இப்போது ஜான் போல்டனின் புத்தகம் குறித்து ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்? ட்ரம்பின் தவறுகள் அனைத்தும் அனைவருக்கும் தெளிவாகத் தெரிகின்ற போது – சைமன் டிஸ்டால் (தமிழில்: தா.சந்திரகுரு)

 

தனது மறுதேர்தல் முயற்சிக்காக, டொனால்ட் ட்ரம்ப் பெய்ஜிங்கில் தன்னைப் போன்று சர்வாதிகார தன்முனைப்பு கொண்ட ஜி ஜின்பிங்கிடமிருந்து ரகசிய உதவி கோரினார் என்ற செய்தி அவமானகரமானது என்றாலும், ட்ரம்ப் பதவி நீக்கம் குறித்த உக்ரைன் விசாரணை, 2016 பிரச்சாரத்தில் தலையிட்ட ரஷ்ய முயற்சிகள் குறித்த முல்லர் அறிக்கை பற்றி அறிந்திருப்பவர்களை அது ஒருபோதும் ஆச்சரியப்படுத்தாது.

வெள்ளை மாளிகை பதவியை இரண்டாம் முறையாக வென்றெடுப்பதற்காக, எவ்வளவு ஆட்சேபணைக்குரியது என்றாலும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்படுத்தி, எவ்வளவு நிழல் நடவடிக்கையாக இருந்தாலும் அதைச் செய்து, எந்தவொரு பொய்யையும் அது எவ்வளவு அப்பட்டமாக இருந்தாலும் சொல்லி வருகின்ற நேர்மையற்ற அமெரிக்க அதிபர் கிட்டத்தட்ட எவருடனும் ஒத்துழைப்பதற்குத் தயாராக இருக்கிறார் என்பது நீண்ட காலமாகவே தெளிவாகத் தெரிந்து வருகிறது.

தனது சொந்த நோக்கங்களுக்காக, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை அவர் எவ்வாறு கையாண்டார், தகர்த்தெறிந்தார் என்று ஜான் போல்டன் தருகின்ற தகவல்கள் குறித்து சற்றும் வெட்கப்படாது இருக்கின்ற ட்ரம்ப் நிச்சயமாக நவம்பர் தேர்தலுக்கு முன்னதாகவே இன்னும் இதுபோன்று பலவற்றைத் திட்டமிடுவார். தேர்தலில் தோற்பதைப் பற்றி அவர் மிகவும் பயப்படுகிறார்.

ட்ரம்ப்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எழுதியுள்ள புத்தகம், வெளிநாடுகளில் நடந்து வரும் நெறிமுறையற்ற, சட்டவிரோத மற்றும் விவாதிக்கக்கூடிய தேசத்துரோக நடத்தைக்கான ஒரு நிறுவப்பட்ட வடிவத்தை முன்வைப்பதோடு, தொடர்ந்து உள்நாட்டில் சட்டத்தை மீறுவது, தடங்கல் ஏற்படுத்துவது போன்ற குற்றச்சாட்டுகளையும் எதிரொலிக்கிறது.

சர்வதேச உறவுகளைப் பொறுத்தவரை, ட்ரம்பின் சுயசேவை அணுகுமுறைக்கான ஆரம்ப எடுத்துக்காட்டாக,  வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்-உனை கவர்ந்திழுக்கும் வெட்கக்கேடான முயற்சி இருக்கிறது.

நிபுணர்களைப் (போல்டன் உட்பட) புறக்கணித்து, ட்ரம்ப் தனது அதீத புத்திசாலித்தனம், ஒப்பந்தம் செய்யும் மடத்தனத்தைக் கொண்டு அணு ஆயுதங்களைக் கைவிட கிம்மை  தூண்டினார்.  இரண்டு உச்சிமாநாடுகள் மற்றும் மலையளவு பிதற்றல்களுக்குப் பிறகு, உயர்த்தப்பட்ட சுயவிவரம், சர்வதேச தடைகளைக் குறைத்தல், தென் கொரியாவை மீண்டும் மிரட்டுவது போன்ற ட்ரம்ப்பின் ராஜதந்திரத்தில் இருந்து கிம் தனது வெற்றிகளைப் பெற்றுள்ளார். உதவிக்கான கூக்குரலை எழுப்பிய கிம் கடந்த வாரம், எல்லை தொடர்பு அலுவலகம் ஒன்றைத் தகர்த்தார். எச்சரிக்கையாக இருங்கள்: ஆதரவு தேடுகின்ற கிம், மூழ்கிக் கொண்டிருக்கும் ட்ரம்ப் இவர்கள் இருவரும் கிழக்கு ஆசியாவில் இந்த இலையுதிர்காலத்தில் நெருக்கடியை ஏற்படுத்துவதில் ஆர்வம்  கொண்டுள்ளனர்.

நோபல் பரிசுக்கு தகுதியான சமாதான தூதுவராகத்  தன்னைச் சித்தரிக்க ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகளும், அமெரிக்க வாக்காளர்களின் அழியாத நன்றியுணர்வும் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் உடனடி சிக்கலை முன்வைக்கின்றன. அவரது அபத்தமான ஒருசார்பான ’சமாதான திட்டம்’, பாலஸ்தீனிய நிலத்தின் பெரும்பகுதியை சட்டவிரோதமாக இணைத்துக் கொள்வதற்கான பச்சை விளக்காக இஸ்ரேலின் வலதுசாரி பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகுவால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. உள்நாட்டு விமர்சகர்களைச் சமாதானப்படுத்தி, வளைகுடா அரேபியர்களை விலகிச் செல்ல வைக்க முடிந்தால், ஜூலை 1ஆம் தேதி முதல், அந்த நில அபகரிப்பு தொடங்கலாம்.

பாலஸ்தீனியர்களுக்கு வஞ்சனை செய்வதன் மூலம், கிறிஸ்தவ சுவிசேஷ மற்றும் யூத-அமெரிக்க வாக்காளர்களை ஈர்க்கலாம் என்று ட்ரம்ப் நம்புகிறார். நடுநிலையான, நியாயமான, இரு அரசுகளுக்கிடையிலான  தீர்வை அழிப்பது, புதிய இன்டிபதாவை (எழுச்சியை) உருவாக்குவது ஆகியவையே அதற்கான விலையாக இருக்கும்.

The Florida Daily Post | Read first, then decide! | Page 81

மத்திய கிழக்கு தொடர்பான மற்றொரு விஷயத்தில், 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதியாகப் புதைத்து விட்டு, தெஹ்ரான் மீது சர்வதேச ஆயுதத் தடையை மீண்டும் சுமத்த ட்ரம்ப் விரைகிறார். பயங்கரவாதம் மேலும் அதிகரிப்பதை ஈரானின் ஆதரவு நியாயப்படுத்துவதாக அவர் வலியுறுத்துகிறார். வாக்காளர்களிடம் தான் ஈரானை ‘நடுநிலைப்படுத்தி’ விட்டதாக சொல்வதற்கு ட்ரம்ப் விரும்புகிறார். ஆனால் உண்மையில், அவரது உத்திகள் ஈரான் அணுசக்தி தொடர்பான நடவடிக்கைகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கும், அடக்கு முறை சவுதி ஆட்சிக்கு உதவுவதற்கும், பிராந்தியத்தை போரின் விளிம்பிற்கு கொண்டு செல்வதற்குமே வழிவகுத்துள்ளன. வரவிருக்கும் மாதங்களில், அமெரிக்க ராணுவம் அந்தப் பகுதிகளில் வேண்டுமென்றே ஆத்திரமூட்டப் போவதை நிராகரிக்க முடியாது.

அமெரிக்க துருப்புக்களைத் திரும்பப் பெறுவது, திட்டமிடப்பட்ட வெற்றியை விளாடிமிர் புடினின் ரஷ்யாவிடம் ஒப்படைத்தது ஆகியவற்றின் மூலம், சிரியாவில் மேற்கத்திய கொள்கையை அழித்த பின்னர், ஆப்கானிஸ்தானிலும் இதே தந்திரத்தை ட்ரம்ப் மேற்கொள்ள விரும்புகிறார். அதன் மூலம் அவர் அமெரிக்காவின் மிக நீண்ட போரை முடித்ததாக வாக்காளர்களிடம் சொல்ல முடியும்.

கேம்ப் டேவிட்டில் தலிபான்களுடன் ரகசிய உச்சிமாநாட்டை நடத்த ட்ரம்ப்பின் மோசமான முயற்சி, இவ்வாறான துரோகத்தின் சரிவின் மிகமோசமான கட்டமாக இருந்த்து.

2001ஆம் ஆண்டு முதல் அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் செய்து வந்திருக்கும் தியாகங்களுக்கு என்ன பொருள் இருக்கிறது? பாதுகாப்பான, நியாயமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான அமெரிக்காவின் உறுதிமொழியை நம்பி இறந்து போன பல்லாயிரக்கணக்கானோர் மற்றும் ஆப்கானிய மக்கள் அனுபவித்த கொடூரமான துன்பங்களைப் பற்றி என்ன சொல்ல?

ஓடி ஒளிந்த ட்ரம்ப், பிரச்சனையின் முதல் அறிகுறி தோன்றிய போதே, பதுங்கு குழிக்குள் பதுங்கிக் கொண்டதை மறந்து போனவராக இருக்கிறார். அவர் வாக்குகளுக்காகப் போராடுகிறாரே தவிர, ஜனநாயகத்திற்காக அல்ல. நன்கு ஆவணப்படுத்தப்பட்டிருக்கும், நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பியர்கள் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றுடன் அவர் கொண்டிருக்கும் விரோதப் போக்கு, மற்றொரு இலையுதிர்கால போர் எழுவதைச் சுட்டிக்காட்டுகிறது. அதிபர் வேட்பாளர் ட்ரம்ப் அமெரிக்காவின் நட்பு நாடுகளையும், ஐ.நாவையும் இழிவுபடுத்துவதிலே மகிழ்ச்சியடைகிறார். கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள், அமெரிக்காவின் உயர்மட்ட தூதரான மைக் பாம்பியோ இடையே நடந்த வீடியோ மாநாடு அட்லாண்டிக் நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தியது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம், ஈரான், சீனா, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ட்ரம்பும் பாம்பியோவும் அழிக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது), உலக சுகாதார அமைப்பு மற்றும் தொற்றுநோய் என்று அனைத்திடமிருந்தும் எதிர்தரப்பினராகப்  பிரிந்தே இருக்கின்றார்.

ஜெர்மனியில் இருந்து அமெரிக்க துருப்புக்களைத் திரும்பப் பெறுவதற்கான ட்ரம்ப்பின் புதிய திட்டமும், புடினைப் போற்றுகின்ற அவரது மனப்பான்மையும் ஐரோப்பாவின் நலன்கள் விரைவாக புறக்கணிக்கப்படும் என்ற சந்தேகத்தை அதிகரிக்கின்றன. மேலும் அதன் சங்கடங்கள் இப்போதிலிருந்து நவம்பர் மாதங்களுக்கு இடையில் வேண்டுமென்றே மோசமடைகின்றன.

What John Bolton Knows - The New York Times

எவ்வாறாயினும், ட்ரம்பின் மறுதேர்தல் முயற்சிக்கான முக்கிய உந்துதல், சீனாவையே மையமாகக் கொண்டுள்ளது. அவரது முழு முயற்சியும், தொற்றுநோயை ஏற்படுத்தியது, மூடிமறைத்தது, பின்னர் பொருளாதார சரிவு போன்றவற்றிற்காக பெய்ஜிங்கை குற்றம் சாட்டுவதாகவே இருக்கிறது. தனது திறமையின்மைக்கான தண்டனையில் இருந்து தப்பிக்கவே அவர் விரும்புகிறார். ஐரோப்பா தனது பக்கம் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, ஜனநாயக கட்சி எதிரியான ஜோ பிடனை, பெய்ஜிங் என்ற புதிய எதிரியுடன் அடையாளம் காணவே அவர் விரும்புகிறார்.

பிடனை வெல்வதற்காக, சீனாவைப் பலிகடா ஆக்குவது உண்மையில் மிகவும் மோசமானதாகி விடும். ஒரு சண்டையைத் தேர்வுசெய்ய ட்ரம்ப் விரும்பினால், வர்த்தகம், தைவான், தென் சீனக் கடல், ஹாங்காங், ஹவாய், மனித உரிமைகள், இணையத் தாக்குதல்கள் (இந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்தவை), இப்போது இமயமலை போன்று பல வாய்ப்புகள் அவருக்கு காத்திருக்கின்றன.

ட்ரம்ப்பைப் பொறுத்தவரை, அவரது நோக்கங்களை குறுகிய, கூர்மையான மோதல்கள் சிறப்பாக நிறைவேற்றக் கூடும். இது சிந்திக்க முடியாததாக இருக்கிறதா? மீண்டும் சிந்தித்துப் பாருங்கள். நிராயுதபாணிகளாக  புலம்பெயர்ந்து வந்தோரின் ’படையெடுப்பை’ தடுப்பதற்காக 2018 இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னர் மெக்சிகன் எல்லைக்கு ராணுவத்தை அனுப்பியவர் இவர்தான். அமைதியான ’பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ போராட்டக்காரர்களைத் தாக்குவதற்காக துருப்புக்களை அனுப்பியவரும் இவர்தான்.

ஒரு நாள் சீனாவின் ஜி ஜின்பிங்கை தனக்கு ஆதரவாக்கி கொள்ள முயன்ற அவர், பின்னர் அமெரிக்காவை  அச்சுறுத்துகின்ற புதிய நபராக அவரைக் காட்டினார் என்ற கூற்றில் உள்ள முரண்பாட்டை ட்ரம்ப் காண்கிறாரா? ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி, அல்லது உலகம் என்ன நினைக்கிறது, அரசியலமைப்பு என்ன சொல்கிறது என்பது குறித்து அவர் உண்மையில் கவலைப்படுகிறாரா? இல்லை. அவரைப் பொறுத்தவரை, வெற்றி மட்டுமே ஒரே இலக்காக இருக்கிறது.

தி கார்டியன், 2020 ஜுன் 21

https://www.theguardian.com/commentisfree/2020/jun/21/shocked-by-john-boltons-book-expose-of-trumps-global-blunders?CMP=Share_AndroidApp_WhatsApp

நன்றி: தி கார்டியன் இதழ்

தமிழில்: தா.சந்திரகுரு