பாட கலைத்திட்டத்தைத் துல்லியமாகப் பின்பற்ற கட்டாயப்படுத்துதல், ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஏன் பாதிக்கிறது?
காரா எலிசபெத் ஃபர்மன் (தமிழில்: த. பெருமாள்ராஜ்)
கற்பித்தலில், நம்பகத்தன்மையுடன்(fidelity) இருத்தல் என்பது ஒரு பாடத்தை எவ்வாறு கற்பிப்பது அல்லது மாணவர் நடத்தைக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்பதற்கான குறிப்பிட்ட நடைமுறைகளை நெருக்கமாகப் பின்பற்றுவதைக் குறிக்கிறது.
உதாரணமாக, ஒரு பாட கலைத்திட்டத்தை நம்பகத்தன்மையுடன் பின்பற்றுவதற்கு,
- ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட வரிசையில் பாடம் நடத்த வேண்டும்,
- குறிப்பிட்ட தொனியில் பேச வேண்டும்,
- அல்லது ஒரு குறிப்பிட்ட நாளில், பாடப்புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கத்திலிருந்து பாடம் எடுக்க வேண்டும்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, இன்று ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் முறைகளில் குறைவான தன்னாட்சியையே கொண்டுள்ளனர். மாறாக, பாடத்திட்டத்தை துல்லியமாகப் பின்பற்றுவதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. நல்ல கற்பித்தல் என்பது பாடத்திட்டத்தை நம்பகத்தன்மையுடன் பின்பற்றுவதை ஒத்ததாகும் என்ற கருத்தை கொள்கை வகுப்பாளர்கள் முன்வைக்கின்றனர்.
இந்த நடைமுறை நாடு முழுவதும் காணப்பட்டாலும், குறைந்த வருமானம் கொண்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் படிக்கும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளிகளில் இது மிகவும் பரவலாக உள்ளது.
தொடக்கக் கல்வியில் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட நான், தற்போது, ஆசிரியர்கள் நெறிமுறை சார்ந்த முடிவுகளை எவ்வாறு எடுக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறேன். மாணவர்களைக் கவனித்து, அவர்களுக்கு உதவுவதற்காக ஆசிரியர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும் இந்த ஆய்வில் அடங்கும். இதில், அவர்கள் எடுக்கும் முடிவுகள் கலைத்திட்டத்துடன் ஒத்துப்போகிறதா இல்லையா என்பது முக்கியமல்ல.
அமெரிக்காவில், சமீபத்திய ஆய்வொன்றில், வடகிழக்குப் பிராந்தியத்தின் கிராமப்புற நகரங்களில் பணியாற்றும் 12 ஆசிரியர்கள் நேர்காணல் செய்யப்பட்டனர். அவர்கள் தினசரி வகுப்பறைச் சவால்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பள்ளியில், புத்தகங்கள் மற்றும் காணொளிகள் போன்றவற்றிலிருந்து கற்றறிந்த சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் அவர்கள் எவ்வாறு தீர்வுகளைக் கண்டறிந்தார்கள் என்பதை விளக்கினர். தொழில்முறை மேம்பாட்டுப் பட்டறைகளில் கற்றுக்கொண்ட நுட்பங்களைப் பற்றியும் அவர்கள் பேசினர்.
பொதுப் பள்ளிகள் அல்லது பொது நிதியுதவி பெறும் குழந்தை பராமரிப்பு மையங்களில் பணிபுரிந்த ஒன்பது பேரில், ஓர் ஆசிரியரைத் தவிர மற்ற அனைவரும், பாடத்திட்டத்தை துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் என்ற அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த அழுத்தம் நிர்வாகிகளிடமிருந்து தண்டனைகள் மற்றும் வேலை இழப்பு அச்சுறுத்தல்கள் வடிவில் வந்திருந்தது. அத்துடன் அவர்கள் ஒரு பாடத்திட்டத்தை வித்தியாசமாகக் கற்பிக்கும்போது கேள்வி எழுப்பிய சக ஊழியர்களிடமிருந்தும் வந்திருந்தது.
மாணவர்களுக்குச் சிறந்த முறையில் சேவை செய்யும் ஆசிரியர்களின் திறனில், பாடத்திட்டத்தை பிசகாமல் பின்பற்ற வேண்டும் என்ற அழுத்தம் தலையிடுகிறது என்பதை எனது ஆய்வு உறுதிப்படுத்துகிறது. முந்தைய ஆய்வுகளும் இதே கருத்தை முன்வைத்துள்ளன. மேலும், இந்த நிலை பல தகுதிவாய்ந்த ஆசிரியர்களை கற்பித்தல் தொழிலை விட்டு வெளியேறத் தூண்டுகிறது.
பாடத்திட்ட நம்பகத்தன்மை ஆசிரியர்களை எவ்வாறு பாதிக்கிறது?
“நம்பகத்தன்மை” (fidelity) என்ற சொல் அறிவியல் துறையிலிருந்து வந்தது. இது ஒரு பரிசோதனையில் நம்பகமான முடிவுகளை உறுதி செய்வதற்காக ஒரு நெறிமுறையைத் துல்லியமாகப் பின்பற்றுவதைக் குறிக்கிறது.
ஆனால், வகுப்பறை என்பது ஒரு ஆய்வகம் அல்ல, மாணவர்கள் பரிசோதனைப் பொருள்களுமல்ல.
இதன்காரணமாகவே, பாடத்திட்ட நம்பகத்தன்மை மற்றும் அதனால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்து ஆசிரியர்களும் ஆசிரியர் பயிற்றுநர்களும் நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகின்றனர்.
எனது ஆய்வில் பங்கேற்ற ஒருவர், நான்காம் வகுப்பு பொதுப் பள்ளி ஆசிரியர் ஆவார். அவர் தனது பள்ளியின் ஒடுக்குமுறை சூழலை விவரித்தார்:
“அவர்கள் உண்மையில் பாடத்திட்டத்தை எங்கள் தொண்டையில் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேதியில் இதை நிறைவேற்ற வேண்டும், இந்தத் தேதியில் அனைவரும் இந்தப் பாடத்தில் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.”
இது கல்லூரியில் அவருக்குக் கற்பிக்கப்பட்டதற்கு முரணானது. ஒவ்வொரு மாணவரும் வித்தியாசமானவர், ஒவ்வொரு வகுப்பறையும் வித்தியாசமானது. எல்லா ஆசிரியர்களும் ஒரே நாளில் ஒரே பாடத்தில் இருக்க மாட்டார்கள்.
இந்த ஆய்வில் பங்கேற்ற ஒரு மழலையர் பள்ளி ஆசிரியர், தான் “வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் அடைக்கப்பட்டதாகவும்” ஒரு முன்திட்டமிட்ட வடிவத்தில் இயங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதாகவும் விவரிக்கிறார்.
பாடத்திட்டத்தை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றுவதால் மாணவர்கள் சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். உதாரணமாக, இந்த மழலையர் பள்ளி ஆசிரியை தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
கிராமப்புறத்தில் வசிக்கும் தனது மாணவர்களுக்கு, பாடப்பகுதியிலுள்ள, பரபரப்பான நகர சாலைகளைக் கடப்பது பற்றிய குறிப்புகள் புரியவில்லை. எனவே, சாலையைக் கடப்பதைப் பயிற்சி செய்யவும், உள்ளூர் போக்குவரத்தின் சத்தங்களைக் கேட்கவும் அவர் மாணவர்களை வெளியே பார்க்கிங் பகுதிக்கு அழைத்துச் சென்றார். இது பாடத்திட்டத்தில் இடம்பெறாத ஒரு செயல்பாடு. ஆசிரியை பாடத்திட்டத்தை மட்டும் கண்டிப்புடன் பின்பற்றியிருந்தால், மாணவர்களால் அப்பாடப் பகுதியைப் புரிந்து கொள்ள இயலாமல் போயிருக்கும்.
ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களுக்குப் போதுமான சுதந்திரம் அளிக்கப்படும்போது, அவர்கள் திறம்படக் கற்பிக்கிறார்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் தங்களுக்குத் தேவையான ஆதரவு கிடைப்பதாகவும் உணர்கிறார்கள்.
எனது ஆய்வில் இடம்பெற்ற நான்காம் வகுப்பு ஆசிரியை, தான் பணிபுரியும் பள்ளியையும், முதல்வரையும் மாற்றிய பின்னரே, தனது மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கற்பிக்க முடிந்ததாகக் குறிப்பிட்டார். அவருடைய புதிய பணிபுரியும் இடம் பற்றி அவர் கூறியதாவது:
“எனது நிர்வாகி எப்போதும், ‘உங்கள் மாணவர்களுக்கு ஏதாவது தேவை என்று நீங்கள் உணர்ந்தால், அதைச் செய்யுங்கள். நாம் முதலீடு செய்துள்ள விலையுயர்ந்த பாடத்திட்டத்துடன் அது முழுமையாக ஒத்துப்போகவில்லை என்றாலும் பரவாயில்லை’ என்று கூறுவார். இதனால் என் மனதில் இருந்த பெரும் பாரம் நீங்கியது போல் உள்ளது!”
முன்னோக்கி ஒரு புதிய பாதை
கற்பித்தல் முறைகள் மற்றும் பாடத்திட்டங்களில் நெகிழ்வுத்தன்மை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கற்றல் செயல்பாட்டில் முழுமையாக ஈடுபட உதவுவதோடு, ஜனநாயக சமுதாயத்தை வளர்க்கவும் உதவுகிறது என்பதை ஆராய்ச்சி நிரூபிக்கிறது.
ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக, பள்ளிகள் பின்வரும் நெகிழ்வான அணுகுமுறைகளைப் பின்பற்றலாம்:
- ஆசிரியர்களை நம்புங்கள்.
ஆசிரிய பயிற்சி பெறுபவர்கள் மற்றும் தற்போதைய ஆசிரியர்கள் என இருதரப்பினரிடமும், ஏன் அவர்கள் கற்பிக்க விரும்புகிறார்கள் என்று கேட்டபோது, குழந்தைகள் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு உதவ விரும்புவதாகவும் கூறுகின்றனர். ஆசிரியர்களுடன் பணிபுரியும்போது, அவர்களின் நல்ல நோக்கங்களை நம்புவதிலிருந்து தொடங்குங்கள்.
2. சான்றுகளைப் பின்பற்றுங்கள்.
கற்றல் என்பது சிக்கலானது, மேலும் மாணவர்கள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் என்பது குறித்த கல்வியாளர்களின் அறிவு புதிய ஆராய்ச்சிகளின் மூலம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்தை நம்பகத்தன்மையுடன் பின்பற்றும்போது, ஆசிரியர்கள் சில நேரங்களில் சான்றுகள் அடிப்படையில் அமையாத முறைகளையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். உண்மையில், பாடத்திட்டம் மாணவர் கற்றலில் தலையிடுகிறது என்பதற்கு நம்மிடம் சான்றுகள் இருந்தபோதும், ஆசிரியர்கள் பாடத்திட்டத்தைத் துல்லியமாகப் பின்பற்ற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
3. மாணவர்களின் தேவைகள் மற்றும் அனுபவங்களுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை மாற்றியமைக்க ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
உதாரணமாக, பெரும்பாலான கற்பித்தல் வளங்களில், வெள்ளையின ஆசிரியர்களும் கதாபாத்திரங்களும் அதிகமாக இடம்பெறுகின்றனர். பயனுள்ள மற்றும் நெறிமுறை சார்ந்த கற்பித்தலுக்கு, ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் கலாச்சாரங்களை ஆதரித்து, அவற்றை தங்கள் பாடங்களில் உள்ளடக்க வேண்டும். இதற்கு, அவர்கள் பாடத்திட்டத்தில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.
கட்டுரையாளர்:
காரா எலிசபெத் ஃபர்மன் பிஎச்டி,
அமெரிக்காவின் ஹண்டர் கல்லூரியில் ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியின் இணைப் பேராசிரியராக உள்ளார். இவர் “Teaching from an Ethical Center: Practical Wisdom for Daily Instruction” என்ற புத்தகத்தின் ஆசிரியராவர். “Descriptive Inquiry in Teacher Practice: Cultivating Practical Wisdom to Create Democratic Schools”, “Teachers and Philosophy: Essays from the Contact Zone” என்ற இரு புத்தகங்களின் இணை ஆசிரியருமாவார். இவர் “Teaching from an Ethical Center: An Inquiry Among Friends” என்ற பாட்காஸ்டின் தொகுப்பாளராகவும், மற்றும் “Thinking in the Midst” இன் இணை தொகுப்பாளராகவும் இருக்கிறார்..
தமிழில் :
த. பெருமாள் ராஜ்
இந்தக் கட்டுரை “தி கான்வர்சேஷன்” என்ற இணையதளத்தில் வெளியானது. கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
மூலக் கட்டுரையைப் படிக்க :
https://theconversation.com/profiles/cara-elizabeth-furman-1482957
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சிறப்பான இக்கால நிலைக்கு தேவையான கட்டுரை!வாழ்த்துக்கள்