பெரியவர்கள் ஏன் சிறார் இலக்கியத்தை வாசிக்க வேண்டும்?
– உதயசங்கர்
சிறார்கள் இலக்கிய வாசிப்புக்குப் புதியவர்கள். வெற்றுக்காகிதம் போன்றவர்கள். அவர்களுக்குச் சொல்வதைக் கேட்பார்கள். அவர்களுக்குக் கிடைப்பதை வாசிப்பார்கள். அந்தப் படைப்புகளின் அழகியல், வடிவம், மொழிநடை, கருப்பொருள் சரியானது தானா? இல்லையா? என்பதைக் குறித்து அவர்களால் மதிப்பிட இயலாது. சமகாலத்தைப் பிரதிபலிக்கிற படைப்புகளா? அறிவியல் மனப்பாங்குள்ள படைப்புகளா? பகுத்தறிவுப்பூர்வமானப் படைப்புகளா? பாலினசமத்துவத்தைச் சொல்லும் படைப்புகளா? இயற்கை நேயத்தைப் பரப்பும் படைப்புகளா? அல்லது பிற்போக்கான, மூடநம்பிக்கைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லும் படைப்புகளா? பாலினப்பாகுபாட்டைச் சொல்லும் படைப்புகளா? பழங்கால மதிப்பீடுகளைச் சொல்லும் படைப்புகளா? என்று சிறார்களால் கண்டறிய முடியாது. ஆனால் இளம் மனதில் எந்தக் கருத்தும் ஆழமாய் பதிந்து விடுமென்பதால் அவர்கள் வாசிக்கும் நூல்களைக் குறித்து பெரியவர்கள் கவனமாக இருக்க வேண்டும்..
ஏனெனில் இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் படைப்புகளெல்லாம் சிறார்களுக்கானதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? பெரியவர்கள் இலக்கியத்திலேயே விமர்சன மரபு இல்லை. விமர்சனத்தை விமர்சனமாகச் செய்கிற இலக்கியவாதிகள் இல்லை. அப்படி இருக்கும்போது சிறார் இலக்கியத்தில் அப்படி ஒரு மரபு முளை விடக்கூட இல்லை. இப்போது இருப்பதெல்லாம் பாராட்டுக்குப் பாராட்டு, வேண்டியவர், வேண்டாதார் பாகுபாடு, லாபி, வெளிவருவதெல்லாம் சிறந்த படைப்புகளென்ற பூஸ்டிங், இப்படி பல அறமற்ற காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரியவர்களுக்கான இலக்கியத்தில் இப்படியான காரியங்கள் நடக்கின்றன என்றாலும் வாசிப்புப்பழக்கமுள்ள வாசகருக்குச் சிறந்த படைப்பு எது? நல்ல படைப்பு எது? சுமாரான படைப்பு எது? தேய்வழக்கான படைப்பு எது? மோசமான படைப்பு எது? சமூகவிரோத படைப்பு எது? என்று கண்டுபிடித்து விடமுடியும்.
ஆனால் இப்போது தான் வாசிப்பைத் தொடங்குகிற குழந்தைகளுக்கு எடுத்தவுடன் அப்படிச் சொல்லத்தெரியாது. அத்துடன் அவர்கள் பெரியவர்களைச் சார்ந்தே இருக்கிறார்கள். பெரியவர்களின் விருப்பப்படியே அவர்களுக்குப் புத்தகங்கள் கிடைக்கின்றன. பெரியவர்களுக்கு இலக்கியமே அறிமுகமில்லையென்னும்போது சிறார் இலக்கியம் பற்றித் தெரியவாய்ப்பிலை. அப்படியான நிலைமையில் பெரியவர்கள் தேய்வழக்கான, பஞ்ச தந்திரக்கதைகள் புராண, இதிகாசக்கதைகள் தொடங்கிய பழங்காலத்தைப் போற்றும் படைப்புகளைச் சிறார் இலக்கியம் என்று வாங்கிக் கொடுக்கும் வாய்ப்புகள் அதிகம்.
அதிலும் பெரும்பாலான குடும்பங்களில் புராண இதிகாசக்கதைகள், நன்னெறிக்கதைகள், நீதிநெறிக்கதைகள், போன்ற புத்தகங்களை வாசித்தால் மட்டுமே குழந்தைகள் ஒழுக்கமுடையவர்களாக வளர்வார்கள் என்ற மூடநம்பிக்கை இருக்கிறது. எனவே கண்ணை மூடிக்கொண்டு தலைப்பைப் பார்த்து வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். இந்த எண்ணம் முற்போக்காளர்களிடமும் இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கும் சிறார் இலக்கியம் பற்றித் தெரியவில்லை.
குழந்தைகளுக்கு உணவூட்டும் போது தாய் அந்த உணவை ருசி பார்த்து தன்னுடைய குழந்தைக்குச் சரியான உணவு தானா என்று சோதித்துக் கொடுப்பாரில்லையா? எந்தத் தாயும் தன்னுடைய குழந்தைகளுக்குக் கெட்டுப் போனப் பழைய கஞ்சியைக் கொடுக்கச் சம்மதிக்கமாட்டார். அப்படியிருக்கும் போது குழந்தைகளுக்கு மட்டும் ஏன் அறுதப்பழசான அரசர் கதைகளையோ, தேய்வழக்கான வறட்டுத்தனமான நீதிக் கதைகளையோ கொண்ட நூல்களை வாங்கிக் கொடுக்கவேண்டும்.
புராணங்களை வரலாறாக நம்பச்சொல்லும் காலத்தில் அந்த மாதிரியான புத்தகங்கள் குழந்தைகளிடம் தவறான மூடநம்பிக்கைகளை வளர்த்து விடும். பிள்ளைப்பிராயம் என்பது எழுதினால் அழிக்க முடியாத சிலேட்டு. எனவே சிலேட்டில் என்ன எழுத வேண்டும்? எப்படி எழுத வேண்டும்? ஏன் எழுத வேண்டும்? என்று பெரியவர்களுக்குத் தெரிய வேண்டும். இப்போது மட்டுமல்ல, எப்போதும் குழந்தைகள் புத்தகம் என்ற பெயரில் வெளிவரும் எல்லாம் குழந்தைகளின் வயது, வாசிப்புத்திறன், புரிந்து கொள்ளும் திறன், ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எழுதப்பட்டிருக்கிறதா? குழந்தைகளின் படைப்பூக்க உணர்வைத் தூண்டுகிற விதமாக இருக்கிறதா? சமகாலத்தைப் பிரதிபலிக்கிறதா? என்பதையெல்லாம் பெரியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
மாறிக் கொண்டேயிருக்கும் காலத்திற்கேற்ப நம்முடைய வாழ்க்கை முறைகளும் மாறிக் கொண்டேயிருக்கிறது. நாம் அனைவரும் கனவு காண்கிற சமத்துவமான, சமவாய்ப்புகளுள்ள சமூகத்தைக் கட்டமைக்கப்போகிற குழந்தைகளின் உளவியலை அவர்கள் வாசிக்கும் புத்தகங்கள், சினிமாக்கள், கார்ட்டூன் படங்கள், எல்லாம் கட்டமைக்கும். எல்லாவற்றிலும் தலையிடமுடியாவிட்டாலும் நாம் வாங்கிக் கொடுக்கும் புத்தகங்களிலாவது தலையிடலாமில்லையா?–
இங்கே பெரியவர்கள் என்ற சொல்லில் பெற்றோர், ஆசிரியர்கள், தாத்தாக்கள், ஆச்சிகள், மாமாக்கள், எல்லாரும் அடங்குவார்களென்பதையும் சொல்லி
வாசியுங்கள் பெரியவர்களே!
குழந்தை இலக்கியத்தை வாசியுங்கள்.
📚 எழுதியவர்:

உதயசங்கர்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


உண்மை தான்.உண்டு சுவைத்து பின்னர் குழந்தைகளுக்கு கொடுக்கும் தாயின் பரிவு வாசிப்பு அனுபவத்திலும் இருக்க வேண்டும் என்று உணர்த்தும் கட்டுரை.எழுத்துக்கலையின் அரிச்சுவடி பெரியவர்களுக்கே
வாசிக்க வாசிக்க மட்டுமே புரியும்.இதில் குழந்தைகள் நிலை சொல்ல வேண்டியதில்லை.எனவே குழந்தை இலக்கியங்களை பெரியவர்கள் படித்து பின்னர் குழந்தைகளுக்கு பரிந்துரைப்பது சிறப்பு.மேலும் பழைய நீதி நூல்கள் என்ற பெயரில் உள்ள நூல்களை என்ன எதுவென்று தெரியாமல் குழந்தைகளுக்கு படிக்க கொடுக்க கூடாது என்ற கண்டிப்பும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றே.