நியூட்டன் கடவுளை நம்பியது ஏன்..? – ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் (தமிழில்- ஆயிஷா. இரா.நடராசன்)

நியூட்டன் கடவுளை நம்பியது ஏன்..? – ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் (தமிழில்- ஆயிஷா. இரா.நடராசன்)

 

 (தி கிராண்ட் டிசைன்…. நூலில் இருந்து)

     நியூட்டன் கடவுளை நம்பியது ஏன் என்பதை புரிந்துகொள்ள நாம் புவி எனும் ஆச்சரியத்தை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்

சீனாவில், ஹசியர் ஆட்சிகாலத்தில் (கிமு 2205 முதல் கிமு1782 வரை) நடந்ததாக ஒரு நம்பிக்கைவாத – சம்பவத்தை சொல்லி வருகிறார்கள். மேற்சொன்ன காலகட்டத்தில் திடீரென்று வானியல் சூழல் மாறியதாம். வானில் பத்துசூரியன்கள் தோன்றின. புவியியல் வெப்பத்தை தாங்கமுடியாமல் மனிதர்கள் பரிதவித்தார்கள். எனவே மாமன்னர் பிரசித்திபெற்ற, வில் வீரர்  ஒருவரை அழைத்து கூடுதலாக இருந்த சூரியன்களை  அழித்துவிட உத்திரவிட்டார். வில் வீரருக்கு நிரந்தர வாழ்வை தரும் அபூர்வ மாய மாத்திரைகள் பரிசாக வழங்கப்பட்டன. ஆனால் வில்வீரரின் மனைவி அவற்றை களவாடி விடுவாள் இதனால் நிலாவுக்கு கடத்தப்பட்டாள் அவள் என கதை முடியும்.

ஒரு விஷயத்தில் சீனர்கள் நினைத்தது சரியே…. மனிதர் தம் உயிர் வாழ்க்கைக்கு  பத்துசூரியன்கள் இருப்பது சாத்தியமில்லை. பலவகையான  வேதிசாத்தியக்கூறுகள் இருந்தாலும், பொதுவாக பல நட்சத்திரங்கள் அதாவது சூரியன்கள் கொண்ட சூரிய குடும்பங்கள் உயிரிகள் வாழும், தோன்றும் சூழல்களற்றவைகளாகவே இருக்கின்றன என்பதை இன்று நாம் அறிவோம். சீனக்கதை யோசித்ததுபோல வெப்பம் மட்டுமே காரணம் இல்லை. உண்மையில் பல சூரியன்கள் கொண்ட கோள்களில் இதமான குளிர்ச்சி  சில காலமாவது அனுபவிக்க கிடைக்கும். ஆனால்  உயிர்வாழ்வுக்கு  மிகவும் அத்தியாவசியமான சீரான வெப்பநிலை தட்பவெப்பநிலை அங்கு நிலவ வாய்ப்பில்லை. இது ஏன்னென்பதை அறிய ஒரு சிறிய எளிய இரட்டை சூரியன்கள் கொண்ட சூரிய குடும்பத்தை ஆராய்வோம்.

நம் வானின் பாதி நட்சத்திர உலகங்கள் இரட்டை நட்சத்திர உலகங்களே இப்படி இரட்டை நட்சத்திரங்கள் இருப்பின் கோள்களின் (சூரியனை சுற்றிவரும்)சுற்று வட்டப்பாதை ஒரே சீராக ஒரே பாதையாக இருக்காது ஒவ்வொரு சூரியனும் தன்னை தானேவும் சுழல்வதால் அப்படியே வெகுகாலம் கழித்து ஒரு முறை, மறுமுறை அதே பாதையில் செல்வதாக இருப்பினும் வெப்பநிலை ஒருமுறை இருந்தது (கோடை காலம், குளிர்காலம், மழைக்காலம் என) சீராக திரும்ப நிகழ்வது  சாத்தியமில்லாத ஒன்று எனவே இரட்டை சூரிய அமைப்புகளில் சீரான சுற்றுவட்ட பாதை என்பது வெகுகாலம் கழித்து எப்போதாவது திரும்ப நிகழ்வதால் அதீத வெப்ப அல்லது அதீத குறைவெப்பம் என உயிரிகளின் தோற்றம் அல்லது வாழ்க்கை என்பது உருவாக முடியாத வகை தட்பவெப்பமே நிகழ்கிறது. பல நட்சத்திரங்கள் கொண்ட கொத்தான கிரகங்களின் நிலமை இன்னும் மோசம்.

நமது சூரிய மண்டலம் உயர் ரக உயிரிகளின் பரிணாமம் அடையும் விதமாக மற்ற ‘அதிர்ஷ்ட’ பண்புகள் கொண்டதாக உள்ளது. உதாரணமாக சூரியனை கோள்கள் சுற்றிவரும் கோள்சுற்றுப்பாதை வட்டமாகவோ அல்லது நீள்வட்டமாகவோ(நீள்வட்டம் என்பது முட்டை வடிவ பாதை) இருக்க நியூட்டனின் இயக்கவிதிகள் அனுமதிக்கின்றன. நீள்வட்டபாதையின் முகட்டு நீள் அளவு என்பதன் நீட்டிப்பு கணக்கீடு பூஜ்யம் மற்றும் ஒன்று இரண்டுக்கும் இடையே வைத்து கணக்கிடப்படுகிறது. நீள்அளவு பூஜ்யத்திற்கு வெகு அருகில் இருந்தால் அது ஏறக்குறைய  வட்டப்பாதையாக இருக்கும், அதே நீள் அளவு ஒன்றுக்கு நெருக்கமாக  இருந்தால் முகடு நீட்டம் மிகவும் நீண்டுவிடும். கோள்கள் சூரியனை சுற்றிவரும் பாதைவட்டப்பாதை அல்ல என்பது அறிஞர் கெப்ளருக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது என்றாலும் புவி சூரியனை சுற்றும் நீள்வட்டப்பாதையின் நீள்அளவு பூஜ்யத்திலிருந்து இரண்டு சதவிகிதமே…. என்பதால் அப்பாதை ஏறக்குறைய  வட்டப்பாதை. இது ஒரு விஷயம் உயரிகளின் தோற்றம் மற்றும் அது சார்ந்த யாவற்றுக்கும் அமைந்த அதிர்ஷ்டமான விஷயம் ஆகும்.

நம் புவியின் தட்பவெப்பநிலை மாறுதல்கள் புவி தன்னைத்தானே சுழலும் அச்சின் மைய சாய்வுக்கும் சூரியனை அது சுற்றும் பாதையின்  தளத்திற்குமான தொடர்பில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. உதாரணமாக புவியின்  வட அரைக்கோளத்தில் ஏற்படும் குளிர் பருவத்தின்போது புவிக்கோளத்தின் வடதுருவ அச்சு சூரியனிடமிருந்து எதிர்திசையில் சாய்வதால்  ஏற்படுகிறது. இந்த துருவ அச்சு சாய்வோடு ஒப்பிடும்போது  புவி அந்த பருவத்தில்  சூரியனிடமிருந்து 91.5 மில்லியன் மைல்கள் சுற்றுப்பாதையில் (94.5 மில்லியன் மைல்களுக்கு  பதில்) சற்றே தள்ளி சுற்றிக்கொண்டிருப்பது ஒன்றும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது இல்லை. ஜீலை மாதமான அந்த காலகட்டம் புவியின் பெரும்பாண்மை இடங்களில் கோடை தொடரும் மாதகாலமாகவே உள்ளதை காணலாம். ஆனால் நீள்வட்டப்பாதையின் முகட்டு நீள் அளவு அதிகம் உள்ள  கோள்களில் சூரியனிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதன் அடிப்படையில் நிகழும் பருவமாற்றங்கள் நம்மை அதிரவைக்கின்றன.

உதாரணமாக புதன்கோளின் சுற்றுப்பாதையின் முகட்டு நீள்அளவு 20 சதவிகிதமாக உள்ள நிலையில் சூரியனுக்கு அருகில் நகரும்போது வெப்பம் 200 டிகிரி அளவுக்கும் தொலைவில் செல்லும்போது மைனஸ் 100 டிகிரிஅளவுக்கும் இரண்டு அதீத சூழல்களாக அங்கே நிலவுவதை காண்கிறோம். புவிக்கும் சுற்றுப்பாதையின் முகட்டு நீளம் 20 சதவிகிதமாக இருந்தால்  நமது சமுத்திரங்கள்  சூரியனின் அருகாமை நாட்களில் கொதிநிலை அடைந்து  கொப்பளிக்கும் சூரியனலிருந்து தொலைதூர பாதை நாட்களில்  பனிக்கட்டி ஆகிவிடும். குளிர்காலமும் கோடையும் பேராபத்தில் அழிவில்தான் முடியும். எனவே அதிக முகட்டு நீள்அளவு உயிரிகள் வாழ தகுதியானவை அல்ல. புவியின் சுற்றுப்பாதை ஏறக்குறைய பூஜ்யம் நீள் முகடாக இருப்பதால் நாம் உயிர்வாழ முடிகிறது.

Image

மற்றொரு குருட்டு அதிர்ஷடம் சூரியனின் நிறைக்கும் அதிலிருந்து நம்புவி அமைந்துள்ள தொலைவுக்குமான தொடர்பாகும். இது எதனால் என்றால் ஓரு நட்சத்திரம் எவ்வளவு ஆற்றலை வெளியிடுகிறது என்பது அதன் நிறையை பொருத்தது. மிகப்பெரிய  நட்சத்திரங்கள் நம் சூரியனைவிட நூறு மடங்கு நிறையோடும் உள்ளன  தற்போதைய சூரியனுக்கும் புவிக்கும் இடையிலான தொலைவு இப்போது இருப்பதைவிட ஒரு 20 சதவிகிதம் குறைவாக அல்லது கூடுதலாக இருந்திருக்குமேயானால் நம் புவி தற்போதைய செவ்வாய் கிரஹகத்தைவிட மோசமான உறைபனி குளிர் உள்ளதாகவோ அல்லது வெள்ளி கோளைவிட தகிக்கும் அதீத வெப்பப் பிரதேசமாகவும் இருக்கும்.

காலங்காலமாக விஞ்ஞானிகள்  ஒரு நட்சத்திரத்தை சுற்றி உயிர்வாழிட சூழலை- நீர்ம நிலையில் தண்ணீர் கிடைத்து நிலைத்திருக்கும் வெப்பநிலை பகுதி என விவரித்து வந்துள்ளனர். உயிர் வாழ்க்கைக்கு  தகுதியான இந்தப்பிரதேசங்கள், சிலசமயம் பொன்னிற பிரதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ‘கோல்டி லாக்’ என்பதே அந்த சரியான சொல். ஏனெனில் நீர்மநிலை தண்ணீர் பிரதேசங்கள் அறிவார்த்த உயிரிகளின் தோற்றம்- வாழ்க்கை நடைமுறையில் இருக்கும் பிரதேசங்கள் என்று அர்த்தம். கோளின் வெப்பநிலை அதற்கு வாகான கச்சிதமானதாக இருக்கிறது. நமது சூரியக்குடும்பத்தின் உயிர் வாழ்க்கை பிரதேசம் மிகமிக குறுகிற பகுதி. அந்தப்பகுதியில் அமைந்த ஒரே கோள் புவி மட்டுமே..  இது அறிவார்த்த உயிரிகளான நமக்கு அமைந்த மற்றொரு வரம்.

இயற்கை விதிகளின் அடிப்படையில்  புவி போன்ற உயர் உயிரிவகை வாழும் பகுதி தானாகவே பரிணாம பெற்றிருக்க முடியாது என்றே அறிஞர் ஐசக் நியூட்டன் கருதினார். மாறாக இந்த பிரபஞ்ச  அமைப்பு கடவுள் என்பவரால் முதலில் கருதப்பட்டு உருவாகி இன்றுவரை அதே நிலையில் பேணப்படுகிறது என்று நியூட்டன் நம்பினார். ஒருவர் அப்படியாக ஏன் கருதவேண்டும் என்பதை புரிந்துகொள்வது எளிது. கற்பனைசெய்ய முடியாத அளவுக்கு சாத்தியம் என நம்மால் கருத முடியாத கச்சித புள்ளி விபரங்களால் நியூட்டன் வீழ்த்தப்பட்டார். பிரபஞ்சம் என்பதே நம் சூரிய குடும்பம் மட்டுமே என அறிவியல் நம்பிய காலத்தில் வாழ்ந்தவர் அவர்.

இவ்வளவு கச்சித அதிர்ஷ்டங்கள் வெறும் அறிவியலின்  இயற்கை விதிகளில் அமையமுடியுமா என அவர் அதிர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவரது அனுமானங்கள்… நம்பிக்கைகள் ஒவ்வொன்றாக தகர்ந்தன. உதாரணமாக  1992ல் முதன் முதலில் வேறொரு நட்சத்திரத்தினை அந்த தொலை தூரத்திலும் ஒரு கோள் சுற்றி வருவதை வானியல் நேரடியாக பதிவு செய்தது. நமது சூரிய குடும்பமே பிரபஞ்சத்தின் பிரதான மையம் எனும் கருத்து உடைப்பட்டது. இப்போது நமக்கு பில்லியன் கணக்கான  சூரியன்களை  சுற்றிடும் எண்ணிலடங்கா கோள்களில் ஏறக்குறைய ஒரு ஆயிரம் கோள்கள் பற்றி தெளிவாக புள்ளி விவரங்களுடன் தெரியும்.

நம் புவியியல் உயிரிகள் வாழ்வதன் தற்செயல் அதிர்ஷ்ட அமைப்புகளான சூரிய-நிறை மற்றும் தொலைவு, போன்றவை ஏதோ மனித உயிரிகளின் வாழ்க்கைக்காகவே புவியை மிகக் கவனமாக உருவாக்கியதுபோல தோற்றமளிக்கும் விஷயங்கள் எனும் அதீத முக்கியத்துவத்தை இப்போது இழந்துவிட்டன. எல்லாவகை கோள்களும் பிரபஞ்சத்தில் உள்ளதை இப்போது நாம் அறிவோம். சில – அல்லது ஏதாவது  ஒன்றாகினும் உயிரிகளின் வாழ்க்கையை கொண்டிருக்கமுடியும். தாங்கள் வாழும் கோளில் தங்களது உயிர் வாழ்க்கைக்கு ஆதரவான விஷயங்களை தனது சுற்றுசூழலில் அவ்வுயிரிகளின் ஆய்வு செய்வதும் அதன்மூலம் தாங்கள் உயிர்த்திருப்பிது ஏன் என்கிற தேடலுக்கு விடை காண்பதும் கண்கூடாக நடக்கும் ஒன்றுதான்.

மேற்கண்ட இறுதி வாக்கியத்தையே ஒரு அறிவியல் கோட்பாடாக மாற்றமுடியும். நமது மனித இனம் உய்வித்திருப்பது என்பதே எப்போது முதல் பிரபஞ்சத்தை துல்லியமாக எங்கிருந்து மனிதன் ஆராயமுடியும் என்பதற்கான விதிகளை நிர்ணயிக்கிறது. அந்த கோட்பாடு மனித இருப்பு பலவீனக்கோட்பாடு என அழைக்கப்படுகிறது. பலவீனம் இதில் ஏன் இணைந்துள்ளது என்பதற்கு பிறகு வருவோம். மனித இன இருப்பு கோட்பாடு என அதை அழைப்பதைவிட தெரிவு கோட்பாடு என அழைப்பதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இந்த கோட்பாடு நமது அறிவுக்கு உட்பட்ட அளவில் நாம் உயிர்த்திருக்கும் காலம் சூழலை பொருத்து சாத்தியமான சுற்றுப்புரத்தை தெரிவு செய்தே நம்மால் ஆராய முடிகிறது. தெரிவுசெய்து ஆய்வுக்கு உட்படுத்த முடியாதவைகளை நம் கவனப்படுத்தலால் அடைய முடியாது.

Image

ஒருவகை தத்துவம் போல இது தோன்றினாலும் இந்த (பலவீன ) மனித இன இருப்புக் கோட்பாட்டை பயன்படுத்தி  சில அறிவியல் கணிப்புகளை நாம் அடைய முடியும். உதாரணமாக இந்தப் பிரபஞ்சத்தின் வயது என்ன? இது தோன்றி எத்தனை காலம் ஆகிறது? நாம் உய்த்திருக்க வேண்டுமானால் நட்சத்திரங்களுக்குள் உள்ள எடைகுறைந்த வேதிப்பொருட்களின் கூட்டிணைவால் தோன்றும் கார்பன் போன்றதொரு வேதிப்பொருள் தேவை. இந்த கார்பன் பெருவெடிப்பு நிகழ்வின்மூலம் பிரபஞ்சம் முழுதும் சிதறி புதிய சூரிய மண்டல கோளுக்குள் திரண்டு படிவுகளாக்கி இருக்கவேண்டும்.

1961ல் இயற்பியலாளர் ராபர்ட் டைக் , கார்பனை உருவாக்கி சிதறவைத்து கோள்களில் திரளவைத்த  படிப்படியான செயல்முறை 10 பில்லியன் ஆண்டுகள் பிடிக்கும் என வாதிட்டார்… ஆகவே நாம் உயிர்த்திருப்பது என்பது இந்தப்  பிரபஞ்சம் குறைந்தபட்சம் அத்தனை ஆண்டு வயதுடையது என்பதை நிரூபிக்கிறது. மறுபுரம் இப்பிரபஞ்சம் 10 பில்லியன் ஆண்டுகளைவிட பழமையானதாக இருக்கவும் முடியாது. ஏனெனில் நட்சத்திரங்களின் எரிபொருள் முற்றிலும் தீர்ந்த நெடுகால சூழலில் நம் உய்த்திருக்க வெப்ப நட்சத்திரங்கள் நமக்கு தேவை. எனவே நம் பிரபஞ்சத்திற்கு சுமார் 10 பில்லியன் வருடம் வயதிருக்கலாம். இது மிகத்துல்லியமான கணிப்பல்ல ஆனாலும் உண்மையான கணிப்பு. தற்போதைய அறிவியல்  புள்ளிவிபரங்களின் படி பெருவெடி நிகழ்வு 13.7 பில்லியன் ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்தது.

பிரபஞ்சத்தின் தோற்றம் அதன் வயது விஷயத்தில் நடந்ததைப்போலவே மனித இருப்புக் கோட்பாடு இயற்கை அளவீடுகளில் துல்லியமாக அன்றி, ஓரளவு சரியான அளவீட்டுத்தொடர்களை வழங்கிவிடுகிறது.ஏனெனில் நமது  இருப்பு, அது அக்குறிப்பிட்ட அளவு மிக  சரியான கணக்கீட்டிற்கு வெகு அருகே நம்மை இட்டுச்சென்று விடுகிறது. நாம் மனித இருப்பு அனுமதிக்கப்படும் உண்மையான கட்டாயங்களுக்கு உட்பட்டே உலகம் உள்ளதாக எதிர்பார்க்கிறோம்.

உதாரணமாக நீள்வட்டப்பாதையின் நீள் முகட்டு இழுவை 0.5 என்பது நம் வாழ்வை அனுமதிப்பது உண்மையானால் நீள் இழுவை 0.1 என்பதும்  நம்மை ஆச்சரியப்படுத்தாது. ஏனெனில் இப்பிரபஞ்சத்தின் பல நட்சத்திர குடும்பங்களில் நீள்வட்டப்பாதையின் 0,1 நீள முகட்டு இழுவைகொண்ட கோள்கள் ஏராளம் உண்டு. ஆனால் புவி சூரியனை சுற்றும் 0.000000001 நீள்வட்ட முகட்டு இழுவை மட்டுமே புவியை மிகமிக சிறப்பு வாய்ந்த தனித்துவ கோளாக்கி நாம் உயிர்வாழ இருக்கும் ஒரே காரணம் என விளக்கிட நம்மை ஊக்குவித்தால் அவ்வகை கோட்பாடு மிகவும் சராசரியான அடிப்படை கடவுள்வாத சிந்தனைக் கோட்பாடு என அழைக்கப்படுகிறது அதில்தான் நியூட்டன் சிக்கிக்கொண்டார்.

கோள் சுற்றும்பாதை, சூரியனின் நிறை அதனிடமிருந்து நாம் இருக்கும் தொலைவு போன்ற அதிர்ஷ்ட மயமான தற்செயல் விஷயங்கள் சூழலியம் சார்ந்தவை என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவை தற்செயலான நம் சுற்றுபுர நிகழ்வு சார்ந்தவையே தவிர இயற்கையின் அடிப்படை விதிகளால் உருவானவை அல்ல. பிரபஞ்சத்திடன் வயதும் சூழலிய தற்செயல் அளவீடே பிரபஞ்சதிதிற்கு முந்தைய மற்றும் நமக்கு பிந்தைய வரலாறும் இருக்கக் கூடும். ஆனால் நாம் அதில் உயிரிகள் வாழத் தகுதிவாய்ந்த காலகட்டத்தை சேர்ந்தவர்கள். சுற்றுபுர தற்செயல் அமைப்புகள் புரிந்துகொள்ள மிகவும் எளியவை ஏனெனில் நாம் அறிந்துள்ள வானின் ஒரே உயிரி வாழிடம் இது மட்டுமே. பல்வேறு உயிரி வாழிடம் இருப்பினும் நாம் உயிர்த்து இருப்பது வாழ்க்கையை அனுமதிக்கும் சூழலாகவே இருக்கவேண்டும்.

பலவீன மனித இருப்பு கோட்பாடு அதிக சர்ச்சை இல்லாதது ஆனால் இதே கோட்பாட்டின் பலமான – ஆழமான வடிவம் ஒன்று உண்டு. நாம் அதனை இப்போது கையிலெடுப்போம். பலமான மனித இருப்புக்கோட்பாடு  நாம் உயிர்த்திருக்கிறோம் என்பதே, நமது சுற்றுபுரம் மற்றும் இயற்கை விதிகள் மீதும் அவற்றை புரிந்து கொள்வதன் மீதும் பலவகை தடைகளை கொண்டுவருகிறது என்று கருதுகிறது. இப்படி ஒரு கருதுகோள் உருவானது ஏன் என்றால், மனிதனின் உருவாக்கம் சார்ந்து நம் சூரியமண்டலத்தில் பிரத்யேக அமைப்பு இல்லாததும் பொதுவாக இந்த நாம் அறிந்தள்ள பிரபஞ்சத்திலும் அது குறித்து விவரிப்பது அதைவிட கடினமாகவும் இருப்பதே ஆகும்.

Image

ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் குறைவான அளவு லித்தியம் ஆகியவை கொண்ட ஆரம்ப பிரபஞ்சம் நம்மைப்போன்ற அறிவார்த்த உயிரிகள் கொண்ட ஒரு சூரியமண்டல அமைப்பாக  உருவெடுத்தது எப்படி என்கிற கதையே பலபல அத்தியாயங்கள் கொண்ட நீண்ட கதை நாம் ஏற்கனவே கண்டதுபோல இயற்கையின் விசைகள் மூலம் பிற்கால எடைமிகுந்த கார்பன் போன்ற தனிமங்கள் எடைமிக குறைவான லேசான  தனிமங்களில் இருந்து தோன்றி 10 பில்லியன் வருடம் மாறாத தன்மையோடு இருக்கும் வகையிலும் நிலைத்தன்மை பெற்றிருக்கவும் வேண்டும். இத்தகைய எடைமிகு தனிமங்கள் நட்சத்திரங்கள் எனும் கொதிகலன்களில் மட்டுமே தோன்றமுடியும்…. எனவே அந்த ஆரம்ப விசைகள் முதலில் நட்சத்திரங்கள் நட்த்திர கூட்டங்களாக உருவாக அனுமதித்திருக்கவேண்டும்.

இவை ஆரம்ப பிரபஞ்சத்தின் மிகசிறிய ஒரினவியலாக்கலாக ஒத்திசைவோடு பரவியது ஏறக்குறைய முழுமையான ஒரே தன்மை நிலவிய போதிலும் 100,000 ல் ஒரு பகுதி அடர்த்தி அளவிலான மாறுபாட்டுடன் பரவல் நடந்திருக்கவேண்டும். ஒரு நட்சத்திர உருவாக்கம் மற்றும் நம்மைமாதிரியானவர்களை உருவாக்கும் தனிமங்கள் கொண்ட நட்சத்திரத்தின் உட்பகுதிகளும் உருவாகிட அதுபோதாது. நட்சத்திரங்கள் குறித்த இயக்கவியல் என்பது அவற்றிலும் சில வெடித்துச் சிதறும், அதாவது எடைமிகு தனிமங்கள் வெளிமுழுதும் சிதறும்படியான துல்லியத்துடன் வெடித்து சிதறும் அமைப்போடு இருந்து  இருக்கவேண்டும் என கணித்துள்ளது.

இயற்கையின் இயங்குவிதிகள் அந்த புதிய அமைப்பும் நிலைத்தன்மை இன்றி மறு உருவாக்கம் பெற்ற புதியவகை நட்சத்திரங்களாக, புதிதாக தோன்றிய எடைமிகு தனிமங்களை தங்களது கோள்களில் நிரந்தரமாக தங்கும்படி செய்த வடிவமாய் உருவெடுக்க வைத்திருக்க வேண்டும். நாம் உட்பட உயிரிகள் தோன்றிட புவியின் ஆரம்ப காலத்தில் அதற்கேற்ற மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். அதுபோலவே நாம் அந்த மாறுதல் சங்கிலித்தொடரை நம் பிரபஞ்ச தோற்றத்திற்கும் நீட்டுகிறோம். நாம் இப்போது இங்கே உயிர்த்திருக்கிறோம். என்றால் அதற்காக பில்லியன் கணக்கான ஆண்டுகள் முன் இயற்கையின் அடிப்படை இயங்குவிதிகள் பிரபஞ்சத்தின் பரிணாமத்தில் சம தன்மையை பேணிட சரியான மாற்றங்களை படிப்படியாக ஏற்படுத்தி இருக்கவேண்டும் என்பதே பலமான மனித இன இருப்பு கோட்பாட்டின் முடிவு.

இப்படி தனிமங்களின் தோற்றம் வளர்ச்சி தற்செயலாக இயற்கை பிரபஞ்சம் வழியே ஏற்பட்ட ஒன்று என்பதை முதலில் அறிவித்தவர்களில் பிரட் ஹொயில் ஒருவர். எல்லா வேதித்தனிமங்களுமே ஹைட்ரஜன் எனும் ஆதியில் தோன்றிய தனிமத்திடமிருந்தே தோன்றி இருக்கவேண்டும் என்பது அவரது கோட்பாடு. ஹைட்ரஜன் தான் மிகமிக எளிமையான அணுக்கருவை கொண்டுள்ளது. ஒரே ஒரு புரோட்டான் தனியே அல்லது ஒன்றிரண்டு நியூட்ரான்கள் (ஹைட்ரஜனின் பலவடிவங்கள் அதாவது ஒரே புரோட்டான், ஒரு அணுக்கரு விதவிதமான எண்ணிக்கையில் நியூட்ரான்கள் இருந்தால் அவை ஐசோடோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.) இன்று இரண்டு மற்றும் மூன்று புரோட்டான்களை தங்களது அணுக்கருவில் வைத்திருக்கும்  ஹீலியமும், லித்தியமும் கூட ஆதியின் உருவெடுத்த அடிப்படை தனிமங்கள். ஆனால் இவை இரண்டும் ஹைட்ரஜனோடு ஒப்பிடும்போது மிகமிக சிறிதளவே தோன்றின. இது இப்பிரபஞ்சத்திற்கு 200வினாடி வயதில் நடந்திருக்கிறது. அதே சமயம் உயிர்- வாழ்வு எனப்படுவது இவற்றைவிட அதிக சிக்கலான மேன்மையான கார்பனில் இருந்தே தோன்றமுடியும்… இதுதான் உயிரி வேதியியலின் அடிப்படை.

Image
ஆயிஷா. இரா.நடராசன்

உயிரிகளின் தோற்றம் என்பதை அறிவார்த்த கணினிகள் சிலிக்கான் போன்ற வேதித் தனிமங்களின் கலவைகள் கொண்டு நாம் உருவாக்குவதுபோல தானாகவே  கார்பன் மூலம் உருவானதாக ஒருவர் கற்பனை செய்யமுடியும். ஆனால் காரணங்கள் தொழில்நுட்ப மயமானவையாக தோன்றலாம். எனினும் கார்பன்(கரிமம்) ஏனைய தனிமங்களோடு ஏற்படுத்திக்கொள்ளும் தனிச்சிறப்பான வேதி இணைப்புகள் பரிசீலிக்கப்படவேண்டும். கரியமிலவாயு  (கார்பன்டைஆக்ஸைடு) உதாரணமாக அறையின் வெப்பநிலையில் வாயுவாக இருக்கும் கார்பனின் வடிவம். அது உயிரியல் ரீதியில் மிகவும் பயன்தரும் ஒன்று. வேதி அட்டவணையில் கார்பனுக்கு நேர் கீழே உள்ள தனிமம் சிலிக்கான் ஏறக்குறைய ஒரே மாதிரியான வேதிப்பண்புகள் உள்ள தனிமங்கள் தான் இரண்டுமே. என்றாலும் சிலிக்கான் டை ஆக்ஸைடு எனும் குவார்ட்ஸ் பாறை வடிவமாக அதிக பலன் தருகிறது.

அதே வாயுவாகி அறை வெப்பநிலையில் உயிரிகளுக்கு மரணத்தையே தரும். ஆனாலும் நீர்ம அமோனியாவில் சிலிக்கான் டை ஆக்ஸைடு கலந்தால் நுண் உயிரிகள் தோன்றி அதிலுள்ள சிலிக்கானையே உணவாக்கி விருந்தாக உண்கின்றன. அப்படியான அயல் உயிரிகளைக் கூட அந்த ஆதி தனிமங்களால்  உருவான சேர்மம் ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஆதித்தனிமங்களால் இரண்டே இரண்டு நிலையான சேர்மங்களை மட்டுமே உருவாக்க முடிகிறது. ஒன்று லித்தியம் ஹைட்ரைடு நிறமற்ற கிரிஸ்டல் வடிவ வேதிப்பொருள் மற்றது ஹைட்ரஜன் வாயு இவை இரண்டாலுமே இனப்பெருக்க செய்கிற அல்லது குறைந்த பட்சம் காதலில் விழும் அளவு உயிரி எதையும் உருவாக்க முடியாது. கார்பன் உயிரிவகை. எனவே தன் அணுக்கருவில் ஆறு புரோட்டான்கள் கொண்ட அதுவும் நம் உடலில் உள் ஏனைய அதே போன்ற எடை மிகு வேதித் தனிமங்களும் எப்படி தோன்றி இருக்கும் என்பதே அடிப்படையான  விஷயம்.

முதல்படிநிலை கொஞ்சம் வயதான நட்சத்திரங்களில் ஹீலியம் கூடுதலாக குவியத்தொடங்கும்போது நடக்கிறது. அதாவது இரு ஹைட்ரஜன் அணுக்கருக்கள் ஒன்றை ஒன்று அணுச்சேர்வு முறையில்  இணைகின்றன. இந்த அணுவினை நட்சத்திரங்களில் ஆற்றலை உருவாக்கி  நம்மை சூடேற வைக்கிறது. இப்படி சேர்ந்திடும் இரு ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியமாகின்றன. இந்த ஹீலியம் அணுக்கள் மேலும் கூட்டிணையும் போது பெரிலியம் கிடைக்கிறது. பெரிலியம் அணுக்கருவில் நான்கு புரோட்டான்கள் உண்டு. பெரிலியம் உருவாகிவிட்டால் கோட்பாட்டு முறைப்படி மூன்றாம் ஹீலியத்தோடு இணைந்தாலே கார்பன் அணுக்கரு கிடைத்துவிடும். ஆனால் அப்படி நடப்பது இல்லை. அப்படி உருவாகும் பெரிலியத்தின் ஜசோடோப்பு நொடிகளில் அழிவுற்று மீண்டும் ஹீலியம் அணுக்கவருவாக மாறிப்போகிறது.

ஆனால் ஒரு நட்சத்திரம் தன் ஹைட்ரஜன்  முழுதையும் எரித்துமுடிக்கபோகும் தருணத்தில் நிலமை மாறுகிறது. அப்போது அந்த நட்சத்திரத்தின் உட்கரு முற்றிலும் சிதைந்து அதன் மைய வெப்பநிலை 100 மில்லியன் டிகிரி கெல்வினாக உச்சத்தை அடைகிறது. அப்படிப்பட்ட உச்ச வெப்பநிலையில் அணுக்கருக்கள் மிகவும் அடிக்கடி ஒன்றிணைந்துவிடுகின்றன. பெரிலியம் அணுக்கருக்கள் சில தங்களுக்கு அழிவு ஏற்படும் முன் சில ஹைட்ரஜன்  அணுக்கருக்களுடன் இணைந்துவிடும். பெரிலியம் ஹீலியத்தோடு சேர்ந்து நிலைத்தன்மைமிக்க ஒருவகை கார்பன் ஐசோடோப்பாக உருவாகிறது.

ஆனால் இவ்வகை கார்பன், பந்து விளையாடும் கோப்பை தேனீர் அருந்தும் அல்லது பிரபஞ்சம் பற்றி கேள்விகேட்கும் உயிரிகளாக வடிவெடுக்க வெகுதூரம் பயணிக்க வேண்டி உள்ளது.மனிதர்களை போன்ற உயர்வகை உயிரிகள் இருப்பிற்கு நட்சத்திரங்களுக்குள்ளிருந்து கார்பன் வெளியேறி மேலும் தனக்கு ‘வசதியான‘ அக்கம்பக்க பகுதிகளுக்கு தாவவேண்டி இருந்திருக்கும். அது நாம் ஏற்கனவே சொன்னதைப்போல ஒரு நட்சத்திரம் சூப்பர் நோவா அந்தஸ்திற்கு சுருங்கி தன் வாழ்நாளின் இறுதியை அடைந்து வெடித்து சிதறி கார்பன் போன்ற எடைமிகு நிலைத்தன்மை தனிமங்களை கோள்களாக ஒடுக்கம் பெறவைக்கும்போது சாத்தியமாகிறது.

இப்படி கார்பன் உருவாகும் முறையை மூன்று ஆல்ஃபா செயல்முறை என்று அழைக்கிறார்கள். ஏனெனில் ஹீலியம் ஐசோடோப்பின் அணுக்கரு ஆல்ஃபா துகள் எனப்படுகிறது. மேலும் இவ்வகை மூன்று ஆல்ஃபா துகள்கள் இணைந்தால் மட்டுமே இந்த வேதிவினை சாத்தியம் பொதுவாக இயற்பியல் இந்த மூன்று ஆல்ஃபா செயல்முறைப்படி உருவாகும் கார்பனின் அளவு மிகக்குறைவானதே என்றே கணிக்கிறது. இதை கணக்கில் எடுத்துக்கொண்ட ஹெயில் 1952ல் ஒரு புதிய கணிப்பை வெளியிட்டார். அதன்படி ஒரு பெரிலியம் அணுக்கருவின் ஒட்டுமொத்த ஆற்றலும் ஒரு ஹீலியம் அணுக்கருவின் ஒட்டுமொத்த ஆற்றலும் இணைந்து கிடைப்பது மிகத்துல்லியமான ஒரு கார்பன் ஐசோடோப்பின் குவாண்ட நிலையிலான ஆற்றலுக்கு சமமானதாக இருக்கிறது.

இந்த நிலைக்கு வேதி அதிர்வு நிலை என்று பெயர். இந்த நிலை நியூக்ளியர் வேதிவினையின் வேகத்தை பலமடங்கு அதிகரிக்கிறது. அவரது காலத்தில் அப்படியான உயர்ஆற்றல் நிலைஎதுவும் அறியப்படவில்லை என்றாலும் கால்டக்கின் வேதி அறிஞர் வில்லியம் பவுளர் பிற்காலத்தில் முற்றிலும் ஆய்வுக்கு உட்படுத்தி ஹோயிலின் பார்வையும் கணிப்பும் சரியே என்று நிருபிக்க முடிந்தது. இதன்மூலம் சிக்கலான அணுக்கருக்கள் பரிணாமம் அடைந்தது எப்படி என நிறுவிட முடிந்தது.

ஹோயில் எழுதினார். ‘ஒரு நட்சத்திற்குள் என்ன மாதிரி விளைவுகள் ஏற்படுகின்றன. என்பதை அணுவியல் கோட்பாடுகள் வழியே எளிதில் விவரிக்கமுடியும் என்பதை அறிந்த விஞ்ஞானிகளால் பிரபஞ்சத்தில் என்ன நடந்திருக்கும் என கண்டிப்பாக முன் அறிவிக்க முடியும். அவரது காலத்தில் ‘வானில் நடந்த தற்செயல் நிகழ்வுகளின் அளவு‘ எந்த அளவுக்கு இயற்கை விதிகளை  பாதித்தன என அறிவிக்கும் அளவிற்கு யாருக்கும் அணுவியல் இயற்பியல் தெரிந்திருக்கவில்லை. ஆனால் பலமான மனித இருப்பு கோட்பாட்டின் உண்மைத்தன்மையை மேலும் ஆழமாக ஆய்வுசெய்தபோது சமீபத்திய இயற்பியலாளர்கள் இயற்கை விதிகள் வேறுமாதிரியாக இருப்பின் பிரபஞ்சம் எப்படியாக இருந்திருக்கும் என கேட்டுக்கொள்ளத் தொடங்கினர்.

இன்று  நாம் மூன்று ஆல்ஃபா செயல்முறையை கணினிமயமான முப்பரிமாண மாதிரியாக்கி அடிப்படை விதிகளை அது எந்த அளவு சார்ந்தது என ஆராயமுடியும். அத்தகைய துல்லிய புள்ளி விபரங்களை ஆய்வுக்கு உட்படுத்தும்போது மிகமிககுறைவான அளவுக்கு அதாவது 0.5 சதவிகிதம்  பலமான நியூக்ளியர் விசை அல்லது 4 சதவிகிதம் மின்காந்த விசையில் மாறுதல் ஏற்பட்டாலும் கார்பன் முழுமையாக அல்லது ஆக்ஸிஜன் முற்றிலுமாக ஒவ்வொரு நட்சத்திரலுமிருந்து அழிந்து உயிர்வாழ்க்கை குறித்த சுவடுகளை அழிக்கிறது. பிரபஞ்ச  விதிமுறைகளை மிகமிக லேசாக மாற்றி பாருங்கள் நம் உயிர்வாழ்க்கை மறைந்துவிடும்.

பிரபஞ்சம் | . . . . . நெஞ்சின் அலைகள் ...

மாதிரி பிரபஞ்சங்களை உற்பத்தி செய்து ஆராயும்போது இயற்பியல் கோட்பாடுகளில் குறிப்பிட்ட வகையில் சில மாற்றங்களை நாம் செய்து கொள்கிறோம். ஆனால் அதற்கு வழிமுறைகள் மிக சிக்கலானவை. பலமான நியுக்ளியர் விசை, மின்காந்த விசை போன்றவை மட்டுமே நாம் உயிரோடு வாழும் வகையில் ஒத்திசைவோடு இருப்பதாக கொள்ள முடியாது. நமது அறிவியல் கோட்பாடுகள் சமன்பாடுகளில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான அடிப்படை மாறிலிகள் லேசாக  மாற்றப்பட்டாலும் இப்பிரபஞ்சம் பெரிய அளவில் வேறாகி விடுவதோடு உயிரிகளின் தோற்றம் மனிதர்களின் இருப்பு இவை கேள்விக்குறி ஆகி விடுகின்றன. உதாரணமாக பலவீன நியூக்ளியர் விசை தற்போது பொதுவாக உள்ளதைவிட (மாறிலி) குறைவாக இருக்குமேயானால் ஆரம்பகால பிரபஞ்சத்தில் எல்லா ஹைட்ரஜனுமே ஹீலியமாக மாறிஇருக்கும்.. அப்போது சராசரி நட்சத்திரம் என எதுவுமே இருந்திருக்காது.

அதே சமயம் இந்த பலவீன நியூக்ளியர் விசை சற்றே பலம் வாய்ந்ததாக இருப்பினும், சூப்பர் நோவா வெடிக்கும்போது தனது வெளிப்பு, வேதித்தனிமங்களை சிதறடிக்காமல் வெளி முழுதும் கடந்துபின் மீண்டும் கோள்களாக குளிர்விக்கப்பட்டு கார்பன் போன்ற தனிமங்கள்  படியாமல் உயிர்வாழ்க்கை சாத்தியமற்றே போயிருக்கும். புரோட்டான்கள் 0.2 சதவிகிதம் எடை கூடுதலாகி இருந்தால் அவை நியூட்ரான்களில் அழிந்துபோய் ஹைட்ரஜன் ஹீலியம் போன்றவையே இருந்திருக்காது. புரோட்டான்களுக்கு உள்ளே இருக்கும் சிலவகையான குவார்க்குகளின் எடைகளை 10 சதவிகிதம் மாற்றி அமைத்தால் கூட நம் உடலை உருவாக்கும் நிலையான வேதி அணுக்கருக்களுக்கு  சாத்தியமே இல்லை. உண்மையில் குவார்க்குகளின் நிறைகளது கூட்டுத்தொகைக்கும் நிலை- கருக்களின் அமைப்பிற்கும்கூட தொடர்பு உள்ளது. அவை எந்த மாற்றத்திற்கும் உட்படுத்தமுடியாது.

சூரியனை கோள்கள் சுற்றிவரும் நிலையான பாதையே ஒரு இடத்தில் உயிரிகளின் தோற்றத்திற்கு இன்றியமையாதது என்ற கோணத்திலும் ஆராயலாம். அதிலும் கூட வெளி – பரிமாணங்கள்  கூட கச்சிதமாக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதாக உள்ளது. அதாவது ஈர்ப்புவிசை விதகளின்படி நீள்வட்டப்பாதை நிலையாக இருக்க மூன்று பரிமாணங்களில் மட்டுமே சாத்தியமாகிறது. வட்ட சுற்றுப்பாதைகள் பல பரிமாணங்களில் சாத்தியம் என்றாலும் அவை முற்றிலும் நிலைத்தன்மை அற்றவை இத்தகைய முப்பரிமான பாதைகளிலும் லேசாக  ஈர்ப்பு அதிகரித்து ஒரு கோள் மற்றதை லேசாக அதிக வேகத்தோடு இழுத்தாலும் சுற்றுப்பாதையிலிருந்து விலகி சூரியனுக்கு வெகு அருகாமையிலோ அல்லது வெகுதொலைவுக்கோ புவி வீசப்பட்டு நாம் சாம்பலாகவே பனிக்கட்டியாகவோ ஆகிவிடுவோம்.

முப்பரிமாண வெளியில் ஒரு பொருளை  மற்றொன்று ஈர்க்கும் ஈர்ப்புவிசை அவற்றிற்கு இடையிலான தொலைவை இரட்டிப்பாக்கினால் தன் அளவீட்டில் ¼ ஆக குறையும். இதே நான்கு பரிமாணமாக இருந்தால்  அது 1/8 ஆகவும் ஐந்து பரிமாணமாக இருப்பின் 1/16 ஆகவும் குறைந்து விடும். எனவே முப்பரிமாணத்திற்கு மேல் வெளி இருப்பின் நம் சூரியன் நிலைத்தன்மையை இழந்துவிடும். உடனடியாக அது வெடித்து சிதறும் அல்லது கருங்குழியாக மாறி நமது இருப்பை முற்றிலும் சிதைக்கும். முப்பரிமாணத்திற்கும் அதிகமான பரிமாண சூழலில் ஒரு அணுவுக்குள், எலெக்ட்ரான்கள் ஒன்று அணுக்களைவிட்டு வீசி எரியப்படும் அல்லது அணுக்கருவிற்கு உள்ளேயே விழுந்துவிடும்…. எனவே நாம் அறிந்து ஆராயும் அணுக்கள்  நிலைத்திருக்கவும் வாய்ப்பில்லை.

எனவே அறிவார்த்தமான மனித உயிர்களாகி  நாம் தீவிரமாக உற்று நோக்கும் இப்பிரபஞ்சத்தில் அதி சிக்கலான அமைப்புகள் மிகுந்த இளகல் மிக்க எளிதில் முறியும் விஷயங்களாக உள்ளன. இயற்கையின் விதிகள்  மிக துல்லியமாக  கட்டமைக்கப்பட்டு மிகசிறு  மாற்றத்தை நாம் ஏற்படுத்தினாலும் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் உயிர்வாழ்க்கை உட்பட அழிந்துவிடும் படி உள்ளதை அறிவியல் கண்டுபிடித்துள்ளது.  நாம் குறிப்பிட்டுள்ள ஆச்சரியமூட்டும் தற்செயல் விஷயங்கள்  இயற்பியல் விதிகளில் நடந்துள்ளதாலேயே மனிதர்கள் மற்றும் ஏனைய உயிர்வடிவங்கள் சாத்தியமாகி உள்ளன. வேறு எப்படியும் அது நடந்திருக்க வாய்ப்புகள் இல்லை…

Albert Einstein’s Controversial ‘God Letter’ Fetches $2.89 Million …

ஆகவே நியூட்டன் விட்டுச்சென்ற இடத்திலிருந்து குறிப்பாக ஐன்ஸ்டீனுக்குப்பிறகு இயற்பியலின் நோக்கமே இயற்கையில் நாம் காணும் விசைகள் அனைத்தையும் சேர்த்து கெப்ளர் கனவுகண்ட கணித முறையில் விவரிக்கமுடிந்த  துல்லியமான ஒற்றை கோட்பாட்டை அடைவது நோக்கிய பயணமாகவே உள்ளது. இப்பிரபஞ்சம் குறித்த அறிவியலின் பதில் கடவுள் சார்ந்த ஒன்றாக எப்போதுமே இருந்தது கிடையாது. மாக்ஸ்வெல் மற்று ஐன்ஸ்டீன் போன்றவர்கள் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்  மின்விசை, காந்தவிசை மற்றும் ஒளி ஆகியவற்றை ஒன்றிணைத்தார்கள். 1970களில் அணு-மாதிரி(Standard Model) பலவீன மற்றும் பலமான நியூக்ளியர் விசைகளை ஒன்றிணைத்தது. மீதமுள்ள ஈர்ப்புவிசையை இவற்றுடன் இணைக்க இழைகோட்பாடும் தற்போது எம்- கோட்பாடும் வந்துள்ளன. ஐன்ஸ்டீன் சொன்னதுபோல தாயத்தை சுழற்றுவது கடவுளா மனிதனா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

(இக்கட்டுரையை ஸ்டீபான் ஹாக்கிங்ஸ் 2010ல் லியோனார்டு முலோடினோவுடன் இணைந்து எழுதினார்.)

  • •••••••••••
Show 2 Comments

2 Comments

  1. நா.வே.அருள்

    எவ்வளவு ஆழமான கட்டுரை. அதீதமான உழைப்பு. அற்புதம். எத்துணைத் துல்லியமான இயற்கை விதிகளில் உயிரிகளின் இருப்பு சாத்தியமாகி இருக்கிறது. ஆச்சரியம். ஆயிஷா நடராசனுக்குப் பாராட்டுகள்.

  2. Joe Gowthaman

    There is always a knowledge gap. Both were geniueses, but belonging to different times. It has been wonderfully explained in this article. Beautiful translation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *