நோபல் பரிசில் கணிதம் ஏன் இடம் பெறுவதில்லை? - Why is mathematics not included in the Nobel Prize? - https://bookday.in/

நோபல் பரிசில் கணிதம் ஏன் இடம் பெறுவதில்லை?

நோபல் பரிசில் கணிதம் ஏன் இடம் பெறுவதில்லை?

உலகமே உற்று நோக்கும் உன்னத பரிசு நோபல் பரிசு. ஒவ்வொரு வருடமும், முந்தைய ஆண்டில் மனித குலத்தின் நன்மைக்காக அரிய கண்டுபிடிப்புகளை அளித்தவர்களைக் கௌரவிக்கும் விதமாக இந்தப் பரிசு அளிக்கப்படுகிறது. இந்தப் பரிசு ஆறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அவை உடலியல் அல்லது மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதார அறிவியல். “கணிதம் அறிவியலின் தாய்” என்பார்கள். ஆனால், நோபல் பரிசில் கணிதம் இடம் பெறுவதில்லை. அதன் காரணம் என்ன? இதைப் போல அறியாத சில விஷயங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கணிதத்திற்கு நோபல் பரிசு 

பல துறைகளுக்கு நோபல் பரிசு அளிப்பவர்கள், கணிதத்திற்கு அளிப்பதில்லை. 1901ஆம் வருடம் முதல் இந்தப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இதுவரை கணிதம் மற்றும் கணிணி அறிவியலுக்கு பரிசு வழங்கியதில்லை. கணிதத்திற்கு நோபல் பரிசு வழங்காததன் காரணம் என்று ஒரு கட்டுக் கதை பல காலங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அது, ஆல்ஃபிரட் நோபலின் மனைவிக்கு ஒரு கணிதவியலாளருடன் தொடர்பு இருந்த காரணத்தால், கணிதத் துறைக்கு பரிசில்லை என்பது. உண்மையில், ஆல்ஃபிரட் நோபல் திருமணம் செய்து கொள்ளவில்லை. நோபல் பரிசுகள் “மனித குலத்திற்கு பயனுள்ளதாக” கருதப்படும் ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆல்ஃப்ரட் நோபல், கணிதம் நேரடியாக மனித குலத்திற்கு பயன் அளிப்பதாக கருதாத காரணத்தால். இந்தத் துறை நோபல் பரிசில் இடம் பெறவில்லை.

அதிக நோபல் பரிசுகளை வென்ற வம்சம் – ஒரே குடும்பத்திற்கு ஐந்து நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த குடும்பம் மேரி கியூரி குடும்பம். 1903ஆம் ஆண்டில் இயற்பியலில் மேரி க்யூரி மற்றும் அவர் கணவர் பியர் நோபல் பரிசு பெற்றனர். 1911ஆம் ஆண்டில் வேதியல் துறையில் நோபல் பரிசு பெற்றார் மேரி க்யூரி. இரண்டு வெவ்வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்ற முதல் விஞ்ஞானி மேரி க்யூரி. கதிரியக்கத்தன்மை ஆராய்ச்சிக்காகவும், புதிய தனிமங்களைக் கண்டுபிடித்ததற்காகவும் பரிசுகள் அளிக்கப்பட்டன. தாயின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, அவரது மகள் ஜரீன் ஜோலியட் க்யூரி மற்றும் அவளது கணவர் ஃபிரடெரிக் இருவருமாக 1935ஆம் வருடம் வேதியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றனர். செயற்கை கதிரியக்கத்தன்மையைக் கண்டு பிடித்ததற்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு – அறிவியலாளர்கள் மத்தியில் ஐன்ஸ்டீன் புகழ் பரவியதற்கு முக்கிய காரணம் அவரின் “சார்பியல் கோட்பாடு” ஆனால், நோபல் பரிசுக் குழு இதனை அங்கீகரிக்கவில்லை. இதற்கு நோபல் பரிசு வழங்க மறுத்தனர். அவர்களைப் பொறுத்தவரை இந்தக் கோட்பாடு ஊகத்தின் அடிப்படையிலும், தத்துவார்த்தமாகவும் வடிவமைக்கப்பட்டது. இந்தக் கோட்பாடை உறுதி செய்யும்படியான சோதனை ஆதாரங்கள் எதுவுமில்லை.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வாக்குறுதி – ஐன்ஸ்டீன் மனைவி மிலேவா மாரிக். அவரை ஐன்ஸ்டீன் 1919ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அப்போது எதிர்காலத்தில் தனக்கு கிடைக்க இருக்கும் நோபல் பரிசின் முழுத் தொகையையும் அவளுக்கு அளிப்பதாக வாக்குறுதி அளித்தார். 1921ஆம் ஆண்டு ஒளிமின்னழுத்த விளைவு கோட்பாட்டிற்காக அவருக்கு நோபல் அளிக்கப்பட்டது. சார்பியல் கோட்பாடு போல அல்லாமல், இதற்கு அளவிட்டு சரிபார்க்கக்கூடிய ஆதாரங்கள் இருந்தன. தனக்குக் கிடைத்த பரிசுத் தொகை முழுவதையும், வாக்களித்தபடி, மிலேவா மாரிக் பெயருக்கு மாற்றி அளித்தார். இதனால் மிலேவா மாரிக் மற்றும் அவரது குழந்தைகளுக்கும் எதிர்கால வசதியான வாழ்க்கைக்கு ஆதாரம் கிடைத்தது.

Einstein and his wife, Mileva Maric – rochemamabolo

பெண் ஆராய்ச்சியாளர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டனர் : பெண் ஆராய்ச்சியாளர்கள் புறக்கணிக்கப்பட்டு, பரிசுகளில் ஆண் ஆராய்ச்சியாளர்களுக்கு முன்னிலை வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. லிஸ் மெய்ட்னர் என்ற பெண் விஞ்ஞானி 48 முறைகள் நோபலுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், ஒரு முறை கூட விருதை வென்றதில்லை. அணுக்கரு பிளவு ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார் லிஸ் மெய்ட்னர். ஆனால், வேதியல் துறை விஞ்ஞானி ஓட்டோ ஹான் நோபல் விருதைப் பெற்றார். நியூட்ரான் நட்சத்திரத்தின் பல்சர்களைக் கண்டு பிடிப்பதில் பெரிய பங்கு வகித்தவர் ஜோசலின் பென் பர்னல் என்ற பெண் ஆராய்ச்சியாளர். இவருக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தாலும், நோபல் குழுவால் புறக்கணிக்கப்பட்டார். நோபல் விருது இவருடைய முனைவர் பட்ட மேற்பார்வையாளர் ஆண்டனி ஹெவிஷுக்கு அளிக்கப்பட்டது.

லிஸ் மீட்னர் - விக்கிபீடியா
லிஸ் மெய்ட்னர்

ஏலத்தில் விடப்பட்ட நோபல் பதக்கங்கள் : பிரான்சிஸ் கிரிக் 1962ஆம் ஆண்டு டிஎன்ஏ அமைப்பைக் கண்டு பிடித்ததற்கு நோபல் பரிசு பெற்றார். அவர் 2013ஆம் ஆண்டு இறந்த பிறகு, வரிக் கடன்களை அடைப்பதற்கு, அவரது நோபல் பதக்கம் ஏலம் விடப்பட்டது. அதன் மூலம் 2 மில்லியன் அமெரிக்கன் டாலருக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டது. பிரான்சிஸ் கிரிக்குடன் நோபல் பரிசு பெற்ற ஜேம்ஸ் வாட்சன், தனது பதக்கத்தை, 2014ஆம் வருடம் ஏலம் விட்டதில் சுமார் 4.8 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்றார். விருதின் புது உரிமையாளர், அந்த விருதை வாட்சனிடம் திருப்பி அனுப்பி விட்டார்.

தவறு என்று தெரிந்தும் ரத்து செய்யப்படாத நோபல் விருதுகள் – 1926ஆம் ஆண்டு, ஜோஹன்னஸ் ஃபைபிகர், புழுக்கள் புற்றுநோய் உண்டாக்குகின்றன என்ற ஆராய்ச்சிக்கு, மருத்துவதிற்கான நோபல் பரிசு பெற்றார். பின்னர் இது பொய்யான கருத்து என்று நிரூபணமாகியது. ஆனால், அதிகார பூர்வமாக விருது ரத்து செய்யப்படவில்லை. மூளையின் முன் மடலில் உள்ள நரம்புகள் துண்டிக்கப்பட்டு மனநோய்களுக்கு சிகிச்சையளிக்கும் லோபோடமி என்ற செயல் முறையை உருவாக்கினார் அன்டோனியோ எகாஸ் மோனிஸ். 1949ஆம் வருடம் இவருக்கு மருத்துவத்திற்கான நோபல் வழங்கப்பட்டது. லோபோடமிகள் நீண்ட காலமாக பயனற்றதாகவும், தீங்கு விளைவிப்பதாகவும் கருதப்படுகின்றன. 2019ஆம் வருடம் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற கிரெக் செமென்சாவின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் திரும்பப் பெறப்பட்டன. ஆனால், விருது ரத்து செய்யப்படவில்லை.

கட்டுரையாளர் :

கே.என்.சுவாமிநாதன்
அமெரிக்கா

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. ராமச்சந்திர வைத்தியநாத்

    சிறப்பான கட்டுரை மட்டுமல்ல எளிய மொழியில் எழுதப்பட்டதும் கூட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *