ஆயிஷா இரா.நடராசன் எழுதிய "டேவிட் அட்டன்பரோ 100: ஏன் கொண்டாட வேண்டும்?" கட்டுரை | Sir David Attenborough Tamil Article | www.bookday.in

டேவிட் அட்டன்பரோ 100: ஏன் கொண்டாட வேண்டும்? – ஆயிஷா இரா.நடராசன்

டேவிட் அட்டன்பரோ 100: ஏன் கொண்டாட வேண்டும்?

– ஆயிஷா இரா.நடராசன்

பூமியை பாதுகாக்கும் அறிவியலை அரசியல்மயம் ஆக்கியவர் டேவிட் அட்டன்பரோ.. மே எட்டு அன்று சென்றவாரம் தன்னுடைய நூறாவது பிறந்தநாளை.. அவர் அனுசரித்த தினத்தில் இருந்து நான் அவரது மூன்று முக்கிய புத்தகங்களை வாசித்தேன்.. ஏன் அவரைக் கொண்டாட வேண்டும் என்பதை புத்தகங்களின் வழியே புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்…

ஒவ்வொரு புத்தகத்தை வாசிக்கும் பொழுதும் இந்த பூமியின் கோடிக்கணக்கான உயிரினங்கள் அவற்றின் வாழ்விடங்கள் என்று அவரோடு சென்று வாழ்ந்த அனுபவத்தை பெற்றேன்..1950 களில் தான் சென்று பிபிசி நிறுவனத்திற்காக விலங்குகளை படம் பிடித்த அந்த நாட்களில் இருந்த வனங்கள் இப்போது அழிக்கப்பட்டிருப்பதை கார்பரேட் நலன்களுக்கு பலியிடப்பட்டு இருப்பதை கூச்சமின்றி தன்னுடைய 100 ஆவது பிறந்த நாளில் ஒரு எச்சரிக்கையாக அவர் பேசி இருப்பதை இங்கே அடிக்கோடு இட விரும்புகின்றேன்.

நூறாவது வயதிலும் அவர் வெறும் . ஒளி-ஒலிபரப்பாளர் அல்ல. மனித வரலாற்றின் மிக சிறந்த அறிவியல் தொடர்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார் பூமியின் இதயத்துடிப்பை கேட்க மனித இனத்தை பழக்கப் படுத்திய ஒரு மனிதராக பூவி பாதுகாப்பு அரசியலை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆழமாக மனதில் பதிந்து கொள்ள உதவிய பேராசானாக அவர் விளங்குகிறார். சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் குறித்த நமது புரிதலை அறிவியல் முறை படுத்தியவர். கார்ல் சேகன் எனக்கு தெரிந்து பிரபஞ்சத்தை நாம் பார்க்கும் முறையை மாற்றியமைத்தவர்.. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆற்றல் குறித்த அடிப்படை புரிதலை மாற்றி அமைத்தவர்.. அதேபோலத்தான் டேவிட் ஆட்டன்பரோ மனிதர்கள் இயற்கையோடு உணர்ச்சிபூர்வமாக இணைந்து அதில் தானும் ஒரு அங்கம் அங்கம் மட்டுமே என்பதை பார்க்க தூண்டிய மாபெரும் இயற்கை விஞ்ஞானி என்பதை நான் வாசித்த புத்தகங்கள் எனக்கு உணர்த்தின..

அந்த புத்தகங்களுக்குள் நுழைவதற்கு முன் டேவிட் அட்டன்பரோ பற்றிய ஒரு சிறு விளக்கம் தரப்பட வேண்டும்… தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு ஆன பல வகையான விலங்கு படங்களை எடுத்தவர் என்று அவரைப் பற்றி பொதுவான அபிப்பிராயம் உண்டு.. டேவிட் அட்டன்பரோ இயற்கையை  படம் பிடித்தவர் மட்டுமல்ல.. ஒருகாலத்தில் டார்வின் கப்பல் பிரயாணம் மேற்கொண்ட பொழுது அவரிடம் ஒளிப்படக் கருவிகள் எதுவும் இருக்கவில்லை.. கைப்பிடி வைக்கப்பட்ட ஒரு உருப்பெருக்கி.. சில காகிதங்களும் தான் பார்ப்பதை வரைந்து புரிந்து கொள்கின்ற எழுது பொருட்களும் தொடர்ந்து பதிவு செய்யவேண்டிய அறிவியல் டைரி.. இவ்வளவுதான் டார்வினிடம் இருந்தது..

அதே டார்வின், ஒளிப்படக் கருவியோடு.. முழுமையாக ஆவணப்படம் எடுக்கின்ற அனைத்து வகையான வசதிகளுடன் அந்த கப்பல் பிரயாணத்தை மேற்கொண்டு இருந்தால் 20 ஆண்டுகள் ஆதாரத்தை தேடி அலைந்து பதிவு செய்யும் கொடுமையை அனுபவித்து இருக்க மாட்டார்.. இத்தனை வசதிகளுடன் ஒரு நவீன டார்வினாக  இயற்கையிடம் சென்றவர்தான் டேவிட் ஆட்டன்பரோ.. அவர் வருவதற்கு முன் எடுக்கப்பட்ட பல பழைய ஆவணப் படங்கள் வெற்று தகவல்கள் கொண்டவை. இந்த விலங்கு எங்கே வாழ்கிறது என்ன சாப்பிடுகிறது இது எவ்வளவு பெரியது எவ்வளவு துல்லியமாக கடவுள் இதை படைத்திருக்கிறார் என்றெல்லாம் பிதற்றுகின்ற வகையில் அந்த ஆவணப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள்..

அறிவியல் பூர்வமாக பரிணாம வளர்ச்சியை ஒரு அறிவியலாக ஏற்று அதனையும் உள்ளடக்கிய ஆவணப்படங்களை இந்த உலகிற்கு முதலில் வழங்கத் தொடங்கியவர் டேவிட் அட்டன்பரோ தான் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.. மற்ற இயற்கை தொடர்பான ஆவணப்படங்களுக்கும்  அட்டன்பரோ படங்களுக்குமான வித்தியாசமாக நான் பார்ப்பது அவர் ஒரு கதைசொல்லி.. நம்மால் கண்களை படங்களில் இருந்து எடுக்கவே முடியாது அங்கே இருக்கும் இயற்கை காட்சிகள் விலங்குகளோடு நாமும் ஒருவராக பிணைக்கப்பட்டு இருப்போம் என்கின்ற அந்த ஈர்ப்பு.. மனித உணர்வுகளோடு இணைத்து விலங்குகளின் வாழ்க்கையை முதல்முறையாக பரிணாம அறிவியலுடன் கலந்து கொடுத்த விஞ்ஞானி டேவிட் அட்டன்பரோ.

நான் வியந்திருக்கிறேன் மனித நடமாட்டம் இல்லாத காடுகளின் உட் பகுதிகளுக்கு சென்று நாள்கணக்கில் சிலசமயம் வாரக்கணக்கில் உணவின்றி தவித்து அங்கேயே வாழ்ந்து ஒரு பகுதியை தேர்வு செய்து ஒரு பறவை தன் துணையை தன் பக்கம் இழுப்பதற்கு எப்படியெல்லாம் நடனம் ஆடுகிறது என்னவெல்லாம் செய்கிறது என்பதை ஒரு கதைபோல ஆவணப்படுத்த வேண்டும் என்றால் அந்த வாழ்க்கைக்கு உங்களை நீங்களே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.. அவர் வராமல் போயிருந்தால் கடலுக்கு அடியில் மிக சிறிய ஆமைகள் பாம்புகளிடமிருந்து.. எப்படி தப்பு கின்றன என்பதையும் ஒரு திமிங்கிலம் தனது குட்டியை எப்படி பேணி பாதுகாக்கிறது என்பன போன்ற அரிய காட்சிகளை மனிதர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.. எனவே அட்டன்பரோவின் பார்வையாளர்கள் படமாக காட்சியாக அவற்றை பார்க்கவில்லை.. அவைகளோடு வாழ்ந்தார்கள்.

அவரது குரல் உலகப் பிரசித்தி பெற்றது அது மென்மையானது அமைதியானது மரியாதை மிக்கது ஆனால் ஆச்சரியத்தால் முழுக முடிந்த ஒரு கவிஞனின் குரலாக இருக்கிறது.. அண்டார்டிகாவில் முதல் முறையாக உருகும் பனிப்பாறைகள் அவற்றால் பரிதவிக்கும் வெள்ளை கரடிகளை பற்றி அவர் பேசும்பொழுது நான் கதறி அழுது இருக்கிறேன்.. பலரும் அப்படி உணர்ந்திருப்பீர்கள்.

இயற்கைக்கு தன்னை தகவமைத்து கொள்ளுகின்ற உயிரிகளே நிலைத்திருக்கும்..THE SURVIVAL OF THE FITTEST.. என்கிற வார்த்தைக்கு டார்வினின் அறிவியலுக்கு காட்சி நிரூபணங்களை அள்ளி வழங்கியவர் டேவிட் அட்டன்பரோ.. விலங்கை மனிதர்களின் போதை தரும் காட்சி பொருளாக மாற்றாமல் இயற்கைக்கு எதிரான அந்த விலங்குகளின் போராட்டத்தை சமூக உறவுகளை அறிவாற்றலை புதிய மாற்றங்களுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொள்ளும் அவற்றின் அடிப்படை அறிவியலை முன்வைக்கும் முதல் டார்வினிய ஆவணப்பட விஞ்ஞானியாக உருவெடுத்தவர் அவர்.

எல்லாவற்றையும் விட என்னை அதிகம் ஈர்த்தது இந்தியாவின் காடுகள் குறித்த அவரது அரிய பார்வை. இந்திய சூழலியல் அரசியலோடு பின்னிப் பிணைந்தது அவருடைய ஆவண பட உலகம். அதற்காக எப்போதும் அவர் அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டு இருப்பவர் அல்ல. உதாரணமாக  புகழ்பெற்ற தொடர்களில் இந்திய வனவிலங்குகள் பல நேரங்களில் மையமாக வந்திருக்கின்றன மனிதர்களும் இயற்கையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த நாகரிகம் என்று இந்தியாவை அவர் புகழ்கிறார். இந்திரா காந்தி  காலத்தில் புலிகளை பராமரிக்கும் ப்ராஜெக்ட் டைகர் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது இந்தியாவிற்கு வந்து வங்காளப் புலி குறித்த முழுமையான தனி ஆவணப் படத்தை உருவாக்கி உலகிற்கு வழங்கியவர் அட்டன்பரோ.

இந்தியாவின் புலி பாதுகாப்பு நடவடிக்கைகளை பலமுறை பாராட்டி இருக்கிறார் உலகின் பல நாடுகளில் புலிகள் அழிந்து கொண்டிருந்த பொழுது இந்தியா அவற்றை பாதுகாக்க முயன்றது என்று சொன்னதோடு நிறுத்தாமல் இந்தியாவின் வன விலங்கு ஆர்வலர்கள் போராளிகள் இவர்களையும் உள்ளடக்கியதாக அந்த ஆவணப்படங்களை அவர் உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்திய புலிகளின் பேரழிவிற்கு பிரிட்டனில் இருந்து இந்தியாவை ஆள வந்தவர்கள் வேட்டை என்கிற சாகசத்தை வாழ்க்கையின் அங்கமாக்கிக் கொண்டது முக்கிய காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியவர்.. அதே இந்திரா காந்தி அமைதிப்பள்ளத்தாக்கு கை தொழிற்சாலைகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என்கிற பெயரில் அழிவுக்கு உட்படுத்த நினைத்த பொழுது அதனை சாடியும் ஒரு ஆவணப்படம் எடுத்தார்.. மிக சமீபத்தில் ஆரவல்லி மலைத் தொடர் சிக்கலில் சூழலியல் ஆர்வலர்களுடன் உலகளாவிய கண்டனம் தெரிவிக்கப்பட்ட பொழுது அதில் தன்னை இணைத்துக் கொண்டவர் அவர்.

டேவிட் அட்டன்பரோ மே எட்டாம் தேதி அன்று 1926 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிடில்செக்ஸ் மாகாணத்தில் ஐஸ்வர்த் என்கிற ஊரில் பிறந்தவர்.. லேட் சஸ்டர் பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் அவரது தந்தை முதல்வராக பணியாற்றி வந்ததால் அந்த கல்லூரி வளாகத்திலேயே வளர்ந்தவர். அவரது சகோதரர் ரிச்சர்ட் அட்டன்பரோ ஒரு சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் ஆனவர். மகாத்மா காந்தியைப் பற்றிய திரைப்படமொன்றை எடுப்பதற்கு தன்னுடைய சகோதரரை தூண்டியது டேவிட் அட்டன்பரோ தான் என்றும் சொல்லப்படுவது உண்டு. இரண்டாம் உலகப்போரின் பொழுது அகதி குழந்தைகள் இயக்கம் எனப்படுகின்ற பிரிட்டிஷ் தன்னார்வ அமைப்பின் மூலம் அவரது பெற்றோர்கள் இரண்டு யூத அகதி சிறுமிகளை தத்தெடுத்து வளர்த்தார்கள் என்றால் சமூக அக்கறை என்பது அவர்களின் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை விளங்கிக்கொள்ள முடியும்

அட்டன்பரோ புகைப்பட ஆக்கத்தை ஒரு பாடமாக எடுத்து படித்த பிறகு இயற்கையிடம் வந்து சேர்ந்தவர் அல்ல. தனது குழந்தை பருவத்தை புதை படிவங்கள் கற்கள் மற்றும் இயற்கை மாதிரிகளை சேகரிப்பதில் கழித்தவர்.. அவர் பல்கலைக்கழக வளாகத்தில் அதிக நேரத்தை செலவிட்டார் தன்னுடைய பதினோராவது வயதில் அந்த கல்லூரியின் விலங்கியல் துறைக்கு நியூட் எனப்படும் உயிரிகள் அதிகம் தேவைப்படுவதை கேள்விப்பட்டார் அவற்றை பிடித்து வந்து ஒவ்வொன்றையும் மூன்று பென்ஸ் விலைக்கு அந்த கல்லூரிக்கு வழங்குவதை சிறுவயதிலிருந்து ஒரு வழக்கமாக கொண்டு அதற்காக இரண்டு குளம் ஏறி என்று சுற்றி திரிந்தார்..

தன்னுடைய 12 ஆவது பிறந்தநாளன்று வளர்ப்பு சகோதரி அவருக்கு வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்களைக் கொண்ட ஒரு அம்பர் பதிவு துண்டை பரிசாக கொடுத்தார் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு அது அவரது நேச்சுரல் வர்ல்ட் பிபிசி தொடரின் ஒரு அத்தியாயமான தி அம்பர் டைம் மெஷின் என்பதன் மையமாக மாறியது.. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

அட்டன்பரோ எடுத்த உடனேயே விலங்குகளின் ஆவணப்பட தயாரிப்பாளராக மாறி விடவில்லை.. பிரிட்டானியா கடற்படையில் அவர் முதலில் இணைந்தார்.. கடல் பிரயாணங்கள் யுத்த காலத்தில் இரண்டாம் உலகப் போரின் பொழுது அவர் இயற்கை ஆர்வலராக மாறினார்.. இரண்டாம் உலக யுத்தம் மனிதர்களை மட்டும் அழிக்கவில்லை எத்தனை வகையான உயிரினங்களை எவ்வளவு கொடூரமாக பேரழிவுக்கு உட்படுத்தி கொண்டிருக்கிறது என்பது குறித்த மன சிதைவால் அவர் இருக்கையின் பால் ஈர்க்கப்பட்டு இயற்கை விஞ்ஞானியாக தன்னை உருமாற்றிக் கொண்டார்..

Life on Earth: A Top 100 Sunday Times Bestseller of the Past ...

நான் வாசித்த அவருடைய முதல் புத்தகம் LIFE ON EARTH.. பூமியில் வாழ்க்கை.. இதுவரை சொல்லப்பட்ட மிகச் சிறந்த கதை என்கிற தலைப்பில் எழுதப்பட்டது மொத்தம் 352 பக்கங்கள். அட்டன்பரோவின் புரட்சிகரமான லைஃப் ஆன் எர்த் அழகான படங்களுடன் கூடிய பதிப்பு. டேவிட்  கொரில்லாக்களுடன் கொண்ட மறக்க உறவு.. சந்திப்பு லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு ஒரு சின்னமாக அது மாறிப்போனது. பிபிசி லைஃப் ஆன் எர்த் தொடராக வெளியிட்டது. எப்படி தான் அதை ஒரு ஆவணப்படமாக எடுத்தோம் என்பதை விவரிக்கும் அற்புதமான புத்தகம் இது. இந்த புத்தகம் வெளி வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. இது வரையில் விடாமல் தொடர்ந்து பதிப்புகள் பல கண்டு விற்பனையாகி வரும் நூல். இந்த புத்தகத்தில் உள்ள ஆச்சரியமான சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்..

  • நுண்ணுயிரிகளிலிருந்து மனித நாகரிகம் வரை உயிரின பரிணாம வளர்ச்சியை இந்த புத்தகம் நேரடி காட்சிகளுடன் விளக்குகின்றது
  • பரிணாம கொள்கையை அட்டன்பரோ வெறும் உள்ளார்ந்த அறிவியலாக பார்க்கவில்லை கோடிக்கணக்கான ஆண்டுகளை தாண்டி நீளுகின்ற பிரமாண்ட சாகசமாக நம் முன் வைக்கிறார்
  • டைனோசர்கள் மீன்கள் ஊர்வன இனத்தை சேர்ந்தவை பறவைகள் பாலூட்டிகள் மற்றும் மனிதர்கள் இவர்கள் அனைவரையும் ஒரே பெரிய உயிர் குடும்ப மரமாக அவர் இணைக்கிறார்.. இந்த புத்தகத்தின் அப்படிபட்ட பகுதிகள் இதுவரை சொல்லப்படாத அறிவியல் விளக்கங்களை கொண்டவையாகும்.
  • வாழ்க்கையின் வெற்றி என்பது பலத்தால் மட்டும் வருவது அல்ல சூழல்க்கு ஏற்றார் போல் தன்னை தகவமைத்து கொள்ளும் திறமையால் வருகிறது என்பதை காட்சிபூர்வமாக விளக்குகின்ற அத்தியாயங்கள் சிலிர்க்க வைக்கின்றன
  • டார்வினின் பரிணாம கோட்பாட்டை சாதாரண வாசகர்களின் மனதோடு உணர்ச்சி பூர்வமாக இணைத்த ஒரு அற்புதம் இந்த புத்தகம்.

இந்த புத்தகத்தின் மறக்க முடியாத சிறப்பு அறிவியல் துல்லியத்தையும் சாகசக் கதையையும் ஒன்றிணைக்கும் விதம். ஒரு சாதாரண வாசகன் வெகுஜன புத்தியில் டார்வினை வெற்றி அடைய வைக்கும் இது போன்ற புத்தகங்களை நாம் கண்டிப்பாக கொண்டாட வேண்டும். இந்த புத்தகத்தின் வாசகர்கள் தாங்களே ஒரு விஞ்ஞானியாக மாறி இயற்கையில் பூமியில் பயணம் செய்வது போல கண்டிப்பாக தன்னை உணர முடியும்.. வரும் சந்ததியினரின் கையில் நாம் பரிசாக கொடுக்க வேண்டிய அற்புதங்களில் இது ஒன்று.

Living Planet: A new, fully updated edition of David Attenborough's seminal portrait of life on Earth: Attenborough, David: 9780008477820: Amazon.com: Books

நான் வாசித்த அவரது அடுத்த புத்தகம் THE LIVING PLANET. இதுவும் தொடராக காட்சி ரூபமாக எடுக்கப்பட்ட வரலாறை அடிப்படையாக கொண்டது.. இந்த புத்தகத்தின் மூலம் நாம் பாலைவனங்கள் மழைக்காடுகள் பனிப்பாறை.. கடல்கள்.. இமயமலை உட்பட மலைப்பகுதிகள் என்று சுற்றி வருகிறோம்..1984 ஆம் ஆண்டு முதல் வெளிவந்த பிபிசி தொடருடன் நம்மை இணைக்கும் புத்தகம்.. தாவரங்களும் விலங்குகளும் பல்வேறு சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை எப்படி தகவமைத்துக் கொள்கின்றன என்பதை இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது. இந்த புத்தகத்தின் மிக முக்கியமான கருத்துக்களை கீழ்க்கண்டவாறு நாம் வரிசைப்படுத்தலாம்

  • ஏன் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே சில விலங்குகளால் உயிர்வாழ முடிகிறது என்பதை குறித்த அறிவியலை மையமாகக் கொண்டது இந்த புத்தகம்.
  • காடுகள் பெரும் கடல்கள் பாலைவனங்கள் உள்ளிட்ட பல்வேறு உயிர்ச் சூழல் மண்டலங்களையும் மனித மேம்பாடு என்கிற பெயரில் அவற்றின் மீது கொடூரமாக பாயும் மனித கார்பரேட் அழிவுகளை.. தீப்பற்றி எரியும் காடுகளை.. இந்த புத்தகம் சரளாமாக முன்வைக்கிறது. நம்மை எச்சரிக்கிறது
  • பூமியின் வாழ்விடங்கள் குறித்த ஒரு விரிவான கண்ணோட்டத்தை வழங்கும் வகையில் அத்தியாயங்கள் சுற்றுசூழல் வகைகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
  • இந்த புத்தகத்தின் மிகப்பெரிய சாகசம் சூடான் நாட்டில் மிகக் கடினமான இடங்களில் ஓடுபாதைகளும் சாலைகளோ இல்லாதபோதிலும் அட்டன்பரோ அவரது படக்குழுவினரும் எப்படி சென்று இறங்கினார்கள் அங்கே ஒரு வருடம் எப்படி வாழ்ந்தார்கள் என்பது குறித்த பகுதியாகும்.
  • இமயமலை குறித்த பகுதி மிக சுவாரசியமானது மட்டுமல்ல நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஏராளமான சூழலியல் பாடங்கள் கொண்டது. இமயமலையின் பல பகுதிகளில் போக்குவரத்து வசதி அறவே இல்லை எனவே நடந்து செல்வது மட்டும் தான் ஒரே வழியாக இருந்தது.. ஏறத்தாழ 170 நாட்கள் ஒருவர் பிடிவாதமாக 1000 கிலோ மீட்டர்கள் நடக்க முடியும் என்பதே நம்மை அதிர்ச்சி அடைய வைக்கும் விஷயமாகும்.
  • முதல் முறையாக நாம் மிக சவாலான ஒரு விஷயத்தை இந்த புத்தகத்திற்குள் பார்க்கிறோம் ஒரு எரிமலை வெடிப்பதை அவர் படம் பிடிக்கிறார் இரண்டாண்டுகள் அந்த எரிமலை என்ன ஆகிறது என்பதை இரண்டு வருடங்கள் அங்கு கழித்து படம் பிடிக்கப்படுகின்ற அந்த பொறுமை இனி திரும்ப ஒருவரால் செய்ய முடியுமா என்று ஆச்சரியப்படவைக்கிறது..
  • பறக்கும் செவ்வந்தி வாத்துகளை பற்றிய அந்த அத்தியாயம் எவ்வளவு அற்புதமான ஒன்று.. இடம்பெயரும் பறவைகளின் அறிவியலை நமக்கு கட்சிதமாக சொல்லிக் கொடுத்தவர் டேவிட் அட்டன்பரோ.. பறவைகள்ரோடு சேர்ந்து எப்படி அவர்களால் பறந்து இந்த காட்சியை எடுக்க முடிந்தது என்று ஆச்சரியப்படத்தக்க ஒரு புகைப்படம் இந்த அத்தியாயத்தில் உள்ளது இந்த அத்தியாயத்தின் தலைப்பு மேலே உள்ள வானம்.. இதற்காக அவர் நாசாவின் உதவியை நாடினார்.. அவர்களது ஈர்ப்புவிசை ஆராய்ச்சி விமானத்தை இதற்காக அவர் பயன்படுத்திக் கொண்டார் என்பன போன்ற பல ஆச்சர்யங்கள் இந்த புத்தகத்திற்குள் உள்ளன..
  • ஸ்கூபா டைவிங் உடையோடு அட்டன்பரோ நீருக்கு அடியில் கடலின் நிகழ்ந்த ஆழத்திற்கு சென்று பார்க்கவும் படம் பிடிக்கவும் பேசவும் ஒரு கருவியை தானே கண்டுபிடித்தது பற்றிய அத்தியாயமும் நம்மை சிலிர்க்க வைக்கிறது.
  • உலகின் மிக ஆழமான பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் காளி கண்டகி ஆற்றின் பள்ளத்தாக்கில் இமயமலையில் தொடங்குகிறது.. அது நம்மை அங்கிருந்து மெல்ல மெல்ல துருவங்கள் வெப்பம் அதிகம் உள்ள பகுதிகள் உயரமான பனிப்பாறைகள் பாலைவனங்கள் இப்படியெல்லாம் கடந்து உறைந்த உலகத்தை நமக்கு படம் பிடித்துக் காட்டி கடைசியாக கடலுக்குள் இட்டுச் செல்கிறது..

இப்படிப்பட்ட இயற்கை அற்புதங்கள் நிறைந்த ஆச்சரியங்கள் கொட்டிக்கிடக்கும் உயிரி கோளம் இந்த பிரபஞ்சத்திலேயே இது ஒன்றுதான் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் பிரபஞ்சத்தில் வேறு எங்குமே இப்படி ஒரு கிரகம் இருப்பதாக இதுவரை தெரியவில்லை என்பதை நினைக்கும் பொழுது விமல்களுடன் கூடிய பெருமிதம் உங்களையும் அறியாமல் இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது உங்களுக்கு ஏற்படும்.. பரிதவித்து அப்படி எப்படியாவது விலை போட்டு வாங்கி 10 பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு புத்தகத்தை பரிசாக வழங்கிவிட்டு தான் நீங்கள் ஓய்வீர்கள்.

Buy Life on Air Book Online at Low Prices in India | Life on ...

நான் வாசித்த மூன்றாவது புத்தகம் LIFE ON AIR.. இது அவருடைய சுயசரிதை போலவே தோன்றும் நினைவுக்குறிப்புகள் கொண்ட தொகுப்பு நூல்.. இந்த புத்தகம் 2002 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒரு இயற்கை ஆவன பட இயக்குனராக அப்போது அவர் 50 ஆண்டுகளைக் கழித்திருந்தார். இந்த புத்தகத்தின் சிறப்பம்சங்கள் அதிகம்

  • அட்டன்பரோ வாழ்க்கையின் ஐந்து தசாப்தங்களை பிபிசியில் அவர் பணியாற்றிய ஆரம்ப நாட்கள் முதல் அவரது முன்னோடியான இயற்கை வரலாற்று ஆவணங்கள் படங்கள் என்று வரிசையாக இந்த புத்தகம் பேசுகிறது
  • ஒரு பதிப்பகத்தில் திருப்தியற்ற வேலையிலிருந்து அதை விட்டுவிட்டு 1952 ஆம் ஆண்டு பிபிசியில் ஒரு பயிற்சி தயாரிப்பாளராக சேர்ந்தபோது தான் அனுபவித்த கொடுமைகளை அவர் எழுதுகிறார்.. அவருடைய குரல் மிக மோசமானது என்று பிபிசியின் அதிகாரிகள் அவரை புறக்கணிப்பார்கள்.. ஒரே ஒரு ஆவணப் படத்தை எடுப்பதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறார் என்று கேலிசெய்தார்கள்..
  • உண்மையில் வழக்கத்திற்கு மாறாக இயற்கையின் அறிவியலை முழு துடிப்புடன் எடுத்துச் செல்கின்ற புதிய பாதையை கட்டமைப்பது எவ்வளவு சிரமமாக இருக்கிறது இருந்தது என்பதை.. மூன்றாவது அத்தியாயம் விரிவாக பேசுகிறது.
  • சோக் வெஸ்ட் டிவி தொடர் என்கிற தொடக்கங்களை பற்றி அரிய வன விலங்குகளை படம் ஆக்குவதற்காக உலகின் தொலைதூரப் பகுதிகளுக்கு பயணம் செய்ய அவருக்கு கிடைத்த முதல் வாய்ப்புகள் குறித்து அவர் பேசுகிறார்.
  • அந்த காலகட்டத்தில் கருப்பு வெள்ளை படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டு வந்தது.. பிறகு வண்ண தொலைக்காட்சி முதன் முதலில் அறிமுகமான பொழுது தன்னுடைய அறிவு இயற்கை குறித்த படமாக்குதல் பற்றி எப்படி படிப்படியாக செரிவு பெற்றது என்பதை விவரிக்கும் இடம் அற்புதமாக உள்ளது.. தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதில் அட்டன்பரோ பங்களிப்பை இந்த உலகம் மறக்கவே கூடாது
  • லைஃப் என்கிற ஒரு தொடரை எடுத்தவர் அவர்..1979 ஆம் ஆண்டு தொடங்கியது இந்த புத்தகத்தில் அவருடைய மிகவும் புகழ்பெற்ற ஆக சிறந்த தொடரின்.. அனுபவங்களை எடுத்துரைக்கும் பொழுது உணவில்லாமல்.. எத்தகைய உதவியாளரும் இல்லாமல் தான் தனித்து இயற்கையிடம் விடப்பட்ட நாட்களை குறித்து பேசும்பொழுது எங்காவது காட்டுக்கு ஓடி போய் கொஞ்ச நாள் தனியே இருந்துவிட்டு வரலாமா என்று நம் மனதை ஏங்க வைக்கிறார் அட்டன்பரோ.
  • 1973 ஆம் ஆண்டு முதல் மேலாண்மை பணியை முற்றிலும் விட்டு விட்டு முழு நேர ஆவணப்பட தயாரிப்பு மற்றும் எழுத்து பணிக்கு திரும்பிய தனது முக்கிய முடிவை இந்த நூலில் அவர் பகிர்ந்து கொள்கிறார்.. அது முதல் அவர் பிபிசியில் வேலை பார்க்கவில்லை மாறாக சுய தொழில் செய்யும் ஒரு இயற்கை ஆர்வலராக விஞ்ஞானியாக மாறுகின்றார்..
  • ஒவ்வொரு ஆவண படத்தையும் எடுப்பதற்கு பின்னால் மிக கடினமான சூழ்நிலைகளில் படப்பிடிப்பு நடத்துவதில் இருந்த சவால்கள் குறித்த வெளியே தெரியாத பல அபூர்வ கதைகளை இந்த புத்தகம் பேசுகிறது.. நான் கேள்விப்பட்டது கூட இல்லை ஒரு வருடம் முழுவதும் விடாமல் பெய்து தள்ளுகின்ற மழையை கார்சியா மார்க்வேஸ் எழுதிய.. நூற்றாண்டு காலத் தனிமை புத்தகத்தில் மட்டும் தான் நான் வாசித்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு இடம் உண்மையிலேயே இந்த பூமியில் இருக்கிறது என்பது அவ்வளவு ஆச்சரியமான விஷயம்.
  • கொரில்லாக்கள் முதல் அரிய பறவைகள் வரை பல்வேறு விலங்குகளுடன் தனக்கு ஏற்பட்ட அந்தரங்கமான நேரடி அனுபவங்களை அட்டன்பரோ விவரிக்கிறார்.. 7 ஆண்டுகள் ஒரு கொரில்லா குடும்பம் தன்னை தத்து எடுத்தது.. அப்போது தனக்கு எப்படி இருந்தது சில சமயங்களில் கொரில்லாக்களின் அந்தரங்க வாழ்க்கையை படம் பிடிக்கக்கூடாது என்றுதான் முடிவு செய்தது உட்பட விவரிக்கும் இடங்கள் இந்த புத்தகத்தை நோபல் பரிசு பெறும் ஆவணமாக மாற்றுகிறது.
  • கோமாரோ தீவுகளுக்கு அப்பால் மனிதனுக்கு எளிதில் கண்ணில் படாத.. கோயலாகாந்த் என்கிற வகை மீனைத் தேடிப் பிடித்து படம் பிடித்த பரவசத்தை அவர் பகிர்வதை குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.
  • லிசா எனும் பெண் சிங்கத்தை வளர்த்ததற்காக புகழ்பெற்ற ஜார்ஜ் ஆடம்சன் மற்றும் ஜாய் ஆகியோருடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு பிணைப்பு இதன் வழியே லிசாவுடன் தனக்கு இருந்த நட்பு ஆகியவற்றை விவரிக்கும் அத்தியாயம் வித்தியாசமானது.. காட்டிலேயே வளர்க்கப்பட்ட மனித கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட பெண் சிங்கத்தின் வாழ்க்கை எத்தனை போராட்டங்கள் நிறைந்தது என்பதை அழகாக பதிவு செய்கிறார் அவர்.

மேற்கொண்ட புத்தகங்கள் நமக்கு எதை விவரிக்கின்றன.. டேவிட் அட்டன்பரோ என்கிற ஒரு மனிதரை வெறும் இயற்கை நிகழ்ச்சி தொகுப்பாளராக நாம் பார்க்க முடியாது.. முதலாளித்துவ நுகர்வு வாதம் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு ஆகியவற்றின் முரண்பாடுகளை உலக மக்களுக்கு வெளிப்படுத்திய ஒரு மிக மிக முக்கியமான கலாச்சார மனிதராக அவரை நாம் பார்க்கலாம். அவர் நேரடி எச்சரிக்கைகளை தயவு தாட்சண்யமின்றி இன்றி பதிவு செய்தவர். நேரடியான அரசியல் செயற்பாட்டாளராக அவர் இருக்கவில்லையே என்று நீங்கள் கேட்கலாம்.. ஆனால் ஒரு பொதுமேடையை உருவாக்கிக் கொண்டு இடதுசாரி சுற்றுச்சூழல் சிந்தனை, சூழலியல் நீதி, சுரண்டல் எதிர்ப்பு பார்வை, தொழில்மயமான நுகர்வு சமுதாயத்தின் கார்ப்பரேட் மீதான விமர்சனம் இவை அனைத்தையும் அவருடைய புத்தகங்கள் பேசுகின்றன.

லாப நோக்கத்தை மையமாக கொண்ட கார்பரேட் நாகரிகத்தின் இயற்கை அழிவை அவள் அவர் வெளிப்படையாக விமர்சிக்கிறார். கட்டுப்பாடற்ற முதலாளித்துவம் இயற்கையை ஒரு வணிகப் பொருளாக மட்டுமே பார்க்கிறது என்கிற சிந்தனையின் அடிப்படையில் விரிவடைகின்றன அவருடைய புத்தகங்கள்.

  • லாபத்திற்காக அழிக்கப்படும் காடுகள், தொழிற்சாலைகளால் மாசுபடும் கடல்கள், வணிக பேராசையால் முற்றிலும் அழிந்து போகும் உயிரினங்கள், முடிவில்லா நுகர்வால் உருவாகும் காலநிலை மாற்றம்.. இப்படி நம் காலத்தின் முக்கிய அரசியலை பொறுப்பு உணர்ச்சியோடு ஒரு எச்சரிக்கையாக இந்த புத்தகங்கள் முன்வைக்கின்றன
  • சுற்றுசூழல் பொறுப்பில்லாத பொருளாதார வளர்ச்சி என்பது இறுதியில் அழிவாகத்தான் மாறும் என்கிற சூழலியல் சோசலிச கருத்தை அது இன்னதுதான் என்று பெயர் இடாமல் வளர்ச்சி என்பதை வித்தியாசமான பார்வையில் இந்த புத்தகங்கள் அணுகுகின்றன
  • ஒரு காலத்தில் உயிரியல் பரிணாமம் வனவியல் உயிரியல் பல் வகைமை போன்றவை எல்லாம் வெறும் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட பாடங்களாக உயர் கல்வி வட்டாரங்களில் இடம்பெறுவதாக இருந்தவைகளை எல்லாம் சாதாரண மக்களிடம் கொண்டுவந்து சேர்த்தவர் அட்டன்பரோ
  • பிடிவாதமான பரிணாம கொள்கையின் ஆதரவாளர். சூழலியல், உயிரியல் அறிவியல், காலநிலை அறிவியல், போன்றவைகளின்மூலம் கோடிக்கணக்கான மக்களிடம் நுணுக்கமான அரசியலை கொண்டு சேர்த்தவர்.
  • மனிதன் இயற்கையின் எஜமானன்.. அதிலும் கார்பரேட் மனிதன் அனைத்திற்கும் உரிமையானவன் என்கிற கருத்தை எதிர்த்து மூல பொருள் வளம் தனியார் சந்தைப் பொருள் போன்ற அடிப்படைகளில் இருந்து உலகப் பார்வையை கோடிக்கணக்கான உயிரினங்களில் ஒரு உயிரினம் தான் மனிதன் அனைத்து உயிரியல் அமைப்புகளும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை லாப நோக்கு வணிக கலாச்சாரம் பூமியின் பேரழிவு சக்தியாக உருவெடுத்து கொண்டிருக்கிறது.. என்பதை இயல்பாக இவருடைய புத்தகம் மனித குலத்தின் முன் ஒரு கருத்தாக முன் வைக்கிறது.

அதை விட முக்கியமான ஒரு விஷயத்தை நான் விளக்க விரும்புகின்றேன்.. அவர் ஒரு தலைசிறந்த விஞ்ஞானி.. டென்னிஸ் பந்துகள் வெள்ளை நிறத்தில்தான் இருந்தன அவற்றை மஞ்சள் நிறத்துக்கு மாற்றியவர்.. வண்ணத் தொலைக்காட்சிகள் அறிமுகமான பொழுது வெள்ளை பந்து சரியாக தெரியாது.. பார்வையாளர்களின் கண்கள் பாதிப்பு அடையும் என்பதை கண்டுபிடித்து இந்த உலகிற்கு மாற்றத்தை உணர்த்தியவர்..

வணிக ஊடகங்கள் பொதுவாக அதிகாரம், பிரபலங்கள், போர், ஆடம்பர பொருட்கள், நுகர்வு பொருட்கள் என்பதையே பெரிது படுத்திக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அட்டன்பரோ முற்றிலும் மாறுபட்ட பாதையை தேர்வு செய்தார் அழியும் பூச்சிகள், பவள பாறைகள், பூஞ்சைகள்,  பறவைகள், நுண்ணுயிரிகள் மிகவும் மென்மையான உயிரியல் அமைப்புகள் என்று மனிதனின் பார்வையை இயற்கையை நோக்கி திருப்பியவர் அவர். பூமி ஒன்று தான் நம்முடைய வாழும் வீடு.. என்பதை நிலைநாட்டிய அவருடைய பிற்கால படைப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. நெகிழி மாசு, காலநிலை பேரழிவு அளவுக்கு மீறி நடக்கும் வாழ்விட அழிவு.. இவற்றையெல்லாம் வாசிக்கின்ற பொழுது நம்முடைய நாட்டின் கார்பரேட் பேர்ழிவும் ஆரவல்லி மலைத்தொடர் உட்பட அனைத்துக்குமான நம்முடைய போராட்டம் இன்னும் உக்கிரமடைய வேண்டும் என்கிற உத்வேகத்தை அவருடைய புத்தகங்கள் ஏற்படுத்துகின்றன..

இயற்கையை பாதுகாப்பது என்பது மனித குலத்தையே பாதுகாப்பதற்கான போராட்டம் என்பதை கோடிக்கணக்கான மக்களின் மனதில் உணர்ச்சி பூர்வமாக பதிய வைத்த டேவிட் அட்டன்பரோ ஆவண படங்களை பார்ப்பதோடு அவரது எழுத்துக்களையும் வாசிப்பதன் மூலம் அவரது சிலிர்க்க வைக்கும் நூற்றாண்டைக் கொண்டாடுவோம்.

📚 எழுதியவர் : 

✍🏻 – ஆயிஷா இரா.நடராசன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 2 Comments

2 Comments

  1. Padmanabhan Sahasranamam

    மிகச் சிறப்பான கட்டுரை. அவரது வாழ்க்கை வரலாறு சிறார்களுக்கான தனி நூலாக உங்களால் எழுதப்பட வேண்டும்.. இன்றைய சூழலில் அவரது வாழ்க்கை வரலாறு இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்லப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *