கொரானாவை முன்வைத்து ஆன்லைன் விற்பனை சரக்காகும் கல்வி..? – பேரா.லெ.ஜவகர்நேசன் (தமிழில்:கமலாலயன்)

கொரானாவை முன்வைத்து ஆன்லைன் விற்பனை சரக்காகும் கல்வி..? – பேரா.லெ.ஜவகர்நேசன் (தமிழில்:கமலாலயன்)

 

கோவிட்- 19 பெருந்தொற்றினால் விளைந்திருக்கும் சிக்கல்,மனிதகுலத்தின் கற்பனைக்கே எட்டாததாக அமைந்திருக்கிறது.இந்தப் பெருந்தொற்றின் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதற்கான மூல உத்தியாக,ஒட்டு மொத்த ஊரடங்குக் கொள்கை வகுப்பாளர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.அதே வேளையில்,இதை ஒரேயடியாக உலகிலிருந்தே துடைத்தெறி வதற்கு உலகம் முழுவதும் ஏககாலத்தில் தீர்வுகளைத் தேடி முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்தப் பெருந்தொற்று,ஒருகாலத்தில் பொருளாதாரரீதியாகவும்,சமூகரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பலன்கள் பெற்றுக் கொண்டிருக்கிற வர்க்கங்களால் மட்டுமே அனுபவிக்கப்பட்டுக் கொண்டு வந்திருக்கும் சிறப்புரிமைகளை ஒன்றுமற்றதாக்கி விட்டதென்பதென்னவோ உண்மைதான்.முன்னுதாரணமேயற்ற இந்தப் பாதிப்புக்குள்ளாக்கும் தன்மை,உலகின் பொருளாதார ஒழுங்கையே சிதறடித்து இப்போதைய நிலையையே சீர்குலைத்து விட்டது. இவ்வாறாக, பொருளாதார விவகாரங்களின் மையத்தில் ஆதிக்கம் செலுத்தும் புதிய தாராளவாத சக்திகளிடமிருந்து பெரும் எதிர்வினையை ஈர்த்திருக்கிறது.இப்போது எது மிகவும் ஒழுங்கற்ற சீர் குலைவை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்றால்,இதன் தாக்குதலில் இருந்து கல்வியையும் அது விட்டு வைக்காததே.

பெருந்தொற்றுத் தொடங்கிய நிமிடத்திலிருந்து முடங்கிப் போன முதல் துறையாகக் கல்வி ஆகியிருக்கிறது.காரணம்,சமூக இடைவெளி/தனி நபர் இடைவெளி என்பதைக் கல்வி வளாகங்களுக்குள் பராமரிப்பது என்பது எல்லாவிதத்திலும் முற்றிலும் சாத்தியமே இல்லை. உயர் கல்வி நிலைய வளாகங்கள் முன்நிர்ணயிக்கப்பட்ட பாடத்திட்டத்தை மட்டுமே வழங்குவதற்கான  இடங்கள் அல்ல;மாறாக,சமுதாயத்தால் முன்வைக்கப்படும் தேவைகளுக் கும்,மேம்பட்ட சமகால வளர்ச்சிகளுக்கும் ஏற்ப இளையவர்களைச் செதுக்கி எதிர்வினையாற் றும் தகுதி படைத்தவர்களாக ஆக்கும் இடங்களும் ஆகும்.இந்தப் பெரும் சோதனைக்காலச் சூழலில்,உணர்ச்சிக் கொந்தளிப்பான இந்த நிலைமையின் நடுவே,எப்படி இந்தச்சிக்கலைத் தாண்டி விடுபடுவது,மனதை எப்படிச் சீரான சமநிலையில் திடப்படுத்திக் கொள்வது,தங்களின் சிந்தனைகளை எப்படி நெறிப்படுத்திக் கொள்வது என்பன போன்ற அம்சங்களே இளையோர் கற்றுக் கொள்ள வேண்டியவையாகும்.

மாணவர்களும்,ஆசிரியர்களும் அவரவர் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.ஊரடங்கின் விளைவு அது. கொள்கை உருவாக்குவோர்,சட்டங்களை இயற்றுவோர்,கல்விச் சேவைகளை வழங்குவோர்,மற்றும் அரசின்  விவகாரங்களின் மையப்புள்ளியில் இருப்போர் –அனைவரும் கற்பித்தலும்,கற்றலும் தொடர்ந்து இணையதளம் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று உரத்துக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.வீடுகளில் இருக்கும் நேரங்களில் ஆன்லைன் மூலம்  கற்றுக் கொள்வது என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒரு சிந்தனைதான்;ஆனால், மாணவர்களுக்குத் தாங்கள் கற்க விரும்பும் பொருண்மையைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை அது வழங்குமாயின்,பணம் படைத்தவர்களுக்கும்,பணம் அற்றவர்களுக்கும் இடையேயும், நகர்ப் புறங்களுக்கும் ஊரகப் பகுதிகளுக்கும் இடையேயும்,முன்னுரிமை படைத்தவர்களுக்கும் முன்னுரிமையே இல்லாதவர்களுக்கும் இடையேயும் அது பாரபட்சம் காட்டாமல் சமச்சீராக வழங்கப்படுமாயின், கலைத்திட்ட நிபந்தனைகளை அது மீறாமலும்,தடை செய்யாமலும் இருக்குமாயின் நிச்சயம் அது வரவேற்கப்பட்டாக வேண்டும்.

இந்த முயற்சிகளை மேற்கொண்ட பின்,விரைவில் உலகம் இது ஒரு தீர்வே அல்ல என்பதை உணர்ந்து கொள்ளப் போகிறது.காரணம், உண்மையான வகுப்பறைகளில் நேரடியாக நடைபெறும் கற்றல் செயல்முறையை அகற்றி விட்டு அதன் இடத்தை இட்டு நிரப்பும் அளவுக்கு முற்றாக முழுப்பரிமாணம் பெற்று விட்ட ஆன்லைன் கற்றல் பொறியமைவு ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு உலகம் இன்னும் வந்து விடவில்லை. இன்றைய இந்தச் சிக்கல் ஏற்படுவதற்கு மிகவும் முன்னதாகவே,2018-ஆம் ஆண்டில்,45 நாடுகளைச் சேர்ந்த முன்னணி உலகளாவிய பல்கலைக்கழகத் தலைவர்களின் ஆய்வு ஒன்று வெளிப்படுத்தும் உண்மை இதுதான்:’ஆன்லைன் உயர்கல்வி ஒருபோதும் உண்மையான நேரடிக் கல்விக்கு இணையாக முடியாது’.

Data Can Help Improve Higher Education, But It's No Cure-All

பதிப்பாளர்கள்,ஊடகங்கள்,தொழில் நிறுவனங்கள்-போன்ற பல நிறுவமைப்புகளின் கூட்டமைப்பு ஒன்றிணைந்து புத்தகங்கள்,காணொளிக் காட்சிப் படங்கள்,ஆய்விதழ்கள், மதிப்பீட்டுக்கருவிகள் மற்றும் ஆலோசனைச் சேவைகள் போன்ற இலவசக் கல்வி உறு துணைப்பொருள்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.மாணவர்களின் கற்றல் அனுபவத்தை முன்னேற்றமடையச் செய்யவும்,கற்பித்தல் நடைமுறைகளுக்கு வலுக்கூட்டவும் ஆன்லைன் சேவைகளும்,வள ஆதாரங்களும் நிச்சயம் பங்களிப்பவைதாம் என்பதில் எந்த ஓர் ஐயமும் கிடையாது. ஆனால், கற்போருக்கு இவையெல்லாம் குறைகளே அற்ற,முற்று முழுநிறைவான கற்றல் வாய்ப்பை உறுதியாக வழங்குமா?மேற்கண்ட அனைவரின் கவலையும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே மையங் கொண்டிருக்கின்றன:கல்வியியல் நிறுவனங்கள்,தேர்வுகள் உள்பட தங்களுடைய கல்விப்புலக் கால அட்டவணைகளை எப்படியாகிலும் நிறைவு செய்தே தீர வேண்டும். பெருந்தொற்றினால் ஏற்பட்டிருக்கிற கடும் சிரமங்களைப் பற்றிக் கவலை யில்லை. அவர்கள் முன்வைக்கும் வாதம் இது:’மாணவர்களும்,ஆசிரியர்களும் வீடுகளில் ‘சும்மா’ உட்கார்ந்து நேரத்தை வீணாகப் போக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆசிரியர்களுக்கு ஊதியங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்!’

இந்த விதமான வாதங்கள் எல்லாமே புதிய தாராளமயப் பொருளாதார சக்திகளின் வெற்றுச் சிந்தனைகளே;இவை,ஒவ்வொன்றையும் சந்தையால் உந்தப்படும் மதிப்பீட்டு  அமைப்பின் கண்ணோட்டம் மூலமே பார்க்கின்றன.’நேரம்தான் பணம்’,’பணத்திற்கு மதிப்பு’,’பெருவணிக நிறுவமைப்புக்குச் செலவு’,’பொலிவுறு விரைந்த சேவைகள்’…இன்ன பிற,போன்ற கொள்கைக ளையே அந்தக் கண்ணோட்டம் வலியுறுத்தி முன்வைக்கும்.’நேரம்தான் பணம்’என்ற கொள்கை யின்படி,கல்வியாண்டுக் காலத்தை இந்தப் பெருந்தொற்றுக் காலத்தின் போது கூட,மேலும் இரண்டு மாதங்களுக்குக் கூட நீட்டிக்கப்படக்கூடாது.காரணம்,அவ்வாறு நீட்டிக்கப்பட்ட காலத்தில் சேவைகளை வழங்குவதால் நிறுவனத்துக்கு ஏற்படும் செலவை யார் ஏற்றுக் கொள்வார்கள்?

தொடர்புடைய பொருத்தமான எல்லாக் கற்பித்தல் முறைமைகளையும் நடைமுறையில் பயன்படுத்திக் கற்பித்தால் மட்டுமே கற்றல் அனுபவம் செழுமையடைந்து மேம்படும்.மாபெரும் சிந்தனையாளரான நோம் சோம்ஸ்கியின் கருத்துப்படி, சரியான கற்பித்தல் முறைமை என்பது இதுதான்:’அதிகாரத்தைச் சவாலுக்கு அழைக்கும் உந்துவிசையாற்றலை வளர்த்தெடுக்கும்; விமரிசன விழிப்புணர்வுடன் சிந்திக்கச் செய்யும்;ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுத் தேய்ந்து வழக்கொழிந்து போன மாதிரிகளுக்கு மாற்று வகை மாதிரிகளை உருவாக்க வழிகாட்டும்’. பாவ்லோ பிரையிரேவைப் பொறுத்தவரை,கற்போரின் மனங்களை விடுதலை செய்விப்ப தாகக் கற்பித்தல் முறைமை செயலாற்ற வேண்டும்;விமரிசன விழிப்புணர்வுடன் சிந்திப்பதற்கு இயன்றவர்களாக அவர்களை ஆக்க வேண்டும்;அந்த வகையில்,அவர்களுடைய சொந்தச்சிந்த னைகளின் உள்ளீடுகளைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்’.

How schools in India are ensuring learning never stops amid COVID ...

இத்தகைய கற்பித்தல் முறைமைகளைப் பொருத்திப் பயன்படுத்துவதற்கு,மெய்நிகர் கற்றல் (virtual education) முறையில் வெகு அரிதாகவே அது வாய்ப்பினை வழங்கும்.சோம்ஸ்கியின் கருத்துப்படி, மெய்நிகர்தொழில்நுட்பம் எப்போதுமே மதில் மேல் பூனையின் நிலையில்தான்இருக்கும்;அது பயன்மிக்கதாகவோ அல்லது தீங்கு நிறைந்ததாகவோ இருக்கலாம்.ஆனால்,அதன் வெற்றி என்பது,எந்த விதமான பார்வைச் சட்டகத்தினுள் பொருத்தப்பட்டு அது பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமையும்.

இந்தச்சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு,பல ஆன்லைன் சேவைகள் சந்தைகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய உற்பத்திப் பொருள்கள்/சேவைகளுடன்  கல்வித்துறையை வேட்டையாடித் துரத்திக் கொண்டிருக்கின்றனர்.இரண்டாவதாக,மூன்றாமுலக நாடுகளின் அரசுகள்,கோவிட்-19 க்கு எதிர்வினையாற்றும் போது,கல்வியை முன்னெடுக்கையில் அது தொடர்பான முடிவுகளை விவகாரங்களின் மையப்புள்ளியில் இருக்கும் அதிகார வர்க்கப் பிரதிநிதிகளின் ஆலோசனைப்படியே மேற்கொள்கின்றன. இந்த அரசுகளின்,அவற்றின் முகவர்களின் முடிவுகள் மற்றும் செல்நெறிகள்,வெவ்வேறு நிர்ப்பந்தங்களைச் செலுத்தும் கடப்பாட்டுறுதிமொழிகள்,ஒப்பந்தங்கள்,மற்றும் மேலாதிக்கம் செலுத்தும் சக்திகளின் கோரிக்கைக் கட்டளைகளை நிறைவேற்றித் தீர வேண்டிய கட்டாயத்தின் கீழேதான் மேற் கொள்ளப்படுகின்றன.

அத்தகைய கடப்பாட்டுறுதி மொழிகளுள் ஒன்று,இந்திய அரசாங்கம் தன்னுடைய உயர் கல்வித்துறையை உலக வர்த்தக நிறுவனம்-காட் ஒப்பந்தத்தின் கோரிக்கைகளுக்கு அடி பணிந்து 2005—ஆம் ஆண்டிலேயே திறந்து விடுவதற்கு ஒப்புக் கொண்டது என்பதாகும். ஆன்லைன் கல்வி வர்த்தகத்தைக் கடல் கடந்து மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பது உலக வர்த்தக நிறுவனம்-காட் ஒப்பந்தத்தின் கோரிக்கைகளுள் ஒன்று.கல்வியை ‘கல்வி வர்த்தகம்’ என்று குறிப்பிட வேண்டிய கட்டாயத்திற்கு இக்கட்டுரையாசிரியர் ஆளாக்கப்பட்டிருக்கிறார். காரணம்,உலக வர்த்தக நிறுவனம்-காட் ஒப்பந்தம்,ஏற்கெனவே கல்வியை வர்த்தகப் பொருள்களுள் ஒன்றாகக் கொண்டு வந்து விட்டது;அதற்கு இந்திய அரசாங்கமும் தன் ஒப்புதலை வழங்கி விட்டது என்பதே.ஒட்டுமொத்த ஊரடங்கின் வருகையைப் பயன்படுத்திக்கொண்டு, துணைக்கண்டத்தின் கல்வியாளர்கள்,கல்விப்புல நிபுணர்கள்,கொள்கை உருவாக்குவோர் ஆகியோர் ஆன்லைன் கல்விக்கான சிறிதும் தளர்வற்ற தமது வேட்கையை வெளிக்காட்டிக் கொண்டுள்ளனர். தங்களுடைய கல்விப்புல வளாகங்களுக்குள் ஆன்லைன் கற்றல் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் மகிழ்ச்சித் திளைப்பில்,உத்வேகத்தில், ஆர்வப்பரபரப்பில் மூழ்கியுள்ளனர்.அவர்களுள் சிலர் பொதுவெளியில் மிகுந்த பிரகாசமான தோற்றத்துடன் இந்த நெருக்கடியான சிக்கல் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றிகரமாக பொலிவுறு விரைவுக் கற்றலை புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள கல்விப் பாதுகாவலர்களான ஜூம்,கூகிள் ஹேங்அவுட்ஸ்(கூகிள் செயலிகள்) ,மைக்ரோசாப்ட் குழுக்கள்,இன்ன பிற தொழில் நுட்பங்களின் மூலம் முன்னெடுத்துச் செல்லத் துடிக்கின்றனர்.

இது கல்வியையும்,கற்றல் செயல்முறையையும் அடிமைத்தளைகளுக்குள் பிணைப்பதாகவே அமையும்.எப்படி?முதலாவதாக,நீண்டகால நோக்கில்,உயர்கல்வித்துறையை ஆன்லைன் வள ஆதாரங்களையும்,கருத்துத்தாள்களையும் முற்றிலுமாகச் சார்ந்தே நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாக்குவதன் மூலம்,பெரும் அளவில் நமது அறிவு உற்பத்தியற்றுப் போய்விடும் உயர்கல்வித் துறையை உள்நாட்டுக்குள் முடக்கிவிடும்.ஆன்லைன் கற்றல் செயல்முறையால் ஏற்படும் கற்பித்தல் முறைமைகளின் வரம்புக்குட்பட்ட செயற்திறனின் விளைவாக,கற்போரின் கற்றல் அனுபவமும் வரம்பு கட்டப்பட்டதாகி விடும்.இரண்டாவதாக,அத்தகைய பெருந்தொகுதியான தரவுகளைத் தனிப்பட்ட சொந்தத் தகவல்களாகவும்,பாடப் புத்தகங்களாகவும்,ஆராய்ச்சிக் கட்டுரைகளாகவும் இணையம் மூலம் பெறப்படுகிறவற்றிலிருந்து திரட்டுவதன் வழி அறிவுச் செல்வம் கடத்தப்படும்.அந்தத்தரவுகள்,தொழில்நுட்பவியல் சக்திகளுக்கு,புதியதாராளமய உலகின் செயல்நிரலுக்கு ஏற்ப கல்வி,சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சி –ஆகிய இரண்டின் செயல் நிரல்களையும் நிறுவிக்கொள்வதற்கு மட்டுமே உதவும் வகையில் பயன்படுத்தப்படும். இது கொஞ்சகாலத்துக்குக் குறுக்கீடுகள் இல்ல்லாமல் தொடர அனுமதிக்கப்படுமானால்,கல்வி யின் கருமையம் சமுதாயத்துக்குத் திரும்பவும் கொண்டுவரப்படவே முடியாத அளவுக்குத் தாமதமாகிப் போகும்.

கல்வியின் செயல்நிரலை நிறுவதும்,அதைக் கட்டுப்படுத்துவதும் தேசிய அரசினு டையதோ அல்லது சந்தை வியாபார சக்திகளினுடையதோ ஆகிவிடாமல்,ஆகிவிட அனுமதிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.மாறாக,தன்னுடைய பரிணாம வளர்ச்சியின் போக்கிலேயே தனித்தன்மை வாய்ந்த கற்றல் வளையத்தைக் கொண்டிருக்கிற ஒரே நிறுவமைப்பு என்கிற முறையில்,சமுதாயத்துக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு. தேசிய அரசுகளும், பொருளாதார சக்திகளும் தமது இயல்பிலேயே தற்காலிகத்தன்மையும்,மாற்றமடையும் தன்மையும் கொண்டவை. அவை உடைந்து பிளவுபடும்; ஒன்றோடொன்று இணைந்து விடும்; கையகப்படுத்தப்பட்டு விடும்;ஆனால்,சமுதாயம் நிரந்தரமானது. அதனுடைய மாற்றம் என்பது திரளுறும் தன்மையுடனும்,உயிராற்றல் மிக்கதாயும் நிகழும்.இதை வேறு வார்த்தை களில் சொல்வோமானால்,இனம்,மதம்,செல்வம்,சாதி இவை எவற்றையும் பொருட்படுத்தாமல், பலகூறுகளாகப் பிரிக்கப்பட்டு விடாமல் திரண்டுள்ள மானுட அனுபவம் முழுவதையும் பண்படுத்திப் பயிராக்கி,ஒத்திசைந்து போகச்செய்வதன் மூலம் சமுதாயத்தை ஜனநாயக மயமாக்கும்.அவ்வாறு செய்வதன் மூலமே சமத்துவமான வாய்ப்புகளை வழங்குவதற்கான செயற் திறனையும்,மாபெரும் மூலவளத்தையும் அது கட்டாயம் பெற்றிருக்கும்.

Development of interactive online tool for education and awareness ...

‘கல்வித்தந்தைகள்’ திடீரெனத் தமது பங்குக்கு,தங்களுடைய கல்வி நிறுவனங்களை பொலிவுறு விரைவுக் கற்றல் நிலையங்களாக மாற்றியமைத்துக் கொண்டு தாங்கள்தாம் உண்மையான கல்வி மூதாதைகள் என்று நிறுவிக் காட்டுவதற்கு ஒருவரோடொருவர் போட்டி போட்டுக்கொண்டு மோதுகின்றனர்.இந்தப் பந்தய ஓட்டத்தின் மூலம்,அவர்களுடைய கல்வி வியாபாரத்தை சந்தைப்படுத்துவதற்கான ஒரு திறப்பைக் கொடுக்கும் என்பதென்னவோ உண்மையே. எவ்வாறாயினும்,இந்தக் கபடப் போட்டியில்,கல்விப்புலத் தலைவர்கள் என அழைக்கப்படும் மிகுந்த அனுபவத்திறன் வாய்ந்த அறிவார்ந்த பேராசிரியர்கள், இயக்குனர்கள், துணைவேந்தர்கள் போன்றோரின் குரல்களும்,சிந்தனைகளும் பெருமளவுக்கு அறியப்படாமலே போகின்றன.இதற்கு காரணங்கள் இரண்டாக இருக்க வேண்டும்:அவரவர் வாழ்க்கைப்பாடு தொடர்பான பிரச்சினையாக இது இருக்கலாம்;தங்களுடைய எஜமானர்களிடம் இருந்து படுமோசமான எதிர்வினைகள் வருமோ என்ற அச்சம் ஒரு காரணமாக இருக்கலாம்;அல்லது,அவர்கள் முற்றாகக் கீழ்ப்படி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கக் கூடும்.

தோழமை ஆற்றல் தொகுதியான மாணவர் சமுதாயம் என்ன செய்யப் போகிறது?மேற் கூறப்பட்ட ‘உறுதிப்படுத்தும்’வகைப்பட்ட கல்வி என்ற சூழலின் கீழ்,எல்லாக் காலங்களிலும் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் சமூகம் அது.இப்போதைய நிலையில்,இத்தகைய அடிமைத்தளை களில் இருந்து தன்னைத்தானே விடுதலை செய்து கொள்வதில் அது எவ்விதக் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த பங்கினையும் ஆற்ற முடியாது.அவர்களுள் ஆகப்பெரும்பான்மை யானோருக்கு இணைய இணைப்புகள்,தரவுகளைக் கையாள்வதற்கான திட்டங்கள்,டிஜிட்டல் கருவிகள் இவை எதுவும் இல்லாத நிலை உள்ளது.இந்த உண்மைக்கு மாறாக,புதிய தாராள மய உலகத்தால் இணையவழிக் கல்வி முறையில் கல்வி கற்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் ஆளாக்கப்படுகின்றனர். இத்தகைய தடைக்கற்கள் இருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் ஆன்லைன் தேர்வுகள் தர்க்க அடிப்படையற்றவை என்பதோடு கூட,கற்றல் மதிப்பீட்டின் தத்துவத்திற்கே அடிப்படையில் விரோதமானவை.

மேலே நிகழ்த்தப்பட்ட விவாதம்,குறைந்தபட்சம் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறது: இப்போதைய இந்த ஆன்லைன் கற்றல் மற்றும் மதிப்பீட்டு வளர்ச்சிப் போக்கு என்பது கோவிட்-19 சிக்கல் என்ற ஒற்றைக் காரணத்தினால் மட்டுமே மேலெழுந்து வந்ததல்ல என்ற உண்மைதான் அது. ஏராளமான சர்வதேசக் கல்வி நிலையங்கள்,முகமைகள்,சந்தை சக்திகள் ஆகியவற்றின் கூட்டுச்சதி என்பதே நிதர்சனமாகும்.எப்படியிருப்பினும்,இது உருவாக்கும் நீண்டகால எதிர் விளைவுகள் மனிதகுலத்துக்குப் பெரும் பேரழிவைக் கொண்டு வருவனவாகவே அமையும்; காரணம்,அவை கல்வியை மேலும் கூடுதலாக வர்த்தகப் பொருளாக்கும். கல்வித் தரத்திற்கு இடையே நிலவும் இடைவெளியைப் பெருமளவுக்கு அதிகரிக்கச்செய்யும். சமூகப் பொருளாதாரத் தரத்தை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளும்; சமுதாயத்தின் கற்பித்தல் திறனைக் குறைக்கும்.

Additional positive COVID-19 tests puts Wisconsin cases over 600

கோவிட்-19   பெருந்தொற்றின் விளைவாக ஏற்பட்டுள்ள இந்த ஊரடங்கு நிலை தற்காலிகமானது மட்டுமே;இதைப் போன்ற எத்தனையோ பல பெருந்தொற்றுகளை உலகம் தொடர்ந்து சந்த்தித்து வந்திருக்கிறது. அவை எல்லாவற்றையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறது. மனிதகுலம் இந்த முறையும் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு உயிர்வாழும்; எனவே கல்வியும் அவ்வாறே மீண்டு வந்து விடும்.எனவே,கோவிட் -19  கல்வியைக் கொன்று விடும் என்று அஞ்சி நடுங்கி,ஏன் அபாயகரமான மாற்றுவழிகளை வற்புறுத்தி நடைமுறைப்படுத்தப் போட்டி போட வேண்டும்?சுயநலமிக்க சக்திகளின் சதிகளில் இருந்து நாம் கல்வியைக் காப்பாற்றுவோம்.இந்தக் கடுமையான சிக்கல் நிறைந்த சூழலில்,கல்விக்கு இந்தச் சமூகம் எதையேனும் செய்தே தீர வேண்டுமெனில்,மேற்கண்ட கடமையை மட்டுமே நிறைவேற்றிட வேண்டும்.அப்படிச் செய்யத் தவறும் பட்சத்தில், இந்த நெருக்கடி நாள்களில் திணிக்கப்பட்டு வரும் மாற்று ஏற்பாடுகள், தொடர்ந்து வழக்கமானவையாக்கப் பட்டு விடும்;பிறகு ஒரு நாள்,இவையே கல்வியின் நிரந்தர விதிகளாக்கப்பட்டு விடும்!

Junior Vikatan - 08 December 2019 - “ஆசிரியர்கள் ...
பேரா.லெ.ஜவகர் நேசன்

கட்டுரையாளர்,மைசூரு ஜே எஸ் எஸ் அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்.

Show 1 Comment

1 Comment

  1. Prasanna

    Sir, கொஞ்சம் நெடிய, அனால் நல்ல கட்டுரை… நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *