உலகின் பல்வேறு நிகழ்வுகளை தீர்மானிக்க கூடியதாகவும் சமீப காலங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியதும் 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல். பாசிசத்தின், இனவெறியின், அறிவின்மையின் முழு அடையாளமாய் அறியப்பட்ட டிரம்ப், அமெரிக்க மக்களால் தோற்கடிக்கப்பட்டான். குறிப்பாக அமெரிக்காவின் நகரங்களில் வசிக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் டிரம்பிற்கு எதிராக வாக்களித்தனர். இறுதி நிமிடம் வரை வெற்றி யாருக்கென்று உறுதியாகாத அளவிற்கு மிக கடினமான நெருக்கமான இத்தேர்தலில் பைடனிற்கு வெற்றியை உறுதி செய்தது ஜார்ஜியா, பென்சில்வெனியா, மிச்சிகன், அரிசொனா, விச்கான்சின் போன்ற இழுபறி மாகாணங்களில் உள்ள நகரவாசிகள் தான். இந்த வெற்றிக்கு காரணமானவர்கள் ஜோ பைடனோ ஜனநாயக கட்சியோ அல்ல மாறாக வரலாறு காணாத அளவிற்கு வாக்காளர்களை அணிதிரட்டிய களப்பணியாளர்களும், அதை சாத்தியமாக்கிய மக்கள் இயக்கமும் தான். 2020 தேர்தலில் 66% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர், 1900லிருந்து நடந்த தேர்தல்களில் அதிக வாக்குகள் பதிவானது இத்தேர்தலில் தான். தொழிலாளர் வர்க்கமும், மத்தியத்தர வர்க்கமும், குறிப்பாக கறுப்பின பெண்களும் அதிக அளவில் வாக்களித்ததே இதற்கு காரணம்.
பொதுவாகவே நகரங்களில் வசிக்கும் மக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களாய் இருந்தாலும், குடியரசு கட்சியின் பலம் பொருந்திய மாகாணங்களான ஜார்ஜியா, பென்சில்வெனியா போன்ற மாகாணங்களில் பைடன் வெற்றி பெறுவதற்கு ஜார்ஜ் ஃப்லாய்ட் மரணத்திற்கு பிறகு அமெரிக்காவின் நகரங்களில் நடந்த எழுச்சி மிகு Black Lives Matters போராட்டங்களும், கொராணா வைரஸ் தாக்குதலால் நகர மக்கள் வெகுவாய் பாதிக்கபட்டதும் அதனை டிரம்ப் தலைமையிலான அரசு அலட்சியப்படுத்தியதும் மிக முக்கிய காரணிகள் ஆகும். இத்தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்று இருந்தாலும், டிரம்ப் பிரிதினத்துவப்படுத்திய பிற்போக்கு சிந்தனைகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அமெரிக்காவில் நிலவும் வர்க்க, பாலின, கிராமம்-நகரம், இன ரீதியான வேறுபாடுகள் அதிகரித்துள்ளது, அமெரிக்கா இந்த வேறுபாடுகளின் அடிப்படையில் ஆழமாக பிளவுப்பட்டுள்ளது என்பதையே இத்தேர்தலின் முடிவுகள் நமக்கு சுட்டி காட்டுகிறது.
கிராம-நகர வேறுபாடு
ஒரு சதுர மைலிற்கு (square mile) 100 பேருக்கும் குறைவாக வசிக்கும் பகுதிகளில் பைடன் சராசரியாக 30 சதம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் அதே ஒரு சதுர மைலிற்கு 2000 பேருக்கு அதிகமாக வசிக்கும் பகுதிகளில் பைடன் சராசரியாக 55 சதம் வாக்குகள் பெற்றுள்ளார். பெருநகரங்களில் 11 சதம் அதிக வாக்குகளும், நடுத்தர நகரங்களில் 5 சதம் அதிக வாக்குகளும் பைடன் பெற்றது தான் அவரின் வெற்றியை உறுதி செய்தது. கிராமங்களும் நகரங்களும் நேர் எதிராய் வாக்களித்ததிற்கு அமெரிக்காவின் கிராம பகுதிகளில் டிரம்பின் பிற்போக்கு சிந்தனைகளுக்கு ஆதரவு இருப்பதே மிக முக்கிய காரணம். மதத்தின் மீதான அதீத பற்று அதன் அடிப்படையில் அவர்களுக்கு கருகலைப்பு (abortion – கருகலைப்பு சரியான வார்த்தை அல்ல, புதிய சொல்லை கண்டறிந்து பயன்படுத்த வேண்டும்), காலநிலை மாற்றம் (climate change), கொராணா வைரஸ் தாக்குதல், இன ரீதியான ஒடுக்குமுறைகள், ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை பெரும் சமுக பிரச்சனையாக அவர்கள் கருதவில்லை, மாறாக முக கவசம் அணிவது கடவுளுக்கு எதிரானது, தனி மனித சுதந்திரத்தில் அரசு தலையிடுவது என்று தான் பெரும்பான்மையானோர் கருதுகின்றனர். முக கவசம் அணிவது தனி மனித சுதந்திரத்திற்கு இடையூறு என்று சொல்பவர்கள் தான் கருக்கலைக்கும் உரிமை பெண்களுக்கு இல்லை அது கடவுளினுடைய விருப்பத்திற்கு எதிரானது என்றும் சொல்கிறார்கள். இது போன்ற பிற்போக்கு கருத்துக்களை ஊக்குவிப்பதாகவே டிரம்பின் நான்கு ஆண்டு கால ஆட்சி இருந்தது. ஃபெடரல் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றங்களிலும் பழமைவாத, பிற்போக்கு சிந்தனை கொண்ட நீதிபதிகளை நியமித்தது குறிப்பிடத்தக்கது. எமி கோனி பாரட் (Amy Coney Barret), கருகலைப்பு தவறு, காலநிலை மாற்றம் என்பது உன்மையல்ல எனவே சுற்றுசுழல் பாதுகாப்பு சட்டங்கள் தளர்த்த படவேண்டும், தனி மனிதர்கள் துப்பாக்கிகள் வைத்திருக்க எந்த தடையும் இருக்க கூடாது போன்ற மிகவும் பிற்போக்கான, ஆபத்தான சிந்தனை கொண்ட இவரை தேர்தலிற்கு சில வாரங்களுக்கு முன்பு அவசரகதியில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமித்தான் டிரம்ப். இது போன்ற டிரம்பின் ஜனநாயக விரோத மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தான், டிரம்பிற்கு 74 மில்லியன் வாக்குகளை பெற்று தந்துள்ளது என்பதை மிக கவனத்துடன் ஆராய்ந்து எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. 2016 தேர்தலில் டிரம்பிற்கு 63 மில்லியன் வாக்குகள் தான் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வர்க்க வேறுபாடுகள்:
2016 தேர்தல் இரு வர்க்கங்களுக்கிடையிலான தேர்தலாக கருதப்பட்டது, அதில் ஹில்லாரி கிளிண்டன் வாள் சிடிரிட்டின் (wall street) பிரிதினிதியாகவே பார்க்கப்பட்டார். 2016ல் தொழிலாளி வர்க்கமும், குறிப்பாக மத்தியத் தர குடும்பங்களும் டிரம்பிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இது 2020ல் மாறுபட்டது, ஆண்டிற்கு 50,000 டாலர்களுக்கு குறைவான வருமானம் உள்ள குடும்பங்களில் 57 சதவீதமானோர் பைடனிற்கு ஆதரவாகவும் 41 சதவீதமானோர் டிரம்பிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர், இதுவே 2016ல் ஜனநாயக கட்சிக்கு 53 சதம் வாக்குகளே கிடைத்தது. ஆண்டிற்கு 50,000 – 100,000 டாலர்களுக்கு உட்பட்ட வருமானம் உள்ள குடும்பங்களில் 56 சதவீதமானோர் பைடனிற்கு ஆதரவாகவும் 43 சதவீதமானோர் டிரம்பிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர், இதுவே 2016ல் ஜனநாயக கட்சிக்கு 46 சதம் வாக்குகளே கிடைத்தது ஆனால் டிரம்ப் 49 சதம் வாக்குககள் பெற்று இருந்தான். ஆண்டிற்கு 100,000 டாலர்களுக்கு அதிகமான வருமானம் உள்ள குடும்பங்களில் 43 சதவீதமானோர் பைடனிற்கு ஆதரவாகவும் 54 சதவீதமானோர் டிரம்பிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர், இதுவே 2016ல் ஜனநாயக கட்சிக்கும் டிரம்பிற்கு தலா 47 சதம் வாக்குகள் கிடைத்தது. 2020 தேர்தல் பணம் படைத்தவர்களுக்கும், வறுமையில் வாடுபவர்களுக்கும், கொரோணா போன்ற நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள இயலாதவர்களுக்கும் இடையிலான தேர்தலாகவே பார்க்க வேண்டும். மூலதன குவிப்பிற்கு தடையாக இருக்கும் சுற்றுசுழல் பாதுகாப்பு சட்டங்களை தளர்த்தியது, செல்வந்தர்களுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் வரி சலுகை வழங்கியது தொழிலாளர்களை டிரம்பிற்கு எதிராகவும், செல்வந்தர்களை டிரம்பிற்கு ஆதரவாகவும் திரட்டியது.
கறுப்பின பெண்களின் வெற்றி:
2020 தேர்தலில் மிகுந்த கசப்பான ஆச்சரியத்தையும், நுட்பத்துடன் ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய போக்காகவும் அமைந்தது கறுப்பின மற்றும் லத்தினோ மக்களின் வாக்குகள். 2016 தேர்தலை விட டிரம்பிற்கு கறுப்பின மக்களிடமிருந்து 2020 ல் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. குறிப்பாக கறுப்பின ஆண்களின் டிரம்ப் ஆதரவு வாக்குகள் 2016ல் 13 சதமாக இருந்தது 2020ல் 18 சதமாக உயர்ந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது டிரம்பின் குடியெற்றதிற்கு எதிரான நடவடிக்கைகளும் பிரச்சாரமும்(anti-immigration politics) தான். நவதாராளமய கொள்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்டது கறுப்பின மற்றும் லத்தினோ மக்கள் தான். பெரும்பாலான கறுப்பின மற்றும் லத்தினோ மக்கள் குறைதிறன் (low-skilled and semi-skilled) தொழிலாளர்களாகவே இருக்கின்றனர், எனவே அமெரிக்காவில் சட்டரீதியாகவும் சட்டவிரோதமாகவும் குடியேறுபவர்களுடன் (legal and illegal immigrants) வேலைக்காக போட்டி போடுபவர்களாக இவர்களே இருக்கின்றனர். 2016 – 2020 காலக்கட்டத்தில் வேலை வாய்ப்பு அதிகரிக்கவில்லை, கொரோணா காலத்தில் இன்னும் மோசமடைந்தது ஆனாலும் டிரம்பின் குடியேறுபவர்களுக்கு (immigrants) எதிரான அரசியல் அவனுக்கு உதவியுள்ளது கவனிக்க வேண்டியது. இந்த கறுப்பின மற்றும் லத்தினோ மக்களிடையே அதிகரித்துள்ள டிரம்ப் ஆதரவு போக்கை சுட்டிக்காட்டி அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான அரசியல் நீர்த்து போய் விட்டது என சிலர் கட்டியம் கூறுகிறார்கள். அந்த வாதங்களை எல்லாம் தவுடுப்பொடியாக்கும் அளவிற்கு அளப்பரிய களப்பணியாற்றியுள்ளனர் கறுப்பின பெண்கள். இன்னும் சொல்லவேண்டுமென்றால் 2020 தேர்தலில் பைடனிற்கும் ஜனநாயக கட்சிக்கும் வெற்றியை தேடித்தந்ததே கறுப்பின பெண்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக டெட்ராய்ட், அட்லாண்டா, மில்வாக்கி, ஃபிலடல்ஃபியா போன்ற நகரங்களில் அவர்கள் செய்த களப்பணியே இழுபறி மாகாணங்களில் பைடன் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. கடந்த 28 ஆண்டுகளில் முதன்முறையாக ஜார்ஜியா மாகாணத்தில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்று வரலாறு படைத்ததற்கு ஸ்டெசி அப்ராம்ஸ் (Stacy Abrams) என்னும் கறுப்பின பெண் தலைவர் மிக முக்கிய காரணம் ஆவார். அமரிக்காவில் 2018ல் கவர்ணர் பதவிக்கு போட்டியிட்ட முதல் கறுப்பின பெண் இவர் தான். வெற்றி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகள் இருந்து வாக்களர்களை பதிவு செய்ய விடாமல் ஒடுக்கியதால் வெறும் 50,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தோல்வியால் துவண்டுப்போகாமல், வாக்களர்களை பதிவு செய்வதையே அரசியல் பணியாக எடுத்துக்கொண்டு செயல்பட்டார் ஸ்டெசி, இதன் விளைவு 2020ல் 800,000 புதிய வாக்களர்கள் ஜார்ஜியா மாகாணத்தில் பதிவு செய்தார்கள், இதுவே ஜார்ஜியா நீலமாக மாறியதற்கு காரணம். குறிப்பாக வெள்ளை இனத்தை (non white) சாராத பெண்களின் வாக்குகள் 2016உடன் ஒப்பிடுகையில் 69 சதம் உயர்ந்திருந்தது. காவல்துறை ஒடுக்குமுறை, அமைப்புரீதியான எற்றத்தாழ்வு, ஆணாதிக்க கொள்கைகளுக்கு எதிரான அணித்திரட்டலே இந்த வரலாறு காணாத வெற்றிக்கு காரணம் என்கிறார்கள் ஸ்டெசி மற்றும் பிற கறுப்பின பெண் தலைவர்கள்.
ஜனநாயக கட்சியில் பிளவு:
2020 தேர்தலில் வெற்றிக்கு காரணம் எற்றத்தாழ்வுக்கெதிரான, இனவெறிக்கெதிரான, ஆணாதிக்கதிற்கெதிரான அணித்திரட்டலேயென்றாலும், இதை ஜனநாயக கட்சியின் தலைமை முற்றிலுமாய் அங்கீகரித்ததாய் தோன்றவில்லை. தேர்தல் முடிந்த சில நாட்களிலயே ஜனநாயக சோசியலிஸ்டாக தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ, ஜனநாயக கட்சியின் தலைமை முற்போக்காளர்களை ஒதுக்குவதாகவும், முதலாளித்துவ ஸ்தாபனத்திற்கு சாதகமாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும் இதே நிலை தொடர்ந்தால் வருகின்ற செனட் (senate) தேர்தலில் ஜனநாயக கட்சி தோல்வியை சந்திக்கும் என்றும் கூறினார். ஜனநாயக கட்சியின் தலைமையில் இருக்கும் பலரும் 2020ல் நடந்த செனட் தேர்தலில் பல இடங்களில் ஜனநாயக கட்சி தோல்வியடைந்ததற்கு அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ போன்ற ஜனநாயக சோசியலிஸ்ட்களும் அவர்கள் முன் வைத்த காவல்துறைக்கான நிதியை குறைத்தல் (defund police), துப்பாக்கி வைத்திருக்க கடுமையான சட்டங்கள் (strict gun laws), அனைவருக்கமான் மருத்துவ வசதி (medicare for all) போன்ற கொள்கைகளே காரணம் என்றனர். ஆனால் இதற்கு நேர்மாறாக இந்த கொள்கைகளை ஆதரித்த ஐந்து ஜனநாயக சோசியலிஸ்ட்களும் 2020 செனடர்க்கான தேர்தலில் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வரும் காலங்களில் ஜனநாயக கட்சி முற்போக்கு சிந்தனையாளர்களை இணைத்தும் மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்னெடுத்தால் மட்டுமே மீண்டும் ஒரு டிரம்ப் உருவாவதை தடுக்க முடியும்.
லைசாலை ஊசியாக போட்டுகொள்ளுங்கள் என்று சொன்ன டிரம்பிற்கு தான் 74 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதை நாம் மறக்க கூடாது. அதே நேரத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் அயராத உழைப்பும், களத்தில் அணித்திரட்டலுமே பாசிசத்தின் இனவெறியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது என்பதையும் நாம் உணர வேண்டும். ஆணாதிக்க, பாசிச இனவெறி போக்குகளை களத்தில் தொடர் போராட்டங்களின் மூலமும் அணிதிரட்டலின் மூலம் மட்டுமே வீழ்த்த முடியும் அதுவே இடைப்பட்ட காலங்கலில் தேர்தல் வெற்றிகளாய் பிரிதிபலிக்கும்.
கிஷோர்குமார் – பொருளியில் ஆய்வாளர், மாசாச்சூஸட்ஸ் பல்கலைகழகம், அமெரிக்கா.
நன்றி: இளைஞர் முழக்கம்

