“மெல்லக் கலையினிச் சாகும்? – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய தமிழ்நாடு அனைத்து நிகழ்த்துக் கலைஞர்கள் வாழ்வுரிமை மாநாடு

“மெல்லக் கலையினிச் சாகும்? – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய தமிழ்நாடு அனைத்து நிகழ்த்துக் கலைஞர்கள் வாழ்வுரிமை மாநாடு



2009 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தில் இரவு முழுதும் பனி விழுந்துகொண்டிருந்தது. அந்த மலைக் கிராமத்தில் ‘திரௌபதி வஸ்திராபரணம்’ கூத்து இரவு முழுவதும் நடைபெற்றது. விடியலில் ஆறு மணிக்குக் கூத்து முடிந்து கலைஞர்கள் ஒப்பனைகளைக் கலைத்தவாறேப் பேசிக்கொண்டிருந்தனர்.

“என்னப்பா கூலி இன்னிக்கே கெடைச்சிருமா?”

“வூட்டுக்குப் போறதுக்கு வண்டி ஏற்பாடு பண்டி இருக்காங்களா…… இல்ல நடந்துதான் போகனுமா”

தருமர் வேடமிட்ட கூத்துக் கலைஞர் கணேசன் அவர்கள் தனது வெள்ளை வேட்டியை குளிருக்குப் போர்த்தியபடி நின்று கொண்டிருந்தார். அவரிடம் பார்வையாளர் ஒருவர்

“என்ன கணேசா…. பிள்ளைங்க எப்புடி இருக்கு”

“நல்லா இருக்குதுங்க. இதோ இங்க பாருங்க என போர்த்திய வேட்டியை விரித்தார். இரண்டு சிறு பெண் குழந்தைகள் அவரின் இரண்டு கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தன. நடுங்கியபடி “குளிருக்கு கட்டிபுடிச்சிருக்குங்க……” என்றார் கணேசன்.

“பள்ளிக்கூடம் போவுதுங்களா”

“போவுதுங்க. பெருசு எங்கூட தக்காளி யாவாரத்துக்கு வந்திடும்”.

ஓப்பனைகள் கலைக்கப்பட்டு தேநீர் அருந்தியபடி பேசிக்கொண்டிருந்த ஒரு கலைஞர்,

“பொண்ணுக்குப் பையன் பொறந்துருக்கான். ஒரு மாசமாகுது. வாரயில பவுடர் வாங்கியாரச் சொல்லிச்சு.”

இரவில் கர்ணனாக, தருமனாக,…. “இனி இந்த ராஜ்ஜியமே எனக்கு அடிமை என்று வசனம் பேசி துரியோதனனாகவும் நடித்துவிட்டு விடிந்ததும் கையேந்தும் மனிதர்களாக இருக்கும் நிலையை அன்று உணர்ந்தேன். அப்பொழுது அவர்களின் ஒரு நாள் கூத்திற்கானச் சம்பளம் ரூ 200 வழங்கப்படுவதாகச் சொன்னார்கள்.



தற்போது ஊரடங்கு காரணமாக 6 மாதங்களாக நிகழ்த்துக் கலைஞர்களுக்கு நிகழ்ச்சிகள் இல்லாததால் வருமானம் இன்றி பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். தெருக்கூத்து,  நாடகம், ஆட்டக்கலைகள், இசை என்று அனைத்துக் கலைஞர்களும் இதில் அடக்கம். விவசாயத் தற்கொலைகள் போல கலைஞர்கள் வறுமையின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டனர். பட்டினிச் சாவுகள். அதைக் கலைத் தற்கொலை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியானச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கும்போதுதான் இந்தக் கலைஞர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் த.மு.எ.க.ச இப்பிரச்சனையைக் கையிலெடுத்தது. நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு என்று இருக்கும் சங்கங்களை ஒருகிணைத்து பல இணையச் சந்திப்புகளைக் கடந்த மூன்று மாதங்களில் நடத்தியது. அதன்மூலமாக தமிழகத்தின் நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்வியல் சிக்கல்கள் முழுமையாக அறியப்பட்டன. அரசு – கலைஞர்கள் – பொதுச்சமூகம் இந்த மூன்றிற்கும் இடையேயான உறவுகள் சரியாக இல்லாமல் இருப்பதுத் தெரியவந்தது.

தமிழக அரசு, கலை பண்பாட்டுத் துறை அமைச்சகம் மூலமாக நாட்டுபுறக் கலைஞர்களுக்கு வாரியம் அமைத்து சலுகைகள் அளிக்கிறது. நாட்டுபுறக் கலைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சங்கங்கள் இருக்கின்றன. இசை நாடக மன்றம், தப்பாட்டக் கலைஞாகள் சங்கம், தவில் கலைஞர்கள் சங்கம் என்று பலவுள்ளன. இந்த சங்கங்களில் இணைந்திருப்போர் ஓரளவிற்கு அரசாங்கச் சலுகைகளைப் பெறுகிறார்கள். அதற்கு அவர்கள் கலை பண்பாட்டுத் துறையில் பதிவு செய்து இருக்க வேண்டும். தமிழகம் முழுமைக்குமாக 7 கலை பண்பாட்டு மண்டலங்கள் உள்ளன.

சென்னை, சேலம், மதுரை, திருச்சி, கோவை இந்த மண்டல அலுவலகங்களில் கலைஞர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்து அடையாள அட்டைப் பெற்றிருக்கும் கலைஞர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கும். அப்படி 50,000 கலைஞர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் தமிழகம் முழுக்க 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுபுறக் கலைஞர்கள் உள்ளனர். அவர்களில் பலருக்குத் தங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பதே தெரியாது. அதுமட்டுமன்றி மாவட்டம் தாண்டிச் சென்று மண்டல அலுவலகங்களில் பதிவு செய்ய இயலாத காரணமும் அடங்கும். அரசின் நிதிகளைக் கலைஞர்களுக்குப் பெற்றுத் தருவதில் இடைத்தரகர்களின் குறுக்கீடும் அதிகம். அரசின் உதவிகள் இடைத்தரகர்களால் அபகரிக்கப்பட்டிருப்பதும் நடந்து வந்துள்ளன. இப்படிப் பலப் பிரச்சனைகள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இந்தச் சிக்கல்களை எல்லாம் களைந்து வாழ்வாதாரம் இழந்துத் தவிக்கும் தமிழ்நாட்டின் நிகழ்த்துக் கலைஞர்களுக்கு அரசின் உதவிகளைப் பெற்றுத் தர உறுதிபூண்டது. அதற்கு,

      கலைஞர்களை ஒருங்கிணைப்பது

      பதிவு செய்யாத அனைத்துக் கலைஞர்களையும் பதிவு செய்ய வைப்பது

      ஊரடங்கு காலத்திற்கான நிவாரண உதவிகளை அரசிடமிருந்துப் பெற்றுத்தருவது

      கலைஞர்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்தும் தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்குக் கோரிக்கையாக வைப்பது

போன்ற வேலைகளைச் செய்ய தமிழ்நாடு அனைத்து நிகழ்த்துக் கலைஞர்களுக்கான வாழ்வாதார உரிமை மாநாட்டினைத் த.மு.எ.க.ச நடத்தியது. 11.10.2020 ஞாயிற்றுக்கிழமை இணைய வழியில் நடைபெற்ற மாநாட்டில் அனைத்து நிகழ்த்துக்கலைச் சங்கங்களின் பிரதிநிதிகளும் விவாதத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

தமுஎகச கௌரவத் தலைவர் தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, நாடகக் கலைஞர் பிரளயன், ரோகிணி, திரைக்கலைஞர் நாசர் உள்ளிட்டவர்களுடன் சிறப்பு அழைப்பாளர்களாகத் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு.மா.பா.பாண்டியராஜன் அவர்களும், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி அவர்களும் கலந்துகொண்டனர். மேலும் அனைத்து நிகழ்த்துக் கலைஞர்களும் பங்கு பெறும்; வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமுஎகச சார்பில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

எழுத்தாளர் ஜெயமோகன் | Writer Jeyamohan | பக்கம் 376

மாநாட்டு நோக்கவுரையில் நாடகக் கலைஞர் பிரளயன் சொல்லும்போது “இதுவரை கலைஞர்களுக்குச் செய்யப்பட்ட உதவிகள் கடலில் கரைத்த பெருங்காயம் போன்றதுதான் என்றுகூறி சடங்கு வெளியில் மட்டும் நிகழ்த்தப்பட்டும் சாதீய கட்டுமானத்தால் ஒடுக்கப்பட்டும் வந்திருக்கிற பல கலைகளை தமுஎகச பொதுவெளிக்கு கொண்டு வந்ததைக் குறிப்பிட்டார். மண்ணின் பண்பாட்டு அடையாளங்களான இக்கலைகளைப் போற்றவும் உயர்த்திப் பிடிக்கவும் தமுஎகச நிகழ்த்துக் கலைஞர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்த அரசு தனது மிகப்பெரிய ஆதரவு கரத்தை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆதவன் தீட்சண்யாவின் உரையில் மரபுக் கலைஞர்களைப் பொதுச் சமூகமும் அரசும் புரிந்து கொள்ளாது இருக்கும் நிலையைச் சுட்டிக்காட்டினார். தவில் கலைஞர்கள், வில்லிசைக் கலைஞர்கள் உள்ளிட்ட மரபுக் கலைஞர்களைப் பேருந்தில் ஏற்றுவதற்குத் தயங்குதல், இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தக் காவல்துறை அனுமதி மறுப்பது போன்றவைகள் கலைஞர்களை அரசு நிர்வாகங்கள் நடத்துகின்ற மோசமான முறையினைத்தானே காட்டுகின்றன.

இசை நாடகக் கலைஞர்கள் சார்பாகப் பேசிய திரு.பழ.காந்தி, தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் சார்பாகப் பேசிய திரு.முத்துச்சந்திரன், என பல கலைஞர்களும் கொரானா பேரிடர் சிதைத்துவிட்ட தங்கள் குடும்பங்களைக் குறிப்பிட்டனர்.

ஒரு கலைஞர் இவ்வாறு பேசினார்,

“டாக்டர் பையன் டாக்டராகனும்

வாத்தியார் பையன் வாத்தியாராகனும்

படிச்சவங்க அவங்க பிள்ளைகளை அதே மாதிரி ஆக்கனும் னு நெனைக்கிற மாதிரி கலைஞராக நாங்க எங்க பிள்ளைகளை அதே கலையைக் கத்துக்க வைக்க தயங்குகிறோம். “நா பட்டது போதும்டா. நீ வேற வேலைக்குப் போ னுதான் சொல்றோம்” என்றார். எவ்வளவு துயரமான சொற்கள் அவை. அப்படி நடந்தால் நமது கலைகள் வாழுமா? பாரதி தமிழுக்குச் சொன்னது இங்கு கலைக்குப் பொருந்துகிறது.



“மெல்ல மரபுக்கலையினிச் சாகும்” என்று நினைவிற்கு வருகிறது. அப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே உரிய நேரத்தில் இந்த மாநாடானது நடத்தப்பட்டிருக்கிறது. மரபு மற்றும் அனைத்து நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்காக இம்மாநாட்டில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

      குறைந்தபட்ச பேரிடர் கால நிவாரணமாக நிகழ்த்துக் கலைஞர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10000 நல உதவி வழங்கிட உத்திரவாதப் படுத்துதல்

      மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் கலைஞர்களுக்கு கலைக்கருவிகள் மற்றும் கலை உடைகளை அரசே வழங்கி அரசு விழாக்களில் இவர்களுக்கு கலைநிகழ்ச்சி நிகழ்த்த முன்னுரிமை தந்து உதவி செய்ய வேண்டும்.

      பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட கலைஞர்களின் வாரிசுகளுக்கு உயர்கல்வி செலவினை அரசே ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

      பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தல வளாகங்களில் சுழற்சி முறையில் கலை நிகழ்ச்சி நிகழ்த்த நிகழ்த்துக் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்தல் வேண்டும்.

      தீராத நோயினால் அவதியுறும் கலைஞர்களுக்கு மருத்தவ உதவி மற்றும் வாழ்வு iவப்பு நிதியாக ரூபாய் 50 ஆயிரம் கலைஞர்களின் வங்கி கணக்கில் செலுத்தி கலைஞர்களைப் பாதுகாக்க வேண்டும்.

      தமிழக அரசு பள்ளிக்கல்வி மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழகக் கலைகளை பாடமாக கொண்டு வந்து, அந்தந்த மாவட்டங்களில் சிறப்பு வாய்ந்த கலைகளை மாணவர்கள் பயிலும் வழி வகையை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலமாக பாரம்பரிய நிகழ்த்துக் கலைப் பயிற்றுநராக பணியமர்த்த அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்

      கலைஞர்களுக்கான IEC பிரச்சார பணத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக….

Information, Education, Communication  என்பது தான் IEC ன் விரிவு

தமிழ்நாட்டில் உள்ள தமிழக அரசின் கீழ் இயங்கும் ஒவ்வொரு துறையிலும் அரசின் திட்டங்களை பிரச்சாரம் செய்ய ஒதுக்கப்படும் நிதி IEC  என்ற பெயரில் தான் தரப்படுகிறது. இந்த நிதியை கலைக்குழுக்களுக்காக பயன்படுத்தாமல் துண்டறிக்கை மற்றும் பெரிய பெரிய பேனர்கள், ஊர்வலங்கள், வரவேற்பு வளையங்கள் இவற்றிற்கு பயன்படுத்திவிட்டு கலைஞர்களை நட்டாற்றில் விடும் போக்கு நிலவி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான பணம் கலைஞர்களுக்கு பயன்படாமல் போகிறது. இதனை முறைப்படுத்த கலைஞர்களுக்காக ஒதுக்கும் IEC தொகையை நிகழ்த்து கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் மட்டுமே அரசு பயன்படுத்த வேண்டும் என இந்த தீர்மானம் கோருகிறது.

மின்னம்பலம்:கூத்து வாத்தியார்கள் 3: குமாரசாமித் தம்பிரான் பகுதி 3

 வயதுவரம்பைக் குறைப்பது: நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞர்கள், அரசின் ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 58 ஆக இருக்கிறது. இதனைப் பெண் கலைஞர்களுக்கு 40 என்றும் ஆண் கலைஞர்களுக்கு 50 என்றும் மாற்ற வேண்டுகிறோம். அதிகமான உடல் உழைப்பைச் செலுத்துபவர்களாகவும் பெரும்பாலான கலைஞர்களுக்கு இரவு முழுக்கவுமு; ஆடுபவர்களாகவும் குறைந்த கூலி பெறுபவர்களாகவும் இருக்கிறார்கள் பிற தொழில் துறையைச் சேர்ந்தவர்களோடு ஒப்பிடும்போது, கலைஞர்;கள் மேற்குறித்த வயதுகளிலேயே கலைத்தொழிலில் ஈடுபட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனவே இக்கோரிக்கையைக் கருணையோடு ஏற்க வேண்டுகிறோம்.

 ஓய்வூதியத்திற்கான  அரசு வழிகாட்டலை முறைப்படுத்துதல் – 

இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் தரப்படும் ஓய்வூதியம் ரூபாய் 2,000க்காக விண்ணப்பிக்கும் கலைஞர்களின் படிவம், கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் வரை கையொப்பம் பெற்றுப் பிறகு கலைப்பண்பாட்டு மண்டலங்களுக்கு அனுப்பப்பட்டு, விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு இயல் இசை நாடக மன்றத்திற்குப் பரிந்துரைத்து அனுப்பப்படுகிறது. இதில் வருவாய் கோட்டாட்சியரிடம் வரும் கோப்புகள், கையொப்பத்துடன் அடுத்த நிலைக்கு அனுப்பிடக் குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் ஒருவருடம் வரை ஆகிறது. இக்காலதாமதத்தால் கலைஞர்கள் மிகுதியும் அவதிப்படுகிறார்கள். எனவே, வட்டாட்சியர் நிலையிலேயே விண்ணப்பத்தை மண்டலங்களுக்கு அனுப்புவதன்மூலம் வயது முதிர்ந்த கலைஞர்களின் அலைச்சலும் மன உளைச்சலும் மிச்சமாகும். எனவே கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் என்ற நிலைகளிலேயே கையொப்பம் பெற்று அனுப்பினால் போதும் என்ற உத்தரவு இடப்பட வேண்டுகிறோம்.

 பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிகழ்த்துக்கலைகளை இடம்பெறச் செய்தல் தொடர்பானத் தீர்மானம்.

பள்ளி மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் கலைக்கான இடம் என்பது extra curricular activities என்கிற வகைமையில் பாடத்திட்டம் தாண்டிய ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. விழா நாட்களில் தனியார் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து அரங்கேற்றுகிறார்கள். அதற்கெனத் தனிக் கட்டணம் வசூலிப்பதும் தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து வருகிறது. அரசுக் கல்வி நிறுவனங்களில் கட்டணம் வசூலிப்பது இயலாத காரணத்தினால் கலை மீது விருப்பம் இருக்கும் ஆசிரியர்களின் சுய முயற்சிகளால் நிகழ்வுகள் சாத்தியமாகின்றன. கல்லூரிகளில் ஏராளமான கலை விழாக்கள் நடைபெறுகின்றன. அவைகளில் மேற்கத்திய நடனம் இசை போன்றவைகளே அதிக அளவில் மாணவர்களால் நிகழ்த்தப்படுகின்றன.

எனவே பாடத்திட்டத்தில் மரபான நிகழ்த்துக் கலைகளைக் கொண்டு வர வேண்டும். மாணவர்களுக்கு விளையாட்டு மணிநேரம் இருப்பது போல் கலைகளுக்கானப் பாடவேளை ஒதுக்கப்பட வேண்டும். அப்படிச் செய்தால் மரபுக்கலைகள் அடுத்த தலைமுறைக்குச் செல்வதுடன் கலைஞர்களுக்குப் பணி வாய்ப்பும் கல்வி நிறுவனங்களில் கிடைக்கும். தமிழக அரசு பள்ளிக்கல்வி மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழகத்தின் மண்சார் மரபு ஆட்டக் கலைகளை பாடமாக கொண்டு வந்துஇ அந்தந்த மாவட்டங்களில் சிறப்பு வாய்ந்த கலைகளை மாணவர்கள் பயிலும் வழி வகையை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலமாக பாரம்பரிய நிகழ்த்துக் கலை கலைஞர்களை பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கலை பயிற்றுநராக பணியமர்த்த அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களின் வாழ்த்துரையில் தி.மு.க அரசால் நாட்டுப்புற வாரியம் அமைக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். சென்னை சங்கமம் பல நாட்டுப்புறக் கலைஞர்களை அடையாளங்காண வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரச்சனையில் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என இரண்டு தரப்பினரையும் ஒரே நிகழ்வில் பங்கேற்க வைத்தது தமுஎகச வின் நல்ல அணுகுமுறை.

இந்தத் தீர்மானங்களைத் தமுஎகச நாடக உப குழு நிர்வாகிகள் முன்வைத்தனர். இந்த மாநாட்டில் குறிப்பிடத்தக்க அம்சம் என்;று சொன்னால் கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் திரு. மா.பா. பாண்டியராஜன் அவர்கள் பங்குகொண்டு உரை நிகழ்த்தியதுதான். மாநாடு தொடங்கும் போது வந்து வாழ்த்துரை நல்கியவர் “உங்கள் கோரிக்ககைகளை எல்லாம் முழுமையாக வாசித்துவிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து மீண்டும் மாநாடு முடியும் தருவாயில் வந்து விவாதிக்கிறேன்” என்று சொல்லி அதேபோலவே மாநாட்டின் இறுதியில் மீண்டும் இணைந்தார். வைக்கப்பட்ட தீர்மானங்களை முடிந்தவரை நிறைவேற்றுவதாக வாக்களித்துப் பேசினார். குறிப்பாக கலைஞர்கள் பதிவு செய்திட நிர்வாக முறையை எளிமைப்படுத்துதல், தஞ்சை, தென்னகக் கலை பண்பாட்டு மையத்தை அனைத்துக் கலைஞர்களுக்குமானதாக மாற்றுவதும் அதில் வெளிப்படைத் தன்மையை உருவாக்குதல், கலைஞர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகையை இரட்டிப்பாக்குவது, கலைமாமணி விருது வழங்குவதில் வெளிப்படைத் தன்மையோடு செயல்படுவது கொரானா ஊரடங்கு நிவாரண நிதியை முறையாக அனைவருக்கும் சென்று சேர வழிவகை செய்வது கலை பண்பாட்டு மையங்களில் அதிகாரிகளை நியமிப்பது போன்றவை அடங்கும். அமைச்சர் உறுதியளித்த அனைத்தையும் நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கையில் தான் கலைஞர்கள் மாநாடு முடிந்த பிறகும் மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திரைகளுக்கு முன் அமர்ந்திருந்தனர்.



இந்த ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தற்கொலை செய்து கொண்ட கலைஞர்களின் எண்ணிக்கை 129. பட்டினிச்சாவு 19. பெண் கலைஞர்கள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாவது, என்று புள்ளிவிவரங்கள் மிகுந்த அதிர்ச்சியைத் தருகின்றன.

திரைக்கலைஞர் நாசர் அவர்கள், கலைஞர்களின் வாழ்வாதாரம் என்கிறோம். ஆதாரம் இருந்தால் தானே வாழ்வு அதுதான் இல்லை என்றார் என்பதும், மேலும் ஒரு கலைஞர் சொல்லும் போது “மக்களை மகிழ்ச்சிப்படுத்த நாங்கள் இருக்கிறோம், ஆனால் எங்கள் வாழ்வில் மகிழ்ச்சியே இல்லை” என்றார். என்பதும் அரசின, பொதுச் சமூகத்தின் காதுகளுக்கு எட்டியிருக்கும்

கலைஞர்களை ஒருங்கிணைத்தல் அரசின் சலுகைகளைப் பெற்றுத் தரமுயலுதல் கலைஞர்களை பொதுச் சமூகம் புரிந்துகொள்ளுதல் என்கிற தமுஎக சங்கத்தின் நோக்கம் இம்மாநாட்டின் வழி செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் அரசை வலியுறுத்தும் என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் மரபுக் கலைஞர்கள் முற்போக்குக் கலைஞர்கள் என்கிற பாரபட்சமின்றி தமுஎகச செயல்பட்டிருக்கிறது. கோவிலுக்குள் மங்கள இசை வாசிக்கும் கலைஞர்கள் மெல்லிசைக் கலைஞர்கள் பழங்குடிக் கலைஞர்கள் என்று அனைவருக்குமான கோரிக்கைகள்தான் தமுஎகச வினால் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டின் அனைத்து நிகழ்த்துக் கலைஞர்களையும் ஒருங்கிணைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதைச் சாதித்திருக்கிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.

*+++*



முனைவர்.எல்.ராம்ராஜ்

உதவிப்பேராசிரியர்,

தமிழ் இலக்கியத்துறை,

பிஎஸ்.ஜி கலை& அறிவியல் கல்லூரி,

கோவை.

[email protected]



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *