கட்டுரை: மலக்குழி மரணங்கள் (Manual Scavengers Deaths Article) - கு. மணி | கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவல நிலை | www.bookday.in

மலக்குழி மரணங்கள் – கு. மணி 

மலக்குழி மரணங்கள்

– கு. மணி 

பெற்ற குழந்தையின் மலத்தை
கையால் தொட மறுக்கும் தாய்
பாட்டில் சாராயத்தை குடித்துவிட்டு
மலக்குழிக்குள் மூழ்கிஎழும்
மனிதகுலம் காக்கும் மகான்கள்
மனிதமலமள்ளும் துப்புரவுத் தொழிலாளர்கள்.

தன் குழந்தையின் மலத்தை கழுவத் தாயே தயங்கும் நிலையில் மனித மலத்தை மனிதன் அள்ளும் அவல நிலை இன்றும் நாட்டில் உள்ளது. இது சமூகத்தின் பெரும் அவலமாகக் கருதப்படவில்லை. மாறாக இதனை இந்த சாதியினர் தான் செய்ய வேண்டும் என்ற கீழ்த்தரமான நடைமுறை நம் நாட்டில் காணப்படுவது வேதனைக்குரிய விசயம். இச்செயலில் அருந்ததியர், வால்மிகு, மாதிகா, மகர் போன்ற சமூகத்தினர் தான் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்தியாவில் 7,50,000 பேர் இப்படி கையால் மலம் அள்ளும் பணியினைச் செய்து வருகின்றனர் என்று அரசே ஒப்புக்கொள்கிறது. ஆனால் அரசு சாரா நிறுவனங்கள் எடுத்த கணக்கின்படி 13,00,000 லட்சம் பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசுக்கு மலக்குழி மரணங்களைத் தடுத்து நிறுத்தும் எண்ணம் துளியும் இல்லை என சஃபை கர்மச்சாரி அந்தோவன் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், சமூக செயற்பாட்டாளருமான பெஸ் வாடா வில்சன் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

” நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால்”
என்பான் பாரதி

எந்தவொரு கிராமத்திலும் இன்று அலைபேசிப் பயன்பாடு இல்லாமல் இல்லை. உலகம் உள்ளங்கையில் என்று மார்தட்டிக்கொண்டு இருக்கின்றோம். ஆனாலும் இன்னும் அடிப்படையான அத்தியாவசிய தேவைகள் இங்கு நிறைவேற்றியிருக்கின்றனவா என்று பார்த்தால் அறவே இல்லை. சிந்து சமவெளி ஹரப்பா மொகஞ்சதாரோ ஏன் கீழடி நாகரிகங்களில் கூட முறையான அதிநவீனமான கழிப்பறைகள், குளியலறைகள் புழக்கத்தில் இருந்ததாக நாம் அறிகின்றோம். மேலும் ஊருக்கு வெளியே கழிவுகள் சுகாதாரமான முறையில் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று நாகரீகத்தில் மேம்பட்டதாக பெருமை கொள்ளும் இந்த நவீனயுகத்தில் மலம் அள்ள ஓர் இயந்திரத்தை கண்டறியாமல் மனிதர்களை அதுவும் ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே அந்த வேலைக்கு நியமிக்கும் வகையில் மூளையற்றுப் போய் நாம் குறுகி கிடக்கின்றோம். சந்திரனையும், செவ்வாய் கிரகத்தையும் ஆராய ராக்கெட் அனுப்பும் நாம் மலம் அள்ளும் கருவி ஒன்றை கண்டுபிடிக்க லாயகற்றவா்களாகப் பவனி வருகிறோம்.

அன்று மலர்கள் உரம் ஆகின

ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை கழிவறைக்கான தேவைகள் குறைவாகத்தான் இருந்தது. இந்தியா ஒரு வெப்ப மண்டல நாடு என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் வயல்வெளிகள் கழிவுகளை வெளியேற்ற உதவின. வெப்பம் காரணமாக அவை வெகு சீக்கிரத்தில் மண்ணோடு மக்கி உரமாக பயன்பட்டன. மக்கள் பெரும்பாலும் இயற்கை உணவை உண்டதால் அன்றைய கழிவுகள் உரமாகின.

ஆனால் இன்று நாம் பயன்படுத்தும் மசாலா சார்ந்த உணவுப் பொருட்கள் கழிவுகளாக வெளிவந்து நோய்க் கிருமிகளாக உருமாறி புதுவிதமான நோய்களுக்கு வழி வகுக்கின்றன.

மலக்குழி மரணங்கள்

கடந்த 5 ஆண்டுகளில் மலக்குழி மரணங்கள் 339 ஆக பதிவாகி உள்ளதாகவும் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகளவில் மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தூய்மை பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை வெளியிடுமாறு மக்களவை உறுப்பினர்களின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கடந்த 5 ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தில் 46 பேர் அரியானாவில் 44 பேர் டெல்லியில் 35 பேர் குஜராத்தில் 28 பேர் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 54 பேரும் தமிழ்நாட்டில் 51 தொழிலாளர்களும் மலக்குழியில் சிக்கி உயிரிழந்ததாக அதாவது மலக்குழி மரணங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.

ஆண்டு வாரியாக 2018 ஆம் ஆண்டு 67 வழக்குகள் 2019ல் 117, 2020ல் 22 வழக்குகள் 2021 ஆம் ஆண்டு 58 பேர் 2022 ஆம் ஆண்டு 66 வழக்குகள் 2023 இல் 9 பேர் என இதுவரை மலக்குழி வழக்குகள் பதிவாகி உள்ளது.

தூய்மை இந்தியா திட்டம்

இந்த திட்டம் காந்தி பெயரிலான ஒரு விளம்பரத் திட்டம் புள்ளி விவரங்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்த ஒதுக்கிய நிதி எவ்வளவு விளம்பரத்திற்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பதைப் பார்த்தாலே இது ஒரு ஏமாற்றத் திட்டம் என்பதை புரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் தங்களை தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் அடிப்படைகள் எந்த மாற்றமும் நிகழவில்லை என்கிறார் அ.சகாய பிலோமின்ராகஜின்

குறிப்பிட்ட ஜாதியினர் தான் சுத்தம் செய்ய வேண்டுமா?

மகாத்மா காந்தியடிகளே தன் கழிப்பறையைத் தானே சுத்தம் செய்வதாக குறிப்பிட்டிருப்பார். இந்தியாவில் துப்புரவு பணியை குறிப்பிட்ட சாதியை சார்ந்தவர்களே பெருமளவு செய்கிறார்கள். ஆனால் மேலை நாடுகளில் துப்புரவு பணி ஒரு தொழிலாக தான் பார்க்கப்படுகிறது. அதை எல்லோரும் செய்கிறார்கள். துப்புரவு பணி நவீனமயமாக்கப்படும் பொழுது பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி தொழில்நுட்ப ரீதியில் பணியை மேற்கொள்ளும் போது தான் இந்தியாவில் நிலை மாறும்.

துப்புரவு பணியை செய்பவர்களை அரசு ஊழியராக அங்கீகரித்து அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்குரிய பலன்களை தரும் போது இந்த நிலை மாறும் அப்போது இந்த வேலையைச் செய்ய எல்லா ஜாதிகளில் இருந்தும் ஆட்கள் முன் வருவார்கள்.

இன்றைய துப்புரவு தொழிலாளர்கள் நிலை

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துகள் போன்ற பெரும்பாலான இடங்களில் துப்புரவு பணியாளர்களுக்கு கடைநிலை ஊழியர்களுக்குரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை. தினக் கூலிகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தான் பணிபுரிகிறார்கள். கிராமப் பஞ்சாயத்துகளில் 30 ஆண்டுகள் 35 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் கூட இன்றும் பகுதிநேர ஊழியர்களாக தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மிக சொற்பத்தொகையே ஊதியமாக வழங்கப்படுகிறது.

மாநகராட்சி, நகராட்சிகள், துப்புரவுப் பணியை ஒப்பந்தகாரர்களிடம் கொடுத்து விட்டார்கள். ஒப்பந்தக்காரர்கள் துப்புரவு பணிகளைச் சுரண்டி வருகிறார்கள். முப்பதாயிரம் பேர் செய்ய வேண்டிய துப்புரவுப் பணியை 7000 பேரை வைத்து வேலை வாங்குகிறார்கள். அரசு அதிகாரிகள் ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர் கூட்டு சேர்ந்து துப்புரவுப் பணி செய்யும் ஊழியர்களுக்கு துரோகம் இழைக்கின்றார்கள். இவர்கள் நிரந்தர பணியாளர்கள் இல்லாததால் மலக்குழி மரணம் விபத்து போன்றவை நிகழும் போது எந்தவித பணப் பலனும் அவர்கள் குடும்பத்திற்கு கிடைப்பது இல்லை. ஓய்வு பெறும் பொழுது மலம் அள்ளிய அந்தக் கைகள் வெறும் கையை வீசி மலவாசனையுடன் தான் வெளி வருகிறது. இதற்கு எதிராக போராடினால் அரசு அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறது தனது பொறுப்பை அரசும் தட்டிக் களிக்கின்றது.

தமிழ்நாட்டில் 1993 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 257 பேர் மலக்குழிகளை சுத்தம் செய்யும் போது இறங்கி இறந்திருக்கிறார்கள். இந்த மரணங்களை அடிப்படையாக வைத்து 2013 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் மலக்குழி மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

மலம் அள்ளும் தொழில்

இந்தியாவில் மலம் அள்ளும் தொழில் துப்புரவு பணியோடு இரண்டற கலந்தது. இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. ”மலம் அள்ளும் தொழில்” என்பதை சட்டம் வரையறுத்துள்ளது. மனித மலம் மற்றும் சுகாதாரமற்ற கழிவறைகள், துர்நாற்றம் வீசக்கூடிய உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் கழிவுகளைத் துப்புரவு செய்வது மலம் அள்ளும் தொழில் என்று அந்த வரையறை உள்ளது. இந்தப் பணியில் வெறும் பாரம்பரியக் கருவிகளைக் கொண்டு ஈடுபடுத்துவோரை “மலம் அள்ளும் தொழிலாளி“ என்றும் சட்டம் வரையறுக்கிறது. இந்த வரையறைப்படி துப்புரவு பணியாளர்களில் இந்தியாவில் பணியாற்றும் பெரும்பாலோர் மலம் அள்ளும் தொழிலாளர்களே.

தேவை தீர்க்கமான நடவடிக்கை

2013 ஆம் ஆண்டு சட்டத்தின்படி அவர்கள் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வீடு கட்டிக்கொள்ள நிதி குழந்தைகளுக்கு கல்வி கடன் மாற்றுத்தொழில் செய்வதற்கு உடனடியாக வங்கி கடன் திறன் வளர்ச்சிப் பயிற்சி என பல்வேறு மறுவாழ்வு திட்டங்களைப் பெற தகுதி வாய்ந்தவர்கள் என அறிவுறுத்துகின்றது. இதை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

2021 அக்டோபர் 1ஆம் தேதி தூய்மை இந்தியா திட்டம் இது 2.0 என்ற திட்டத்தைப் பாரதப்பிரதமர் மோடி துவக்கி வைத்தார். குப்பை இல்லா இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை இல்லை என்ற கொள்கை விளக்கமும் திட்டமும் அவர்களிடமோ மத்திய அரசிடமும் இல்லை.

”மலக்குழிகள் முற்றிலும் மனிதர்கள் இறங்குவதைத் தடை செய்ய வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். 2013 ஆம் ஆண்டு சட்டத்தில் உள்ளதை ஒப்பந்த நிறுவனங்கள் மீறாமல் அரசு பாதுகாப்பு தர வேண்டும். இந்நிறுவனங்கள் அரசியல் பின்னணியுடன் இருப்பதால் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால் தான் விசவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் இறப்பது தொடர் கதையாக உள்ளது. இப்பணிகளை ஒப்பந்த முறையில் விடுவதைத் தடுத்து நிறுத்தி அவர்களை அரசு அரசுப் பணியாளர்களாக அறிவித்து அவர்களுக்கு அனைத்துச் சலுகைகளும் அரசு வழங்க வேண்டும்.

முடிவு

சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்.
சுத்தம் என்பதை மறந்தால்
நாடும் குப்பை மேடுதான்
. — வைரமுத்து —

இங்கே சட்டங்கள் இருக்கின்றன. அறிக்கைகள் விடப்படுகின்றன. விஞ்ஞானம் வளர்ந்தோங்குகிறது. ஆபரேஷன் செந்தூர் வெற்றிகரமாக நடத்திவிட்டோம் என்று மார்தட்டிக்க்கொள்கிறோம். ஆனால் மலக்குழிகள் மரணக்குழிகளாகவே இருக்கின்றன. இனிமேலும் மலக்குழி மரணங்கள் நிகழா வண்ணம் காக்க வேண்டியது அரசின் முக்கிய கடமையாகும். மலக்குழி மரணங்கள் குறித்து கவிதை எழுதியவரை கைது செய்வதைக் கண்டித்தும் தங்கள உரிமைக்காக போராடும் துப்புரவுப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நாமும் ஆதரவு தந்து வீதியில் இறங்கி போராடினால் தான் வீதியும் சுத்தமாகும். நாடும் சுத்தமாகும் மலக்குழிகள் மரணக் குழிகளாக மாறாதிருக்கும்.

எழுதியவர் : 

✍🏻 கு. மணி 

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *