சிங்கார சென்னையை யார் பாதுகாப்பது? | Who will protect Singara Chennai? Environment Article by Thomas Franco - https://bookday.in/

சிங்கார சென்னையை யார் பாதுகாப்பது?

சிங்கார சென்னையை யார் பாதுகாப்பது?

சென்னை மாநகரத்தை சிங்கார சென்னையாக மாற்ற மாநில அரசில் ஆட்சி செய்தவர்கள் கோடி கணக்கில் செலவழித்துள்ளனர். ஆனால் சென்னை சிங்கார சென்னையாக மாறவில்லை. சென்னை மாநகர முதல் திட்டம் 426 ச. கி. மீட்டரில் இருந்து 2011ல் இரண்டாம் திட்டம் 1189 ச.கி. மீட்டருக்கான திட்டமானது. இது முடியும் முன்னரே ஐந்து மடங்கு விரிவாக்கும் 5904 ச.கி. மீட்டருக்கான மூன்றாம் திட்டம் 2022-ல் அறிவிக்கப்பட்டு சில தனியார் நிறுவனங்கள் திட்டம் தீட்டி கொடுத்து கொண்டிருக்கிறார்கள். 1976- 2001 முதல் வரைவு திட்டம்- அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவது, மாநகரத்தின் நெருக்கடியை குறைப்பது, தொழில்களையும் சந்தைகளையும் பரவலாக்குவது என வரையறுத்தது.

இரண்டாம் திட்டம் (2008-2026) சென்னையை ஒரு முக்கிய பெருநகரமாக, வாழ்வதற்கு வசதியான, பொருளாதார ரீதியாக வலுவான, நிலையான சுற்றுச்சூழலை உருவாக்கி வருங்கால சந்ததிக்கு வழி அமைத்துக் கொடுக்கக்கூடிய நகரமாக்குவோம் என சொன்னது.

மூன்றாம் திட்டமோ (2027-2046) திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வரை விரிவாக்குவது, புதிய நகரங்களை உருவாக்குவது, ஒரு சுற்றுச் சாலை அமைப்பது, மெட்ரோ ரயில் தடங்களை அதிகரிப்பது, சாலைகளை அதிகரிப்பது, புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பது என கூறுகிறது. 40000 பேரிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவிக்கிறது பெருநகர மாநகராட்சி. 1 1/4 கோடி மக்கள் தொகை கொண்ட சென்னையில் 40000 பேரிடம் மட்டும் கருத்து கேட்பது போதுமானதல்ல.

இதுவரை நடந்துள்ளதன் அடிப்படையில் பார்த்தால் பேரழிவை சந்திக்கப் போகிறோம் என தோன்றுகிறது.

சென்னையின் துயரம்:

1. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 80 ச.கி.மீ பரப்பளவும், 235 ச.கி.மீ நீர் சேகரிக்கும் இடமும் இருந்த பள்ளிக்கரணை இப்போது 500 ஹெக்டேர் மட்டுமே உள்ளது. அதுவும் சுருங்கி கொண்டிருக்கிறது.

2. கொசஸ்தலையாறு: வட சென்னையில் இருக்கும் இந்த ஆறு ஆக்கிரமிப்புகளாலும், கழிவுநீர் கலப்பதாலும் கழிவுநீர் ஆறாக மாறி இருக்கிறது.

3. கூவம் கால்வாய்: மத்திய சென்னைக்கு ஒரு காலத்தில் வரப் பிரசாதமாக இருந்த கூவம் இப்போது துர்நாற்றம் வீசும் சாக்கடை ஆகிவிட்டது.

4. அடையாறு : தென் சென்னைக்கு அரணாக இருக்கும் அடையாறு இன்று சாக்கடை கழிவுகளாலும், ஆக்கிரமிப்புகளாலும் திக்கி திணறுகிறது.

5. பக்கிம் காம் கால்வாய்- 438 கி. மீட்டருக்கு திட்டமிட்டு வெட்டப்பட்ட இந்த கால்வாய் ஆக்கிரமிப்புகளால் வெறும் சாக்கடையாக மாறிவிட்டது.

6. பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் திடக்கழிவு மலைகள்: மலை போல் குவிந்திருக்கும் கழிவுகளுக்கு தீர்வு இல்லை. சென்னையின் அசிங்கம் இவை.

7. எண்ணூர் கழிவுகள்: சாம்பல், விஷ வாயு, கால்வாய்கள் மூடல் என மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், வசிக்கும் மக்களின் சுகாதாரத்தையும் பாதிக்கும் எண்ணூர்.

8. போக்குவரத்து நெருக்கடி: பேருந்து நிலையங்களும் மெட்ரோவும் மட்டும் தீர்வல்ல. நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

9. மழைநீர் கால்வாய்கள்: ஆக்கிரமிப்புகளாலும், இணைப்புகள் இல்லாமலும் ஒவ்வொரு மழையிலும் சென்னையை திக்கு முக்காடும் 1800 கி. மீட்டர் மழைநீர் வடிகால் கால்வாய்களுக்கு தீர்வே இல்லை.

10. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்: ஊழலின் ஊற்று கண்ணாக இருக்கிறது. இதனுடன் DTCP யும் இணைந்து அழிவுக்கு வழி வகுக்கின்றன.

மூன்று ஆறுகளும், கூடுதலாக தென் சென்னையில் உள்ள பாலாறும், பக்கிங் காம் கால்வாயும் , மாம்பலம் கால்வாய் , வேளச்சேரி கால்வாய், கொடுங்கையூர் நளா, ஓட்டேரி நளா, விருகம்பாக்கம்- அரும்பாக்கம் கால்வாய், வீராங்கால் ஓடை, காப்டன் காட்டன் கால்வாய், வில்லிவாக்கம் கால்வாய், ஒக்கியம் மடவு என இருந்து இணைப்பு கால்வாய்களும் ஏரிகளும் சென்னையின் வரப்பிரசாதம். சென்னை என்றும் மழையால் பாதிக்கப்படாமலும் தண்ணீர் பற்று குறை இல்லாமலும் இருக்க இவை போதும் வேண்டியது புனரமைப்பும், பாதுகாப்பும்.

சுற்றி இருக்கும் கடல்: ஓர் அரண், உணவு கிட்டங்கி மற்றும் பாதுகாவலன். ஆனால் கவனிப்பாரில்லை.

புதிய ஆபத்து

1. பரந்தூர் விமான நிலைய திட்டம் சென்னையில் கூடுதல் அழிவுக்கு வழிவகுக்கும். கைவிட்டே ஆக வேண்டும். ( இது குறித்து விளக்க இன்னொரு கட்டுரை தேவை)

2. அதானியின் துறைமுக விரிவாக்க திட்டம், காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்க அனுமதிக்கப்பட்டால் சென்னையும், மீனவர்களும் அழிந்து விடுவார்கள்.

3. அடுக்கு மாடி குடியிருப்புகள்: முறையான திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் சுத்திகரிப்பு, இயற்கை வள பராமரிப்பு இல்லாமல் கோடிக்கணக்கில் செலவிட்டு கட்டப்படும் குடியிருப்புகள் பேரழிவுக்கு வழி வகுக்கின்றன.

யார் பாதுகாப்பது?

மக்களால் மட்டுமே முடியும். சென்னை விரிவாக்க திட்டமாக இருந்தாலும் சரி, காலநிலை மாற்றத்துக்கான செயல் திட்டமாக இருந்தாலும் சரி, மக்களிடம் விவாதிக்கப்பட வேண்டும்; விளக்கப்பட வேண்டும்; ஆதரவு திரட்டப்பட வேண்டும். சென்னையில் நிபுணர்களுக்கு பஞ்சமில்லை. குரல் கொடுக்கும் அமைப்புகள் அதிகரித்து வருகின்றன.

பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் நீண்ட நாட்களாக செயல்படுகின்றன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் சில ஆண்டுகளாக விழிப்புணர்வு நடை, கருத்தரங்கு, அறிக்கைகள் என மக்களை திரட்டி முயற்சி செய்கிறது. ஒவ்வொரு பேரழிவுக்கு பின்னாலும் செயல் திட்டங்கள் வகுத்து கொடுக்கப்படுகின்றன. ஆனால் அமல்படுத்துவதில் பிரச்சனை. எனவே,

1. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின், அமைப்புகளின் கூட்டியக்கம் வேண்டும்.

2. மக்கள் கருத்து கேட்பு முறையாக நடத்தப்பட வேண்டும்.

3. வார்டு வாரியாக சுற்றுச்சூழல் பராமரிப்பு குழுக்கள், திட்டங்கள் செயல்படுத்தும் குழுக்கள் வேண்டும்.

4. அரசு மக்களையும், இங்குள்ள நிபுணர்களையும் விட்டுவிட்டு உலக வங்கி ஆலோசகர்களை வழிகாட்ட கேட்பதை நிறுத்த வேண்டும்.

5. குடியிருப்போர் நல சங்கங்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். தவறுகளை திருத்த வேண்டும்.

6. தேம்ஸ் நதி எப்படி சாக்கடையிலிருந்து மீட்கப்பட்டு நன்னீர் நதியாக லண்டனில் ஓடுகிறது என கற்றுக்கொண்டு செயல்திட்டம் அமலாக்க வேண்டும்.

7. 6340 ச. கி.மீ கொண்ட ஷாங்காய் நகரம் எப்படி செயல்படுகிறது என தெரிந்து கொள்ள வேண்டும்.

8. நெதர்லாந்தில், சீனாவில் மழை நீர் எப்படி சேகரிக்கப்படுகிறது என பார்க்க வேண்டும்.

இவையெல்லாம் யாருக்கும் தெரியாததல்ல. ஏதோ ஒரு பாதுகாவலர் நமக்காக வருவார் என காத்திருக்காமல், மாணவர்கள், இளையோர், பெண்கள், வயோதிகர்கள்( ஓய்வு பெற்றவர்கள்) என பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். அறிவொளி இயக்கம் போல் அரசும் மக்களும் இணைந்த ஒரு பேர் இயக்கம் மட்டுமே சென்னையை பாதுகாக்கும். மக்களை திரட்டுவோம்! திட்டமிடுவோம்! செயல்படுத்துவோம்!

 

கட்டுரையாளர் : 

சிங்கார சென்னையை யார் பாதுகாப்பது? | Who will protect Singara Chennai? Environment Article by Thomas Franco - https://bookday.in/

தாமஸ் பிரங்கோ
சுற்றுச்சூழல் ஆர்வலர்

தே.தாமஸ் பிராங்கோ மேனாள் பொதுச் செயலாளர் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேனாள் தாளாளர் எஸ் பி ஒரே பள்ளிகள் ஒருங்கிணைப்பாளர் சுற்றுச்சூழல் அமைப்பு.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 2 Comments

2 Comments

  1. மக்கள் ஓட்டுக்கு பணம் ஆதரவு உள்ளவரை மக்களுக்கு புரட்சிகர சிந்தனைகள் வராமல் நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கும் அறியாமை மக்கள் உட்பட , மனபாட மார்க் கல்வி நல்ல சிந்தனையாளர்களாக உருவாக்குவதில்லை
    நல்ல கல்வி நல்ல அரசியல்வாதிகள் நல்வாழ்வியல் முழுவிழிப்புணர்வு மக்களாக மாறினால் தான் தீர்வு

  2. குமரன்

    அருமையான பதிவு மக்கள் ஒன்று இருந்தால் ஒழிய சென்னையை காப்பாற்ற இயலாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *