காடுகள் ஏன் அமைதியாக இருக்கின்றன சிறார் குறுங்கதை – குமரகுரு

Why forests are quiet Childrens ShortStory By Kumaraguru. குமரகுருவின் காடுகள் ஏன் அமைதியாக இருக்கின்றன சிறார் குறுங்கதை
கார் வேகமா போயிக்கிட்டிருக்கும்போது, சன்னல் வழி வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த அரவிந்தனுக்கு திடீர்னு ‘நாம வேகமா போறோமா இல்லை இந்த மரம் செடி கொடிகளெல்லாம் வேகமா நம்மளைப் பார்த்து ஓடுதுங்களா’ன்னு சந்தேகம். விரலை தாடைல வைத்து யோசிச்சிட்டிருந்தவனைப் பார்த்த அம்மா அவன்கிட்ட “என்ன செல்லம் யோசிக்குறீங்க?” ன்னு கேட்டாங்க.

“ஏன் மா நாம இவ்வளவு வேகமா போறோமா இல்லை இந்த மரம் செடி கொடி ஊரெல்லாம் நம்மளைப் பார்த்து பயந்துக்கிட்டு வேகமா ஓடி ஒளியுதா?” ன்னு அம்மாக்கிட்ட கேட்டான் அரவிந்தன்.

“மரம் செடி கொடி மலை ஊர் இதெல்லாம் ஓடாதுடா செல்லம். நாமதான் அதுகளையெல்லாம் தாண்டி வேகமா ஓடிக்கிட்டிருக்கோம்”

“ஓ! சரிமா! இப்போ நாம போற வழியில இருக்க சாலை எல்லாம் யாரு போட்டது?” என்று அடுத்த கேள்வி கேட்டான்.

“அது நம்ம அரசாங்கம் நம்மளை மாதிரி இருக்கவங்க எல்லாம் ஒரு ஊருலேயிருந்து இன்னொரு ஊருக்கு போறதுக்காக கல்லு மண்ணு தாரெல்லாம ஊத்தி போட்டாங்க”

“சரிம்மா!! அப்போ இந்த சாலை போடுறதுக்கு முன்னாடி இங்கே என்னமா இருந்தது?”

“என்னடா இது!! கேள்வியெல்லாம் பயங்கரமா கேட்டுக்கிட்டேயிருக்க. எவ்வளவு பதில் சொல்லுறது. அதாவது, பாதையில்லாத இடத்துக்கெல்லாம் பாதை உருவாக்க அங்கேயிருந்த செடி மரமெல்லாம் வெட்டி அப்புறப்படுத்தி நடந்து போய்க்கிட்டிருந்தோம்.

அப்புறம் சைக்கிள் வந்தது, பாதையை இன்னும் கொஞ்சம் நல்லா பதப்படுத்தி முள்ளு கல்லு இல்லாத சாலையா மாற்றினாங்க. அதுக்கப்புறம், பைக் கார் லாரி பஸ்லாம் வந்தது, நாம அதையெல்லாம் பயன்படுத்த பயன்படுத்த சாலைகளும் அகல வேண்டியிருந்ததால தண்ணீர் தேங்காத மண்ணில்லாத பள்ளங்களில்லாத நல்ல உறுதியான அதே நேரம் வேகமாக போக கூடிய, இப்ப நாம போயிட்டிருக்க மாதிரி தார் சாலைகளைக் கண்டுபுடிச்சு போட்டாங்க”

“அப்படியா அம்மா! அப்போ அதோ நம்ம கண்ணுக்கு தெரியுற அந்த மரமெல்லாம் அடுத்தடுத்து சாலைப் போடுறப்போ வெட்டிடுவாங்களா அம்மா?”

“தேவைன்னா வெட்டுவாங்க. வெட்டிட்டு புதுசா வேற எங்கேயாவது ஒரு மரம் நட்டுடுவாங்க செல்லம்”

“அப்போ இந்த ஊருக்கு மழை கொடுக்கிற மரம் ஒன்னு போயிடும். ஆனா, இன்னொரு ஊருக்கு மழை கொடுக்க இனன்னொரு புது மரம் வந்துரும்”

“கரெக்ட்”

“இப்போதான்மா ஏன் காடுகளெல்லாம் அமைதியா இருக்குன்னு எனக்கு புரியுது!”

ஆச்சர்யமான அம்மா, ஏன் என்று கேட்க விரும்பினாள், கேட்டும் விட்டாள்… “காடெல்லாம் அமைதியா இருக்கா? ஏன்னும் உனக்குத் தெரியுமா?”

“ஆமாம் மா!! நாம அன்றைக்கு ஒரு படம் பார்த்தோம்ல அதுல வர கெட்டவன், ‘நீ அமைதியா இல்லைன்னா உன்னைக் கொன்னுடுவேன்’னு சொல்லுவான்ல, அதனால தான அந்த பொண்ணு அமைதியா இருப்பா. அது மாதிரிதான் இந்த காடுகளும் அமைதியாக இருக்கு” என்றான் அரவிந்தன்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.