அமித்ஷா ஏன் பாதுகாப்புத்துறைக்கும் பொறுப்பேற்க வேண்டும்? – ஹரீஷ் கரே (தமிழில்: கி.ரா.சு.)

 

லடாக்கில் ஏற்பட்டுள்ள மோதலில் நமது ஊடகங்களை அடக்குவதும், ராகுல் பாபாவைச் சத்தம் போட்டு அடக்குவதும் ஒரு விஷயம் என்றால், சீன ஊடுறுவல்காரர்களை அடக்குவதற்குச் சிறப்பான திறனும், உறுதியும் கொண்ட ஒரு பாதுகாப்புத்துறை அமைச்சர் தேவை.

ஹரீஷ் கரே

”அதிதீவிரமான பிரச்சனைகளுக்கு அதிதீவிரமான தீர்வுகள் தேவை” என்ற சொற்றொடர் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாகும்.  எனினும், இந்திய-சீன எல்லையில் அதிதீவிர நிலைமையே ஏற்பட்டுள்ளது.  இந்தியாவின் மிகவும் நட்பான, மிதமான ஊடகக் குரல்கள் கூட 1962 இலிருந்தே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தீவிரமான இராணுவ மோதல் நிலவுவதை ஒப்புக் கொள்கின்றன. புதிய இந்தியாவுக்குள் ஊடுறுவல்காரர்களை அனுப்பச் சீனர்கள் எடுக்கும் அசாதாரண முயற்சிகளில் சீனர்களைச் சரியானபடி நிறுத்த நமக்கு ஒரு அசாதாரணமான, அதிதீவிரமான மனிதர் தேவை.

நமக்கு ஒரு புதிய பாதுகாப்பு அமைச்சர் தேவை.

சமீப ஆண்டுகளில் துரதிர்ஷ்டவசமாக போதுமான திறன் இல்லாத பாதுகாப்பு அமைச்சர்களைத் தொடர்ந்து பெற்றதால் தேசியப் பாதுகாப்பு மிகமோசமாக பலவீனப்பட்டுள்ளது என்பதை பெரும்பாலான கேந்திரமான நிபுணர்கள் உடனடியாக ஏற்பார்கள்.  ஏ.கே.அந்தோணியில்(தீர்மானம் எடுக்க முடியாத நிர்ப்பந்தம்) தொடங்கி அருண் ஜேட்லி (பகுதி நேர அமைச்சர்), மனோகர் பாரிக்கர் (நோயுற்றவர், உணர்ச்சி மேலிடாதவர், ஈடுபடுத்திக் கொள்ளாதவர்), நிர்மலா சீதாராமன் (தாமரை இலைத் தண்ணீர்), இப்போது ராஜ்நாத்சிங், வெளியாள், 1990களின் அரசியல் வார்த்தை ஜாலங்களில் சிக்கியிருப்பவர்.  அவர்களுக்கெல்லாம் ஒரு பொதுவான குணாம்சம் உண்டு:  அவர்களெல்லாம் எதிர்வினையாற்றினர்.

ரபேல்' விவகாரத்தில் பிரதமரை ...

ராஜ்நாத்சிங் முன்பு மூத்த அரசியல்வாதியாக இருந்தவர், ஆனால் இப்போது முழுதும் எந்த செல்வாக்கும் இல்லாதவர்.  உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் உதயமானது பாதுகாப்பு அமைச்சருக்கு அங்கு இருந்த கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் எடுப்பதாகக் காட்டப்படுகிறது.  அரசியல் நிலைமைகளை எப்போதுமே நன்கு அறிந்த தளபதிகள், அவரை தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை.  நமது நிலப்பகுதிக்குள் சீன ஊடுருவல் பிரச்சனையில் அவராலும் அவர்களைக் கையாள முடியவில்லை.  கிருஷ்ணமேனனின் நடவடிக்கையை மீண்டும் செயல்படுத்த வேண்டியதில்லை. ஆனால் பாதுகாப்பு அமைச்சரை மாற்ற வேண்டிய தேவை உள்ளது என்பதை அனைவரும் நிச்சயமாக ஒப்புக் கொள்வர்.

நாம் தற்போதைய மோசமான நிலையை “புதிய இந்தியாவுக்கு” ஒரு செயல்படக்கூடிய, செயல்வீரரான, ஒருவேளை தலையிடக் கூடிய ஒரு பாதுகாப்பு அமைச்சரை அளிக்க ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.  அமித்ஷாதான் இந்தக் கணத்துக்குச் சரியான மனிதர்.

அவர் உறுதியானவர், பிரதமரை விடவும் கூட உறுதியானவர்.  வேறு என்ன, அவர் நார்த் பிளாக்கில் அவர் ஏற்கனவே வகிக்கும் தற்போதைய பொறுப்புடன் சேர்த்துப் பாதுகாப்பையும் எளிதாகக் கையாள முடியும்.  உண்மையில், பாஜக 2019இல் அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் ஏற்கனவே அவர் நிறைவேற்றி விட்ட பிறகு, அதுவும் ஒரே ஆண்டில் நிறைவேற்றி விட்ட பிறகு அவருக்குப்  பணி மிகவும் குறைவாக உள்ளது.  எப்படியும் உள்துறை என்பது மாறா நிலை அமைச்சகம்.  ஒரு உள்துறை அமைச்சராக அவர் நிர்ப்பந்தம் என்ற மாபெரும் சக்தியும், கட்டுப்பாடும் சீராக இருப்பதை உறுதிப்படுத்தி விட்டார்.  அவரது உபரி சக்தியும், நேரமும் போட்டியே இல்லாத பீகாரில், பல மாதங்களுக்குப் பிறகு நடக்கப் போகும் தேர்தலில் வீணடிக்கப்படுவதை விட சவுத் பிளாக்கில் நல்ல முறையில் பயன்படுத்தப்பட முடியும்.

இதற்கு மாறாக, சீனா இப்பொழுதே சந்திக்க வேண்டிய ஒரு சவாலை முன்வைத்துள்ளது.

கால்வான் பள்ளத்தாக்கு மீதான ...

சீனா கால்வான் பள்ளத்தாக்கைக் கைப்பற்றியிருப்பதானது நம்மை மனோரீதியாகப் பலவீனப்படுத்தி நமது மனத்திண்மையைக் குலைப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகும்.  தனக்கு ஒரு உறுதியான உலகப் பங்கை விரும்புவதால், இந்தியா ஒரு ‘விஸ்வ குரு’வாகும் உறுதிப்பாட்டை அது குலைக்க விரும்புகிறது.

சீனத் தலைமை சுன் சூவிடமிருந்து நாகரீகத்தைப் பெற்றிருக்கலாம்.  ஆனால் நமக்கும் சாணக்கியரின் வரலாற்றுப் பாரம்பரியம் உள்ளது.  இந்தப் பாரம்பரியத்தின் சரியான வாரிசு அவர் என்பதை அமித்ஷா பலமுறை நிரூபித்துள்ளார்.  நமது ஊடகங்களில் மின்னக்கூடிய, மிகச்சிறந்த ஊடகங்கள் அவரை ‘நவீன நாள் சாணக்கியர்’ என்று பலமுறை புகழ்ந்துள்ளன.

அமித்ஷாவுக்கு மேலும் இரண்டு குணங்கள் இருக்க அது உதவுகிறது:  அவருக்கு ‘ஊடுறுவல்காரர்’ என்பதன் மீது வெறியான எண்ணம் உண்டு, மேலும் அவர் சிறந்த கொறிப்பாளர்.  சீன ஊடுறுவல்காரர்கள் நமது நிலப்பரப்பைக் கொறிக்க முடியுமானால், நமக்கு இத்தகைய கொறிப்புக் கலையில் நிபுணரான ஒரு அமைச்சர் தேவை.  மாநிலத்துக்கு அடுத்த மாநிலமாக அவரால் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்களைக் கொறித்தெடுக்க முடியுமானால், அவர் சீனர்களுடன் கொறிப்பு விளையாட்டை நம்பிக்கையுடன் விளையாட முடியும்.  எந்தக் கட்டுப்பாட்டையும், எந்த அறநெறியையும், எந்த இரண்டாவது சிந்தனையையும் அனுமதிக்காத நிறுவனம் அது.

ஒரே மனிதர் உள்துறையையும், பாதுகாப்புத்துறையையும் வகிப்பது லுட்டியன்களின் (புதுதில்லியை வடிவமைத்த நிபுணர் லுட்டியன்) லாபியால் சகிக்க முடியாதென்றாலும், அது சரியான நேரம் அமைந்து விட்ட ஒரு சிந்தனை.  உள்நாட்டுப் பாதுகாப்புக்கான கருவிகளுக்கும், வெளிப்பாதுகாப்புக்கான கருவிகளுக்கும் இடையில் உச்சபட்சக் கூட்டுறவை எப்படிக் கொண்டு வருவதென இந்தியா வழக்கத்தை விட அதிகமாக சிந்திக்க வேண்டியுள்ளது. மோடி சொல்வது போல் சொல்வதானால்,   சக்தி, சுரக்‌ஷா (பாதுகாப்பு), சமன்வயா(நல்லிணக்கம்) மற்றும் சமஜ்தாரி (உள்நோக்கு) ஆகிய நான்கு ’ச’க்களை கேந்திரமாக ஒன்று குவிப்பது என்பதன் தேவை குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.  இத்தகைய ஒரு குவிப்பைக் கொண்டு வரக்கூடிய மனிதர் அமித்ஷா.

அவர் இந்தப் பணிக்குப் பச்சையான சக்தியைக் கொண்டு வருவார்.  அரசியல் தலைமையை எப்படித் தளபதிகளை மதிக்க வைப்பது என்பது அவருக்குத் தெரியும்.  ஒருவேளை மிதவாத அமைச்சர்கள் மற்றும் மிதவாதத் தளபதிகளுக்கு மிடையிலான தேயக்கூடிய ஜுகல்பந்தி  (கூட்டுச் செயல்பாடு) இறுதியில் குலையலாம்.

இன்னும் விஷயங்கள் உண்டு.  அமித்ஷா சீரான தெளிவைக் கொண்டு வருகிறார்.  உள்நாட்டில் எதிரிகளை ஒடுக்கவும் பிரிவினை வாதிகளைச் சுட்டுப் பொசுக்கவும் வன்முறை ஒரு தீர்வாக இருக்குமானால், பிறகு நமது தேச எதிரிகளுக்கு எதிராக நாம் சக்தியைப் பிரயோகிப்பதற்கு இவ்வளவு தயங்க வேண்டும்?

இந்தியாவின் முதல் பிரதமர் ...

ஒரு உள்துறை அமைச்சராக, ஜவஹர்லால் நேரு செய்த பெருந்தவறுகளில் ஒன்றான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்தார்; இப்போது ஜவஹர்லால் நேருவின் மிகப்பெரும் தவறான சீனர்களை நம்புவது என்பதால் விளைந்த விளைவுகளைச் சரி செய்ய அவருக்கு இந்தப் பொறுப்பைக் கொடுக்கலாம்.  ஒருவேளை எதிரிகளின் ஆழமான திட்டத்தை அறியும் சாணக்கிய தந்திரமும், பிறகு எதிரியின் மோசமான நோக்கத்தை சரிக்கட்டவுமான தந்திரமும் உள்ள ஒரே மனிதர் அவர் மட்டுமே.

இன்னொரு கூடுதல் பலன் – ஒருவேளை மொத்தமாகப் பெற விரும்பும் விளைவு – உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்குக் கூட்டாகப் பொறுப்பேற்கும் அமித்ஷா இந்தியாவின் பாதுகாப்பு ஜார் என்ற பாத்திரத்தை வகிப்பார்.  நமது வெளியுறவுக் கொள்கையின் கோட்பாட்டை வகுக்கவும், நடைமுறைப்படுத்தவும் அவர் ஒரு தீர்மான கரமான பங்கைப் பெறுவார்.  அது அவ்வளவு மோசமாக இருக்காது.  ஏனென்றால் அது நமது வெளியுறவுத் துறை நமது நடைமுறையில் பெறும் தேவையற்ற, பொருத்தமற்ற முக்கியத்துவத்துக்கு முடிவு கட்டிவிடும்.

புதிய இந்தியாவானது வெளியுறவுத் துறையின் நிறுவன ரத்தத்தில் ஊறியிருக்கும் நேருவிய கண்ணியத்தை முழுதும் வெளியேற்றுவதற்கான நேரம் இது என்பதை உணர வேண்டும்.  இந்தக் களைத்துப் போன பாரம்பரிய சீன அதிகாரிகள் ஒரு ஆவேசமான சீனாவுக்கு நன்னடத்தையும், நடைமுறையும்தான் தீர்வு என்று சிந்திக்கின்றனர்.  ராஜதந்திரத்துக்கு மிக அதிகமான மதிப்புக் கொடுக்கப்படுகிறது; அது இஸ்லாமாபாத்தைப் பொருத்தவரை நம்மை எங்கும் கொண்டு சேர்க்கவில்லை. இறுதியில் துல்லியத் தாக்குதல்தான் மோடி என்ற சுவரின் எழுத்துக்கள் கூறும் செய்தியை பாகிஸ்தானியர்களைப் படிக்க வைத்தது.

சமீப காலங்களில் பிரதமர் மீண்டும் மீண்டும், மிகுந்த ஊக்கத்துடன் தேசம் துணிச்சலான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது என உறுதியாகக் கூறுகிறார்.  ஒரு புதிய பாதுகாப்பு அமைச்சர், ஒரு புதிய பாதுகாப்பு ஜார்தான் வாய்ப்புள்ள துணிவான ஒரு சீர்திருத்தம். அது இந்தியாவின் உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளுக்குத் தவறாத, குழப்பமற்ற செய்தியை தெரிவிக்கும்.

தமிழில்: கி.ரா.சு.