தெய்வம் இருப்பது எங்கே?

 

“அந்தக் கோவிலில் *கடவுள் இல்லை* “,  என்றார் துறவி.

 

கோபமுற்றார் மன்னர்; “கடவுள் இல்லையா?

ஏ… துறவியே, நாத்திகராய் ஏன் பேசுகிறீர்?

விலைமதிப்பற்ற இரத்தினங்களால் பதிக்கப்பட்ட சிம்மாசனத்திலே

தங்கச் சிலை ஒளிர்கிறதே, ஏனுரைத்தீர் காலியாக இருப்பதென்று? ”

 

“அது காலியாக இல்லை அரசே, உங்கள் பகட்டுப் பெருமையால்

நிறைந்துள்ளது – கோவிலில் உம்மை நிரப்பியிருக்கிறீரே அன்றி,

கடவுளை அல்ல”,என்றார் துறவி.

 

சினங்கொண்டார் கோமான்,

“விண்ணை முட்டும் பிரம்மாண்டக் கோவிலில்

கொட்டியுள்ளேன் இருபது லட்சம் பொன் நாணயங்களை!

சடங்கு அனைத்தும் செய்தபின்பே அர்ப்பணித்தேன் ஆண்டவனுக்கு !

அத்தகைய பெரிய கோவிலில் ஆண்டவன் இல்லை என்று

எப்படி நீங்கள் கூறத் துணியலாம்?”

 

அமைதியாகப் பதிலுரைத்தார் ஆத்மஞானி:

 

“வறட்சிக் கொடுமையில் வாடிய உமது குடிகள் இரு கோடிப் பேர் உணவின்றி உறங்க இடமின்றி ஏமாந்த ஏழைகள்

தட்டினர் உமது கதவை!

 

கண்ணீர் மல்க, பிச்சை கேட்ட பாமரனை விரட்டினீர் வீதியில்!

கடவுளைக் குடி வைக்க இருபது இலட்சம் பொன் செலவிட்ட நீர் உமது

குடிமக்களை குகைகளில், வனங்களில் தெருக்களில் இடிந்த கோயிலில்

அகதிகளாய் அனுப்பிய பொழுதில் உரைத்தான் ஆண்டவன்:

 

“சாந்நித்தியமான எனது வீடு ஜொலிக்கிறது

நீல வான் நடுவே சுடர்விடும் அணையா விளக்கில்.

 

என் அகத்தின் அடிக்கல் உண்மை, அமைதி, இரக்கம், அன்பு.

வீடற்ற குடிகளுக்குப் புகலிடம் வழங்கா அற்பக் கஞ்சனோ

எனக்கில்லம் வழங்கிடக் கனாக் காண்கிறான்?”

 

இறைவன் உன் ஆலயம் விடுத்து வெளியேறிய நாள் அது

சாலைகளில் மரங்களினடியில் ஏழைகளுடன் இணைந்தார்.

 

விரிந்த கடலின் வெற்று நுரை போல் செல்வமும் செருக்கினாலும் ஆன

வெறுங்குமிழி மட்டுமே உமது மண்ணுலக் கோவில்”.

 

கோபத்தில் அலறினான் மன்னன்,

“மோசடி முட்டாளே…இக்கணமே ஓடி விடு என் நாடு விட்டு.”

 

அமைதியாக பதிலளித்தார் துறவி,

“தெய்வீகத்தை நாடு கடத்திய  அதே இடத்திற்கு தயவுசெய்து

பக்தனாகிய அடியேனையும் அனுப்பி விடுங்கள்”.

 

—- *ரவீந்திரநாத் தாகூர்* 

 

(வங்காளி மொழி கவிதை. ஆங்கில வழியாகத் தமிழில்: *ஜெயராமன்* )

 அனுப்பிவைத்தவர் எஸ்.வி.வேணுகோபாலன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *