இது யாருடைய சமஸ்கிருதம்? – முண்டோலி நாராயணன் (தமிழில் இரா.இரமணன்)

இது யாருடைய சமஸ்கிருதம்? – முண்டோலி நாராயணன் (தமிழில் இரா.இரமணன்)

 

           இந்தியாவின் கடந்த காலத்தை, சமஸ்கிருதம் என்கிற வளைபரப்பின் கீழ் ஒருமுகப்படுத்துவதன் மூலம்  நம் நாட்டின் பல்வேறு மொழிகளில் படைக்கப்பட்டுள்ள  பன்முக கலாச்சாரம், அறிவியல் முறைகள் ,கலை வெளிப்பாடுகள் ஆகியவை மக்களின் மனங்களிலிருந்து முற்றிலும் அழிக்கப்படும். நிகழ்காலத்தை மட்டுமல்ல கடந்த காலத்தையும் தன்மயமாக்கிக் கொள்ளும் ஒரு அரசியல் திட்டத்திற்காக இது செய்யப்படுகிறது. நரேந்திர மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு முக்கிய அம்சமான  சமஸ்கிரதத்திற்கு கொடுக்கப்படும் தீவிர அழுத்தம் பலரை திகைப்புக்குள்ளாக்கியிருக்கிறது. முக்கியத்துவம் மறுக்கப்பட முடியாத மற்ற செம்மொழிகளுடன் சமஸ்கிரதமும் பள்ளிக் கல்வியிலும் உயர் கல்வியிலும் ஒரு முக்கிய, சிறப்பு சேர்க்கும் தெரிவாக மாணவர்களுக்கு அளிக்கப்படும். மும்மொழி திட்டத்தில் ஒரு தெரிவாகவும் அது இருக்கும். 

“பல்வேறு மத நம்பிக்கையாளர்கள், மத மறுப்பாளர்கள் மற்றும் வேறுபட்ட சமூக பொருளாதார பின்னணி கொண்ட மனிதர்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எழுதி வைக்கப்பட்டுள்ள ‘சம்ஸ்கிருத அறிவியல் முறை’ என்று அறியப்பட்ட கணிதம், தத்துவம், இலக்கணம், இசை, அரசியல், மருத்துவம், கட்டிடக்கலை, உலோக இயல், நாடகம், செய்யுள், கதை சொல்லல் மேலும் பல எண்ணற்ற பொக்கிஷங்களைக் கொண்ட சமஸ்கிரதம், இலத்தீனும் கிரேக்கமும் சேர்த்து பார்த்தாலும் அவற்றைவிட மிகப் பெரும் அளவில் செவ்விலக்கியங்களைக் கொண்டுள்ளது”

என்று கல்விக் கொள்கை தன் முடிவை நியாயப்படுத்துகிறது. இப்படிப்பட்ட பழமையான பாரம்பரியமான ஆகச் சிறந்த மனித சிந்தனை  வெளிப்பாடுகளின் கருவூலக் களஞ்சியமாக இருக்கும் ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில் என்ன தவறு என்று சிலர் அப்பாவித்தனமாக கேட்கலாம். மேலும் சமஸ்கிருதத்திலிருந்துதானே பெரும்பாலான இந்திய மொழிகள் தோன்றியுள்ளன அல்லது அவற்றின்  வளர்ச்சியின் பல்வேறு  வரலாற்றுத் தருணங்களில் சமஸ்கிருதத்திலிருந்துதானே ஏராளமாக பெற்றுக் கொண்டுள்ளது என்று அவர்கள் கூறலாம். இன்னும் சிலர் துணிந்து பல மேலை நாட்டு மொழிகளின் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமஸ்கிருதம்தான் என்று சொல்லலாம். தங்கள் வாதத்தின் ஆதாரத்தையும்  தங்கள் முடிவின் மெய்மையையும் தெரியாமல் அவர்கள் இவ்வாறு அடித்துவிடுகிறார்கள். இதற்கு வாட்ஸ் ஆப் ஒரு முக்கிய குற்றவாளி.

சமஸ்கிருதம் மொழிகளின் தாய் ...

           சமஸ்கிருதத்தையோ வேறந்த மொழியையோ கற்பதில் எந்த தவறுமில்லை. மொழி எனும் சாளரம் மூலம்தான் கலாச்சாரம், வரலாறு, மக்களின் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை தெரிந்துகொள்கிறோம். புதிய மொழி ஒன்றை கற்றலே ஒரு புதிய உலகத்தின் அனுபவத்தையும் வெளிப்பாடுகளையும் நமக்கு திறந்துவிடுகிறது. இல்லாவிடில் நாம் அவை பற்றி அறியாமலே இருந்து விடுவோம். மொழிகள் அவை வளர்ச்சி அடைந்த குறிப்பிட்ட வாழ்நிலையிலிருந்து கிடைக்கும் புதிய சிந்தனைப் போக்குகள், பரந்துபட்ட பார்வைகள் ஆகியவற்றிற்கு நம்மை அழைத்து செல்கின்றன. இவ்வாறாக மொழிகள் உலகின் எண்ணற்ற வகைகளையும் பன்முகத் தன்மையையும் நமக்கு காட்டுகிறது. 

           சம்ஸ்கிருத பாடல். ஆடல் போன்றவற்றால் நிரம்பியிருந்த ஒரு சூழலில் வளர்ந்தவன்; சிறுவயதிலிருந்தே சந்த இசையுடன் ஓதப்பட்ட சுலோகங்களைக் கேட்டுப் பழகியவன் என்ற முறையில் நான் சமஸ்கிருதத்தைக் கற்பதை வெறுக்கவே முடியாது. எனக்கு சோறு போடுவது ஆங்கிலம் என்றாலும் சம்ஸ்கிருத நாடகம், நடிப்பு குறிப்பாக அதன் கேரளா வகையான குடியாட்டாம்  ஆகியவற்றையே பெரும்பகுதியாக ஆய்வு செய்யும் மாணவன் என்ற முறையில் அதன் வளமையையும் அறிவியல் மதிப்புகளையும் மறுக்கும் கடைசி ஆளாக நான் இருப்பேன். ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம், பள்ளிக் கல்வி நிலையிலும் உயர் கல்வி நிலையிலும் முக்கிய மற்றும் முன்னுரிமைப் பாடமாக அறிவிக்கப்படும்போது அது வேறு பரிமாணங்களை எடுக்கிறது. தனிப்பட்ட ஈடுபாடு, தனி நபரின் தெரிவு என்கிற எல்லைகளுக்குள் நாம் இல்லை; ஒரு மொழியைக் கற்பது, கற்பிப்பது என்கிற சாதாரண விசயமாகவும் இல்லை. மாறாக நிகழ்காலத்தையும்  கடந்த காலத்தையும் தன்வயமாக்கி அவற்றின் மீது தன் முத்திரையை பதிக்க விழையும் ஒரு அரசியல் திட்டத்தின் பிடிக்குள் இருக்கிறோம்.

கடந்தகால சித்திரம் 

           இந்தக் கொள்கை நம் முன் வைக்கும் கடந்தகால சித்திரம் என்ன? 

‘இந்தியாவின் பழமையான அமரத்துவமான அறிவு மற்றும் சிந்தனைகளை  அடிப்படையாகக் கொண்ட வளமையான பாரம்பரியத்தையே இந்தக் கொள்கை தனது வழிகாட்டியாகக் கொண்டிருக்கிறது. இந்திய சிந்தனைப் போக்கு மற்றும் தத்துவத்தில் அறிவு,ஞானம்,மெய்மை ஆகியவற்றின் தேடலே எப்பொழுதும் உயர்ந்தபட்ச இலக்காக கருதப்பட்டு வந்துள்ளது. வாழ்க்கைக்கு தேவையான அறிவைப் பெறுவது  மட்டுமே கல்வியின் நோக்கமாக பண்டைய இந்தியாவில் இருந்ததில்லை. முழுமையாக தன்னை அறிவதும் முக்தியுமே அதன் நோக்கமாக இருந்தது.’ 

என்று அது கூறுகிறது. ஆக சமஸ்கிருதம் வெறும் ஒரு மொழியாக அல்ல, ஒரு புனிதமான பண்டைக் காலத்தின் இணைப்பு மொழியாகவே காட்டப்படுகிறது. மேலீடாகப் பார்த்தால் கூட, வலிந்து ஏற்றப்பட்ட, உண்மைக்குப் புறம்பான, ஒரு ஒற்றைத் தன்மை கொண்ட பண்டைக்காலத்தை சமைக்கும் முயற்சி இது என்று தெளிவாகும். ஒரு புறம் பழங்காலத்தை பெருமைக்குரியதாகக் காட்டுவதன் மூலம் இந்த வாதம், இந்திய சமூகத்தின் குணாம்சமாக இருந்த ஆழமான சமூகப் பிளவுகள்,பூசல்கள் ஆகியவற்றை மக்களின் மனக் கண்களிலிருந்து திறம்பட மறைக்கிறது. பண்டைக் காலத்திற்கு ஒரு பொய்யான ஒருமைப்பாட்டை அளித்து அங்கு நிலவிய சாதீய, சமூகப் பிரிவினைகளையும் வேறுபாடுகளையும் பூசி மெழுகி புறம் தள்ளப் பார்க்கிறது. இப்படிக் கொண்டாடப்படும் பாரம்பரியம், சலுகை பெற்ற சிலரின் தனியுரிமையாக இருந்தது என்பதையும் ‘சம்ஸ்கிருத அறிவுத் தொகுப்பு’ என்று சொல்லப்படுவதிலிருந்து பெரும்பான்மை மக்கள் பலாத்காரமாக விலக்கி வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதையும் ஓரளவு முறையாகக் கற்ற எந்த சரித்திர மாணவனும் சொல்லிவிடுவான். மேலும் சமஸ்கிருதம் என்கிற குடையின் கீழ் இந்தியாவின் பழமையை ஒருமைப்படுவதன் மூலம் மற்ற சமூகங்களும் மொழிகளும் படைத்திருக்கின்ற மாபெரும் கலாச்சார,அறிவுச் செல்வங்களை மக்கள் பார்வையிலிருந்து திறம்பட அழித்துவிடுகின்றன.

            இந்திய மக்களில் பரந்துபட்ட பிரிவினர் இந்தப் பழமையை சாதகமாகப் பார்க்கவில்லை என்பதை இந்த வரைவாளர்கள் முற்றிலும் உணர்ந்து கொள்ளாதது போல் தோன்றுகிறது. இவர்கள் தலை மேல் தூக்கி வைத்துக் கொள்ளும் சமஸ்கிரத அறிவுமுறையின் மூலம்தான் தங்கள் முன்னோர்கள் மனிதாபிமானமற்றதும் கொடுமையானதுமான சமூக விலக்கலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டார்கள் என்பதை அவர்கள் மறக்கவில்லை. இந்த ‘செவ்வியல் பாரம்பரியத்தை’ அவர்கள் எவ்வாறு பார்த்தார்கள் என்பதற்கு பி.ஆர்.அம்பேத்கார் மனுஸ்மிருதியை எரித்ததே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. நால்வருணம் எனும் சமூகக் கோட்பாட்டின் மூலம் நாட்டு மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை தீண்டத்தகாதவர்கள், சாதியற்றவர்கள் என்று சபிக்கப்பட்டதற்கும் சாதீயப் படிநிலை கொண்ட நிறுவனமாக சமூகத்தை மாற்றியதற்கும் தருக்க நியாயத்தைக் கொடுத்த ஊடகமாகவும் அந்த போக்கின் பிரிக்க முடியாத அங்கமாகவும் இருந்தது சமஸ்கிருதமே என்பதை கொள்கை வரைவாளர்கள் மறந்துவிட்டார்கள் அல்லது அவர்களது கூர்மையான பார்வையில் நழுவிவிட்டது. ‘பாரத்’ என்பதிலும் அதன் ஒளிமிக்க பாரம்பரியத்தின் மீதும்  குவிக்கப்படும் அடைமொழிகள் இது ஒன்றும் தெரியாமல் நடந்துவிட்ட தவறு இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. 

               ஆகவே அரசின் கொள்கையாளர்களுக்கு சமஸ்கிருதம் வெறும் மொழியோ அல்லது அறிவுத் தொகுப்போ அல்ல என்பது வெளிப்படை. அது கடந்த காலத்தை பார்க்கும் ஒரு கண்ணோட்டம் மற்றும் அதை பாரபட்சமாக புரிந்து கொள்ளும் அடையாளம். முக்கியமாக சமஸ்கிருதத்தை  இன்றைய நிலைமைக்கு புனருத்தாரணம் செய்யும் முயற்சியானது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வளைக்க செய்யும் அரசியல் கட்டுமானங்களைக் குறிக்கிறது. இந்த இடத்தில் பிரித்தானிய அரசியல் தத்துவார்த்தவாதி ரோஜர் கிரிபினுடைய ‘தேசத்தை மறுபிரசவம் செய்யும் தீவிரவாதம்’ எனும் கருதுகோள் மிக முக்கியத்துவம் பெறுகிறது. அது ஒரு தீவிரவாத பலாத்கார தேசியமாகும். முன்பொரு காலத்தில் இருந்ததாகக் கருதப்படும் ஒரு சமுதாயத்தை மறு பிரசவம் அல்லது மறு உருவாக்கம் செய்வது; நாட்டின் சரித்திரத்தில் நிகழ்ந்த  ‘பொற்காலத்திற்கு’ மீண்டும் திரும்புவது ஆகியவற்றிற்கான  வாக்குறுதியின் அடிப்படையில் அது அமைகிறது. இப்படி சில குறிப்பிட்ட, தெரிவு செய்யப்பட்டதும் பெரும்பாலும் கற்பனையாக புனையப்பட்டதுமான கடந்த காலம் சிறந்த வருங்காலத்திற்கான வழிகாட்டியாகவும் அமையவிருக்கின்ற சமூகத்தின் சட்டகமாகவும் அமைந்து விடுகின்றன.

Mundoli Narayanan - Frontline

            இப்பொழுது சமஸ்கிருதத்திற்கு கொடுக்கப்படும் கவனம்  ஒரு அப்பாவித்தனத்திலிருந்து மாறிவிடுகிறது. நாட்டின் அரசியல் தளத்தை முற்றுகையிட்டிருக்கும் வலதுசாரி சக்திகளின் உந்துவிசையாக இருக்கும் தத்துவத்தில் வேரூன்றியிருக்கும் ஒன்றாக ஆகிறது. இந்துத்துவா எனும் முத்திரை அழுத்தமாகப் பதிக்கப்பட்டிருக்கும் ஒரு பொதியின் பகுதியாகவும் இருக்கிறது. யோகா, ஆரூடம், பகுத்தறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கைகள், சாமியார்களை போற்றுதல் ஆகியவையுடன் இதுவும் சேர்ந்துள்ளது.

இவற்றையெல்லாம் விட ஒரு பாசிச, எதேச்சாதிகார, பெரும்பான்மை மக்களை விலக்கி வைக்கக்கூடிய அரசியல் அதிகாரத்தின் தத்துவார்த்த அச்சாக அது இருக்கிறது. இதை அதன் போக்கில் விட்டுவிட்டால், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தின் இழப்பிற்கு இட்டு சென்றுவிடும். அதை ஏற்றுக்கொண்டால், நம் நாட்டின் பன்முக, சனநாயக கலாச்சாரத்தின் அழிவுக்கே வழி வகுக்கும். 

ஆகவே இப்பொழுது கொண்டுவரப்படும் சமஸ்கிருதம் யாருடையது என்ற கேள்விக்கு அது என்னுடையது அல்ல என்பதே பதிலாகும். என்னுடைய சமஸ்கிருதம், எல்லாவற்றையும் உடைத்து எறியக்கூடிய பாசாவின்(Bhasa) பாரம்பரியத்தை சேர்ந்தது; எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கும் லோகாயத முறையை சேர்ந்தது; சாக்கியர்களின் கூர்மையான அங்கதம்; எல்லாவற்றையும் புரட்டிப் போடுகின்ற மகாபாரதத்தின் கிளைக் கதைகள் இவையே என் சமஸ்கிருதமாகும். ஏனென்றால் என்னுடைய இந்தியா அப்படியான ஒன்றாகத்தான்- விமர்சனபூர்வமான, பன்முகத்தன்மையான, புனிதங்களை போற்றாத – ஒன்றாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

– முண்டோலி நாராயணன் கோழிக்கோடு பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர். அவருடைய ஆய்வின் பெரும்பகுதி நாடகம் மற்றும் நடிப்பு குறிப்பாக கேரளாவின் சம்ஸ்கிருத நாடக வடிவமாகிய குதியாட்டம்.

 

 

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *