அந்தப் பேரழிப்பை எதற்காக நினைவுகூர வேண்டும்?

அந்தப் பேரழிப்பை எதற்காக நினைவுகூர வேண்டும்?

அந்தப் பேரழிப்பை எதற்காக நினைவுகூர வேண்டும்?

– அ. குமரேசன்

இன்று (ஜனவரி 27) உலக பேரழிப்பு நினைவுகூரல் நாளாக (International Day of Commemoration in memory of the victims of the Holocaust), ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போருக்குக் காரணமாக அமைந்த, இனவெறிச் சர்வாதிகாரி ஹிட்லர் ஆணைப்படி அன்றைய ஜெர்மனியில் லட்சக்கணக்கான யூதர்களும் பிற இனத்தவர்களும் பொது இடங்களில் சுடப்பட்டும், கட்டட முகாம்களுக்குள் நச்சு வாயு செலுத்தியும் கொல்லப்பட்ட நிகழ்வை மறந்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் விளைவாகத்தான் ஐக்கிய நாடுகள் சபையே கூட உருவானது. அந்த வரலாற்றுக்குள் சுருக்கமான பயணமாகச் சென்றுவிட்டுத் திரும்புவோம்.

அந்தப் பேரழிப்பை எதற்காக நினைவுகூர வேண்டும்? International Holocaust Remembrance Day - ஹிட்லரின் நாஜி அரசு - https://bookday.in/

1933ல், அன்றைய ஜெர்மனியில் ஜனநாயக வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அதிபராக ஆட்சிக்கு வந்தார் ஹிட்லர். அப்போதிருந்து நாஜி இனவாத ஆட்சி தொடங்கியது. ஜெர்மனியில் பல நூற்றாண்டுகளாக ஜெர்மானிய இன மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அங்கே வந்து குடியேறியவர்களாகப் பல்வேறு இன மக்கள் அவர்களிடையே இருந்தார்கள். அவர்கள் அனைவருமே ஜெர்மானிக் அல்லது ஜெர்மானியர் என்று அடையாளம் பெற்றிருந்தார்கள். அவர்களோடு யூத மக்கள், ரோமானியர்கள், இதர சில இனத்தவர்களும் சேர்ந்து வாழ்ந்தார்கள்.

அனைத்துப் பகுதி மக்களின் ஆதரவையும் பெற்று ஆட்சிக்கு வந்த ஹிட்லரும் அவரது நாஜி கட்சியினரும், ஆரியர் இனம்தான் உயரிய, ஆளும் தகுதி வாய்ந்த இனம் என்ற பரப்புரையைத் தொடங்கினார்கள். நாஜி என்றால், தேசிய சோசலிசம் என்ற ஜெர்மன் வார்த்தைகளின் சுருக்கமாகும். ஆம், உண்மையான சமத்துவத்துக்கும் சகோதரத்துவத்துக்கும் இடமில்லாத ஒரு கட்சிக்கு தேசிய சோசலிசக் கட்சி என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது! இன்னொரு வேடிக்கை என்னவென்றால். அந்த “ஆரியர்” என்ற சொல் ‘உயர்ந்த’ என்ற பொருள் தரும் “ஆர்யா” என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து உருவானது!

அந்தப் பேரழிப்பை எதற்காக நினைவுகூர வேண்டும்? International Holocaust Remembrance Day - ஹிட்லரின் நாஜி அரசு - https://bookday.in/

ஆரிய இனம்தான் உயர்ந்தது என்ற பெருமையை ஏற்றுவதோடு அந்தப் பரப்புரை விற்கவில்லை. மாறாக, யூதர்கள் உள்ளிட்ட மற்ற இனத்தவர்களின் வருகையாலும் வளர்ச்சியாலும் ஆரிய இனம் சுருங்கி வருகிறது, தனது அடையாளத்தை இழந்து வருகிறது என்றெல்லாம் கிளப்பி விடப்பட்டது (இங்கே மதத்தின் பெயரால் நடக்கிற அப்படிப்பட்ட பரப்புரைத் தந்திரங்கள் நினைவுக்கு வருகிறதா?).

இந்தப் பகைமைப் பரப்புரைக்கு ஜெர்மனிய மக்கள் பலரும் இரையானார்கள். பிற இனத்தவர்களுக்கு எதிரான வெறுப்பும் பகையும் காய்ந்த குப்பை மேட்டில் பற்றவைக்கப்பட்ட நெருப்பு போல் பரவியது. யூதர்களும் ரோமானியர்களும் உள்ளிட்ட பிற இனத்தவர்கள் மட்டுமல்லாமல், கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் உள்ளிட்ட அரசியல் எதிரிகள், மாறுபாலினத்தவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆகியோரும் பகைவர்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள். ஏன், மனவளர்ச்சி குன்றியவர்கள் கூட வெறுப்புக்கு உரியவர்களாக வர்ணிக்கப்பட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது.

இத்தகைய எதிரிகளை நாட்டை விட்டு விரட்டியடிக்க வேண்டும், கொலை செய்து அழித்தொழிக்க வேண்டும் என்ற வெறி ஒரு போதையாக அந்த மக்களின் மூளைகளில் ஏற்றப்பட்டது. அரசாங்கம் திட்டமிட்ட முறையில் ஏற்பாடு செய்த விரிவான இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கு அந்த மக்களும் உடந்தையானார்கள். யூதர் பிரச்சினைக்கான இறுதித் தீர்வுதான் அவர்களைக் கொன்றொழிக்கும் திட்டம் என்று நாஜி கட்சி அறிவித்தது. காலப்போக்கில் இதை எதிர்த்து, எல்லோரும் நம் மக்கள்தான் என்ற பரப்புரையும் மனிதநேய இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்டன.

அந்தப் பேரழிப்பை எதற்காக நினைவுகூர வேண்டும்? International Holocaust Remembrance Day - ஹிட்லரின் நாஜி அரசு - https://bookday.in/

1933 முதல் 1945 வரையிலான காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 60 லட்சம் யூதர்களும், 2 லட்சம் ரோமானியர்களும் பத்தாயிரம் மாறுபாலினத்தவர்–தற்பாலின ஈர்ப்பாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். உள்நாட்டில் இன ஆதிக்க அரசியல் போதாதென்று, பிற நாடுகள் மீதும் படையெடுத்தது ஹிட்லரின் நாஜி அரசு. 1939ல் போலந்து நாட்டில் ஊடுறுவியது. அதைத் தொடர்ந்து பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மன் மீது போர் தொடுத்தன. நேசப்படை உருவாக்கப்பட்டது. அதற்கடுத்த ஆண்டில் பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸம்பர்க் நாடுகளை நாஜிப் படைகள் ஆக்கிரமித்தன. 1941ல் பிரான்ஸ் அரசு ஜெர்மன் படைகளிடம் சரணடைந்தது. இதனிடையே இதில் நுழைந்துகொண்ட ஜப்பான் அரசு, 1941ல் அமெரிக்காவின் ஹவாயி தீவில் முத்துத் துறைமுகத்தின் மீது விமானத்திலிருந்து குண்டுபோட வைத்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் போரில் இணைந்தது.

அதே ஆண்டில் சோவியத் யூனியனும் இணைந்துகொள்ள, நேசப்படைக்கு மிகப் பெரிய வலிமை ஏற்பட்டது. 1945ல் இறுதியாக நேசப்படையினரால் நாஜிப்படை முறியடிக்கப்பட்டது. ஏப்ரல் 30 அன்று ஹிட்லர், அவரது மனைவி ஈவா பிரான் இருவரும் பெர்லினில் பதுங்கியிருந்த இடத்தில் தற்கொலை செய்துகொண்டனர். இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அதில் சோவியத் யூனியனின் அளப்பரிய பங்களிப்பு, சோவியத் படையினரின் மகத்தான வீரம், மிகப்பெரும் தியாகம் ஆகியவை அந்த வரலாற்றின் தனி அத்தியாயம்.

ஜப்பானும் சரணடைந்தது, அதற்குப் பிறகும் அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டு போட்டுப் பேரழிவை ஏற்படுத்திய ரத்தக்கறை அத்தியாயமும் உண்டு. இத்தகைய ஆதிக்க வெறிப் போர்கள், அதன் மூலவேராகிய இனவாதம் ஆகியவற்றுக்குப் பின்னால் உலகச் சந்தையை ஆக்கிரமிக்கிற லாப வேட்கையும் இருக்கிறது.

இதெல்லாம் நடந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு, 2005 நவம்பர் 1 அன்று, ஐக்கிய நாடுகள் சபை, நாஜிகளின் சித்திரவதை முகாம்களிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட்ட ஜனவரி 27ம் தேதியை ஆண்டுதோறும் உலக பேரழிப்பு நினைவுகூரல் நாளாகக் கடைப்பிடிக்க முடிவு செய்து, அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.
அந்த நாளையும், இன அழிப்பையும் நினைவுகூர்வது மெழுகுவர்த்திகள் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்துவதோடு முடிவதில்லை.

அந்தப் பேரழிப்பை எதற்காக நினைவுகூர வேண்டும்? International Holocaust Remembrance Day - ஹிட்லரின் நாஜி அரசு - https://bookday.in/
ஹோலோகாஸ்ட் நினைவகம்

அன்றைய அதே வழிமுறைகளில் இன்றும் பல நாடுகளில் நடந்துகொண்டிருக்கிற இன வெறுப்பு, மதப் பகைமை, சாதி வன்மம், “நாம்தான்” உயர்ந்தோர் எனும் போலிப் பெருமிதம், “அவர்கள்” வருகையால் நமது மக்கள்தொகை குறைகிறது என்பன போன்ற நஞ்சுப் புகட்டல்கள், ஆண்ட பரம்பரை மிதப்புகள் ஆகிய இருள் முயற்சிகளை அகற்றி, நல்லிணக்க வெளிச்சம் பரப்பும் அன்புத் தீபமேற்றுவதாகவும் பேரழிப்பு நினைவுகூரப்பட வேண்டும்.

கட்டுரையாளர் : 

அந்தப் பேரழிப்பை எதற்காக நினைவுகூர வேண்டும்? International Holocaust Remembrance Day - ஹிட்லரின் நாஜி அரசு - https://bookday.in/

குமரேசன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *