ஒவ்வொரு நெருக்கடியின் போதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேறுவதற்கும், வெளியேற்றுவதற்கும் இந்திய வரலாற்றில் ஏராளமான முன் உதாரணங்கள் உள்ளன.  1896 ஆம் ஆண்டில் பிளேக் தொற்றுநோய்களின் போது பம்பாயின் மக்கள்தொகையில் பாதிபேர் நகரத்தை விட்டு வெளியேறினர். தொற்றுநோயிலிருந்து தப்பிக்க அவர்கள் பம்பாயிலிருந்து தப்பி ஓடியவர்கள் ஆனால் இந்த நோயையும் அவர்களுடன் எடுத்துச் சென்றனர். 1918 ஸ்பானிஷ் காய்ச்சலைத் தொடர்ந்து நகர மக்களில் பாதி பேர், பெரும்பாலும் குடியேறியவர்கள், பம்பாய் நகரிலிருந்து தப்பிச் சென்றனர். 1994 ஆம் ஆண்டில் மேற்கு இந்தியாவில் பிளேக் வெடித்தபோது, ​​தொழில்துறை நகரமான சூரத்திலிருந்து இருந்து நூறாயிரக்கணக்கான மக்கள் வெளியேறினர். பின்னர் 2005 மும்பையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல தொழிலாளர்கள் நகரத்தை விட்டு வெளியேறினர். ஒரு நூற்றாண்டுக்கு மேலாகியும், அதே பயம் இன்றும் இந்தியாவை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது என்று வரலாற்றாசிரியர் ஃபிராங்க் ஸ்னோடென், தனது ‘தொற்றுநோய் மற்றும் சமூகம்’ என்ற நூலில் விவரிக்கிறார்.

இடம் பெயர்ந்த தொழிலாளர்கள்

ஆண்டுக்கு பத்துலட்சம் இந்தியர்கள், அவர்களுடைய கிராமங்களைவிட்டு கட்டிடத் தொழில் போன்ற வேலைகளுக்கு நகர்புறங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள்.  கடந்த சில பத்தாண்டுகளாக இடம் பெயரும் போக்கு அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில், அதிக அளவிலான உள்நாட்டுக்குள் இடம்பெயர்தல் என்பது முக்கிய போக்காக மாறிவிட்டது. மேற்கு வங்கம், ஒர்ஸ்ஸா, பீகார் மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேறு மாநிலங்களில் இடம் பெயர்ந்துள்ளனர். மொத்த 45 கோடி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் என்றால், இவர்களில் 12 கோடி பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். இவர்களில் பெரும்பான்மையினர், தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 18 மாநிலங்களில் பணிபுரிகின்றனர் எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

       22 Migrant Workers Died Trying to Return Home Since the Lockdown … photo courtesy: kalaignar seithigal

இந்திய பெருநகரங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், விமான நிலையங்கள், ரயில்வே தாழ்வாரங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் போன்ற நூற்றுக்கணக்கான மிகப்பெரிய திட்டங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன.  அடிப்படக் கட்டுமானங்களான மேம்பாலங்கள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் வெறித்தனமாக வேகத்தில் கட்டமைக்கப்படுகின்றன. விரிவான தொழில் வளாகங்களையும், பரந்த வணிகத் தளங்களையும், அவற்றிற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கிக் கொண்டிருந்தவர்கள், இதர மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்த தொழிலாளர்கள்தான்.  இவர்கள்தான் ‘ஸ்மார்ட் நகர’ பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து கொண்டிருக்கின்றனர்.

சமூகமே முடங்கி போனது. இவர்கள் மட்டும் பயணிக்கின்றனர்

இந்தச் சூழ்நிலையில்தான் கொரானா, தன் தாக்குதலை ஆரம்பித்தது. இந்தியாவை முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. எல்லா மாநிலங்களும் முடங்கிப் போயின.  ஒரே இரவில் எல்லாம் மாறிவிட்டது. இவர்களுக்கு நேற்றுவரை ஒண்டுவதற்கு என்று ஒரு இடமாவது இருந்தது.  வயிறுக்குக் கொஞ்சம் சோறும் கிடைத்தது.  இப்போது இருந்த வேலையும் போய்விட்டது. வேலை செய்த எல்லா இடங்களும் மூடப்பட்டன, தங்கியிருந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். எதுவும் மிஞ்சவில்லை. ஊருக்கு அனுப்பி வைத்தது போக மிச்சமிருந்த கொஞ்சம் பணத்தையும் செலவழிக்க மனமில்லாத வாழ்க்கை மட்டுமே எஞ்சியிருந்தது.

எதிர்காலத்தின் மீதிருந்த நம்பிக்கைகள் எல்லாம் இற்றுப்போய் விட்டன. எல்லாவற்றையும் இழந்துவிட்டு நிர்கதியாக நின்றார்கள். உதவுவதற்கு யாரும் இல்லை.  அவர்களின் உழைப்பைச் சுரண்டிய முதலாளிகளும், அழைத்துவந்த ஒப்பந்தக்காரர்களும் எங்கேயோ மறைந்துவிட்டனர். ஒரே நாளில் இவர்களின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. இன்று இவர்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக மாறிவிட்டனர்.

   Migrant workers aren’t breaking lockdown rules. They want to go their hometown – photo courtesy: DailyO

இவர்களுக்கு என்று எந்த சங்கமும் கிடையாது. ஆனால் இப்போது எப்படியோ ஒன்று சேர்ந்துக் கொண்டனர். ஆண்கள், பெண்கள்,  குழந்தைகள், வயதானவர்கள் என்ற வேறுபாடின்றி அனைவரும் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். இந்தியா முழுவதும், லட்சக்கணக்கான  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களுக்கு வாழ்வளித்த நகரங்களை விட்டு வெளியேறி, தங்கள் கிராமங்களுக்குச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

மலிவான பிளாஸ்டிக் மற்றும் துணி பைகளில், தங்களுடைய கொஞ்ச நஞ்ச உடைமைகளைத் திணித்துக்கொண்டு, அவற்றை தலையில் சுமந்தப்படி அவர்கள் நடந்தனர்.  அவற்றில் இருந்தவை மீதமிருந்த உணவுப் பொருட்கள், குடிப்பதற்கு தண்ணீர், கிடைத்த துணிமணிகள் மட்டுமே. இளைஞர்களின் முதுகுகள் பாரமுள்ள பைகளை சுமந்தன.  குழந்தைகளும் நடந்துதான் வரவேண்டும். கால்களுக்கு செருப்பு கிடையாது. சிறிது தூரம், அவர்கள் பெற்றோரின் தோள்களில் உட்கார்ந்து கொள்ளலாம். அவ்வளவுதான்.

இரவானாலும் பகலானாலும், மழையானாலும் வெயிலானாலும், காடுகளிலும் மேடுகளிலும் இவர்களது பயணம் தொடர்ந்து கொண்டே யிருக்கின்றது. கோடைவெயிலின் வெம்மையைத் தாங்குவது, அவர்களுக்கு பெரிதாகத் தோன்றவில்லை. இரவில் வீசும் காற்றையும் நிலவின் குளிர்ந்த ஒளியையும்  அவர்களால் ரசிக்க முடியவில்லை. அவர்களது பயணம், கிராமங்களை நோக்கி, ஓட்டமும் நடையுமாய் கழிந்துக் கொண்டிருக்கிறது.

கிராமத்திலிருந்து வரும்போது வாழ்வதற்கு வழியிருக்கிறது என்ற நம்பிக்கை கொஞ்சம் துளிர்விட்டு இருந்தது.  இப்போது எல்லாவற்றையும் இழந்துவிட்டது போன்றதொரு உணர்வு அவர்களது மனதை அழுத்திக் கொண்டிருக்கிறது.  இருந்தால்தானே இழப்பதற்கு என்கிறீர்களா? உண்மைதான் இழப்பதற்கு அவர்களிடம் ஒன்றுமே இல்லை. அதனால்தான் அவர்கள் இத்தகைய துணிச்சலான முடிவை எடுத்தார்கள்.  ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே  செல்ல தமது பெரும் பயணத்தை துவங்கிவிட்டனர்.

                                                                      photo courtesy: Virakesari

விடுமுறைக் காலத்தில் இவர்களது சொந்த கிராமங்களை நோக்கிய பயணம் புகைவண்டியிலோ அல்லது சரக்குந்துகளிலோ அல்லது பேருந்துகளிலோ இருந்தது.    ஆனால் யாரையும், எதையும் எதிர்பார்க்கவில்லை. இப்போது இவர்களை நம்புவது இவர்களை மட்டுமே. நீண்ட காலத்திற்கு பிறகு, இந்திய மற்றொரு நீண்ட பயணத்தை தொடர்ந்துள்ளது. இவர்களுக்கு வழிகாட்ட எந்தத் திசைக்காட்டியும் இல்லை. வழிகாட்டிகளும் யாருமில்லை.  ஆள் அரவமற்ற சாலைகளில், கானல் நீரோட்டத்தில் இவர்களின் பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

அப்பொது, வறுமைதான் இவர்களைச் சொந்த கிராமத்திலிருந்து விரட்டியது.  இப்போதும் வறுமைதான் இவர்களை கிராமத்திற்கே மீண்டும் விரட்டியடிக்கிறது. சொந்த ஊருக்குச் செல்வதால்,  அங்கு அவர்களது வாழ்க்கை செழிக்கப்போவதில்லை என்று அவர்களுக்குத் தெரியும். மீண்டும் அதே வறுமை, அதே ஏழ்மைதான். இருந்தாலும் இவர்களது கால்கள் கிராமங்களை நோக்கியே நடந்து கொண்டிருக்கின்றன.  அங்கு இவர்களுக்கு என்ன கிடைக்குமோ தெரியாது. உழைப்பை உறிஞ்சிய நகரங்கள் கைவிட்டப் பின்பு, கிராமங்கள்  எதாவது ஒருவகையில் அவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கும் என்று நம்புகிறார்கள். எனவேதான், இவர்கள் தம்மை அறியாமலேயே, அனிச்சையாக கிராமத்தை நோக்கி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறார்கள்.

ஊரடங்கு இவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறை

ஊரடங்கு உத்தரவு, இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது உண்மைதான். என்றாலும், அத்தனை கொடுமைகளையும் எதிர்கொண்டார்கள். வழியெங்கும் பசி, பட்டினியில் தவித்தார்கள். காவல்துறையின் அத்துமீறல்களையெல்லாம் எதிர்கொண்டார்கள். இவர்கள் மீது இரசாயன மருந்து கலந்த தண்ணீரை பீச்சியடிக்கும் போதும்கூட அமைதியே காத்தார்கள். ஏனோ தெரியவில்லை அவர்கள் கோபத்தை இன்னமும் வெளிப்படுத்தவில்லை.  இருந்தாலும் அவர்கள் தமது வீடுகளுக்கு மட்டுமே செல்லவே விரும்பினார்கள்.

                                                photo courtesy: vikatan

நாடெங்கும் ஒருபுறம் கொரானா வைரால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்து கொண்டிருக்க, மறுபுறம் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமது சொந்த ஊருக்குத் திரும்பும்போது வழியிலேயே இறந்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஊருக்குச் சென்று சேர்வதற்கு முன்பாக இறந்தவர்கள் 22 பேர் என்ற செய்தி வந்துகொண்டிருக்கின்றது. பெரும்பாலும் உணவின்றி பசியில் இறந்தவர்கள் தான் அதிகம். அடித்தட்டு மக்களுக்கு நடைமுறைச் சாத்தியமான விசயங்கள்தானா என்பதை கவனிக்காமல், எதேச்சதிகாரமான உத்தரவுகள் பிறப்பிப்பதும், வேறு வழியின்றி அவை மீறப்படும் சூழ்நிலைமைகளில், காவல்துறையைக் கொண்டு ஒடுக்குவதும்தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.  மொத்தத்தில், இந்திய அரசின் ஊரடங்கு உத்தரவு என்பது இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்ட ஒடுக்கமுறையாகும்.

ஏன் இந்த பாரபட்சம்

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், யாத்திரைச் சென்றவர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின்  அவல நிலைக்கு குறித்து இந்திய அரசு மிகவும் கவலைப்பட்டது. அவர்களை எப்படியாவது அனுப்பி வைக்கவேண்டும் என்று குடியேற்ற நாடுகள் விரும்பின. அவர்களை எப்படியாவது பத்திரமாக மீட்டுக்கொண்டு வரவேண்டும் என்று இந்திய அரசும் ஏங்கியது. அவர்களுக்காக இந்திய தூதரகங்களும் அங்கிருந்த அரசுகளும் சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்தன.  மொத்த செலவையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டது. சில இடங்களில் தனியார் அமைப்புகள் ஏற்றுக் கொண்டன.

                               photo courtesy- Dinamani

தமது விலை உயர்ந்த உடைமைகள் அவர்களிடம் பத்திரமாக இருந்தன. வங்கிக் கணக்குகளில் சேமித்து வைத்திருந்த தொகைகளும் அப்படியே இருந்தன. எந்தச் சேதாரமும் இல்லாமல் அவர்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களில் பலர் கூடவே கொரானாவையும் கூட்டி வந்தார்கள்.  இருந்தாலும், இவர்கள் மரியாதையுடனும் கௌரமாகவும் நடத்தப்பட்டனர். ஆட்சியாளர்கள் இவர்களின் மீது கரிசனம் வைத்திருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், ஒவ்வொரு வருடமும் அரசுக்கு கோடிக்கணக்கான டாலர்களை அன்னிய செலாவணியாக ஈட்டித்தருகின்றனர். ஆனால் இந்தியாவிற்குள் இடம்பெயர்ந்தவர்களால் இந்திய அரசுக்கு நேரடியாக எந்த லாபமும் இல்லை.

இவர்கள் அரசியல் சக்தியாக மாறுவார்களா?

ஊரடங்கு அறிவித்ததிலிருந்து, பெரும்பாலான இந்திய நகரங்களிலிருந்தும் கிராமங்களை நோக்கி இவர்கள் நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.  இந்தியா முழுவதும் இதே காட்சிதான். ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்வதும், ஒரு மாவட்டத்தை விட்டு இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதும்தான் இந்திய வரலாற்றில் இன்றைய பெருநிகழ்வாகும்.  இந்தியாவின் அனைத்து திசைகளிலிருந்தும் குறுக்கும் நெடுக்காக, கிழக்கிலிருந்து மேற்கிலும், மேற்கிலிருந்து கிழக்கிலும், வடக்கிலிருந்து தேற்கிலும், தெற்கிலிருந்து வடக்கிலும் இவர்கள் பயணித்தவாறு இருக்கின்றனர். இவர்களின் பயணப் பாதைகள் கூகுள் வரைபடத்தில், இந்தியாவின் நரம்பு மண்டலமாகக் காட்சியளிக்கின்றன. இந்தியாவே கிராமத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று ஒருவர் சொன்னார்.

உண்மைதான். இந்தியாவின் உயிரோட்டம் கிராமத்தில்தான் இருக்கின்றது. இன்னொரு வகையில் சொன்னால்,  கிராமங்கள் இழந்தச் சக்தியை மீண்டும் புதிய வடிவில் பெற்றுக் கொண்டிருக்கின்றன. கொரானாவிலிருந்து தப்பித்துக் கொள்ள இந்த சமூகம் இருளில் ஓடி ஒளிந்துக் கொண்டது. ஆனால் இவர்கள் மட்டும் வெட்டவெளியில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு வானம் மட்டுமே துணையாகச் சென்று கொண்டிருக்கிறது.

                        புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் – photo courtesy: IBC Tamil

பூமி, இவர்களின் கால்களுக்கு  உரமேற்றிக் கொண்டிருந்தது. உண்மையில், இயற்கை தன்னை கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டிருக்கின்றது. இவர்களும் தங்கள் பங்குக்கு, செயலற்று கிடக்கும் சமூகத்தின் உயிரோட்டமாக இருக்கிறார்கள். கொரானாவிற்கு எதிராக போராட முடியாமால் அனைவரும் திணறிக் கொண்டிருந்தபோது, இவர்கள் மட்டும்தான் வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இது கொரானாவை உருவாக்கிவிட்ட முதலாளித்துவ கட்டமைப்பிற்கு எதிரான போராட்டம்.  முதலாளித்துவம் கொரானாவை மட்டும் உருவாக்க வில்லை, இவர்களது வாழ்க்கையையும் சூறையாடி யிருக்கின்றது என்பதை இவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

புலம்பெயர்ந்த இடத்தில் இவர்களுக்கு ஓரளவு பொருளாதாரப் பாதுகாப்பு இருந்தது உண்மைதான்.  நகரங்கள் அனைத்து முடங்கிப் போய்விட்டதால், இவர்கள் இப்போது சமூகப் பாதுகாப்பைத் தேடி கிராமங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஒருவேளை, அரசியல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தால், அவர்கள் வீட்டை நோக்கி திரும்பி யிருக்க  மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

சிறுசிறு குழுக்களாக வந்தவர்கள் இன்று ஒன்றாய் சேர்ந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் பெண்கள். இவர்கள் தேர்ந்தெடுத்த, நெடும்பயணம் நிச்சயம் இவர்களிடன் ஒரு மாற்றத்தை உருவாக்கும். இந்த பயணம் இவர்களுக்கு ஏராளமான அனுபவங்களை வழங்கியிருக்கிறது.  ஒரு பெரிய அரசியல் சக்தியாக மாறுவதற்கான தயார்நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் இந்திய பாட்டாளி வர்க்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் சக்தியாகத் திகழ்கிறார்கள்.

2 thoughts on “இந்தியா தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்ட போதும், இவர்கள் மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் -அண்ணா.நாகரத்தினம்”
  1. தங்கள் கிராமங்களை நோக்கி நெடும்பயணம் மேற்கொண்டுள்ள மக்களைப் பற்றிய நெகிழ்ச்சியான பதிவு. இந்த மக்கள் குறித்து நான் சமீபத்தில் படித்தவற்றில் மிகச் சிறந்த கட்டுரை .

  2. I am really sorry. Poor becomes more poor. Every action equal reasonable will be there. No word to say. I am shocked to this situation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *