பானை பிடித்த பாக்கியசாலிகள்
அறிவியலாற்றுப்படை
பாகம் 13
– முனைவர் என்.மாதவன்.
ஒரு பழைய கதை. நீண்ட காலத்திற்கு முன்பு ஏழை மனிதர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவர் தனது வீட்டிற்குத் தண்ணீரை பக்கத்திலிருந்த ஆற்றிலிருந்து கொண்டுவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு பெரிய கம்பின் இரு முனைகளிலும் இரண்டு பானைகளைக் கட்டி அதில் தண்ணீரை நிரப்பிக் கொண்டுவருவார். அந்த இரண்டு பானைகளில் ஒரு பானையில் சிறு ஓட்டைகள் சில இருந்தன. இதனால் ஒரு பானையில் தண்ணீர் முழுவதும் நிரம்பி வரும். மற்றொன்றிலோ பாதியளவு தண்ணீர் மட்டுமே வீட்டை அடையும். இந்த விஷயம் அந்த ஓட்டைப் பானைக்கும் தெரியும். அது பலநாள் இதற்காக வருந்திக்கொண்டிருந்தது. ஒருநாள் துக்கம் தாங்காமல் அந்த மனிதரிடம் என்னால் பாதியளவு நீரையே கொண்டுவந்து கொடுக்க இயல்கிறது. என்னை நீங்கள் முழுவதுமாக உடைத்துவிடுங்கள். வேறுபானையை வாங்கிக்கொள்ளுங்கள் என்றது.
பானையின் வருத்தத்தை உணர்ந்த மனிதர், ”நீ செய்யும் சாதனைகள் புரியாமல் பேசுகிறாய். பார் நீ தண்ணீர் இறைத்துவரும் பாதை முழுவதும் எத்தனைவிதமான செடிகள் பூத்துக்குலுங்கிக்கொண்டிருக்கின்றன. அவைகளின் நன்மைக்காகவாவது நீ உன் கருத்தை மறுபரிசீலனை செய்யலாமே” என்றார். பானையும் மகிழ்ச்சியடைந்து தனது பணியைத் தொடர்ந்தது. சரி பானையின் அறிவியலுக்கு வருவோம்.
விவசாயம் மனிதர்களை ஓரிடத்தில் தங்கவைக்கத்தது.ஆதிமனிதர்கள் அவர்கள் அறிவுக்கெட்டியபடி விவசாயம் செய்யத் துவங்கிய பின்னர் அவர்களுக்கு உபரியான தானியங்கள் கிடைக்கத் தொடங்கியது. இவ்வாறு உபரியாக உள்ளதை சேமிக்கக் கலன்கள் தேவைப்பட்டன. வீட்டின் ஓரத்திலேயே எங்கேயாவது கொட்டி வைத்திருந்திருப்பர். மழை,வெள்ளம் போன்றவை அதனைப் பாதித்திருக்கலாம். மேலும் திறந்தவெளியில் பூஞ்சைகளின் தாக்கங்கள் அதிகமாக இருந்திருக்கலாம். எனவே இதனை சேமிக்க ஒரு வழியைத் தேடிய தேடல் பெரிய பானைகளுக்கு இட்டுச்சென்றிருக்கலாம். முதுமக்கள் தாழி என்று அழைக்கப்படும் பெரியபானை போன்ற கலன்களும் அகழ்வாராய்ச்சிகளில் கிடைப்பதும் நம்மில் பலருக்கும் தெரியும்தானே. அண்மைக்காலம் வரை சால் என்று அழைக்கப்படும் நெல் போன்ற தானியங்களை சேமித்துவைக்கும் பெரிய பானைகளின் பயன்பாடு வழக்கில் இருந்தன.
அதுபோலவே ஒரு கட்டம்வரை ஆற்றில் சென்றுகொண்டிருந்த தண்ணீரை கையால் முகர்ந்து குடித்தவர்கள் தனது வீட்டிற்குள்ளும் கொண்டுவர முயற்சித்திருக்கலாம். அதற்கு சிறிய அளவிலான பானைகளை வனைந்திருக்கலாம். இப்படிப்பட்ட தானியங்கள் சேமிப்பு, தண்ணீர் சேமிப்பு மற்றும் பிற்காலங்களில் சமையல் செய்ய பாத்திரம் என்பவற்றிற்கெல்லாம் உடனடியாக உதவியவை மண்பாண்டங்களே.
செங்கற்கள் கண்டுபிடிப்புக்கு எப்படி நெருப்பைப் பயன்படுத்தும் அனுபவ அறிவு பயன்பட்டதோ அதுபோலவே பானைப் பயன்பாட்டிலும் பயன்பட்டிருக்கலாம். அவரவர்களின் கற்பனைக்கெட்டிய வகையில் கூட விதவிதமான வடிவில் மண்பாண்டங்கள் செய்யப்பட்டிருக்கலாம். இன்றைக்கு இருக்கும் பானையின் சரியான வடிவங்களுக்கு சக்கரங்களே வழிசெய்திருக்கும். களிமண் எந்த செலவுமில்லாமல் கிடைக்கும் மூலப்பொருள் காட்டில் கிடைத்த மரங்களை வைத்து சுட்டுவிடலாம். எவ்வளவு எளிதான ஆனால் பொருள் பொதிந்த கண்டுபிடிப்பு இது. பானையின் பிறப்பிடமாக உலகின் பல்வேறு நாடுகள் குறிப்பிடப்படுகின்றன. இதில் சீனாவின் பெயரும் அடிபடுகிறது. சுமேரியர்களும் பானைகளை வனைந்ததாக வரலாற்றுக்குறிப்புகள் கிடைக்கின்றன.
குறிப்பாக பானைக்கு மட்டுமல்ல , சுமேரிய நாகரீக மக்கள் களிமண்ணைப் படுத்தியபாடு கொஞ்ச நஞ்சமல்ல. வரலாற்றாய்வுகளுக்கெட்டியவரை களிமண் பலகைகளில் எழுத்துக்களை எழுதியவர்கள் அவர்களே. குகைகளிலேயே கிறுக்கிக்கொண்டிருந்தவர்களாயிற்றே . கைகளுக்கு மிருதுவான களிமண் பலகைகள் கிடைத்தால் விடுவார்களா என்ன? களிமண்ணிலும் வரைய முனைந்தனர். அவர்கள் பார்லி,கோதுமை,நெல் போன்ற தானியங்களை களிமண் பலகைகளில் வரைந்துவைத்துள்ளனர். இதனைக் கொண்டு இவர்கள் இந்த தானியங்களை பயிர் செய்திருக்கலாம் என்று கணிக்க இயல்கிறது.
விவசாயம் அடுத்தடுத்த காலங்களில் பல்வேறு பரிணாமம் பெற்றன. கால்வாய், வாய்க்கால் என்பதன் கண்டுபிடிப்பும் அலாதியானது. மழை பெய்த நேரங்களில் மேடான இடங்களிலிருந்து பள்ளமான இடத்திற்கு தண்ணீர் பாய்ந்ததைக் கண்ட மனிதர்களே பிற்காலங்களில் கவலைகள், ஏற்றம் போன்ற சாதனங்கள் மூலம் நீரை இறைத்து நிலத்திற்கு பாய்ச்சும் வகையைக் கண்டறிந்திருப்பர். அன்றைக்கு என்ன இன்றிருப்பது தண்ணீர்ப் பஞ்சமா கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தது. எனவே தேவைப்படும் அளவுக்கு இறைத்துத் தள்ளியிருப்பர். கால்நடைகளும் படிப்படியாக இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும். ஆனால் அதே நேரம் இப்பணியை எளிதாக்க வட்டவடிவமான இராட்டினங்கள் போன்ற அமைப்புகளுக்கும் வட்டம் பயன்பட்டிருக்கின்றன. இவ்வாறான வடிவமைப்புகள் விவசாயத்தினை அடுத்தடுத்த படிநிலைகளுக்கு கொண்டு செல்ல உதவியிருக்கும்.

இவ்வாறாக அடிப்படை வசதிகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை சேர்ந்த பின்னர் அடுத்து என்ன நடந்திருக்கும். உபரியான தானியங்கள் சேர்க்கையும், கால்நடைகள் பராமரிப்பும் மனிதர்களின் வாழ்வை வளமானதாக்க முயன்றது. இவ்வாறான வளமான வாழ்வு அவர்களுக்கான பொழுதுபோக்குகளுக்கான தேவையைக் கூட்டியுள்ளன. இவ்வாறு மக்கள் வசதிகள் மேம்படும்போது இந்த வசதி தக்குமா இதையெல்லாம் அனுபவிக்கலாமா? வேணாமா? என்று இன்றும் பலர் எண்ணுவது போல் அன்றைக்கும் எண்ணியிருக்கலாம். சரி இந்த வசதிகள் நம்மிடமே தங்க என்ன செய்யலாம் என்று யோசித்தபோது கடவுள்கள் பிறந்துவிட்டனர்.
ஏற்கனவே இயற்கையைக் கண்டு பயந்தவர்கள் அதனை வழிபடுவதன் மூலம் சாந்தப்படுத்த முயன்றனர். இப்படியாகத்தான் இடி,மின்னல்,மழை, சூரியன்,நெருப்பு போன்றவற்றைக் கடவுளர்களாக வழிபடும் போக்கு வளர்ந்திருக்கும். அவ்வாறே சுமேரிய நாகரீகத்திலும் பின்னர் விளைந்த நாகரீகங்களிலும் கடவுளர்களும் பிறப்பெடுத்தனர்.
மனிதர்கள் வாழ்வை வளப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு வளர்த்தில் தகவல் தொடர்புக்கு முக்கியப் பங்கு உண்டு. அன்றைய காலத்தினரின் தகவல் தொடர்பெல்லாம் மிகவும் எளிமையானதாகவே இருந்தது. பலரையும் ஓரிடத்தில் அழைக்கா கட்டையை அடித்து ஒலி எழுப்புவது, பிற்காலங்களில் விலங்குகளின் தோலால் தயாரிக்கப்பட்ட பறைகளை அதிரவைத்து தகவல் தெரிவிப்பது போன்ற செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. நாம் ஏற்கனவே பார்த்தது போன்று அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள் ஏதோ ஒருவிதத்தில் உரையாடவும் தொடங்கியிருப்பர். அந்த உரையாடல்களே மொழியாக பின்னாட்களில் முகிழ்த்திருக்கும். அடுத்த பகுதியில் மொழியின் பிறப்பைப் பற்றியும் அதன் அறிவியலையும் காண்போம்.
படை எடுப்போம்
*****************
கட்டுரையாளர்:
முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்
முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: அறிவியலாற்றுப்படை 12: சக்கரத்தின் வரலாறு – முனைவர் என்.மாதவன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: அறிவியலாற்றுப்படை14: மொழிகளின் பிறப்பு