முரட்டு குதிரை விளைவு (Wild Horse Effect)
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்” – திருக்குறள் (131)
ஒழுக்கமும், மனக்கட்டுப்பாடும் மனிதனை உயர்விற்கு கொண்டு செல்லும் மிகமுக்கியமான இரண்டு வழிகள். எனவேதான் ஒழுக்கத்தை உயிரைக் காட்டிலும் மேலானதாக கொள்ள வேண்டும் என்று இக்குறள் மூலம் வள்ளுவன் மனித குலத்திற்கு அறைகூவல் விடுக்கிறார். அதன்வழிப்பட்டதே இந்த Wild Horse Effect என்று உளவியலாளர்களின் மூலம் அடையாளப்படுத்தப்படுகிறது. உளவியலாளர் இம்முறையானது கட்டுப்பாடற்ற ஆசைகள், உணர்வுகள், கவனச்சிதறல்கள் மற்றும் வலிகள் ஆகியன மனித மனதை பலதிசைகளில் இழுத்து மனிதனை அழிவு பாதைக்குக் கொண்டு செல்லும் என்றும், அத்தகைய சூழ்நிலையை ஒருவன் எவ்வாறு கையால வேண்டும் என்பதையும் பற்றி இந்த விளைவு நமக்கு விளக்குகிறது.
ஒரு தனி மனிதனின் மாற்றமானது, ஒரு குடும்பத்தின் வெற்றியாக மாறுகிறது. ஒரு குடும்பத்தின் மாற்றமானது, ஒரு ஊரின் வெற்றியாக பார்க்கபடுகிறது. ஒரு ஊரின் மாற்றம், ஒரு மாவட்டத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஒரு மாவட்டத்தின் மாற்றம், ஒரு மாநிலத்தின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. அந்த மாநிலம்தான் ஒரு நாட்டினையே வழிநடத்துகிறது அப்படிப்பட்ட நாடே பல நாடுகளுக்கு முன்உதாரணமாக திகழ்கிறது. எனவே மாற்றம் என்பது தனி மனிதனிடமிருந்து துவங்க வேண்டும். அந்த மாற்றம் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் மாற்றமாக இருக்க வேண்டும். இதனை தனிமனிதனின் உளவியல்தான் தீர்மானிக்கிறது. அதாவது ஒரு தனிமனிதன் எவ்வாறு சிந்திக்கிறான் எவ்வாறு உணர்கிறான், எவ்வாறு முடிவெடுக்கிறான், மேலும் அந்த முடிவினை எவ்வாறு செயல்படுத்துகிறான் என்பதே அவனின் உளவியல் என்று அறிவியல் கூறுகிறது. நற்சிந்தனைகள் சமுதாயத்தில் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்தும் அதற்கு மாற்றாக துர்சிந்தனைகள் இந்த சமூக அழிவுகளுக்கு வித்தாக அமைந்துவிடும்.
மனிதனின் வெற்றி, தோல்வி, உறவுகள், தலைமைத்திறன், தன்னம்பிக்கை, கோபம், பயம், ஆசைகள், கவனம் என இன்னபிற நிகழ்வுகளுக்கு பின்னால் உளவியல் என்னும் அறிவியல் செயல்படுகிறது என்று கூறினால் அது மிகையல்ல. எனவே அதுபோன்ற ஒரு மனித உளவியல் நடைமுறையை விளக்கத்தான் இந்த Wild Horse Effect என்ற முறை உளவியலாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது Wild Horse Effect என்பதனை ‘முரட்டு குதிரை மனநிலை விளைவு’ என்று தமிழில் கூறுவார்கள். இதனை ஒரு சிறிய எடுத்துக்காட்டின் மூலம் தெளிவாக விளக்கலாம். ஒரு பெரிய வனப்பகுதியில் காட்டு குதிரைகள் நிறைய மேய்ந்து கொண்டிருக்கும் போது அதன் மீது பூச்சிகளை உண்பதற்காக வௌவால்கள் வந்து அமரும், பூச்சிகளை பிடித்து உண்ணும் ஆர்வத்தில் குதிரையின் சதைகளையும் கொத்திக் கீறும். அவ்வாறு கொத்திக் கீறும் போது குதிரைக்கு வலி ஏற்படும். இந்த வலியானது குதிரையின் திறனோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.
ஆனால், அந்த குதிரை பயத்தில் தன் திறன் முழுவதையும் பயன்படுத்தி மிகவும் வேகமாக ஓடிக்கொண்டே இருக்கும். பின்னர் மிகவும் களைப்படைந்து ஒரு கட்டத்தில் இறக்கும் நிலைக்குத் தள்ளப்படும். அதாவது இந்த உளவியல் உவமை நமக்கு உணர்துவது என்னவென்றால், முரட்டு குதிரை விளைவு (Wild Horse Effect) என்பது ஒரு சிறிய காயத்திற்கு அல்லது பிரச்சினைக்கு நாம் காட்டும் அதீத எதிர்வினை (Overreaction), அந்த பிரச்சினையையே ஒரு பெரிய அழிவாக மாற்றுவதைக் குறிக்கும். வாழ்வில் ஏற்படும் சிறு துயரங்களைக்கூட தாங்க இயலாது பெரும் முடிவுகளை எடுக்கத் தள்ளி மனிதனின் வாழ்கையை நிர்மூலம் ஆக்கிவிடும். மேலும் தற்கால சூழலில் நமக்கு மட்டும்தான் பிரச்சனை உள்ளது, உலகில் உள்ள அனைவரும் சந்தோசமாகத்தான் உள்ளனர் என்ற மனநிலையினை தற்கால சமூக ஊடகங்கள் தற்போது வெளிப்படுத்தி வருகின்றன. இக்காரணிகள் இளைஞர்கள் மத்தியில் மனஅழுத்தத்தை உருவாக்கி வெகு இயல்பாக தற்கொலை செய்து கொள்ளும் மனபோக்கினை அதிகமாக்கி உள்ளது என்பதை தினசரிகள் நமக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த சிந்தனையற்ற செயலையே முரட்டு குதிரை நிலைக்கு ஒப்பிடாகக் கூறலாம்.
இதனை திருவள்ளுவரின் வரிகளில் கூறவேண்டுமானால் இடுக்கன் அழியாமை அதிகாரத்தில் வரும் குறள் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது எனலாம்.
“இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்” – என்ற குறள் தெளிவாகக் கூறுவது என்னவெனில், வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது இயற்கை. இந்த சூழ்நிலையில் மேன்மக்கள் தம்மை துன்பங்கள் தாக்கும் போது சோர்ந்துபோய் கலங்கி தங்களின் இலக்குகளை மாற்றிக் கொள்வதில்லை. எனவே வள்ளுவர் இடுக்கன் அழியாமை என்றும் அதிகாரத்தில் சொல்வதைப்போல ‘இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்’ அதாவது துன்பத்திற்கும் துன்பம் தந்து ஓடச்செய்ய வேண்டும்.
இந்த முரட்டு குதிரை மனநிலை விளைவு உளவியல் உவமை நமக்கு உணர்த்துவது யாதெனில், நம் வாழ்வியலில் நிறைய துன்பங்கள் இக்கட்டான சூழ்நிலைகள், துரோகங்கள், ஏமாற்றங்கள் மற்றும் அவமானங்கள் நிகழும்போது நம் பலத்தினை அந்த சூழலில் இருந்து வெளிவருவதற்கு பயன்படுத்த வேண்டுமே தவிர நம்மை நாமே அழித்துக் கொள்ள பயன்படுத்தக் கூடாது. இத்தகைய சமயங்களில் வங்கக் கவிஞர் ரவீந்தரநாத் தாகூர் கூற்றையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும் “எங்கே மனம் அச்சமின்றி இருக்கிறதோ, அங்கே தலைநிமிர்ந்து நிற்கிறது” (Where the mind is without fear, there the head is held high) எனவே தைரியமாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும், மேலே கூறிய தவறுகளை களைவதற்கு முக்கிய பண்பாக கருதுவது எது என முற்படும் போது மீண்டும் வள்ளுவர் நமக்கு துணை நிற்கிறார் அதாவது
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் – திருக்குறள் (131)
ஒழுக்கம் மட்டுமே தவறுகளில் இருந்து மனிதனை மேம்படுத்தும் காரணி என்கிறார். அத்தகைய ஒழுக்கமும் மனக்கட்டுப்பாடும் மனிதனை உயர்விற்கு கொண்டு செல்கின்றன. அதனால் உயிரை காட்டிலும் ஒழுக்கத்தை முக்கியமாக கொள்ள வேண்டும் என்று இந்த குறளின் மூலம் வள்ளுவர் மனிதகுலத்திற்கு செய்தி விடுக்கிறார். கட்டுப்பாடற்ற ஆசைகள், உணர்வுகள் மற்றும் கவனச்சிதறல்கள் மனித மனத்தை பல திசைகளில் இழுத்து தவறான செயல்கள் செய்திட வித்திடும் என்றும், அந்த மாதிரியான சூழ்நிலைகளில் அதன் போக்கில் சென்று கரைந்து விடாமல் நம் திறன்களைக் கொண்டு அதிலிருந்து மீண்டு வளர்ச்சி பாதையில் பயணிக்க வேண்டும் என்பதையும் இந்த முரட்டுக் குதிரை விளைவு உளவியல் முறையின் மூலம் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு நாம் பயணிக்கும் போது தனிமனித முன்னேற்றம் என்பது உறுதியாக்கப் படுகிறது. அதன்மூலம் இந்த சமுதாயம் நல்லமுறையில் பயணித்து எதிர்வரும் தலைமுறைக்கு நன்மை பயக்கும் என்பது திண்ணம்.
📚 எழுதியவர்:

முனைவர் வீ.கிருஷ்ணகுமார்
உதவிப் பேராசிரியர்,
ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி,
போடிநாயக்கனூர் – தமிழ்நாடு.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


தனிமனித ஒழுக்கம் : It’s a great article Krishna. Will change our mind in positive way. Keep it up.”Wishing you the absolute best! Your hard work and dedication will surely lead to amazing things. Best of luck on this exciting new journey!”
Very good article about the impact of trifles in practical life and psychology.
Highlighting the present day living conditions and anxiety, especially of younger generations, with the analogy of Thirukural is superb.
Hats off to you on your success Dr. Krishnakumar.
மக்காக இருந்த எங்களது அறிவு மடையைத் திறந்தது எப்படி?
ஒரு சாதாரண மனிதன் தீர்மானிக்கும் எண்ணற்ற முடிவுகள் இந்த உலகத்தை வழி நடத்தி இயங்க ச் செய்கிறது என்ற உண்மைத் தகவலை உங்கள் நூலின் கதையின் மூலமாகப் புரிந்து கொண்டோம் நன்றி நன்றி…
நல்ல கட்டுரை. குறள் விளக்கம் அருமை. கட்டுரையாளர் தேவையில்லாத நிரப்பிகளை கொண்டு நினைத்து சுவாரசியத்தை குறைத்து விட்டார். ஆர்வமுடன் வந்தேன், ஆனால் தேடிவந்த விசயம் பாதி கட்டுரைக்கு மேல் தான் ஆரம்பிக்கிறது.