குழந்தைகள் ஏன் ஏமாற்றுகிறார்கள்? இது இயல்பானதா? அல்லது கவலைப்பட வேண்டியதா?
பென்னி வான் பெர்கன் | தமிழில் த. பெருமாள்ராஜ்
பகடை விளையாட்டிலோ, தெருவில் கிரிக்கெட் விளையாடும்போதோ ஏமாற்றும் குழந்தைகளைப் பார்த்திருப்போம். பள்ளித்தேர்வுகளில் கூட அவர்கள் ஏமாற்றியிருக்கலாம்.
உங்கள் சொந்தக் குழந்தை இதைச் செய்கிறதைக் கவனித்தால், அவர்கள் குற்றவாளிகளாக மாறிவிடுவார்களோ என்று நீங்கள் கவலைப்படலாம்.
ஆனால் வளர்ச்சி நிலைகளின் அடிப்படையில், குழந்தைகள் ஏமாற்றுவது பொதுவாக கவலைக்குரிய விஷயமல்ல.
ஏமாற்றுவது என்றால் என்ன?
நியாயமற்ற நன்மையைப் பெற ஒரு குழந்தை நேர்மையற்ற முறையில் நடந்து கொள்ளும்போது ஏமாற்றுதல் நடைபெறுகிறது. அவர்கள் பகடை உருட்டும் போது ஆறு விழுந்ததாக பொய் சொல்லலாம்; அட்டை விளையாட்டில் எதிராளியின் அட்டைகளைப் பார்க்கலாம்; ஒரு விளையாட்டில் தவறாக ஸ்கோர் போட்டுக்கொள்ளலாம் அல்லது வீடியோ கேம் விளையாட்டுகளில் செட்டிங்ஸில் மாற்றம் ஏற்படுத்தி நிலைகளைத் தாண்டலாம்.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் முயற்சிகள் சிறப்பாக இருந்தபோதிலும், ஏமாற்றுவது குறிப்பிடத்தக்க வகையில் பொதுவானதாக இருக்கிறது. ஒரு பரிசோதனையில், பங்கேற்ற ஐந்து வயது குழந்தைகளிடம் அறையை விட்டு வெளியேறும் போது ஒரு பெட்டியின் உள்ளே எட்டிப்பார்க்க வேண்டாம் என்று கோரப்பட்டது. கிட்டத்தட்ட அனைவரும் எட்டிப்பார்த்தார்கள், பின்னர் பெரும்பாலானோர் அவ்வாறு செய்ததை மறுத்தனர்.
வளர்ச்சியின் ஓர் அடையாளம்
ஏமாற்றும் திறனானது, மற்றவர்களின் மனதைப் புரிந்துகொள்வது உட்பட புதிய திறன்களின் தோற்றத்திற்கான ஓர் அடையாளமாக இருக்கிறது.
திறம்பட ஏமாற்ற, வேறொருவர் என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். பின்னர் நாம் அவர்களை ஒரு மாறுபட்ட யதார்த்தத்தை நம்ப வைக்க வேண்டும். இந்த அறிவாற்றல் திறன்கள் முன்பள்ளிப் பருவத்தில் (3 முதல் 5 வயது வரை) தோன்றத் தொடங்குகின்றன. மேலும் குழந்தைகளுக்கு ஒரு தவறான கதையை காலப்போக்கில் வெற்றிகரமாக பராமரிக்க தொடக்கப்பள்ளிப் பருவம் வரைக்கும் (10 வயது வரை) முடிவதில்லை.
பள்ளியில் ஏமாற்றுதல்
குழந்தைகள் வளர வளர, அவர்கள் வெளியில் பொதுவாக வெளிப்படையாக ஏமாற்றுவதைத் தவிர்ப்பார்கள். ஆனாலும், அதே நேரத்தில், அவர்கள் பள்ளியில் ஏமாற்ற ஆரம்பிக்கலாம்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கடந்த ஆண்டில் குறைந்தது ஒரு முறையாவது பள்ளியில் ஏமாற்றியதாக, நான்கில் மூன்றுக்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்றவர்களுடன் தங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வது, முன்கூட்டியே தேர்வுக்கான பதில்களைப் பெறுவது, இணையத்திலிருந்து பதில்களைப் பெறுவது மற்றும் செய்யக்கூடாதபோது மற்றவர்களுடன் ஒத்துழைப்பது ஆகியவை பொதுவான ஏமாற்று நுட்பங்களில் அடங்கும்.
ஒரு சக மாணவருக்கு உதவும் போது, அவர்கள் சமூக சார்பு வழியில் அந்த நடத்தையை நியாயப்படுத்த முடிந்தால், (உதாரணமாக, அவர்களுக்கு நேரம் இல்லை; ஒரு குடும்ப உறுப்பினரைப் பராமரிப்பதால் அவர்கள் ஏமாற்ற வேண்டியிருந்தது…) ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாணவர்கள் கருதுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆசை ஒரு முக்கிய காரணி
பெரியவர்களைப் போலவே, ஆசை அதிகமாக இருக்கும்போது குழந்தைகள் ஏமாற்ற அதிக வாய்ப்புள்ளது. ஓர் ஆய்வில், ஒரு பெரிய பரிசை வெல்ல முடியுமென்றால், ஏழு முதல் பத்து வயது வரையிலான குழந்தைகள், பகடை உருட்டும் விளையாட்டில் ஏமாற்ற அதிக வாய்ப்புள்ளது.
எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்க குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் ஏமாற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 1932 ஆம் ஆண்டிலேயே, அமெரிக்க பள்ளி முதல்வர் எம்.ஏ. ஸ்டெய்னர் அதிகப்படியான வேலைப்பளு மாணவர்களை ஏமாற்ற ஊக்குவிக்கிறது என்று எழுதினார்.
2008 ஆம் ஆண்டு ஆய்வில், மாணவர்கள் தங்களுக்குத் தரப்பட்ட பாடப்பகுதியில் ஆர்வம் இல்லை என்பதாலும், நன்றாக செயல்பட வேண்டும் என்ற அழுத்தத்தில் இருந்ததாலும், பள்ளியில் ஏமாற்றுவதாகத் தெரிவித்தனர்.
ஆசை ஏமாற்றுதலை ஊக்குவிக்கும் அதே வேளையில், பிடிபடும் அபாயம் நேர்மையை ஊக்குவிக்கும். ஏமாற்றுவதன் நன்மைகளைப் பிடிபடும் அபாயங்களுக்கு எதிராக குழந்தைகளை எடைபோட வைக்க வேண்டும்.
அவர்கள் வளரும்போது, ஏமாற்றுவது தங்களைப் பற்றிய அவர்களின் கருத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை குழந்தைகள் யோசிக்கத் தொடங்கலாம். உதாரணமாக, “நான் ஒரு நல்லவனாக இருக்க வேண்டும் – அதனால் நான் ஏமாற்ற மாட்டேன்” என்று அவர்கள் நினைக்கலாம்.
சிறுவர்கள் சிறுமிகளை விட அதிகமாக ஏமாற்றுகிறார்களா?
சில குழந்தைகள் மற்றவர்களை விட அதிகமாக ஏமாற்ற வாய்ப்புள்ளது. உதாரணமாக, 2019 ஆம் ஆண்டு ஆய்வில், பகடை விளையாட்டில் ஆறு விழுந்தால், குழந்தைகள் பரிசுகளை வெல்லக்கூடும் என்ற சூழலில், சிறுவர்கள் சிறுமிகளை விட அதிகமாக ஏமாற்றினர். சிறுவர்களும் சிறுமிகளும் ஏமாற்றுவதை வித்தியாசமாக அணுகினர்: சிறுமிகள் அதிகமாக இழப்புகளைத் தவிர்ப்பதற்காகவே ஏமாற்ற முயற்சித்தனர். அதே நேரத்தில் சிறுவர்களோ இழப்புகள் மற்றும் ஆதாயங்களாலும் சமமாகத் தூண்டப்பட்டனர்.
சமூக திறன்களும் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. 2003 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், இரண்டாம் வகுப்பு மாணவர்களில், தங்கள் சக மாணவர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பலகை விளையாட்டுகளில் ஏமாற்ற அதிக வாய்ப்பு காணப்பட்டது. அவர்கள் முன்பு சந்தித்திராத புதிய குழந்தைகளுடன் விளையாடும் போது கூட ஏமாற்றுவதற்கு முயற்சித்தனர். அத்தகைய குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகள் மற்றும் நடத்தைகளை ஒழுங்குபடுத்துவதில் திறமை குறைவானவர்களாக இருக்கும் வாய்ப்பும் அதிகம் காணப்படுகிறது.
குறைந்த சுய கட்டுப்பாடு மற்றும் விதிகளை மீறுவதில் அதிக சகிப்புத்தன்மை கொண்ட இளம் பருவத்தினர் கல்வியில் ஏமாற்றுதலைப் பின்பற்றவும், வகுப்பில் தவறாக நடந்து கொள்ளவும் வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.
குழந்தைகள் ஏமாற்றுவதைத் தடுக்க பெரியவர்கள் என்ன செய்யலாம்?
ஏமாற்றுவது சாதாரணமாகத் தோன்றினாலும், அவர்கள் வளரும்போது, ஏமாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் பெரிதாகும்போது, குழந்தைகள் மற்றும் டீனேஜர்களுக்கு பெரிய பிரச்சனைகளை உருவாக்கும். எட்டாம் வகுப்பு பயிலும் சீன மாணவர்களுடன் மேற்கொண்ட ஆராய்ச்சி, தங்கள் சொந்தத் தேர்வை மதிப்பிடும்போது ஏமாற்றியவர்கள், அதன் பின்னரும் சரியான பதிலைக் கற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்பதைக் காட்டுகிறது.
ஏமாற்றுவதைத் தடுக்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்யக்கூடிய நான்கு விஷயங்கள் இங்கே.
- வெளிப்படையாக உரையாடுங்கள்:
ஏமாற்றுவது ஏன் ஒரு நல்ல யோசனை அல்ல என்பது பற்றி வெளிப்படையாகவும் இரக்கத்துடனும் பேசுங்கள் (உதாரணமாக, “இது உங்கள் நண்பர்களின் மகிழ்ச்சியை அழிக்கிறது”). ஒரு விளையாட்டில் ஏமாற்ற மாட்டோம் என்று பரிசோதனையாளர்களுக்கு வாக்குறுதி அளித்த பின் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர், ஏமாற்றுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது. சிக்கலில் சிக்குவோமோ என்று பயப்படும் குழந்தைகள் உண்மையைச் சொல்ல வாய்ப்பில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். - முடிவுகளில் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம்:
பள்ளியைப் பற்றிப் பேசும்போது, அடைவுகளைப் பற்றி பேசுவதைக்காட்டிலும், கற்றல் திறனை மேம்படுத்துவதைப் பற்றி பேசுங்கள். (“உங்கள் சிறந்ததை முயற்சிக்கவும், நீங்கள் செய்யக்கூடியது அவ்வளவுதான்”). அதிக போட்டித்தன்மை வாய்ந்த கல்விச் சூழல்கள் ஏமாற்றுவதற்கான வாய்ப்புகளை அதிகமாக்குகின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் வெற்றியின் நன்மைகளும், தோல்வியின் அபாயங்களும் அதிகரிக்கின்றன. - உங்கள் குழந்தையின் குணத்தைப் பற்றி நேர்மறையாக இருங்கள்:
ஓர் ஆய்வில், பாலர் பள்ளி குழந்தைகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். “நற்பெயர்” குழு எனப்பட்ட முதல் குழுவில் உள்ள குழந்தைகளிடம் “உங்கள் வகுப்பில் உள்ள குழந்தைகளை எனக்கு நன்கு தெரியும். அவர்கள் என்னிடம் நீங்கள் நல்ல குழந்தைகள் என்று சொன்னார்கள்” என்று கூறப்பட்டது. மற்றொரு குழுவில் உள்ள குழந்தைகளுக்கு எதுவும் சொல்லப்படவில்லை. அறையை விட்டு வெளியேறும் போது அனைத்து குழந்தைகளிடமும், வசீகரமான ஒரு குறிப்பிட்ட பொம்மையைப் பார்க்க வேண்டாம் என்று கோரப்பட்டது. “நற்பெயர்” குழுவில் உள்ளவர்கள் ஏமாற்றும் வாய்ப்பு (60%) மற்ற குழுவை விட (90%) குறைவாக இருந்தது. - குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருங்கள்:
பெரியவர்கள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருந்தால், குழந்தைகளும் அவ்வாறே இருக்க வாய்ப்புள்ளது. ஓர் ஆய்வில், அடுத்த அறையில் ஒரு பெரிய கிண்ணத்தில் நிறைய மிட்டாய்கள் இருப்பதாக குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டது. ஆனால், இது ஒரு பொய்யாக மாறியபோது, குழந்தைகள் அந்த விளையாட்டில் ஏமாற்றவும், பொய் சொல்லவும் அதிக வாய்ப்பு ஏற்பட்டது.
கட்டுரையாளர்:
பென்னி வான் பெர்கன் (Penny Van Bergen) ஆஸ்திரேலியாவில் உள்ள வொல்லோங்கோங் பல்கலைக்கழகத்தின் (University of Wollongong) கல்விப் பள்ளியின் தலைவராகவும், கல்வி உளவியல் பேராசிரியராகவும் உள்ளார்.
மொழிபெயர்த்தவர்: த. பெருமாள்ராஜ்
இந்தக் கட்டுரை “தி கான்வர்சேஷன்” என்ற இணையதளத்தில் வெளியானது. கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
மூலக் கட்டுரையைப் படிக்க: https://theconversation.com/why-do-kids-cheat-is-it-normal-or-should-i-be-worried-242022
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.