ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி சில சமத்துவ வழி கல்வியாளர்களால், இந்திய ஆங்கில தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆங்கில வழி கல்வி போதனை தொடங்கப்பட்டு 203 ஆண்டுகள் இந்த ஆண்டுடன் நிறைவடைந்துள்ளது.
முதல் ஆங்கில வழி பள்ளி வில்லியம் கேரி என்பவரால் கல்கத்தாவில் தொடங்கப்பட்டது. அவர் ஒரு கிருத்துவ மத போதகர், அவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் குடும்பத்திலிருந்து வந்தவர். கேரி 1793ஆம் ஆண்டு இந்தியா வந்தார், அவர் புகழ் பெற்ற செராம்பூர் பகுதியில் குடியேறி தன்னுடைய கல்விப் பணிகளை தொடங்கினார். அவர் 1817ஆம் ஆண்டு ராஜா ராம் மோகன்ராயுடன் இணைந்து முதல் ஆங்கில வழி கல்விச்சாலையை அக்டோபர் 5 தேதியன்று தொங்கினார், அன்றைய தினம் சர்வதேச ஆசிரியர் தினமாகும்.
ஆங்கில போதனா பள்ளிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த 203 ஆண்டுகளில், ஆங்கிலம் கற்றது யார்? அதற்கு அப்பால் இருந்ததனால் அதன் பலனை யாரால் பெற முடியவில்லை? பள்ளிக் கல்வியின் இந்த வரலாறு கட்டாயம் பரிசீலனைக்குட்படுத்தப்பட வேண்டும், குறிப்பாக புதிய கல்விக் கொள்கையில், நரேந்திர மோதியின் மத்திய அரசு பிரந்திய மொழியில் பாடம் கற்பிப்பது குறித்து பேசும் போது-தாய்மொழிக் கல்வி என்ற போர்வையில்-ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாநில அரசு பள்ளிகளில் மட்டும் அமல்படுத்தப்படுமாம், ஆனால் இதர பள்ளிகளில் கிடையாதாம்.
அனைத்து மத்திய அரசு பள்ளிகளிலும், ஆங்கில வழிக் கல்வி போதனா முறையே தொடர்ந்து அமலில் இருக்கும். தனியார்களால நடத்தப்படும் சிறு, நடுத்தர, மற்றும் பெரிய கல்வி வணிக நிலையங்கள் தங்கள் பள்ளிகளை ஆங்கில வழி போதனா முறையில் தொடர்ந்து நடத்தும். ஏகபோக தொழில் நிறுவனங்களால் நடத்தப்படும் சில கல்வி நிலையங்கள் தங்கள் பள்ளிகளை பிரித்தானிய அல்லது அமெரிக்க பள்ளி மாதரிகளின் அடிப்படையில் நடத்துகின்றன. அவர்கள் தங்கள் பாடத்திட்டத்தில், பாலர் வகுப்பு முதல் 12 ஆவது வரையில் ஒரே ஒரு பிராந்திய மொழிப் பாடத்தைக் கூட படிக்கவோ படிப்பிப்பதோ இல்லை.
வரலாற்று ரீதியில் இந்தியாவின் மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினர் சூத்திரர்கள், இந்திய மக்கள் தொகையில் 56 விழுக்காடு சூத்திரர்கள்தான். ஜாட், குஜ்ஜார், படேல், யாதவ், ரெட்டி, கம்மவர், காப்பு, வேலமாஸ், நாயக்கர், நாயர், மராத்தியர்கள், லிங்காயத், வோகலிக்கர் மற்றும் இவர்களைப் போல் பலர் பொதுப்பட்டியலில் போட்டியிடுகின்றனர். இந்த சாதிகளைத் தவிர, இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களில் ஒரு பிரிவினரும் சூத்திரர் பிரிவில் அடங்குவர் . இந்த சமூகங்களைத் தொடர்வது 18 சதவீத பட்டியலின சாதிகளும், 7.5 சதவீத பழங்குடிகளும்.
எல்லா சமூகத்தினரையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், வாழ்க்கையின் எந்தத் துறை சார்ந்தும் ஆங்கிலத்தில் எழுதுவது என்று வரும் போது அதில் சூத்திரர்கள் யாருமே கிடையாது. அரசியல்-சமூகம்-ஆன்மீகம் ஆகியவற்றின் கோட்பாடுகள் குறித்தோ, கதை, கவிதை, பத்திரிக்கைத் துறை, மற்றும் கலை விமர்கர் என்பது குறித்து ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் துவிஜ(இரட்டை பிறப்பாளர்கள்) சமூகத்தை சார்ந்தவர்களாகவே உள்ளனர். அகில இந்திய அளவில் இந்த துவிஜ சாதிகள் என்பன, பிராமணர்கள், பனியாக்கள், ஷத்திரியர்கள் மற்றும் காத்ரிகள்.
அவர்கள் மட்டும் எப்படி ஆங்கில மொழியை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தனர், அதேசமயம் சமூகத்தின் பெரும்பான்மையாக உள்ள சூத்திரர்கள் ஏன் அவ்வாறு செய்ய இயலவில்லை? அவர்கள் அனைவரும் மிகவும் வறியவர்கள் இல்லை. அதன் காரணம் இந்தியாவின் மொழி மற்றும் கல்வியின் வரலாற்றில் உள்ளது.
கி.மு. 1500ல் சமஸ்கிருதம் இந்தியாவில் வருவதற்கு முன் இங்கிருந்த மக்கள் தங்கள் பிராந்திய மற்றும் பழங்குடி மொழிகளை பேசி வந்தனர். அந்த மொழிகளை பேசியவர்களாலாலேயே ஹரப்பா நாகரீகமும், ஹரப்பா, மொகன்ஜோதரா தோலவீரா ஆகிய நகரங்கள் அமைக்கப்பட்டன. மொழிகள் பேசப்படாமல் இத்தகைய நகர நாகரீகங்கள் சாத்தியமேயில்லை.
துணைக்கண்டத்தில் இயற்றப்பட்ட முதல் சமஸ்கிருத நூல் ரிக் வேதமாகும். வேத காலத்தில் சூத்திரர்கள் நான்கவது வர்ணமாக அறிவிக்கப்பட்டனர், அவர்கள் நிலை அடிமைகள் நிலைக்கு தாழ்த்தப்பட்டது. அவர்களுக்கு சமஸ்கிருதம் அறிந்து கொள்வது தடை செய்யப்பட்டது. அவர்கள் அந்த மொழியை படிக்கவோ அல்லது எழுதவோ கற்றுக் கொண்டால் அதற்கு பெரும் தண்டனைகள் வழங்கப்பட்டது.
13 நூற்றாண்டு முதல் துருக்கி மற்றும் ஆப்கானிய ஆட்சியாளர்கள் இந்தியா வரத் தொடங்கினர், அப்போது பாரசீக மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாவும், எழுத்து மொழியாகவும் மாறியது. பாராசீக மொழியை எதிர்ப்பதற்கு பதிலாக இந்த துவிஜ சாதியின், அந்த மொழியை கற்று நிர்வாகிகளாவும், பாராசீக ஆட்சியாளர்களின் துபாஷிகளாகவும் இருந்தனர். மொகலாயர் காலத்தில் இந்தியா முழுவதும் பாரசீக மொழி பரவியது. பெரும்பாலம் பிராமணர்களும் சத்திரியர்களும் இவர்களைத் தவிர முஸ்லீம்களும் இந்த மொழியை கற்று இந்தியா முழுவதும் அரசுப் பணிகளுக்காக புலம் பெயர்ந்தனர்.
பிராமணர்களும், கயாஸ்தாஸ் சாதியினரும் ஹைதராபாத் பிராந்தியத்திற்கும் பாம்பே பிரந்தியத்திற்கும் புலம் பெயர்ந்தது இதற்கு சிறந்த உதாரணம்( உதாரணமாக பால்தாக்கரே குடும்பம் கயாஸ்தாஸ் சாதியைச் சார்ந்தவர்கள்). முஸ்லீம் ஆட்சியாளர்கள் நிலத்தை உழுபவர்களையோ, கருமான்களையோ, நிலத்தில் பாடுபடுபவர்களையோ பாரசீக மொழியில் தேர்ச்சி பெறுவது குறித்து சிந்தித்து பார்க்க வில்லை. அவர்களின் படிப்பறிவின்மையும் விவசாய உற்பத்தி திறன் மிகக் குறைவாக இருந்ததிற்கு ஒரு காரணம்.
பாராசீக மொழியிலிருந்து மெதுவாக இந்தியும் உருதும் தோன்றின. இவைகள் இந்துஸ்தானி மொழி என்றறியப்பட்டன. இந்தி நகரி சமஸ்கிருத வடிவத்தையும், உருது அராபிக்-பாரசீக எழுத்து வடிவங்களையம் பெற்றன.
ஆனால் அந்த இரண்டு மொழிகளுக்கு இடையே தொடர்பு இன்றும் கூட வடிவங்களில்தான். இந்தி உருது இரண்டு மொழிகளுமே, நகரி வரி வடிவங்களை பயன்படுத்தும் வங்காளம், மராத்தி, குஜராத்தி என அனைத்து வட இந்திய மொழிகளுடனும் பரஸ்பரம் புரிதலும், பரிமாற்றமும் உண்டு. ஆகவேதான் இந்த மாநிலங்களில் உள்ள மக்கள் இந்தி மொழியை எளிதில் புரிந்து கொள்கின்றனர், பேசுகின்றனர்.
சூத்திர ர்கள் கிராமப் புறங்களில் விவசாய பணிகளிலும், கருவிகள் செய்யும் கருமான் வேலைகளும் பார்த்து வந்ததால் அவர்களுக்கு எப்போதுமே பாராசீக மொழி கற்பிக்கப்படவில்லை, காரணம் ஆட்சி மாறினாலும், காலச்சாரம் மாறவில்லை, முஸ்லீம்கள் நிர்வாகத்திலும் அவர்கள் உடலுழைப்பு பணிகளையே தொடர்ந்து பார்த்து வந்தனர், அவர்களுக்கு அறிவுப் பூர்வமான பணிகள் வழங்கப்படவில்லை.
1839ல் பாரசீகம் கிழக்கிந்திய கம்பெனியால் பிடிக்கப்பட்டது, பாரசீக மொழியின் இடத்தை ஆங்கிலம் பிடித்த து. துவிஜர்கள் முக்கியமாக பிராமணர்களும் இதர துவிஜ இளைஞர்களும் 1817 முதல் ஆங்கிலத்தை படிக்கத் தொடங்கினர். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் ஆங்கிலம் பாட மொழியாகவும் அலுவல் மொழியாகவும் மாறிய பின்பும்கூட ஒரு சூத்திரருக்கு கூட அரசு வேலை கிடைக்கவில்லை
முதன் முதலில் ஆங்கிலம் அறிந்த நபராக அறியப்படுவது, ஆங்கிலேய அதிகாரிகளுடன் தனக்கு இருந்த பழக்கத்தின் வாயிலாக ஆங்கிலம் கற்றுக் கொண்ட ராஜா ராம் மோகன்ராய் என்ற பிராமண ஜாகிர்தார். 1841ல் ஆங்கில வழிக் கல்வியில் முதன் முதலாக படித்த சூத்திரர் மகாத்மா பூலே.
தாதாபாய் நௌரோஜி ஒரு பார்சி இனத்தை சேர்ந்தவர் ஆங்கிலம் படித்து, இங்கிலாந்து சென்று தொழில் நடத்திய வர்த்தகர், பின்னாளில் அரசியல்வாதியானார். மகாத்மா காந்தியே இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஆங்கிலம் வழிக் கல்வி பயின்ற முதல் பனியா ஆவார். பின்னாளில், ஆங்கிலம் பயின்ற நிலவுடமை கொண்ட குடும்பதிலிருந்து ஆங்கிலம் வழி பயின்ற சூத்திரர் சர்தார் வல்லபாய் பட்டேல். ஆனால் அவர் கூட ஆங்கிலத்தில் அதிகம் எழுதவில்லை.
இருப்பினும் ஆச்சர்யப்படத்தக்க விதத்தில், எந்தவொரு சூத்திர நிலக்கிழாரும் தன்னுடைய பிள்ளைகளை இங்கிலாந்திற்கு அனுப்பி ஆங்கிலம் படிக்க வைக்கவில்லை. தெலுங்கு பேசும் பிரதேசத்திலிருந்து கட்டமஞ்சு ராமலிங்க ரெட்டி அகில இந்திய அளவில் நன்கு ஆங்கிலம் பயின்ற சூத்திரராவார்.
ஆனால் சூத்திர நிலக்கிழார்கள் இந்த பாரம்பரியத்தை பின் தொடரவில்லை. அவர்கள் கிராமங்களில் தங்களின் செல்வாக்கு குறித்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்கு ஒரு தேசிய அந்தஸ்து வர ஒரு பொதுவான மொழியை கற்றுக் கொள்ள முன்வரவில்லை. தற்போது அவர்கள் ஆங்கில வழி கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்.
எல்லா சூத்திரர்கள், பட்டியலினத்தவர்கள், பழங்குடிகள் இவர்களின் வளர்ச்சியின்மைக்கு காரணம் என்னவெனில், அவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களோடு இணைய ஒரு பொதுவான இணைப்பு மொழியை கற்றுக் கொள்ள முன்வரவில்லை. அவர்கள் சமஸ்கிருதம், பாரசீகம், பின்னாளில் ஆங்கிலம் ஆகிய தேசிய மற்றும் பன்னாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவில்லை.
தற்போதுள்ள ஒரே வழி, சூத்திரர்கள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகியோர் தங்கள்செய்யும் தொழிலுக்கு ஏற்ற சொந்த பிராந்திய மொழியோடு ஒரு இணைப்பு மொழியாக ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளவேண்டும். ஆங்கிலம் அவர்களின் தேசீய மற்றும் சர்வதேச மொழியாகவும், அவர்களின் பிராந்திய மொழி, அவர்களின் அன்றாட உற்பத்திக்கும் செயல்பாட்டிற்கும் பயன்படும். ஆங்கிலம் தெரிந்தவர்கள் விவசாயத்தில் ஈடுபடும் போது, இந்திய விவசாயத்தின் தரம் பெரிய முறிவுகளுடன் மாற்றம் அடையும்.
இந்தியா ஒரு நாடாக ஆங்கிலத்தை ஒரு தேசீய மொழியாக அங்கீகரிப்பதும், அக்டோபர் 5 தேதியை இந்திய ஆங்கில நாளாக கொண்டாடுவதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஒரு மொழி புழக்கத்தில் இருந்தால் அந்த மொழி தேசீய மொழிதான். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழிக்கும் ஒரு மொழிதினம் இருக்கிறது. ஆங்கில மொழி ஒரு கற்றல் மொழியாக 1817ல் தொடங்கியது, ஒரு துவிஜ மொழியாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும்.
ஆங்கிலம் என்பது இப்போது நமது மொழியும். ஆகவே உற்பத்தியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் அதனை ஒரு அன்னிய மொழியாக நினையாமல் அதனை கற்றல் வேண்டும். உலகமயமாக்கப்பட்ட இந்த உலகில் உணவு உற்பத்தியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் உலக மொழியல் சரளமாக பேச வேண்டும், அது ஆங்கிலம் மட்டுமே!ஏழைக் குழந்தைகளும், கிராமத்து உணவு உற்பத்தியாளர்களும் ஆங்கிலம் வழிக் கல்வி கற்பதை தடுக்க உலகளாவிய சதி ஏதுமில்லாமல் இருக்கட்டும்!
நன்றி: தி சிட்டிசன் இணைய இதழ்