https://youtu.be/chug7egGteU

கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு, பிஎம் கேர்ஸ் நிதியை உருவாக்குவதாக பிரதமர் மோடி மார்ச் 28 அன்று அறிவித்தார். அனைத்துப் பகுதியினரிடமிருந்தும் நன்கொடைகள் கொட்டப்பட்டன. ஆனாலும் பிஎம் கேர்ஸ் நிதிக்கு இதுவரையிலும் எவ்வளவு பணம் கிடைத்திருக்கிறது என்று இந்த நாட்டின் குடிமக்கள் என்ற வகையில், நமக்குத் தெரியுமா என்றால், அந்தக் கேள்விக்கான பதில் இல்லை என்பதாகவே இருக்கிறது. எனவே நாம் பிஎம் கேர்ஸ் நிதி ஏன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரக்கூடாது என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. பிஎம் கேர்ஸ் என்பது  ’உதவி செய்யும் அறக்கட்டளை’; அது ’அரசு நிறுவனம் இல்லை’ என்ற காரணங்களைக் கூறி தகவல் அறியும் கேள்விகள் பலவற்றிற்கு பதில் அளிக்க மறுக்கப்பட்டுள்ளது. 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசு நிறுவனம் என்பதற்கான வரையறை என்னவென்பதை முதலில் பார்க்கலாம். ’அரசாங்கத்தால் வெளியிடப்படுகின்ற  பொருத்தமான அறிவிப்பு அல்லது உத்தரவின் மூலமாக நிறுவப்படும் அல்லது அமைக்கப்படும் எந்தவொரு அதிகார அமைப்பு அல்லது தன்னாட்சியுடன் இயங்குகின்ற நிறுவனம்’ அரசு நிறுவனமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வரையறையைப் பொறுத்தவரை, பிஎம் கேர்ஸ் என்பது அரசு நிறுவனம் என்பதை உறுதி செய்வதற்கான குறைந்தபட்சம் ஐந்து காரணங்களை, வெளிப்படைத்தன்மைக்கான ஆர்வலரும், ஓய்வுபெற்ற கப்பல் படை அதிகாரியுமான லோகேஷ் பாத்ராவின் உதவியுடன் தி குயிண்ட் அடையாளம் கண்டது. தகவல் அறியும் உரிமையின் கீழ் பொதுமக்களிடம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பு பிஎம் கேர்ஸுக்கு இருப்பது அந்தக் காரணங்கள் மூலமாக  அறிய வருகிறது.  

ஐந்து காரணங்கள்

காரணம்#1 – பிஎம் கேர்ஸ் நிதி அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது : கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் அறிவிப்பு

இந்த காரணத்தை நாம் எவ்வாறு வலியுறுத்திச் சொல்கிறோம்? 

முதலாவதாக, மார்ச் 28 அன்று கார்ப்பரேட் விவகார அமைச்சகம் ’பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நெருக்கடிகால சூழ்நிலைகள் நிவாரணத்திற்கான நிதியத்தை இந்திய அரசாங்கம் அமைத்துள்ளது’ என்று பிஎம் கேர்ஸ் நிதியம் அமைப்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவித்தது. அந்த நிதியம் மீது இந்திய அரசுக்கு கட்டுப்பாடு உள்ளது என்பதே இதன் பொருள் ஆகும்.

இரண்டாவதாக, பிஎம் கேர்ஸ் நிதியத்தின் அலுவலகம் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் அமைந்துள்ளது. 

மூன்றாவதாக, பிரதமரின் தேசிய நிவாரண நிதியம் அல்லது பி.எம்.என்.ஆர்.எஃப் அமைப்பின் தலைவராக பிரதமர் இருப்பதைப் போலவே, பிஎம் கேர்ஸின் தலைவராகவும் பிரதமரே உள்ளார்.

2007ஆம் ஆண்டில், அப்போதைய தலைமை தகவல் ஆணையராக இருந்த வஜாஹத் ஹபீபுல்லா பிரதமரின் தேசிய நிவாரண நிதி குறித்து, ’பிரதமரின் அலுவலகம் (பி.எம்.ஓ) பி.எம்.என்.ஆர்.எஃப் அமைப்பின் பொது அதிகார மையமாக இருப்பதால், அது  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல்களை குடிமக்களுடன் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளது’ என்ற சுவாரஸ்யமான உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.  அதே தர்க்கத்தின் அடிப்படையில், பிரதமரின் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் வருவதால், பிஎம் கேர்ஸும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கட்டாயம் வர வேண்டும். 

காரணம்#2 – பிஎம் கேர்ஸை ஊக்குவிப்பதற்காக அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன

மார்ச் 30 அன்று, உலகெங்கிலும் உள்ள இந்திய தூதரகத் தலைவர்களுடன் நடத்திய வீடியோ மாநாட்டில், வெளிநாட்டு நன்கொடைகளைத் திரட்டுவதற்காக புதிய பிஎம் கேர்ஸ் நிதியத்தை விளம்பரப்படுத்துமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார். 

பிஎம் கேர்ஸ் என்பது வெறுமனே ஒரு அறக்கட்டளைதான் என்றால், அதை விளம்பரப்படுத்துவதற்காக அரசு அதிகாரிகளும், அரசு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து வெளிப்படைத்தன்மைக்கான ஆர்வலரும், ஓய்வுபெற்ற கப்பல் படை அதிகாரியுமான லோகேஷ் பாத்ரா,  சிங்கப்பூரில் உள்ள இந்திய உயர் ஆணைய அலுவலகத்திடம் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பதில் கிடைக்கப் பெற்றிருக்கிறார். அந்தப் பதிலில், பிஎம் கேர்ஸ் தன்னை அறக்கட்டளை என்று அழைத்துக் கொள்வதால், அதிகாரப்பூர்வ வழிகளை நிதி திரட்ட ஊக்குவிக்க சிங்கப்பூர் அரசாங்கம் மறுத்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இன்னொரு பக்கத்தில், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் பத்ராவிற்கு அளித்த தகவல் அறியும் கேள்விக்கான பதிலில், தூதரகத்தின் இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் பிஎம் கேர்ஸுக்கான  விளம்பரம் வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த தொண்டு அறக்கட்டளைக்காவது இவ்வாறு இந்திய தூதரகத்தின் இணையதளத்தில் விளம்பரம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? உண்மையில் அதற்கான சாத்தியமே இல்லை.

காரணம்#3 – பிஎம் கேர்ஸின் டொமைன் பெயரில் gov.in என்ற பயன்பாடு இருக்கிறது

pmcares.gov.in என்பது பிஎம் கேர்ஸ் நிதியத்தின் இணையதள முகவரியாகும். gov.in என்ற டொமைன் பெயரைப் பயன்படுத்துவதற்கான அரசாங்க வழிகாட்டுதல்கள், ஆறு வகையான அலுவலகங்கள் அல்லது பொது அதிகார அமைப்புகளுக்கு gov.in என்ற டொமைன் ஒதுக்கப்படலாம் என்று கூறுகின்றன. 

  • குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் அலுவலகம் போன்ற உச்சநிலை அலுவலகங்கள்
  • அரசு அமைச்சகங்கள் அல்லது துறைகள்
  • மாநில மற்றும் யூனியன் பிரதேச அலுவலகங்கள்
  • இந்தியப் பாராளுமன்றம்
  • நீதித்துறை அமைப்புகள்
  • மற்ற அனைத்து சட்டரீதியான அமைப்புகளும். அரசாங்க நிறுவனங்களும்.

இந்த வகைகளில் எதிலுமே வராத பிஎம் கேர்ஸுக்கு, gov.in என்ற டொமைன் பெயரைப் பெற எவ்வாறு முடிந்தது?

காரணம்#4- பிஎம் கேர்ஸுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு நிவாரணம்

பிஎம் கேர்ஸ் அறிவிக்கப்பட்ட 2 நாட்களுக்குப் பிறகு, மார்ச் 31 அன்று, வருமான வரிச் சட்டத்தின் விதிகளைத் திருத்தி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன் விளைவாக, பிஎம் கேர்ஸ் நிதிக்கு வழங்கப்படுகின்ற நன்கொடை 100% வரி விலக்குக்கு தகுதியுடையதாக இருக்கும் என்றானது. இந்த நடவடிக்கை பிஎம் கேர்ஸை ஊக்குவிப்பதற்கு அரசாங்க இயந்திரங்களைத் தெளிவாகப் பயன்படுத்துவதாகவே  இருக்கிறது. 

காரணம்#5 – பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதிகளுக்கு பிஎம் கேர்ஸ் தகுதியுடையதாகிறது

பிஎம் கேர்ஸ் தொடங்கப்பட்ட அடுத்த நாளில், ‘பிஎம் கேர்ஸ் நிதிக்கு ஒரு நிறுவனம் அளிக்கின்ற எந்தவொரு பங்களிப்பும் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு அதாவது சிஎஸ்ஆர் ஆகத் தகுதி பெறும்’ என்று கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்பிறகு, பல பொதுத்துறை நிறுவனங்கள் பிஎம் கேர்ஸுக்கு பெருமளவிலான தொகையை நன்கொடையாக வழங்கின. 

எடுத்துக்காட்டாக, பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ரூ.200 கோடியை நன்கொடையாக வழங்கியது. நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள பல பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து ரூ.200 கோடிக்கு மேல் சமூக பொறுப்புணர்வு நிதியாக பிஎம் கேர்ஸுக்கு நன்கொடை அளித்தன.

பொதுத்துறை நிறுவனங்கள் தகவல் அறியும் உரிமையின் கீழ் வருவது நமக்குத் தெரியும். தகவல் அறியும் உரிமையின் கீழ் பொதுமக்களிடம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பு அந்த நிறுவனங்களுக்கு உள்ளது. அவ்வாறிருக்கும் போது, பிஎம் கேர்ஸுக்கு ஏன் அந்தப் பொறுப்பு இருக்கக் கூடாது? குறைந்தபட்சம் பிஎம் கேர்ஸுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் அளிக்கின்ற நன்கொடைக்கு மட்டுமாவது?

’பிஎம் கேர்ஸ் தகவல் அறியும் உரிமையின் கீழ் வந்தாலும் அல்லது வராவிட்டாலும், பொதுத்துறை நிறுவனங்களால் பிஎம் கேர்ஸுக்கு வழங்கப்படும் எந்தவொரு பங்களிப்பும் தகவல் அறியும் உரிமையின் கீழ் நிச்சயம் வரும்’ என்று முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபீபுல்லா தி குயின்ட்டிடம் கூறினார்.  

பல அமைச்சகங்களும், அரசு துறைகளும் பிஎம் கேர்ஸுக்கு தங்களுடைய பங்கை அளித்துள்ளன. சுமார் 500 கோடி என்ற அளவில், தன்னுடைய அனைத்து ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது. ஸ்டீல் பொதுத்துறை நிறுவனங்களும் ரூ.500 கோடி பங்கை அளித்துள்ளன. இவையனைத்தும்  பொதுப் பணம் ஆகும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பி.எம் கேர்ஸ் பதிலளிக்கத் தேவையில்லை என்று கூறுவதால், வெளிப்படைத்தன்மை எதுவும் இல்லாமல் ஆகியுள்ளது. பொதுப் பணம் எவ்வளவு நன்கொடையாக வழங்கப்பட்டது, அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது என்று யாருக்கும் தெரியாமல் போய் விடும். இது நியாயம் தானா என்ற கேள்விக்கு, இல்லை என்றே மிகவும் தெளிவாகப் பதில் கூற முடியும்! பிஎம் கேர்ஸ் நிதி ஏன் இவ்வாறு ரகசியமாக மறைக்கப்படுகிறது என்ற அடுத்த கேள்விக்கு யாராலாவது பதிலளிக்க முடியுமா? 

 

https://www.thequint.com/news/india/5-reasons-why-pm-cares-fund-should-come-under-rti

நன்றி: தி குயிண்ட் இதழ்

தமிழில்: தா.சந்திரகுரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *