விவசாயிகளின் போராட்டங்கள் ஏன் ஆர்எஸ்எஸ்ஸை அச்சுறுத்துகின்றன?  – சாகர் | தமிழில்: தா.சந்திரகுருசீக்கியர்கள் ஹிந்து ராஷ்டிரத்தில் அதன் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும் அல்லது துரோகிகளாகவே இருப்பார்கள்

‘புனிதமான குடியரசு தினத்தன்று தில்லியில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், இடையூறுகளும் மிகவும் வேதனை தருபவையாக, அவமானகரமானவையாக இருந்தன. குறிப்பாக வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடந்திருக்கும் அந்த துரதிர்ஷ்டவசமான செயல் சுதந்திரத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டிற்காகவும் தங்கள் உயிரைத் தியாகம் செய்த தியாகிகளை அவமதிப்பதாக இருந்தது’ என்று ஜனவரி 26 அன்று மாலையில் தங்களுடைய அமைப்பின் ட்விட்டர் கணக்கில் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் இரண்டாம் கட்டத் தலைவரான சுரேஷ் ஜோஷி ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார். பையாஜி என்று பெரும்பாலும் அழைக்கப்படுகின்ற ஜோஷி ‘நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய அரசியல், கருத்தியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நாட்டின் அமைதிக்காகப் பாடுபட வேண்டும்’ என்ற வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.

அன்று காலையில் சீக்கிய விவசாயிகள் இளைஞர்கள் குழு ஒன்று வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் உள்ள கோபுரத்தில் அமைந்திருக்கும் கம்பத்தில் சீக்கிய கொடியான நிஷன் சாஹிப்பை ஏற்றியிருந்தது. தேசிய தலைநகரில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான விவசாயிகளில் ஒரு பகுதியாக அந்தக் குழு இருந்தது. தங்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்ற வகையில் சமீபத்தில் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தில்லி எல்லையில் உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்தி வந்தனர். அன்றைய தினம் நடந்த டிராக்டர் பேரணி இந்தப் போராட்டம் குறித்ததாகவே இருந்தது. தில்லியைச் சுற்றி அனுமதிக்கப்பட்டிருந்த பாதையில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியை நடத்திய வேளையில், தில்லியின் மையப்பகுதிக்குள்ளே குறைந்தபட்சம் இரண்டு குழுக்கள் நுழைந்தன. தில்லி காவல்துறை அதிக அளவிலே காவல்துறையினரைப் பணியில் ஈடுபடுத்தியிருந்தது. தடுப்புகள் அனைத்தையும் மீறி, செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைவதற்காக காவல்துறையினருடன் மோதிய விவசாயிகள் அங்கே தங்களுடைய கொடியை ஏற்றினர்.அந்தக் கொடி தனி சீக்கிய நாடான காலிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற தவறான கூற்றை அரசாங்க ஆதரவு ஊடகங்கள் அன்று மாலைக்குள்ளாக பரவலாகக் கொண்டு சேர்த்திருந்தன. வன்முறை எண்ணம் கொண்ட பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் என்று தொலைக்காட்சி சேனல்கள் விவசாயிகளை வர்ணித்தன. வெளியான அந்தக் கூற்று தவறானது என்பதை பல ஊடக நிறுவனங்கள் சோதித்து அறிந்து கொண்டன.

நடந்தேறிய வன்முறையைக் கண்டித்த சீக்கிய, பஞ்சாபி ஊடகவியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் பலரும் பஞ்சாபியர்களிடம் பிரபலமாக இருந்து வரும் காட்சி கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவே அவர்கள் அந்தக் கொடியை ஏற்றினர் என்றனர். சீக்கிய மதத்தின் நெறிமுறைகளை வெளிப்படுத்தும் வகையில் தங்களுடைய உறுதிப்பாட்டைக் காட்டுவதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தனர் என்றும் காரணங்களை முன்வைத்தனர். அன்று நடந்த அந்த நிகழ்வை இந்தியாவின் ஒற்றுமை அல்லது இறையாண்மைக்கு எதிரான சவாலாக அவர்களில் யாருமே பார்க்கவில்லை. மாறாக அன்று நடந்ததை போராட்டக்காரர்களுடைய கலாச்சார அடையாளத்தின் வெளிப்பாடாகவே  அவர்கள் கண்டனர். அகால் தக்த் என்ற சீக்கியர்களின் உயர்பீடத்தின் தலைவரான கியானி ஹர்பிரீத் சிங் நிகழ்த்தப்பட்ட அந்த வன்முறை நியாயமற்றது என்று கூறினார். நிஷான் சாஹிப்பை விமர்சிப்பது சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இதுபோன்ற கருத்துகளுக்கு எல்லாம் எதிரானதாகவே சுரேஷ் ஜோஷி வெளியிட்டிருந்த கருத்து அமைந்திருந்தது. சுதந்திரம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை ஆதரிப்பவர்களை அவமதிப்பதையே நோக்கமாகக் கொண்டு போராட்டக்காரர்கள் மீது அவர் பிரிவினைவாதிகள் என்ற முத்திரையை மறைமுகமாகக் குத்தியிருந்தார். அதுபோன்ற மிகைப்படுத்தல் நேரடியாகவே தாக்கிய மற்ற மூத்த ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர்களின் கருத்துகளால் பலப்படுத்தப்பட்டது. சீக்கிய விவசாயிகளை பயங்கரவாதிகள், துரோகிகள் என்று குறிப்பிட்டு தங்களுடைய கண்டனங்களை அவர்கள் அனைவரும் பதிவு செய்திருந்தனர்.

நிஷான் சாஹிப் கொடியை செங்கோட்டையில் ஏற்றியது குறித்த ஆர்எஸ்எஸ்ஸின் அமைப்பு ரீதியான மற்றும் தனிநபர் எதிர்வினைகள் சீக்கியர்களிடம் இருக்கின்ற ஹிந்து அல்லாத அடையாளத்தை ஹிந்துராஷ்டிரத்திற்கான அச்சுறுத்தலாகக் கருதுகின்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் பிரதிபலிப்பாகவே இருந்தன. ஆர்எஸ்எஸ்ஸின் கருத்தியல் பிதாமகர்களைப் பொறுத்தவரை ‘உண்மையான’ சீக்கியர் என்பவர் ஒரு ஹிந்துவாகவே எப்போதும் இருக்கிறார். அவர்கள் தங்களுடைய இந்த சிந்தனைக்கு உடன்படாதவர்களை கடவுள் நம்பிக்கைக்கும், தேசத்திற்கும் துரோகமிழைத்தவர்களாகவே காண்கின்றனர். வி.டி.சாவர்க்கர் எழுதிய ‘ஹிந்துத்துவாவின் அடிப்படை’, எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய ‘சிந்தனைக் கொத்து’ என்ற இரண்டு முக்கிய நூல்களும் ஆர்எஸ்எஸ்ஸின் இந்தக் கருத்தை தெளிவாக வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. சீக்கிய மதம் எவ்வாறு உருவானது என்பதற்கான வரலாற்றுக்குப் புறம்பான செய்திகளும், தங்களுடைய கற்பனையில் இருக்கின்ற ஹிந்து சமுதாயத்தில் ஹிந்து மதத்தைப் பாதுகாப்பதற்கான தனித்துவமான நோக்கமும் அந்த இரண்டு புத்தகங்களிலும் வகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.ஆர்எஸ்எஸ்ஸிடம் தொடர்ந்து இருந்து வருகின்ற இந்த சித்தாந்தம் செங்கோட்டையில் விவசாயிகள் நிஷான் சாஹிப்பை ஏற்றிய பிறகு அனைவரின் தெளிவான பார்வைக்கு வந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்புகளில் உள்ளவர்களால் சமூக, செய்தி ஊடகங்களில் இடப்பட்ட பதிவுகள் அனைத்திலும் நிஷான் சாஹிப் கொடியேற்றம் இந்திய கொடிக்கும், இந்தியாவிற்கும் அவமானமாக இருக்கிறது என்ற பொதுவான இழை இருந்தது.

பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராகவும், இரு அமைப்புகளுக்கிடையில் தொடர்பாளராகவும் தற்போது செயல்பட்டு வருகின்ற ஆர்எஸ்எஸ்காரரான பி.எல்.சந்தோஷ் இந்த சம்பவம் நாட்டின் பெருமை மீதான தாக்குதல் என்று தன்னுடைய ட்வீட்டில் விவரித்திருந்தார். அவர் ‘இந்தப் போராட்டம் வேளாண் சட்டங்களைப் பற்றியதாக இருக்கவில்லை. இது விவசாயிகளின் நலன்கள் குறித்ததாக இருக்கவில்லை. தலைவர்கள் யாரும் அங்கே இல்லை. அங்கே இருக்கின்ற அமைப்புகள் போலியானவை. தேசம், தேசத்தின் பெருமை, வளர்ச்சியே அவர்களுடைய தாக்குதலுக்கான இலக்காக இருக்கின்றன’ என்று ட்வீட் செய்திருந்தார்.

ஆர்எஸ்எஸ்ஸின் விளம்பரப் பிரிவின் தேசிய இணைச் செயலாளரான நரேந்திர குமார் பிரிவினைவாத சீக்கிய, போர்க்குணமிக்க மாவோயிச சித்தாந்தங்களுடன் அந்தச் சம்பவத்தை இணைக்கின்ற வகையிலே  “காலிஸ்தானி_நக்சலி_கான்ஸ்பிரசி” என்ற  ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தினார். நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆறு முக்கிய பிரிவுகளில் இந்த விளம்பர பிரிவும் ஒன்றாக இருக்கிறது. ஜோஷி தெரிவித்த அதே கருத்தை எதிரொலிக்கின்ற வகையிலே ‘இந்த நடவடிக்கை நாட்டின் சுதந்திரம், தேசிய ஒருமைப்பாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களுக்கு இழைக்கப்படும் அவமானமாக உள்ளது’ என்று நரேந்திர குமாரும் ட்வீட் செய்திருந்தார்.

ஆர்எஸ்எஸ்ஸின் விவசாயிகள் பிரிவான பாரதிய கிசான் சங்கத்தின் விளம்பர பிரிவின் தலைவரான ராகவேந்திர பட்டேல் நிஷான் சாஹிப் கொடியேற்றப்படுகின்ற வீடியோவை இணைத்து ‘இது மூவர்ணக் கொடிக்கு இழைக்கப்பட்ட அவமானம் இல்லையா? நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட நேரடியான சவாலாக இது உள்ளது’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த சம்பவம் ‘இடதுசாரி போக்கிரித்தனம்’ என்று பாரதிய கிசான் சங்கத்தின் அமைப்புச் செயலாளரான தினேஷ் டி.குல்கர்னி ட்வீட் செய்திருந்தார். அந்த சம்பவத்தை ‘தேசிய அவமானம்’ என்று குறிப்பிட்டு பாரதிய கிசான் சங்கம் அடுத்த நாள் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் ‘பகை நாடுகளுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற இதுபோன்ற செயல்கள் ஏன் மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றன என்று இந்த நாடு கேட்கிறது. வேளாண் சட்டங்கள் என்ற போர்வையில் குடியரசிற்கு எதிராக ஏன் சவால் விடப்படுகிறது என்று நாடு கேட்கிறது’ என்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. முன்னதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் விவசாயிகள் பிரிவின் சார்பில் மூன்று வேளாண் சட்டங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தில்லி எல்லைகளில் நடைபெற்று வருகின்ற விவசாயிகளின் போராட்டத்தில் ஒருநாளும் அந்த அமைப்பு பங்கேற்கவில்லை என்பதே உண்மை.

C:\Users\Chandraguru\Pictures\Farmers\Caravan RSS\ABVP Press Release.jpg

ஆர்.எஸ்.எஸ்ஸிடம் சீக்கியர்கள் குறித்து இருந்து வருகின்ற இரட்டைப் பார்வையை அதன் மாணவர்கள், விவசாயிகள், சமூகப் பிரிவுகள் அனைத்தும் பிரதிபலித்தன. ஆர்எஸ்எஸ்ஸின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தேசியக் கொடியை இழிவுபடுத்தும் வகையில் பிரிவினைவாத காலிஸ்தானி கொடி, இடதுசாரி கட்சிகளுடன் தொடர்புடைய அரசியல் கொடிகளை செங்கோட்டையில் ஏற்றிய குற்றவாளிகள் மற்றும் காவல்துறை, துணை ராணுவப்படை வீரர்கள் மீது நடத்திய ஒழுங்கமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

1980களில் பாபர் மசூதி இடிப்பு பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கிய ஆர்எஸ்எஸ்ஸின் சமூக-மதப் பிரிவான விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் எதிர்வினை மிகவும் கொடூரமாக இருந்தது. ஜனவரி 26 அன்று விஎச்பியின் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீராஜ் நாயர் ‘தேசத்திற்கெதிரானவர்களை இரக்கமின்றி நசுக்க வேண்டிய நேரம் இது… முகமூடிகளை அணிந்து கொண்டிருக்கும் துரோகிகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்’ என்று ட்வீட் செய்திருந்தார். சீக்கிய எதிர்ப்பாளர்களை விதர்மி என்றும் நாயர் குறிப்பிட்டிருந்தார். மேலும் தன்னுடைய ட்வீட்டில் ‘அணையப் போகும் சுடர் ஒளிர்கின்றது. பயங்கரவாதிகள், துரோகிகள், முகமூடி அணிந்து கொண்டிருக்கும் மதவெறியர்கள் என்று அனைவரின் முடிவு இப்போது நெருங்கி விட்டது. நாடு முழுவதும் அமைதியும் தீர்வும் திரும்பும். ஜெய் ஸ்ரீராம்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். தர்மம் அல்லது பிராமணிய மதக் குறியீடுகளே வெல்லும், அதர்மம் அல்லது தர்மத்தை நிராகரிக்கும் செயல்கள் அழிந்து போகும் என்றும் நாயரின் ட்வீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் பிரிவான ஆளும் பாஜகவும் இந்த சம்பவத்தை தேசியக் கொடிக்கு நேர்ந்த அவமானம் என்று விவரிக்கவே முனைந்தது. கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரான சாம்பிட் பத்ரா போன்ற பாஜக தலைவர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை குடியரசு தினத்திற்கு முன்பாகவே காலிஸ்தானி என்று தங்களுடைய சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி நேர்காணல்களில் குறிப்பிட்டிருந்தனர். தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர் ‘தேசியக் கொடியை அவமதிப்பதை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது’ என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியிருந்தார். பாஜகவின் இந்த நிலைப்பாட்டையே பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்களுக்குப் பிறகு தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தில் பேசினார். நீண்டகாலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பில் பணி புரிந்து வந்திருக்கும் மோடி ‘ஜனவரி 26 அன்று மூவர்ணக் கொடி அவமதிக்கப்பட்டதைக் கண்டு நாடே அதிர்ச்சியடைந்துள்ளது’ என்றார்.

C:\Users\Chandraguru\Pictures\Farmers\Caravan RSS\Modi on insult to tricolour.jpg

விவசாயிகளின் எதிர்ப்பில் இருக்கின்ற சீக்கிய வெளிப்பாடு குறித்து அதிகரித்து வருகின்ற கவலையின் உச்சக்கட்டமாகவே ஆர்எஸ்எஸ்ஸின் எதிர்வினை இருந்தது. ஜனவரி 7 அன்று ‘அரசாங்கத்துடன் அமைதியான முறையில் விவசாயிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என்று ஆர்எஸ்எஸ் நம்புகிறது’ என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணைப் பொதுச்செயலாளரான கிருஷ்ணகோபால் கூறியிருந்தார். அதுவரையிலும் விவசாயிகள் சங்கங்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்றிருந்த பதினொரு சுற்று பேச்சுவார்த்தைகளில் ஏழு பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்திருந்தன. தில்லி எல்லையில் அதே நாளில் தங்களுடைய முதலாவது டிராக்டர் பேரணியை விவசாயிகள் மேற்கொண்டிருந்தனர். அந்த பின்னணியிலேயே அமைதியான தீர்வை இன்னும் நம்புவதாக ஆர்எஸ்எஸ்ஸின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இருப்பினும் இரண்டு வாரங்களுக்குள்ளாகவே ஆர்எஸ்எஸ்ஸின் கருத்துக்கள் முற்றிலும் மாறி விட்டன. போராட்டம் விரைவாக முடிவடைய வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம் என்று ஜனவரி 20 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸுடன் பேசிய ஜோஷி ‘இந்தப் போராட்டத்திற்கு குறுங்குழுவாத நிறத்தைக் கொடுப்பதற்கான முயற்சி இருந்து வருகின்றது. குறுங்குழுவாத இயக்கத்தை நோக்கி போராட்டத்தைத் தள்ளுவது நல்லதல்ல என்றே நம்புகிறேன்’ என்று தனது அக்கறையை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆர்எஸ்எஸ் சீக்கியம், பௌத்தம், சமண மதம் போன்ற மத நம்பிக்கைகளைப் பற்றி குறிப்பிடுவதற்கு மதம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ‘பிரிவு’ என்ற சொல்லையே பயன்படுத்தி வருகிறது. ஏனெனில் அவையனைத்தையும் ஹிந்து மதத்தின் ஒரு பகுதியாகவே ஆர்எஸ்எஸ் பார்த்து வருகின்றது. எளிமையான வார்த்தைகளில் சொல்வதானால் விவசாயிகளின் போராட்டம் சீக்கிய இயக்கமாக மாறுவது குறித்து அல்லது அது முழுக்க முழுக்க சீக்கிய மதத்தின் மீதே கட்டமைக்கப்பட்ட எதிர்ப்பாக போராட்டம் இருப்பது குறித்தே ஜோஷி கவலையடைந்திருந்தார். அந்த நேர்காணலின் போது தீர்வை விரும்பாத போராடும் சக்திகளுக்கு எதிரான விசாரணை நடைபெற வேண்டுமென்று கேட்டதன் மூலம் விவசாயிகள் தீவிரவாத போக்குகளுக்கு அடைக்கலம் தருவதாகவே அவர் கூற முற்பட்டார்.

ஜோஷியிடம் இருந்த அந்தக் கவலையை விளக்குவதாக ஆர்ப்பாட்டத்தை வரையறுக்கும் பண்புகளில் ஒன்றாக சீக்கிய வெளிப்பாடு என்ற உண்மையும் இருந்தது. போராடி வருகின்ற விவசாய தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் பெரும்பாலும் சீக்கியர்கள் என்பதால், அந்த சீக்கிய வெளிப்பாடு என்பது மிகவும் இயல்பானதாகவே அமைந்திருந்தது. 2020 நவம்பர் மாத பிற்பகுதியில் பஞ்சாப் விவசாயிகள் சங்கங்களே முதன்முதலாக தில்லி எல்லைகளில் உள்ளிருப்பு போராட்டங்களை ஆரம்பித்தன. போராட்டத்திற்கான ஆதரவு அதிகரித்த போது ​​ மேற்கு உத்தரபிரதேசம், ஹரியானாவைச் சேர்ந்த ஜாட், குர்ஜார், ராஜ்புத் விவசாய சங்கங்களும் அவர்களுடன் இணைந்தன என்றாலும் மற்ற அனைத்து குழுக்களையும் விட சீக்கியர்களே போராட்டத்தில் அதிகமாக உள்ளனர்.

சீக்கிய சமூகம் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டது. போராட்டத்திற்கு லண்டன், கனடாவில் பெரிய அளவிலே வாழ்ந்து வருகின்ற பஞ்சாபி புலம்பெயர் சமூகங்கள் தங்களுடைய ஆதரவை வழங்கின. இந்தியாவில் உள்ள சீக்கிய பிரபலங்களும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கத் தொடங்கினர். அவர்களில் முக்கியமானவராக பிரபல பஞ்சாபி பாடகரும் நடிகருமான தில்ஜித் டோசன்ஜ் இருந்தார். போராட்டப் பாடல்களை சீக்கிய மற்றும் பஞ்சாபி பாடகர்கள் எழுதினர். விவசாயிகளுக்கு உணவு, கூடாரங்கள் போன்றவற்றை வழங்குவதற்கும், சீக்கிய பாரம்பரியமான சேவாவிற்குத் தேவைப்படுகின்ற அனைத்தையும் தந்து கல்சா எய்ட் போன்ற சீக்கிய தன்னார்வ அமைப்புகள் உதவின. ஆர்எஸ்எஸ்ஸின் அதிருப்திக்கு உள்ளாகின்ற வகையில் போராட்டத்தின் வடிவம், வெளிப்பாடு தவிர்க்க முடியாது சீக்கியர்களை முன்னிறுத்தியே இருந்தது.

சாத்தியமாகி இருக்கின்ற இந்த சீக்கிய இயக்கம் குறித்த ஆர்எஸ்எஸ்ஸின் கவலைகளையும், சீக்கியக் கொடிக்கு எதிரான அதன் கோபத்தையும் அதனுடைய ஸ்தாபக பிதாமகர்களின் எழுத்துக்களில் இருந்து எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஹிந்துக்கள் அனைவரும் பொதுவான இனம் சார்ந்த கடந்த காலத்தை தங்களுக்குள்ளாகப் பகிர்ந்து கொண்டிருப்பதாக மராத்தி பிராமணரான சாவர்க்கர் நம்பினர். அவர் சிந்து நதிக்குத் தெற்கே வாழ்ந்து வருகின்ற மக்களை ஹிந்துக்களுடைய முன்னோர்களாகவும், உயர்ந்த இனமாகவும் கற்பனை செய்திருந்தார். 1923ஆம் ஆண்டு எழுதப்பட்ட  ஆர்எஸ்எஸ்ஸின் அடிப்படை  ஆவணமான ‘ஹிந்துத்துவாவின் அடிப்படை’ என்ற நூலில் சீக்கியர்கள் அந்த பண்டைய சிந்துக்களின் நேரடி சந்ததியினராகவே இருக்கின்றனர் என்று சாவர்க்கர் எழுதியுள்ளார். சீக்கியர்களை இயல்பான ஹிந்துக்கள் என்றே அவர் கூறினார். ‘ஹிந்துக்களில் உள்ள இந்த சிறுபான்மையினரும். அவர்கள் இருக்கின்ற முக்கிய சமூகங்களும் வானத்திலிருந்து தனி படைப்புகளாக வந்து இங்கே விழுந்திருக்கவில்லை’ என்று கூறிய சாவர்க்கர் ‘இந்தியாவில் இருக்கின்ற அனைத்து சமூகங்களும் ஹிந்துக்களே என்று சொல்வது உண்மையில் எந்தவொரு ஆட்சேபம் அல்லது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கின்றது. இந்த சீக்கிய சகோதரத்துவம்…. இன்றைய சீக்கியர்கள் நேற்றைய ஹிந்துக்களே’ என்று குறிப்பிட்டார்.‘சீக்கியர்களுடைய குருக்கள் ஹிந்துக்களின் பிள்ளைகளாகவே இருந்தனர். சீக்கியர்களை ஹிந்து அல்லாதவர்கள் என்று வகைப்படுத்துகின்ற எந்தவொரு முயற்சியையும் நாம் எதிர்க்காவிட்டால், அதைப் புரிந்து கொள்ள அவர்கள் தவறி விடுவார்கள்’ என்ற சாவர்க்கர் சீக்கிய குருக்களும் தங்களுடைய பரம்பரை மூலமாக ஹிந்துக்களே என்று உறுதியாகக் கூறினார். ‘ஹிந்துக்கள் என்று தங்களை வகைப்படுத்தப்படுவதற்கு சீக்கிய சகோதரத்துவத்தைச் சார்ந்த சில தலைவர்கள் எதிராக இருப்பதற்கு அரசியல் காரணம் இருக்கிறது. ஹிந்துக்கள் அல்லாதவர்கள் என்று தங்களை அடையாளம் காண்பது, ஏற்கனவே தங்களுடைய சமூக நலன்களைப் பாதுகாப்பதாக நம்பிக் கொண்டுள்ள முகமதியர்களுக்கான சிறப்பு பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான அவர்களுடைய கவலையிலேயே வேரூன்றி இருக்கிறது’ என்பதே சாவர்க்கரின் கருத்தாக இருந்தது. தங்களுக்கென்று தனி அடையாளத்தை சீக்கியர்கள் கோருவது தற்கொலைக்குச் சமமானது என்ற உணர்வே சாவர்க்கரிடம் இருந்தது.  அதற்குப் பதிலாக சீக்கியர்கள் மற்ற சாதியினரைப் போல பிராமணரல்லாதவர்கள் என்ற அடையாளத்தையே தங்களுக்கென்று கோரியிருக்க வேண்டும் என்று கருதிய சாவர்க்கர் ‘தங்கள் சொந்த நலன்களைக் காப்பதற்காக சிறப்பு பிரதிநிதித்துவத்தைப் பெறுவதில் – பிராமணரல்லாதவர்கள் மற்றும் பிற சமூகங்கள் தங்களுடைய  ஹிந்துத்துவப் பிறப்புரிமையைக் கைவிட்டு விடாமல் செய்வதைப் போன்று அழுத்தம் கொடுத்து சீக்கியர்களால் வெற்றி பெற முடியும்…’  என்ற கருத்துடன் இருந்தார்.

தன்னை ஹிந்து அல்லாதவர் என்று பார்க்கின்ற எந்தவொரு சீக்கியரும் சாவர்க்கரைப் பொறுத்தவரை துரோகியாகவே இருக்கிறார். இதைப் போன்றதொரு நிலையே ஆர்எஸ்எஸ்ஸின்  சிந்தனை-செயல்பாட்டில் பொதுவானதாக இருக்கிறது. அதன் கற்பனையில் இருக்கின்ற நாடு ஹிந்துக்களை மட்டுமே கொண்ட நாடாக இருப்பதால் இயல்பாகவே அவர்களைப் பொறுத்தவரை தேசபக்தர்கள் அனைவரும் ஹிந்துக்களாகவே உள்ளனர் (இந்த சிந்தனையை சமீபத்தில் 2021 ஜனவரி 1 அன்று ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பகவத் மீண்டும் வலியுறுத்தி இருந்தார். புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய அவர் ஹிந்துவாக இருக்கின்ற ஒருவரால் தேசபக்தராக இருப்பதைத் தவிர வேறு மாதிரியாக இருக்க முடியாது என்றார்).

ஹிந்து அல்லாதவர் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் சீக்கியருடனான உரையாடல் குறித்து சாவர்க்கர் தன்னுடைய ஹிந்துத்துவாவின் அடிப்படை என்ற நூலில் ஒரு கதையைச் சொல்கிறார். சீக்கிய குரு கோபிந்த் சிங்கின் மகன்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு இறுதியில் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு முகலாய மன்னரால் கொல்லப்படுவதற்கு காரணமானவராக பிராமண சமையல்காரர் ஒருவர் இருந்தார் என்பதால், பிராமணர்களைக் கொல்வதால் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்தக் குற்றமும் ஏற்படாது என்று அந்த சீக்கியர் தன்னிடம் சொன்னதாக சாவர்க்கர் விவரிக்கிறார். அந்த சீக்கியரை கடனாளியாக, பணம் கொடுத்த பிராமணரைச் சூறையாடி கொலை செய்த கொள்ளைக்காரனாக சாவர்க்கர் அடையாளம் காட்டுகிறார். அந்தக் கொள்ளைக்கார சீக்கியரின் வாதத்தை எதிர்கொள்வதற்காக கண்ணியமான மனிதர் என்று தான் விவரிக்கின்ற இரண்டாவது சீக்கியர் ஒருவரை சாவர்க்கர் அறிமுகப்படுத்துகிறார். சாவர்க்கரின் கதையில் முதல் சீக்கியருக்கு அடுத்திருந்த அந்த கண்ணியமான சீக்கியர், பல பிராமணர்கள் தங்களுடைய குருவுக்கு அடைக்கலம் கொடுத்திருந்ததைச் சுட்டிக்காட்டி உடனடியாக அந்த முதல் சீக்கியரைக் கண்டிக்கின்றார்.

C:\Users\Chandraguru\Pictures\Farmers\Caravan RSS\download.jpg

அதற்குப் பின்னர் சாவர்க்கர் தனது சொந்த வாதத்தை முன்வைக்கிறார். அவரது உறவினர்களால் மராட்டிய மன்னர் சிவாஜி காட்டிக் கொடுக்கப்பட்ட போதிலும், சிவாஜியும் அவரது தேசமும் தங்கள் இனத்தை மறுத்து ஹிந்துக்களாகவே இருந்தனர் என்று அவர் எழுதுகிறார். மேலும் முகலாயர்களுடனான போரின் போது சீக்கியர்கள் குரு கோவிந்த் சிங்கை விட்டு விலகிவிட்டனர் என்ற வாதத்தை சாவர்க்கர் முன்வைக்கிறார். ‘துரோகமும், கோழைத்தனமும் நிறைந்த சீக்கியர்களின் அந்தச் செயலே அவநம்பிக்கையான முயற்சியை மேற்கொள்ள அவர்களுடைய குருவைக் கட்டாயப்படுத்தியது. அதுவே இறுதியில் ஒரு பிராமணருக்கு குருவின் மகன்களைக் காட்டிக் கொடுப்பதற்கான வழியை வகுத்துக் கொடுத்தது’ என்று கூறிய சாவர்க்கர் ‘ஆகையால் காட்டிக் கொடுத்தவர்கள் செய்த குற்றத்திற்காக ஹிந்துக்களாக இருப்பதை நிறுத்தி விட்டால், சீக்கியர்கள் செய்த குற்றத்திற்காக சீக்கியர்களாக இருப்பதையும் நிறுத்த வேண்டும்’ என்று எழுதினார். இதுபோன்ற வாதத்தின் மூலம் குருவின் மகன்கள் தங்களுடைய துரோகத்தினாலேயே கொல்லப்பட்டனர்; பிராமணரின் துரோகம் அவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணமாக இருக்கவில்லை என்ற முடிவை முன்னிறுத்துகின்ற முயற்சியில் சாவர்க்கர் ஒரு சீக்கியரை இன்னொரு சீக்கியருக்கு எதிராகத் தூண்டி விடுகிறார்.

மேலும் ஹிந்துக்களிடமிருந்து சீக்கியர்களை வெளிப்படையாகப் பிரித்து வைக்கின்ற சீக்கிய மத அடையாளங்களை சாவர்க்கர் இழிவு செய்தார். ஹிந்து வம்சாவளியை ஏற்றுக் கொண்ட ‘உண்மையான’ சீக்கியர்களை அவர் சிங்கங்கள் என்று வகைப்படுத்தினார். ‘கச்சாவையும், கிர்பானையும் கட்டி விடுவதன் மூலம்  ஆட்டுக்குட்டி ஒன்றை சிங்கமாக உங்களால் உருவாக்கிட முடியாது! குருவை உருவாக்கிய இனமும், அவ்வாறு வடிவமைக்கப்படக் கூடியதாக அந்த குழுவும் இருந்தாலே தியாகிகள், போர்வீரர்கள் அடங்கிய குழுவை உருவாக்குவதில் குருவால் வெற்றி பெற முடியும். தன்னுடைய குருவுக்கு உண்மையாக இருக்கின்ற  சீக்கியர் ஒருவரைச் சுட்டிக் காட்டும் போது, நீங்கள் இயல்பாக ஒரு ஹிந்துவையே சுட்டிக் காட்டுகிறீர்கள்’ என்று அவர் எழுதினார். சாவர்க்கர் மேலும் கூறுகையில் ‘நமது சீக்கிய சகோதரர்கள் சீக்கியத்திற்கு உண்மையானவர்களாக இருப்பதற்கு தொடர்ந்து அவர்கள் ஹிந்துக்களாக இருக்க வேண்டும்’ என்றார்.

1970களின் முற்பகுதி வரை ஏறக்குறைய முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆர்எஸ்எஸ்ஸின் தலைவராக இருந்த கோல்வால்கர் என்ற மராத்தி பிராமணர் சீக்கிய மதம் குறித்து சாவர்க்கரின் கருத்துகளையே எதிரொலித்து வந்தார். 1966ஆம் ஆண்டு வெளியான சிந்தனைக் கொத்து என்ற தனது புத்தகத்தில் ‘தற்போதைய விபரீதங்கள்’ என்றொரு பகுதியை கோல்வல்கர் எழுதியுள்ளார். அந்தப் பகுதியில் அவர் பல்வேறு பிரிவுகளும் மதங்களும் தங்களுடைய ஹிந்து அல்லாத அடையாளம் குறித்து பெருமை கொள்ளத் தொடங்கியுள்ளன என்று சாவர்க்கர் கூறியதைப் போன்ற கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இத்தகைய போக்கைக் கண்டித்த அவர் ‘சீக்கிய மதம் ஹிந்து மதத்திற்கான அர்ப்பணிப்புள்ள, வீர வாளை ஏந்தியுள்ள கையாக இருக்கிறது’ என்று எழுதினார். சாவர்க்கரைப் போலவே அவரும் அரசியல் லட்சியம் என்ற விஷம் சீக்கியர்களிடையே பிரிவினைவாத அரக்கனை தூண்டி விட்டிருக்கிறது என்று கூறினார். ‘உண்மையான’ சீக்கியர் வேதங்கள், பகவத் கீதையில் நம்பிக்கை கொண்டவராக, ராமர், கிருஷ்ணரை வணங்குபவராக இருக்கிறார் என்று குரு கோவிந்த் சிங் தெரிவித்திருந்ததாக கோல்வல்கர் கூறுகிறார் என்ற போதிலும், அவரது கூற்றை ஆதரிப்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை.

C:\Users\Chandraguru\Pictures\Farmers\Caravan RSS\Rama and Krishna.jpg

கோல்வல்கரைப் பொறுத்தவரை சீக்கியர்கள், பௌத்தர்கள் போன்ற ஹிந்துக்கள் அல்லாதவர்கள் ஒரு வகையில் வகுப்புவாத சிந்தனை கொண்டவர்களாகவே இருந்தனர். பல பக்கங்களைக் கொண்டிருக்கும் ஹிந்து மேதைமையின் வெளிப்பாடாக நவீன-பௌத்தர்கள், சீக்கியர்கள் என்ற குழுக்கள் மதங்களின் வடிவத்தில் உருவாகின. அதற்குப் பின்னர் தாங்கள் பெற்ற உத்வேகம், தங்களுடைய படைப்பின் மூலம் ஆகியவற்றை மறந்து விட்டு தங்களை ஹிந்து அமைப்பு மற்றும் தர்மத்திலிருந்து வேறுபட்டவர்களாக தக்களுடைய கருத்தில் கொள்ளத் தொடங்கி விட்டனர் என்று கோல்வல்கர் எழுதினார்.

இன்றைக்கு ஹிந்து தேசியவாத அரசாங்கம் ஆட்சியில் இருந்து வருகின்ற நிலையில், அரசாங்கத்திற்கு விடப்படுகின்ற குறிப்பாக ஹிந்து மதத்திற்கு வெளியே உள்ள அடையாளங்களால் வலியுறுத்தப்படுகின்ற எந்தவொரு சவாலும், ஹிந்து ராஷ்டிரத்திற்கான நேரடி சவாலாகவே மாறும் என்பதால், தன்னெழுச்சியாக எழுந்துள்ள இந்த சீக்கிய உறுதிப்பாடு ஏற்படுத்தியிருக்கின்ற அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்காக அரசாங்கத்துடன் நட்பில் இருக்கின்ற ஊடகங்கள் விவசாயிகள் போராட்டத்தைத் தாக்கத் தொடங்கின. அவை அந்தப் போராட்டத்தை கலவரம் என்று  வடிவமைத்தன. குடியரசு தினத்தன்று நிஹாங் சீக்கியர்கள் வாள் கொண்டு குதிரை மீது சவாரி செய்தம் காட்சிகள், அவர்களை பயங்கரவாதிகள் அல்லது கலகக்காரர்கள் என்று குறிப்பிடும் தலைப்புகளுடன் செய்தி சேனல்களில்  இடைவிடாது ஓடிக் கொண்டிருந்தன. நிஷன் சாஹிப்பை காலிஸ்தானின் அடையாளமாக தவறாகச் சித்தரித்த அந்தச் செயல் சீக்கிய உருவத்தை, அடையாளங்களை  வன்முறையின் சின்னங்களாக கட்டமைப்பதற்கு உதவியது. பெரும்பாலும் அது முஸ்லீம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற தந்திரமாகும்.

எந்தவொரு வடிவத்திலும் எழுகின்ற சீக்கிய உறுதிப்பாட்டை எதிர்கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்ஸை வழிநடத்துகின்ற தத்துவமே ‘உண்மையான’ சீக்கியர்கள் ஹிந்துக்கள் என்ற காரணத்தைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்தில் இருந்த பாரபட்சத்திற்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை முஸ்லீம்கள் பதிவு செய்த போது, அந்த சட்டத் திருத்தத்தை நியாயப்படுத்துவதற்காக சீக்கியர்களையும் மற்ற பிற சிறுபான்மையினரையும் சட்டத்திருத்தத்தில் சேர்த்துக் கொண்டிருப்பதை பாஜக அமைச்சர்கள் பயன்படுத்திக் கொண்டனர். ஏபிவிபியில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹிந்துக்களுடன் சீக்கிய, சமண, பௌத்த, பார்சி, கிறிஸ்தவ அகதிகளையும் பாதுகாப்பதாகக் கூறி பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தத்தை கொணர்ந்தார். அவர் அந்த சட்டத் திருத்தம் அனைவரையும் உள்ளடக்கியது என்றார். முஸ்லீம்களைச் சேர்த்தால் மட்டுமே அது மதச்சார்பற்றதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர்களை நோக்கி விமர்சனத்தையும் முன்வைத்தார். 2020 பிப்ரவரியில் சண்டிகருக்கு வருகை தந்த ஆர்எஸ்எஸ்ஸின் மத்திய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ் குமார் ​​ காலிஸ்தானிய சித்தாந்தத்தை ஆதரிப்பதற்குப் பதிலாக சீக்கியர்கள் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஹிந்துக்கள் சீக்கிய சமூகத்துடன் இயல்பாகவே இணைந்தவர்கள் என்று தனது அரசியல் நலன்களுக்காக சீக்கியர்களைப் பயன்படுத்திக் கொண்ட வரலாறு ஆர்எஸ்எஸ்ஸிடம் இருக்கின்றது. 1990களின் பிற்பகுதியில் பஞ்சாப் அரசியலில் தனக்கான இடத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு தேடிக் கொண்டிருந்த போது, தம்தாமி தக்ஸல் அமைப்பைச் சார்ந்த சீக்கிய தீவிர ஆதரவாளர்களுடன் ஆர்எஸ்எஸ் தலைவரான கே.சுதர்ஷன் ரகசியக் கூட்டங்களை நடத்தினார். ஒரு காலத்தில் காலிஸ்தானுக்காகப் போராடிய ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே தலைமையிலே தக்ஸல் இருந்தது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியால் மேற்கொள்ளப்பட்ட பொற்கோயில் ராணுவ முற்றுகையில் பிந்தரன்வாலே மற்றும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீக்கிய தீவிரவாதிகளின் நிலை குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட இதுபோன்ற பல கூட்டங்களுக்கு சுதர்சன் தலைமை தாங்கினார் என்று தி ட்ரிப்யூன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

C:\Users\Chandraguru\Pictures\Farmers\Caravan RSS\operation Bluestar-1984-04--621x414 (1).jpg

‘ஆர்எஸ்எஸ் தன்னுடைய சீக்கிய பிரிவான ராஷ்டிரிய சீக்கிய சங்கத்தின் மூலம் சீக்கிய ஆன்மா, உயிர்ப்பு குறித்த உணர்வைப் பெற்ற பின்னர் சீக்கிய தீவிர ஆதரவாளர்களுடனான உரையாடலுக்கான இந்த வழியை திறந்து வைத்தது. அந்தக் கூட்டங்களைத் தொடர்ந்து கைதிகளின் மோசமான நிலைமை, எத்தனை பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த அறிக்கையை ஆர்எஸ்எஸ் வெளியிட்டது’  என்று தி ட்ரிப்யூனில் வெளியான செய்தி கூறுகிறது. ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் பிரிவான பாஜக அப்போது ஆட்சியில் இருந்த ஷிரோமணி அகாலிதள் (எஸ்ஏடி)  தலைமையிலான கூட்டணியில் இருந்தது. எஸ்ஏடி என்பது சீக்கிய மதத்தை மையமாகக் கொண்ட கட்சியாகும். பெரும்பாலான முக்கிய சீக்கிய மத அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதாக அது இருக்கிறது. ஆர்எஸ்எஸ் வெளியிட்ட அந்த அறிக்கை பத்தாண்டு காலமாக கைதிகளை விடுவிப்பதாக உறுதியளித்து வந்திருந்த அகாலிகளைச் சங்கடத்திற்குள்ளாக்கியது. அந்த அறிக்கையின் மூலம் ஆர்எஸ்எஸ் தன்னை சீக்கியர்களின் உண்மையான நலம் விரும்பி என்பதாக முன்னிறுத்திக் கொண்ட அதே சமயத்தில் சீக்கிய தீவிர ஆதரவாளர்கள் மற்றும் அகாலிகள் என்று இருவரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.

சீக்கிய மக்களிடையே தனக்கான நம்பகத்தன்மையை நிலைநாட்டுவதற்காக ஆர்எஸ்எஸ் சீக்கிய தீவிர ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. அந்த நடவடிக்கை சாவர்க்கரின் புத்தகத்திலிருந்து தனக்கான  பக்கத்தை எடுத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் எதிரானவர்களாக சீக்கியர்களை நிறுத்தியது மட்டுமல்லாது ஹிந்துக்களை அவர்களுடைய மீட்பர்களாக சித்தரிக்கவும் முயன்றது.

C:\Users\Chandraguru\Pictures\Farmers\Caravan RSS\h_RSS_logo.jpg

அதே காலகட்டத்தில் சீக்கிய அமைப்புகளிடையே தன் மீது எழுந்த எதிர்ப்பை எதிர்கொள்ளும் வகையில் சீக்கியர்கள் குறித்த சாவர்க்கரின் பிளவுபடுத்தும் பார்வையை ஆர்எஸ்எஸ் துரிதப்படுத்தியது. 1980களின் நடுப்பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சீக்கிய பிரிவு உருவானதிலிருந்து சீக்கிய மதத்தை சுவீகரித்துக் கொள்ள ஆர்எஸ்எஸ் மேற்கொள்கின்ற  ஒவ்வொரு முயற்சியையும் ஜாட் சீக்கியர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற அகால் தக்த் கடுமையாக எதிர்த்து வந்தது. மறுபுறம் பஞ்சாபி சமுதாயத்தில் தனக்கான இடத்தைப் பெறுவதற்காக தீண்டாமையை இன்னும் எதிர்கொண்டு வந்த தலித் சீக்கியர்களின் ஆதரவை வென்றெடுப்பதற்கான உத்தியை ஆர்எஸ்எஸ் கடைப்பிடிக்கத் துவங்கியது. 2000ஆம் ஆண்டின் முற்பகுதியில், தலித் சீக்கிய காலனிக்குச் சென்ற  ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தேசப்பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்குச் சென்ற பஞ்சாபி முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை உருவாக்கினர். அந்த காலனியில் குடியிருந்தவர்களை உள்ளூர் மசூதியை இடிக்குமாறு ஆர்எஸ்எஸ் ஊக்குவித்தது. பஞ்சாபில் அகால் தக்தால் ஓரங்கட்டப்பட்டிருந்த கீழ்-சாதி சீக்கியர்களுக்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுத்த தேரா என்ற பொதுவான மத முகாம்களுடன் ஆர்எஸ்எஸ் இணைந்து பணியாற்றியது. ஆர்எஸ்எஸ்ஸுக்கான அரசியல் வெளியை பஞ்சாபில் உருவாக்கிட அது உதவியது.

தங்களுடைய முன்னோர்களைப் போலவே சீக்கியர்களையும் ஹிந்துக்களையும் பிரிக்க முடியாதவர்கள் என்று காட்டுவதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஆதாரமற்ற வரலாற்றுக் கதைகளை இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுவதற்கான நன்கொடையைப் பெறுவதற்கான பயணத்தின் போது ​​ஜம்முவில் உள்ள தலித் சீக்கிய காலனியில் வசிப்பவர்களிடம் ஜோஷி உரையாற்றினார். ‘1858ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ‘கொடிகளுடன் நிஹாங் சீக்கியர்கள் சர்ச்சைக்குரிய கட்டமைப்பிற்குள் – பாபர் மசூதி – நுழைந்து அங்கே ஹவானை நிகழ்த்தினர்… மேலும் அந்த வளாகத்தில் அவர்கள் ஸ்ரீராம் முழக்கங்களை எழுப்பினர். அங்கிருந்த இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சீக்கியர்கள் ‘ராம்-ராம்’ என்று அங்கிருந்த சுவர்களில் கரியால் எழுதி வைத்தனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று அப்போது அவர் கூறினார். அந்த நன்கொடை இயக்கம் மக்களையும் சமூகத்தையும் இணைக்கும் பிரச்சாரம் என்று பையாஜி ஜோஷி குறிப்பிட்டார்.

C:\Users\Chandraguru\Pictures\Farmers\Caravan RSS\main-qimg-73308a48b544450117885415ffc00454.png

அவர் கூறிய அந்தக் கதைக்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை. இதுபோன்றதொரு சம்பவம் ராமர் கோவில் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை தீர்ப்பில் சேர்ப்பது குறித்து ஆய்வாளர்களிடமிருந்து ஆட்சேபணை எழுந்திருந்தது. தி வயர் இணைய இதழில் வெளியான கட்டுரையில் ‘இந்த குறிப்பை சீக்கிய அறிவுஜீவிகள் எதிர்த்தனர். நிஹாங்கள் என்பவர்கள் பூஜை எதுவும் செய்யாத ஞானஸ்நானம் பெற்ற சீக்கியர்கள்’ என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர். ‘முற்றிலும் ஹிந்து-முஸ்லீம் மோதல் என்று தாங்கள் நம்புகின்ற விஷயத்தில் சீக்கிய மதத்தைத் தொடர்புபடுத்துவதை உச்சநீதிமன்றம் எப்படி பொருத்தமானதாக கண்டது என்பது குறித்து சீக்கியர்கள் சங்கடத்தில் உள்ளனர்’ என்று அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.

2019 மார்ச் மாதம் நடைபெற்ற குரு நானக் தேவின் 550ஆவது பிறந்தநாளன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் ‘வெறித்தனமான பாபரின் தாக்குதலை எதிர்கொண்டு அதற்கெதிராக சவால் விடுக்குமாறு குருநானக் தேவ் இந்த தேசத்தை அறிவுறுத்தினார். படையெடுப்பாளர்களுக்கு எதிராக கதவுகளை எப்போதும் மூடி வைக்கின்ற வகையில் சுயமரியாதையுடன் வாழ ஊக்கமளித்த அவர் பாரதத்திற்கென்று உள்ள சுய தியாக மரபுகளை வலுப்படுத்தினார்’ என்று ஜோஷி எழுதியிருந்தார். அவருடைய இந்த கூற்றுக்கும் உண்மையான அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை.

ஒன்பதாவது சீக்கிய குருவான தேக் பகதூர், ஐந்தாவது குருவான அர்ஜுன் தேவ் ஆகியோரைப் பற்றியும் இதே போன்ற கதைகளை அதற்கு முன்பாக இணைப் பொதுச்செயலாளரான கிருஷ்ண கோபால் பரப்பியிருந்தார். 2017 மே மாதம் நடைபெற்ற ‘ஹிந்துக்களின் கேடயம் – ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜி’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய கோபால் ‘குரு தேக் பகதூர் தனது உயிரைத் தியாகம் செய்திருக்காவிட்டால், ஒட்டுமொத்த இந்தியாவும் இஸ்லாமாக மாறியிருக்கும். நமது பண்டைய கலாச்சாரம், நாகரிகம் முற்றிலும் முடிவுக்கு வந்திருக்கும்’ என்று பேசினார்.

2018 ஜூன் மாதம் நடைபெற்ற குரு அர்ஜுன் தேவின் பிறந்தநாள் விழாவில் ‘குற்றங்களின் அணிவகுப்புடன் பாபர் வந்துள்ளார் – என்ன செய்வது?’ என்று முதல் முகலாயப் பேரரசர் பாபரைப் பற்றி குரு நானக் தேவ் எழுதியிருப்பதாக கோபால் கூறினார். பாபருக்கு எதிராக மக்களை ஒழுங்கமைப்பதற்காக சமூக சமையலறைகளை (லங்கார்) குரு தொடங்கினார் என்றும் அவர் கூறினார். கோபால் இவ்வாறு கூறுவதைச் சரிபார்க்க இயலாது. ஆனாலும் அவரது உள்ளார்ந்த நோக்கம் மிகவும் தெளிவாக இருக்கின்றது. சீக்கிய மதத்தின் வரலாறு ஹிந்துக்களைப் பாதுகாப்பதற்காக இஸ்லாத்திற்கு எதிராகப் போராடிய சீக்கிய குருக்களை மட்டுமே கொண்டிருக்கிறது என்பதே கோபால் மற்றும் ஜோஷி ஆகியோரின் கருத்தாக உள்ளது.

தன்னுடைய சிந்தனைக் கொத்து நூலில் ‘பஞ்சாபில் இஸ்லாத்தின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சீக்கிய பிரிவினர் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். காலத்தின் தேவையை உணர்ந்து, சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் தனது சீடர்களை ஆயுதம் ஏந்திய தேசிய வீரர்களாக பிற்காலத்தில் மாற்றினார்’ என்று கோல்வல்கர் எழுதியுள்ளார்.

C:\Users\Chandraguru\Pictures\Farmers\Caravan RSS\rakesh-tikait-1.jpg

ஜனவரி 26 அன்று நடந்த நிகழ்வுகள் ஆர்எஸ்எஸ்ஸிற்கு பல வழிகளில் சேவை செய்திருப்பதாகத் தெரிகிறது. அந்த நிகழ்விற்குப் பிறகு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியான முடிவை எட்டுவதற்கான முயற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய பாஜக தலைமையிலான அரசாங்கம் அடியோடு மறுத்து விட்டது. இந்தப் போராட்டம் குறுங்குழுவாத இயக்கமாக மாறுவது குறித்து ஆர்எஸ்எஸ்ஸிடமிருந்த அக்கறை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டங்களின் மிக முக்கியமான தலைவராக இப்போது இருக்கின்ற ராகேஷ் திகாயத் ஜாட் சமூகத்தவர் ஆவார். அவர் இதற்கு முன்னர் ஆளும் கட்சிக்கு மிகவும் இணக்கமாக இருந்ததாக கருதப்படுகிறார். ஆரம்பத்தில் மிருகத்தனமான ஒடுக்குமுறையுடன் எதிர்வினையாற்றிய அரசாங்கம், திகாயத்  கண்ணீர் விட்டு அழுது ஜாட், குர்ஜார், ராஜ்புத் கப்களை – நில உரிமையாளர் சாதிய அமைப்புகள் – தில்லியின் எல்லைகளுக்கு அதிக எண்ணிக்கையில் கொண்டு வந்த பிறகு  பின்வாங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. இப்போதைக்கு விவசாயிகள் போராட்டத்தில் இருந்த சீக்கிய வெளிப்பாடு பின்னுக்குச் சென்றிருக்கிறது.

https://caravanmagazine.in/religion/rss-threat-sikh-assertion-farmer-protests-savarkar-golwalkar

நன்றி: தி கேரவான் இதழ் 2021 மார்ச் 04

தமிழில்: தா.சந்திரகுரு