இதோ இந்த படம், 19ம் நூற்றாண்டின் சிறந்த புகைப்படங்களுள் ஒன்று இது. இன்றும் கூட இது இதன் பெருமையை இழக்கவில்லை. உலகையே மாற்றிய, வரலாற்றையே புரட்டிப் போட்ட, மனித இனத்துக்கு மகத்தான தொழில்நுட்பமாக பணிசெய்துகொண்டிருக்கின்ற, அற்புதமான படம் இது. அது மட்டுமல்ல இந்த படம்தான் முதல் நோபல் பரிசினை பெறுவதற்கும் அச்சாணியாக இருந்தது. ஆம் இது முதன் முதலில் 1895, நவம்பர் 8 ம் நாள் காலை எடுக்கப்பட்ட X கதிர்களின் (X ray photo) படம். அன்று இந்த படத்தின் மகத்துவம் தெரியாது கண்டுபிடிப்பாளருக்கு.. இன்று மருத்துவத் துறையிலும், தடயவியல் துறையிலும் இதுதான் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

X கதிர்களின் (X ray photo) கண்டுபிடிப்பு நிகழ்ந்தது, ஒரு தற்செயலான விபத்துதான். ஆனால் சந்தோஷமான, மக்களுக்கு மிகவும் பயன்படும் விபத்தாகிவிட்டது. இந்த கண்டுபிடிப்பின் பிதாமகன் வில்லியம் க்ரூக்ஸ் (william Crux ) தான். இவர் சூனியத்தில் மின்சாரம் எப்படிச் செயல்படும் என்று சோதனை செய்ய நினைத்தார் அதன் விளைவாக சூனியமாக்கிய கண்ணாடிக் குழல் வழியே மின்சாரத்தைச் செலுத்தும் சோதனையை இரவில் செய்து பார்த்தார். இங்கு மின்சாரம்/கேதோட் கதிர்கள் (Cathode rays ) நேர்கோட்டில் பயணிப்பதையும், காந்த புலத்தில் திசை மாறுவதையும் கண்டறிந்தார் இதன் மூலம் க்ரூக்ஸ் உலகம் முழுதும் பேசப்பட்டார். இதனைப் பல நாடுகளில் சோதனை செய்து பார்த்தனர்.

க்ரூக்சின் சோதனையை நடத்தியவர்களுள் ஜெர்மானிய வுர்த்ஜபுக் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் வில்ஹெம் ரான்ட்ஜெனும் (Wilhelm Roentgen)ஒருவர். அவர் படம் எடுப்பதிலும் வல்லுநர். இவர் தன்னுடன் பணிபுரியும் பிலிப் லெனார்ட் என்பவரின் குழலை வாங்கி அதில் பணியாற்றியபோது , அதில் எதோ ஒரு புலப்படாத ஒளியைக் கண்டறிந்தார். லேனார்த்டிடம் வாங்கிய கண்ணாடிக் குழலை ஒரு கருப்பு நிற அட்டையால் மூடி வைத்திருந்தார். அப்பத்தானே அதிலிருந்து எந்த வித ஒளியும் வெளியே செல்லாமல் இருக்கும் என்பதால். அப்ப ராண்ட்ஜென் அதன் அருகிலேயே பெரிய ப்ளாடினோ சயனைடு பூசப்பட்ட ஒரு காகிதத்தையும் வைத்திருந்தார். என்ன நிகழ்ந்தது தெரியுமா? அதிலே ஒளிரக்கூடிய ஒரு கறுப்புக் கோடு உண்டாகி இருந்தது. குழல் உள்ளே இருந்த ஒளி தனித் தன்மை வாய்ந்ததா இருந்தது. அது பற்றி அவருக்கு எதுவும் புரியலே எந்த புத்தகத்திலேயும் இது பற்றிச் சொல்லப் படலே. அவருக்கு ரொம்ப குழப்பமா.. இது என்ன, இது என்ன என்று மண்டையைக் குடைந்தது வினாக் குறிகள். ஆனால் அந்த புதிய புதிர் ஒளிமட்டும் உண்மையே.. ரான்ட்ஜென் தனது சோதனைக் கூடத்திலிருந்து தொடர்ந்து ஒருவாரம் வரை, அதாவது 7 நாட்கள் வெளிவரவே இல்லை.

ரான்ட்ஜெனின் சோதனைக் கூடத்தில் மேசையில் சூனியம் நிரம்பிய கண்ணாடிக் குழலோடு, காமிராவையும் உடன் வைத்திருந்தது ஓர் அரிய காட்சிதான் இதுதான் புதிய ஒளிக்கற்றைகளின் மேல் ஒரு புதிய ஒளி பாய்ச்ச புது சகாப்தம் படைக்கக் காரணியாக இருந்தது. ரான்ட்ஜென், அந்த ஒரு வாரக் கால கட்டத்திலும் தனது ஒவ்வொரு சோதனைகளையும் படமாகப் பதிவு செய்தார் இந்த அறைதான் உலகப் புகழ் பெற்ற அறை.. இதில் தான் ரான்ட்ஜென், புதிய புதிரான ஒளிக்கற்றைகளின் ஒவ்வொரு முடிச்சையும் மெல்ல மெல்ல அவிழ்த்தார்.. குழலுக்கு அப்பால் கதிர் வரும் திசையில் ஒரு போட்டோகிராபிக் தட்டை வைத்தார். மேலும் கதிர் வரும் திசைகளில் தனித் தனியான பொருட்களை வைத்தும் படம் எடுத்தார்.

First medical X-ray by Wilhelm Röntgen of his wife Anna Bertha Ludwig’s hand

ராண்ட்ஜென் எடுத்த படங்கள் அனைத்தும் நம் புறக் கண்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இந்த கதிர்களால் உலகை ஆராய முடியும் என்று உணர்ந்தார் ரான்ட்ஜென். அது மட்டுமல்ல, இந்த கதிரை உலோகக் கம்பியில் இணைக்கப்பட்ட ஒரு சக்கரத்தை மேல் செலுத்தும் பொது ஓர் அரிய உண்மை புலப்பட்டது. மரம் போன்ற பொருட்களை ஊடுருவிச் செல்லும், இந்த கதிர்களால் உலோகத்தைக் கடப்பது இயலாத காரியம் என்ற அற்புத உண்மையைக் கண்டறிந்தார். மேலும் கதிர்களை ஈயம் அலுமினியம் எனத் தடுப்புகளுடன் பாய்ச்சி படம் எடுத்தார். அலுமினியத்தை இது கடந்தது. எப்போது இந்த கதிர் ஒரு பொருளை ஊடுருவ வில்லையோ/தடை ஏற்படுத்துகிறதோ அப்போது இது அந்தப் பொருளின் நிழலை உருவாக்குகிறது என்பதுதான் அது.. அந்த படம் தான் இதோ நாம் பார்க்கும் படம். இது தொடர்பாய் ராண்ட்ஜென் ஒரு கட்டுரையும் எழுதி இருந்தார் அப்போது அந்த கட்டுரையின் தலைப்பு புது வகை கதிர்வீச்சு என்பதே. மேலும் இதனை இதுவரை அறியாததால், இந்த கதிர்களை எக்ஸ் கதிர்கள் என்றே அழைத்தார்.

இந்த எக்ஸ் கதிர்களைப் பற்றி ரான்ட்ஜெனுக்கு ஒரே கிக் ஆயிற்று. தன மனைவியான அன்னா பெர்த்தாவை 1895,டிசம்பர் 22 ம் நாள், தன் சோதனைக் கூடத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் பெர்த்தாவை கண்ணாடி குழலின் கீழ் கையை வைக்கச் சொன்னார் குழலுக்குள் மின்சாரமும், கதிர்களும் செலுத்தினார். உலகைக் கலக்கிய மருத்துவ உலகில் புதிய வரலாறு படைக்கப் போகிற அற்புதமான படம் பதிவாகியது அதுதான் ரான்ட்ஜெனின் மனைவி பெர்த்தா அணிந்திருந்த திருமண மோதிரம், அவரது எலும்புகளின் நிழல்களோடு உலகின் முதல் எக்ஸ் கதிர்கள் பதிவினை நிகழ்த்தின. உலக சரித்திரத்திலேயா முதன் முறையாக, உடலைத் துண்டாடாமல், கூறு போடாமல், ஒருவர உடலின் உள் உறுப்புகளை/எலும்புகளைப் ப் பார்க்கிற படம் உருவானது நாமும் அந்த படத்தைத்தான் இப்போதும் பார்க்கிறோம்.

X-ray of Albert von Kölliker’s hand

ராண்ட்ஜென் பின்னர் இந்த படத்தையும், அவரின் கட்டுரையையும் அறிவியல் கூட்டத்திற்கு எடுத்துச் சென்றும் விளக்கினார். பல அறவியல் விஞ்ஞானிகளுக்கும் அனுப்பினார். இந்த படம் உலகம் முழுவதும் பேசப்படும் நிலை உருவானது. 1896, ஜனவரி 5 ம் நாள் இந்த படம் வியன்னா நாளிதழ் ஒன்றில் வெளியானது.; செய்தியும் வெளியிடப்பட்டது. ஜனவரி 15 ம் நாளுக்குள் இந்த தகவல் உலகம் முழுவதும் காட்டுத் தீயாய் அறிவியல் வட்டாரத்தில் பற்றித் தீப்பிடித்து எரிந்தது. உலகம் முழுவதும் ரான்ட்ஜெனின் மனைவி பெர்த்தாவின் கைவிரல் மோதிரம் பற்றியே பேச்சு. இதைப் பற்றி மருத்துவ உலகில் பரபரப்பும் அதிவேகமாய் பற்றிக் கொண்டது.

ராண்ட்ஜென் 1896, ஜனவரி 23 ம் நாள், வுர்த்ஜபுக் பல்கலையில் இயற்பியல் கழகத்தில் எக்ஸ் கதிர்கள் பற்றிய உரையை உலகமே வியக்கும் வண்ணம் நிகழ்த்தினார் ராண்ட்ஜென். அவரின் உரைக்குப் பின் இந்த கதிர்கள் ராண்ட்ஜென் கதிர்கள் என்றே அழைக்கப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. ஆனாலும் கூட இது மெல்ல மெல்ல எக்ஸ் கதிர்கள் என்றே மாறியது வேறு கதை.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *