடைய தற்போதைய செயல்பாடுகளை விவரிக்க முடியுமா? மேலும், ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்புக் குரலாக நீங்கள் இப்போது இருப்பதால், அமைப்பு மற்றும் அதன் சித்தாந்தம் குறித்து உங்களை எதிர்க்கும் கருத்துக்களைக் கொண்டவர்களை நீங்கள் எவ்வாறு உங்களுடன் இணங்க வைக்கிறீர்கள்?

பன்வர் மேக்வன்ஷி: மனித உரிமைகள் குழுக்களுடன், குறிப்பாக மக்கள் சிவில் உரிமைக் கழகத்துடன் இணைந்து நான் வேலை செய்து வருகிறேன்.  அதில் தேசிய நிர்வாக உறுப்பினராக இருந்து வருகிறேன். டாகர்: தலித் ஆதிவாசி எவாம் கௌமண்டு அதிகார அபியான் ராஜஸ்தான் (ராஜஸ்தான் தலித் ஆதிவாசி மற்றும் நாடோடி மக்களுக்கான அதிகாரம்) என்ற பிரச்சாரத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். டாகர் என்பதற்கு பாதை என்பது பொருள். மக்களை எவ்வாறு அணிதிரட்டுவது என்பதற்கான பாதையைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம். பத்திரிகையாளர் என்ற முறையில், சராசரி மக்களுடைய பிரச்சனைகள், அவர்களுடைய  போராட்டக் கதைகள் குறித்து நான் தொடர்ந்து எழுதி வருகிறேன். சிறிய யூடியூப் சேனல் மற்றும் shunyakal.com என்று அழைக்கப்படுகிற இணையதளம் எனக்கென்று உள்ளது.

அடுத்த கேள்வியைப் பொறுத்தவரை, நான் பொதுமக்களிடம் சென்று உண்மைகளைப் பேசுகிறேன். சில கேள்விகளை நான் அவர்களிடம் எழுப்புகிறேன். எடுத்துக்காட்டாக, அதனுடைய 95 ஆண்டுகால வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ் சர்சாங்சலக் ஆக [உச்ச தலைவராக] தலித் அல்லது ஆதிவாசிகளில் ஒருவர் ஏன் மாற முடியவில்லை? நான் உரக்கப் பேசுவதில்லை; மெதுவாகவே பேசுகிறேன். முக்கியமாக, என்னுடன் உடன்படாதவர்களுடன் நான் உரையாடலை ஒருபோதும் முறித்துக் கொள்வதில்லை.

இந்த நேர்காணல் ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

https://caravanmagazine.in/interview/dalits-will-quit-rss-if-exposed-to-the-real-ambedkar-bhanwar-meghwanshi-former-karsevak

நன்றி: தி கேரவான் இதழ்

தமிழில்: தா. சந்திரகுரு