ஆயிஷா இரா நடராசன் எழுதிய ஏன் சாகிறோம் (Why We Die?) – நூல் அறிமுகம்
தமிழின் முன்னணி அறிவியல் வரலாற்றாளர் பல விருதுகள் பெற்ற மூத்த படைப்பாளி 180-க்கும் மேற்பட்ட புத்தகங்களின் ஆசிரியர் முன்னணி வார மாத இணைய இதழ்களில் தொடர்ந்து அறிவியல் குறித்து எழுதி வருபவர் அகில இந்திய அறிவியல் புனைக்கதை எழுத்தாளர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல அறிவியல் அமைப்புகளின் செயல்பாட்டாளர் என அறியப்படும் ஆயிஷா இரா நடராசன் அவர்கள் புக்டே இணையதளத்தில் தினந்தோறும் எழுதிய அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு
காந்தக் கணினிகள்
சூழலியல் புத்தகங்கள்
ரூபிக் கியூபிக்
அயல் கிரக வாசிகள்
மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ஏவுகணைகள்
சுனிதா வில்லியம்ஸ் நிலை
ரோபோட் நாய்கள்
மனிதன் ஏன் சாகிறான்
கல்கி 2008 98 படம் குறித்த அறிவியல் பார்வை
கல்பாக்கம் அணு உலையின் சிறப்பு அம்சம்
குவாண்டம் எண்கள்
தற்கொலை செய்து கொள்ளும் ரோபோட்டுகள்
என பல்வேறு தலைப்புகளில் பல்வேறு தளங்களில் நின்று எழுதப்பட்ட 15 அறிவியல் கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு கட்டுரையிலும் உலகின் பல முன்னணி எழுத்தாளர்கள் எழுதிய அறிவியல் தொடர்பான நூல்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இன்றைய அறிவியல் மனிதனின் அடுத்த தலைமுறையை எப்படி பாதுகாப்பது என்ற அடிப்படையில் எதிர்காலத்தை நோக்கி கற்பனைகளை உருவமாக்கத் துடிக்கிறது. அத்தகு புதிய புதிய கருவிகளை கண்டுபிடிப்பதிலும் அதன் வழியே மனிதனின் செயல்பாடுகளை எளிமைப்படுத்துவதும் இன்றைய காலகட்டத்தின் அவசியமாகப் போகிறது.
இந்த நூலில் குறிக்கப்படும் நிறைய நூல்களும் அறிவியலின் வழியே நின்று சுற்றுச்சூழலை காப்பதற்கும் தேசத்தை பாதுகாப்பதற்கும் உதவி செய்கின்றன
ஒரு காலத்தில் அறிவியல் புனைக்கதைகளில் இடம்பெற்ற ஒரு கண்டுபிடிப்பு தற்போது நேரடியான பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. கணினி என்பது ஏறக்குறைய மனித வளங்களின் வேகத்தில் செயல்படுதால் செலவிடக் கூடியதாக மாறப்போகிறது அவற்றை நிறைவேற்றுவதற்கு காந்த கணினிகள் பயன்பட போகின்றன நம்முடைய வழக்கமான தட்டுச்சு வடிவத்தை காந்த சுற்றுகளாக மாற்றப் போகிறார்கள் நாம் நினைப்பதை காந்தக் கணினிகள் திரையில் காட்டி விடக்கூடிய சூழல் விரைவிலேயே ஏற்படக்கூடும்.
நாம் வாழும் இந்த உயிர் கிரகம் ஏகாதிபத்திய அரசியலாலும் முதலாளித்த்துவ நாடுகளாலும் வாழவே முடியாத பாலை கிரகமாக மாற்றப்பட்டுக் கொண்டு வருகிறது. இன்றைய சூழலியல் போராட்டத்தில் தட்பவெட்ப முதலாளியம் இயற்கை பேரழிவு வாதம் சூழலியல் மார்க்சியம் என மூன்றும் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன ஓர் ஆரோக்கியமான இருப்புக்கு தேவையான சுற்றுச்சூழல் அரசியலை மீட்டெடுப்பதே காலத்தின் தேவையாக அமைகிறது. உலகம் எப்படி எல்லாம் சீரழிந்து விட்டது என்பதையும் சுற்றுச்சூழலை மறு சீரமைப்பு செய்வதற்கும் ஒன்பது சூழலியல் புத்தகங்களை கோடிட்டுக் காட்டும் ஆசிரியரின் இரண்டாவது கட்டுரை வழியாக சுற்றுச்சூழல் சீர்கேட்டை நாம் காலத்தின் அவசர அவசியமாக கருத வேண்டியது முக்கியம். இந்த நூல்களின் வழியே மிகத் தெளிவான அரசியல் சித்தாந்தத்தை நாம் அடைய முடியும். சமூக உறவுகளையும் இயற்கையோடான புரிதலையும் மறுபரிசீலனை செய்யத்தக்க அடித்தட்டு மக்களின் உயிரின் ஆதாரங்களை மீட்கும் மக்கள் போராட்ட ஒருங்கிணைப்பு இன்றைய காலத்தின் தேவை. நாம் எப்படி இந்த சூழலியல் சதிகளும் புதைகுழியிலும் சிக்கினோம் என்பது குறித்த வரலாற்று பொருள் முதல்வாத அறிவை பகிர்தலும் ஒரு பொது சிவில் போராட்டமாக முன்னெடுப்பது என்பது குறித்து சிந்திப்பதும் செயலில் இறங்குவதும் இன்றைய உடனடி தேவை ஆகும்.
விண்வெளிக்கு ஒரு ராக்கெட்டை அதாவது ஏவுகலத்தை செலுத்துவதற்கு பல கோடி ரூபாய் செலவாகும் அப்படி செலுத்தப்படுகின்ற அவை தாங்கள் சுமந்து செல்கின்ற செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுத்தி விட்டு அப்படியே கீழே விழுந்து விடுகின்றன இப்படி விழுகின்ற பல பாகங்களை உலகம் முழுவதும் சென்று தேடி எடுத்துக் கொண்டு வருகிறார்கள் இப்படி வீணாக்கப்படுவதை விட ஒரு விண்கலம் வானை நோக்கி பறந்து விட்டு தன் கடமையை முடித்துவிட்டு தன்னுடைய இடத்திற்கு பத்திரமாக எந்தவிதமான சேதாரமும் இன்றி திரும்ப வந்து நிலை கொள்வதை விண்வெளி உறுதி இயல் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக வேகமாக ஆய்வுகளின் மூலம் நிரூபிக்க பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.அத்தகு சாதனையை இஸ்ரோவின் திட்ட இயக்குனரான முத்துப்பாண்டியன் செய்து முடித்து இருக்கிறார்.
மூன்றாவது முறையாக விண்வெளிக்கு சென்று இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்பி வர இயலவில்லை. பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவர் திரும்பி வருவது குறித்து பல்வேறு விதமான ஐயப்பாடுகள் எழுகின்றன. மூன்று முறை விண்வெளியில் வலம் வரும் சுனிதா வில்லியம்ஸ் ஒரு மிகப்பெரிய போராளியாக தன்னை நிரூபித்துக் காட்டியவர். அவர் திரும்பி வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக நாசா அறிவித்துள்ள நிலையில் தனது பணியில் தீவிரமாக ஈடுபட்டு ஒரு நிமிடத்திற்கு 17 படங்கள் என்று சுனிதாவில்லியம்ஸ் தொடர்ந்து புவிக்கு அனுப்பி வருகிறார் என்பது அவரது துணிச்சலை காட்டுகிறது.
இந்திய ராணுவம் கடந்த ஆண்டு அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் 100 மல்டி யுட்டிலிட்டி எக்யூப்மென்ட் என்கிற தொழில்நுட்ப நாய்களை 300 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. ரோபோட் நாய்கள் இந்திய ராணுவத்தில் ஈடுபட்டு பல விதமான பாதுகாப்பு தளங்களில் செயல்படப் போகின்றன. இந்த வகை நாய்கள் நான்கு கால்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு காலிலும் மூட்டுக்கு சக்தி அளிக்கும் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன இவற்றின் மோப்ப சக்தியாக ரேடார் பயன்படுகிறது.
நோபல் அறிஞர் வெங்கி ராமகிருஷ்ணன் அவர்கள் ஏன் சாகிறோம் (Why We Die?) என்ற தலைப்பில் மனிதர்களின் மரணம் குறித்து எழுதியுள்ள நூல் 12 அத்தியாயங்களில் மனிதருடைய வாழ்க்கையின் வேகமான வளர்ச்சியையும் அடுத்தடுத்து படிநிலைகளையும் குறுக்கு விசாரணை செய்கிறது. இதன் வழியே ஒரு மனிதன் மரணம் அடைவதற்கு என்ன காரணம் என்ற அறிவியல் ரீதியான ஆய்வுகளை வெங்கி ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.
அணு உலை ஆபத்தானதா அதன் சாதனைகள் மற்றும் அணு உலை குறித்த சோதனைகள் இரண்டையும் பற்றியுமே நம்முடைய பாடப் புத்தகங்கள் எவ்விதமான கருத்தாக்கங்களை மாணவர்களுக்கு சொல்கின்றன என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. கல்லூரி அளவில் இயற்பியல் பாடமாக வைக்கப்பட்டாலும் இந்திய அளவில் அணு குறித்த அறிவியல் விஞ்ஞானிகளின் சாதனைகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படவே இல்லை. அணு உலைகள் பற்றிய முழுமையான அறிவியல் பார்வையை இந்திய மக்களுக்கு உணர்த்துதல் அரசாங்கத்தின் தலையாய கடமை என்பதை கல்பாக்கம் அணு உலை தொடர்பான கட்டுரை விவரித்துச் செல்கிறது.
ஒரு காபியின் விலை 5000 நம்ம முடிகிறதா? அதுதான் காபி கோபிலோ காக் என்ற காபி. வியட்நாமில் மலை உச்சியில் முளைக்கும் இந்த காபிகளை ஒருவகை பூனை உணவாக உட்கொள்கிறது. பிறகு இந்த பூனை மலை உச்சியில் இருந்து கீழே வந்து மலத்தை வெளியிடுகிறது. அதன் மூலம் காபிக்கொட்டைகளை சேகரித்து ரசாயன முறையில் கழுவி காபியாக தயாராகிறது அதன் விலை 5000 ரூபாய். பூனைகள் சாப்பிட்டு செரிமானம் செய்யப்பட்ட காபி கொட்டைகளை உலகம் முழுவதும் தேடிச் சென்று சேகரித்து சுவையான காப்பி என்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது உலகம்.
அறிவியல் என்பது என்ன? அதன் அடுத்த அடுத்த வளர்ச்சி நிலைகள் யாருக்காக? அறிவியலின் மூலம் விஞ்ஞானிகளும் அரசும் எதை நிரூபிக்க போராடுகின்றன? ஒவ்வொரு மனித மனங்களுக்குள்ளும் எழும் பல்வேறு விதமான கேள்விகளுக்கும் ஐயப்பாடுகளுக்கும் பதில் அளித்தல் மட்டுமே அறிவியலின் வேலை இல்லை. சரியான கேள்விகளை சமூகத்தில் விதைப்பதைக் குறித்தும் அதன் வழியே சமூகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதும் அறிவியலின் முக்கியமான பயன்பாடாக மாற வேண்டும். ஒவ்வொரு மனங்களிலும் அறிவியலின் மீதான ஆர்வத்தையும் அதன் வழியே சமூகத்திற்கு தேவையான முன்னேற்றங்களுக்கு அறிவியலை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுகிறது இந்த நூல்.
நூலின் தகவல்கள் :
ஏன் சாகிறோம்
நூல் : ஆயிஷா இரா நடராசன்
ஆசிரியர் : அறிவியல் கட்டுரைகள்
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
பக்கம் : 128
விலை : 120
முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2024
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/why-we-die/
நூல் அறிமுகம் எழுதியவர் :
இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது)
அன்பு மொழி(2024) என நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.