சிறுகதை: அப்பா எங்கே போனாரு? – ஜெயஸ்ரீசுஜாவின் பைக்கிலிருந்து வேகமாக இறங்கி வந்த ரேணு குட்டி, ஸ்கூல் பேக்கினை கழற்றி வாசலில் வைத்து அவசர அவசரமாக ஷூ சாக்ஸ் கழற்றி திசைக்கு ஒன்று என விசிறியடித்து வீட்டுக்குள் வேகமாக ஓடினாள். குறுக்கே பெட்ரூம் வாசலில் கால் நீட்டியபடி அமர்ந்து முல்லைப்பூவை தொடுத்துக் கொண்டிருந்த சரோஜா பாட்டி,

“அடியேய்.. பாத்து போடி. என் கால ஒடச்சிடுவ போல.. ”

“அய்யய்யோ அம்மாச்சி.. தள்ளு… அவசரமா உச்சா…” கழிவறைக்கு அவசர அவசரமாக ஓடினாள். தாழிட்டு கொண்டாள்.

ரேணுக்குட்டி 6 வயது. ஒன்றாம் வகுப்பு படிக்கும் சுட்டிக் குட்டி. பள்ளியின் செல்லக்குட்டி. கொஞ்சம் வாலு. நிறைய வாய். துருதுருவென்று துள்ளி திரியும் குணம்.

அவள் அம்மா சுஜா, கால் சென்டரில் வேலை செய்யும் நடுத்தர வர்க்கத்துப் பெண். வீட்டு வேலை அலுவலக வேலை இரண்டினையும் சிறப்பாக சமாளிக்கும் திறன் படைத்தவள். அவள் திறன் ரேணுக்குட்டியிடம் மட்டும் தோற்றுவிடும் என்றாலும் சந்தோஷமாக தாய்மையை அனுபவிப்பவள். கருப்பு வெள்ளையாய் இருந்த தன் வாழ்க்கையை வண்ணமயமாய் மாற்றிய ரேணுவை தன் உயிரினும் மேலாய் நேசித்தாள்.

“உஸ்ஸப்பா….இப்ப தான் கண்ணு பளிச்சுனு தெரியுது..”

ஊஞ்சலில் எக்கி குதித்து உட்கார்ந்தாள் ரேணுக்குட்டி கையில் டீவி ரிமோட்டுடன்.

“அம்மா.. டோரா வரலயே…என்ன பண்ண…”

“கேபிள்ல கரண்ட் இல்லடி..குட்டிச் சாத்தான்.. போய் யூனிபார்ம் மாத்து. வந்த உடனே டீவி..”

“சரி பெரிய சாத்தான்.. எனக்கு பூஸ்ட் வேணும்..”

பெட்ரூம் சென்று தனது பிங்க் நிற சின்ன பீரோவிலிருந்து தனக்கு பிடித்தமான முக்கால் பேன்டும் வெள்ளை நிற டீ சர்ட்டும் அணிந்து. கையில் பார்பி பொம்மையும் எடுத்துக் கொண்டு டீவி வைக்கப்பட்டிருந்த மேசையின் அடியில் போய் அமர்ந்து. பார்பிக்கு தலைசீவி விட்டுக்கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் சமையலறையில் நல்ல வாசம் வரவே.”மம்மீ.. யம்மீயா ஸ்மெல் வருதே.. ” மூக்கை மோப்பம் விட்டபடி “பாஸ்த்தாவா.. நூடுல்ஸா… இப்பவே பசிக்குதே… ”

“ரெண்டும் இல்ல.. ”

“வேற என்னம்மா செய்யிற… ” கொழுக்கட்டை பிடிக்க வைத்திருந்த மாவில் சிறிய உருண்டையை கையில் எடுத்து உருட்டியவாறே மீண்டும் மேசைக்கடியில் புகுந்து கொண்டது அந்த சின்ன உருவம்.காய்கறிக் கலவையில் செய்த கொழுக்கட்டையை தட்டில் வைத்து மேசைக்கடியில் நீட்டினாள் சுஜா. “சூடா இருக்கு பாத்து சாப்பிடு. சாப்பிட்டு முடிச்சுட்டு.. தட்டை எடுத்துப் போய் சிங்க்ல போட்டு கை கழுவிட்டு வந்து தலை சீவிக்கோ..”

தட்டை வாங்கியவள், கொழுக்கட்டையை இரண்டு கடி கடித்துவிட்டு, “நல்லாவே இல்ல… ” என தட்டை அங்கேயே வைத்தாள்.

“வாயைப் பாரு.. ஏழு ஊருக்கு.. அனிதா மிஸ் கிளாஸ்ல கொஸ்டின் கேட்டப்போ இந்த வாய் எங்கே போச்சு..”

“போகும் போது என் கிட்ட சொல்லிட்டு போகலியே..” கையை கழுவியவாறே “பூஸ்ட் எங்க மம்மீ… ”

“இந்தா உன் பூஸ்ட்.. குடிச்சுட்டு வாசல்கிட்ட வா.. பேன் வாரனும்.. ”

சீப்புடன் வாசல் அருகில் அமர்ந்தாள் சுஜா. அவள் விழிகள் வாசலை பார்த்த வண்ணமே இருந்தது. பார்வையில் ஒரு ஏக்கம். வழிமேல் விழி வைத்து பார்த்திருந்தாள். சரோஜா சுஜாவின் அமைதியையும் பார்வையையும் வைத்து அவளின் மன ஓட்டத்தை உணர்ந்தாள். அவளால் பேசவும் முடியவில்லை. பேசாமல் இருக்கவும் முடியவில்லை. சுஜாவின் ஏக்கப்பார்வை தொண்டைக்குள் சிக்கிய முள்ளாய் சரோஜாவை வதைத்தது.

ஓடிவந்து ரேணுக்குட்டி சுஜா அருகில் அமர்ந்தாள்.

“ஒரு ஜடை போடவா.. ரெண்டா…”

ரெண்டு என விரல்களை காட்டினாள் ரேணுக்குட்டி.

“அப்பா எங்க போனாரும்மா.. ஸ்கூல்ல அந்த பென்சில் மூஞ்சி டெய்லி கேக்குறான்…”

சரோஜாவும் சுஜாவும் எதிர்பார்த்தபடியே ரேணுவிடம் இந்த கேள்வி வந்தது. சரோஜா விக்கித்து நின்றாள். இன்றைக்கு எதை சொல்லி சமாளிப்பது. என்றாவது ஒரு நாள் உண்மை தெரியத்தானே போகிறது என நினைத்துக் கொண்டாள்.

சுரேஷ் ராணுவத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் முக்கிய பொறுப்பில் பணிபுரிபவன் வருடத்தில் இருமுறை மட்டுமே விடுமுறையில் குடும்பத்தினரை பார்க்க வருவான். ரேணு – சுஜா மீது உயிரையே வைத்திருந்தான். 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின் போது வயதான தம்பதிகளை மீட்ட சுரேஷ் மற்றும் இன்னும் மூவர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் உயிரோடு இருப்பதாகவோ இறந்து விட்டதாகவோ எந்த ஒரு தகவலும் இல்லை. அவன் வருவான் என்ற நம்பிக்கையில் நாட்களை யுகங்களாக கடத்திக் கொண்டிருந்தாள் சுஜா. அவளின் மிகப்பெரிய வருத்தம் ரேணு பிறந்து இன்னும் ஒரு முறை கூட சுரேஷை பார்க்கவில்லை என்பது மட்டும் தான்.“அம்மா… சொல்லும்மா.. அப்பா எங்க போனாரும்மா.. ”

ரேணு சுஜாவின் கைகளை பலமாய் உலுக்கியதில் சுயத்திற்கு வந்தாள்.

“இங்கே உன்னை அம்மாவும் அம்மாச்சியும் பாத்துக்குறோம்ல.. அதே மாதிரி அப்பா எல்லையில நாட்டை பாத்துக்குறாரு. அப்பா மட்டுமில்ல அப்பா மாதிரியே நெறய பேரு நாட்டை எதிரிகள் கிட்டேர்ந்து பத்திரமா பாத்துக்குறாங்க. இங்க இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது அவங்க வந்து தன்னோட உயிர் பத்தி கவலை படாம நம்மள காப்பாத்துவாங்க. அவங்களால அடிக்கடி வீட்டுக்கெல்லாம் போக முடியாது. அங்கேயே தான் தங்கணும். குளிர் மழை எதுனாலும் அங்கேயே தான் இருக்கனும். அடுத்தவாட்டி உன்னை யாராவது அப்பா எங்கேனு கேட்டா… எங்கப்பா ராணுவத்துல இருக்காரு. நாட்டை பாதுகாக்கும் முக்கிய பணியில் இருக்காரு.. சீக்கிரம் வருவாருனு கம்பீரமா பெருமையா சொல்லு.. சரியா கண்ணு… ”

கண்ணை விரித்து பூரித்தபடியே தலையசைத்தாள் ரேணு.

சரோஜாவிற்கோ பெரும் ஆச்சரியம். சுஜாவிடம் இந்த நல்ல மாற்றத்தை கண்டு மனமகிழ்ச்சி அடைந்தாள்.

“ம்ம்.. பென்சில் மூஞ்சி கிட்ட நாளைக்கே சொல்றேன்” எழுந்து நின்றாள் “ஆமா… அம்மா.. நீ என்னை பாத்துக்குற…அப்பா நாட்டை பாத்துக்குறாரு.. அப்போ அப்பாவை யாரு பாத்துப்பாங்க… ”

“சாமி பாத்துக்கும்”

கண்ணீர் மல்க ரேணுவை ஆரத்தழுவி நெற்றியில் முத்தமிட்டாள்.

**********