உலகமய கொள்கையால் உலகமே சுருங்கியுள்ளது. சுயசார்பு பொருளாதாரம் என்பது மருந்துக்கும் கிடையாது. தேச எல்லைகள் காணாமல் போய்விட்டன. உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் முதலாளித்துவ சந்தையின் வலைப்பின்னல் விரிவடைந்துள்ளது. ஒரு நாட்டிற்குள் உற்பத்தி செய்து விநியோகம் செய்து, அந்நாட்டிற்குள்ளேயே நுகர்வது என்பது இயலாத காரியமாகிவிட்டது. சுமார் 30 ஆண்டுகளாக அனைத்து நாடுகளும் உலகச் சந்தையின் வலைப்பின்னலில் சிக்கிக்கொண்டுள்ளன.
இந்த உலகமய வலைப்பின்னலின் வலிமையை கொரானா பரிசோதித்துப் பார்த்துள்ளது. கண்ணுக்குப் புலப்படாத, ஒரு சிறு வைரஸ்தான் என்றாலும், உலகம் தழுவிய இந்த வலைப்பின்னலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த முடிகிறது என்பதை நம்ப முடியவில்லை. ஆனால் இதுதான் உண்மை. சில நாட்கள்தான். ஆனாலும் தேசங்களின் எல்லைகள் மூடப்பட்டன. ஏன், மாகாணங்கள், மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள் ஆகியவற்றின் எல்லைகள் துண்டிக்கப்பட்டன. அனைத்து உற்பத்தியும் விநியோகமும் நிறுத்தப்பட்டன.
உலகம் தன் இயக்கத்தையே நிறுத்திவிட்டது. ஆனால் மெல்ல மெல்ல இயற்கை தன் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்த உலகையே ஆட்டிப்படைக்கும் பன்னாட்டு முதலாளித்துவக் கட்டமைப்பிற்கு எதிரான இயற்கையின் சீற்றம்ம்தான் இது. ஒரு சிறு கிருமியால் கூட, இந்தக் கட்டமைப்பையே அசைத்துவிட முடிகின்றது என்றால், அந்தளவுக்கு இது மிகவும் பலவீனமாக இருக்கின்றது என்றுதான் பொருள். உலகப் பொருளாதார மாற்றங்களில் கொரானாவும் இடம் பிடித்துள்ளது.
கொரானா எங்கிருந்து வந்தது?
இந்த கொரானா வைரஸ் யாராலும் உருவாக்கப்படவில்லை என்றும் நோய்க்கிருமிகளின் குறிப்பாக வைரஸ்கிருமிகளின் மரபணு மாற்றத்தின் விளைவாக தோன்றியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் விளக்கம் கூறி வருகின்றனர். ஆனால் இது நிச்சயமாக சுற்றுச் சூழல் சீர்க்கேட்டின் விளைவாகத் தோன்றிய, நோய்க்கிருமிகளிடம் இருந்து உருவான மரபணு மாற்றத்தின் விளைவுதான் என்பதை மறைக்கப் பார்க்கின்றனர். இத்தனை ஆண்டுகளாக உலக ஏகாதிபத்திய உருவாக்கிய சுற்றுச் சூழல் சீர்க்கேட்டின் விளைவுதான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
ஆனால் சிலர் இது ஒரு உயிரியல் போர் என்று கூறுகின்றனர். கொரானா வைரஸ் கிருமியை உருவாக்கி அமெரிக்கப் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்று சில செய்திகள் பரப்பப்படுகின்றன. இதற்கான ஆதாரங்கள் இல்லை. என்றாலும், கொரானா உருவான பிறகு நிச்சயமாக, ஏகாதிபத்திய நாடுகள் இதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரு உலக சுகாதாரப் போரையே நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. இந்த கொரானாவின் படையெடுப்பு ஒரு உலகப் போருக்கு நிகரான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது. உலகப் போரில் ஆயுத விற்பனைச் சூடுபிடிக்கும். ஆனால் கொரானாவுக்கு எதிரான சுகாதாரப் போரில் மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் விற்பனைக்கு வருகின்றன.
கொரானா பாதிப்பு
உலக சுகாதாரத்தைச் சந்தைமயமாக்கியுள்ள இந்தச் சூழ்நிலையில் கொரானா பாதிப்பு ஒரு நிகழ்வு மட்டும்தான். என்றாலும் உலகத்தின் பொருளாதாரத்தின் அடிப்படையையே அசைத்துப் பார்த்துவிட்டது. கலைத்துப் போட்ட சீட்டுக் கட்டு மாதிரி உலக நாடுகள் அனைத்தும் சின்னாபின்னமாகக் கலைந்து போய் கொண்டிருக்கின்றன.
கொரானாவின் தோற்றம் மற்றும் பரவல் நமக்கு சில முக்கிய பாடங்களைக் கற்பித்துள்ளன. சமூக ரீதியாகவும், மருத்துவ அறிவியல் ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும், தொற்றுநோயியலின் கோட்பாடுகள் ரீதியாகவும், கொரானா பரவலுக்கான பல காரணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உண்மையில் இது ஒரு தொற்றுநோயை பரப்பும் மிகச் சிறிய வைரஸ்தான் என்றாலும் இது உலகத்தின் சுகாதாரப் பிரச்சனையாக மாறியிருக்கின்றது. சுகாதாரம் பற்றிய பிரச்சனை, இன்று உலகப் பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்தது விந்தையாக உள்ளது. அரசியல் பொருளாதாரத்தின்படி பார்த்தால், கொரானாவின் படையெடுப்பு, ஒரு சுகாதாரப் பிரச்சனையன்று. சாராம்சத்தில் இது இன்றைய ஏகாதிபத்திய உற்பத்தி உறவுகளோடு இணைக்கப்பட்ட ஒன்றாகும்.
உண்மையில், பொதுசுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள நாடுகளை கொரானா அதிகமாக நெருங்கவில்லை. எங்கெல்லாம் சுகாதாரம் முழுவதும் சந்தைமயமாகியுள்ளதோ அங்கெல்லாம் கொரானா தன் கைவரிசையை முழுத்திறனுடன் காட்டியுள்ளது. உலகச் சந்தையின் வலைப்பின்னலை அப்படியே நகல் எடுத்துகொண்டதைப் போல கொரானா தனது வலைப்பின்னலையும் கட்டமைத்துக் கொண்டுள்ளது.
கொரானாவிலிருந்து மீளும் உலகம்
நிச்சயமாக கொரானா தாக்குதலுக்குப் பிந்தைய உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் மிகப்பெரும் பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு நாடும் அதன் பொருளாதாரக் கட்டமைப்பைப் பொருத்து, கொரானாவை எதிர்கொள்ளும் திறன் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எவ்வளவுதான் கொரானாவால் சேதம் ஏற்பட்டாலும் உள்நாட்டு பொருளாதார கட்டமைப்பு வலுவாக இருக்கும் பட்சத்தில் கொரானாவிற்கு பிந்தைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவது பெரிய விசயமில்லை. ஆனால் ஐக்கிய நாடுகளின் சபை அறிவித்துள்ளபடி, உலகத்தில் உள்ள மக்கள் தொகையில் பாதிக்கு மேல் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படுவர் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரானாவிலிருந்து மீண்ட உலகத்தில் வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் தலைவிரித்து ஆடும்.
அமெரிக்காவின் தோல்வி
அமெரிக்கப் பொருளாதாரம், கொரானாவை எதிர்கொள்ளமுடியாமல் படுதோல்வியை அடைந்து வருகின்றது என்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அமெரிக்காவைப் பொருத்தவரை, 1987 க்கு பின்னர் தற்போது மிகப்பெரிய வீழ்ச்சியில் அமெரிக்கா மரண அடி வாங்கியிருக்கிறது. 2008 இல் ஏற்பட்ட நெருக்கடியைக் கடந்து வந்த அமெரிக்கா, கொரானாவின் பாதிப்பிலிருந்து மீண்டு, எப்போது இயல்பு நிலைமைக்கு திரும்பும் என்பது கேள்விக்குரிய ஒன்று. பங்குச் சந்தைப் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகின்றது. அமெரிக்கப் பொருளாதாரம் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது.
நேற்றுவரை கொக்கரித்துக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொட்டம் இப்போது கொஞ்சம் அடங்கியிருக்கின்றது. டிரம்ப் தனக்காகவும், பன்னாட்டு முதலாளிகளுக்காக மிகவும் வருத்தப்படுகிறார். கொரானாவிடை அடுத்துவரும் பொருளாதார நெருக்கடி நம்மை அழித்துவிடும் என்று கவலைப்படுகிறார். அமெரிக்கா தனது தோல்வியைச் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்காவின் மெத்தனத்தைக் கண்டு கலிபோர்னியா கொரானாவை தனித்து எதிர்கொள்வதாக அறிவித்துள்ளது. வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்க ஐக்கிய குடியரசில் இருக்கும் 50 மாகாணங்களும் தொற்றுநோய் பேரிடர் மாகாணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் இது போன்றதொரு வேறுபட்ட சூழ்நிலைமை எதிர்பார்க்கவில்லை. இன்றுவரை, ராணுவக் கட்டமைப்பிலும், நிதி மூலதனத்திலும் முன்னணி வகிக்கும் நாடு அமெரிக்கா மட்டும்தான். உலகின் மொத்த பண மதிப்பான 360.6 டிரில்லியன் டாலரில் கிட்டத்தட்ட 30 சதவிகிதத்தைக் கொண்ட அமெரிக்கா, உலகின் முதல் பணக்கார நாடாக உள்ளது. இவற்றைக் கொண்டு எந்த வகையான நெருக்கடியையும் சமாளிக்க முடியும் என்ற இறுமாப்புடன் இருந்து வந்தது. பொருளாதார நெருக்கடிகள் சூழ்ந்திருக்கும் நிலைமையில், ஒரு வேளை, உலகப் போர் வந்தால் கூட அதை எதிர்கொள்ள தயார்நிலையில் இருப்பதாக பெரும் நம்பிக்கையில் இருந்தது.
முன்னிலையில் சீனா
முதன் முதலில் கொரானாவின் பாதிப்பை எதிர்கொண்ட சீனா, அதை தடுக்கும் விசயத்தில் புத்திசாலித்தனமான நடந்துகொண்டது என்பது எல்லோருக்கு தெரிந்த செய்தி. இன்றைய சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள, சீனா எல்லா வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதில் முனைப்புக் காட்டிவருகின்றது. சீனாவைப் பொறுத்தவரை ஏற்கனவே ஒப்பீட்டு ரீதியாக வலுவான பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றது. அதன் உற்பத்திச் சார்ந்த பொருளாதாரத்தின் அடித்தளம் மிகவும் வலுவாக இருந்து வருகின்றது. முதன் முதலில் கொரானாவால் பாதிப்பை அடைந்த சீனா, உடனே சுதாரித்துக் கொண்டது. இந்த நெருக்கடியான நேரத்தில் உலக நாடுகளுக்கு ‘உதவி‘ செய்ய தயாராயிருக்கின்றது. ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளுக்கும் உதவ காத்திருக்கின்றது
தற்போது சீனாவிற்கு இருக்கும் சாதகமான விசயங்கள் உற்பத்தித் துறையில் இருக்கும் வலுவான கட்டமைப்பும், புதிய தொழில்நுட்பங்களும்தான். 5 ஜி, செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்துள்ள தொழில்துறை இணையத்தின் மூலம் ஒரு புதிய தொழில்துறை உள்கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறது. இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சி, சீனாவின் உற்பத்தித் தொழிலுக்கு வியத்தகு ஊக்கத்தை அளித்து, புதிய உற்பத்தி நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளது.
மேலும் உலகத்தில் உள்ள அரிய வகையான கனிமங்கள் உற்பத்தி செய்வதிலும், ஏற்றுமதி செய்வதிலும் முன்னணியில் உள்ள நாடு சீனா. இவை உயர் தொழில்நுட்ப உற்பத்திக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் இந்த அரியவகை கனிமங்களுக்காக சீனாவை பெரிதும் சார்ந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகின் மொத்த பண மதிப்பில் 63.8 ட்ரில்லியன் டாலர்களைக் கொண்ட சீனா, உலகின் இரண்டாவது பணக்கார நாடாக உள்ளது என்பதையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். உலக நாடுகள் அனைத்தும் மிகப் பெரும் பொருளாதாரப் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலைமையிலும், சீனாவின் பணக்காரர்களின் எண்ணிக்கை மட்டும் கூடியிருப்பதை நாம் புறந்தள்ளிவிடமுடியாது.
இருந்தாலும் ‘சீனாவைப் புறக்கணிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையும் ஒரு சில நாடுகள் எழுப்பிவருகின்றன.
அமெரிக்காவின் மேலாதிக்கம் முற்றிலும் தோல்வியடைந்த நிலையில், கொரானாவிற்கு பிந்தைய உலகம், எப்படி இருக்கும் என்று பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வெற்றிடத்தை நிரப்ப, அமெரிக்காவிற்கு அடுத்த நிலையிலுள்ள சீனா, புதிய உத்வேகத்துடன் கூடிய முன்முயற்சிகளை எடுத்து வருகின்றது. சீனாவின் துடிப்புமிக்க செயல்பாடுகளை ஐநாவும் மெச்சுகிறது. இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளின் முக்கியமாக ஜப்பானின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
சீனாவில் தற்போது இயல்பு நிலை துவங்கியதை அடுத்து உடனடியாக தனது சொந்த இழப்பை சரிக்கட்ட மருத்துவத் துறை உட்பட அனைத்து துறைகளிலும் முழுவீச்சுடன் உற்பத்தியைக் கட்டமைத்து வருகின்றது. உலக நாடுகளின் தற்போதையை தேவையைக் கருத்தில் கொண்டு மருத்துவம் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்துவருகிறது. அதே நேரத்தில் இதர நாடுகளிலுள்ள பொருளாதார சுணக்கத்தைப் பயன்படுத்தி அவற்றின் தொழில்துறை மற்றும் வங்கித்துறையின் பங்குகளை வாங்கி குவிக்க ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில் எச்.டி.எப்.சி யின் ஒரு சதவிகித பங்கை சீனா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போதைய சுற்றில், சீனா முன்னணியில் இருக்கின்றது.
ரஷ்யா முன்வைக்கும் பலதரப்பு தலைமை ( )
ஆனால் இனி வரும் உலகத்தை ஆள ஒற்றைத் தலைமைக்கு வாய்ப்பில்லை. என்று ரஷ்யா கருதுகிறது. பலவருடங்களாகவே உலகத்தை நிர்வகிக்க ரஷ்யா பன்மைத் தலைமையை வலியுறுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. தற்போதைய புதிய சூழ்நிலையில், ‘பலதரப்பு தலைமை’ என்ற பிரச்சனைக்கு, ரஷ்யா கூடுதலாக அழுத்தம் கொடுத்து வருகின்றது. ரஷ்யாவைப் பொருத்தவரை, பலதரப்பு தலைமை என்பது சுயசார்பு, சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, முன் அறியும் தன்மை போன்ற கோட்பாடுகளை உள்ளடக்கியதாகும்.
பலதரப்புத் தலைமை என்பது தற்போது நிலவிவரும் தாராளவாதக் கோட்பாட்டிற்கு மாற்றாக முன்வைக்கப்படுகிறது. இதைத்தான் ரஷ்யாவின் வெளியுறவு கொள்கையாகவும் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. உலகத்தை நிர்வகிப்பதற்கான முடிவுகளை எடுக்க பலதரப்பு தலைமை உகந்ததாகவும் ஏற்புடையதாகவும் இருக்கும் என ரஷ்யா நம்புகிறது. புதிய நிலைமைகளின் நிலைமைகளுக்கு தக்கவாறு புதிய விதிமுறைகள் உருவாக்கப்படவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
உலகமயம் காலவதியாகிவிட்டதா?
2001 ல் உலக வர்த்தக அமைப்பில் இணைந்து கொண்டதும், சீனா உலகளாவிய முதலாளித்துவ அமைப்பிற்குள் வந்துவிட்டது. வெகு விரைவில் தனது பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொண்டு, சர்வதேச அரங்கில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இரண்டு நாடுகளும் துண்டித்துக் கொள்ளும் மனப்போக்கைக் கொண்டிருக்கின்றன.
உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களான சீனாவும் அமெரிக்காவும் அடிப்படையான விசயங்களில் குறிப்பாக, பொருளாதாரம், ஆதிக்கம் மற்றும் அரசியல் நிலைபாடுகள் போன்றவற்றில் வேறுபாடுகள் இருப்பதால், சீனா தன்னை துண்டித்துக் கொள்ளும் என அமெரிக்கா கருதியது.
துண்டித்தல் (decoupling) என்பது இரு நாடுகளுக்கும் இடையிலான விநியோகத் தொடர் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு, ஒத்துழைப்புக்கான முயற்சிகளை முடக்குவதாகும். உண்மையில் இந்தப் போக்கு ஏற்கனவே தொடங்கிவிட்டது. அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் தமது உற்பத்தி நடவடிக்கைகளை, சீனாவிலிருந்து காலிசெய்து இடமாற்றம் செய்யத் தொடங்கிவிட்டன. தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களை கட்டுப்படுத்த அமெரிக்கா பல விதிமுறைகளை விதித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீனா, அதன் தடை செய்யும் முயற்சிகளை இருமடங்காக உயர்த்தியுள்ளது,
கொரானா விவகாரத்தில் உருவான தற்போதைய புதிய சூழ்நிலைமை இரண்டு நாடுகளுக்கு இடையில் இருந்துவந்த பனிப்போரை மேலும் உக்கிரமடையச் செய்துள்ளது. இந்தப் பின்னணியில்தான், உலகமயமாக்கலின் இறுதிக் கட்டம் தொடங்கிவிட்டதா, சர்வதேச தொழிலாளர் பிரிவினையை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமா, உற்பத்தியை மீண்டும் ஒரு நாட்டுக்குளே கொண்டு வரமுடியுமா, கடந்த மூன்று தசாப்தங்களாக கட்டப்பட்ட உலகளாவிய உற்பத்தி முறைக்கு ஒரு மாற்று உருவாகிவிட்டதா போன்ற பலவிதமான கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
உலகமயம் காலவதியாகிவிட்டது என்று சிலர் முடிவுக்கு வந்துள்ளனர். இனி வரும் புதிய உலகம், உலகமய நீக்கத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது என்று பேசப்படுகின்றது. இனிமேல் உற்பத்தி சார்ந்த பொருளாதாரம் உள்நாட்டிலேயே கட்டமைக்கப் போகின்றது என்றும் எதிர்பாக்கப்படுகிறது. இது சாத்தியமா என்பது தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு கருத்து நிலவுகின்றது.
முதலாளித்துவத்தின் வரலாற்றில் இப்படி ஒரு மாற்றம் வரும் என்று எதிர்பார்க்க முடியுமா என்பது சந்தேகமே. பலவருடங்களாக தாராளமயம், உலகமயம், தனியார்மயம்தான் உலக அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பின் தாரக மந்திரமாக இருந்து வருகின்றது. இந்தப் போக்கை ஒரு வைரஸால் மடைமாற்றம் செய்துவிட முடியுமா என்பது சந்தேகமே.
மேலும் உலக அரங்கில் தற்போது ‘தற்சார்பு’ என்ற முழக்கமும் ஒலித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். சர்வதேச பொருளாதார வலைப்பின்னலில் இது போன்ற விசயங்கள் புதிரானதாகத் தோன்றுகிறது. இது கொரானாவின் பாதிப்பிலிருந்து தோன்றிய உடனடி செயல்தந்திரமாக தோன்றலாம். ஆனால் இது நீடித்த ஒன்றாக இருக்கமுடியாது.
கடன் பொறிக்குள் உலக நாடுகள்
கொரானாவிற்கு பிந்தைய உலகத்தை மறுசீரமைக்க, உலக வங்கி அனைத்து நாடுகளுக்கும் நிதிஉதவி என்ற பெயரில் கடனுதவி அளித்து வருகின்றது. இதன் மூலம் ஏற்கனவே கடனில் மூழ்கி கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளும், வறுமையில் வாடும் நாடுகளும், மேலும் உலக வங்கியின் கடன்பொறிக்கு அடைபட்டுக் கொள்ள தயாராகி வருகின்றன. உலகில் உள்ள 50% ஏழை மக்களிடம் இருக்கும் சொத்துக்களை விட, பெரும் பணக்காரர்கள் 26 பேரிடம் அதிக சொத்துகள் உள்ளது என தனது அறிக்கையில் ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வு மேலும் ஆழமடையும். இந்த அடிப்படையிலிருந்து பார்த்தால், கொரானாவிற்கு பிந்தைய உலகம் ஒரு பெரிய நெருக்கடியைச் சந்திக்கும் என்பதில் ஐயமில்லை. எல்லா நெருக்கடிகளையும் போலவே இந்தக் கொரானாவிற்குப் பிந்தைய காலத்திலும் பன்னாட்டு முதலாளிகள் காப்பற்றப்படுவார்கள், ஆனால் நெருக்கடியின் மொத்த சுமையும் உழைக்கின்ற மக்கள் மீதுதான் சுமத்தப்படும்.
உலக சுகாதாரப்போர்
இதுநாள் வரை, உலக நாடுகள் ஏகாதிபத்தியத்தால் மறுபங்கீடுசெய்து கொள்ள உலகப் போர்கள் காரணமாக இருந்து வந்தன. முதல் உலகப் போரில் உலகம், பிரிட்டன் தலைமையில் கட்டமைத்துக் கொண்டது. இரண்டாம் உலகப் போரில் உலகத்தின் அதிக பங்கை அமெரிக்கா பெற்றுக்கொண்டது. அதேபோல கொரானா கிருமியின் படையெடுப்பால், ஒரு புதிய உலகப் பங்கீடு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த உலக சுகாதாரப் போர், கொரானா வடிவத்தில் துவங்கியிருக்கிறது. உலகப் போர்கள் இனி பழைய வடிவத்தில் நடைபெறப் போவதில்லை என்பது தெரிகிறது. கொரானாவிற்கு பிந்தைய பொருளாதார நெருக்கடி, ஒரு வேளை உலகப் போருக்கு இட்டுச் செல்லலாம்.
இறுதியாக
கொரானா ஒரு உலகம் தழுவிய நிகழ்வு என்றாலும் முந்தைய ஏகாதிபத்தியக் பொருளாதாரக் கட்டமைப்பை முற்றிலும் மாற்றிவிடாது. ஏகாதிபத்தியம் இந்த நெருக்கடியிலிருந்து சுதாரித்துக் கொள்வதற்கு வாய்ப்புகள், இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏகாதிபத்தியத்தைப் பொருத்தவரை, இது ஒரு தற்காலிக பின்னடைவு. அவ்வளவுதான். நிச்சயமாக இது உலக பொருளாதாரத்தில் அதன் கட்டமைப்பில் ஒரு சில மாற்றங்களை கோரும் என்பதில் சந்தேகமில்லை.
கொரானாவினால் ஏற்பட்ட பாதிப்புகள் உண்மையில் முதலாளித்துவ அமைப்பிற்குள் உள்ளார்ந்திருக்கும் நெருக்கடியின் வெளிப்பாடு மட்டுமே. இதன் விளைவாக இனி உருவாகப் போகும் பொருளாதார நெருக்கடிதான் உலக முதலாளித்துவக் கட்டமைப்பின் சாராம்சமான விசயமாகும். இனி நிகழப்போகும் ஆழமான பொருளாதார, அரசியல் நெருக்கடியை எதிர்கொள்வதும், வெற்றிகொள்வதும்தான் புதிய சர்வதேச தலைமையைத் தீர்மானிக்கும்.
ஒருவேளை கொரானாவிற்கு அடுத்துவரும் ஆண்டுகளில் உலக முதலாளித்துவத்தின் தலைமை மாறலாம். உலகம் மீண்டும் ஒரு மறுபங்கீட்டிற்கு உட்படுத்தப்படலாம். ஆனாலும் நெருக்கடிகளின் மொத்தத்தையும் மக்களின் தலைமேல் சுமத்திவிட்டு, புதிய ஏகாதிபத்தியம் தனது சுரண்டலைப் புதுமையான முறையில் மீண்டும் தொடரவே செய்யும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பாட்டாளிவர்க்கத் தரப்பிலிருந்து எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாத பட்சத்தில், ஏகாதிபத்தியத்திற்கு எந்த ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளவும், வெற்றிகொள்ளவும் முடியும் என்பதுதான் உண்மை.
மிகச் சிறப்பான கட்டுரை . இன்றைய தேவை ஆழ்ந்த புரிதலுடன் கேள்விகளை எழுப்பும் இது போன்ற எழுத்துக்கள்தான். அண்ணாமலை நாகரத்தினம் அவர்களிடமிருந்து தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளை வாசகர்கள் எதிர்பார்க்கிறோம்.