விவசாயிகள் போராட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டுமா ஏன்? | தமிழில்: ச. வீரமணி

Image Credits: شهيد الشيخ @shahidsheik03 Twitter Accountமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வேளாண் சட்டங்கள் மூன்றையும் ரத்த செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், பாஜக அரசாங்கத்தின் கொடூரமான அடக்குமுறைகளை வீரத்துடன் எதிர்கொண்டும், 60க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொடுத்தபின்பும் உறுதியுடன் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரலாறு படைத்துவரும் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு தன் ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. 2020 ஜூன் மாதத்தில் இந்த அவசரச்சட்டங்களை பாஜக அரசு கொண்டுவந்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்திட்ட முதல் அரசியல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகும்.

வேளாண் சட்டங்களும், அதனை மிகவும் வெறித்தனமாக உந்தித்தள்ள முயலும் பாஜக-வின் நடவடிக்கைகளும் நாட்டில் பல விதங்களிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்திடக் கூடியவைகளாகும். நாட்டின் ஜனநாயக உரிமைகள் மற்றும் மாநிலங்களின் உரிமைகள் பல காவு கொடுக்கப்பட வேண்டியிருக்கும். உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் நிலைப்பாடு பலவீனப்பட வேண்டியிருக்கும். இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு ஆபத்திற்குள்ளாகும். விலைவாசிகளைக் கட்டப்படுத்திட வேண்டும் என்கிற அரசின் பொறுப்பு கைகழுவப்படும். விவசாயத்தினைக் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிற்குத் தள்ளிவிட சட்டரீதியானதொரு கட்டமைப்பு உருவாக்கப்படும்.எதேச்சாதிகார அரசாங்கம், சர்வாதிகார முறைகள்

விவசாயிகளின் போராட்டம் வீறுகொண்டு எழுந்து நாளும் வளர்ந்துகொண்டிருப்பதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளில் பல போராட்டத்தை ஆதரித்திட முன்வந்துள்ளன. விவசாயப் போராட்டத்திற்கு எதிராக அடாவடித்தனமாகவும், அரக்கத்தனமாகவும் அணுகுமுறையைப் பாஜக மேற்கொண்டுவரும் பின்னணியில், நாடாளுமன்றத்தில் பாஜக-விற்கு ஆதரவு அளித்துவந்த சில கட்சிகள்கூட, தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

விவசாயிகள் போராட்டத்தை பாஜக எப்படி எதிர்கொள்கிறது? நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை அது நடத்திடவில்லை, ஏன்? ஏனெனில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டுக் குரல்கொடுத்தால் அதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற காரணத்தினாலேயே அது குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்திடவில்லை.

செப்டம்பர் மாதத்தில், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட சமயத்திலும்கூட, விவசாயிகள் விரோத வேளாண் அவசரச் சட்டங்களை, சட்டங்களாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டிட, பாஜக-விற்குப் பிரச்சனைகள் எதுவும் ஏற்படவில்லை. எனினும், டிசம்பரில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கிவிட்டபின்னர், அது நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் எனக் குறைந்தபின்னர், நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டாது தவிர்ப்பதற்கு, கொரோனா வைரஸ் தொற்றைக் காரணமாக அறிவித்தது. பாஜக, நாடாளுமன்றத்தை எந்த அளவிற்கு மிக மோசமாகக் கருதுகிறது என்பதையே இது பிரதிபலிக்கிறது. அதன் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் இதனைத் தெளிவாகக் காட்டுகிறது.

நாடாளுமன்றத்தின் முந்தையக் கூட்டத்தொடரின்போது இந்த வேளாண் சட்டமுன்வடிவுகளை நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கையையும், விவசாய சங்கங்களுடனும் மற்றும் விவசாயத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிற அனைத்துத்தரப்பினருடனும் இது குறித்துக் கலந்தாலோசனைகள் நடத்தப்பட வேண்டும் என்பதையும் பாஜக நிராகரித்தது. மாநிலங்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இவற்றைத் தெரிவுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று கோரியதால், உறுப்பினர்கள் வாக்களிப்பதை அனுமதிக்கக்கூடாது என்பதற்காக நாடாளுமன்ற நடத்தை விதிகளை மீறியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரு மாநிலங்களவை உறுப்பினர்கள் உட்பட சட்டமுன்வடிவுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த உறுப்பினர்களுக்குத் தடை விதித்தும், அடாவடித்தனமாக சட்டமுன்வடிவுகளை, சட்டங்களாக நிறைவேற்றிக் கொண்டனர். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களும், மற்றவர்களும் இச்சட்டமுன்வடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், பாஜக அவற்றைக் கிஞ்சிற்றும் கேட்கத் தயாராயில்லை. இப்போது விவசாயிகள் எழுப்பிவரும் கோரிக்கைகளில் பலவற்றை நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் எழுப்பியவைகளாகும்.

இந்த உண்மைகளையெல்லாம் இப்போது நினைவுகூர்வது மிகவும் முக்கியமாகும். விவசாயிகளைக் கலந்தாலோசனை செய்திட மறுத்தவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைக் காலில்போட்டு மிதித்தவர்கள், வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் அமைப்புகள் சில ஆதரவு தெரிவிப்பதாகத் தங்கள் தலையாட்டி பொம்மைகள் சங்கங்களின் மூலமாக அறிக்கைகள் விட்டு, விவசாயிகள் மத்தியில் பிளவு இருப்பதுபோல் காட்ட முயற்சித்த மத்திய அரசாங்கம்தான் இப்போது போராடும் விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதாக நடித்துக்கொண்டிருக்கிறது. வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், போராடும் விவசாய சங்கங்கள் தொடர்பாகவும் உச்ச நீதிமன்றம் நடத்தும் வழக்கில் தங்களுடைய தலையாட்டிப் பொம்மைகள் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் மத்திய அரசாங்கம் தன்னையும் இணைத்துக்கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், பாஜக தலைவர்கள் போராடும் விவசாயிகளுக்கு எதிராகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், புதிது புதிதாக நயவஞ்சக வார்த்தைகளைக் கண்டுபிடித்து, விஷத்தனமான தாக்குதல்களைத் தொடுத்திடவும் ஊக்கப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் பாஜக மற்றும் மத்திய அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் எதேச்சாதிகார முறைகளைக் காட்டுகின்றன.

போராட்டத்தை சீர்குலைத்திட பாஜக மேற்கொள்ளும் தந்திரம் மற்றுமொரு கேவலமான கோணத்தில் இருந்துவருகிறது. போராடும் விவசாயிகள் மிகவும் ஒழுங்கு, கட்டுப்பாட்டுடன் போராடிக்கொண்டிருப்பதும், போராடும் அனைவருக்கும் சாதி, மத வேறுபாடின்றி சமமான முறையில் உணவு வழங்கப்படுவதும், போராடும் விவசாயிகளின் அசௌகரியங்களையும்கூட அனைவருமே சமமானமுறையில் பகிர்ந்துகொண்டு, அவற்றைக் குறைப்பதற்கு அனைவரும் கூட்டாக நடவடிக்கைகள் எடுப்பதும், மக்கள் மத்தியில் மிகவும் விரிவான அளவில் பாராட்டுக்களைப் பெற்றிருக்கின்றன. பாஜக, முதலில் போராடும் விவசாயிகளிடையே அவர்களைக் காலிஸ்தானிகள் என்று முத்திரை குத்தி, பிளவினை ஏற்படுத்த முயன்றது. இத்தகைய அவர்களின் தந்திரம் பரிதாபமான முறையில் படுதோல்வியடைந்ததை அடுத்து, பாஜக ஹர்யானா மாநில முதலமைச்சரின் கீழ் பஞ்சாப் விவசாயிகளையும், ஹர்யானா விவசாயிகளையும் சட்லஜ் யமுனா கால்வாய் (SYL-Satluj Yamuna Link) மூலமான நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சனை மூலம் பிளவினை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் முன்பிருந்ததைவிட இரு மாநில விவசாயிகளும் மேலும் பெரிய அளவில் ஒன்றுபட்டுநின்று வலுவான ஒற்றுமையைக் காட்டி ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளுக்கு மரண அடிகொடுப்பதன் மூலம் பதிலளித்திருக்கிறார்கள். ஆனாலும், இத்தகைய இழிவான வெறுக்கத்தக்க மற்றும் தேச விரோத தந்திரங்களைப் பயன்படுத்துவதைக் கைவிட மறுத்துவருகிறது.மாநிலப் பட்டியலில் உள்ள சட்டங்களை மத்திய சட்டங்களாக்குதல்: மாநில அரசாங்கங்களின் உரிமைகள் மீதான தாக்குதல்கள்

விவசாயம் அரசமைப்புச்சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் மாநிலப் பட்டியலில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. எனினும், மோடி அரசாங்கம், வேளாண் சட்டங்கள் தொடர்பாக மாநில அரசாங்கங்களுக்கு இருந்த உரிமைகளைப் பறித்து, பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றிருக்கிறது. இதுநாள்வரையிலும் மோடி அரசாங்கம் விவசாய சீர்திருத்தங்களை, மாநில அரசாங்கங்களின் கீழிருந்த “மாதிரி சட்டங்கள்” (“Model Acts”) மூலமாக உந்தித்தள்ளிக்கொண்டிருந்தது. 2017இலும், 2018இலும் அரசாங்கம் அரசாங்கம் “இரு மாதிரி சட்டங்களைக்” கொண்டுவந்தது. 2017ஆம் ஆண்டு வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடைகள் சந்தைப்படுத்தல் (மேம்படுத்தலும் வசதிசெய்து தருதலும்) சட்டம், 2018ஆம் ஆண்டு மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடைகள் ஒப்பந்தப் பண்ணை மற்றும் சேவைகள் (மேம்படுத்தலும் வசதிசெய்து தருதலும்) சட்டம் (The Agriculture Produce and Livestock Marketing, (Promotion and Facilitation) Act 2017 and The Model Agriculture Produce and Livestock Contract Farming and Services (Promotion & Facilitation) Act, 2018) என இரு சட்டங்களைக் கொண்டு வந்தது. இவ்விரு சட்டங்களில் இருந்த பல ஷரத்துக்கள், இப்போது மத்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களில் காணப்படுகின்றன. 2017ஆம் ஆண்டு சட்டத்தைப் பொறுத்தவரை அந்த மாதிரி சட்டத்தை, அருணாசலப் பிரதேச மாநில அரசு மட்டுமே முழுமையாக நிறைவேற்றி இருந்தது என்றும், உத்தரப்பிரதேசம், சட்டீஸ்கார் மற்றும் பஞ்சாப் அச்சட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சில ஷரத்துக்களை மட்டுமே நிறைவேற்றிக் கொண்டிருந்தன என்றும் நாடாளுமன்றத்தில் 2019 நவம்பரில் கூறப்பட்டது.

இந்த ஆண்டு மே மாதத்தில், வேளாண் அமைச்சக செயலாளர், மாதிரி சட்டங்களை அமல்படுத்துவதற்காக அவசரச் சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்று மாநில அரசாங்கங்களுக்குக் கடிதம் எழுதினார். இதற்குக் கட்டுப்பட்டு மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநில அரசுகள் மாதிரி சட்டத்தின் அடிப்படையில் தங்கள் மாநிலங்களில் இருந்த சட்டங்களில் திருத்தங்களைச் செய்துகொண்டன. ஒப்பந்தப் பண்ணை விவசாயம் தொடர்பான மாதிரி சட்டத்தை நிறைவேற்றியுள்ள ஒரேயொரு அரசாங்கம் எது தெரியுமா? தமிழ்நாடு மாநில அரசாங்கமேயாகும். இது 2019இல் இவ்வாறு ஒரு சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது.

இந்த சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசாங்கங்கள் விரும்பினால், தங்கள் மாநிலங்களுக்கு எந்தமாதிரியான திருத்தங்கள் வேண்டுமென்று மாநில அரசாங்கங்கள் விரும்புகின்றனவோ அதேபோன்று மாதிரி சட்டங்களில் திருத்தங்களைச் செய்துகொண்டு தங்களுடைய மாநில சட்டமன்றங்களின் மூலமாக சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். எனினும், இந்த மாதிரி சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மாநில அரசாங்கங்களைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்பதற்காக, மத்திய அரசாங்கம், பதினைந்தாவது நிதி ஆணையத்தின் மூலம் செயல்பாட்டு அடிப்படையிலான மான்யங்கள் வழங்குவதற்கான ஒரு விதியை அறிமுகப்படுத்தியது. அதன்படி மாநில அரசாங்கங்கள் மாதிரி சட்டங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோன்று வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடைகள் சந்தைப்படுத்தல் (மேம்படுத்தலும் வசதிசெய்து தருதலும்) சட்டத்தையும், மாதிரி நிலம் குத்தகைக்குவிடுதல் சட்டத்தையும் (Model Land Leasing Act) நிறைவேற்றினால்தான் மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்திற்கு நிதி அளிக்க முடியும்.

பின்னர் மத்திய அரசாங்கம், நாடு முழுவதுமே கார்ப்பரேட் ஆதரவு நிகழ்ச்சிநிரலை நிறைவேற்ற வேண்டும் என்பவதற்காக நாடு தழுவிய அளவில் வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, மாநில அரசாங்கங்களின் உரிமைகளைப் பறித்திடக்கூடிய விதத்தில் மேலும் ஓரடி எடுத்து வைத்தது. மாதிரி சட்டங்களைக் காட்டிலும் கார்ப்பரேட்டுகளுக்கு மிக அதிக அளவில் பயன்களை அளிக்கக்கூடிய விதத்தில் இப்போது இந்த வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.

இந்த வேளாண் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன் விவசாயிகள் கலந்தாலோசிக்கப் படவில்லை. மாநில அரசாங்கங்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை. அதானி மற்றும் அம்பானி போன்ற வேளாண் வர்த்தக கார்ப்பரேட்டுகள் மட்டுமே கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. ஏனெனில் அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதானி நிலங்களைக் கையகப்படுத்துவதற்கும், வங்கிகளில் சலுகை வட்டிவிகிதங்களில் கடன்களைப் பெறுவதற்கும் இந்த அரசாங்கத்தால் எப்படியெல்லாம் உதவப்பட்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த வெளிப்படையான ரகசியமாகும். அதனால்தான் விவசாயிகள், அதானிக்காகவும், அம்பானிக்காகவும்தான் இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டே குற்றஞ்சாட்டுகிறார்கள்.

பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நலன்கள்

வேளாண் சட்டங்களில், பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நலன்களும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவால் தலைமை தாங்கப்படும் வளர்ந்த நாடுகள், இந்தியா உட்பட வளர்முக நாடுகளில் வேளாண் உற்பத்தி மற்றும் சந்தைகளைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்திட வேண்டும் என்று கோரிக் கொண்டிருக்கின்றன. ‘வேளாண் ஒப்பந்தத்தின்’ மூலமாக (இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது), அவர்கள் இந்தியாவில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் குறைந்தபட்ச ஆதார விலை, பொது விநியோக முறைக்காக அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருள்களை பொது சேமிப்புக் கிடங்குகளில் வைத்திருப்பது ஆகியவற்றில் குறி வைத்திருக்கிறார்கள். உலக வர்த்தக அமைப்பில் இத்தகைய நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாததுபோல் வெளிப்பார்வைக்குக் காட்டிக்கொள்ளும் அதே சமயத்தில், மோடி அரசாங்கத்தின் வேளாண் சட்டங்கள் உட்பட உள்நாட்டின் கொள்கைகள் உண்மையில் பன்னாட்டு வேளாண் வர்த்தக நிறுவனங்களின் நலன்களுக்கே சேவை செய்கின்றன. இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டபின், கார்கில் போன்ற பன்னாட்டு வேளாண் வர்த்தக நிறுவனங்களும் அதானிகள் மற்றும் அம்பானிகள் போன்றே சம அளவில் நம் நாட்டிற்குள் விவசாயத்தில் ஈடுபடவும், வேளாண் சந்தையில் ஈடுபடவும் முடியும்.ஆட்சேபணைகளும், மத்திய அரசாங்கம் இப்போது கூறிக்கொண்டிருக்கும் திருத்தங்களும்

மூன்று வேளாண் சட்டங்களும் (1) வேளாண்மை சந்தைப்படுத்துதல்: வேளாண் விளைபொருள்கள் வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதலும் வசதிசெய்து தருதலும் சட்டம்), (2) ஒப்பந்த விவசாயம்: விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாத்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்தம்) சட்டம் மற்றும் (3) உணவுப் பண்டங்களை இருப்பு வைத்துக்கொள்வது பற்றி: இன்றியமையாப் பண்டங்கள் (திருத்தச்) சட்டம் ((1) agricultural marketing: The Farmers’ Produce Trade and Commerce (Promotion and Facilitation Act), (2) contract farming: The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act), and (3) about stocking of food commodities: The Essential Commodities (Amendment) Act.) என்பவைகளாகும்.

(1) இந்தச் சட்டங்களின் பிரதான குறிக்கோள் நம் நாட்டின் வேளாண் சந்தைகளை கார்ப்பரேட்டுகளுக்கு அகலத் திறந்து விடுவது என்பதும், உணவு தான்யங்களை அரசே கொள்முதல் செய்யும் பொறுப்பிலிருந்து தன்னை முற்றிலுமாகக் கழட்டிக்கொள்வது என்பதுமாகும். வேளாண்மை சந்தைப்படுத்துதல் சட்டத்தின்கீழ், அரசாங்கம் சந்தையை ஒட்டுமொத்தமாக தன்னுடைய கட்டுப்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ள விரும்புவதுடன், தனியார் தங்கள் சொந்த சந்தைகளை அமைத்துக்கொள்வதற்கு சலுகைகளை வாரிவழங்குவதற்கும் வழிவகைகளைச் செய்து கொடுத்திருக்கிறது. தனியார் அரசாங்கத்திற்கு எவ்விதமான வரிகளோ கட்டணங்களோ செலுத்தத் தேவையில்லை, அவர்கள் விவசாயிகளிடமிருந்து எவ்விதமான குறைந்தபட்ச விலையும் நிர்ணயிக்காமல் நேரடியாகவே வேளாண் பொருள்களை வாங்கி தங்கள் சந்தைகளில் விற்கலாம். இப்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் முறைப்படுத்தலப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் (regulated mandis), தொடர்ந்து தற்போது அளித்துவருவதைப்போன்றே கட்டணங்களை அரசாங்கத்திற்கு அளிப்பது தொடரும் அதே சமயத்தில், புதிதாக சந்தைகளைத் திறக்கும் தனியார்களிடமிருந்து, மாநில அரசாங்கங்கள் எவ்விதமான வரிகளோ அல்லது கட்டணங்களோ விதிப்பதற்கு உரிமைகள் கிடையாது. இதன் பொருள் என்னவெனில், இப்போது ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து வேளாண் பொருள்களை வாங்குவது என்பது கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி, விரைவில் காணாமல் போய்விடும்.

2006இல் பீகாரில் வேளாண் உற்பத்தி சந்தைக் குழு (APMC), ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டது. இதன் விளைவுகள் என்ன? பீகார் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை தனியார் வர்த்தகர்களிடம் விற்க வேண்டிய நிலை. இதன் காரணமாக இவர்கள் குறைந்தபட்ச ஆதார விலையைவிட சுமார் மூன்றில் ஒரு பங்கு விலையைவிடக் குறைவான விலைக்கே நெல்லை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மத்தியப் பிரதேசத்திலும் புதிய சட்டத்தின் கீழ் எவ்விதமான நிவாரணமும் இல்லாமல் பல்வேறு வடிவங்களில் ஏமாற்றப்படுவது ஏற்கனவே தொடங்கிவிட்டது. இப்போது அரசாங்கம் முன்வைத்திடும் பரிந்துரை என்னவென்றால், புதிதாக வர்த்தகர்களைப் பதிவு செய்திட மாநில அரசாங்கங்களை அனுமதித்திட முடியும் என்றும், மாநில அரசாங்கங்கள் விரும்பினால் அதற்காக அவர்களிடம் ஏதேனும் கட்டணம் வசூலித்துக்கொள்ள முடியும் என்றும் கூறியிருக்கிறது. உண்மையில் இந்தப் பரிந்துரை 2017 மாதிரி சட்டத்தில் ஏற்கனவே இருப்பதுதான். பின், இப்போது புதிய மத்திய சட்டத்திற்கான தேவை என்ன?

போராடும் விவசாயிகளின் பிரதான கவலை, சந்தைகளைத் தனியார் எடுத்துக்கொள்வதும், குறைந்தபட்ச ஆதார விலை குறித்து ஒரு சட்டரீதியான உத்தரவாதம் இல்லாத நிலையில், விவசாயிகள் பெரும் வர்த்தகர்களின் கருணையின்கீழ் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதுமேயாகும்.

தற்போது இந்தியா முழுவதும் சுமார் 2,477 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் (APMCs) இருக்கின்றன. 4,843 சிறிய அளவிலான துணை விற்பனைக் கூடங்களும் இருக்கின்றன. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமினாதன் ஆணையம், இத்தகைய விற்பனைக் கூடங்களை அதிக அளவில் அமைத்திட வேண்டும் என்றும், இப்போது சுமார் 50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருக்கக்கூடியவற்றை, 80 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு என்ற விதத்தில் அதிகரித்திட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது. இந்த “சீர்திருத்தம்”தான் விவசாயிகளுக்குப் பலன்தரும். ஆனால் அரசாங்கமோ விவசாயிகளிடம் இப்போது செய்துவரும் கொள்முதலையே முழுமையாக வெட்டிவிட விரும்புகிறது. இந்நிலையில் மேலும் அதிக அளவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அமைத்திட வேண்டும் என்கிற பரிந்துரையைக் கண்டுகொள்ளுமா, என்ன? எனவேதான் இப்பரிந்துரையை நிராகரித்திருக்கிறது.

(2)ஒப்பந்தப் பண்ணைச் சட்டம், ஒப்பந்த பண்ணைமுறை மூலமாக வேளாண் உற்பத்தியை கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுசெல்ல, வழிதிறந்துவிட்டிருக்கிறது. உலகின் பெரும் வர்த்தக நிறுவனங்கள் எவ்விதமான அரசின் முறைப்படுத்தலுமின்றி முழுமையாகச் செயல்பட்டு, தாங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு வேளாண் உற்பத்திப் பொருள்களை விவசாயிகள் தங்கள் வசம் ஒப்புவித்திடக்கூடிய விதத்தில் விவசாயிகளைக் கட்டாயப்படுத்திட வழிவகைகளைச் செய்துதருகிறது. விவசாயிகள் ஒரு நியாயமான, நேர்மையான மற்றும் கட்டுப்படியாகக்கூடிய விலையைப் பெறுவதை உத்தரவாதப்படுத்திட இச்சட்டத்தில் எவ்விதமான ஏற்பாடும் இல்லை.

வேளாண் சந்தை சட்டம் மற்றும் ஒப்பந்த பண்ணைச் சட்டம் ஆகிய இரண்டுமே விவசாயிகளுக்கும், வர்த்தகர்கள்/நிறுவனங்களுக்குமிடையே தாவாக்கள் ஏற்படுமானால் அதனைத் தீர்த்துக்கொள்வதற்கான நிர்வாக எந்திரத்தை, விவசாயிகள் பயன்படுத்திக்கொள்வதற்கு மிகவும் பலவீனமான விதத்தில் அமைத்திருக்கின்றன. ஏதேனும் தாவா ஏற்பட்டால் விவசாயிகள் இப்போதுள்ளதுபோன்று சிவில் நீதிமன்றங்களுக்குச் சென்று நியாயம் கோர முடியாது. மாறாக, அதிகாரவர்க்கத்தினரிடம்தான் சென்று முறையிட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கோ அல்லது கிராம சபைகளுக்கோ இதில் எவ்விதப் பங்கும் கிடையாது. விவசாய சங்கங்களும் இதில் தலையிட முடியாது.

இந்த அம்சம் தொடர்பாக இப்போது அரசாங்கம் என்ன கூறுகிறதென்றால், தாவாக்களை விசாரிக்க முன்பிருந்ததைப்போன்று சிவில் நீதிமன்றங்களுக்குச் செல்லலாம் என்று இச்சட்டங்களில் இணைத்துக்கொள்ள முடியும் என்கிறது. எனினும்கூட, விவசாயிகளுக்கு ஆதரவு அளித்திட, உத்தரவாதமளிப்பவராக இருந்திட, அரசாங்கம் தயாராயில்லை. பஞ்சாப் மாநிலத்தில் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகள் அனுபவம் மிகவும் பயங்கரமானவை. அவர்கள் பல்வேறுவிதங்களில் சுரண்டப்பட்டார்கள். இமாசலப்பிரதேசத்தில் ஆப்பிள் பயிரிடும் விவசாயி ஒருவர், அதானியுடன்செய்துகொண்ட ஒப்பந்தம் மீறப்பட்டால், அதனை எதிர்த்து விவசாயி, அதானிக்கு எதிராக நீதிமன்றம் சென்று வாதாடி, தன் எஞ்சியுள்ள வாழ்நாள் வாலத்தில் வெற்றிபெற்றுவிட முடியுமா? அரசாங்கத்தரப்பில் இப்போது கூறப்படும் திருத்தங்கள் எதுவும் எந்தவொரு விவசாயிக்கும் உத்தரவாதமும் பாதுகாப்பும் அளித்திடவில்லை. பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் உத்தரவாதம் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை என்பவைகளின்மூலமாகத்தான் அளிக்கப்பட முடியும்.

(3)இப்போது திருத்தப்பட்டிருக்கிற, இன்றியமையாப் பண்டங்கள் (திருத்தச்)சட்டம், அடிப்படையில், உணவுப் பொருள்களை இருப்பு வைத்துக்கொள்வதில் இருந்த கட்டுப்பாடுகளை எல்லாம் நீக்கிவிட்டு, உணவுப் பொருள்களைப் பதுக்குவதை அடிப்படையில் சட்டபூர்வமாக்கி இருக்கிறது. பெரும் வர்த்தகர்களும், நிறுவனங்களும் திருத்தப்பட்ட சட்டத்திற்கு உட்பட்டே, எவ்வளவு வேண்டுமானாலும் உணவுப் பொருள்களை பதுக்கி வைத்துக்கொள்ளலாம். அவற்றின்மூலம் செயற்கையாகப் பற்றாக்குறையை உருவாக்கி, விலைகளை உயர்த்திடலாம். உணவுப் பொருள்களின் நுகர்வு விலைகளில் ஏற்ற இறக்கத்தை உருவாக்கிடலாம். உணவுப் பொருள்களில் இத்தகைய ஏற்ற இறக்கங்கள் அனைத்துத்தரப்பு மக்களின் உணவுப் பாதுகாப்புக்கும் ஊறு விளைவித்திடும். அதானி நிறுவனங்கள், பாஜக அரசாங்கத்தின் உதவியுடன், நிலங்களைப் பெற்றும், வங்கிகளின் சலுகை வட்டியில் கடன்களை வாங்கிக்குவித்தும், குளிர்பதன கிடங்குகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை அதிக அளவில் அமைத்தது என்பது, தற்செயலான ஒன்றல்ல. இதில் மிகவும் சமீபத்திய ஒன்று, அதானி குழுமம், ஹர்யானா மாநிலத்தில் கால்நடைத் தீவனங்களை பாதுகாத்து வைப்பதற்கான கிடங்குகளைக் கட்டுவதற்காகவும், பானிபட் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து மிகவும் குறைந்த விலைகளில் 150 ஏக்கர் நிலங்களை வாங்கியிருப்பதுமாகும். இந்த சட்டத்திற்கு இது தொடர்பாக விவசாயிகள் முன்வைத்துள்ள எதிர்ப்பு குறித்து அரசாங்கம் எவ்விதப் பரிந்துரையையும் ஏற்படுத்திடவில்லை.வேளாண் சட்டங்கள் குறித்து அரசாங்கம் அவிழ்த்துவிடும் சரடுகளும் உண்மை நிலையும்:

சரடு 1: குறைந்தபட்ச ஆதார விலையில் உணவு தான்யங்களைக் கொள்முதல் செய்வது பாதிக்கப்பட மாட்டாது. அரசாங்கம் எழுத்துபூர்வமாக உறுதிமொழி அளித்திடத் தயாராக இருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக அரசாங்கம் எம்.எஸ். சாமினாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தி இருக்கிறது.

உண்மை நிலை: இந்த அரசாங்கம் ஜிஎஸ்டி பங்குகள் தொடர்பாக சட்டரீதியாக எழுதிக்கொடுத்த உத்தரவாதத்தின் நிலையே அப்பட்டமாக மீறப்பட்டுள்ளபோது, இப்போது இதுதொடர்பாக எழுதிக்கொடுத்திடும் உறுதிமொழிக்கு என்ன மரியாதை இருந்திடும்? குறைந்தபட்ச ஆதார விலை குறித்து அரசாங்கத்திற்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் பின் ஏன் அதனை சட்டத்தில் இணைப்பதற்கு அது முன்வரவில்லை? அதனைத் தடுத்தது எது?

அடுத்து, இந்த அரசாங்கம் வேளாண் உற்பத்திச் செலவினத்துடன் கூடுதலாக 50 சதவீதம் நிர்ணயித்து, எம்.எஸ். சாமினாதன் ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்திவிட்டோம் என்று சொல்வதும் வடிகட்டிய பொய்யாகும்.

உற்பத்திச் செலவினம் என்பதில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. A2 + FL செலவினம் என்பது, Actual cost + குடும்ப உறுப்பினர் உழைப்புக்கான செலவினம் என்பதாகும். அதாவது விதைகள் மற்றும் உரங்கள் போன்றவற்றை வாங்கிய செலவினமும், குடும்ப உழைப்பினருக்கான ஊதியம் என்பதாகும். எம்.எஸ். சாமினாதன் ஆணையம் சொன்னது இதுவல்ல. அவர்கள் கூறியது C2 செலவினம் என்பதாகும். இதன் பொருள், உற்பத்தியின் மொத்த செலவினம். மொத்த செலவினத்தில் மேற்கண்டவாறு விதைகள், உரங்கள் வாங்கிய செலவினம் மட்டுமல்ல, குடும்ப உறுப்பினர்களின் உழைப்புக்கான ஊதியம் மட்டுமல்ல, அந்த நிலத்தின் மூலதன சொத்துக்களின் மதிப்பின் மீதான வட்டி மற்றும் வாடகை மதிப்பு ஆகியவையும் அடங்கும். இவற்றையெல்லாம் கணக்கிட்டு, இத்துடன் 50 சதவீதம் சேர்த்து, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்திட வேண்டும் என்பதே எம்.எஸ். சாமினாதன் ஆணையத்தின் அறிக்கையாகும். எனினும், மோடி அரசாங்கம் குறைந்தபட்ச ஆதார விலையை A2 + FL என்கிற விதத்தில் உற்பத்திச் செலவினத்தைக் கணக்கிட்டு அதைவிட 50 சதவீதம் கூடுதலாக நிர்ணயித்திருக்கிறது. இதற்குப் பதிலாக எம்.எஸ். சாமினாதன் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் C2 உற்பத்திச் செலவினத்துடன் 50 சதவீதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்தால், ஒவ்வொரு குவிண்டாலுக்கும் தற்போதிருப்பதைவிடக் கூடுதலாக 400 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரைக்கும் கிடைத்திடும். இவ்வாறு விவசாயிகள் தற்போது தாங்கள் உற்பத்தி செய்திடும் தான்யத்தின் விற்பனையில் ஒவ்வொரு குவிண்டாலுக்கும் சராசரியாக இழப்பினை அடைந்துகொண்டிருக்கிறார்கள்.

சரடு 2: புதிய வேளாண் சட்டங்கள், தற்போது செயல்பட்டுவரும் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்கள் என்னும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முறையைப் பலவீனப்படுத்தவில்லை என்றும், விவசாயிகளுக்கு மாற்று வாய்ப்புகளை மட்டுமே அளித்திடும் என்றும், விவசாயிகள் இதிலிருந்து மாற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், அவர்கள் இப்போதும் தாங்கள் உற்பத்தி செய்த வேளாண் பொருள்களை குறைந்தபட்ச ஆதார விலைக்கு அரசாங்கத்தின் ஏஜன்சிகளிடம் விற்க முடியும்.

உண்மை நிலை: புதிய வேளாண் சட்டங்களின் ஒட்டுமொத்த நோக்கமே வேளாண் சந்தையை தனியார்வசம் ஒப்படைப்பது என்பதேயாகும். வரிச் சலுகைகள் அளிப்பதன் மூலமாக, தற்போதுள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களிலிருந்தும், சந்தைகளிலிருந்தும் (mandis) வர்த்தகம் இடம் பெயருமானால், பின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையும், சந்தைகளையும் சரியானமுறையில் பேணுவதும், நிர்வகிப்பதும், அதன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் நின்றுவிடும். நவீன தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்தில், நாட்டில் மிகப்பெரிய அளவில் லாபம் ஈட்டிவந்த பல பொதுத்துறை நிறுவனங்கள் எப்படியெல்லாம் தற்போது செயல்படுவதற்கே, போதிய நிதியில்லாமல் சிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதையும், தங்கள் சொந்த நிதி, கரைந்து, நலிவடைந்தவைகளாக மாறி இருக்கின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். இதுதான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கும் நடக்கும். கூடுதலாக, விவசாயிகளுக்கு உத்தரவாதமான விலை கிடைக்காத நிலையில், “மாற்று வாய்ப்புகள்” என்பவை கார்ப்பரேட்டுகளின் கருணையின்கீழ் அமைந்திடும். இப்போதும்கூட, பல மாநிலங்களில் முறைப்படுத்தப்பட்ட சந்தைகள் என்கிற ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மிகவும் குறைவு. விவசாயிகளின் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தங்கள் உற்பத்திப் பொருள்களை குறைந்தபட்ச ஆதார விலையை விடக் குறைவான விலைக்கே விற்பதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். 23 விவசாயப் பண்டங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளபோதிலும்கூட, அரிசியையும் கோதுமையையும் மட்டுமே அரசாங்கம் கொள்முதல் செய்கிறது. அதுவும்கூட ஒரு சில மாநிலங்களில்தான். எனவே பெரும்பாலான மற்ற விவசாயிகள் தங்கள் வேளாண் உற்பத்திப் பொருள்களை மிகக் குறைந்த விலைக்கு விற்கத் தள்ளப்படுகிறார்கள்.

சரடு 3: விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்.

உண்மை நிலை: இது மிகவும் அபத்தமான கூற்றாகும். விவசாயிகள், குறைந்தபட்ச ஆதார விலையைவிட “அதிகமான” விலை பெறுவதை உத்தரவாதப்படுத்துவதற்கு, புதிய சட்டங்களில் எவ்விதமான ஷரத்தும் கிடையாது. வேளாண்மை ஒப்பந்தப் பண்ணைச் சட்டம், விலையை நிர்ணயிப்பதில் அரசாங்கத்திற்கு எந்தப் பங்கினையும் ஆற்றாது என்று தெளிவாகவே கூறுகிறது. வேளாண் பொருள்களின் பெரும் நிறுவனங்கள் ஏகபோகம் அதிகரித்திடும்போது, வறியநிலைக்குத் தள்ளப்படும் விவசாயிகள் அவர்கள் கேட்கும் விலைக்குத் தங்கள் உற்பத்திப் பொருள்களை அளித்திட கட்டாயப்படுத்தப்படுவார்கள்.

சரடு 4: புதிய சட்டங்கள், விவசாயிகளை தங்களுடைய நிலங்களிலிருந்து அந்நியப்படுதலுக்கு எதிராகப் பாதுகாத்திடும்.

உண்மை நிலை: ஒப்பந்த பண்ணை சட்டத்தில் சில பிரிவுகள், வேளாண் கம்பெனிகள் விவசாயிகளிடமிருந்து நிலங்களை வாங்குவதற்கோ, குத்தகைக்கு பெறுவதற்கோ தடை விதித்திருக்கிறது. எனினும் இவை பற்களற்ற, பெயரளவிலானவைகளேயாகும். இவற்றால் நிலங்களிலிருந்து விவசாயிகள் அந்நியப்படுவதற்கான அச்சுறுத்தலுக்கு எதிராக பாதுகாத்திட முடியாது. விவசாயிகளின் பொருளாதார வறிய நிலையே, அவர்களை நிலங்களிலிருந்து அந்நியமயமாக்குவதற்கு மிகவும் முக்கிய காரணமாகும். விவசாயிகள், வேளாண் கம்பெனிகளால் ஏமாற்றப்பட்டால், விவசாயிகளுக்குத் தங்கள் நிலங்களை விற்பதைத் தவிர வேறு வழியே கிடையாது. ஏனெனில் நிலம்தான் விவசாயியின் மிக முக்கியமான சொத்து ஆகும். விவசாயிகள் நிலத்தை இழப்பதற்கு எதிராகப் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேளாண்மையில் குறைந்தபட்ச அளவுக்காவது ஆதாயம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். இதற்கு அவர்கள் தங்களுடைய வேளாண் உற்பத்திப் பொருள்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய நிலையைப் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். ஆனால் ஒப்பந்த பண்ணை சட்டத்தில் இது தொடர்பாக எவ்விதமான ஷரத்தும் கிடையாது.

சரடு 5: வேளாண் சந்தையை தனியாருக்குத் திறந்துவிடுவது, வேளாண்மைக்கு முதலீட்டைக் கொண்டுவரும். தனியார், விவசாயிகளுக்குப் புதிய விதைகளையும், புதிய தொழில்நுட்பத்தையும் கொண்டுவருவார்கள்.

உண்மை நிலை: அரசாங்கம்தான் பல்வகை விதைகளையும், தொழில்நுட்பத்தையும் விவசாயிகளுக்கு அளித்திட வேண்டும். இதனை அளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுதான் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) மற்றும் வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. ஆனாலும், அவை போதிய அளவிற்கு நிதியளிக்கப்படாமல் முடக்கப்பட்டு வருகின்றன. உண்மையில், மோடி அரசாங்கத்தால் வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் அதன் விரிவாக்க சேவைகள் முழுமையாகத் தரம் தாழ்த்தப்பட்டிருக்கின்றன. தனியார் நிறுவனங்களின் நோக்கம் என்பது கொள்ளை லாபம் ஈட்டுவதேயாகும். எனவே இவை விதைகள், உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் இதர வேளாண் இடுபொருட்களை அதீத விலைக்கே விற்பனை செய்கின்றன. இதுவே விவசாய நெருக்கடிக்குப் பிரதான காரணமாகும். உண்மையில், அரசாங்கம் இரண்டாவது சீர்திருத்தம் என்ற பெயரில் விதைச் சட்டமுன்வடிவு ஒன்றைக் கொண்டுவரப்போவதாக விவசாயிகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.முடிவுரை

1991க்குப் பின்னர், நாட்டில் நடைபெற்ற சீர்திருத்த நடைமுறைகளில் இந்திய விவசாயத்தில் தனியார் கார்ப்பரேட் தலையீடு அதிகரித்துக் கொண்டிருந்தன. தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்திய ஆரம்பக் கட்டங்களில், பன்னாட்டுக் கம்பெனிகள், விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற வேளாண் இடுபொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தங்கள் கட்டுப்பாட்டை விரிவாக்கிக் கொண்டன. இப்போதைய பண்ணை சட்டம் வேளாண் சந்தையில் கார்ப்பரேட்டுகளின் பிடியை மேலும் விரிவாக்குவதையே நோக்கமாகக் கொண்டவைகளாகும். மூன்று வேளாண் சட்டங்களும் சந்தைகளை (மண்டிகளை) பலவீனப்படுத்திடும், இந்திய உணவுக் கழகத்தை மூடிவிடும், கொள்முதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும். இவை அனைத்தும் இனிவருங்காலங்களில் வேளாண் உற்பத்திப் பொருள்களைப் பொறுத்தவரையில் பன்னாட்டுக் கம்பெனிகள் கையாள்வதற்கே இட்டுச்செல்லும். இவ்வாறாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் படிப்படியாக நாட்டின் விவசாயத்தின்மீது தங்கள் முழு ஆதிக்கத்தையும் செலுத்திடும்.

அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட புதிய வேளாண் சட்டங்கள் அடிப்படையில் பிழையுடையவைகள் என்பது தெளிவாகும். இந்தச் சட்டங்களை இயற்றியதன் மூலம், மத்திய அரசாங்கம் மாநிலங்கள், விவசாயம் தொடர்பான சட்டங்களை நிறைவேற்றுவதற்கு இருந்துவந்த அதிகாரங்களைப் பறித்துள்ளது. புதிய சட்டங்கள் இந்திய வேளாண்மையில் கார்ப்பரேட்டுகள் எளிதாக ஊடுருவதற்கு வழிசெய்து தரவேண்டுமென்ற நோக்கத்துடனேயே கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இவற்றில் காணப்படும் எண்ணற்ற சட்டப்பிரிவுகள் விவசாயிகளின் நலன்களுக்கும், மக்களின் நலன்களுக்கும் எதிரானவைகளாகும். இவற்றில் சிற்சில திருத்தங்களைச் செய்துகொள்வது என்பதன் மூலம் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களை விவசாயிகளின் நலன்களுக்கு சேவை செய்திடும் விதத்தில் நிச்சயமாக மாற்றியமைத்திட முடியாது. எனவேதான், இந்தச் சட்டங்களை ரத்து செய்வது ஒன்றே சரியானதாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாகக் கூறுகிறது. அதன் காரணமாகத்தான் வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்திட வேண்டும் என்று விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கிறது.

(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கிளர்ச்சிப் பிரச்சாரக்குழுவால் தயார் செய்யப்பட்டது.)

(தமிழில்: ச. வீரமணி)