இன்று ஏப்ரல் 14, அம்பேத்கரின் பிறந்த நாள். இதே நாளில், அம்பேத்கரின் பேத்தியை திருமணம் செய்துள்ளவரும், இந்தியாவின் மதிப்புமிக்க அறிவுஜீவிகளில் ஒருவருமான பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே-வை கைது செய்யப் போகிறார்கள். அதுவும் UAPA சட்டத்தின் கீழ்.

அவர் மீதான குற்றச்சாட்டு என்ன?

’மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்படும் சில வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எழுதிய கடிதத்தில் இவர் பெயர் குறிப்பிடப்படிருந்தது.’ எப்படி? வெறுமனே To ஆனந்த் என்று. ‘ஆனந்த் டெல்டும்டே’ என்று கூட குறிப்பிடப்படவில்லை. வெறும் ஆனந்த். அதற்காக கைது. இந்தியாவில் ஆனந்த் என்ற பெயரில் குறைந்தது இரண்டு லட்சம் பேராவது இருக்க மாட்டார்கள்? ஆனால், அந்த கடிதங்களில் குறிப்பிடப்படும் ஆனந்த் என்ற பெயருக்குரியவர் இவர்தான் என்று முடிவு செய்துவிட்டது காவல்துறை.

UAPA-ன் கீழ் கைது செய்தால் பிணை கிடைக்காது. தண்டனைக்கான கால வரம்பும் கிடையாது. விசாரணையின்றி எவ்வளவு காலமும் சிறையில் அடைக்க முடியும். அப்படி ஒரு கொடிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன? அப்படி இவர் இழைத்த தவறு என்ன?

ஆனந்த் டெல்டும்டே, இந்தியாவின் மதிக்கத்தக்க ஓர் அறிவுஜீவி. IIM-ல் படித்தவர். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்தவர். மத்திய அரசு நிறுவனமான Petronet India Ltd-ன் நிர்வாக இயக்குனராகவும், சி.இ.ஓ.வாகவும் பணியாற்றியவர். ஐ.ஐ.டி. காரக்பூரின் பேராசிரியராக ஐந்தாண்டு காலம் இருந்தவர். இப்போது Goa Institute of Management-ல் Big Data Analytics- துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றுபவர்.

The day before Anand Teltumbde is to be arrested, he writes an ...

இந்தியாவின் மதிப்பு வாய்ந்த பல்கலைக்கழகங்களில் படித்து, தன்னுடைய முழு பணிவாழ்வையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உச்சப் பதவிகளில் கழித்திருந்தாலும், டெல்டும்டே எப்போதும் மக்களின் சார்பாக சிந்தித்தவர். ‘உலகமயமாக்கல் தலித்கள் வாழ்வில் செலுத்தும் தாக்கம்’, ‘அம்பேத்கரியவாதிகள் எதிர்கொள்ளும் சவால்கள்’, ‘சாதிய குடியரசு’ என்பன உள்ளிட்ட 30 நூல்களை எழுதியவர். ‘எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ இதழில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதியவர்.

இவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, ’மோடியை கொல்ல சதி செய்தார்’ என்பது. இவருக்கும், மோடிக்கும் என்ன சம்பந்தம்?

2018-ம் ஆண்டில் மகாரஷ்டிரா மாநிலம் பீமா கொரேகான் என்ற இடத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. மராட்டிய பேஷ்வா படைகளை, ஆங்கிலேயர்களுடன் இணைந்து தலித் படைவீரர்கள் வெற்றிகொண்ட இடம்தான் இந்த பீமா கொரேகான். இந்த வெற்றியின் 200-வது வருடம் மற்றும் இந்த இடத்துக்கு அம்பேத்கர் சென்று அஞ்சலி செலுத்தியதன் 100-வது வருடம்… இரண்டையும் இணைத்து நடத்தப்பட்ட கூட்டம்தான் அது.

2018 ஜனவரி 1-ம் தேதி நடைபெற்ற எல்கர் பரிஷத் என்ற அந்த கூட்டத்தில் பலர் பேசினர். இறுதியில் இந்த நிகழ்ச்சி வன்முறையில் முடிந்து ஒருவர் பலியானார். ’வன்முறையை மேற்கொண்டோர் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள்’ என்பது மற்றவர்கள் வைத்த குற்றச்சாட்டு. எனினும் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

அதில் இருந்து ஆறு மாதங்கள் கழித்து, 2018 ஜுன் மாதத்தில், ’பீமா கோரேகான் வன்முறைக்கு அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர்களின் பேச்சுதான் காரணம்’ எனச் சொல்லி ஐந்து பேரை கைது செய்தது காவல்துறை. வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், தலித்களுக்கான உரிமை செயற்பாட்டாளர் சுதிர் தவாலே, சமூக செயற்பாட்டாளர் மகேஷ் ராவுட், பேராசிரியர் ஷேமா சென், சமூக செயற்பாட்டாளர் ரோனா வில்சன் ஆகியோரே அவர்கள்.

Anand Teltumbde arrested, released: To file pre-arrest bail plea ...

இந்த ஐந்து பேரில் ரோனா வில்சன் டெல்லியை சேர்ந்தவர். அவரது வீட்டில் போலீஸ் சோதனையிட்டது. அப்போது, அங்கு ஒரு துண்டுச்சீட்டு கைப்பற்றப்பட்டதாகவும், அதில் ’ராஜீவ்காந்தியைப் போல மோடியை கொல்ல வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்ததாகவும் சொல்லி, மேலும் சிலரை நாடு தழுவிய அளவில் கைது செய்தது போலீஸ். பழங்குடிகள் உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் புகழ்மிக்க வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், சமூக செயற்பாட்டாளர் கௌதம் நவ்லகா, இடதுசாரி கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் அருண் ஃபெரைரா, பேராசிரியர் வெர்னோன் கன்சால்வேஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.

இவர்களில் சிலரது கணினிகளில் சோதனையிட்டு அவர்கள் எழுதிய 13 கடிதங்களை கைப்பற்றியுள்ளதாக சொன்னது போலீஸ். அந்த 13-ல் ஐந்து கடிதங்களில் ஆனந்த் என்ற பெயர் இருப்பதாகவும், ’அந்த ஆனந்துதான் இந்த ஆனந்த் டெல்டும்டே’ என்றும் சொன்னது. சரி, அந்த கடிதத்தில் இருப்பதாக போலீஸ் சொன்னது என்ன? அதில் ஏதாவது அச்சமூட்டக்கூடிய அம்சங்கள் இருக்கிறதா?

அப்படி எதுவும் இல்லை. அவை, ஆனந்த் டெல்டும்டே பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆற்றிய உரைகள் தொடர்பான தகவல்கள். இணையத்தில் யார் தேடினாலும் எடுக்க முடியும். மேலும், போலீஸ் சொல்லும் அந்த கடிதம் கையால் எழுதப்பட்டதோ, கையெழுத்திடப்பட்டதோவும் அல்ல. வெறுமனே ஆனந்த் பற்றிய மேன்மையான தகவல்களை கொண்ட ஒரு தட்டச்சு மொட்டை கடிதம். அதை ஓர் ஆதாரம் என எடுத்துக்கொண்டு, மோடியை கொலை செய்ய சதி செய்தவர்களின் பட்டியலில் ஆனந்த் டெல்டும்டே பெயரையும் இணைத்தார்கள்.

2018 ஆகஸ்ட் மாதத்தில் Goa Institute of Management வளாகத்தில் உள்ள ஆனந்த்தின் வீட்டுக்குள், வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் நுழைந்து சோதனையிட்டது போலீஸ். ‘அழைத்தால் நானே நேரில் சென்றிருப்பேன். ஆனால், அவர்கள் என்னை ஒரு தீவிரவாதியாக சித்தரிக்க விரும்பியதால் வேண்டும் என்றே அவ்வாறு செய்தார்கள்’ என்று அப்போது சொன்னார் ஆனந்த். ஒரு நாள் விமான நிலையத்தில் வைத்து ஆனந்த் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றம் பிணை வழங்கியது. அதன்பிறகு இன்று அவர் மீண்டும் கைது செய்யப்படவிருக்கிறார்.

Dalit leaders condemn Anand Teltumbde's arrest on 14 April ...

நேற்று, இறுதியாக ஆனந்த், நாட்டு மக்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தனது கல்வி பின்புலம், தான் ஆற்றிய பணிகள் குறித்து விரிவாக பேசியுள்ள அவர் மிகுந்த மனவேதனையுடன் அந்த கடிதத்தை முடிக்கிறார்.

’’மக்களுக்கு தன்னலமற்று சேவை செய்பவர்கள் தேசத் துரோகிகளாகவும், தேசத்தை அழிப்பவர்கள் தேசபக்தர்களாகவும் பொருட்பட தொடங்கிவிட்டனர்.

எனது இந்தியா சிதைக்கப்படுவதை நான்பார்க்கும் இந்த நேரத்தில், பலவீனமான நம்பிக்கையுடன் இந்த கடிதத்தைக் கடுமையான தருணத்தில் எழுதுகிறேன்.

சரி… என்.ஐ.ஏ கட்டுப்பாட்டிற்குள் செல்கிறேன். உங்களுடன் மீண்டும் எப்போது பேச முடியும் என எனக்கு தெரியாது. ஆனால் உங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுவீர்கள் என நம்புகிறேன்.’’

*****
இதில் வேடிக்கை என்னவெனில், எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கும் பீமா கொரேகான் நிகழ்வுக்கு ஆனந்த் டெல்டும்டே போகவே இல்லை. அது மட்டுமல்ல… அந்த நிகழ்வு குறித்து அவருக்கு விமர்சனப் பூர்வமான கருத்துக்களும் இருந்தன.

200 ஆண்டுகளுக்கு முன்பு, 1818-ல், பீமா ஆற்றங்கரையில் கொரேகான் என்ற இடத்தில் நடைபெற்ற அந்த யுத்தமானது மராட்டிய பேஷ்வாக்களுக்கும், ஆங்கிலேய படைகளுக்கும் இடையே நடைபெற்றது. அப்போது ஆங்கிலேய படைகளில் ஏராளமான தலித்கள் படைவீரர்களாக பணிசெய்தனர்.

Anand Teltumbde - From Being An IIM Ahmedabad Alumnus To Illegally ...

’அப்படி ஊதியத்துக்கான வேலை என்ற அடிப்படையிலேயே அவர்கள் பேஷ்வாக்களை எதிர்த்து சண்டையிட்டார்கள். தங்களை சாதி ரீதியாக ஒடுக்கும் பேஷ்வாக்களை எதிர்த்து அல்ல’ என்று சொன்ன ஆனந்த், அதேபோரில் ஆங்கிலேய தரப்புக்காக போரிட்டு இறந்துபோனவர்களின் பட்டியலில் அரேபியர்கள் பலர் இருப்பதையும் இதற்கு ஆதாரமாக சுட்டிக் காட்டுகிறார்.

அப்படி ஒரு ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி நடந்திருந்து, அதில் தலித்கள் வெற்றியும் பெற்றிருப்பார்களேயானால், அதன்பிறகான தலித்களின் சமூக வாழ்வில் அந்த மாற்றம் எதிரொலித்திருக்க வேண்டும். அப்படி எந்த வரலாற்று தரவுகளும் இல்லை என்கிறார் ஆனந்த்.

கொரோகான் நிகழ்வை ஒரு தலித் வீரமாக முதன்முறையாக முன்வைத்தவர் அம்பேத்கர். ’பெருந்திரள் மக்களை அணிதிரட்ட அவருக்கு அப்படி ஒரு Myth தேவைப்பட்டிருக்கலாம். ஆனால், உண்மை அதுவல்ல’ என்கிறார் ஆனந்த்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள தி வயர் கட்டுரை தமிழாக்கம் கீழே உள்ளது. https://bookday.in/anand-teltumbdes-letter-to-the-people-of-india-before-his-imminent-arrest/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *