பலன் தருமா தமிழ்நாட்டின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை? – பேரா. பு. அன்பழகன்

Will Tamil Nadu's first agrarian financial statement (Agri Budget 2021) work? Article By Prof P. Anbalagan. Book Day, Bharathi Puthakalayamஇந்திய மாநிலங்களில் வேளாண்மைக்காக தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிற மாநிலங்களில் கர்நாடாக, ஆந்திர பிரதேசம் ஆகும். தற்போது இந்த ஆண்டு தமிழ்நாடு இப்பட்டியலில் இணைகிறது. வேளாண்மை மனிதர்களின் தொன்மையான தொழிலாகும். தொழில் வளாச்சியினால் வேளாண்மை பின்னுக்கு தள்ளப்பட்டு அதனைச் சார்ந்து வாழ்கிற பெருமளவிலான மக்கள் துயர்களுக்கு ஆளாகிவருகின்றனர். வேளாண் விளைபொருட்கள் அனைத்துமே நுகர்வினை நிறைவு செய்யக்கூடியது, எப்போதுமே அதன் தேவைகள் தொடர்ந்து இருந்துகொண்டு இருக்கும். அண்மைக்காலமாக இத்துறை பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. எனவே இவற்றை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு தொழில்துறையில் முனனேறிய மாநிலங்களில் ஒன்று, துறைவாரியாகப் பார்த்தால் தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 2017-18ஆம் ஆண்டில் வேளாண்மை 12 விழுக்காடு (இந்திய அளவில் 17விழுக்காடு) பங்ளிப்புடன் மூன்றாம் நிலையில் உள்ளது. ஆனால் 28.7 விழுக்காடு மக்கள் வேளாண்மையை சார்ந்துள்ளனர். இந்திய அளவில் இது 43.7 விழுக்காடாகும் (PLFS 2019-20).

தமிழ்நாடு மக்கள் தொகை அளவில் இந்தியாவின் 6வது பெரிய மாநிலமாகும். 1953-54ஆம் ஆண்டில் 61.5 லட்சம் வேளாண் நிலஉடமையாளர்களாக இருந்தவர்கள். 2015-16ஆம் ஆண்டு 79.38 லட்சமாக அதிகரித்துள்ளனர். ஆனால் இவர்களின் நிலஉடமை பரப்பு இவ்வாண்டுகளில் 66.38 லட்சம் ஹெக்டேரிலிருந்து 59.71 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. வேளாண் நில உடைமையாளர்களில் குறு, சிறு விவசாயிகள் பெரும் பங்கினை வகிக்கின்றனர். 1950-53இல் 51.4 விழுக்காடாக இருந்த குறு, சிறு விவசாயிகள் 2015-16ஆம் ஆண்டு 73.43ஆக அதிகரித்துள்ளனர். குறிப்பாக குறு விவசாயிகள் (1 ஏக்கருக்கு கீழ் உள்ளவர்கள்) 19.26 விழுக்காட்டு புள்ளிகள் அதிகரித்துள்ளனர். அதே சமயம் நடுத்தர மற்றும் பெரு விவசாயிகள் அதிக அளவில் குறைந்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம் குடும்பங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு செல்லும்போது நிலபிரிவுக்கு உட்படுவதாகும். தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1950களில் 43.52 விழுக்காடு (56.38 லட்சம் ஹெக்டேர்) வேளாண் சாகுபடி பரப்பாக இருந்தது 2019-20இல் 36.35 விழுக்காடாக (47.38 லட்சம் ஹெக்டேர்) குறைந்துள்ளது. அதாவது 3.86 லட்சம் ஹெக்டேர் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. இது இந்திய அளவில் ஒப்பிடும்போது நிகர சாகுபடி பரப்பு சுமார் 9 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மொத்த சாகுபடி பரப்பும் தமிழ்நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் குறைந்துள்ளது. ஆனால் வேளாண்சாரா நிலப் பயண்பாடு மொத்த நிலபரப்பில் 1950களில் 9.80 விழுக்காடாக இருந்தது 2019-20இல் 20.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது அதாவது 10 விழுக்காட்டு புள்ளிகள் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் வேளாண் விவசாயக் குடும்பங்களின் வருமானம் 2016-17ஆம் ஆண்டின்படி ரூ.9775 ஆகும் இது இந்திய அளவில் ரூ.8931 (NABARD – All India Rural Financial Inclusion Survey 2016-17).

Will Tamil Nadu's first agrarian financial statement (Agri Budget 2021) work? Article By Prof P. Anbalagan. Book Day, Bharathi Puthakalayam

தமிழ்நாட்டில் வேளாண்மையின் முக்கியத்துவம் குறைந்து பெருமளவிற்கு வோளண்சாரா தொழில்கள் பெருகியுள்ளது என்பது அறியப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் வேளாண் சாகுபடி பருவ மழையினை சார்ந்துள்ளது. வடகிழக்கு, தென்மேற்கு பருவ மழையினால் பெருமளவிற்கு பயன்பெருகிறது. மழை பல ஆண்டுகளில் தேவைக்கு குறைவாக உள்ளதால் கிணற்று பாசனத்தை நம்பி வாழவேண்டிய நிலைக்கு உள்ளாகிறது. 2019-20ஆம் ஆண்டின்படி கிணற்றுப் பாசனம் 62.48 விழுக்காட்டு அளவிற்கு நீர்பாசன பங்கினைப் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் அரசு எடுத்து முயற்சி காரணமாக வேளாண் நீர்பாசன பரப்பு சற்றே அதிகரித்துள்ளது. 1960-61இல் 32.35 லட்சம் ஹெக்டேராக இருந்த நீர்பாசன வேளாண் நிலபரப்பு 2019-20இல் 34.10 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. தமிழ் நாட்டில் அன்மைக் காலமாக வேளாண் இடுபொருட்களின் விலைகள் குறிப்பாக தொழிலாளர் கூலி, வேளாண் இயந்திரங்கள் வாடகை, விதை, உரங்கள் விலைகள் கடுமையாக அதிகரித்ததால் வேளாண்மையிலிருந்து திரும்பப் பெரும் வருமானம் குறைந்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை அனைத்து வேளாண் விவசாயிகளுக்கும், அனைத்து வேளாண் உற்பத்தி பெருட்களுக்கும் உறுதி செய்யப்படவில்லை என்பதால் விவசாயிகள் பெரும் இழப்பினை சந்திக்கின்றனர். மேலும் வேளாண் பொருட்களை சந்தைப் படுத்துதலில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் 26 வேளாண் சந்தை கமிட்டியின் கீழ் 282 முறைப்படுத்தப்பட்ட வேளாண் சந்தைகள் இயங்குகிறது ஆனால் இங்கு கொண்டு செல்லப்படும் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையினை அளிப்பதில்லை. அரசு நேரடியாக கொள்முதல் செய்யும் மையங்களில் மட்டுமே இவ்விலை உறுதி செய்யப்படுகிறது. எனவே வேளாண் விவசாயிகளின் பொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதில் பாரபட்சம் நிலவுகிறது. மின்-சந்தை இணைப்பினை ஒழுங்கு முறை வேளாண்மை விற்பனைக் கூடம் பெற்றிருந்தாலும் பெரும்பாலான விவசாயிகளுக்கு இதன் பயன் சென்றடையவில்லை. இதனால் வேளாண்மை ஒரு லாபகரமாக தொழிலாக இல்லை என்பதால் அதிக அளவிலான வேளாண் விவசாயிகள் வேளாண்சார தொழிலினை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வேளாண்மையும் அதனைச் சார்ந்த தொழில்களின் பங்களிப்பு 1960-61ஆம் ஆண்டு 51 விழுக்காடாக இருந்தது 2017-18ஆம் ஆண்டு 12 விழுக்காடாக குறைந்துள்ளது. இந்த சரிந்துவரும் நிலையினை போக்கவும் வேளாண்துறை எதிர்கொள்ளும் சவால்களை குறைக்கவும் இத்துறைக்கென தனியான நிதிநிலை அறிக்கை தேவை என்பதை உணர்ந்து வேளாண்மை நிதிநிலை அறிக்கையினை முதல் முறையாக தற்போது தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது.

Will Tamil Nadu's first agrarian financial statement (Agri Budget 2021) work? Article By Prof P. Anbalagan. Book Day, Bharathi Puthakalayam
முதல்வர் ஸ்டாலின் உடன் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

நீர்வளத்தினை வளர்த்தெடுப்பது, சரிந்துவரும் சாகுபடிபரப்பினை அதிகரித்தல், வேளாண்பொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை, வேளாண்மையிலிருந்து வேளியேறுபவர்களை தடுப்பது, இளைஞர்களை அதிக அளவில் வேளாண்சார் தொழில்களில் ஈர்ப்பது, லாபமுடைய தொழிலாக வேளாண்மையினை மாற்றுவது போன்றவைகளை முன்னிருத்தி தமிழ்நாட்டின் வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்து 100 நாட்கள் நிறைவடையும் தருனத்தில் இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது ஒரு வரலாற்று நிகழ்வாகும். இந்த நிதிநிலை அறிக்கையினை வேளாண்மைத் துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டு தாக்கல் செய்துள்ளார். இவ்வேளாண்மை நிதிநிலை அறிக்கை 16 வேளாண் மேம்பாட்டு திட்டங்களை (கிராம அளவிலான வேளாண் தொகுப்பு திட்டம், மானவாரி நில மேம்பாடு, தரிசு நில மேம்பாடு, இயற்கை வேளாண்மை, மழைநீர் சேகரிப்பு, சிறு குறு விவசாய ஒருங்கினைப்பு கூட்டுப்பண்ணை, ஒருங்கினைந்த பண்ணை மூலம்வேளாண் வருவாயினை உயர்த்துதல், செட்டுநீர் தெளிப்பு நீர் பாசனத்தை விரிவு படுத்துதல், பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்களை பரவலாக்குதல், வேளாண்மையில் மகளிருக்கு முக்கியத்துவம், விவசாயிகளை வேளாண் வணிகராக்குதல், வேளாண் தொழில்நுட்ப மேம்பாடு, வேளாண்மை இயந்திரமயமாக்கல், வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டல், பாதுகாக்கப்பட்ட சூழலில் மலர், காய்கறி உற்பத்தி, குறு தானியங்கள், காய்கறி பழங்களுக்கு உகந்த விலை) அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டங்களை நடைமுறைபடுத்த ரூ.34220.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றின் முதன்மை நோக்கம் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிர்செய்து நிகரசாகுபடி பரப்பினை உயர்த்துதல், தரிசு நிலங்களை பயிரிடும் நிலங்களாக மாற்றுதல், இருபோக சாகுபடி நிலங்களை 10 லட்சம் ஹெக்டேரிலிருந்து அடுத்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரித்தல், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்குதல், குறுகியகால சிறுதானியப் பயிர்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறி, கீரை வகைகளை பயிர்செய்ய நடவடிக்கை எடுத்தல். உணவு தானியம், தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, கரும்பு ஆகிய பணப்பயிர்களை விளைவித்து இந்திய அளவில் முதல் மூன்று இடங்களில் வரும் காலங்களில் இடம்பெறச் செய்தலாகும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்சசியினை உருவாக்க அனைத்து துறைககளின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தினால் ஒட்டுமொத்த கிராமங்களும் வளர்ச்சியடைந்து தன்னிறைவினைப் பெறவேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஒவ்வெரு ஆண்டும் ஐந்தில் ஒரு கிராமப் பஞ்சாயத்தை தேர்வு செய்து ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சாகுபடி பரப்பினை 75 விழுக்காடாக உயர்த்தப்படும். தமிழ்நாட்டில் 19.3 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் உள்ளது இதில் 11.75 லட்சம் தரிசு நிலங்களை நீர்வள ஆதராங்களை (குறிப்பாக நுண்ணீர் பாசனம்) பெருக்கி சூரிய சக்தி பயன்படுத்தி பம்பு செட்டுகள் அமைத்தல் போன்றவைகள் மூலமாக சாகுபடிக்கு உகந்ததாக மாற்றப்பட உள்ளது. நீர் செல்லும் கால்வாய் வழித்தடங்களை தூர்வார ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு செயல்படுத்த உள்ளது. முதலமைச்சரின் மானவாரி நில மேம்பாட்டு இயக்கம் தொகுப்பாக 3 லட்சம் ஹெக்டேர் மானவாரி நிலங்களில் நடைமுறை படுத்தப்பட உள்ளது. இதன்படி பண்ணை குட்டைகள் அமைத்தல். உழவிற்கு வாடகை இயந்திரங்களை வழங்கவும், சத்து மிகுந்த சிறுதானிய பயறு வகைகளை சாகுபடி செய்ய வழிவகை செய்ய உள்ளது. இதற்கான விதை, உரங்கள், மானிய விலையில் வழங்கப்படும், மேலும் பயன் தரும் மரங்கள் வளர்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Will Tamil Nadu's first agrarian financial statement (Agri Budget 2021) work? Article By Prof P. Anbalagan. Book Day, Bharathi Puthakalayam

இத்திட்டம் ரூ.146.64 லட்சம் மதிப்பீட்டில் நடைமுறைபடுத்தப்படுகிறது. இதனால் 3 லட்சம் மானவாரி விவசாயிகள் பயன் பெறுவர். சிறு தானிய இயக்கம் ரூ.12.44 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, வரகு, தினை, சாமை பயிரிடும் பரப்பினை அதிகரிக்க நுண்ணீர் பாசனம், நீர் சேகரிப்பு கட்டமைப்பின் கொள்ளளவை அதிகப்படுத்துதல், பண்ணைக் குட்டைகள் போன்ற நீர்பாசன வசதிகள் உருவாக்கப்படுகிறது. மேலும் சூரிய பம்ப்செட்டுகள் அமைக்கவும், மின்மோட்டார் பம்ப்கள் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. படித்த இளைஞர்கள் வேளாண்மை தொழிலில் ஈடுபடுவதற்கு தயக்கம் காட்டுகிற நிலையில் அவர்களை வேளாண் தொழிலில் ஈடுபட வைக்க பல்வேறு வேளாண்சார்புடைய பயிர்சிகள் ரூ.2.68 லட்சம் செலவில் நடைமுறைபடுத்தப்பட உள்ளது. மேலும் ஊரக இளைஞர்கள் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் தொடங்கப்பட்டு அவர்களை வேளாண் பணிகளில் ஈடுபட நடவடிக்கை எடுக்கபடுகிறது. வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

நெல் உற்பத்தியினை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு தற்போது ஒன்றிய அரசு நடைமுறை படுத்தியுள்ள நெல்லின் குறைந்தபட்ச ஆதார விலையுடன் சன்ன ரகத்திற்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.70லிருந்து ரூ.100 ஆகவும், சாதராண ரகத்திற்கு ரூ.50லிருந்து ரூ.75ஆகவும் கொள்முதலில் உயர்த்தி வழங்கபட உள்ளது. இதன்படி சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2060ம் சாதாரண ரகத்திற்கு ரூ.2015ம் கிடைக்கும். இதன் மூலம் 6 லட்சம் விவசாயிகள் பயன்அடைவார்கள். மேலும் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் ரூ.25 கோடியில் தொடங்கப்பட்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு விதைப் பண்ணைகளில் இந்த நெல் ரகங்களின் விதைகளை 200 ஏக்கரில் உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கரும்பு உற்பத்தியை மேம்படுத்த புதிய உயர் ரக கரும்பு சாகுபடியை அறிமுகப்படுத்துதல். கரும்பு பயிரிடும் விவசாயகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.150 அளிக்கப்பட உள்ளது. பணம் தரும் பயிர் உற்பத்தி திட்டத்தின் வழியாக அதிக மகசூல் கொடுக்கும் பயறு வகைகளான உளுந்து, பச்சைப்பயறு, துவரை போன்ற பயிர்கள் வளர்க்க ஊக்குவிக்கப்படும். இவற்றை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து பொதுவிநியோக கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். தென்னை சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும்.

Will Tamil Nadu's first agrarian financial statement (Agri Budget 2021) work? Article By Prof P. Anbalagan. Book Day, Bharathi Puthakalayam
பனை மரம் பல்வேறு பயன்களை மக்களுக்கும் இந்த பூமிக்கும் அளிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் பனைமரங்கள் வெட்டப்படுவதும், அழிக்கப்டுபடுவதும் தொடர்கிறது. எனவே இதனை பாதுகாக்க பனை மேம்பாட்டு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும். 1 லட்சம் பனங்;கன்றுகளையும் முழு மானியத்துடன் அளிக்கப்பட உள்ளது. பனைமரத்தின் மதிப்பு கூட்டல் பொருட்களை மக்களிடம் கொண்டுசெல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக பனைவெல்லம் பொதுவிநியோக கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இனி பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியாளரின் அனுமதி பெற்றாக வேண்டும். கூட்டுப் பண்ணையத் திட்டம் ஏற்படுத்தப்பட்டு 1100 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை அமைத்து விவசாயிகளின் மேம்பாட்டை உறுதிசெய்யப்பட உள்ளது. இதன் மூலம் கால்நடை வளர்ப்பு, காயகறி தோட்டம் போன்றவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும் இதன் மூலம் 1.10 லட்சம் விவசாயிகள் பயன் பெருவார்கள்.

இயற்கை வேளாண் வளர்ச்சி திட்டம் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதால் சுற்றுப்புற சூழல், மண்வளம், மனிதர்கள் பாதிப்புக்கு உள்ளாவதை தடுப்பதற்காக ரூ.33.3 கோடியில் நடைமுறைபடுத்தப்படுவதாகும். இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த இயற்கை வேளாண்மைகென்று தனிபிரிவு தொடங்கப்பட உள்ளது. இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வார் வேளாண் இயற்கை ஆராய்ச்சி மையம் ரூ.3 கோடி செலவில் நிறுவப்படுகிறது. வேளாண் காப்பீட்டிற்கு ரூ.2327 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, உழவர் சந்தைகள் 10 மாவட்டங்களில் புதிதாக உருவாக்கபட ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மஞ்ள் ஆராய்ச்சி மையம் ஈரோட்டில் தொடங்கப்படும். நடமாடும் காய்கறி கடைகள் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் போன்ற நகரங்களில் ரூ.2 லட்சம் மானிய உதவியுடன் துவக்கப்படும். நீலகிரியில் ஒருங்கிணைந்த கிராமப்புற வேளாண் சந்தை ரூ.2 கோடி மதிப்பில நிறுவப்படும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை கல்லூரி தொடங்கபடும். முருங்கை ஏற்றுமதி மண்டலம் உருவாக்குதல், மிளகு பதப்படுத்த மையம் ஏற்படுத்துதல். கடலூரில் பலா சிறப்பு மையம் அமைக்கப்படும், தஞ்சையில் தென்னை மதிப்பு கூட்டும் மையம் போன்ற அறிவிப்புகள் பெருளவிற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வேளாண்மை சம வளர்ச்சியினை எட்ட வழிவகை செய்துள்ளது.

விவசாயிகள், வேளாண் தொழிலாளாகள் ஆகியோர் எதிர்பார்ப்பை நிறைவுசெய்யும் என்ற நம்பிக்கை வேளாண் நிதிநிலை அறிக்கையில் உள்ளது. அதேசமயம் பெருகிவரும் வேளாண் உள்ளீட்டு செலவுகளை (கூலி, விதை, உரம், பூச்சிக்கொல்லி, வேளாண் இயந்திரகளின் வாடகை) கட்டுப்படுத்த அல்லது அவற்றை குறைபதற்கான நடவடிக்கைகள் பெரிய அளவில் வெளிப்படவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தினை வேளாண்மை தொழிலுக்கு பயன்படுத்த வேண்டும். இதனால் உள்ளீட்டுச் செலவுகள் குறையும். உழவு காலங்களில் டிராக்டர், அறுவடைகாலங்களில் அறுவடை இயந்திரங்களின் பற்றாக்குறையினால் விவசாயிகள் அதிக அளவிற்கு வாடகை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது இதனை கட்டுப்படுத்த அரசு இவற்றுக்கான வாடகையினை நிர்ணயிக்கவேண்டும். வேளாண் உற்பத்தி பொருட்கள் குறிப்பாக நெல்லின் மதிப்புகூட்டு பொருளான அரிசி அரசு இலவசமாக பொதுவிநியோக கடைகள் மூலமாக அளிப்பதால் அதற்கான சந்தைதேவை குறைவாக உள்ளது. இதனால் வேளாண் விவசாயிகளின் வேளாண் உற்பத்திக்கு போதுமான விலை வெளிச்சந்தைகளில் கிடைப்பதில்லை. இதனை ஈடுசெய்ய குறைந்த பட்ச ஆதார விலை ஒன்றிய அரசு அவ்வப்போது உயர்த்தி அளித்துவந்தாலும் இது அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் கிடைப்பதில்லை.

Will Tamil Nadu's first agrarian financial statement (Agri Budget 2021) work? Article By Prof P. Anbalagan. Book Day, Bharathi Puthakalayam

தமிழ்நாடு அரசு நடத்தும் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை சந்தையில் இந்த விலையினை உறுதிசெய்யப்படுவதில்லை என்பது வருத்தமான செய்தியாகும். எனவே அனைத்து விவசாயிகளும் பயன் பெற குறைந்தபட்ச ஆதார விலையினை சட்டமாக்கி நடைமுறைபடுத்தப்பட வேண்டும். மேலும் ஒழுங்குமுறை வேளாண் விற்பனைக் கூடங்களின்; கட்டமைப்பினை வலுபடுத்த வேண்டும். சிறய அளவில் உள்ள நிலஉடைமைகளை ஒன்றினைத்து அவற்றை ஒன்றிணைந்த பயிர் செய்யும் முறையினை நடைமுறைபடுத்த வேண்டும் இதனால் இந்த நிலகள் தரிசு நிலங்களாக மாறாமல் தடுக்கப்படும். வேளாண்சார் தொழிற்பேட்டைகளை அந்த அந்த பகுதிகளில் விளையும் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்ற தொழில்களை தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்கள்தோரும் உருவாக்கப்படவேண்டும். இதனால் வேளாண்மையும் தொழில் உற்பத்தியும் பெருகும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். முதல் வேளாண் நிதி அறிக்கை தமிழ்நாட்டின் வேளாண் மேம்பாட்டிற்கான முதல் அடியினை எடுத்து வைத்துள்ளது, இது ஒரு நல்லதொரு தொடக்கம் வருகின்ற ஆண்டுகளில் இது மேலும் வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
ஊழந்தும் உழவே தலை”

திருக்குறள்: 1031- குடியியல்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.