ஒரு மாதத்திற்கு முன்பு, அண்டை வீட்டுக்காரருக்கு திடீரென்று நெஞ்சு வலி… ஓடிச் சென்று பார்த்தபோது, எந்தவிதமான பயிற்சியும் அனுபவமும் இல்லாத நமக்குக் கூட, அது மாரடைப்புதான் என்ற சந்தேகத்தைக் கொடுத்தது. மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருதய நோய் சிறப்பு மருத்துவமனை. சென்றதும் மாரடைப்பு உறுதி செய்யப்பட்டது. ஒன்றரை லட்சம் செலவாகும் என்றார் மருத்துவர். உடனே ஓகே சொல்லிவிட்டார், அவரது மனைவி…

அரை மணி நேரத்தில் மருத்துவர் மீண்டும் அழைத்தார். எங்கள் மருத்துவ வசதிக்கு இதனை சரி செய்ய இயலாது உடனடியாக கோவை அழைத்துச் செல்லுங்கள் என்றார்.

“சரி. ஆம்புலன்சுக்கு சொல்லுங்கள்”என்றேன். “இதுவரை ஏற்பட்ட செலவுக்கு நாற்பதாயிரம் ரூபாய் கட்டி விட்டு செல்லுங்கள்” என்றார். ஆனால் அவசரமாக கூட்டிச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். அந்த இரவு நேரத்தில் கூட அரைமணிநேரத்தில் பணத்துடன் திரும்பிச் சென்றேன். “என்ன இவ்வளவு தாமதம்? என்று கடிந்துகொண்டார். உயிரோடு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றார். யாரால்? எப்படி? இந்தக் காலதாமதம் ஆனது? அதைப்பற்றியெல்லாம் அப்பொழுது பேசிக்கொண்டிருக்க நேரமில்லை.

அடுத்து, ஆம்புலன்ஸ்க்கு பத்தாயிரம் ரூபாய். கோவை சென்றதும் உடனே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அரை மணி நேரத்தில் இரண்டரை லட்சம் செலவாகும். இப்பொழுது எவ்வளவு செலுத்துகிறீர்கள்? என்று கேட்டார்கள். அவர் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். அரசின் காப்பீடு தவிர தனியார் இன்சூரன்ஸ் கூட வைத்திருந்தார். இதர சராசரி இந்திய குடிமக்களின் நிலை என்ன?

முதல் அரை மணி நேரத்தில் 50 ஆயிரம் எந்தவிதமான பலனும் இன்றி முடிந்தது. அடுத்த சிகிச்சைக்கு பணத்தை கொடுத்தால் தான் எடுத்துச் செல்ல முடியும் என்றால், எத்தனை பேருக்கு இதுபோல சாத்தியம் ஆகும்..?

பொது சுகாதாரம் பின்னடைவை அடைந்தது ஏன்…?

எந்தவிதமான முக்கிய சிகிச்சைகளுக்கும் தனியார் மருத்துவமனைகளையே நாடவேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால் இந்தவகையான தனியார் மருத்துவமனைகளில், தற்போது பெரும்பாலும் மருத்துவர்கள் இல்லை. வந்துபோகும் ஓரிரண்டு நோயாளிகளுக்கு செவிலியர் வழியாகவே மருந்து எழுதி கொடுக்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் ஒரு பெரும் தொற்று நோய் நம் நாட்டில் பரவத் தொடங்கியுள்ளது. பல்கிப் பெருகியுள்ள தனியார் மருத்துவமனைகள் கொரோனா என்னும் கொள்ளை நோய் தடுப்ப்புக்கு பயன்படாது என்று அரசும் மக்களும் ஒரு நொடியில் புரிந்து கொண்டுவிட்டனர்.

Health in India: Our Solution to a Public System in Crisis ...

இந்த சூழலில் கூட தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யலாம் என்று அரசு யோசிக்கவில்லை. முதல் கட்டமாக, பள்ளிகள், கல்லூரிகள், கல்லூரிகளில் உள்ள விடுதிகள் ஆகியவற்றைத் தான் ஆராயத் தொடங்கினர். ஒருவேளை தனியார் மருத்துவமனைகளில் உள்ள இடங்கள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிந்ததால், அடுத்தகட்டம் பற்றி யோசிக்கலாம். தவறில்லை. ஆனால், முதல் கட்டத்திலேயே தனியார் மருத்துவமனைகள் அரசின் ஞாபகத்திற்கு வரவில்லை என்றால் இதை என்னவென்று கூறுவது..?

ஒருவழியாக காப்பீட்டு திட்டம் நடைமுறை படுத்தப் படும் தனியார் மருத்துவமனையில் 25 விழுக்காடு என்ற முடிவுக்கு வந்திருக்கிறது அரசு. எல்லாம் தனியுடமை என்றிருக்கும் அமெரிக்க நாட்டில் கூட விபத்து மாரடைப்பு அவசர சிகிச்சை கேட்டு வருவோருக்கு இறுதிவரை இலவசமாக மருத்துவம் பார்க்கிறார்கள். தனியார் மருந்துக் கம்பெனிகளை டிரம்ப் விரட்டுகிறார். ஆனால், அந்த நிலை கூட, நம் நாட்டில் இல்லை.

எது எப்படியோ, கொள்ளை நோய் ஒன்று வந்துவிட்டால், கொத்துக் கொத்தாய் மனிதர்களை தாக்கினால், எவ்வளவு பெரிய முதலாளித்துவ நாடும் தன் நாட்டிலுள்ள தனியார் மருத்துவமனைகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தே தீர வேண்டும் என்பதற்கு இந்த தொற்று நோய் ஓர் உதாரணமாக இருக்கிறது. ஸ்பெயினில் அனைத்து தனியார் மருத்துவமனைகளில் அரசுடமையாக்கப்பட்டது. இப்படி கொள்ளை நோய் வந்தால் கொஞ்ச காலத்திற்கு தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகள் போல செயல்படும். அல்லது அரசு மானியத்தில் அவை செயல்படும்.

இது போதுமா? நிலைமை சீரடைந்தவுடன் எப்போதும்போல தனியார் மருத்துவமனைகள் இயங்கலாம். கொள்ளை லாபம் அடிக்கலாம் என்று இருந்துவிடப் போகிறோமா?

பொது சுகாதாரத்தின் கூடுதல் தேவை..

புதிய தாராளமயமாக்கல் கொள்கையால், ஏழை பணக்காரன் என்ற இடைவெளி அதிகரித்துள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும் என்று உலக வங்கியே ஒத்துக்கொள்கிறது. பணம் இருந்தால் மட்டுமே மருத்துவம் செய்ய முடியும் என்கின்ற சூழலும் அதிகரித்து வருகிறது. பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர் ஆகும் அதே நேரத்தில், புதிய தாராளமயம் கொள்கையால் 2008 இல் உலகப் பொருளாதார நெருக்கடி தோன்றியது. இந்தியாவிலும் அதன் விளைவாக அதிகரித்துவரும் வராக்கடன், வங்கி நெருக்கடி, விவசாய நெருக்கடி, சிறு தொழில் நெருக்கடி ஆகியவை அதிகரித்து வருகிறது. இத்தகைய புதிய தாராளமய பொருளாதார நெருக்கடிகளும் ஒருவகை தொற்று நோய்தான்.

More Than Half of India Rejects Government Medical Care

தாராளமயப் பொருளாதாரக் கொள்கைத் தொற்று நோய்…

இந்த பொருளாதார தொற்றுநோய் தற்போது சுகாதார தொற்று நோய் கோவிட்- 19 உடன் ஒன்று சேர்த்துக் கொண்டது. இதனால் மேலும் சிக்கல் தீவிரமடைந்து உள்ளது. சுகாதாரத்தை தனியார்மயமாக்கியது மட்டுமல்ல, அதனைக் கார்ப்பரேட் மயமாக்க வேண்டும் என்று உந்தித் தள்ளுகிறது புதிய தாராளமயம். அதில் நீட் தேர்வு உள்ளிட்ட பெரும் வெற்றியும் கண்டுள்ளது. இப்போது, புதிய பொருளாதார நெருக்கடியும், சுகாதார நெருக்கடியும் தீவிரமடைந்து, அரசு மருத்துவமனைகள், பொது சுகாதாரம் ஆகியவை அவல நிலையில் உள்ளது என்ற கவலை பலரைத் தொற்றிக் கொண்டது. இந்த கவலை தொற்றுநோய் முடிந்த பிறகும் நம்மிடம், தொக்கி நிற்க வேண்டும். அப்போது தான் இதற்கான தீர்வுகளை நோக்கி நாம் நகர முடியும்.

அனைவருக்குமான பொது விநியோக முறை அடித்தளம் இன்றிப் போனது ஏன்?

எந்தத் தாராளமயம் அரசு சுகாதாரத் திட்டங்களையும் அரசு மருத்துவ மனைகளையும் அவல நிலைக்கு தள்ளியதோ அதே புதிய தாராளமயம் தான் பொது வினியோக முறையை முற்றிலும் கூடாது என்றது. அனைவரும் சந்தை சக்திகளை நம்பியே அதாவது வெளிச் சந்தையிலேயே தங்கள் அத்தியாவசிய உணவு தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்று கூறியது. இந்தியாவின் சூழ்நிலை, இந்தியாவின் வாக்குவங்கி, முதலாளித்துவம் அதனை அனுமதிக்கவில்லை. எனவே வறுமைக் கோட்டிற்கு மேல் வறுமைக்கோட்டிற்கு கீழ் என்று ஏழை எளிய மக்களை இரண்டாகப் பிரிக்க நிர்பந்தம் செய்தது. அதில் வெற்றியும் கண்டனர். இதில், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள், தன் சுய விழிப்புணர்வு காரணமாக, கொஞ்சம் தாக்குப் பிடித்துக்கொண்டது. மற்ற மாநிலங்களில் குறிப்பாக வடமாநிலங்களில் அப்படி நடந்து கொள்ளவில்லை. நாட்டின் இதர பகுதிகளை ஒப்பிடும்போது நமது பொது வினியோகம் மேம்பட்டது.

Corona Virus: क्या चीन ने मांगी अपने 20 हजार ...

ஆனால், இன்னும் கூட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் பொது வினியோகம் முறைமூலம் வழங்கப்படுவது இல்லை. தொற்று நோய் கொள்ளைநோய் என்று வந்துவிட்டால், உடனே அத்தோடு சேர்த்து ஊரடங்கு, தனிமைப்படுத்தல் வந்துவிடும். வசதி படைத்தோர் ஆறு மாதத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி குவித்து விடுவார்கள். நடுத்தரவர்க்கம் பொருளாதார வசதி வாய்ப்புள்ளவர்கள் தங்கள் தேவைக்கு மிஞ்சிய பொருள்களை முண்டியடித்து வாங்கி வைத்துக் கொள்வார்கள். பொருட்களின் வரத்து மிகவும் குறைவாக இருப்பதாலும் போக்குவரத்து சாதனங்கள் இன்மையாலும் விலைகள் செங்குத்தாக ஏறிவிடும் இந்த சூழ்நிலையில்தான் பதுக்கல்காரர்கள் தங்கள் கைவரிசையை காட்டுவார்கள். எனவே அத்தியாவசிய உணவு பண்டங்களின் விலை மென்மேலும் செங்குத்தாக உயரும். இந்த நிலையில் கூட விலையைப் பொருட்படுத்தாமல் அல்லது அதனைத் தாங்கிக் கொள்ளும் சக்தி நடுத்தர வர்க்கம் மற்றும் அதற்கு மேல் உள்ள வர்க்கத்திற்கு இருக்கிறது. ஆனால் பெரும் பகுதி சாதாரண மக்கள்?

இவர்கள் வலுவான பொது விநியோக முறை இல்லாமல் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாது. மக்கள் தொற்று நோயைக் காட்டிலும் சோறின்றி செத்து மடியும் அவலம் கூட நேர்ந்து விடலாம். அரசின் நிவாரண உதவிகள் யானைப் பசிக்கு சோளப் பொறி ஆன கதையாக மாறிவிடும். இதனைப் பொதுவான வலுவான அனைவருக்குமான பொது விநியோக முறையின் மூலமாகவே சரி செய்ய முடியும்.

தொற்று நோய்களில் இருந்து மீள இரட்டை தேவைகள்

இன்றைய நிலையில் நாடு ஒரு பெரும் தொற்று நோய் அபாயத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்க இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று பொது சுகாதாரமும் சேவைகளும் தனியார்மயமானது. இரண்டு வலுவான பொது விநியோக முறை இன்றி இருப்பது. புதிய தாராளமயம் இந்த இரண்டு அமைப்புகளுக்கும் சற்றேறக்குறைய முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. கல்வி மருத்துவம் சுகாதாரம் உணவு என்ற எல்லாத் துறைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் வந்துவிட்டது. ஒட்டுமொத்தமாக, கோவிட் 19 என்னும் கொடிய தொற்று நோய் நமக்கு என்ன பாடம் கற்பிக்கிறது? புதிய தாராளமயக் கொள்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். கல்வி சுகாதாரம் பொது விநியோகம் ஆகியவை ஆகிய துறைகள் அனைத்தும் அனைத்து மக்களுக்கும் பயன்படும் பயன்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்கிறது தொற்று நோயிலிருந்து மீண்டெழுந்த பிறகு இதுபற்றி சிந்திக்க போகிறோமா? அல்லது நெருக்கடி நிலை முடிந்ததும் எப்போதும் போல் அவரவர் வேலையில் கண்ணும் கருத்துமாக கவனம் செலுத்தப் போகிறோமா? என்பது தான் இப்போது நம் முன்னால் இருக்கக் கூடிய கேள்வி.

கட்டுரை ஆசிரியர் – பேரா.நா.மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *