புலம் பெயர்ந்த இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடு எது?
“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்கிறது எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு. புறநானூறு எழுதப்பட்ட காலம் கி.மு.முதல் நூற்றாண்டு முதல் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குள் இருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அந்த காலத்திலேயே, நாடு விட்டு மற்ற நாடுகளுக்குச் செல்லும் ஆர்வம் இருந்திருக்கிறது. “திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது பழமொழி. இதை உணர்ந்து, முன்னேற்றத்திற்காக உலகின் எந்த மூலையிலும் சென்று வசிப்பதற்கு அஞ்சாதவர்கள் நம் மக்கள்.
2024ஆம் வருடம், மே மாத கணக்கெடுக்கின்படி, 350 இலட்சம் இந்தியர்கள் அயல் நாடுகளில் வசிக்கின்றனர். சொந்த நாட்டை விடுத்து, அன்னிய நாட்டில் வசிப்பவர்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் இருப்பது நம் அண்டை நாடான சைனா.
அதிகமான எண்ணிக்கையில் அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதுடன், அந்த நாட்டின் அரசியல், கொள்கை முடிவுகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களுக்கும், காரணமாகிறார்கள்.
புலம் பெயர்ந்த இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் முதலிடம் வகிப்பது அமெரிக்கா. சுமார் 54 இலட்சம் இந்தியர்கள் இங்கு வசிக்கிறார்கள். இது அயல் நாட்டில் வசிக்கும் மொத்த இந்தியர்களில் 1.6 சதவிகிதம். அமெரிக்காவின் ஜனத் தொகையில் இந்தியர்கள் 1.47 சதவிகிதம். அமெரிக்க நாட்டின் அரசுத் துறைகளில், 4.4 சதவிகித அமெரிக்க இந்தியர்கள் பணி புரிகின்றனர். அமெரிக்காவில், இந்தியர்கள் அதிகமாக வசிப்பது கலிபோர்னியா மாநிலத்தில். இரண்டாவது டெக்சாஸ், மூன்றாவது இடம் நியூ ஜெர்சி.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவராகப் பணி புரிந்தார். தற்போதைய துணை குடியரசுத் தலைவர் வான்ஸ் அவர்களின் மனைவி உஷா நம் நாட்டவர். தவிர, அமெரிக்க இந்தியர்கள் பலர் செனட்டர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். கூகுலின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் சத்ய நாடெல்லா போன்று பல பன்னாட்டு நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளை இந்தியர்கள் அலங்கரிக்கிறார்கள்.
இந்தியர்கள் அதிகம் வசிப்பதில் இரண்டாவது இடம் வகிப்பது யுனைடட் அராப் எமிரேட். இங்கு 36 இலட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். யுனைடட் அராப் எமிரேட், சௌதி அரேபியா, குவைத் ஆகியவை உள்ளடக்கிய மத்திய கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 70 இலட்சம். எண்ணெய் வளங்களினால், இந்த நாடுகளில், 1970லிருந்து எண்ணெய் கிணறுகளில் பணி புரிய மக்கள் தேவைப்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவிலிருந்து தொழில் திறமை பெற்றவர்கள் பலர் மத்திய கிழக்கு ஆசியா பகுதிகளில் பணியில் அமர்ந்தனர். தற்போதைய நிலவரப்படி, மத்தியகிழக்கு ஆசிய நாடுகளில் பணி புரியும் அயல் நாட்டு பணியாளர்களில், மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள். இதனால், நம்முடைய நாட்டிற்கு என்ன இலாபம்? 2023ஆம் ஆண்டில், அயல் நாட்டில் பணி புரியும் இந்தியர்கள், தாய் நாட்டிற்கு அனுப்பிய அன்னிய செலாவணி 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (10000 கோடி அமெரிக்க டாலர்கள்).

உலகிலேயே அதிகமான அன்னிய செலாவணி பெற்ற நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இது முந்தைய வருடத்தை விட 12 சதவிகிதம் அதிகம். இதற்கும் முந்தைய வருடத்தில் அன்னிய செலாவணி 7.5 சதவிகிதம் அதிகரித்து இருந்தது. முக்கியமாக இந்தியாவிற்கு பணம் அனுப்புவதில் அமெரிக்கா வாழும் இந்தியர்கள், மத்தியகிழக்கு ஆசியா இந்தியர்களை பின்னால் தள்ளி முதலிடத்தில் இருக்கின்றனர்.
கீழேயுள்ள அட்டவணையில், பன்னிரெண்டு அன்னிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையைப் பற்றிய விவரங்கள் காணலாம். அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர்களில் 77 சதவிகிதம் இந்த பன்னிரெண்டு நாடுகளில் வசிக்கிறார்கள்.
தரவரிசை | நாடு | இந்தியர் எண்ணிக்கை |
1 | அமெரிக்கா | 54 இலட்சம் |
2 | யுனைடட் அராப் எமிரேட் | 36 இலட்சம் |
3 | மலேசியா | 29 இலட்சம் |
4 | கனடா | 29 இலட்சம் |
5 | சௌதி அரேபியா | 25 இலட்சம் |
6 | மியான்மார் | 20 இலட்சம் |
7 | கிரேட் பிரிட்டன் | 19 இலட்சம் |
8 | தென் ஆப்ரிக்கா | 17 இலட்சம் |
9 | இலங்கை | 16 இலட்சம் |
10 | குவைத் | 9.96 இலட்சம் |
11 | ஆஸ்திரேலியா | 9.76 இலட்சம் |
12 | மொரீஷியஸ் | 8.95 இலட்சம் |
கட்டுரையாளர்:
கே.என்.சுவாமிநாதன்
சென்னை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.