பயிற்சி மையங்களின் நவராத்திரி
விழாக்காலம் என்றழைக்கப்படுகிற செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் பத்திரிக்கைகளில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நேரடி விநியோக நிறுவனங்களின் விளம்பரங்கள் நிறைந்திருந்தன. திடீரென தனிப்பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்கள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிலுள்ள நிறுவனங்கள். இவை நம் நாமக்கல் திருச்செங்கோடு பள்ளிகளைப் போன்றது போலும். இந்த திடீர் விளம்பரங்களுக்கு என்ன காரணம்? மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்ததுதான்;வேறென்ன? அமேசான் பிளிப்கார்ட் நிறுவனங்களை விஞ்சி இவைகள் விளம்பரம் கொடுக்க வேண்டுமானால் எவ்வளவு பணத்தை இதற்காக அள்ளி இறைத்திருக்க வேண்டும்? ஏன் செய்ய மாட்டார்கள்? பொறியியலுக்கும் மருத்துவக் கல்விக்குமான நுழைவுத்தேர்வு பயிற்சியை பெற கோடிக்கணக்கான பணத்தை செலவழிக்க பெற்றோர்கள் தயாராயிருக்கிறார்கள். ஆகவே தனிப்பயிற்சி என்பது பணம் கொட்டும் ஒரு வணிகமாகிவிட்டது.
அவங்க காட்டில மழை
இந்த புள்ளி விவரங்களைப் பாருங்கள். ஏப்ரல் – செப்டம்பர் 2020. கொரோனா உச்சத்தில் இருந்த காலம். ஆனால் இந்தியாவிலுள்ள தொடக்கநிலை நிறுவனங்களில்(start-ups) அந்நிய நேரடி முதலீடு ரூ 9250/ கோடி செய்யப்பட்டிருக்கிறது. ($100 மில்லியன்களுக்கு(ரூ 733கோடி) மேலான முதலீடுகள் மட்டுமே இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.) எட்டு முறை இப்படிப்பட்ட முதலீடு நடைபெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட இவை அனைத்துமே கல்வி, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கே சென்றிருக்கின்றன. வென்ச்சர் இன்டலிஜென்ஸ் என்கிற நிறுவனத்தின் தரவுகளின்படி 9250கோடி முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கு (3700 கோடி)பைஜூ என்கிற கல்வி தனிப் பயிற்சி நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. அன்அக்கெடமி நிறுவனத்திற்கு ஆயிரம் கோடியும் எரூடிட்டஸுக்கு 770 கோடியும் வேடான்டுவுக்கு 700 கோடியும் வந்துள்ளது.
தேவை எனும் வண்ணப் பூச்சு
இந்திய கல்வி மீது அந்நிய நேரடி மூலதனத்திற்கு ஏன் இந்த திடீர் கரிசனம்? 25கோடி இந்திய பள்ளிமாணவர்களின் அதிகரித்துக் கொண்டே போகும் தேவைகள்தான் காரணம் என அரசின் தீவிர ஆதரவாளர்கள் தொடர்ந்து வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியக் கல்வித்துறையை பற்றிப்பரவும் பிரம்மாண்ட முதலீட்டின் நோக்கத்தை மறைக்கும் வண்ணப் பூச்சே இந்த வாதம். இந்திய நுகர்வோரிடமிருந்து பெறும் இலாபத்தை அதிகபட்சமாக்கி மாபெரும் உபரியை அபகரிப்பதே இந்த முதலீட்டின் உண்மையான நோக்கம். இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் கடந்த முப்பதாண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை நிதித்துறையிலிருந்து சேவைத்துறைக்கு மாற்றியிருப்பது ஒரு முதன்மையான திருப்பம் என்கிறது உர்சுலா ஹியுஸ் என்பவரின் கட்டுரை. இதில் கல்வித்துறை முன்னிலையில் இருக்கிறது.
இடைத்தரகர்களாகும் நகர் மன்றங்கள்
இன்று நகரங்களில் சேவைகளை திட்டமிடுவதற்கு பெரும் ஆலோசனை நிறுவனங்கள் அமர்த்தப்படுகின்றன. தண்ணீர்,சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளை மக்களுக்கு வழங்கவேண்டிய நகரங்கள் அவற்றை தாங்களே செய்யாமல் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் செய்யுமாறு அவை வழிகாட்டுகின்றன. மூலதன திரட்டலும் உபரி உண்டாக்குவதும் பெருமளவில் இந்த வடிவிலேயே நடைபெறுகின்றன. இதற்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பவர்களாக நகர அமைப்புகள் மாறிக் கொண்டிருக்கின்றன.
இரையாகும் சேவைத்துறை
அடிப்படை சேவைகளான கல்வி,சுகாதாரம் போன்றவை சரக்குகளாக மாற்றப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த செயல்பாடுகளின் மூலம் உபரி மதிப்பின் பெரும் அபகரிப்பும் திரட்டலும் நடைபெறுகிறது. மூலதனக் குவிப்பு ஒருபுறம் வேகமெடுத்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு புறம் உண்மையில் புதிய உற்பத்தியும் வேலை வாய்ப்புகளும் குறையும் போக்கு நடைபெறுகிறது. இதற்கு என்ன பொருள்? பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் இலாபத்தை உற்பத்தியின் மூலம் தக்கவைத்துக் கொள்ளாமல் ஏற்கனவே இருக்கும் உற்பத்தி நிலைகளை விழுங்குவதன் மூலமே செய்கின்றன. உலகில் 1997 இல் நூறு பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் 7% சேவைத்துறையில் இருந்தன. 2006இல் அது 20% ஆக உயர்ந்துள்ளன. இதே காலகட்டத்தில் இங்கிலாந்தில் வெளியாரிடம் விடப்பட்ட சேவைகளின் மதிப்பு உள்நாட்டு உற்பத்தியில் 6%ஆக உயர்ந்தது. அதாவது 126% உயர்வு.
இந்திய நகரங்களில் நவீன தாராளமயம்
முதலாளித்துவத்தின் தன்மை நவீன தாராளமயத்திற்குப் பிறகு மாறிவிட்டது. உற்பத்தியின் மூலம் இலாபத்தை அதிகரிப்பதற்கு மாறாக, வீட்டுக் கடன், சேவைகளை சரக்குமயமாக்குவது போன்ற நிதித்துறை சார்ந்த மூலதனத்தின் பிற சூறையாடும் தன்மைகள் மூலம் நடைபெறுகிறது. ‘தொழில்களின் மீது அரசுக்குள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது; அமைப்பு ரீதியான தொழிலாளிகள் மீது தாக்குதல்கள் தொடுப்பது; கார்ப்பரேட் வரிகளை குறைப்பது; பொதுத்துறை சேவைகளையும் அதன் சொத்துக்களையும் தனியாருக்கு கையளிப்பது; சமூக நலத் திட்டங்களை நீக்குவது; இடம்விட்டு இடம் மாறும் சர்வதேச நிதியின் இயக்கத்தை அதிகரிப்பது; போட்டியை கடுமையாக்குவது ‘ ஆகியவை நவீன தாராளமயத்தின் இலக்கணங்கள் என்கிறார்கள் நிக் தியோடர், ஜாமி பெக், நெயில் பிரென்னர். முதலாளித்துவத்தின் இந்த வளர்ச்சி நிலை இந்திய நகரங்களில் தெளிவாக பார்க்க முடிகிறது. இது ஏற்ற தாழ்வுகளை மேலும் அதிகமாக்குகிறது.
சரக்காகும் கல்வி
மீண்டும் கல்வி பயிற்சி நிறுவனங்களுக்கு வருவோம். அவைகள் தாங்கள் பெறும் முதலீட்டின் பெரும்பகுதியை விளம்பரங்களுக்காகவும் இணைய வழிக்கல்வி அளிக்கும் பிற நிறுவனங்களை விழுங்குவதற்குமே செலவழிக்கின்றன. எடுத்துக்காட்டாக வொயிட்ஹேட்ஜேஆர் என்ற நிறுவனத்தை பைஜூ $300 மில்லியன்களுக்கு வாங்கிக்கொண்டது. அதே சமயம் அரசு, கல்வி வழங்குவது தேர்வு பயிற்சிகள் அளிப்பது போன்ற தனது பொறுப்பிலிருந்து கழண்டு கொள்கின்றது. கல்வி மக்களது உரிமை என்பதில்லாமல் சரக்காகி பெரும் பணம் ஈட்டும் துறையாகிவிட்டது.
சூப்பர் முப்பது
இப்படிப்பட்ட அசமுத்துவ நிலையில், விளிம்புநிலை மக்கள் முற்றிலும் ஒதுக்கப்படுவதையும் போட்டி என்கிற ஆரவாரங்களலெல்லாம் கேலிக்கூத்து என்பதைப் பார்க்க முடிகிறது. பீகாரில் விளிம்புநிலை மாணவர்களுக்கு ‘சூப்பர் 30’ திட்டம் எப்படி பயனளித்தது என்பதையும் பார்த்தோம். ஆனால் அதுகூட பிரச்சையை தீர்ப்பதற்கான அரைகுறை முயற்சியே. எல்லோருக்கும் குறிப்பாக சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அரசு இலவசப் பயிற்சி முகம் அமைக்க வேண்டும். மாணவ சமுதாயம் மற்ற பிரிவினருடன் இணைந்து பொது மேடைகளை அமைத்து மாணவர்களை இந்த நோக்கில் வழிநடத்த வேண்டும். என்னுடைய மாணவப் பருவத்தில் எல்லோருக்கும் சம வாய்ப்பளிக்கும் இலவச பயிற்சி மையங்கள் நடத்தப்படுவது சாதாரண நடப்பாக இருந்தது. ஜே என் யூ நுழைவுத்தேர்வுக்கும் மற்ற பல்கலைக் கழக தேர்வுகளுக்கும் இந்திய மாணவர் சங்கம் இப்படிப்பட்ட பயிற்சிகளை நடத்துகிறது என்று நினைக்கிறேன். மாணவர் இயக்கமானது இந்த பிரச்சினையில் அரசு முன்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வற்புறுத்துவதோடு, பெருந்தொகையான பள்ளி செல்லும் மாணவர்களை அணுகும் ஒரு உத்தியையும் வகுக்க வேண்டும்.
(பீப்பிள்ஸ் டெமாக்கரசி நவம்பர் 09-15 இதழில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.)