நவம்பர் 24 அன்று, புகழ்பெற்ற அசாமிய தளபதி லச்சித் போர்புகான் 400 வயதை எட்டுகிறார்.

ஆண்டு முழுவதும், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான அஸ்ஸாம் அரசு, அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாட்டங்களை நடத்தியது.

பிப்ரவரியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடியசைத்து விழாவைத் தொடங்கி வைத்த நிலையில், நவம்பர் 23 முதல் 25 வரை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

அசாம் மாநில பாஜக அரசு தேசம் முழுவதும் உள்ள பத்திரிக்கைகளில் லச்சித் போர்புகானின் முழு பக்க விளம்பரத்தை கொடுத்துள்ளது.

லச்சித் போர்புகான் முகலாயர்களை வீழ்த்திய இந்து மன்னன் என்ற சாயத்தை பூசித்தான் இந்த விளம்பரத்தை கொடுத்து வருகிறார்கள்.

பாஜகவினர் மதத்தை பயன்படுத்தி தரம் தாழ்ந்த அரசியலுக்கு செல்வார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. தமிழகத்தின் திருவள்ளுவரையே காவி சாயத்துக்குள் கவிழ்த்தவர்கள்.

“சத்ரபதி சிவாஜிக்கு நாடு வழங்கிய அதே கண்ணியத்தைப் பெறாத” அஹோம் ஜெனரலுக்கு “சரியான மரியாதைக்குரிய இடத்தை” உறுதி செய்வதற்காகக் கொண்டாட்டங்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார் .

1671 ஆம் ஆண்டு சராய்காட் போரில் முகலாயப் படைகளைத் தோற்கடித்த போர்புகன் என்ற வீரராகவே அசாமில் எப்போதும் போற்றப்படுகிறார்.

அசாமில் பிஜேபியின் எழுச்சிக்குப் பிறகு, அவரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போர்வீரராகக் காட்ட கட்சி ஆர்வமாக உள்ளது. சர்மா, “முஸ்லிம் படையெடுப்பாளர்களை” தடுப்பதற்காக போர்புகானை அடிக்கடி பாராட்டியுள்ளார் .

“இது 2016 மாநிலத் தேர்தலை ‘சராய்காட்டின் கடைசிப் போர்’ என்று பாஜக முத்திரை குத்தியது. இதில் காங்கிரஸை முகலாயர்களுடன் ஒப்பிட்டு சமன் செய்தது. அசாமியர்கள் காவி கட்சியுடன் நெருக்கமாக இருக்குமாறு பாஜக வலியுறுத்தியது.

2021 ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலுக்கு முன்பு, BJP இன்னும் வெளிப்படையான இந்துத்துவாவைத் தூண்டியது. மேலும் காங்கிரஸும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியும் சட்டவிரோத குடியேறிய முஸ்லீம்களை ஆதரிப்பதாக முதல்வர் சர்மா பிரச்சாரம் செய்தார்.

சமீபத்தில், அவர் முகலாயர்களை தோற்கடித்ததால் இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் போர்புகானை புறக்கணித்ததாக குற்றம் சாட்டினார்.

அஹோம் இராச்சியம்:

அஹோம் இராச்சியம் (​​1228–1826) அஸ்ஸாமில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் வரலாற்றின் இடைக்காலத்தின் பிற்பகுதியில் இருந்தது. வடகிழக்கு இந்தியாவில் முகலாய விரிவாக்கத்தை வெற்றிகரமாக எதிர்த்து சண்டைபோட்டது.

சுமார் 600 ஆண்டுகள் அதன் இறையாண்மையை அது தக்கவைத்து ஆட்சிசெய்தது. மோங் மாவோவின் (இன்றைய யுன்னான் மாகாணம், சீனா) தை (TAI) இளவரசரான சுகபாவால் நிறுவப்பட்டது.

இது 16 ஆம் நூற்றாண்டில் சுஹுங்முங்கி ஆட்சியின் கீழ் விரிவடைந்து. முழு பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த அரசு விரிவாக்கம் செய்யப்பட்டபோது பல இனங்களின் தன்மைகளை கொண்ட அரசாக மாறியது. மோமோரியா கிளர்ச்சியின் எழுச்சியுடன்(அதிகார போட்டி) இராச்சியம் பலவீனமடைந்தது.

பின்னர் அஸ்ஸாம் மீது பர்மாவின் தொடர்ச்சியான படையெடுப்பைத் தொடரந்து தொ அஹோம் அரசு வீழ்ச்சியடைந்தது. முதல் ஆங்கிலோ-பர்மியப் போருக்குப் பிறகு பர்மியர்களின் தோல்வி அடைந்தனர்.

1826 ல் யாண்டபோ உடன்படிக்கையின் மூலம், இராச்சியத்தின் கட்டுப்பாடு கிழக்கிந்திய கம்பெனியின் கைகளுக்குச் சென்றது. இதுதான் இந்த அஹோம் ராஜ்ஜியத்தின் கதை.

லச்சித் போர்புகன்:

லச்சித் போர்புகன் (24 நவம்பர் 1622 – 25 ஏப்ரல் 1672) தற்போதைய அஸ்ஸாமில் அமைந்திருந்த அஹோம் இராச்சியத்தில் தளபதி மற்றும் போர்புகன் ஆவார். போர்புகான என்றால் அமைச்சர் என்று பொருள்படும்.

லச்சித் டெக்கா பின்னர் லச்சித் போர்புகானாக மாறினார். அஹோம் ராஜ்ஜியத்தில் 5 போர்புகன்களில் ஒருவராக இந்த லச்சித் போர்புகான் இருந்தார். இந்த முறையை அஹோம் மன்னர் பிரதாப் சிங்கவால் உருவாக்கப்பட்டது.

அஹோம் ராஜ்ஜியத்தின் அதிகார வரம்புடன், இந்த பதவி நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரங்களை உள்ளடக்கியது. போர்புகானின் தலைமையகம் கலியாபோரிலும்1681 இல் இட்டாகுலி போருக்குப் பிறகு குவஹாத்தியில் உள்ள இடகுலியிலும் அமைந்திருந்தது.

அஹோம் தலைநகரில் இருந்து தொலைவில் இருந்ததால் சக்தி வாய்ந்ததாகவும் சுதந்திர சாயலை கொண்டதாகவும் இருந்துசெயல்பட்டது.கலியாபோரின் கிழக்கே உள்ள பகுதி லச்சித் போர்புகனால் ஆளப்பட்டது.

அஹோம்கள் 1615-1682 வரை ஜஹாங்கீரின் ஆட்சியில் இருந்து அவுரங்கசீப்பின் ஆட்சி வரை தொடர்ச்சியான மோதல்களில் ஈடுபட்டனர்.

ஆரம்பகால இராணுவ மோதல் ஜனவரி 1662 ல் நடைபெற்றது. முகலாயர்கள் ஒரு பகுதியில் வெற்றிபெற்று அசாமின் சில பகுதிகளையும், அஹோம் தலைநகரான கர்கானின் சில பகுதிகளையும் கைப்பற்றினர்.

இழந்த அஹோம் பிரதேசங்களை மீட்பதற்கான எதிர்த்தாக்குதல் அஹோம் மன்னர் ஸ்வர்கதேயோ சக்ரத்வாஜ சிங்காவின் தலைமையில் தொடங்கியது. அஹோம்கள் சில ஆரம்ப வெற்றிகளை பெற்றனர்.

அவுரங்கசீப் 1669 ல் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த ஜெய்ப்பூரின் ராஜா ராம் சிங் தலைமையில் இழந்த பகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக அனுப்பினார். இறுதியில் 1671 ல் சராய்காட் என்ற இடத்தில போர் நடந்தது.

மொகலாயர்கள் தங்கள் பாரிய படைகளுடன் திறந்தவெளியில் போரிட வந்தனர். லச்சித் போர்புகன் கெரில்லா தந்திரங்களை பயன்படுத்தி யுத்தம் செய்தார். லச்சித் பெரிய முகலாய முகாம்களிலும், நிலையான நிலைகளிலும் சேதத்தை ஏற்படுத்தினார்.

சராய்காட் யுத்தத்தில் லச்சித் தலைமையிலான அகோம் படைகள் வெற்றி பெற்றது.

இதற்காக லச்சித் போர்புகன் அசாம் மக்களால் எப்போதும் போற்றப்படுகிறார்.

1930ம் ஆண்டிலிருந்து தளபதி லச்சித் பிறந்த நாள் விழா அசாம் மக்களால் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னால் அசாமில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு கௌஹாத்தியிலுள்ள பிரமபுத்திரா பகுதியில் 35 அடி உயரமுள்ள லச்சித் சிலையை அமைத்தது. 1999 ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு அகடமி தேர்ச்சி பெற்ற வீரர்களுக்கு லச்சித் பெயரில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

1930ம் ஆண்டு கொண்டாடப்படுகிற விழாக்களில் லச்சித் ஒரு மதம்சார்ந்தவராக அடையாளப்படுத்தப்படவில்லை. சராய்காட் போரும் மதம் அடிப்படையில் பார்க்கப்படவில்லை. அவ்வாறு நடைபெறவும் இல்லை. மன்னராட்சி சாம்ராஜ்யங்களின் விரிவாக்கத்தை எதிர்த்த போராகவே அது இருந்தது.

லச்சித் போர்புகன் இந்து மதத்தைச்சேர்ந்தவர் அல்ல. தை(TAI ) மொழிபேசும் பழங்குடி மதத்தைசேர்ந்தவர். அஹோம் அரச பகுதிகள் இந்து மதம்சார்ந்த பகுதியும் இல்லை. மன்னர் சிப் சிங் [1714-1744] ஆட்சியின் போது மட்டுமே இந்து மதம் பிரதான மதமாக மாறியது.

லச்சித்தின் கீழ் இருந்த பல வீரர்கள் பழங்குடியின மதத்தைச் சேர்ந்தவர்கள்
அஹோம் ராணுவத்தில் முஸ்லிம்களும் முக்கியப் பதவிகளை வகித்தனர்.

உதாரணமாக, பாக் ஹசாரிகா என்றும் அழைக்கப்படும் கடற்படை ஜெனரல் பதவியை வகித்தவர் இஸ்மாயில் சித்திக் என்ற முஸ்லீம் ஆவார்.

லச்சித் போரிட்ட முகலாய தளபதி அம்பரைச் சேர்ந்த ராஜா ராம் சிங் கச்வாஹா [ஒரு ராஜபுத்திரர்] என்பதால் அதற்கு எந்த மதக் கோணமும் இல்லை. ஔரங்கசீப்பின் படையில், பல இந்து வீரர்கள் இருந்தனர்.

போர்புகானின் புராணக்கதை முதன்மையாக அவரது வீரம் மற்றும் கடமை உணர்வு பற்றி பாடப்பட்டது. போரின் போது அவர் போராடிய மிக உயர்ந்த கடமை உணர்வின் காரணமாக பாராட்டப்பட்டார் தவிர மதத்தின் சிறப்பால் அல்ல.

400வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வடகிழக்கின் வரலாற்றைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்கான ஒரு வழி என்ற அளவில் பாக்கப்பட வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

அஸ்ஸாமில் உள்ள வரலாற்றாசிரியர்கள் போர்புகானின் கதை வகுப்புவாதப்படுத்தப்பட்ட விதம் மற்றும் அஹோம் ராஜ்ஜியத்திற்கும் முகலாய சாம்ராஜ்யத்திற்கும் இடையிலான போரை இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான போராக மாற்றுகிற மத துவேஷ வேலை களை பாஜக செய்வதை கண்டிக்கின்றனர்.

அசாமில் பிஜேபியின் எழுச்சிக்குப் பிறகு, அவரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போர்வீரராகக் காட்ட கட்சி ஆர்வமாக உள்ளது. “முஸ்லிம் படையெடுப்பாளர்களை” தடுப்பதற்காக போர்புகானை அடிக்கடி பாஜக தலைவர்கள் பாராட்டியுள்ளார் .

வடகிழக்கு மாநிலத்தில் பாஜக மதவெறி அரசியலை நிலை நாட்டுவதற்கு பழங்குடி போர் வீரர்களை இந்து என்ற சாயத்தை பூசி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்களாக மாற்றி கலவரத்தை உருவாக்கி வருகிறது.

இந்திய நாடு முழுவதும் சத்ரபதி சிவாஜி, ராணா பிரதாப் சிங் போன்ற மன்னர்களை இந்து மன்னர்களாக கட்டமைத்து இஸ்லாமியரை எதிர்த்து போராடியவர்கள் என்ற மத வெறி உணர்வை ஊட்டியது. தற்போது அந்தப் பட்டியலில் அசாம் வீரர் லச்சித் போர்புகானை சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்துள்ளது.

பாஜக நினைத்தபடி வரலாற்றை மாற்றி எழுதும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

– அ.பாக்கியம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *