Why didn't Dada saheb award give to Sowcar Article by Subhashini Sowmithri சௌகாருக்கு ஏன் தாதா சாஹேப் விருது வழங்கவில்லை? சுபாஷிணி சௌமித்ரிWhy didn't Dada saheb award give to Sowcar Article by Subhashini Sowmithri சௌகாருக்கு ஏன் தாதா சாஹேப் விருது வழங்கவில்லை? சுபாஷிணி சௌமித்ரி

சென்ற வாரம் தமிழ்த் திரையுலகின் மிகப் பெரும் ஆளுமையாகத் திகழக்கூடிய ரஜனிகாந்த் அவர்களுக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது குறித்து அனைத்து ஊடகங்களிலும் விரிவான அளவில் செய்தி வெளியாகியுள்ளதை நாம் கண்டிருப்போம்.

Why didn't Dada saheb award give to Sowcar Article by Subhashini Sowmithri சௌகாருக்கு ஏன் தாதா சாஹேப் விருது வழங்கவில்லை? சுபாஷிணி சௌமித்ரி

1913ல் ராஜா ஹரிச்சந்திரா எனும் முழு நீளத் திரைப்படமொன்றை தயாரித்த பால்கே அவர்கள் இந்தியத் திரையுலகின் முன்னோடியாவார். அவரது நினைவைப் போற்றும் வண்ணம் ஆண்டுதோறும் இந்தியத் திரையுலகில் சாதனைபுரிந்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும் இது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் கீழ் செயல்படும் அமைப்பின் மூலம் தேர்வு செய்யப்படும் ஆளுமைக்கு தேசிய அளவில் நடைபெறும் திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் இது வழங்கப்படுவது 1969ல் துவங்கியது.

2019 வரை தாதா சாஹேப் பால்கே விருதின் மூலம் 51 இந்திய திரைக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இதில் தேவிகா ராணி (1969), ரூபி மேயர்ஸ் எனும் சுலோச்சனா (1973), கண்ணன் தேவி (1976), துர்கா கோட்டே (1983), லதா மங்கேஷ்கர் (1989), ஆஷா போன்ஸ்லே (2000) ஆகிய ஆறு பெண் கலைஞர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்தியத் திரையில் பெண் கலைஞர்கள் மகத்தான பங்களிப்பையும், தொழில் நுட்பத் துறை தவிர திரைத் துறையின் இதர பகுதிகளில் ஆண்களுக்கு நிகரான பங்கெடுப்பையும் அவர்கள் கொண்டிருக்கையில், விருது வழங்கப்படுகையில் மட்டும் அவர்களுக்கான அங்கீகரிப்பு என்பது உரிய முறையை கொண்டிருக்கவில்லை. இது காலங்காலமாக இச்சமூகத்தில் நிலவி வரக்கூடிய ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகவே உள்ளது.

இந்தி, வங்காளி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் ஒப்பற்ற பெண் கலைஞர்கள் ஆண்களுக்கு நிகரான பங்களிப்பினை கொண்டிருப்பதோடன்றி திரைப்படத்தின் வெற்றி தோல்வியையும் தீர்மானிப்பவர்களாகவும் வெகுஜன சமூகத்தில் விரும்பப்படுபவர்களாகவும் இருந்து வருகின்றனர் என்பதைத்தான் பெண் திரைப்படக் கலைஞர்களுக்கு கோயில் கட்டுவதாக அவ்வப்போது பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் உணர்த்துகிறது. இன்னும் சொல்லப் போனால் சின்னத் திரை வருகைக்குப் பின்னர் பெண் கலைஞர்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினராலும் கவனிப்புக்கு உரியவர்களாக இருந்து வருகின்றனர்.

நடிகர் பால்ராஜ் சஹானி, இசையமைப்பாளர் எம்பி சீனிவாசன், இயக்குநர்கள் கமால் அம்ரோஹி, ரிக்விக் கடாக் போன்ற இந்தியத் திரையுலகில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படாத நிலையில், ராமா நாயுடு, வினோத் கண்ணா, பிரான், மனோஜ் குமார் போன்ற கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட அளவுகோலின் அடிப்படையில் பார்த்தால் கூட இவ்விருதினைப் பெற்றிட தகுதியுடைய பெண்களை குறைந்தது பத்துப் பக்கங்களிலாவது பட்டியலிட முடியும்.

அறுபதுகளிலோ அல்லது அதற்கு முன்னரோ திரையுலகில் நுழைந்தவர்கள் என்ற அடிப்படையில் பலமுறை சிறந்த நடிகைக்கான ஊர்வசி விருதினைப் பெற்ற சாரதா, மலையாளத் திரைப்பட ஆளுமைகளில் ஒருவராக விளங்கிய செம்மீன் ஷீலா, தென்னிந்திய மொழிப்படங்களில் தனித்துவமிக்க கலைஞராக திகழ்ந்த சரோஜா தேவி, பன்முகக் கலைஞர் சௌகார் ஜானகி, ரேயின் தேவி மூலம் வெளிப்பட்ட ஷர்மிளா தாகூர், வஹிதா ரெஹ்மான், வங்கத்து அபர்ணா சென், ரே மற்றும் மிருணாள் சென் திரைப்படங்களின் நாயகி மம்தா சங்கர் போன்றோர் இப்பட்டியலில் முதல் பத்தியில் இடம் பெறவேண்டியவர்கள்தான்.

Why didn't Dada saheb award give to Sowcar Article by Subhashini Sowmithri சௌகாருக்கு ஏன் தாதா சாஹேப் விருது வழங்கவில்லை? சுபாஷிணி சௌமித்ரி

இவ்வரிசையில் உள்ள சௌகார் ஜானகி திறமையும் தகுதியும் கொண்டவராக விளங்கிய போதிலும் போதுமான அங்கீகாரம் பெற்றிடாதவராகவே இருந்திருக்கிறார். 1950ல் வெளியான சௌகார் தெலுங்குப் பட அறிமுகத்தில் அவரது திரையுலகப் பயணம் தொடங்கியிருக்கிறது. அவரது தனிப்பட்ட வாழ்க்கை என்பது திரைப்படத்தைக் காட்டிலும் அதீத திருப்பங்களை கொண்டதாகவே இருந்து வந்திருக்கிறது. திருமணமாகி கைக்குழந்தையுடன் நடிக்க வந்தவர் என்பது ஆச்சரியத்தை அளிப்பதோடு அவரது மன உறுதியையும் வெளிப்படுத்துகிறது.

சௌகார் ஜானகி என்று உச்சரிக்கும் போதே திரையுலகின் பளபளப்பு, வண்ணமிகு உடைகள், மினுமினுப்பு, கனவுப் பாடல் என்பதையெல்லாம் கடந்து ஒரு சாதாரண அண்டை அயலில் உள்ள அபலைப் பெண்ணின் தோற்றம் நினைவுக்கு வருவது என்பது அவரது எழுபதாண்டு திரைச் சாதனையாகும்,

பாவை விளக்கு, பார் மகளே பார், புதிய பறவை, படிக்காத மேதை, உயர்ந்த மனிதன், மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற படங்களில் சிவாஜி கணேசனுக்கு நிகராக தன் திறமையை வெளிப்படுத்தியவர். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் உருவான அன்னை எனும் திரைப்படத்தில் அவரும் காலஞ்சென்ற பானுமதியும் குழந்தைக்கான பாசப் போராட்டத்தை அதீதம் ஏதுமின்றி இயல்பாகவே வெளிப்படுத்தியுள்ளதை மறக்கவியலாது. புகழ்பெற்ற நாராயணன் கம்பெனியின் பாக்யலக்ஷ்மி எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற மாலைப் பொழுதின் மயக்கத்திலே பாடல் காட்சி அவரது துன்ப வெளிப்பாட்டிற்காக இன்றும் தலைமுறை தாண்டியயவர்களாலும் பார்க்கப்படுகிறது.

பின்னாளில் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான நாடக பாணியிலான திரைப்படங்களிலும் குறிப்பாக நாணல், இருகோடுகள், போன்ற படங்களில் மட்டுமின்றி பாமா விஜயம், எதிர் நீச்சல், தில்லு முல்லு போன்ற நகையுணர்வு வாய்ந்தவற்றிலும் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கிட்டத்தட்ட எழுபது ஆண்டுக்காலமாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் நிச்சயம் தாதா சாஹேப் விருதுக்கு பொருத்தமானவர்தான். இது ஒரு மகத்தான கலைஞனுக்கு அவரது வாழ்நாளிலேயே அளிக்கக்கூடிய அங்கீகாரமாக இருக்க முடியும்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *