இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஒட்டு மொத்த இந்திய கல்வி தொடர்பான கல்விக் கொள்கைகளை உருவாக்குவதற்கென கோத்தாரி தலைமையிலான குழு (1964-66) இந்திராகாந்தி தலைமையில் இருந்த மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாவதாக 1986ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி தலைமையில் இருந்த மத்திய அரசாங்கம் தன்னுடைய புதிய கல்விக் கொள்கைகளை வெளியிட்டது.

அந்தக் கல்விக் கொள்கைகள் பின்னர் 1992ஆம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசாங்கத்தால் திருத்தியமைக்கப்பட்டன. இரண்டாவது கல்விக் கொள்கைகள் வெளியிடப்பட்டு ஏறத்தாழ 30 ஆண்டுகள் கழிந்த நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் இந்தியாவிற்கான தேசிய கல்விக் கொள்கைகளை வடிவமைப்பதற்கான குழுவொன்றை மத்திய அரசின் முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் T.S.R.சுப்பிரமணியன் தலைமையில் 2015ஆம் ஆண்டு அமைத்தது.

2016ஆம் ஆண்டு மே 7 அன்று ஏறத்தாழ 90 பரிந்துரைகளுடன் தனது அறிக்கையை அந்தக் குழு சமர்ப்பித்தது. ஆனாலும் அந்த அறிக்கையின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு செயல்படுத்த எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை.

கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு

அந்த அறிக்கையை கிடப்பில் போட்ட மத்திய அரசு, தலைநிறந்த அறிவியாலாளர் பத்மவிபூஷண் கஸ்தூரிரங்கன் தலைமையில் தேசிய கல்விக் கொள்கைகளை வடிவமைப்பதற்காக 2017 ஜூன் 24 அன்று  மீண்டும் குழுவொன்றை அமைத்தது.

மும்பை SNDT மகளிர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வசுதா காமத், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீ K.J. அல்போன்ஸ், பிரின்ஸ்டன் பல்கலைக்கழக கணிதப் பேராசிரியரும், கணிதத்தில் ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்றவருமான முனைவர். மஞ்சுல் பார்கவா, மத்தியப் பிரதேச மாநில பாபா சாகேப் அம்பேத்கர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர்.ராம் சங்கர் குரீல், அமர்கந்தக் இந்திராகாந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர்.T.V.கட்டிமணி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் உயர்நிலை மற்றும் இடைநிலைத் தேர்வு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ கிருஷ்ண மோகன் திரிபாதி, கௌஹாத்தி பல்கலைக்கழக பாரசீகத் துறைப் பேராசிரியர் முனைவர். மஜார் ஆசீப், கர்நாடகா மாநில அறிவாணையத்தின் முன்னாள் செயலாளர் மற்றும் மத்திய கல்வி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் முனைவர்.M.K.ஸ்ரீதர் ஆகியோரைக் கொண்டு ஒன்பது உறுப்பினர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்விச் செயலாளரான ஷகிலா சம்ஷு என்பவருக்கு புதிய கல்விக் கொள்கைகளை உருவாக்குவதற்கான பணிக்கென்று ஒதுக்கப்பட்டு, அவர் அந்தக் குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.  இந்த குழுவால் ஒத்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக ராஜேந்திர பிரதாப் குப்தா என்பவர் பின்னர் அந்தக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார். ஆக மொத்தம் பதினொரு உறுப்பினர்களுடன் அந்தக் குழு தனது பணியைத் தொடங்கியது.

தொடர் காலநீட்டிப்புகள்

2017 டிசம்பர் 31க்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று பணிக்கப்பட்ட இந்தக் குழுவிற்கு ஐந்து முறை காலநீட்டிப்பு வழங்கப்பட்டது. வரைவறிக்கையை 2018 மார்ச் 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று 2017 டிசம்பர் 27 அன்றும், 2018 ஜூன் 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று 2018 ஏப்ரல் 6 அன்றும், 2018 ஆகஸ்ட் 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று 2018 ஜூன் 20 அன்றும், 2018 அக்டோபர் 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று 2018 ஆகஸ்ட் 28 அன்றும், 2018 டிசம்பர் 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று 2018 அக்டோபர் 31 அன்றும் காலநீட்டிப்பு வழங்கப்பட்டது.

2018 மார்ச் 31 வரை மூன்று மாதங்களுக்கான முதல் கால நீட்டிப்பிற்கான காரணம் எதுவும் அமைச்சகத்தால் தெரிவிக்கப்படவில்லை இரண்டாவது தடவையாக 2018 ஜூன் 30 வரையிலான கால நீட்டிப்பு வழங்கப்பட்ட போது, வரைவைத் தயாரிக்கும் பணி முடிந்து விட்டதாகவும், இறுதிவரைவிற்கு முந்தைய வரைவு தயாராகி விட்ட நாளுக்கும், இறுதி வரைவைத் தயாரித்து சமர்ப்பிப்பதற்கான நாளுக்கும் இடையிலான பணிகளை நிறைவேற்றுவதற்காக, குழுவின் வேண்டுகோளுக்கிணங்க கால நீட்டிப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2018 ஆகஸ்ட் 31 வரையிலான மூன்றாவது காலநீட்டிப்பிற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 2018 அக்டோபர் 31 வரையில் நான்காவது கால நீட்டிப்பு வழங்கப்பட்ட போது, அறிக்கை தயாராக இருப்பதாகவும், இறுதி வரைவைச் சமர்ப்பிப்பதற்கு முன்பாக மாநில கல்வி அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டியிருப்பதாக குழு கருதுவதால் கால நீட்டிப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட போதும், மாநில கல்வி அமைச்சர்கள் கலந்து கொண்ட அவ்வாறான கூட்டம் நடத்தப்பட்டு அவர்களிடம் இருந்து ஆலோசனைகள் எதுவும் பெறப்பட்டதாக தகவல்கள் இல்லை.

இறுதியாக தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால், 2018 டிசம்பர் 15 வரை கால நீட்டிப்பு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு, ஐந்தாவது முறையாக கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிஜோரம் மாநிலத் தேர்தல்களுக்காக 2018 அக்டோபர் முதல் 2019 ஜனவரி வரை அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகளைக் குறிப்பிட்டு அந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதாக நாம் கருதலாம்.

வரைவறிக்கையைப் பெற்றுக் கொண்ட பொக்ரியால்

ஆனாலும் டிசம்பர் 15க்குப் பிறகான எந்தவொரு கால நீட்டிப்பும் அந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவிக்கவில்லை. அவ்வாறு காலநீட்டிப்பு வழங்கப்படவில்லை என்றால், பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு 2018 டிசம்பர் 15க்குள்ளாக இந்தக் குழு தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்திருக்க வேண்டும். 2018 டிசம்பர் 15 அன்று கோவா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜவடேகரும் குழுவின் அறிக்கை தயாராக இருப்பதாகவும், எந்த நேரத்திலும் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கிறார்.

இருந்த போதிலும், ஐந்தரை மாதங்களாக இதுபற்றி எதுவும் பேசாமல் இருந்த மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2019 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு வார காலத்திற்குள்ளாகவே அந்த அறிக்கை குறித்த செய்திகள் வெளிவருமாறு பார்த்துக் கொண்டது. தேர்தலுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்ட மோடி 2.0 மத்திய அமைச்சரவையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக ஜவடேகருக்குப் பதிலாக, போலியான கல்வித் தகுதிச் சான்றுகளுடன் ஸ்மிருதி இரானி 2.0 வடிவமாக இருந்த டாக்டர் (?) ரமேஷ் பொக்ரியால் பதவியேற்றுக் கொண்டார். போலிக் கல்வித் தகுதிதான் மோடி அமைச்சரவையில் இந்திய கல்வியமைச்சராவதற்கான தகுதி போலும்!

மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சர் சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே, உயர்கல்வித்துறைச் செயலாளர் ஆர். சுப்ரமணியம் மற்றும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளர் ரினா ரே உட்பட அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் 2019 மே 31 அன்று கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான வரைவுக் குழு தன்னுடைய வரைவறிக்கையைச் சமர்ப்பித்தது என்று 2019 ஜூன் 1 அன்று பத்திரிக்கைச் செய்திகள் வெளியாகி இருந்தன. தேசியக் கல்விக் கொள்கை – 2019 தொடர்பான இந்த வரைவறிக்கையை 2019 ஜூன் 01 அன்று இணையதளத்தில் வெளியிட்ட மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஜூன் 30க்குள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டது.

வரைவறிக்கையில் ஜவடேகரின் செய்திக் குறிப்பு

இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த வரைவறிக்கையின் முதல் பக்கத்திலேயே அன்றைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த பிரகாஜ் ஜவடேகரின் நாள் குறிப்பிடப்படாத செய்திக் குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்தியில் 2015 ஜனவரியில் இருந்தே புதிய கல்விக் கொள்கைகளை வரையறுப்பதற்கான முயற்சிகளை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறும் ஜவடேகர், தொடர்ந்து “முன்னாள் அமைச்சரவைச் செயலாளராக இருந்த மறைந்த ஸ்ரீT.S.R..சுப்பிரமணியன் தலைமையில் நாங்கள் அமைத்த ‘புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான குழு’ 2016 மே மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், தேசிய கல்விக் கொள்கை – 2016க்கான வரைவு குறித்த சில உள்ளீடுகளை அமைச்சகம் தயாரித்தது” என்று குறிப்பிடுகிறார். இந்தக் காலகட்டத்தில் துறையின் அமைச்சராக இருந்தவர் ஸ்மிருதி இரானி.

அதற்குப் பிறகு ஜவடேகரின் செய்தியில் இருக்கின்ற வாசகம்தான் நம்மை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. “அணுகல், சமம், தரம், மலிவு, பொறுப்பேற்பு ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்த தேசிய கல்விக் கொள்கை – 2018ஐ என்னுடைய நாட்டின் குழந்தைகள், இளைஞர்களுக்கு அளிப்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று வரைவறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள நாள் குறிப்பிடப்படாத ஜவடேகரின் அந்த செய்திக் குறிப்பில், வரைவறிக்கையை வெளியிடுவதற்கான தொனியே தொக்கி நிற்கிறது.

சமர்ப்பிக்கப்பட்டிருப்பது தேசிய கல்விக் கொள்கை 2018ஆ அல்லது 2019ஆ?

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் வரைவறிக்கையில் ஜவடேகரின் இந்த செய்திக் குறிப்பைத் தொடர்ந்து, வரைவறிக்கையைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவில் இருந்த ஒன்பது பேர் கையொப்பமிட்டு 2018 ஆகஸ்ட் 15 நாளிடப்பட்ட ஜவடேகருக்கு எழுதிய கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜவடேகருக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில், ’நாங்கள் தேசிய கல்விக் கொள்கை – 2019 வரைவறிக்கையைச் சமர்ப்பிக்கிறோம்’ என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் முந்தைய பக்கத்தில் தேசிய கல்விக் கொள்கை – 2018 என்பதாக ஜவடேகர் குறிப்பிடுகிறார்.

எதை நாம் ஏற்றுக் கொள்வது? 2019 மே 31 அன்று வரைவைத் தயாரித்த குழு தற்போதைய கல்வி அமைச்சர் பொக்ரியாலிடம் அறிக்கையைச் சமர்ப்பித்ததாக செய்திகள் வெளியாகின்றன. உண்மையில் 2018 இந்த வரைவறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 15 அன்றா அல்லது 2019 மே 31 அன்றுதானா? 2018 ஆகஸ்ட் 15க்கும் 2019 மே 31க்கும் இடையில் என்ன நடந்தது என்பதை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது? உண்மையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது அன்றைய அமைச்சர் ஜவடேகரிடமா அல்லது இன்றைய அமைச்சர் பொக்ரியாலிடாமா? யாரிடம் கேட்டு நாம் தெரிந்து கொள்வது?

வரைவறிக்கை 2019 மே 31 அன்றுதான் பொக்ரியாலிடம் சமர்பிக்கப்பட்டிருக்கிறது என்றால், ஜவடேகருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை – மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் இந்த வரைவறிக்கைக்கான செய்திக் குறிப்பை எழுதுவதற்கான வாய்ப்பை – பொக்ரியாலுக்கு வழங்காத அவசரம் ஏன் நிகழ்ந்தது? ஜவடேகரிடமே வரைவறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது என்றால், சமர்ப்பிக்கப்பட்ட வரைவறிக்கையை வெளியிடுவதில் ஐந்தரை மாதங்கள் தாமதம் ஏன் நிகழ்ந்தது?

பதினொன்று ஏன் ஒன்பது ஆனது?

இந்த வரைவறிக்கை தொடர்பாக இவை மட்டுமே நமக்கு ஏற்படுகின்ற குழப்பங்களல்ல. 2017 ஜூன் 27 அன்று வரைவறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்ட போது கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவுடன், அந்தக் குழுவிற்கென  செயலாளர் ஒருவரும் அமைச்சகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் அந்தக் குழு  ராஜேந்திர பிரதாப் குப்தா என்பவரை ஒத்து தேர்ந்தெடுத்து தன்னுடன் இணைத்துக் கொண்டது.

ஆக பதினொரு பேர் கொண்ட குழுவாகவே வரைவறிக்கை தயாரிக்கும் பணி துவங்கியது.  வரைவறிக்கை தயாரிப்பதற்காக குழு அமைக்கப்பட்ட போதே, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் பற்றி அளிக்கப்பட்ட தகவல்கள் முழுமையானதாக இல்லாததுடன், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் தரப்படாமல், பெரும்பாலும் அவர்கள் இதற்கு முன்னராக வகித்து வந்த பதவிகளைக் குறிப்பிட்டு முன்னாள் பிரபலங்களாகவே அந்தப் பட்டியலுக்குள் இருந்தனர். குழு உறுப்பினர்கள் யார் என்று அறிய முற்பட்ட வேளையில் கிடைத்த தகவல்கள், அனைவரின் கவனத்தையும் சற்றே திசை திருப்புகின்ற வகையிலே தரப்பட்ட அந்த தகவல்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவையாக, திட்டமிட்டு தரப்பட்டிருப்பதாகவே இப்போது தோன்றுகின்றது.

பதினொரு பேர் கொண்டு அமைக்கப்பட்ட அந்தக் குழுவில் இருந்த குழுவின் செயலாளர் உள்ளிட்டு ஒன்பது பேர் மட்டுமே கையொப்பமிட்டு ஜவடேகருக்கு ஏன் கடிதம் எழுதினார்கள்? இன்னும் இரண்டு பேர் என்ன ஆனார்கள்? ஏன் அவர்கள் குழுவிலிருந்து விடுபட்டுப் போனார்கள்? அது ஒரு தனிக்கதை.

(தொடரும்)

கட்டுரையாளர்

முனைவர் தா.சந்திரகுரு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *